உண்மை காதல் -16
அத்தியாயம் -16
ஹரியின் மூடிய கண்களுக்குள், தூக்கம் சிறிதும் வரவில்லை…
மாறாக ஆதித்யன் கூறிய காட்சிகளே…
இடம்: திருச்சி.
கல்லூரியில், மித்ரா மூன்றாம் வருடத்தில் காலடி எடுத்து வைத்த முதல் நாள்....
அந்த செமஸ்ட்டரில் மித்ராவிற்கு ஜாவா ப்ரோகிராமிங்(Java Programming) பாட வகுப்பிற்கு புது ஆசிரியரை அலார்ட் செய்து இருந்தனர்..
காலை முதல் வகுப்பிற்கு, வந்த புது ஆசிரியரை பார்த்த மாணவர்கள் அனைவரும், வந்தவனின் தோற்றத்திலும், ஆளுமையான குரலிலும், அறிவு கூர்மையிலும், பாவனைகளிலும் கட்டுண்டு இருந்தனர்..
டார்க் பிரௌன் நிற, ஃபார்மல் பேன்டில், தெரிந்த வலுவான அவனின் நீண்ட கால்களும்…
அணிந்து இருந்த முழுக்கை வைத்த, இளம்நீல நிற சட்டையை தாண்டி.. வெளியே தெரியும் வலுவான புஜங்களும்...
கைகளை ஆட்டி ஆட்டி பேசும் பொழுது தெரியும் நீண்ட விரல்களும்…
கொஞ்சம் மாநிறத்தில், இருந்தவனின் நெற்றியில், இருந்த மெல்லிய திருநீற் கோடும்.. ஒருவித மரியாதை கலந்த தோற்றத்தை அவனுக்கு கொடுத்து இருக்க..
அலை அலையாக, அவனின் தலையில் வளர்ந்திருந்த கறுமையான சிகையும், அளவாக வைத்திருந்த கரும் மீசையும், ட்ரிம் செய்யப்பட்டிருந்த தாடியும், அவனின் வயதின் இளமையை பறைச்சாற்றி, ஆண்மையை தூக்கி காட்டியது..
தெளிவான கம்பீரமான குரலில், அவன் கொடுக்கும் விளக்கங்கள் அனைத்தும், அவனின் மூளையின் கூர்மையையும், திறனையும் சொல்லியது…
ஒவ்வொருவரின் கண்ணை சந்திக்கும் போதும்… அதில் இருந்த தீட்சஷண்யமான ஊடுருவும் பார்வையோ… என் கண்ணை தவிர, வேறெங்கும் பார்க்காதே என்று பார்வையிலேயே காட்டிய மிரட்டலில்.. அப்படியே மாணவர்களை கட்டிப்போட்டான்.
வகுப்பின் உள்ளே நுழைந்த உடனே…
"ஹாய் ஸ்டுடென்ட்ஸ்.. குட் மார்னிங்.. ஐ அம் பிரித்திவ்ராஜ்.. நான் தான் உங்களுக்கு ஜாவா புரோகிராமிங் பேப்பர் ஹேண்டில் பண்ணப் போறேன்.. பிளஸ் உங்களோட கிளாஸ் கோ-ஆர்டினேட்டர் அண்ட் ப்ராஜெக்ட் லீட்டும் நான் தான் இந்த செம்… சோ எந்த டவுட் னாலும் என் கிட்ட கேளுங்க.. இந்த வருஷம் முழுவதும் நாம ஒன்றாக தான் ட்ராவல் செய்ய போறோம் ", என்று தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு..
தன்னுடைய கல்லூரி மற்றும் படிப்பு பற்றிய தகவலையும் பகிர்ந்துக் கொண்டான்...
அடுத்த கட்டமாக அட்டனெட்ன்ஸ் எடுத்துவிட்டு… எந்த வித தேவையில்லாத பேச்சுகளும் இல்லாமல்… பாடத்தைப் பற்றிய முன்னுரையை கொடுக்க ஆரம்பித்து விட்டு இருந்தான்..
பெல் அடிக்கும் வரை, அனைவரையும் பாடத்தில் முழுக செய்திருந்தவன், அந்த வகுப்பை விட்டு சென்ற மறுநொடி..
அனைவரும், 'வாவ் செமையான சார்.. எப்படி இந்த சின்ன வயசிலேயே டாக்ட்ரேட் முடிச்சு இருக்காங்க.. அதுவும் பாம்பே ஐஐடியில் ரொம்ப ஆச்சரியமா இருக்கு.. எவ்வளவு அழகா.. ஸ்மார்ட்டா.. செமயா இருக்காரு', என்று மாணவர்களிடையே பிரித்திவ்வை பற்றிய பேச்சே இருந்தது..
நாட்கள் அழகாக சென்றது...
மித்ரா தான் வகுப்பின் கிளாஸ் டாப்பர் மற்றும் ரெப்பரசென்டேட்டிவ்… (representative)
எனவே ப்ரித்திவிடம், மித்ரா நிறைய வேலைகளுக்காக.. தனியே சென்று பேச வேண்டி இருக்கும்..
பிரித்திவ் ஒரு முறை கூட.. ஒரு வார்த்தை கூட.. மித்ராவிடம் அதிகமாக பேசியதில்லை..
கேட்டதிற்கு பதில்.. செய்ய வேண்டிய வேலையை சொல்வான்.. அதுவும் நேர்கொண்ட பார்வையுடன்.. அவ்வளவு தான்…
மித்ராவின் மனதில் மிகவும் உயர்ந்த இடத்தில் ப்ரித்திவ் இருந்தான்..
ஒருவித ஹீரோ வொர்க் ஷிப், அவன் மீது அனைத்து மாணவர்களுக்குமே இருக்க, அவளும் அதில் அடக்கம்.
அதுவும் அழுத்தமாக தன் பெயரை "சங்கமித்ரா" என்று பிரித்திவ் உச்சரிக்கும் போது, மித்ராவிற்கு அவள் பெயரே தனியாக.. அழகாக தோன்றும்..
மித்ராவின் கிளாஸில் சிலர் அவளை பிரித்திவ்வுடன் சேர்த்து ஓட்டுவர்… "நெக்ஸ்ட் டைம் எப்படியாச்சும் ஃபர்ஸ்ட் மார்க் எடுத்து ரெப் ஆகனும் டி.. நீ தான் செம லக்கி மித்து.. சார அப்பப்ப தனியா போய்ட்டு சைட் அடிச்சுட்டு வர..", என்று..
இல்லை என்று மறுத்து பேசினால் இன்னும் கலாய்ப்பார்கள் என்பதால்.. மித்ரா அமைதியாக கடந்து விடுவாள்..
ஒருநாள் மித்ரா ஃபிரண்ட் ஒருத்தி.. வேறு ஒரு ஆசிரியர் சொன்னதாக, "பிரித்திவ் சாருக்கு யாரும் இல்லையாம் மித்து..
சின்ன வயசில் இருந்தே அனாதை இல்லத்தில் தான் வளர்ந்தாராம்… பார்ட் டைம் ஜாப் பார்த்துட்டே… ஸ்காலர்ஷிப்ல காலேஜ் படிச்சு இருக்காங்க போல.. ரொம்ப கிரேட் இல்லடி நம்ம சார் ", என்றாள்..…
அதைக் கேட்டதும் மித்ராவிற்கு மிகவும் மனதுக்கு கஷ்டமாக இருந்தது…
பிறந்ததில் இருந்து, பெற்றேரின் நிழலில், எவ்வித குறையும் இன்றி, வளர்பவளுக்கு அவ்வாறு தானே இருக்கும்.
