உண்மை காதல் -21

அத்தியாயம் -21


துளசி, கூடத்திற்கு வந்து பார்க்கும் பொழுது, ஆதிகேசவன் மித்ராவின் தலைமுடியை பற்றியபடி, ஆக்ரோஷமாக கத்திக்கொண்டு இருந்தான்.


பிரித்திவ்வையும், விஷ்ணுவையும், மித்ராவிடம் நெருங்க விடாமல் ஆட்கள் பற்றி இருந்தனர்.


மித்ரா வலிதாங்காமல் கதறிக் கொண்டு இருந்தாள். தன் ஒன்பது மாத பிள்ளை வயிற்றை பற்றிக்கொண்டு.


துளசி ஓடிவந்து, ஆதிகேசவன் கையில் இருந்த மித்ராவின் கூந்தலை விளக்க முற்பட்டுக்கொண்டே, "ஐயோ விடுங்க, தயவு செஞ்சு விடுங்க..  மாசமா இருக்க பொண்ணுங்க.. அவளுக்கு ஒண்ணும் தெரியாதுங்க விட்டுடுங்க..  என்னை என்ன வேணா செய்யுங்க.. ஐயோ என் பொண்ண விடுங்க.. சின்ன பொண்ணுங்க", என்று கதறினார்.


ஒருபுறம் பிரித்திவ்வும், விஷ்ணுவும் விடுபட முயன்று கொண்டே, மித்ராவை விடச்சொல்லி கத்தினர்.


ஆதிகேசவனால் தாங்க முடியவில்லை மித்ராவை பார்த்ததும்.


போய்யும் போய், இவர்கள் தன்னை ஏமாற்றி விட்டனரா..  தானும் ஏமாந்து விட்டோமே..  


அதைவிட ருத்ரனிற்கு கல்யாணம் ஏற்பாடு செய்து கடைசியில் நின்ற அவமானம்.. குழந்தையும் சொன்ன நேரத்திற்கு உருவாகவில்லை.. இப்பொழுது பதவியும்  போய்விட்டது.. தொடர்ந்து தொழில்களில் ஏற்படும் சரிவுகள் வேறு... கோர்ட் கேஸ் எல்லாம் என.. அதிக ஆக்ரோஷத்தில் இருந்தவனுக்கு..  


மித்ரா சர்வ லட்சணத்துடன், மாசமாக இருக்கும் தோற்றம், பயங்கர வெறியை ஏற்றியது.


துளசியினால் எரிச்சல் அடைந்த ஆதி கேசவன்.. 


மித்ராவின் கூந்தலில் இருந்து சட்டென்று தன் கையை எடுத்துவிட்டு.. துளசியின் கழுத்தை ஆக்ரோஷமாக பற்றி.. "அன்னைக்கே முத முத நீதான் அழுது காரியத்தை கெடுத்த..  உன்ன சனியன் புடிச்ச  நாயே..  உன்னை என்ன வேணா செய்ய தான சொன்ன.. செய்யறேன்.. போய் தொல", என்றவன்.. மறுவினாடி அவரை முற்றத்தில் இருந்த, தூணிற்கு அருகில் இழுத்து சென்று, அவர் தலையை அடிக்க..


மித்ரா, "ஐயோ.. அம்மா.. விடுடா..", என்று தன்னால் முடிந்த அளவு ஆதிகேசவனின் கையிலிருந்து துளசியை காப்பாற்ற முயற்சிக்க..


அவளால் ஒன்றும் முடியவில்லை.


வெறி கொண்ட மிருகமாக இருந்தது அவன் செயல்.


துளசி வாங்கும் அடியை கண்டபொழுது விஷ்ணுவின் இதயம் சுக்கு நூறாக உடைந்தது. "விடுங்க அவளை..  கடவுளே எங்களை காப்பாத்து..  ஐயோ துளசிமா…", என்று தன் மனைவியின் வலியை காண முடியாமல் கதறினார்.


ஆதி கேசவனின் ஆக்ரோஷத்தை கண்டதும் பிரித்திவ் ஆடி போய் விட்டான். அத்தனை அடியாட்களை சமாளிக்கும் திறன் நிச்சயம் தனக்கு இல்லை என்று மனம் கணக்கிட்டது..


பிரித்திவ்விற்கு எவ்வாறு இந்த சூழ்நிலையை கடக்க முடியும்.. முதலில் முடியுமா.. என்று தெரியாமல்..  விரக்தி அவனை சூழ்ந்தது. 


மித்ரா தன் பலம் கொண்ட அளவு ஆதிகேசவனை, துளசியை விடுமாறு கூறி அடித்தாள். 


ஆதிகேசவன் மித்ராவை பிடித்து தள்ளிவிட்டு.. கண்களால் ஒரு நொடி சுற்றிப் பார்த்துவிட்டு..  "எங்கே உன் சின்ன மவ..  எங்க காணோம்", என்று கத்தினான்..


ஒருநொடி வீட்டார் அனைவரின் முகத்திலும் பதட்டம் நிலவியது. மறுபடியும் ஆதிகேசவன் துளசியை அடித்து, "எங்கே அவ.. நல்லா மல்கோவா மாம்பழம் மாதிரி இருப்பாளே..  நீ பெத்த அந்த அழகு சுந்தரி எங்க.. என்ன  இப்ப அவளையும் யார் கூடவாவது அடுத்து அனுப்பிச்சு வச்சுட்டியா..  இதுதான் உங்க தொழிலா..", என்று மேலும் துளசியிடம் பதில் வரும் வரை கேட்டு அடித்தான்.


துளசி அத்தனை வலியிலும், தன் ஒரு மகளையாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் யோசித்து, "மிதிலா அவ ஃபிரண்டோட அக்கா கல்யாணத்துக்கு.. வெளியூர் போயிட்டா", என்றார்.. திக்கி திணறி..  


உண்மையில் மிதிலாவின் ஃபிரண்டு ஒருத்தி அழைப்பிதழ் கொடுத்து இருந்தாள்.. மிதிலாவே போகவில்லை என்று விட்டு இருந்தாள்.. 


"திருப்பி வர அன்னைக்கி இருக்கு.. அந்த சின்ன சிறுக்கிக்கு", என்று மேலும் மிதிலாவை வசைபாடினான் ஆதி கேசவன். 


அதை பரணில் அமர்ந்து கேட்ட மிதிலாவின் இதயம் படபடவென அடித்து கொண்டது. பயத்தில் அவளுக்கு இதயமே வெடித்துவிடும் போல் இருந்தது.


துளசியின் நெற்றியில் இருந்து குருதி பெருக்கெடுக்க.. தன் உணர்வை மொத்தமாக இழந்து விட்டார்..


அதில் பட்டென்று அவரை உதைத்து தள்ளிய ஆதிகேசவன்.. 


துளசியிடம் ஓடிய மித்ராவின் கூந்தலைப் பற்றி, அவள் கன்னத்தில் மாறி மாறி, அறையைத் தொடங்கினான்.


மித்ராவின் கன்னத்தில் ஒவ்வொரு அடியும் இடியாக இறங்கியது.


அவள் காதில் இருந்த கம்மல் கூட வளைந்து போனது..


உலகமே சுழன்றது அவளுக்கு..


வலியின் வேதனை தாங்க முடியாது, அவள் துவண்ட நேரத்தில்.. மித்ராவிற்கு அடிவயிற்றில் இருந்து ஒரு பெருவலி தோன்றி.. முதுகு தண்டுவடம் என அனைத்து பாகங்களிலும் பரவியது....


அதில் மேலும் அவள் நிலைகுலைய..


ஆதிகேசவன், "ஏண்டி ஓடிப்போன.. என் பையன எப்படி‌ நீ வேணாம்னு சொல்லலாம்..  அப்படி என்ன  நாங்க கெட்டுப் போயிட்டோம்..  நீ மட்டும் என்னடி பெரிய உத்தமியா.. எவன் கூடவோ ஓடிப் போய், வயித்த தள்ளிகிட்டு வந்து தானே நிக்கிற.. அத என் பையன் கூட பண்ணி இருந்தா என்ன..", என்று, இன்னும் இன்னும் கொச்சையாக பேசி பேசி அவளை அறைந்தான்.


