உண்மை காதல் -19
அத்தியாயம் -19
இங்கு பிரித்திவ்வும், மித்ராவும் பெங்களூரில் ஒரு உயர்தர ஹோட்டலில் இரவு தங்கியிருந்தனர்.
காலை பிரித்திவ் கண்ணை விழித்து பார்க்கும் பொழுது.. அவன் புறம் திரும்பி படுத்து தூங்கிக் கொண்டிருக்கும்.. மித்ராவின் முகம்தான் கண்ணில் பட்டது..
கை கால்களை குறுக்கி நிர்மலமான முகத்துடன் அழகோவியமாக. தான் அணிவித்த தாலியுடன்.. தன் பக்கத்தில் தூங்கிக்கொண்டு இருந்த.. புது மனைவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு இருந்தான், உரியவனின் உரிமையுடன்.
சிறிது நேரத்தில் கண்ணை திறந்த மித்ரா, பார்த்தது, தன்னையே அசையாமல் பார்த்துக் கொண்டு இருந்த பிரித்திவ்வின் கண்களை தான்.
சட்டென்று அதில் நாணமேற.. அன்னிச்சையாக எழுந்து உட்கார்ந்த மித்ராவின் கைகள் கலைந்து இருந்த, ஆடைகளை திருத்தி ஒழுங்காக ஷாலை போட்டது..
அவளுடனே எழுந்து அமர்ந்த பிரித்திவ், "குட்மார்னிங் சங்கமித்ரா.. நீ போயிட்டு ஃப்ரெஷ் ஆகிட்டு வா.. நான் அதுக்குள்ளே காஃபிக்கு சொல்றேன்", என்றான்..
"ஓகே சார்", என்ற மித்ரா பாத்ரூம் நோக்கி விரைந்து விட்டாள்..
இராத்திரி நேரம், தொடர்ந்து கார் ஓட்டுவது, நல்லது அல்ல என்று முடிவு செய்து.. பிரித்திவ் பெங்களூரிலேயே பயணத்தை நிறுத்தி விட்டான்..
இருவரும் ஒரே அறையில்தான் தங்கினர்..
அப்பொழுதுதான் விஷ்ணு, ஏன் திருமணம் செய்து அனுப்பினால், எங்களுக்கு நிம்மதி என்று சொன்னார் என்று அவர்களுக்கு புரிந்தது..
இரவு பிரித்திவ், வீட்டின் சிந்தனையில் தவிக்கும் மித்ராவிடம் நிறைய பேசினான்.. முடிந்த அளவு அவளுக்கு வேறு எண்ணம் வராத வகையில் பார்த்துக்கொண்டு இருந்தான்.
மித்ரா வெளிவர, இருவரும் காஃபி குடித்து, அதன் பிறகு தயாராகி, காலை உணவையும் முடித்துக்கொண்டு, மும்பை நோக்கி கிளம்பிவிட்டனர்.
அங்கு திருச்சியில், ருத்ரன் அன்று மாலையே, மிதிலாவை விஷ்ணுவின் வீட்டிற்கு கொண்டுவந்து விட்டு விட்டான்..
ஆனால் ஆதிகேசவனின் கட்டுப்பாட்டில் தான், விஷ்ணு, துளசி, மிதிலா வீட்டினுள்ளே இருந்தனர். திருமணம் முடியும் வரை, அவர்களை, எங்கும் நகர கூடாது என்று விட்டனர்.
அன்று நள்ளிரவில், மிதுன் ஜார்ஜின் வீட்டிற்கு, மித்ராவும் பிரித்திவ்வும் பத்திரமாக, சென்று அடைந்துவிட்டனர்.
________________________
அவ்வாரம் குறித்த முகுர்த்தத்தில், ருத்ரனின் திருமணம் சாஹித்தியா உடன், ஆதிகேசவனின் ஆசைப்படி, நடந்து முடிந்தது..
திருமணம் முடிந்த மறுகணமே, யாரின் பேச்சினையும் கேட்காது ருத்ரன், கெஸ்ட் ஹவுசிற்கு சாஹித்தியா உடன் சென்றுவிட்டான்..
ஆதி கேசவனுக்கு எலெக்ஷன் நெருக்கம், என்பதால், அதன் வேலையில் மும்முரமாக இறங்கிவிட்டான்..
திருமணம் முடிந்ததும், பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று, விஷ்ணுவின் குடும்பத்தையும் ஆதிகேசவன் விட்டுவிட்டான்.
அங்கு மும்பையில், ஜார்ஜ் வீட்டிற்கு அருகிலேயே.. செக்யூர் கம்யூனிட்டியில், நல்ல அப்பார்ட்மெண்ட் ஒன்றை, பிரித்திவ் வாடகைக்கு எடுத்து.. மித்ராவுடன் தன் வாழ்க்கையை வாழ ஆரம்பித்து இருந்தான்.
இரண்டு மாதம் சென்ற பிறகே, மும்பை ஐஐடியில், அவன் வேலைக்கு சேர வேண்டும்.
அதுவரை மித்ராவுடன் தான் அவனும்..
________________________
பிரித்திவ் சொன்னது போல், அவர்கள் சென்ற, பதினைந்து நாட்களுக்கு பிறகு, அதிகாலை நேரத்தில், விஷ்ணு பிரித்திவ்விற்கு அழைத்தார்..
இருபக்கமுமே, ‘யார் என்ன ஆனார்கள்’ என்று தெரியாது, தவித்துக்கொண்டு தான், இந்த பதினைந்து நாளையுமே கடந்து இருந்தனர்..
பிரித்திவ் நாங்கள் பத்திரமாக இருக்கின்றோம், எந்த பிரச்சனையும் இல்லை என்றவன்.. மித்ராவிடம் ஃபோனை கொடுக்க…
அவளிடமும் பேசினர்…
மித்ராவின் குரலே அவள், தங்களின் பிரிவை தவிர, பிரித்திவ்வுடன் நிம்மதிமாக வாழ்கின்றாள், என்பதை விஷ்ணு துளசிக்கு கூறிவிட..
வேறு என்ன வேண்டும் பெற்றவர்களுக்கு.. அதற்கு தானே இத்தனை போராட்டம்..
பிரித்திவ் அங்கு என்ன நடந்தது என்று விசாரிக்க,
இங்கு நடந்த எதையுமே,
அவர்களாவது நிம்மதியாக இருக்கட்டும் என்று.. அவர்களிடம் விஷ்ணு துளசி தெரிவிக்கவில்லை.