அவனின் சுய ஒழுக்கமும், நேர்மையான பார்வையும்,
யாரும் இல்லாமல் தன் சொந்த முயற்சியில், அதுவும் இவ்வளவு சிறு வயதில், டாப் யுனிவர்சிட்டியில், டாக்ட்ரேட் முடித்து என்றால்.. அதற்கு பின் எந்தளவு கடின உழைப்பு இருந்து இருக்கும்... எந்த கஷ்டத்தையும் வெளியே காட்டாமல் கம்பிரமாக வளம் வரும் பிரித்திவ் மீது மித்ராவிற்கு மேலும் மதிப்பு தோன்றியது.
இவ்வாறே நாட்கள் நகர…
ஒருநாள் மித்ரா computer Lab-யிற்கு, ஒரு ப்ரோக்ராமிற்கு அவுட்-புட் வரவில்லை என்று, மீண்டும் முயற்சி செய்து பார்க்கலாம், என்று ஃப்ரி ஹவரில் தனியாக சென்றாள்…
அப்பொழுது உள்ளே சென்ற மித்ரா கண்டது, லேப்பில் தனியாக ஒரு டேபிளிலில் படுத்து, அணத்திக் கொண்டுடிருந்த பிரித்திவ்வைத் தான்..
உடனே அருகில் சென்று மித்ரா பார்த்தாள்...
ப்ரித்திவ் டெஸ்க்கின் மீது தலை வைத்து தூங்கி கொண்டு இருந்தான்…
மெல்ல முனுமுனுப்பாக.. "மா உடம்பு எல்லாம் வலிக்குது மா..... பிளீஸ் மா வா மா.."
என்று தூக்கத்தில், கனவு எதுவோ கண்டு, திருப்பித்திருப்பி அணத்திக் கொண்டு இருந்தான்…
கண்களில் இருந்து மெல்லிய நீர் கோடு வேறு இறங்கி கொண்டே இருந்தது..
அதிர்ந்து போனாள் மித்ரா..
கம்பீரமான பிரித்திவ்வின் ஏக்கம் நிறைந்த மறுபக்கம், மித்ராவின் பிஞ்சு இதயத்திற்கு வலியை கொடுத்தது…
பிரித்திவ் மீது இருந்து வந்த அனல்.. அவன் அருகே நின்றிருந்த மித்ராவை தீண்டியது…
மித்ரா பதறி மெல்ல பிரித்திவ்வை எழுப்ப முயன்றாள்..
பிரித்திவ் கண்களை திறந்து பார்த்து.. மீண்டும் முடியாமல்.. தலையை அழுந்த பற்றிக்கொண்டு கண்களை மூடிவிட்டான்..
மித்ரா, உடனே கீழ் ஃப்லோரில் இருக்கும் ஸ்டாஃப் ரூமிற்கு ஓடினாள்.. ஆசிரியர் யாரையாவது அழைத்து வரலாம் என்று..
காலை வகுப்பு வேலை என்பதால் யாரும் ஆசிரியர்கள் அங்கு இல்லை..
மீண்டும் மேலே சென்று வகுப்பில் இருக்கும் ஆசிரியரை கூப்பிடலாம் என்று வெளியே வரும்போது.. பிரித்திவ்வின் சோர்ந்த முகத்தையும்.. ஜுரத்தையும் எண்ணி…
உடனே கேண்டின் சென்று.. இரண்டு டீ மற்றும் பிஸ்கட் பார்சல் வாங்கிக் கொண்டு…
அருகிலேயே இருந்த ஸ்டேஷனரி ஸ்டோரில்… டோலோ மாத்திரை இரண்டும் வாங்கிக்கொண்டு லேப்பிற்கு ஓடி வந்தாள்…
மெல்ல ப்ரித்திவ்வை எழுப்பியவள்.. அவன் எழுந்து அமர்ந்ததும்.. வாங்கி வந்த டீயும் பிஸ்கட்டும் கொடுத்து.. அவன் குடித்ததும்.. உடனே மாத்திரையை அருகில் இருந்த நீருடன் கொடுத்தாள்…
பிறகே பிரித்திவ் கொஞ்சம் தெளிந்தான்..
சாய்வாக உட்கார்ந்தவன், "தேங்க்ஸ் சங்கமித்ரா", என்றான் சோர்வாக…
காலை லேசாக தான் அவனுக்கு உடல் சோர்வாக இருந்தது.. முதல் வகுப்பே கிளாஸ் வேறு இருக்க.. கிளம்பி வந்துவிட்டு இருந்தான்.
அந்த வகுப்பில் கிளாஸ் எடுக்கும் பொழுதே, அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக உடலில் சோர்வு அதிகரித்துக்கொண்டே இருக்க..
இதற்கு பிறகு மதியம் தான் கிளாஸ் என்பதால், இங்கு வந்து ஓய்வாக அமர்ந்தவன்.. அப்படியே படுத்து விட்டு இருந்தான்.
மித்ரா, "சார் நீங்க ஹாஸ்பிடல் போங்க.. ரொம்ப முடியல போல உங்களுக்கு.. ஜுரமும் அதிகமா இருக்கு… நான் போய்ட்டு ஸ்டாப் யாரையாச்சும் கூப்பிட்டு வரேன் சார்", என்றாள்..
பிரித்திவ், "சாதா ஜுரம் தான் மா.. இப்ப தான் டேப்லெட் போட்டுடேனே… கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா நார்மல் ஆகிடுவேன்.. நோ பிராப்ளம்.. ஐயம் கம்ப்ளீட்லி ஓகே நவ்.. உனக்கு கிளாஸ்கு டைம் ஆகுது பார் போ மா சங்கமித்ரா", என்றுவிட்டான்..
மித்ரா வேறுவழியில்லாமல் கிளம்பினாள்..
அப்பொழுது பிரித்திவ், "ஒன் செகண்ட்" என்று விட்டு.. அவனுடைய பர்சில் இருந்து 100ரூபாயை எடுத்து.. அவளிடம் கொடுத்தான்…
மித்ரா, "இல்லை சார்.. வேண்டாம்.. பெரிய காசு ஒன்னும் இல்லை", என்று மறுத்தாள்..
பிரித்திவ்.. "உன்னோட ஹெல்ப்பே போதும் சங்கமித்ரா", என்று, வற்புறுத்தி காசை கொடுத்து.. கிளாசுக்கு மித்ராவை அனுப்பிவிட்டான்…
வகுப்பில் வந்தும் மித்ராவிற்கு பிரித்திவ் நினைவே மனதில்…
யாரிடமும் பிரித்திவ் பற்றி கூறவில்லை.. தேவையில்லாமல் பேசுவார்கள் என்று...
லஞ்ச் பிரேக்கில் மீண்டும் ஃப்ரெண்ட்ஸிடம் சொல்லி விட்டு பையை எடுத்து கொண்டு.. லேப் பக்கம் பிரித்திவ் இருக்கின்றானா என்று பார்க்க ஓடி வந்தாள்…
ப்ரித்திவ் அப்பொழுதும் நல்ல தூக்கத்தில் இருந்தான்..
அவன் முகம், காலை போல் இல்லாமல்.. மிகவும் அமைதியாக இருந்தது..
ஷர்ட் முழுக்க வேர்வையில் நனைந்து இருந்தது.. ஜுரம் விட்ட அறிகுறியாக..