இதையெல்லாம் கற்பனைக்கூட செய்ய முடியாமல்..  ஹரியே அழ ஆரம்பித்துவிட்டான்..  


அதில், மிதிலாவிடம் அசைவு ஏற்படவும், தன் வாயை மூடிக் கொண்டு கீழே இறங்கி தோட்டத்திற்கு ஓடி வந்தான். 


பனி பொழிவின்.. குளிர் கூட அவனை அண்டவில்லை..  


எத்தனை பிரசவங்களை.. எத்தனை பெண்களின் வலிகளை.. ஹரி நேரில் கண்டுள்ளான்.. 


மிதிலாவின் பெற்றோர்களையும், அக்காவையும், ஹரி நேரில் வேறு பார்த்து இருக்கின்றானே. அந்த மனிதர்களுக்கு ஏற்பட்ட நிலைகளையும்.. அதையெல்லாம் கடந்து தன்னிடம் வந்த மிதிலாவின் மனநிலையையும்..  ஹரியால் எண்ணிக்கூட பார்க்க முடியவில்லை.. 


இவ்வாறான எந்த கொடிய  நிகழ்வுகளையும், சந்திக்காமல், ஆரம்பம் முதலே, நல்ல வசதியிலும் நல்ல சூழ்நிலையிலும் வளர்ந்த ஹரியால்.


முகத்தை அழுந்த மூடிக்கொண்ட ஹரியின் மனதில் மீண்டும் அக்காட்சிகளே..


ஆதிகேசவனின், கொடுமையினால், மித்ராவிற்கு சற்றும் வலிதாங்காமல்.. தலை சுற்றி.. கால்கள் வலுவிழக்க தொடங்கியது..


அதேநேரம், அவளின் அடி வயிற்றில், மீண்டும் இரண்டாவதாக ஒரு பெரும் வலி உருவாகியது... 


அவ்வலியின் முடிவில், உடனேயே மித்ராவின் கால் வழியே நீர் வடிய தொடங்கியது.


அதில், தன் கால்களில் நீர் படுவதை உணர்ந்து குனிந்து பார்த்த ஆதிகேசவன்.. "ச்சீ சனியனே.. இது வேறயா.. கருமம் புடிச்சவளே", என மித்ராவை வேகமாக எட்டி தள்ளிவிட்டான்..  தள்ளிவிட்ட வேகத்தில் மித்ரா, சுழன்று சென்று, அங்கிருந்த ஊஞ்சல் பலகையில் இடித்து..  கீழே விழுந்து, தன் உணர்வுகளை இழக்கத் தொடங்கினாள்.


மித்ராவின் நிலைமையை உணர்ந்த

அனைவருக்குமே, மனம் பதறியது.. 


அதிலிருந்த சில அடியாட்களுக்கு கூட பதறியது...


மித்ராவிற்கு பனிக்குடம் உடைந்துவிட்டதை பார்த்த பிரித்திவ், "ஐயோ ஏன்டா இப்படி பண்ண..  என்னை விடுங்கடா..  புஜ்ஜி மா.. ஐயோ.. எல்லாம் போச்சே..  என் குழந்தை.. ஐயோ..  எனக்குன்னு இருந்த ஒரே சொந்தம் டா அவ", என்று கதறினான்.


ஒருபுறம் விஷ்ணு, "ஐயோ என்ன இப்பவே  கொன்னுடுங்க..  நான் தான் அவளை அனுப்பினேன்..  தயவு செஞ்சு அவளையும் மாப்பிள்ளையும் ஹாஸ்பிடலுக்கு அனுப்பிடுங்க.. என்னை இங்கேயே என்ன வேணா பண்ணுங்க.. அவள காப்பாத்த விடுங்க.. ரெண்டு உசுருங்க", என்று கதறினார்.


விஷ்ணுவின் பேச்சில் சினம் ஏறிய ஆதிகேசவன்..  விஷ்ணுவை அடி ஆட்களிடம் இருந்து இழுத்து..  குனியவைத்து ஓங்கி முதுகில் குத்தி.. கட்டையை வாங்கி அடித்து அவரை வீழ்த்தினான்.


கணவரும், மகளும் படும் வேதனையை பார்க்காமலேயே. துளசியின் கண்கள் நல்லவேளை முதலிலேயே மூடிவிட்டு இருந்தது.. புண்ணியவதி..


தரையில் கிடந்த மித்ராவின், இடுப்பின் கீழ் பகுதி முழுவதும்..  நீரும் இரத்தமுமாக அவள் உடலில் இருந்து வெளியேறி பரவியது..


மித்ராவிடம் இருந்து முனங்கள் சத்தம் கேட்க ஆரம்பித்ததும் அனைவரும் அவள் புறம் திரும்பினர். 


பிரித்தவ்வை பிடித்திருந்த அடியாட்களின் கைகள் கூட  பார்த்த காட்சியினால் பயத்தில் தளர்ந்தது.


அதில், உடனே பிரித்திவ் அந்த ஆட்களைப் பிடித்து தள்ளிவிட்டு மித்ராவிடம் ஓடினான்.


ஓடியவனை ஆதிகேசவன் சட்டென பிடித்து‌ ,"யாருடா நாயே நீ..  என்ன தைரியம் இருந்தா என்னை எதிர்த்து.. என்னோட பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க இருந்தவளை கூட்டுக்கிட்டு போயிருப்ப..  அப்படி என்ன பெருசா அவளை நீ காப்பாத்திட்ட..  இப்ப காப்பாத்து டா என்கிட்ட இருந்து..  நீ மட்டும் கல்யாணம்..  குழந்தையின்னு சந்தோஷமா வாழணுமா..  என்னோட குடியைக் கெடுத்துட்டு..", என்றவன், பிரித்திவ்வை அடிக்க தொடங்கினான்.


பிரித்திவ் அடிகளை வாங்கிக் கொண்டே..  மித்ராவை நெருங்கி அவள் தலையை அழுகையுடன் தூக்கி தன் மடியில் வைத்தான்..  


மித்ராவின் கை பிரித்திவ்வின் கையை இறுகப்பற்றியது..


இதைப்பார்த்த ஆதிகேசவன் மேலும் காண்டாகி..  பிரித்திவ்வின் முதுகை பலம் கொண்ட அளவு ஓங்கி தன் காலால் மிதித்தான்..  


பிரித்திவ் மித்ராவின் மீதே விழுந்தான்.


விழுந்தவன் பின் மண்டையில் ஆதிகேசவன் கட்டையை எடுத்து ஓங்கி ஓங்கி அடிக்க.. அவ்வளவு தான் அவளுக்கு தலைசுற்றிப்போனது.


அப்பொழுது ஒரு அடியால் உள்ளே ஓடி வந்து. "ஐயா டிவியில இருந்தும்.. போலீஸ் காரங்களும்.. இங்க வராங்களாம் ஐயா..  எதிர் கட்சி காரங்க யாரோ சொல்லிட்டாங்க போல..  எல்லாரும் சீக்கிரம் வெளிய வாங்க வாங்க", என்று கத்தினான்.


சட்டென்று ஆதிகேசவன் கட்டையைத் தூக்கி போட்டுவிட்டு.. "வாங்கடா வாங்க சீக்கிரம்" என்று வெளியேறினான்.. ஏற்கனவே அவன் மீது தற்போது பல கேஸ்கள் நிலுவையில் உள்ள நிலையில் மீண்டும் சிக்க அவன் விழையவில்லை.


தெருவில் இருந்த அனைவருமே, விஷ்ணு வீட்டில் கேட்ட அழுகை சத்தத்திலும்.. ஆதிகேசவனின் சத்தத்திலும்.. பயந்துபோய் வீட்டுக்குள்ளேயே பதுங்கி இருந்தனர்..


தினமும் மாலை வீட்டு வேலைகளை முடித்துவிட்டு..  குமுதம் துளசியை பார்த்து பேசிவிட்டு..  இரவு உணவு முடிந்த பின்தான்.. ஆறுமுகத்துடன் செல்வார்.


அன்றும் அதே போல் விஷ்ணு வீட்டை நெருங்கியதும் கேட்ட சத்தத்தில்..  குமுதம் பயந்துபோய் பக்கத்து வீட்டில் பதுங்கி இருந்தார்..  