அதன்பிறகு, ஒரு குறிப்பிட்ட நேரத்தை முடிவு செய்து, அதில் தினமும் பேசிக்கொள்ளலாம் என்றுவிட்டு அழைப்பை துண்டித்தான், பிரித்திவ்..
மித்ராவின் முகத்தில் வீட்டிற்கு பேசியப்பின் தான் நிம்மதி வந்து சேர்ந்தது..
அங்கு என்ன ஆனதோ, ஏது ஆனதோ என்று, ஒவ்வொரு வினாடியும், வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு கிடந்தாள்..
விஷ்ணு துளசியின் நிலையும் அதுதான். ஏதோ ஒரு நம்பிக்கையில் பிரித்திவ்வின் கையில் அவளை பிடித்து கொடுத்துவிட்டு இருந்தாலும், பயத்துடன் தான் இருந்தனர்.
இருபக்கமுமே இப்பொழுது நிம்மதியாகிவிட்டனர்.
ஆனால் தனித்து விடப்பட்டுவிட்ட, மிதிலா தான், மித்ரா காணாமல் போனது, ஆதிகேசவன் அவளை அடித்து துன்புறுத்தியது.. என்று பல விஷயங்களால் பயந்து, தனக்குள் ஒடுங்கி விட்டு இருந்தாள்..
அதிலும், இன்றுவரை, மித்ரா பிரித்திவ் குறித்து, விஷ்ணு துளசி, மிதிலாவிடம் மூச்சு கூட விடவில்லை..
அதில் அவளோ தன்னால் தான் மித்ரா எங்கோ சென்று விட்டாள்.. என்ன ஆனதோ தன் அக்காவிற்கு, என்ற குற்ற உணர்விலும், அவளின் பிரிவிலும், பயத்தில் சோர்ந்து போனாள்.
வரண்ட பாலைவனத்தில் பூ பூத்தப்போல்.. யாருக்கும் காத்திருக்காமல்.. நாட்கள் கடந்துச்சென்று.. பன்னிரண்டாம் வகுப்பின் பொதுத் தேர்வின் முடிவுகள் வெளிவந்தன.
மிதிலா திருச்சி மாவட்டத்திலேயே முதலிடமும்.. தமிழ்நாட்டில் 5-ஆம் இடமும் பெற்று தேர்வாகி இருந்தாள்..
மிதிலாவின் தேர்வின் முடிவுகள், மீண்டும் விஷ்ணு துளசி குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஆதிகேசவனின் இடையூறு மட்டும் இல்லாதிருந்தால், மிதிலா நிச்சயம் தமிழ்நாட்டிலேயே முதலிடம் பிடித்து இருப்பாள்.
விஷ்ணு துளசி, அவளை அணைத்து வாழ்த்து கூற, மிதிலாவினால் எதையும் அனுபவிக்க முடியவில்லை..
மித்ரா காணாமல் போகும் முன்தினம் இரவு, அவளை அணைத்து வாழ்த்தியதும், இன்று உடன் அவள் இல்லாததுமே அவளின் மனதில் நின்றது..
மிதிலாவின் மதிப்பெண்ணை பார்த்த, மித்ராவிற்கு அளவற்ற மகிழ்ச்சி.. நிச்சயம் மிதிலாவிற்கு, அவளின் உழைப்பிற்கு, டாக்டர் சீட்டு கிடைத்துவிடும் என்று நம்பினாள்.. அதேநேரம் மித்ராவின் பிரித்திவ்வுடனான காதல் வாழ்க்கைக்கு சான்றாக, பிரித்திவ்வின் உயிர் மித்ராவின் வயிற்றில் வேரூன்றி வளரத்தொடங்கிவிட்டு வேறு இருந்தது..
விஷயம் அறிந்ததும், விஷ்ணு துளசி, மிதிலாவிற்கு நீட் தேர்வு முடிந்து, ஒரு நல்ல மருத்துவ கல்லூரி அமைந்ததும், மும்பைக்கு சென்று விடலாம் என்று முடிவு செய்து விட்டனர்.
அதை மனதில், வைத்து மிதிலாவை, அவர்கள் தேர்விற்கு தயாராக்க.. தேர்வு நாளும் வந்து சேர்ந்தது.
அன்று அதிகாலையிலேயே, விஷ்ணு குடும்பத்தில் அனைவரும் எழுந்து, மிதிலாவுடன் நீட் தேர்வுக்கு செல்லத் தயாராகினர்..
ஆறுமுகத்தின் ஆட்டோ, இவர்களை அழைத்துச்செல்ல, வாசலில் வந்து நின்று இருந்தது.
பூஜை அறையில் ஒன்றாக நின்று பூஜையை முடித்துவிட்டு.. வீட்டை பூட்டிக் கொண்டு வெளியில் வர..
அப்பொழுது ஆதிகேசவனின் கார் வேகமாக வந்து, அவர்களின் வீட்டு வாசலின் முன்பு நின்றது.
நடந்து முடிந்த எலெக்ஷனில், ஆதிகேசவன் தோற்றுவிட்டு இருந்தான்.
அதுவும் முதல் முறையாக.
ஆதிகேசவனின் காரை மீண்டும் பார்த்த, விஷ்ணுவின் குடும்பத்திற்கு, இதயம் வெடித்து விடும் அளவுக்கு வேகமாக துடிக்க ஆரம்பித்தது.
மிதிலாவிற்கோ உடல் தூக்கி வாரிப்போட்டது, வாங்கிய அடிகளின் வலியையும்.. பேச்சையும் நினைத்து. அவள் உடலில் இரத்தமே உறைந்துவிட்டது.
உள்வாசலில் நின்று இருந்தவர்களை நெருங்கிய ஆதி கேசவன்..
"வணக்கம், எல்லாரும் எப்படி இருக்கீங்க..? சவுக்கியமா..? குடும்பமா எங்கயோ கிளம்பிட்டீங்க போலயே..! பார்த்தா எல்லாரும் நிம்மதியா இருக்க மாதிரி வேற இருக்கே..! எங்க கிளம்பிட்டீங்க", என்றான்.
ஆதிகேசவனின், வார்த்தையில் இருந்த நயம், உடல் மொழியிலும், குரலிலும் கொஞ்சமும் இல்லை..