மித்ரா," சார் சார் ",என்று எழுப்பினாள்..
மித்ரா குரல் கேட்டதும் பிரித்திவ் உடனே எழுந்து விட்டான்…
மித்ரா, "இப்ப எப்படி இருக்கு சார்.. ஹாஸ்பிட்டல் போகலையா.. மதியம் லன்ச் டைம் வேற ஆகிடுச்சு சார்.. சாப்பிடலையா.. ", என்றாள் பரிவாக.
பிரித்திவ், "இப்ப பரவால்லம்மா.. கேண்டீனுக்கு சாப்பிட இனிமேல் தான் போனும்.. டேப்லெட் போட்டதுல நல்லா தூங்கிட்டேன் போல", என்று வாட்சைப் திருப்பி பார்த்தான்..
மித்ரா அவள் உணவு பேகை பிரித்திவ்விடம் கொடுத்து.. "சார் நீங்க என்னோட லஞ்ச்ச சாப்பிடுங்க.. நான் கேண்டீன்ல சாப்பிடுறேன்.. கேண்டீன்ல நிறைய மசாலா போட்ட வெரைட்டி ரைஸ் தான் இருக்கும்.. இப்ப உங்களுக்கு உடம்பு முடியல இல்ல. அதை சாப்பிட வேண்டாம்.. நீங்க எங்க வீட்டு சாப்பாடு சாப்பிடுங்க..", என்றாள்..
பிரித்திவ் கண்டிப்புடன், "வேண்டாம்.. நான் பார்த்துக்கறேன், நீ கிளாசுக்கு போ சங்கமித்ரா", என்றான்....
பிரித்திவ்வை மித்ராவோ கட்டாயப்படுத்தி.... "உங்களுக்கு சுத்தமா முடியல சார்.. கேண்டீனுக்கே போக முடியுமா தெரியல.. என்னோட லன்ச்ச சாப்பிடுங்க.. இல்லேன்னா வெளியே எங்கே ஆச்சு வீட்டு சாப்பாடு இருந்தா கூட ஆர்டர் பண்ணி சாப்பிடுங்க… ஆனா அந்த கேண்டீன் சாப்பாடு வேண்டாம்.. ", என்று எப்படி எப்படியோ வற்புறுத்தி தன்னுடைய டிபன் பாக்சை திறந்து பிரித்திவ் முன்பு வைத்தாள்..
பிரித்திவ்வும் வேறு வழியில்லாமல், கெஞ்சும் மித்ராவை விரட்ட முடியாது.. உணவை உண்ணத் தொடங்கினான்.. அவனுக்கும் பசி வயிற்றைக் கிள்ளியது..
துளசியின் கை வண்ணத்தை சொல்லவே தேவையில்லை… உண்ணும் பொழுதே.. மித்ராவிடம், "நீ ரொம்ப லக்கி.. உங்க அம்மா ரொம்ப சூப்பரா சமைச்சு இருக்காங்க..", என்றான்.
அவன் உண்ணுவதை நெஞ்சம் நிறைந்த தாய் அன்புடன் பார்த்துக் கொண்டிருந்த மித்ரா, "ரொம்ப தேங்க்ஸ் சார்.. உங்களுக்கு எப்ப வீட்டு சாப்பாடு சாப்பிடணும் தோணுதோ என்கிட்ட சொல்லுங்க.. நான் எடுத்துட்டு வரேன்.. எங்க வீட்டுக்கும் நீங்க வாங்க சார்.. கண்டிப்பா எங்க அம்மா அப்பா உங்களை பார்த்தா சந்தோஷப்படுவாங்க…", என்றாள், வெள்ளை மனதுடன்.
பிரித்திவ் உடனே சுதாரித்து, "இன்னையோட போதும்… இந்த மாதிரி ஸ்டாஃப் ஸ்டூடண்ட் ரிலேஷன்ஷிப்லாம் சரிவராது.. நீ போயிட்டு கேண்டீன்ல சாப்பிடு மா. இல்லன்னா கேண்டின்ல சாப்பாடு தீந்துடும் போ.. டிபார்ட்மெண்ட்ல, யாரும் பார்த்தாலும் தப்பா நினைப்பாங்க.. அது உனக்கும் நல்லதில்லை.. எனக்கும் நல்லது இல்ல.. கிளம்பு சங்கமித்ரா ", என்று பர்ஸை இடதுக்கையால் எடுத்தான்..
மித்ரா, "இல்லை சார்.. நீங்க காலையில கொடுத்த காசே நிறைய இருக்கு வேண்டாம்.. நீங்க பொறுமையா சாப்பிடுங்க.. ", என்றுவிட்டு கிளம்பிவிட்டாள்....
அன்று மாலை லஞ்ச் பேக் எங்கு என்று கேட்ட துளசியிடம் மித்ரா.."மறந்துட்டேன் மா நாளைக்கு எடுத்துட்டு வரேன்", என்றுவிட்டாள்.
அன்று இரவு முழுவதும் பிரித்திவ்விற்கு சங்கமித்ரா நினைவு தான்.. எந்த வித அலட்டலும் வகுப்பில் இல்லாமல்.. நன்றாக படிக்கும் மாணவியாகவும்… பொறுப்பாக எல்லா வேலையும் சிரத்தையுடன் முடித்து கொடுக்கும்.. மாணவியாக தான் தெரியும்..
ஆனால் இன்று சங்கமித்ரா தாய்மை உணர்வுடன்.. தன்னை கவனித்ததும் விசாரித்ததும்.. வற்புறுத்தி உணவு கொடுத்ததும்.. தனக்காக பதறியதும்.. என்று ப்ரித்திவை ஒருவிதமாக பாதித்தாள்..
இவ்வளவு சிறு வயதில், எவ்வளவு அன்பு என்று யோசித்துக்கொண்டு இருந்தான்.
பிரித்திவ் பொதுவாகவே யாரிடமும் பேச மாட்டான்..
ஏனென்றால் பள்ளி காலத்திலேயே ஆசிரமத்தில் இருந்து வரும் மாணவன் என்பதால், நிறைய பிள்ளைகள் அவனிடமிருந்து ஒதுங்கியே இருப்பர்..
பிரித்திவின் சாதாரண உடை மற்றும் தோற்றத்தை பார்த்து, குறிப்பாக பெண்கள் அவனை இகழ்ச்சியாக அல்லது கேலியாக பார்ப்பர்..
அப்பொழுதிலிருந்தே படிப்பு தான் முக்கியம்.. எதிர்காலத்தில் அது தான் நம்மை காப்பாற்றும்.. என்று முடிவெடுத்து.. அவனின் முழு உழைப்பையும் போட்டு படித்து முன்னேறினான்.
நல்ல மதிப்பெண் எடுத்த பிறகு மாணவர்கள் நெருக்கமாக வந்து பேசியும், ஒதுங்கியே இருந்து விட்டான்.
கல்லூரியிலும் சரி.. இப்பொழுது பணிபுரியும் இடத்திலும் சரி அவ்வாறு தான்.
பிரித்திவ்வை இதுவரை நெருங்கியவர்கள் மூவரே ஆதித்யன், மிதுன் ஜார்ஜ்(கல்லூரி நண்பர்கள்).. இப்பொழுது சங்கமித்ரா…
இன்று சங்கமித்ராவின் கண்களில் பார்த்த தாய்மை உணர்வும், சங்கமித்ராவின் கண்ணில் தன்னை பார்க்கும் பொழுது தோன்றிய உணர்வும், நேசமும் பிரித்திவ்விற்கு மிகவும் ஆறுதலாகவும்.. இன்னும் வேண்டும் என்ற ஏக்கத்தை அப்பொழுதே கொடுத்தது....