ஆதிகேசவனை அவரால் தனியாக எவ்வாறு எதிர்க்க முடியும்..  குமுதத்திற்கும் பிள்ளைகள் இருக்கின்றனர் அல்லவா..  தன்னால் எதுவும் செய்ய முடியாத நிலையை எண்ணி..  பயந்துபோய் அங்கேயே ஓரிடத்தில் நின்று கேட்கும் சத்தத்தில் அழுது கொண்டு இருந்தார்.


பரண் மேல் இருந்த மிதிலா, ஒவ்வொருவரின் கதறலிலும்..  காதில் கேட்கும் புலம்பலிலும்.. அடுத்து தன் தாய் தந்தையின் குரல் கேட்காமல் போனதிலும்..  அடுத்து மித்ராவின் குறலும் இல்லாமல் போனதிலும்..  ஆதிகேசவனின் கர்ஜனை.. பிரித்திவ்வின் அழுகை  என ஒவ்வொன்றாக கேட்டு பயந்து போய் மேலேயே அழுது உட்கார்ந்து கொண்டு இருந்தாள்..  


ப்ரித்திவ் முயன்று தன் உணர்வுகளை இழக்காமல்..  


தன் சக்திகள் மொத்தத்தையும் தன் தன்னம்பிக்கையால் ஒன்றுகூட்டி..  மித்ராவை நெருங்கி அவள் கால்களை தூக்கி மடக்கி வைத்துவிட்டு.. பரிசோதிக்க ஆரம்பித்தான்..


மூடிய மித்ராவின் கண்களில் இருந்து நீர் பெருக்கெடுத்தது…


ஆதிகேசவனின் ஆட்கள் சென்றதும், மிதிலா மேலே இருந்து கீழே குதித்து… அந்த வலியை கூட உணராமல் கதறிக் கொண்டே ஹாலுக்கு ஓடி வந்தாள் ..


அங்கு, அவளின் தாய், தந்தை, அக்கா, மாமா இருந்த நிலையைப் பார்த்து செய்வதறியாது அப்பெண் கதறிய நிலையை சொல்ல வார்த்தைகள் இல்லை..


குமுதமும், ஆதிகேசவனின் கார்கள் அனைத்தும் சென்றதும் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு விரைந்து வீட்டிற்குள்ளே ஓடிவந்தார்.


தன் குடும்பத்திற்கு பெரும் வரமாக அமைந்து..  தாங்கிய துளசியின் குடும்பம்.. இருந்த நிலையை பார்த்த அப்பெண்மணியின் இதயமே நின்று துடிக்க ஆரம்பித்தது.


மித்ரா வந்திருந்தது அவருக்கும் தெரியாது.


மிதிலா அனைவரையும் நெருங்கி நெருங்கி பார்த்து அழுது கொண்டு இருந்தாள்.. 


தாயையும், தந்தையையும் எழுப்ப முயற்சித்தாள் பயத்தில். 


சட்டென்று குமுதம் சூழ்நிலையை உணர்ந்து மித்ராவை நெருங்கினார்.


மித்ராவிடம் இருந்து முனகல் சத்தம் மீண்டும் கேட்க ஆரம்பித்தது..  மிதிலாவும் பிரித்திவ் அருகில் வந்து என்ன நடக்கின்றது என்று புரியாமல்.. மித்ராவின் உதிரத்தை பார்த்து பயந்து.. மண்டியிட்டாள்.


மித்ராவின் வயிறு தளர தொடங்கியது.. குழந்தை வெளியே வர ஆயத்தம் ஆகியது..


குழந்தையின் தலையை சிறிது பிரித்திவ் பார்த்ததும்..


தன் வலியை கட்டுப்படுத்திக் கொண்டு.. "மிதிலா சீக்கிரம் போயிட்டு ஒரு கத்தரிக்கோலும்..  கொஞ்சம் துணியும்..  நாடா இல்ல கயிறு.. எதாச்சும் சீக்கிரம் எடுத்துட்டு வா", என்றான்.


மிதிலாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. 


குமுதம், "நான் எடுத்துட்டு வரேன் தம்பி", என்று ஓடி அனைத்தையும் எடுத்து வந்தார்.


தன் வயதிற்கு மீறிய காட்சிகள் மிதிலாவின் கண் முன்னே அரங்கேறியது. ஆனால் எதையும் அவளால் உணரவே முடியவில்லை.


பிரித்திவ் ஏற்கனவே  நிறைய பிரசவ வீடியோக்கள் பார்த்தும்.. மெட்டர்னிட்டி கிளாஸ் என்றும் நிறைய ஆன்லைனிலும் எவ்வாறு பிரசவம் நடக்கும்..  எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும் என்ற பல தகவல்களை நல்ல வேளையாக அறிந்து இருந்தான்.


சில வினாடிகளில், பிரித்திவ், தன் மகவை தன் கைகளில் ஏந்தி இருந்தான்.


வழுக்கும் குழந்தையை, ஒரு துணியில் சுற்றி கவனமாக பிடித்து பார்த்தான். மிகச் சிறிய அளவில், அவ்வளவு அழகாக தாமரை மொட்டு போல் இருந்த அந்த பிஞ்சை பார்த்த பிரித்திவின் இதழின் ஓரம் சிறு புன்னகை..  அந்த வலியிலும்.. "வெல்கம் மை பிரின்சஸ் மகிழ்மதி பிரித்திவிராஜ் ", என்றவன் கண்களிலிருந்து நீர் வடிய தொடங்கியது..  தன் மகளின் எதிர்கால வாழ்க்கையை எண்ணி.


குமுதத்திடம் இருந்த கயிற்றை வாங்கி இரண்டாக வெட்டி..  தொப்புள் கொடியில் இரண்டு பக்கமும் கவனமாக கட்டி..  நடுவில் வெட்டினான்.. 


மித்ரா உடனான குழந்தையின் தொப்புள் கொடி உறவை, பிரித்திவ் தன் கையாலேயே பிரித்து வைத்தான்.


அடுத்து மித்ராவின் உடலில் இருந்த மற்ற கசடுகள் இயற்கையாக வெளியேறத் தொடங்கியது.


மித்ரா முற்றிலும் உணர்விழந்து விட்டாள்..  


பிரித்திவ் மித்ராவின் நாடியைப் பற்றி பார்த்தான்..  


மித்ராவின் நாடித்துடிப்பு மிக குறைவாக இருந்தது உடலும் சில்லிட தொடங்கியது..


அதேநேரம், ஆக்சிஜன் சப்ளை நின்றதும் சில நிமிடங்களிலேயே, குழந்தை அழ தொடங்கியது.


பிரித்திவ் குழந்தையின் நெஞ்சில் சிறிது அழுத்திவிட்டு.. அவள் வாயின் வழியே ஆக்சிஜன் செலுத்திக் கொண்டே.. மூக்கில் இருந்த அடைப்புகளை தன்னால் முடிந்தவரை சுத்தம் செய்யத் தொடங்கினான்.


குழந்தை சிறிது அமைதியானது..


அப்பொழுது வீட்டின் நிசப்தத்தை கிழித்துக்கொண்டு பிரித்திவ்வின் ஃபோன் அலறியது..


பிரித்திவ் மிதிலாவை, "சீக்கிரம் போய் அதை எடுத்து வா", என..


மிதிலா ஒரு மூலையில் கிடந்த ஃபோன ஓடிச்சென்று எடுத்து வந்தாள்.


மிதுன் ஜார்ஜ் காலிங் என்று திரையில் ஒளிர்ந்தது.


சட்டென ப்ரித்திவ் ஒருகையால் ஃபோன் கால்லை ஆப் செய்துவிட்டு.. மிதுனிற்கு வீடியோ கால் செய்தான்.


காலை அட்டெண்ட் செய்து திரையில் கண்ட காட்சிகளில்  மிதுன் ஆடிப் போய்விட்டான், "பிரித்திவ் என்னடா ஆச்சு உனக்கு.. ஏன்டா தலையில இருந்து ரத்தம் வருது..  எங்க இருக்கீங்க..  குழந்தையை ஏண்டா நீ கைல வச்சிருக்க..  மித்ரா எங்க.. டாக்டர் எங்க..  நீ எங்க இருக்க", என்று பதறினான். 