பயத்துடன் விஷ்ணு, "மிதிலாக்கு நீட் எக்ஸாம்ங்க இன்னைக்கி.. அதுக்கு தான் போறோம்.. இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்குங்க", என்றார்..
ஆதிகேசவன், "ஓ ரொம்ப நல்லது.. அப்ப என்னை சீக்கிரம் கிளம்புடா அப்படின்னு சொல்ற.. உன் சின்ன பொண்ணு டாக்டராக போகுதா.. மகிழ்ச்சி..", என்றவன்..
தொடர்ந்து, “தாராளமா போ.. அதுக்கு முன்ன இத சொல்லிட்டு போ.. உன் பெரிய பொண்ணு என்ன ஆச்சு? ஏதாவது தகவல் தெரிஞ்சுச்சா.. ருத்ரனுக்கு கல்யாணமான விஷயம் தெரிஞ்சு.. இந்நேரம் அவ திரும்பி வந்து இருக்கணுமே.. ஆனால் இன்னும் அவ வரலை.. அப்படின்னா எங்கேயாச்சும் அவள நீ தங்க வெச்சி இருக்கியா.. இல்ல யாரு கூட யாச்சும் ஓடிப்போயிட்டாலா.. இல்ல செத்துப்போனாலா.. சொல்லு", என்றான் வன்மமாக....
விஷ்ணு அவன் வார்த்தைகளின் வீரியம் தாங்கமுடியாமல், "ஐயோ அப்படி எல்லாம் பேசாதீங்க.. அவ ஏதோ பயத்தில இப்படி தப்பான முடிவு எடுத்து போய்ட்டா... எங்க போனான்னு தெரியாம நாங்களே ரொம்ப கஷ்டத்துல இருக்கோம்.. என் பொண்ணு எங்கையாச்சும் உயிரோட இருந்தா போதும்", என்றார்.
அதில் ஆதிகேசவன், "கஷ்டத்திலே இருக்கீங்களா.. உங்க மூஞ்சிய பார்த்தா அப்படி தெரியலையே.. ..", என்று நக்கலாக கூறியவன்.. "நியூஸ் பார்த்தியா", என்றான் கர்ஜனையாக...
நேற்று இரவே, நியூஸில், ஆதிகேசவன் தோல்வி அடைந்த செய்தியை, விஷ்ணு துளசி பார்த்துவிட்டு இருந்தனர்.
அதை பாரத்து மிகுந்த மகிழ்ச்சி இருவருக்குமே.. கடவுள் அவனுக்கான கூலியை கொடுக்க தொடங்கி விட்டார் என்று நினைத்து இருந்தனர்.
ஆனால் அது தங்கள் பக்கம் திரும்பும் என்று நினைக்கவில்லை.
விஷ்ணு அமைதியாக இருந்தார், எதுவும் சொல்லவில்லை.
ஆதிகேசவன், "அப்ப நியூஸ் பார்த்து இருக்க.. மனசு குளுகுளுன்னு இருந்துச்சா பார்க்கும்போது.. நான் அழிஞ்சுபோகணும்னு தானே நீங்க நெனச்சீங்க.. நடந்துடுச்சா.. அதான் உன் பெரிய பொண்ண கூட மறந்துட்டு ஜாலியா கிளம்பிட்டீங்களா குடும்பமா..", என்றான்.
ஆதிகேசவனுக்கு இருந்த காண்டில்.. என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் மாற்றி மாற்றி பேசி உயிரை எடுத்தான்..
விஷ்ணு, "ஐயோ அப்படி இல்லைங்க.. டாக்டர் ஆகணும்னு மிதிலாக்கு ஆசை.. ரொம்ப கஷ்டப்பட்டு படிச்சா.. சரி அவள் ஆச்சும் நல்லா இருக்கணும்னு தான், நாங்க அவ கூட கிளம்பனோம்.. அரசியல் பத்தி எங்களுக்கு அவ்வளவா தெரியாதுங்க.. உங்களை பத்தி நாங்க எதுவும் நினைத்தது இல்லை", என்றார், வேதனையுடன். இன்று என்ன ஆகுமோ என்ற பயத்துடன்..
ஆதிகேசவன், "ஓ அப்படியா உன் சின்ன பொண்ணு சந்தோஷமா டாக்டர் ஆகனும்.. உன் பெரிய பொண்ணு திரும்பி வந்து அதுவும் சந்தோஷமா உன்கூட இருக்கனும்.. ஆனா உன் பொண்ண கல்யாணம் பண்ணனும்னு நினைச்ச என் பையன் நாசமா போனும்.. உன் பொண்ணுக்காக எல்லாம் பார்த்து பார்த்து செஞ்ச நான் எலக்சன்ல தோற்றுப் போகணும்.. ஆனா நீ எங்களை பத்தி நினைச்சு கூட பாக்க மாட்ட.. அதுக்குள்ளே பொண்ணையும், பொண்டாட்டியையும், நல்லா சிங்காரச்சு கூப்பிட்டு கிளம்பிட்ட.. அடுத்து எவனாது மாட்டுனா அவனை ஒரு வழி ஆக்கலாம்னு.. உங்களை விடுறத்துக்கு நான் என்ன சொம்பையா..", என்றவன்..
மிதிலாவின் கையில் இருந்த பையை, முரட்டுத்தனமாக பிடுங்கி, அதில் உள்ளிருந்தவற்றை கீழே கொட்டினான்.
அடுத்து, அதிலிருந்த ஹால் டிக்கெட்டை மட்டும் தன் கையில் எடுத்தவன், மறுகணம் தன் சட்டைப் பையிலிருந்த லைட்டரை எடுத்து அழுத்தினான்..
விஷ்ணு பதறி, "ஐயோ என்ன பண்றீங்க.. ", என்று வாங்க வருவதற்குள், மிதிலாவின் ஹால் டிக்கெட், எரிந்து சாம்பலாக தொடங்கியது..
எரியும் காகிதத்தை விஷ்ணுவின் கையில், ஆதிகேசவன் வைக்க.. அவருக்கு இருந்த வேதனையில் அதன் சூடு எதுவும் தெரியவில்லை..
தன் மகளின் கனவு, தன் கையிலேயே கரி ஆவதைப் பார்த்து தான் மனம் வெந்தார்..
மிதிலாவின் கண்ணில் இருந்து நீர் பெருக்கெடுத்தது நிராசையினால்..
அவளின் கனவுகள் அனைத்தும், கானல் நீராக மாறி மறைந்து போனது..