அதனால்தான் மித்ராவை, "போ போ", என்று விரட்டி விட்டான்.
இது மாதிரியான எண்ணங்கள் தன்னை அண்ட கூடாது என்பதற்காக தான், யாருடனும் நெருங்கிப் பழகாமல் இருந்தான்.
பிரித்திவ்விற்கும் திருமண கனவுகள் உண்டு.. இருந்தும், தான் நன்றாக, ஒரு நிலைக்கு வந்த பின்புதான், திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற முடிவில் இருந்தான்.
மனைவியையும், பிள்ளைகளையும், நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்களுடன் இத்தனை நாள் இழந்த குடும்ப சூழலும், அன்பும், அக்கறையும் பெற்று, வருங்காலத்தை சிறப்பாக கொண்டாட வேண்டும்.. என்ற ஆசை அவனுக்கு உண்டு…
இன்றே, நல்ல பதவியிலும், சம்பளத்திலும் தான் இருக்கின்றான்...
மேலும் மும்பை ஐஐடியிலேயே நிரந்தர வேலைக்கும் ஏற்பாடு செய்கின்றான்.. கூடிய சீக்கிரம் அங்கே சென்றுவிடுவான்..
இங்கு துளசியின் அருகே படுத்திருந்த, மித்ராவின் மனம் முழுவதும் கூட பிரித்திவ் தான் நிறைந்து இருந்தான்..
தனியாக அவன் படுத்து, அம்மா வேண்டும் என்று அணத்திக்கொண்டு இருந்ததை.. மித்ராவால் மறக்கவே முடியவில்லை.
அதன் விளைவு சாருக்கு நாம் எல்லாமுமாக இருக்க வேண்டும்.. அவரை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் போன்ற எண்ணங்கள் எல்லாம் மித்ராவின் மனம் முழுக்க தோன்றியது…
ப்ரித்திவ் தனக்கு ஆசிரியர் என்ற உணர்வை தாண்டி.. மித்ராவிற்குள் வேறு ஒரு உணர்வு வேர் விட தொடங்கியது, அவளை அறியாமலே..
அந்த உணர்வுகளுடன் மித்ராவும், அந்த இரவு முழுக்க பயணிக்க தொடங்கினாள்…
அவளுடைய எண்ண போக்கின், ஆழத்தை அவளே உணரவில்லை.
அடுத்தநாள் காலை மித்ரா, முதல் வேலையாக ஸ்டாஃப் ரூமிற்கு பிரித்திவ்வை காணச் சென்றாள்.. பிரித்திவ் வந்து இருக்கவில்லை. பிறகு வகுப்பிற்கு நேரமாகிவிட்டதால் சென்றுவிட்டாள்.
அன்று அவளுக்கு அடுத்தடுத்து வகுப்புகள் இருந்தது.. பிரித்திவ்வை காணவே முடியவில்லை..
மித்ரா மனம் முழுக்க, பிரித்திவ்விற்கு உடல்நிலை அதிகமாக சரியில்லையா.. என்ன ஆனதோ, என்ற எண்ணமே இருந்தது
மீண்டும் மதியம் லஞ்ச் பிரேக்கில், பிரித்திவ்வை காண, அடித்துப்பிடித்து மித்ரா ஓடினாள்..
அதே லேப்பில் தான், இன்றும் அமைதியாக படுத்து இருந்தான் பிரித்திவ்..
மித்ரா பதட்டதுடன் ஓடி சென்று விசாரித்தாள்..
பிரித்திவ், "ஹே இப்ப பரவாயில்ல.. டோன்ட் வொர்ரி சங்கமித்ரா.. கொஞ்சம் டயர்ட் அன்ட் பாடி பெய்ன்.. அதான் கிளாஸ் எல்லாம் மத்த ஸ்டாப்புக்கு மாத்தி விட்டுட்டேன்", என்றான்.
ஆனால் முன் தினத்தை விட அதிக சோர்வாக இருப்பது போல், பிரித்திவ்வின் முகம் மித்ராவிற்கு தெரிந்தது.
மித்ரா பரிவுடன், "எதாச்சும் சாப்பிட்டீங்களா சார்.. ஜூஸ் ஏதாச்சு குடிக்கிறீங்களா.. ரொம்ப டல்லா இருக்கீங்க.. சரியாகிடுச்சுன்னு சொல்றீங்க", என்றாள்.
மித்ராவின் அக்கறையான கேள்வியும்.. தேடலும்.. பதட்டமும்.. தன்னை ஆராய்வதும்.. பிரித்திவ்வின் மனதை மீண்டும் அசைத்தது.. ஆனால் அதை மேலும் வளர்க்க பிரித்திவ் விரும்பவில்லை.. ஆசிரியர் மாணவர் உறவையெல்லாம் ஒருப்போதும் அவன் விரும்பியது இல்லை.
இருந்தும் உடல் நிலை முடியாத சமயத்தில் தனக்கென்று யாரும் இல்லை.. என்ற எண்ணம் அவனை சாதாரண மனிதனாக வாட்டியது.. பிரித்திவ்வின் காயத்திற்கோ, எங்கிருந்தோ வந்த அன்னையாக, மித்ரா மயிலிறகாக மறந்திட தொடங்கினாள்..
இதுவரை மித்ரா அளவு, எந்த பெண்ணும், அவனிடம் அக்கறையாக பேசியது இல்லை.. அவனுக்காக கவலை பட்டது இல்லை.. அவனும் பார்க்கும் யாரிடமும் இதையெல்லாம் எதிர்பார்த்தது இல்லை.. இதுதான் தனது வாழ்க்கை என்று மனதை பக்குவப் படுத்திக்கொண்டு தான் வளர்ந்து இருந்தான்..
இன்றோ அவனை அச்சிறு பெண், கருணையின் மூலம், அவனை பலகீனம் செய்ய பார்த்தாள்.
அது சரி வராது என்று பிரித்திவ், "நான் இப்ப ஓக்கே தான்.. லஞ்சுக்கு கிளம்பறேன்.. நீ கிளாஸ்கு போ… சங்கமித்ரா.. ", என்று எழுந்தான்..
மித்ரா," உங்களுக்கும் சேர்த்து தான் சார், நான் இன்னைக்கு லஞ்ச் எடுத்துட்டு வந்தேன்.. உட்காருங்க.. இத நீங்க சாப்பிடுங்க.. கிளாஸ்ல என்னோட லஞ்ச் இருக்கு.. நான் போறேன்" என்று பொய் கூறி அவனிடம் தன்னுடைய லஞ்ச் பேக்கை கொடுத்தாள்.
உடனே ப்ரித்திவ், " இல்ல சங்கமித்ரா எனக்கு கண்டிப்பா வேண்டாம்.. நீ கிளம்பு.. இதுவே லாஸ்டா இருக்கட்டும்.. அட்வான்டேஜ் எடுக்க ட்ரை பண்ணாத.. எனக்கு இதெல்லாம் பிடிக்காது..”, என்றவன், முயன்று வர வைத்த அதிக கடுமையுடன், “உன்னோட பேரன்ட்ஸ்கு கால் பண்ணவா.. எல்லா ஸ்டாஃப்க்கும் இப்படி தான் செய்யறியா… நான் மட்டும் என்ன ஸ்பெஷல் உனக்கு", என்றான் சிறு மிரட்டல் கலந்து.