பிரித்திவ் திருச்சிக்கு வந்ததை மிதுனிடமும் கூறவில்லை..


"மிதுன் எல்லாம் கைய மீறி நடந்துருச்சுடா..  என்னோட குழந்தையை பார்த்துக்கோடா..  என்ன மாதிரி தான் போல அவளும்..  அவளுக்கும் யாருமே இல்ல டா.. நானாவது பையன் ஆன  இவ பொண்ணு டா",என்று கதறினான்.


அவனுடைய உடல் நிலை மாற்றங்கள் நன்றாக பிரித்திவ்விற்கு தன் நிலையை உணர்த்தியது.


சிறிது நேரத்தில் குழந்தையின் முகம் கை கால் என அனைத்தும் வேறு சிறிது நீல நிறமாக மாற தொடங்கியது.


இதை கண்ட பிரித்திவ், "ஐயோ குழந்தைக்கு first-aid உடனே செய்யணும்..  இன்குபேட்டரில் வைக்கணும்..", என்றுவிட்டு குமுதத்தை சீக்கிரம் கனமான  துணியை எடுத்து வர சொன்னான்.


ப்ரித்திவ் குழந்தையை துணியால் சுற்றி, "சீக்கிரம் ஹாஸ்பிடலுக்கு தூக்கிட்டு போ" என்று குழந்தையை மிதிலாவின் கையில் வைத்தான். 


மிதிலாவிற்கு நடப்பது ஒன்றும் புரியவில்லை..  


எங்கிருந்து அவள் மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கி செல்வாள்.. ஆனால் அவள் மீது அப்பொறுப்பு விழுந்தது..  


உடனே யோசித்த பிரித்திவ்  குமுதமை  "ரூம்ல பெட் மேலேயே பணமும் நகையும் இருக்கும்..  அதையும் எடுத்துடடு தோட்டம் வழியே போங்க..  சீக்கிரம் குழந்தைக்கு ஏதாவது ஆகிடும்..  கவனமா பெரிய ஆஸ்பத்திரியா பார்த்து சேர்த்துடுங்க.. ப்ளீஸ்",  என்று கெஞ்சி அவசரப்படுத்தினான்.


மிதுன் லைனிலேயே தான் இருந்தான்.


குமுதம் அங்கிருந்த மிதிலாவின் பையில் பணத்தையும், நகையையும் எடுத்து வைத்துக்கொண்டு வெளியே ஓடி வரும் பொழுது..  மீண்டும் கேட் திறக்கும் சத்தமும்..  ஆட்கள் உள்ளே வேகமாக வரும் கால் தட அரவமும் கேட்டது.. 


உடனே பிரித்திவ், குழந்தையின் மீது ஃபோனை வைத்துவிட்டு.. மிதிலாவை "எழுந்து ஓடு..  சீக்கிரம்..  இது உன்னோட குழந்தை இனி.. மித்ராகாகவாவது பத்திரமா பாத்துக்கோ ப்ளீஸ் ஓடு", என்று கத்தினான்.


அவ்வார்த்தையில் உயிர்பெற்ற மிதிலா, குழந்தையை அணைத்து பிடித்துக் கொண்டு எழுந்து, குழந்தையுடன் தோட்டம் பக்கம் ஓடினாள்.


பின்னேயே குமுதமும் ஓடினார்.


பிரித்திவ் குனிந்து மித்ராவின் ஆடையை சரி செய்யும் பொழுதே..  அவனுக்கு காதில் இருந்து ரத்தம் வடிய ஆரம்பித்தது.. ஆதிகேசவன் பின்மண்டையில் தாக்கியதால்.. 


இதற்கு மேல் என்னால் முடியாது என்ற அவன் உடல் தளர்ந்தது..  மித்ராவின் மடியில் உடல் வலுவிழந்து விழுந்தான்.


தன் தாயாகிய தாரத்தின் மடியில் விழுந்த பிரித்திவ்வின் கண்களும், அக்கணம் மூடியது.


வெளியே ஓடிவந்த குமுதம், தன் உடையின் உள்ளே இருந்த அவரது ஃபோனை எடுத்து ஆறுமுகத்திற்கு உடனே அழைத்தார்.. 


ஆறுமுகம், "அங்கதான் வந்துட்டு இருக்கேன் குமுதம்..  ஒரு நிமிஷம் தான் இரு வந்துடுவேன்", என..


குமுதம், "அய்யோ அந்த பக்கம் வராதய்யா.. சீக்கிரம் பின்பக்கம் வா", என்று கத்தினார்.


உடனே ஆறுமுகம் விஷ்ணுவின் தோட்டத்தின் பக்கம் ஆட்டோவுடன் வந்து குழந்தையை கூட்டிக்கொண்டு விரைந்தார். 


அதன் பிறகு மிதுன் அவர்களை வழிநடத்தினான்..


பணம் பத்தும் செய்யும் என்பது போல் மகிழ்மதிக்கு உடனே முதலுதவி செய்யப்பட்டு..  அன்று இரவே மும்பை நோக்கி தங்கள் பயணத்தை ஆறுமுகம் குடும்பத்தினர் தொடங்கினர்…


குழந்தை 9 மாதத்தில் பிறந்து இருந்தாலும்.. முழு வளர்ச்சி அடைந்து முழு ஆரோக்கியத்துடன் இருந்தது…


ஆதிகேசவன் தன் ஆட்களிடம், விஷ்ணு குடும்பத்தில் நடந்ததை பார்த்த, தெரு ஆட்கள் யாராவது வெளியே சொல்லிவிட்டால் பிரச்சினை.. அது இது என்று யோசித்து… ஒரு முடிவெடுத்து சில ஆட்களை மீண்டும் அனுப்பி இருந்தான். 


மொத்தமாக அனைத்தையும், ஆதாரமின்றி அழித்து விட சொல்லி..


ஆதிகேசவன் சொல்படி ஆட்கள் மண்ணெண்ணெயுடன் விஷ்ணுவின் வீட்டை மீண்டும் அடைந்தனர்..


மிதிலா சென்ற சில மணி நேரங்களிலே..


மிதிலாவின் வீடு, கேஸ் வெடித்து, எரிந்து சாம்பலாகிப்போனது..


மறுநாள் தமிழ்நாட்டில், அனைத்து செய்திகளிலும், விஷ்ணு குடும்பத்தில் இருந்த, அனைவரின் புகைப்படமும் ஒலிபரப்பு செய்யப்பட்டது..  


அதில் மிதிலாவின் புகைப்படத்தை போட்டு கூலி படையை சேர்ந்த ஆடவனுடன்..  கல்லூரி மாணவி காதலித்து தப்பி ஓட்டம்..  


தடுத்த பெற்றோர்களை கூலிப்படையினர் உடன் சேர்ந்து.. தடயம் ஏதும் இல்லாமல்.. மகளே கொன்றுவிட்டாள்.. என்றும்..  


அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தினமும் நடந்ததை சாட்சியாக கூறினார்கள் என்று சில வீடியோக்களையும்..  சுட சுட ஒலிபரப்பாக்கினர்.


அவ்வளவு நடந்தும், ஆதிகேசவனின் பழி வெறி, இன்று அளவிலும் அடங்கவில்லை..  


அம்மக்களை இன்னும் துன்புறுத்தி இருக்க வேண்டும் என்று நினைத்தான்..  


மிதிலாவையாவது, தேடி கண்டுபிடித்து, அவளை அணு அணுவாக சித்திரவதை செய்ய வேண்டும்.. என்று முடிவெடுத்து இருந்தான்.


மிதிலாவையும், குழந்தையையும், மும்பை ரயில்வே ஸ்டேஷனிலேயே, மிதுனிடம் ஒப்படைத்து விட்டு.. குமுதமும், அவரது கணவரும் திருச்சிக்கு வந்து.. விஷ்ணு துளசியின் வீட்டின் நிலையை பார்த்து.. பயந்து.. ஊரையே காலி செய்துக்கொண்டு சென்றுவிட்டனர்.


மும்பையில் நியூசில் தன் வீட்டை பார்த்த மிதிலாவோ மயங்கி சரிந்துவிட்டு இருந்தாள். 