முடிந்த அளவு, தன் கண்ணீரை, உள் இழுத்துக்கொண்டாள்.. ஆதிகேசவன் மேலிருந்த பயத்தில்.. மறந்தும் அவள் வாயை திறக்கவில்லை..
துளசியும் அவ்வாறே..
மறுவினாடி, விஷ்ணுவின் கையில் இருந்த காகிதம், வீசியக்காற்றில், காற்றில் கலந்து, கரைந்து மறைந்தது..
எதிரில் நின்று இருப்பவர்களின் கண்களில் நிரம்பி வழிந்த வேதனை, ஆதிகேசவனுக்கு போதவில்லை…
"உங்களை ஒருத்தரையும் விட மாட்டேன்டா.. என்னைக்கு உன் பெரிய பொண்ணு என் கண்ணுல படுதோ அன்னைக்கு தெரியும் நான் யாருன்னு, உங்களுக்கு.", என்று கத்தினான் ஆக்ரோஷமாக..
அவ்விடமே அவனின் கர்ஜனையில் அதிர்ந்தது..
அதற்குள், சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தில் இருந்து வெளியே ஓடி வந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர். சிலர் பயந்து ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டு இருந்தனர்..
மறுகணம் ஆதிகேசவன், தன் ஆளை நோக்கி, "டேய் இவளுக்கு திருச்சியிலேயே மட்டமான காலேஜா பார்த்து.. டாக்டருக்கு சம்பந்தமே இல்லாத படிப்பா சேர்த்து விடுங்க.. காலேஜ் வாழ்க்கை இவளுக்கு நரகமா கழியனும்.. நினைச்சது நடக்கலைனு தினம் தினம் சாகனும்", என்றவன்....
மீண்டும் விஷ்ணுவின் புறம் திரும்பி, "என்னை யாராலையும் ஒன்னும் பண்ண முடியாது… அதுகடவுளா இருந்தாலும் சரி.. என்னை எதிர்க்க நினைக்கிறவன் எவனும் அடுத்த மூச்சு காத்தை உள்ளிழுக்க முடியாது.. நிறுத்திவிடுவேன்…", என்றவன்.. “ரொம்ப சந்தோஷம் பட்டுக்காத, என்னோட பதவிய எப்படி திருப்பி என்கிட்ட வர வைக்கணும்னு எனக்கு தெரியும்.. எத்தனை வாட்டி எனக்கு எதிரா யாரு ஜெயிச்சாலும்.. அவனை போட்டுத் தள்ளிட்டு போயிட்டே இருப்பேன்.. இன்னும் ரெண்டு நாள்ல இடைத்தேர்தல் அனௌவுன்ஸ் பண்ணுவாங்க பாரு..", என்றவன், சென்று தன் ஜீப்பில் ஏற, மறு நிமிடம் மொத்த கூட்டமும் காலி ஆனது.
மீண்டும் ஒரு புயல் விஷ்ணு குடும்பத்தில்…
மீதமிருந்த அனைத்தும் தரைமட்டமாகிவிட்டது
இடிந்து போயி விட்டனர்..
அடுத்த நாளே மிதிலாவிற்கு, மட்டமான.. ரவுடிசம் அதிகம் நடக்கும்.. விரல் விட்டு எண்ணும் நிலையில் பெண் பிள்ளைகள் படிக்கும் ஒரு கல்லூரியில் இருந்து.. அப்ளிகேஷன் வந்து சேர்ந்தது.. கூடவே கண்டிப்பாக இதில் தான் படிக்க வேண்டும் என்ற மிரட்டலுடன்..
ஆதிகேசவன் என்ற கருநாகத்தின் கண்ணில் பட்ட விஷ்ணு குடும்பத்தினர், அனுதினமும் வேதனையை அனுபவித்தனர்..
மித்ரா நீட் தேர்வு, மிதிலா எவ்வாறு எழுதினால் என்று விசாரிக்க.. மிதிலா மிகவும் கஷ்டமாக இருந்ததாக சொன்னாள் என்று மட்டுமே சொன்னார் விஷ்ணு.
வாயும் வயிறும் ஆக இருக்கும் பிள்ளையை பயத்திற்கும், வேதனைக்கும் ஆளாக்க வேண்டாம்.. குறைந்த பட்சம் அவர்களாவது நிம்மதியாக இருக்கட்டும் என்று நினைத்து மறைத்துவிட்டனர்..
நாட்கள் செல்ல.. மிதிலா வேறு வழி இல்லாமல் அந்த கல்லூரிக்கு சென்று வர தொடங்கினாள்.. பாதிநாள் பயத்திலேயே ஜூரம் வந்து, வீட்டில் படுத்து விடுவாள்..
பதினெட்டு வயதில் வாழ்க்கையே அவளுக்கு நரகமாகிப்போனது.
இதையெல்லாம், நினைத்து பார்த்த ஹரிக்கு, அவ்வளவு வேதனையாக இருந்தது.
அருகில் தூக்கத்தில் இருந்த மிதிலாவை, மெல்ல தூக்கிய ஹரி, தன் கைவளைவில் அவளை வைத்துக்கொண்டான்.
ஹரி அன்று கொடுத்த, கிரீட்டிங் கார்ட் முழுவதும், மிதிலா எழுதி இருந்த, டாக்டர் லவ்ஸ் டாக்டர் அவனை வேதனைப்படுத்தியது.
எவ்வளவு நம்பிக்கையாக இருந்து இருப்பாள்.. டாக்டர் ஆகிவிடுவோம் என்று.
தன்னவளின் நெற்றியில் முத்தமிட்ட ஹரி, அன்று அவள் பட்ட வேதனையை இன்று தாங்க முடியாமல்.. அவளை தனக்கு ஆதரவாக தன்னுடன் சேர்த்து இறுக்க கட்டிக்கொள்ள.. பெண்ணவளோ பனிப்பொழிவினால் ஏற்பட்ட அதீத குளிரில் ஹரியுடன் ஒட்டிக்கொண்டாள்..
அதில் ஹரியின் இதயம் பனியாய் உருகியது..
இனி உனக்கு நான் எல்லாமுமாக இருப்பேன் பேபி.. என்று மனதில் உறுதி எடுத்துக்கொண்டான்..