அவ்வளவு தான், மித்ரா சட்டென்று பயந்துவிட்டாள்..
கண்களே அவளுக்கு கலங்க தொடங்கிவிட்டது..
இதைப் பார்த்த பிரித்திவ்விற்கு தான் ஐயோ என்றாகிவிட்டது..
ஆனால் கண்டிக்காமல் இருக்க முடியாதே..
"சரி இன்னைக்கு மட்டும் சாப்பிடுறேன்.. பட் இதுவே லாஸ்ட்.. கிளம்பு", என்றான்..
மித்ரா, "சாரி சார்.. இனி இப்படி பண்ண மாட்டேன்", என்றுவிட்டு ஓடி விட்டாள்…
அவளுடைய அழுகையான குரல் பிரித்திவ்வை மீண்டும் வேதனையில் ஆழ்த்தியது..
மித்ரா உடனே ரெஸ்ட் ரூம் சென்று விட்டாள், யாரும் பார்க்காத வண்ணம்..
பிரித்திவ் திட்டிய பிறகே, தன்னுடைய செய்கைகளும்.. அதன் வீரியமும் அவளுக்கு விளங்கியது..
அதிலும் பிரித்திவ் வீட்டில் சொல்லவா என்றது.. அவளின் குற்ற உணர்வை மிகைப்படுத்தியது..
வீட்டில் தன் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளார்கள்.. இந்த விஷயம் தெரிந்தால் என்ன நினைப்பார்கள்.. நான் நல்லது தான் நினைத்து செய்தேன்.. ஆனால் சார் என்னை தவறாக நினைத்து விட்டாரே.. என்று பலவாறு யோசித்து பயந்துவிட்டாள்…
அன்று முழுவதும் தாம் தவறு செய்து விட்டோமோ..
தாய் தந்தையை ஏமாற்றுகிறோமோ என்ற வருத்ததிலேயே மித்ராவிற்கு சென்றது..
மெல்லிய நேசம் இருப்புறமும் வந்த கணமே.. பிரித்திவ் அதன் மீது சுடு நீரை எடுத்து ஊற்றிவிட்டு இருந்தான்..
வீட்டிற்கு சென்ற மித்ரா, அன்றும், லஞ்ச் பேக் எங்கே என்று கேட்ட துளசியிடம், காணோம் என்றாள்…
துளசி, "ஏன்டா.. நீ என்ன சின்ன பிள்ளையா.. நேத்து மறந்துட்டனு சொன்ன.. இன்னைக்கு காணோம் சொல்ற.. ", என்றார்..
மித்ராவை உடனே, மனதில் இருந்த குற்ற உணர்வு தாக்க, அழத் தொடங்கிவிட்டாள்..
பிறகே துளசி மித்ராவை, சமாதானப்படுத்தி, பணம் கொடுத்து, அவள் எடுக்க வேண்டும் என்று சொன்ன பிரிண்ட் அவுட் கடைக்கும், புது லன்ச் பேக் வாங்கவும், பணம் கொடுத்து அனுப்பி விட்டார்…
அன்று மாலை தான் அவள் கிளம்பி சென்ற சில நிமிடங்களில், முதல் முறை ஆதிகேசவன் விஷ்ணுவின் குடும்பத்தினுள் புகுந்து, ஜாதகம் கேட்டு அராஜகம் செய்துவிட்டு சென்றிருந்தான்…
விஷ்ணுவிடம் அடிவாங்கி விட்டிருந்த மிதிலாவிற்கும், இழுப்பு வர அவளை மருத்துவமனையில் அனுமதித்து இருந்தனர்..
மித்ரா, அந்த நாளிற்கு பிறகு ஒரு வாரத்திற்கு கல்லூரிக்கு செல்லவில்லை….
பிரித்திவ் தான் அதில் மிகவும் பயந்து விட்டான்..
அன்று தான் திட்டியதால் தான் அவள் வரவில்லையோ.. ஏதேனும் தவறான முடிவு எடுத்து விட்டாளோ என்று பயந்தவன்… நன்றாக படிக்கும் நல்ல பெண்ணாயிற்றே என்று தவித்து போனான்..
மிதிலாவை, ஒரு நாள் மட்டும், ஹாஸ்பிட்டலில் வைத்து இருந்துவிட்டு, வீட்டிற்கு அழைத்து வந்து விட்டனர்.
மிதிலா மிகவும் பயந்து அதிகமாக அழுததாலும், அதன் அழுத்தம் தாங்காமலும் தான், அவளுக்கு இழுப்பு வந்துவிட்டது.. சின்ன பிள்ளை வேறு.. மற்றப்படி எந்த பிரச்சனையும், அவளுக்கு இல்லை, மீண்டும் இதுப்போல் அவளை அழவிட வேண்டாம் என்று அனுப்பி விட்டனர், மருத்துவமனையில்.
மருத்துவ மனையில், மிதிலாவை பார்த்துவிட்டு சென்றிருந்த ருத்ரன், ஆட்களின் மூலம் நிலவரத்தை மட்டும் கேட்டு அறிந்துகொண்டு இருந்தான். இவர்களை தொடர்பு கொள்ளவில்லை.
அதைத்தொடர்ந்து விஷ்ணு குடும்பத்தில் அனைவரும், அடுத்து என்ன என்று தெரியாது, ஒரு வாரம் வீட்டிலேயே எங்கும் செல்லாது பயத்துடன் இருந்தனர்.
இடையில் பிரித்திவ், வகுப்பு ஆசிரியர் என்ற முறையில்.. விஷ்ணுவின் எண்ணிற்கு அழைத்து.. ஏன் மித்ரா வரவில்லை என்று விசாரித்தான்..
விஷ்ணு, அவளுக்கு இப்பொழுது உடல் நிலை சரியில்லை.. குணமானதும் வருவாள் என்று விட்டு இருந்தார்..
பிரித்திவ், நிச்சயம் தன்னால் தான் அவள் வரவில்லை.. நன்றாக படிக்கும் பெண் பாட வகுப்புகளை தவறவிடுகின்றாள்.. என்று வருத்தம் கொண்டான்..
திரும்பி வந்ததும் மித்ராவிடம் பேச வேண்டும் என்று முடிவு எடுத்துக்கொண்டான்.
மேலும் ஒருவாரம் இப்படியே கடந்துவிட, ஆதிகேசவனிடம் இருந்தும், ருத்ரனிடம் இருந்தும், ஒரு தகவலும், இல்லை, தொல்லையும் எதுவும் தரவில்லை என்றதும், விஷ்ணு குடும்பத்தினர், இனி எந்த பிரச்சனையும் தங்களுக்கு அவர்களால் இருக்காது, என்று நினைத்து சிறிது ஆசுவாசம் அடைந்தனர்..
புயலுக்கு முன் வரும் அமைதி, இது என்று, அவர்களுக்கு தெரியாமல் போனது..
இருந்தும் முன்னெச்சரிக்கையாக, விஷ்ணு, மிதிலாவை ஸ்கூலிற்கு குமுதத்தின் கணவர் ஆறுமுகத்தின் ஆட்டோவில் பாதுகாப்பாக தினமும் காலையும், மாலையும் சென்றுவர ஏற்பாடு செய்துவிட்டார்.