எப்படி எப்படியோ மிதிலாவை தேற்றி, ஆதித்யனின் உதவியுடன், மிதுன் அவனால் முடிந்தவற்றை செய்து, மிதிலாவை பாதுகாப்பாக அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தான். 


உலகிலேயே மிக அதிக அளவில் வளர்ச்சி அடைந்த வல்லரசு நாடான அமெரிக்காவில் மிதிலா பாதுகாப்புடன் இருப்பாள் என்று கருதினார்கள்..


அனைத்தையும் யோசித்துப் பார்த்த ஹரிக்கு, ஆதிகேசவனின் மீது அளவு கடந்த கோபம் பெருகியது. மென்மையே உருவான ஹரியாலேயே ஆதிகேசவனின் கொடூரமான செயல்களை தாங்கிக்கொள்ள முடியவில்லை.


வீட்டிற்குள் சென்று அவனது லேப்டாப்பில் ஆதிகேசவன் பற்றிய தகவல்களை சிறிது ஆராய்ந்து விட்டு..  திருச்சியில் இருந்த அவனுடைய கஸினிற்கு கால் செய்து சில விஷயங்களை ரகசியமாக பேசிவிட்டு..  திருச்சியில் இருந்த மிகப்பெரிய டிடெக்டிவ் ஏஜென்சி நம்பரை பெற்றுக்கொண்டான்.


பிறகு அவர்களிடம் அனுப்பவேண்டிய மெசேஜ்களை டைப் செய்துக்கொண்டு இருக்கும் பொழுதே..  மீண்டும் ஹரியின்  கஸின் ஃபோன் செய்து டிடெக்டிவ் ஏஜென்ஸியில் பணிபுரியும் அவன் நண்பனின் போன் நம்பரை கொடுத்தான். ஹரியும் உடனே அவரை தொடர்பு கொண்டு மிக விரிவாக அனைத்தையும் பேசினான்..  


டிடெக்டிவ் ஏஜென்ஸில் பணிபுரிபவன், ஆதிகேசவன் மிகப் பெரிய ஆள், அவனை நெருங்குவதே மிகவும் கஷ்டம், நீங்கள் சொல்லும் தகவல்களை எல்லாம் சேகரிக்க நிறைய நிறைய செலவாகும், என்றான். 


ஹரி எவ்வளவு என்று கேட்டு, அவன் கேட்ட சில லட்சங்கள் பணத்தை, உடனேயே டிரான்ஸ்பர் செய்துவிட்டு வைக்க..


பொழுது நன்றாக விடிந்துவிட்டு இருந்தது.

________________________


இந்தியாவிற்கு தொடர்பு கொண்டு பேசிய பிறகு தான், ஹரிக்கு சிறிது மனம் அமைதி அடைந்தது.


உடனே மரவீட்டிற்கு செல்லாது, சிறிது நேரம் அமைதியாக தோட்டத்திலேயே, கண்களை மூடி அமர்ந்து இருந்தான்.


இத்தனை வேதனைகளை தனக்குள் வைத்துக்கொண்டு நல்லதிற்கு இல்லை என்பது அவனுக்கு மருத்துவனாக புரிய.. தன்னையே சமன் படுத்த ஆரம்பித்தான்.


ஹரியை பொறுத்தவரை, எந்தவொரு பிரச்சனையும், அவனை தொடர்ந்து ஆள்வதை விரும்ப மாட்டான்.


மிதிலா கூட மற்றொருவரின் மனைவி என்று அவன் அன்னை கூற கேட்டவன், முதலில் அதிர்ந்தாலும், முயன்று அந்த வேதனையில் இருந்து இது தவறு என்று வெளிவரவே நினைத்தான்.


பிறகு தான் அவளின் கணவன் இறந்துவிட்டதையும், அவளுக்கு தன் மீது காதல் இருப்பதையும் உணர்ந்து அவளை தன்னுடைமை ஆக்கி இருந்தான்.


முகத்தில் வந்து மோதிய பனிக் காற்றும், பனி சாரலும், ஹரியின் மனதை சிறிது சிறிதாக குளிர்வித்தது.


கண்களை திறந்து பார்த்தான்.. காலை பொழுதின் அழகிய ஏகாந்தமும்.. தோட்டத்தில் உள்ள மரம் மற்றும் புல்தரை என்று முழுவதும் பரவியிருக்கும் வெண்பனியின் அழகிய காட்சியும்..  ஹரியின் மனதை இதமாக வருடி, நேற்று மிதிலாவுடன் நடந்த முதல் கூடலின் நினைவுகளை.. அவனுள் கொண்டுவர..


அதில் ஹரியின் முகம் முழுக்க மென்மை அடைந்து.. அவன் உதடுகளில் புன்னகை பூத்தது..


மிதிலா நேற்று இரவு, பனியை பார்த்ததும், சிறுபிள்ளையாக தன்னை மறந்து குதுகளித்தது முதல் ஒவ்வொன்றாக தோன்றி..  அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகள் என்று அவன் மனம் அதை நோக்கி பயணித்தது.


ஆம் அவள் சிறுப்பெண் தானேடா, என்று அவன் மனசாட்சி ஒருபுறம் உரக்க கூறியது..


அதில் ஹரி புன்னகையுடன் மனதில், "நல்லவேளை நேத்து நான் நெக்ஸ்ட் ஸ்டேஜ்க்கு மூவ் ஆனேன்..  இல்லைனா அவ்வளவுதான்..  ஹரி, நீ கடைசிவரை சிங்கிளா தாண்டா இருந்து இருப்ப", என்று நினைத்துக் கொண்டான்.


நேற்றைய மிதிலாவின் அப்பாவித்தனமான செயல்களை, நினைக்க நினைக்க, ஹரி இன்னும் அவளின் புறம் ஈர்க்கப்பட்டான்.


"பேபி நீ உண்மையாலுமே பேபி தான் போலடா.. நான் தான் அது தெரியாமல் இருந்துட்டேன்.. என்ன தைரியத்துல மகிழ்மதி உன்னோட குழந்தைன்னு சொன்ன..  அதைவிட ஓ மை காட், கடைசி வரைக்கும் நெக்ஸ்ட் என்ன நடக்கும்னு தெரியாம இருந்து இருக்க..  உன்னோட இன்னசென்ட்ஸ்க்கு ஒரு அளவே இல்லாம போயிடுச்சு.. எவ்ளோ பெரிய ஷாக் எனக்கு கொடுத்துட்டே..", என்று நினைத்தவன்.. "சூப்பர் பேபி நீ.. யூனிக் பீஸ் தான் போ.. கடைசி வரைக்கும் மூளைய‌ பத்திரமா, யூஸ் பண்ணாமலே வச்சுப்ப போல", என்று மனதில் அவளைக்  கொஞ்சி கொண்டான்.


நினைக்காதே நினைக்காதே என்றாலும், அந்த நினைவுகளின், தொடர் பயணத்தின் முடிவில்.. நேற்று அவன் அறிந்த கசப்பான நினைவுகள் மீண்டும் அவனை வந்து அடைந்தது.


மிதிலா, தன் டீன்-ஏஜ்ஜிற்கு உண்டான எந்த வித சந்தோஷத்தையும் இதுநாள் வரை அனுபவிக்கவில்லை..


பெற்றோர்கள் மற்றும் கணவரை இழந்தவளாகவும்..  போதுமான அளவு வசதி இல்லாமல் கைக்குழந்தையுடன் கஷ்டப்படுபவளாகவும் தான் மற்றவரின் கண்களுக்கும்.. ஹரியின் கண்களுக்குமே மிதிலா தெரிந்தாள்.


ஆனால் இக்கஷ்டங்கள் இயற்கையின் மாற்றத்தால் அவளுக்கு வரவில்லையே.


மிதிலா என்னும் சிறு பட்டாம்பூச்சியின், சிறகுகள் வலிக்க வலிக்க சிதைக்கப்பட்டுள்ளது, என்பதை ஹரி இன்று தானே அறிந்தான்.


மகிழ்மதி மீதான, மிதிலாவின் பாசமும் பிணைப்பும் நன்றாக ஹரியால் உணர முடிந்தது.


பிரித்திவ்விடம் மானசீகமாக ஹரி உறுதி அளித்தான்.. 