மிதிலாவின் காதலை நினைத்தவனுக்கு எங்கோ பறப்பது போல் சுகமாய் இருந்தது…
"ஏன் பேபி, அன்னைக்கு உன் பேர் சொல்லவே, அவ்வளவு யோசிச்ச.. அப்புறம் எப்படி பேபி என்னை லவ் பண்ண.. ஓ மை காட் என்னால நம்பவே முடியல .. அன்னைக்கு நான் பார்த்த குட்டி பொண்ணு.. இன்னைக்கி எனக்காகவே என்கிட்ட... லவ்லி லவ்லி.. ஐ அம் வெரி வெரி லக்கியஸ்ட் பர்சன் இன் த வேர்ல்ட் பேபி.. உன்னை டிஸர்வ் பண்ணி இருக்கேன்.. உன்னோட சேர்த்து ஸ்வீட் டெசர்ட் மாதிரி மகிழ்மதி வேற.. மை லிட்டில் பிரின்சஸ் அவ..", என்றவனின் கரங்கள் மேலும் தன் அழகு பூஞ்சிலையை தன்னுடன் சேர்த்து இறுக்கியது.
"பட் பேபி, நான் அன்னைக்கு பார்த்த ஜிகிலி கேக் மாதிரி, நீ இப்போ இல்லை.. ரொம்ப மாறிட்ட பேபி… அப்போ எவ்வளோ ஹைட் கம்மியா.. கியூட்டா புசு புசுன்னு இருந்த… இப்போ கம்லீட்டா முழு பெண்ணா வளர்ந்திட்ட.. ஓ மை காட் அன்னைக்கு அண்ணான்னு வேற கூப்பிட்டல…", என்று ஒவ்வொன்றாக தன் நினைவடுக்கில் இருந்து முடிந்தளவு மீட்டு பார்த்தான்…
தன்னவளின் வாழ்க்கையில் மாபெரும் பேராபத்து ஏற்பட்டு..
அதன் மூலமே அவள் தன்னிடம் வந்து சேர்ந்து இருக்கின்றாள் என்பதை நினைக்கும்போதே.. ஹரிக்கு பிரமிப்பாக இருந்தது..
நிச்சயம் மிதிலா, தன்னிடம், அனைத்தையும் மறைத்ததற்கு, எதோ ஒரு வலுவான காரணம் இருக்கும், என்று ஹரி நம்பினான்..
அதே சிந்தனையில் கண்ணை மூடிய ஹரிக்குள்... உடல் முழுக்க அயர்வாக இருந்தாலும்.. தூங்க முடியவில்லை..
மீண்டும் மூடிய கண்ணுக்குள் காட்சிகள் தொடரத் தொடங்கியது..
________________________
அன்று திருச்சியில் திருமணம் முடிய, கெஸ்ட் ஹவுஸிற்கு சென்ற ருத்ரன்…சாஹித்யாவிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை…
தோட்டத்தில் இருந்த ஸ்விம்மிங் ஃபூல் அருகே, காலையில் கட்டி இருந்த பட்டு வேட்டியிலேயே, அமைதியாக புல் தரையில் படுத்து இருந்தான்.
அனைவரும், ருத்ரன் தன் மனைவியுடன், தனியாக இருக்க விருப்பப்பட்டு, கெஸ்ட் ஹவுசிற்கு சென்றுவிட்டான் என்று எண்ணினர்.
ஆனால் ருத்ரனிற்கோ, நேரம் ஆக ஆக வாழ்க்கையின் மீதே உச்சகட்ட வெறுப்பு வந்தது..
உலகில் தன் அனுமதி இன்றி எதுவும் இயங்காது என்பது போன்ற எண்ணத்துடன் இளவரசனாக வாழ்ந்து வந்தவனுக்கு, தன் வாழ்வின் போக்கையும், மாற்றத்தையும் ஒன்றும் செய்ய முடியாத நிலை.
ஆதிகேசவன் மீது கட்டுக்கடங்காமல் கோபம் பெருகியது.
விஷ்ணு குடும்பத்திற்காகவும், மித்ராவுக்காகவும் மட்டுமே, அனைத்தையும் துறந்து, இத்திருமணத்தை செய்துக்கொண்டு இருந்தான்.
தன் மன போராட்டத்தை தாங்க முடியாமல் எழுந்தவன்.. புயல் வேகத்தில் விறுவிறுவென்று வீட்டிற்குள் நுழைந்து.. அங்கு வீட்டினுள்ளே அமைக்கப்பட்டு இருந்த பார் போன்ற அறைக்குள் சென்றவன்.. மது பாட்டிலை எடுத்து குடிக்க தொடங்கினான்.
ருத்ரனின் செயல்களை வந்ததில் இருந்தே சாஹித்யா, அமைதியாக பார்த்துக் கொண்டிருந்திருந்தாள்..
இதுவரை ஒரு முழு வினாடிக்கூட அவளின் முகத்தை அவன் காணவில்லை.. அதையும் அவள் உணர்ந்து தான் இருந்தாள்..
தீடிரென உள்ளே புயல் வேகத்தில் ருத்ரன் வர.. என்னவோ ஏதோ என்று அவளும் அவன் பின்னே வந்து நிற்க…
அவனின் செயல்.. அதுவும் திருமணம் முடிந்த அன்று.. அவளின் இதழோரம் ஒரு விரக்தி புன்னகையை பூக்கச் செய்தது..
சாஹித்யா, மிக அமைதியான, அதே சமயம் எதையுமே, ஆழ்ந்து உள்நோக்கும், அழுத்தமான குணம் கொண்ட பெண்.
வாழ்க்கையில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாதவள்.
தன் தந்தை, சதுரங்க ஆட்டத்தில், காய்களை நகர்த்துவது போல் தங்களை அவரின் பிஸ்னஸிற்கும்.. ஸ்டேட்டஸ்கும்.. ஏற்றவாறு நகர்த்துவதை.. பள்ளிப் பருவத்திலேயே உணர்ந்துகொண்டாள்.
தாய் ஒருபுறம், அவரின் தோழிகளுக்கு மத்தியில், அவரின் பெருமையை நிலைநாட்ட போராட.. அவளின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் யாரும் கவனிக்கப் படாமலே போயிற்று.. அதன் பின்பு எதிர்பார்ப்பதையே நிறுத்துவிட்டாள்..
அவளின் இந்த திடீர் திருமணமும் அதேபோலே நடந்தது தான்.. அவளின் விருப்பத்தை யாருமே கேட்கவில்லை.
குடித்துக்கொண்டிருந்த ருத்ரனை உணர்வுகள் துடைத்த முகத்துடன் பார்த்தாள். இவனும் தன் தந்தையை போல தான் என்ற விரக்தியில்.