மித்ராவையும், இனி காலேஜ் பஸ்ஸில் செல்ல வேண்டாம் என்று நிறுத்தி விட்டு.. விஷ்ணுவே காலையும், மாலையும் அவளை அழைத்துச்சென்று விட்டு, அழைத்து வர, ஆரம்பித்தார்.
மித்ராவிற்கு இது மூன்றாம் வருடம் என்பதால், மினி ப்ராஜெக்ட் மற்றும் கொஞ்சம் தியரி பேப்பர் மட்டும்தான் அவளுக்கு இருந்தது…
அதிலும் அடுத்த செம் முழுவதுமே, வெறும் பிராஜெக்ட் மட்டுமே.. கல்லூரிக்கு தினமும் அவள் செல்லவே தேவையில்லை…..
அதை மனதில் வைத்து, விஷ்ணு, அவளுக்கு இப்பொழுதே நல்ல இடத்தில் வரன் அமைந்துவிட்டால், திருமணம் முடித்துவிடலாம் என்று, மித்ராவின் பாதுகாப்பை முதன்மையாக கொண்டு முடிவெடுத்தார்.
அதேப்போல், மிதிலாவிற்கு பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுகள் முடிந்ததும்.. அவளை மருத்துவ கல்லூரியில் வெளியே சேர்த்துவிட்டு.. அங்கேயே வேலை பார்த்து கொண்டு குடிகொள்ளலாம் என்றும், திருச்சியை விட்டே சென்று என்று முடிவெடுத்துவிட்டு இருந்தார்.
இப்படியாக, விஷ்ணுவின் குடும்பம், தாங்கள் கண்காணிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றோம், என்பது தெரியாமல் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்..
மித்ரா கல்லூரிக்கு வந்தவுடன்.. பிரித்திவ் அவளை பிரேக்கில் லேப்பிற்கு வந்து பார்க்குமாறு சொல்லி விட்டான்..
மித்ரா வந்ததும் பிரித்திவ், "ஏன் ஒரு வாரத்திற்கு மேல்.. காலேஜுக்கு வரவில்லை", என்றான்.
மித்ரா, "எனக்கு உடம்பு சரியில்லை.. அதனால் தான் வரலை சார்.. அப்பா கூட அன்னைக்கு நீங்க கேட்கும்போது சொன்னாங்களே", என்றாள்..
ஒரு வாரத்திலேயே, மித்ராவின் தோற்றம் முற்றிலும் மாறுபட்டு இருந்தது.. உண்மையிலேயே உடல்நிலை சரியில்லாதது போல்தான் காணப்பட்டாள்..
பிரித்திவ், "உனக்கு இயற்கையா உடம்பு சரியில்லையா சங்கமித்ரா.. இல்ல அன்னைக்கு நான் உன்னை திட்டினதுனால் உடம்பு சரியில்லாமல் போச்சா", என்றான் அவளை ஆராய்யும் பார்வையுடன்..
மித்ரா, உடனேயே, "அதெல்லாம் ஒன்னும் இல்ல சார்.. நீங்க அன்னைக்கு கரெக்டா தான் சொன்னீங்க.. என்னோட பக்கம்தான் தப்பு.. எனக்கு உண்மையாவே திடீர்னு உடம்பு முடியாம போயிருச்சு", என்றாள் பதட்டத்துடன்..
பிரித்திவ், "சரி நீ கிளாசுக்கு போ.. உங்க வீட்ல எல்லாம் நான் ஒன்னும் உன்னை சொல்ல மாட்டேன்.. பயப்படாத", என்றுவிட்டு.. "உன்னோடது தான் எடுத்துட்டு போ.. தேங்க்ஸ்", என்று இரண்டு லஞ்ச் பேஃக்கையும் கொடுத்தான்..
மித்ரா அமைதியாக பையுடன் கிளாசுக்கு வந்து விட்டாள்.
வீட்டில், இருந்த பிரச்சினையில் அதற்கு மேல் அவள் எதுவும் சிந்திக்கவில்லை..
அடுத்தடுத்து வந்த நாட்களிலும், பிரித்திவ் மித்ராவின் முக வாட்டத்தை கிளாஸ்ஸில் கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.
ஏதோ அவளிடம் சரியில்லை என்று அவன் மனம் சொல்லிக் கொண்டே தான் இருந்தது..
மேலும் நாட்கள் நகர, விஷ்ணுவின் குடும்பம், பழய நிலைக்கு திரும்பி, நிம்மதியாக மூச்சு விடத் தொடங்கிவிட்டு இருந்தனர்.
அப்பொழுது, அது எப்படி உன்னை நான் நிம்மதியாக இருக்க விடுவேன் என்பது போல்.. விதி.. அடுத்த நாள் காலை ஏழு மணி அளவிலேயே.. ஆதிகேசவனை இரண்டாம் முறையாக விஷ்ணுவின் வீட்டிற்கு அனுப்பி வைத்தது.
அவன் உடன், அந்த ஏரியா கவுன்சிலர் மற்றும் சில கட்சிக்காரர்களும்.. அள்ளக்கைகளும் இருந்தனர்..
விஷ்ணு குடும்பத்தில் அனைவருமே, காலை நேரம் என்பதால், வீட்டில் தான் இருந்தனர்..
ஆதிகேசவனை, மீண்டும் பார்த்ததும், அனைவருக்குமே, பகீரென்று இருந்தது.
திறந்த வீட்டில் எதுவோ நுழைவது போல் நுழைந்து, நடுக்கூடத்தில் ஜம்பமாய் உட்கார்ந்து விட்டான்..
ஆதிகேசவனுக்கு, மரியாதைக்கு கூட, “வா…” என்று கூப்பிடாத, விஷ்ணு குடும்பத்தின் மேல்.. பயங்கர கோபம் வந்தது..
இருந்தும் அதை வெளியே காட்டிக்கொள்ளாது விஷ்ணுவை நோக்கி, "என்ன சம்பந்தி காலையிலேயே வெளியே கிளம்பிட்டீங்களா.. அன்னைக்கு உங்களை தான் பார்க்க முடியல.. உங்க வீட்டம்மா நான் வந்து போனதை சொல்லி இருக்கும்னு நினைக்கிறேன்.",. என்றவன், அருகில் இருந்தவனை பார்த்தான்…
விஷ்ணுவிற்கு அவரை நன்றாக தெரியும், அவர்களின் ஏரியா கவுன்சிலர் தான்..
அவர், "விஷ்ணு சார்.. எல்லாம் நல்ல விஷயம் தான்.. எம்எல்ஏ ஐயாவை உங்களுக்கு நல்லாத் தெரியும்.. அவரோட ஒரே பையனுக்கு தான் உங்க மூத்த பொண்ணை பேசி முடிக்க நாங்க எல்லாம் சேர்ந்து வந்து இருக்கோம், இன்னும் கொஞ்ச நாள்ல எலெக்சன்.. அதுக்குள்ள உங்க வீட்டு மகாலட்சுமியை அவர் வீட்டுக்கு கொண்டு போகணும்னு நினைக்கிறார்", என்றார்.
அதற்குள் அக்கூட்டத்தில் இருந்த மற்றொருவன், "உனக்குத்தான்யா எங்கேயோ மச்சம் இருக்கு.. சொத்து, வசதி, பதவி, அதிகாரம் எல்லாம் ஐயா கிட்ட இருக்கு", என்றான்..
இன்னொருவன், "ருத்ரன் தம்பி அழகுக்கே, உன் பொண்ண கொடுக்கலாம்", என்றான்.