நிச்சயம் எக்காரணம் கொண்டும், ஒருக்காலமும், எந்த சூழ்நிலையிலும், மகிழ்மதியை விட்டு தர மாட்டேன், என் உயிர் உள்ளவரை, என்று கூறிக் கொண்டான்.


ஆனால் விரைவில் அவனின் உறுதியை ஆட்டம் காண செய்ய விதி காத்து இருந்தது.


கிட்டத்தட்ட 5 வருடம் முன்பு இந்தியா சென்றது..  

திருச்சியில் மிதிலாவை பார்த்தது.. அவளுடனான அந்த மாலை நடந்த நினைவுகள் என்று அனைத்தையும் ஹரி மனதில் மீட்டி பார்த்தான்.


நிச்சயம் மிதிலாவின் வாழ்க்கையில், இந்த கோர சம்பவங்கள் நிகழவில்லை என்றால், ஹரி மிதிலாவை பார்த்து இருக்க வாய்ப்பே இல்லை. 


எங்கோ தொடங்கி, எப்படியோ இவர்கள் ஒரு பந்தத்தில் இணைந்து உள்ளனர்.


ஹரிக்கும், மிதிலாவின் மீது கண்ட நொடிப்பொழுதிலேயே தோன்றிய நேசம் இன்றும் பிரமிப்பை கொடுத்தது. 


அனைத்தையும் நினைத்துப் பார்க்கும் பொழுது ஹரியின் ஃபோன் அடிக்கத் தொடங்கியது..


அன்னபூரணி தான் ஹரிக்கு அழைத்து இருந்தார். 


ஹரி, கொஞ்ச நேரத்தில் வருகிறோம் மாம், என்றுவிட்டு ஃபோனை அணைத்தவன்.. எழுந்து ட்ரீ ஹவுஸிற்கு சென்றான்.


மிதிலா இன்னும் ஆழ்ந்த உறக்கத்தில் தான் இருந்தாள்.


இரவு முழுக்க, சுத்தமாக  தூங்காததால்..  ஹரிக்கு உடல் மிகவும் சோர்வாக இருந்தது..  


தன் ஷர்ட்டை கழட்டி வைத்துவிட்டு, மிதிலாவின் அருகில் படுத்து, மிதிலாவின் மீது இருந்த பெட்ஷீட்டை இழுத்து தனக்கும் சேர்த்து ஹரி போர்த்திய மறுகணமே.. அவள் இருந்த நிலையை உணர்ந்த ஹரியின் இதழில் ஒரு இரகசிய புன்னகை..


தூக்கம் எங்கேயோ ஹரிக்கு பறந்து போய்விட்டது. 


தலைமுடி முழுக்க கலைந்து..  நேற்று நடந்த பல தாக்குதல்களால் லேசாக தடித்த உதடுகளுடன்.. 


ஆங்காங்கே முகத்தில், தாமரை மலரின் நிறத்தில்.. சிவந்து இருந்த தடங்களுடன்..  


பூனை குட்டியை போல் பிளான்கெட்டினுல் சுருண்டு அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த.. மிதிலாவின் தோற்றம் ஹரியினுள் பல உணர்வுகளை தூண்டி..  அவனின் போதையை ஏற்றியது.


தன்னிச்சையாக எழுந்த ஹரியின் கைகள், மிதிலாவின் வெற்று முதுகில் படர்ந்து, தன்னுடன் அவளை சேர்த்து இறுக்கியது. 


ஹரியின் பனியில் உறைந்த கைகள், தன் மேல் பட்டதும் மிதிலா சட்டென்று தன் கண்களை திறந்து விட்டாள்..  


அனல் மேல், பனித்துளி போல், ஹரியின் கைகள் மிதிலாவின் கதகதப்பான உடலில் பட்டு அவளை சிலிர்க்க செய்து துயில் எழுப்பியது.


மிதிலா மெல்ல தன் அழகிய பெரிய விழிகளின் இமைகளை, திறந்துத் திறந்து மூடி, ஹரியை பார்த்தாள் தூக்க கலக்கத்தில்.


மிதிலாவின் கண்கள் சுருங்க சுருங்க அதில் ஹரியும் அவளுள் சுருங்க தொடங்கினான். 


ஹரியின் கைகள், நேற்றைய பழக்கத்தில், அவனையும் மீறி, மிதிலாவின் உடலை வீணையாய் மீட்க தொடங்கியது.. 


அதில் தன் உணர்வுக்கு வந்துவிட்ட மிதிலாவின் கைகள், ஹரியின் கைகளை மேலும் முன்னேற விடாமல் இறுக்க பற்றி நிறுத்தியது.


கைகளை தானே நிறுத்துவாய், என்று அடுத்த செயலில் ஹரி அதிரடியாக இறங்க..


அதில் மிதிலாவின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது.. தான் இருக்கும் நிலையை உணர்ந்தும்..  நேற்று நடந்தவைகளை நினைத்தும்.


மிதிலாவின் ஒவ்வொரு எண்ணமும் அவள் முகத்திலும்..  கண்களிலும் மறைக்கப்படாமல்.. காலை நேர இளம் சூரிய ஒளியில் எதிரொலித்தது..  


அவள் விழிகள் காட்டிய அதிர்ச்சியில், ஹரியின் இதழ்களில் இரகசியப் புன்னகை தோன்றியது.


"சரியான மக்கு பேபி டி நீ", என நினைத்துக் கொண்டான்.


பதற்றமான மிதிலா, பட்டென அவன் கைகளை விடுவித்து விட்டு.. அவன் கால்களை தன் மீது இருந்து தள்ளிவிட்டு.. 


இறுகப் பற்றிய போர்வையுடன் எழுந்து ஜன்னல் புறம் திரும்பி ஹரிக்கு முதுகுப்புறம் காட்டியவாறு அமர்ந்தாள்.


மிதிலாவிற்கு தன் நிலையை எண்ணி வெட்கம் பிடுங்கித்தின்றது. உடல் முழுக்க கூசியது. மார்புடன் அந்த கனமான போர்வையை இறுகப் பற்றிக்கொண்டு, 'அச்சோ.. ஷேம்.. ஷேம்..', என்று நினைத்தப்படி தன்  கண்களை இறுக்க மூடிக்கொண்டாள். 


அடுத்து என்ன செய்வது..  என்ன பேசுவது என்று தெரியாத சங்கடமான நிலை அவளுக்கு.


மிதிலாவின் பின்புறம் புரண்டு வந்த ஹரி, "ஹாப்பி மார்னிங் பேபி" என்றப்படி..


மிதிலாவின் வெண்பளிங்கு முதுகில், தன் இதழ்களை அழுத்தமாக பதித்தவன்..


அப்படியே பின்புறம் இருந்து அவளை அணைத்து..  தன் மீது அவளை சாய்த்து.. மிதிலாவின் முகத்தை தன்னை நோக்கி திருப்பியவன்..


அவளின் கன்னக் குழியில் இருந்து ஆரம்பித்து.. தன் இதழ் ஊர்வலத்தை அழுத்தமாக அவள் முகம் முழுக்க நடத்தினான்.


ஹரியின் ஒவ்வொரு அழுத்தமான ஈர முத்தத்திற்கும் மிதிலாவின் உடலில் நடுக்கம் ஏற்பட்டது. 


மெல்ல ஹரியின் கைகள் அவளின் உடலில் எல்லை மீறி பயணிக்க ஆரம்பித்ததும்..  


புரிந்த மிதிலா, பதறி தன் வயிற்றில் இருந்த ஹரியின் கையை இறுக்க பற்றி..  முன்புறம் சரிந்து ஹரியின் கையின் மீதே படுத்தாள்..


இதழ்கள் துடிக்க..  கண்களைமூடி.. முகம் முழுக்க விகாசிக்க.. இருந்தவளின் தோற்றம், ஹரியை இன்னும் இன்னும் விரைவாக முன்னேறு என்று கூறியது.


இனி மிதிலா இவ்வுலகில் சொர்க்கத்தை மட்டுமே காண வேண்டும்.. அதை அவளுக்கு தாந்தான் அனைத்து வகையிலும், கொடுக்க வேண்டும் என்று மருத்துவன் முடிவெடுத்துவிட்டான்..