ஆதிகேசவனின் வாழ்க்கை வரலாறு முதல், ருத்ரன் பற்றிய அனைத்தையுமே, அவளின் தோழிகள், இலவசமாக அவளின் காதில் ஓதி இருந்தனர்.
அதை நினைத்தவள் வெளியேற முற்பட..
அவளின் அசைவு.. ருத்ரனிற்கு சாஹித்யாவின் இருப்பை உணர்த்தியது.. பட்டென்று அவளை திரும்பி பார்த்தான்.
முதல் முறை இருவரின் பார்வையும், ஒன்றுடன் ஒன்று மோதியது.
சாஹித்யாவின், உணர்ச்சியற்ற முக பாவனையை பார்த்த, ருத்ரன், “இனி இது வேறா…”, என்று தன் கண்களை மூடி திறந்தான்..
எழுந்து சென்று, அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்த ருத்ரன், "இங்கே வந்து என் பக்கத்துல உட்காரு சாஹித்யா", என்றான், இலேசாக போதையேறிய குரலில்..
இருந்தும், அதுக்கூட ஒருவித கம்பீரத்துடன் ஒலிப்பதாக சாஹித்யாவிற்கு தோன்றியது..
எந்தவித அலட்டலும் இல்லாமல், மறுநிமிடம் அவன் பக்கத்தில் சென்று அமர்ந்தவளின், கண்கள் “என்ன..” என்று அவனிடம் கேட்டது..
இன்னும் திருமண கோலத்தில்.. தான் அணிவித்த புது தாலியுடன் இருப்பவளை பார்த்த ருத்ரன், மறுவினாடி, " சாரி சாஹித்யா", என்றான், அவள் சற்றும் எதிர்பாராத விதமாக..
சாஹித்யா, "ஃபார் வாட்", என்றாள் எந்த வித பாவனையும் இல்லாமல்..
ருத்ரன் லேசான கரகர குரலில், "சாரி வந்து.. உன்னோட லைஃப்ல நான் என்டர் ஆனதுக்கு.. நீ நினைக்கிற போல நம்ம லைஃப் அவ்ளோ ஈஸியா இருக்காது..", என்றான்.
சாஹித்யாவிற்கு,
தனக்கு எதுவுமே ஈஸி இல்லை, என்பது தெரிந்த விஷயம் தானே..
அவள் என்ன முயன்று மறைத்தும், அவளடைந்த ஏமாற்றம், அவளுடைய முகத்தை அப்படியே ஒளியிழக்க செய்துவிட்டது.
அதில் ருத்ரனின் மனம் மேலும் பலவீனமாக மாறியது..
அதை அதிகப்படுத்தியது, அவன் அருந்தி இருந்த மதுபானம் வேறு..
எப்பொழுதும் தன்னை சார்ந்த விஷயங்களை யாரிடமும் பகிராதவன், தன் கம்பீரம் அனைத்தையும் இழந்து,
முதல்முறை யாரென்றே தெரியாத, தன் சரிபாதியிடம் பகிரத் தொடங்கினான்..
தான் பிறந்தது முதல், இன்று வரை, தன் வாழ்க்கையில் நடந்த அனைத்தையுமே வரிசை படுத்தினான்.
நேரமாக நேரமாக அவன் எடுத்துக்கொண்ட மதுவின் ஆற்றல் அவன் உடலில் அதிகரித்து.. அவனை சிறு பிள்ளையாய் புலம்ப வைத்தது..
ஆதிகேசவனின் ஜோசிய பலகீனம், தான் பிறந்தது, தன்னை ராஜாவாக வளர்த்தது, தன் தாயின் அமைதி, பள்ளி, கல்லூரி, அமெரிக்காவில் படிக்கும் பொழுது வந்த பெண்களின் பழக்கம், மித்ரா உடனான முதல் சந்திப்பு, அதன் பிறகு நடந்தது, மித்ரா காணாமல் போனது, மிதிலாவை திருமணம் செய்ய சொன்னது, என்று அனைத்தையும் கூறி முடித்தவன்...
"சாரி சாஹித்யா எனக்கு அப்ப வேற வழி தெரியலை.. என்னால மிதிலாவ கல்யாணம் பண்ண முடியாது.. உண்மைய சொல்லனும்னா யாரையுமே கல்யாணம் பண்ற மன நிலையில நான் இல்ல.. ஆனா என்னோட மறுப்புனால மூணு உயிர் இல்லாம போற நிலைமை வந்துடுச்சு.. அதான்.. ஐ அம் ரியலி சாரி", என்றான்.
ஏதோ உளறுகிறான் என்று உட்கார்ந்திருந்த சாஹித்யாவிற்கு, மேலே கேட்க கேட்க.. மிகுந்த அதிர்ச்சி..
அவளின் தந்தை, தொழிலுக்காக தில்லுமுல்லு செய்வாரே தவிர.. யாருடைய வாழ்க்கையையும் இவ்வாறு அழிக்க முற்பட்டது இல்லை.
ருத்ரனின் திருமணம் நின்றுவிட்டது தெரியும், ஆனால் உண்மை காரணத்தை, சாஹித்தியாவிற்கு யாரும் சொல்லவில்லை.
அதைவிட ருத்ரன் மனதளவில் அடைந்துள்ள வேதனை.. அவனுடைய மனைவியாய், அவளை மீறி, அவளை பாதிக்கத் தொடங்கியது.
மாதவி மீது வருத்தம் ஏற்பட்டது. கொஞ்சம் அவர் தைரியமாக ஏதாவது செய்து இருக்கலாம் என்று நினைத்து கொண்டாள்.
ருத்ரனின் நேர்மை மிக மிக பிடித்தது.. யார் இவ்வுலகில் செய்த தப்பை, வெளியே தைரியமாக சொல்கின்றனர்.
அதிலும் ருத்ரன், மித்ரா மீது வைத்திருந்த காதலும் சரி, மிதிலா மீது வைத்திருந்த அன்பும் சரி, இன்று தன்னை மதித்து தன்னிடம் காரணங்களை கூறி, மன்னிப்பு கேட்பதிலும் சரி, சாஹித்தியாவிற்கு ருத்ரன் மீது மரியாதை கலந்த பிரம்மிப்பை கொடுத்தது..