அனைவரும் பேசியதை கேட்ட விஷ்ணு, கலக்கத்துடன் அனைவரையும் நோக்கி, "இல்லை வந்துருக்கரவங்க எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க.. இப்ப என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ற எண்ணம் இல்லை.. இப்ப தான் அவ படிக்கிறா.. சின்ன பொண்ணு வேற..", என்றார் பொறுமையாக..
உடனே ஆதிகேசவன் கோபமாக பின்புறம் இருந்த புரோக்கரை முன்புறம் இழுத்து, "ஏன்யா.. அப்புறம் இவன்கிட்ட உன் பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க சொல்லாம.. உன் பொண்டாட்டிக்கா வேற புருஷனை பார்க்க சொன்ன..", என்றான், மரியாதையை கைவிட்டு…
அதில், மானம் ஒன்றே பெரிது என்று வாழும் அந்த நடுத்தர வர்க்க மனிதர்.. சபையில் அப்படியே இயலாமையில் கூனிக்குறுகி விட்டார்.
துளசிக்கோ மீண்டும் உடல் ஜன்னி கண்டு இருந்தது.
ஆதிகேசவன் மீண்டும், "சொல்லுயா.. என்ன சும்மா நிக்கிற.. நான் கேட்டா.. பதில் வரனும்", என்றான் அதிகாரமாக..
விஷ்ணு பயத்துடன், "அது வந்து.. அப்புறம் பண்றதுக்கு தான்.. இப்பவே பார்க்க ஆரம்பித்தோம்", என்றார்..
தன்னுடைய குடும்ப நிலையையும்.. உடல் வலிமையையும்.. வைத்துக்கொண்டு.. இத்தனை பேரை எவ்வாறு எதிர்க்க முடியும்.. என்று உள்ளுக்குள் உதறியது அவருக்கு…
ஆதிகேசவன் விஷ்ணுவிடம்,
"இதோ பாரு, இன்னும் ஒரு மாசத்துல வர, நல்ல நாளா பார்த்து ஒன்ன, சுவாமி கல்யாணத்துக்கு குறிச்சு கொடுத்து இருக்கிறார்.. எலெக்சன் முன்னாடி, ருத்ரனுக்கு கல்யாணம் நடந்தா, கண்டிப்பா எனக்கு தான் வெற்றியாம்.. அப்புறம் இன்னும் ஒரு வருஷத்துக்குள்ளே, ருத்ரனுக்கும் புள்ள பொறக்கணுமாம்.. இன்னுமே முன்னாடி தான் கல்யாணம் வைக்க பார்த்தேன்.. முடியல.. எல்லாம் ரெடி பண்ண ஆரம்பிச்சாச்சு.. நீ பத்து பைசா நவுத்த வேண்டாம்.. உன் பொண்ண கூப்பிட்டுட்டு வந்தா போதும்.. சும்மா அது இதுன்னு நீ எதுவும் இதுக்கு மேல, சொல்லாத திருப்பித்திருப்பி.. உன் பொண்ணுக்கும் என் பையனுக்கும் கண்டிப்பா கல்யாணம் நடக்கும்.. நீ அதை உயிரோட இருந்து பார்க்கணுமா, வேண்டாம்னு மட்டும் முடிவு பண்ணிக்கோ..", என்று விட்டுத் திரும்பி..
அங்கு நின்றிருந்த துளசியிடம், "ஏன்மா உனக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா.. ஆம்பளைங்க பேசுறாங்க சும்மா வாய பார்த்துட்டு நிக்கற.. போயிட்டு எல்லாருக்கும் காப்பித் தண்ணி எடுத்துட்டு வா போ..", என்றான் அலட்சியமாக..
துளசி விஷ்ணுவின் முகத்தை பார்த்தார் பயத்துடன்.. விஷ்ணு ‘உள்ளே போ’ என்பது போல் கண்ணை காண்பித்தார்..
உடனே துளசி உள்ளே சென்று.. இருக்கும் பாலில் காஃபி கலந்து.. தட்டில் அடுக்கி, எடுத்து வந்தார், பயத்துடன்..
முதலில் ஆதிகேசவனிற்கு தர..
கொடுக்கும் பொழுது, துளசியின் கை நடுங்குதை பார்த்து காண்டான ஆதிகேசவன், "அபசகுணம் கீழ கீல போட்டுட போற", என்று துளசியை திட்டியவன்,
சுத்தி பார்த்து, மிதிலாவைப் நோக்கி, "சின்ன குட்டி நீ வந்து எல்லாருக்கும் கொடு", என்றான்…
மிதிலா பயத்துடன் வந்து தட்டை வாங்கி அனைவருக்கும் கொடுத்தாள்..
அப்பொழுது ஆதிகேசவன், "நம்ம பையன் முதல்ல இந்த குட்டியை பார்க்கல போல.. இந்த குட்டி தான் நல்லா தளதளன்னு பார்க்க கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு..", என்றான் கொடுரமாக..
அவனின் பேச்சில் உடன் வந்தவர்களுக்கே அதிர்ச்சி மற்றும் அருவருப்பு.. 'ஸ்கூல் யூனிபார்மில் இருக்கும் சிறு பெண்ணை போய் என்ன சொல்கிறார்', என்று..
விஷ்ணு மற்றும் துளசியின் நிலையை, கூறவே வேண்டாம்.
உடல் முழுக்க கம்பளிப்பூச்சி ஊர்வது போல் இருந்தது, ஆதிகேசவனின் பார்வையும் பேச்சும்…
ஆதிகேசவன் தான் பேசுவது அனைத்தும் சரியே என்பது போல், "தோ பாரு விஷ்ணுவரதா.. ஒன்னும் பயப்படாத.. எப்படியும் உன் பெரிய பொண்ணு மேல இருக்க ஆசை என் பையனுக்கு ஒரு மாசத்துல தீந்திடும்.. அடுத்து எப்படியும் உன் சின்ன பொண்ணு தான் அவனுக்கு பிடிக்கும்.. உன் ரெண்டாவது பொண்ணு வாழ்க்கையும் அமோகமா இருக்கும்னு சொன்னார் ஜோசியர்.. ஒன்னும் பயப்படாத ஒன்னுக்கு ஒன்னு துணையா இருக்கும்..", என்றான், ஏதோ விஷ்ணுவின் குடும்பத்துக்கு வாழ்க்கை கொடுப்பது போல் சாதாரணமாக..
அதில், மித்ராவிற்கு மிகுந்த அதிர்ச்சி, ருத்ரனின் குணம் தெரிந்ததும்.. அதைவிட தன்னுடைய எதிர்காலம் அவனுடனா என்று யோசிக்கும் போதே மனக்கண்ணில் பிரித்திவ் தோற்றமே அவளுக்கு வந்து போனது..
அவளின் மூளை காரணம் இன்றி பிரித்திவ்வுடன் ருத்ரனை ஒப்பிட்டு பார்த்தது..
விஷ்ணுவிற்கும் துளசிக்கும் எவ்வாறு தம் பிள்ளைகளை.. இவனிடம் இருந்து காப்பது.. என்று அடி வயிற்றிலும் நெஞ்சிலும் பாரம் கூடியது…
பிள்ளைகளின் கண்ணில் நீர் வடிய தொடங்கியது.. தங்கள் தலையெழுத்தை எண்ணி பயத்தில்..
இதை பார்த்த ஆதிகேசவன் உடனே எழுந்து கொண்டான்..