ஹரி, தன் கைகளை உறுவ முயல, மிதிலா ஹரியின் கைகளை சிறிதும் அசைக்க விடாமல், மேலும் மேலும் இறுக்க பற்றி, அவன் கை மீது கவிழ்ந்து கிடந்தாள். 


அதில் சித்தம் கலங்கிய ஹரியோ, தன் கைகளை உறுவ முடியாது, மிதிலாவின் முதுகின் மீதே படுத்தவன், அவள் காதில் "பிடிக்கலையா பேபி" என்றான்..  ஹஸ்கி வாய்ஸில் தன் உணர்வுகளை அடக்க முடியாமல்.


ஹரியின் உதடுகள் தன் காதை உரசியதுமே, மிதிலா மயக்க நிலைக்கே சென்று விட்டாள். அதிலும் பிடிக்கவில்லையா என்று அவன் கேட்க.. அவள் என்ன பதில் சொல்வாள்.. 


ஏற்கனவே அவள் வயிற்றில் சுரக்கும் இன்ப அமிலங்களின் கனம் தாங்காது அல்லவா பாவையவள் தத்தளிக்கின்றாள்.


ஹரி, பதில் வராததால் மீண்டும் மிதிலாவின் காதுகளில், "சீக்கிரம் சொல்லு பேபி", என்றான், சற்றும் பொறுமையின்றி, லேசாக அவள் காதுகளை தன் உதடுகளால் கடித்து, "ப்ளீஸ் பேபி.. என் கைய விடு..  ஐ கான்ட், கண்ட்ரோல் மைசெல்ஃப்.... டேக் யுவர் ஹான்ட்ஸ் ஹனி", என்றுக்கூற..


ஹரியின் வார்த்தைகளிலும், தீண்டலிலும் மயங்கிய பெண் மானின் கைகள் தானாக தளர்ந்து, ஹரியின் கைகளை விடுவித்தது.


அதில், மிதிலாவின் நிலையை உணர்ந்த ஹரி, அதீத காதலுடனும், தாபத்துடனும், அவளை இழுத்து தன் மடி மீது சாய்த்தவன்.. 


அவளின் நெற்றியில் தன் உதடுகளை ஆழ பதித்து, "Love you babe.. Thank you for coming into my life..  Thank you for making me smile like crazy.. and Last night.. Just wow da.. Hope you liked that, as much as I did.. You are just beautiful மிதுமா..  Definitely our Together is Forever Honey", என்றவன் அவளின் சங்கு கழுத்தில் உணர்ச்சி மிகுதியில் புதைய....


ஹரியின் ஒவ்வொரு வார்த்தையிலும் தனக்கான காதலை உணர்ந்த மிதிலாவின் வாய் தானாக.. 


"லவ் யூ, லவ் யூ சோ மச் டாக்டர்", என்றவள், மேலும் இறுக்கமாக.. ஹரியினை தன்னுடன் சேர்த்து அணைத்தாள். 


ஹரியின் திண்ணிய வெற்று மார்பிலும்.. புஜத்திலும்.. மிதிலாவின் மலர் போன்ற விரல்கள் பதிந்தது..


அதில் பித்தானவன், "இன்னும்மா நான் உனக்கு டாக்டர் பேபி..  நேத்து நைட் கூப்பிட்டல்ல.. அப்படி கூப்பிடு", என்று கோரிக்கை வைத்தவன், அவள் கையில் இருந்த போர்வைக்கு பதிலாக, தானே அவளுக்கு போர்வையாக மாறி.. 


இன்பமாய் அவளில் மூழ்கி.. அவளையும் தன்னிலை மறக்க செய்தான்..


மிதிலாவின் வாய் தானாக, "அம்மூ.. அம்மூ..", என்று முனங்கி.. சினுங்க.. தொடங்கி இருந்தது.


தன் குட்டி மனைவியின், செல்ல அழைப்பில் மயங்கிய ஹரி, அவளின் இதழ்களை கொய்து, ஒரு பெரும் யுத்தத்தை அதில் நிகழ்த்த தொடங்கினான்..


ஹரியின் முத்தத்தின் வேறுபாட்டில் அதிர்ச்சியடைந்த மிதிலா..  ஹரியின் தலைமுடியை வலிக்க பற்றி..  தன் உதட்டில் இருந்து அவனை விலக்கினாள்..


ஹரி, "ஹே கிரேஸி.. வலிக்குதுடி.. விடு‌ டீ..", என்று கத்த...


மிதிலா, "நாம இன்னும் பிரஷ் பண்ணவே இல்லை....", என்று முறைக்க..


ஹரி விரிந்த புன்னகையுடன்,

"அதுக்கு என்ன இப்ப..  எதுக்குடி என்னை இப்போ ஸ்டாப் பண்ண", என்றான், தன் தலைமுடியை நீவி விட்டுக் கொண்டே..  


அதில் அவள் முகம் அஷ்டக்கோணலாக மாற..


"இதுக்கு பேரு தான்.. டர்ட்டி கிஸ் டி.. அது கூட தெரியாத டர்ட்டி பேபியா நீ..  இனி டெய்லியும் மார்னிங் எழுந்ததும் உனக்கு டர்ட்டி கிஸ் தான்", என்றான் சிரிப்புடன்.. 


மிதிலா தன் உதட்டை சுழித்து, "அய்யோ..ச்சீ…", என..


ஹரியால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை..


அவனை அவள் மேலும் பார்த்து முறைக்க.. 


அதை கண்ட ஹரி, "இது ச்சீ யா", என்றவன் ஏதோ கூற..


மிதிலா, "ஐயோ கடவுளே.. கொஞ்சம் அமைதியா இருங்க முதல்ல..  இல்ல கடிச்சு வெச்சுடுவேன்.. ஃபர்ஸ்ட் எழுந்து வெளியே போங்க..  என்னோட ட்ரஸ் எங்க..", என்றாள் ஹரியின் முகத்தை காண முடியாமல்.


“ட்ரஸா…” என்றவன், அதற்கும் ஏதோ கூற.. ஹரியின் வாயை, தன் கையால் இறுக மூடிய மிதிலா, "ச்சீ... நீங்க ரொம்ப பேட்..", என்று சிணுங்க...


ஹரி, "எஸ் பேபி, நான் ரொம்ப பேட் தான்..  உனக்கு மட்டும்..", என்றவன், சொன்னதை செயல்படுத்த, அவளின் போர்வையை விலக்க தொடங்கினான்…


அதில், மிதிலா பதறி போர்வையை இறுக்க பற்றிக்கொண்டு.. "அச்சோ வெளிச்சமா இருக்கு.. விடுங்க.. ப்ளீஸ் அம்மூ.. விடுங்க..", என்றவள்.. 


"எனக்கு அர்ஜெண்டா..  ரெஸ்ட் ரூம் போகணும் ப்ளீஸ்..", என்றாள், பாவமாக முகத்தை வேறு வைத்துக்கொண்டு, தப்பிக்க.


அதை நம்பிய ஹரி, "ஓ காட்.. சாரி பேபி.. ரொம்ப டைம் ஆகிடுச்சு இல்ல..", என்றப்படி அவளை விட்டு விலகியவன்.. பக்கத்தில் இருந்த, மிதிலாவின் புது உடையை எடுத்து கொடுத்தான்.


மிதிலா வாங்கிக்கொண்டு ஹரியை நிமிர்ந்து பார்க்க..


"என்ன பேபி..  சீக்கிரம் போட்டுட்டு வா.. போகலாம்..", என..


"எப்படி நான் டிரஸ் சேன்ஜ் பண்றது.. ப்ளீஸ் நீங்க கீழே போங்க..", என்றாள் கெஞ்சுதலாக..


ஹரி சிரித்துக்கொண்டே,‌ "ரொம்ப பண்ற பேபி நீ", என்றவன்.. அவளின் கூச்சத்தை உணர்ந்து, ஒரே நாளில் எவ்வாறு மாற்றம் வரும் என்பதை புரிந்துக்கொண்டு.. அவளுக்கான தனிமையை கொடுத்துவிட்டு… எழுந்தவன், தன் ஷர்ட்டை எடுத்து, அணிந்தப்படியே வெளியே சென்றான்.