தூரம் இருந்து பார்த்தப் பொழுதெல்லாம், அவனை முற்காடாக நினைக்க… அவனோ முற்காட்டினுள் மலர்ந்த மலராக அல்லவா யாருக்கும் தெரியாது பூத்து இருக்கின்றான்.
ருத்ரனின் மீதான சாஹித்யாவின் கணிப்பு நொடியில் மாறியது..
உடனே சாஹித்யா, "மித்ரா திரும்பி வந்தா என்ன பண்ணுவீங்க ருத்ரன்..?", என்றாள் கேள்விமாக.
ருத்ரன், சாஹித்யாவின் மனநிலையை அறிந்து, "உனக்கு மட்டும் தான் சாஹித்யா, இனி நான் கணவன்.. உனக்கு விருப்பம் இருந்தா, எதிர்காலத்தில் நிச்சயம் காதலனாகவும் மாறுவேன், நம்பு.. மித்ரா என்னோட சுகமான, வேதனையான இறந்தகாலம்.. அதைவிட நிச்சயம் மித்ராவிற்கு, இந்த ஜென்மத்தில் என் மேல காதல் வர வாய்ப்பே இல்லை.. உன் கவலை வீணானது.. உனக்கு என்னைக்குமே நான் துரோகம் செய்ய மாட்டேன்.. நிச்சயம் நாம நம்ம வாழ்க்கையை தொடங்க நேரம் ஆகும்.. ஆனால் ஒரு நாள் நிச்சயம் தொடங்குவோம்.. உனக்கு எப்படியோ ஆனால் எனக்கு இனி இறுதிவரை நீ மட்டும் தான்", என்றான் உறுதியாக.
ருத்ரனின் வார்த்தை ஒவ்வொன்றும் சாஹித்யாவின் மனதிற்குள் இதத்தை பரப்பியது..
சாஹித்யா, "உங்களுக்காக நிச்சயம் நான் காத்து இருப்பேன் ருத்ரன்..", என்றவள், "உங்க அப்பாவ என்ன பண்ண போறீங்க", என்றாள் கூர்மையாக..
ருத்ரனின் முகத்தில் ஒரு கள்ளப் புன்னகை,
"சொல்ல மாட்டேன்.. செய்வேன்.. நீ அதை நிச்சயம் பார்ப்ப..", என்றவன்.. "எனக்கு தூக்கம் வருது.. நான் தூங்க போறேன்.. நீயும் வர்றதுன்னா வா", என்றுவிட்டு ரூமை நோக்கி நடந்தான்..
அதில் சாஹித்யாவிற்கு கால்கள் பின்னியது.. இவருடன் ஒரே அறையிலா என்று நினைத்து..
சாஹித்யா வராததை உணர்ந்த ருத்ரன், சட்டென்று திரும்பி பார்க்க, அவளோ நெஞ்சம் எங்கும் மத்தளம் கொட்ட அமர்ந்து இருந்தாள்..
அதைப்பார்த்த ருத்ரன் திரும்பி வந்து, அவளின் கையை பிடித்து எழுப்ப..
அதில் சாஹித்யாவின் ஹிருதயம் படப்படவென்று அடித்துக்கொண்டது..
ருத்ரன், "டைம் ஆகும்னு சொன்னேன் இல்ல.. அப்புறம் ஏன் நர்வஸ் ஆகுற", என்று கேட்க…
சாஹித்யா, "நோ நோ அப்படியெல்லாம் இல்லை…", என்று மறுத்தாள்…
அதில், ருத்ரனின் இதழில் நீண்ட தினங்களுக்கு பிறகு புன்னகை…
மெல்ல தன் கரத்தை உயர்த்தியவன், பொட்டு பொட்டாக அவளின் வாயை சுற்றி அதற்குள் பயத்தில் துளிர்த்து விட்ட வியர்வை துளிகளை, தன் கட்டை விரல் கொண்டு துடைக்க…
சாஹித்யாவின் உடலெங்கும் மின்சாரம் பரவியது…
நிற்கவே முடியாது போனது.. காலின் பத்து விரல்களையும் அழுந்த ஊன்றி விழாமல் இருக்க பாடுப்பட்டாள்..
அவளிடம் ஒவ்வொரு வினாடியும் கோடிக்கணக்கான மாற்றங்கள்.. அனைத்தும் அவளின் கணவன் ருத்ரனின் ஒற்றை விரல் தீண்டலில்..
அதைப்பார்த்த ருத்ரன், "சரிதான்", என…
ருத்ரனை சாஹித்யாவின் கண்கள் என்ன என்று கேள்வி கேட்டது..
"நீ நர்வெஸ்ஸா இல்லைன்னு ஒத்துக்கறேன்.. வா போகலாம்..", என்று அவள் கையை பிடித்து அழைத்து செல்ல.. சாஹித்யா திருதிருவென முழித்தப்படி அவனுடன் நடந்தாள்…
இவர்களின் நாட்கள் இப்படியே ஒருவிதமாய் கழிய…
ருத்ரன், முதலில் ஒரு மாதத்திற்கு யாருடனும் எந்த தொடர்பும் கொள்ளவில்லை.. அச்சமயம் தான் ஆதி கேசவனுக்கு எலக்சன் முடிவுகளும் வெளிவந்து இருந்தது.. அதில் தான் மிதிலாவின் வீட்டிற்கு, ஆதிகேசவன் சென்றது, ருத்ரனுக்கு தெரியாது போனது.
பிறகு தான் அவன் திருச்சியில் ஆரம்பித்த இரும்பு தொழிற்சாலைக்கு மட்டும் சென்று வந்து கொண்டு இருந்தான்.
தேர்தல் முடிவு வெளிவந்த இரண்டு தினங்களிலேயே திருச்சி தொகுதியில் ஜெயித்த எம்எல்ஏவை, ஆதிகேசவன் ஆக்சிடெண்ட் செய்து கொன்றுவிட்டான்..
அதன் பிறகு மீண்டும் அரசாங்கம் இடைத்தேர்தல் நடத்த. அதில் ஆதிகேசவன் ஜெயித்து வந்து.. மீண்டும் அராஜகம் செய்யவும் தொடங்கிவிட்டு இருந்தான்.
இத்தகைய, எதையும் சற்றும் அஞ்சாது செய்யும், அதிக பலம் கொண்ட, ஆதிகேசவனை, நேருக்கு நேர் எதிர்ப்பது, நேர விரயம் மற்றும் ஆபத்து என்பதை உணர்ந்துக்கொண்ட ருத்ரன், கொஞ்சம் கொஞ்சமாக பதுங்கி இருந்து பாய தொடங்கி இருந்தான்.