"இதோ பாரு எனக்கு எலெக்சன் வேலை நிறைய இருக்கு.. கல்யாணத்திற்கு வேண்டியதை ஆளுங்க வந்து தருவாங்க.. இனி மேல என்னால இங்க வர முடியாது.. நேரா கல்யாணத்துல பார்க்கலாம்.. உன் பிரச்சினை என்ன உன் பொண்ணு படிக்கணும் அதுதானே.. காலேஜ் போகட்டும் அதுல எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை.. அப்பதான் அடுத்தடுத்து வர எலக்சன்ல பொண்ணுங்களுக்கு சீட்டு ஒதுக்கினா, உன் பொண்ண நிக்க வைக்க முடியும்.. சும்மா சும்மா கண்ண கசக்கினா எனக்கு பிடிக்காது.. கத்தியை எடுத்து ஒரே சொறுது தான், போயிட்டே இருப்பேன்…", என்று விட்டு…
மித்ராவை நோக்கி, "மருமகளே வாங்கி வந்திருக்க, எல்லா பழத்தையும் சாப்பிட்டு, உடம்பை நல்ல சின்ன குட்டி மாதிரி தேத்தி வை.. வேற ஏதாவது வேணும்னாலும் சொல்லு வாங்கி அனுப்பறேன்.. நல்லா சந்தோஷமா கல்யாணத்துக்கு ரெடி ஆகு.. ருத்ரன் சந்தோசம் தான் எனக்கு முக்கியம்.. அடுத்த பத்து மாசத்துல எங்க வீட்ல குழந்தை அழுவுற சத்தம் கேட்கனும்",
என்று விட்டு, வெளியே நடந்து விட்டான்..
வந்தவர்களும் அவன் பின் ஒவ்வொருவராக சென்றுவிட்டனர்..
விஷ்ணுவின் குடும்பத்தின் மீது பல இடிகள் இறங்கியது போல் இருந்தது.
மறுவினாடி மித்ரா, சத்தம்போட்டு கதறி அழத் தொடங்கி விட்டாள்.. இனி தன் வாழ்க்கை என்ன ஆகுமோ என்று பயந்து..
விஷ்ணு அவளை அணைத்துக்கொண்டு, "பயப்படாதடா மித்து.. அப்பா யோசிக்கறேன்.. உன்னை எப்பவும் விட மாட்டேன் டா.. கடவுள் நமக்குன்னு ஏதாச்சும் ஒரு வழியை காண்பிப்பார்.. நாம யாருக்கும் இதுவரை கெட்டது நினைத்ததில்லை..", என்று அவளை ஆறுதல் படுத்தினார்.
துளசி ஞாபகம் வந்தவராக சென்று, ருத்ரனின் விசிட்டிங் கார்டை எடுத்து வந்து விஷ்ணுவிடம் கொடுத்தார்.. "ஏங்க அந்த தம்பி கிட்ட பேசி பாருங்களேன்", என்று..
மிதிலாவோ, தன்னால்தான், தன் அவசர புத்தியால் தான், தன் குடும்பத்திற்கு இந்த நிலைமை என்று துடித்து விட்டாள்…
விஷ்ணு உடனே ருத்ரனிருக்கு போன் செய்து, ஆதிகேசவன் வந்து சென்றதையும், தங்களுக்கு இதில் விருப்பம் இல்லை, என்றும் சொன்னார்..
ருத்ரன், “நான் திரும்பி கூப்பிடறேன் அங்கிள்” என்று ஃபோனை வைத்து விட்டு, உடனே மாதவியிடம் சென்று விசாரித்தான்..
அவருக்கும் ஆதிகேசவன் சென்ற விஷயம் குறித்து எதுவும் தெரியவில்லை..
பிறகு ருத்ரன், நேராக ஆதிகேசவனிடம் பேச கட்சி அலுவலகம் சென்றான்..
"ஏன் டாட், இவ்வளவு பெரிய முடிவு எடுத்து இருக்கீங்க.. ஏன் என்கிட்ட எதுவும் சொல்லல..", என்றான்..
ஆதிகேசவன், "உன் நல்லதுக்குதான் ருத்ரன் எதனாலும் டாடி பண்ணுவேன்.. இன்னிக்கி ராத்திரி எனக்கு சிஎம் கூட மீட்டிங் இருக்கு.. நான் இப்ப ஏர்போட் போறேன்.. வந்து இதைப்பத்தி நாம பேசலாம்.. சந்தோஷமா இரு..", என்றுவிட்டு புறப்பட்டு விட்டான்…
ருத்ரன் வேறுவழி இல்லாமல் மனதில் பலவாறு யோசித்துவிட்டு.. நாளை மித்ராவிடம் நேரடியாக பேசலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டு படுத்தான்..
ருத்ரனிடம் இருந்து பதில் ஃபோன் வராத துக்கத்தில் விஷ்ணு குடும்பம்.. ராத்திரியை தூக்கம் இன்றி கழித்தனர்..
அங்கு அன்று பிரித்திவ்விற்கு, ஏன் சங்கமித்ரா மீண்டும் கல்லூரிக்கு வரவில்லை, நேற்று நன்றாக தானே இருந்தாள், என்ற பதட்டம்..
ஆனால், அதற்கு அடுத்த நாள், வீட்டில் அழுதுக்கொண்டே இருக்கும் மித்ரா, கல்லூரிக்காவது செல்லட்டும் என்று, விஷ்ணு கொண்டு போய் விட்டார்..
மிதிலாவிற்கு இன்னும் ஒரு சில நாட்களில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுதேர்வு ஆரம்பம்.. அவளும் பள்ளிக்கு சென்று விட்டு இருந்தாள்.
அன்று கல்லூரியில், மித்ராவிற்கு முதல் வகுப்பு பிரித்திவ் தான்..
மித்ராவின் முகத்தை பார்த்த பிரித்திவ்விற்கு இதயம் நின்று துடித்தது..
முகம் முழுக்க வீங்கி.. கண்ணில் உயிரற்ற பார்வையுடன் உட்கார்ந்து இருந்தாள்..
ஏன் என்று புரியவில்லை..
வகுப்பில் எதுவும் கேட்க முடியாத சூழல், வேறு..
அதிலும் அவள் கண்ணில் இருந்து நீர் வடிந்துக்கொண்டே இருந்தது.. ஷாலில் துடைத்துக்கொண்டே இருந்தாள்..
கிளாஸ் முடியும் தருவாயில், பியூன் வந்து, மித்ராவை பிரின்ஸ்பால் அழைப்பதாக வந்து கூப்பிட்டார்..
மித்ரா, என்ன ஆனதோ, ஏதானதோ என்ற பயத்துடன்.. எழுந்து பிரித்திவ்விடம் சொல்லிவிட்டு, பிரின்ஸ்பால் அறைக்கு சென்றாள்..
அங்கு உள்ளே ருத்ரன் பிரின்ஸ்பால் முன்பு உட்கார்ந்து இருந்தான்..
அவனை பார்த்ததும் மித்ராவிற்கு இன்னும் பதட்டம்..
பிரின்ஸிப்பால், "ருத்ரன் சார் உன்னை பார்க்கத்தான்மா.. வந்து இருக்கிறார்.. உன்னோட ரிலேட்டிவ்னு எங்களுக்கு தெரியாது.. போய் பேசிட்டு வாமா..", என்று ருத்ரனுடன் அனுப்பி வைத்தார்.. மித்ராவிற்கு மறுத்துப் பேச வாய்ப்பளிக்காமல்..
கருத்துகள்
கருத்துரையிடுக