________________________
அங்கு திருச்சியில் இத்தனை நடக்க, இதை எதையுமே அறியாது, இரண்டு ஜீவன்கள், அங்கு தங்கள் உலகில் வாழ்ந்துக்கொண்டு இருந்தது.
அன்றைய இரவு நேரம் மும்பையில்…
கிச்சன் மேடையில், உட்கார்ந்திருந்த மித்ரா, தன்னுடைய இரவு உணவை, உண்டு கொண்டே, பிரித்திவ்விற்கும் ஊட்டி விட்டுக் கொண்டு இருந்தாள்.
பிரித்திவ், மித்ராவின் தட்டில் ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு விதமான தோசையை சுட்டு அடுக்கிக் கொண்டே இருந்தான்.
மித்ரா, "என் செல்லக்குட்டி இல்ல.. என் பட்டு குட்டி இல்ல.. என் ராஜ் குட்டில.. ப்ளீஸ்.. எனக்கு போதும்.. இதை நீங்க வாங்கிக்கோங்க", என்று ப்ரித்திவ்வை கெஞ்சிக் கொண்டு இருந்தாள்.
பிரித்திவ், "புஜ்ஜி நீ வேற.. ஒழுங்கா சாப்பிடு.. எனக்கு தான் ஃபுல்லா நீ ஊட்டி விடுற.. இன்னும் கேரட் தோசை, ஸ்ப்ரிங் ஆனியன் தோசை வேற இருக்கு.. ஒழுங்கா கொடுக்கிறதை சாப்பிடு.. அப்பதான் பேபி நல்லா ஃக்ரோ(grow) ஆகும்", என்றான் கண்டிப்புடன்.
மித்ரா, "ராஜ், பேபி வளருதோ இல்லையோ.. நான் தான் நல்லா வளர்ந்து வெடிச்சுடுவேன் போல.. ப்ளீஸ் ஸ்டாப் பண்ணுங்க போதும்.. மிட் நைட்ல கூட மீதியை சாப்பிடுறேன்.. இப்ப என்னால முடியல.. நீங்க வந்து இதை finish பண்ணுங்க..", என்றாள் கொஞ்சலும் கெஞ்சலும் ஆக.
" உன்னை ", என்று மித்ராவை நெருங்கிய ப்ரித்திவ், அவளின் நைட் டிரஸ்சின் டாப்ஸை தூக்கி, வயிற்றுப் பகுதியை மெல்ல பரிசோதிக்க ஆரம்பித்தான்..
அதில் நெளிந்த மித்ரா, ப்ரித்திவ்வின் கையை முன்னேற விடாது தடுத்துக் கொண்டே, "ராஜ் என்ன பண்றீங்க.. ஐயோ கூசுது விடுங்க என்னை .. என்னால ஜம்ப் கூட பண்ண முடியாது இப்ப.. ப்ளீஸ் கைய எடுங்க..", என்றவள், இறுதியில் "ஓகே ஓகே.. நான் இந்த தோசையை சாப்பிடறேன்", என்று, வெட்கம் தாளாது, அவனிடம் சரண் அடைந்து விட்டாள்.
பிரித்திவ் சிரித்துக்கொண்டே, "அப்படி வாங்க மேடம் வழிக்கு.. வயிறு எங்க இருக்குன்னே தெரியல.. ஃபுல் இடமும் ஃபிரியா தான் இருக்கு.. இன்னும் நாலு தோசைக்கு இடம் இருக்கும் போல.. ஒழுங்கா சாப்பிடு.. உடம்புல நாலு எலும்பு தான் இருக்கு..", என்றான்.
மித்ரா கோபமாக, "என்னது இன்னும் இடம் இருக்கா.. நீங்க பார்த்தீங்களா.. இன்னும் சாப்பிட்டா பேபிக்கு தான் இடம் இல்லாம போயிடும் போல வயித்துல.. உங்களுக்கு மனசாட்சி இருக்கா.. என்ன போய்ட்டு பார்த்து நாலு எலும்பு தான் இருக்குன்னு சொல்றிங்களே.. எல்லா ட்ரஸும் டைட் ஆகிடுச்சு.. நீங்க வீட்ல இருந்த ரெண்டு மாசமும்.. சாப்பிடறதைத் தவற வேற எதுவுமே நாம பண்ணல..", என்றாள்.
பிரித்திவ் விஷமமாக, "அப்படியா.. சாப்பிடறதை தவிர வேற எதுவும் நாம பண்ணலையா புஜ்ஜி.. அப்புறம் எப்படி இவ்ளோ ஸ்பீடா பேபி ஃபார்ம் ஆச்சாம்.. ஒருவேளை என்னோட பர்ஃபாமென்ஸ் கம்மியா இருக்குன்னு சொல்றியா..", என்று கண்ணடித்து விட்டு மேலும் சிலவற்றை சொல்ல ஆரம்பித்தான் …
அதில் மித்ரா தன் காதை மூடிக்கொண்டு, "ஐயோ ப்ளீஸ், போதும் நீங்க எதுவும் பேசாதீங்க.. உங்களோட பர்ஃபாமன்ஸ் ரொம்ப அதிகம் தான்.. ஒத்துக்கறேன் சாரே.. நீங்க போய் தோசையை ஊத்துங்க..", என்று அவனை பிடித்து தள்ள.
பிரித்திவ் குறும்புடன், "ஓகே புஜ்ஜிக்குட்டி இனிமேல் பேசல.. இனி எல்லாம் ஆக்சன் தான்.. பட் ஆரம்பிச்சதை எப்படி முடிக்காமல் விடுறது", என்றுவிட்டு, அன்னைக்கு நைட் என்று மீண்டும் ஆரம்பித்து, நினைத்ததை பேசி முடித்துவிட.
மித்ராவின் முகம் வெட்கத்திலும், கூச்சத்திலும்.. சிவந்தும் மலர்ந்தும் என்று பளபளத்தது..
சூல் கொண்ட பெண்ணவளின், வயிறும் மனமும், மனம் கவர்ந்த கணவனால் நிறைந்து போக.. உலகிலேயே அந்நொடி அதிக மகிழ்ச்சிக்கொண்ட ஜீவனாக தன்னை உணர்ந்தாள்.
கருத்துகள்
கருத்துரையிடுக