மிதிலா எழுந்து, விரைவாக உடை மாற்றிக் கொண்டு, கீழே இறங்கினாள்.


தன் முகம் பார்க்க முடியாது திண்டாடுபவளின், கலைந்த கூந்தலை காதோரம் ஒதுக்கிவிட்டு.. 


அவளை தன் தோளுடன் சேர்த்து அணைத்துக்கொண்டு, வீட்டை நோக்கி நடந்தான்..  


சுற்றி கீழே படர்ந்து இருந்த, பனியின் அழகை, தன் விழிகளால் பருகிக் கொண்டே, மிதிலா ஹரியின் அணைப்பில் நடந்தாள்.. 


மிதிலாவின் சோர்வான நடையில், தெரிந்த மாற்றத்தை, உணர்ந்த ஹரியின் கண்கள் சுருங்கியது..


வீட்டிற்குள் நுழைந்ததும், ஹரியின் கண்கள், ஒரு முறை முழுவதும் சுற்றி சுழன்றது..  


ஹாலில் ஹஸ்கியை தவிர வேறு யாரும் இல்லை..  


நிம்மதியுடன் ஒரு பெருமூச்சை வெளியேற்றியவன்.. மறுகணம் மிதிலாவை தன் கைகளில் ஏந்தி கொண்டு விரைவாக மாடிப்படியில் ஏறினான்.. 


"ஏன் டாக்டர்..  நானே வரேன்..", என மிதிலா இறங்க முற்பட..


"கொஞ்சம் அமைதியா இரு பேபி..  என்கிட்ட இருந்து எல்லாத்தையும் மறைக்கனும்னு நினைக்காதே.. ஐ நோ.. உன்னால நடக்க முடியல", என்றவன், பாத்ரூமிற்குள் சென்று அவளை இறக்கிவிட்டு.. "ஹாட் வாட்டர்ல குளிச்சிட்டு வா.. நான் உனக்கு காபி எடுத்துட்டு வரேன்..", என்றுவிட்டு வெளியே சென்றான்.


டாக்டரை, அதிலும் ஒரு கைனோகாலஜிஸ்ட்டை,  கட்டிக்கொண்டவளின் பாடு பெரும் திண்டாட்டமாகி போனது..


இருவர் முகத்திலும் இருந்த மாற்றங்களை கண்டுக்கொண்ட  அன்னபூரணிக்கு அப்பொழுது தான் மனம் நிம்மதியானது..


மிதிலா மகனை விரைவில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.. இருவரும் இணைந்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று லட்சக்காண கோரிக்கைகளை அவர் நிமிடத்திற்கு நிமிடம் கடவுளிடம் வைத்துக்கொண்டே இருந்தாரே..


அடுத்து வந்த, ஒவ்வொரு பகலும் இரவும், மிதிலாவிற்கும் ஹரிக்கும் பனியாக உருகி இன்பமாய் கரைந்தது..


ஒரு காதல் கொண்ட கணவனால், தன் மனைவியை எத்தகைய துன்பத்தில் இருந்தும் மீட்டு எடுக்க முடியும், என்பதை ஹரி நிகழ்த்தி காட்டினான்.


மிதிலாவை முற்றிலும் மாற்றி விட்டான்.. 


அவளின் உலகம் முழுவதும், ஹரி மட்டுமே நிறைந்து இருந்தான்..  


விடுமுறை முடிந்து விட்டால், எங்கும் தூரமாக செல்ல முடியாது என்பதால் ஹரி, மிதிலாவையும், மகிழ்மதியையும், நியூயார்க்கிற்கு மட்டும் அழைத்து சென்று வரலாம் என்று இருந்தான்.


அன்னபூரணி, ஹரியிடம் குழந்தையை நான் பத்திரமாக பார்த்துக் கொள்கிறேன்..  'நீங்க இரண்டு பேர் மட்டும் போயிட்டு வாங்க ஹரி', என்று பேசிப்பார்த்தார்..  


ஹரி, "இல்ல மாம் வேண்டாம்.. நான் பார்த்துக்கறேன்.. குழந்தையை அவ இதுவரை பிரிஞ்சது இல்லை.. குழந்தையும், அம்மா முகம் பார்க்கலைன்னா.. ஏங்கிபோயிடுவா.. சரிவராது மாம்.. அதைவிட பெரிய பாவம் எதுவுமில்ல", என்று உறுதியாக மறுத்து விட்டு..


குழந்தையையும் தன்னுடைய ஹனிமூனிற்கு தூக்கிச் சென்றுவிட்டு இருந்தான்.


திரும்பி வந்த ஹரி, மீண்டும் மருத்துவமனைக்கு பணிக்கு சென்றுவர ஆரம்பித்து விட்டு இருந்தான்.. 


மிதிலாவிற்கு இன்னும் விடுமுறை இருந்தது.


அன்று ஹரி, தோட்டத்தில் தனியாக அமர்ந்து, தன் லேப்டாப்பில் தனக்கு இந்தியாவில் இருந்து வந்து இருந்த மெயில்களை பார்த்துக்கொண்டு இருந்தான்.


அதில் திருச்சியில் அரசு கல்லூரியில் படிக்கும், ஏழ்மையான மாணவிகள் தங்கியிருக்கும்..  இலவச அரசு விடுதியில் உள்ள பெண்களை.. ஆதிகேசவன் தவறான வழியில் உபயோகித்து வருகின்றான், என்றும்...


அப்பெண்களுக்கு, அவர்களுக்கே தெரியாமல் அதிபயங்கரமான தடை செய்யப்பட்ட போதை மருந்துகளை கொடுத்து.. 


அவர்களை அப்போதைக்கு அடிமை ஆக்கி..  அந்நேரத்தில் பல ஆபாச வீடியோக்களை..  அவர்களை வைத்து எடுத்து, அதை பல கோடிகளுக்கு ஆன்லைன் சந்தையில் விற்றுக் கொண்டு இருக்கின்றான், என்று ஆதாரங்களுடன் அனுப்பப்பட்டு இருக்க…


ஆதிகேசவனை கொல்லும் அளவிற்கான வெறி ஹரிக்கு வந்துவிட்டது.


தன் கண்களை அழுந்த மூடி, தன் கோபத்தை கட்டுப்படுத்த முயன்றான்.. ஒரு மருத்துவனாக அவனால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை…


அம்மருந்து பொருட்களின் விளைவு அப்பெண்களின் உடல் நிலையை முற்றிலும் குன்றச்செய்துவிடுமே..


அதைவிட அவர்கள் பல மணி நேரம் தங்களை மறந்த நிலையில் சீரழிக்க படுவதால்..  கர்ப்பப்பை முதல் சேதமடைந்து..  உடல் முழுவதும் பாதிக்கப்படுகின்றது. பல தொற்று நோய்கள் கூட வர வாய்ப்பு உள்ளது.


மேலும் அந்த ரிப்போர்டில் இருப்பதை ஹரி படிக்க ஆரம்பித்தான்.


முன்பே ஆதிகேசவனின் பல தொழில்களை, ருத்ரன் மறைமுகமாக முடக்கி உள்ளதாகவும் ஹரிக்கு செய்தி வந்து இருந்தது. அதில் பரவாயில்லையே என்று நினைத்தவன்.. 


ஆதிகேசவனை தடம் தெரியாது அழிக்க.. தான் சேகரித்த அனைத்து தகவல்களையும் சிபிஐக்கு.. ஆதாரங்களுடன்.. அனுப்பினான்…


விஷயம் அறிந்ததும், அமெரிக்க அரசாங்கம் போலவே, இந்திய அரசாங்கமும், மக்களின் நலனுக்காக ஆதிகேசவன் மீது, உடனடி நடவடிக்கை நிச்சயம் எடுக்கும், என்று ஹரி நம்பினான்.. 


பாவம் நம்மூரை பற்றி அவனுக்கு முழுவதும் தெரியாது போனது..


அதே நேரம் அங்கு திருச்சியில், அமெரிக்கா செல்ல விசா வந்ததும், ருத்ரன் யு.எஸ்ஸில் இருந்த அவனின் கல்லூரி தோழன் மூலம், சிறந்த மகப்பேறு மருத்துவமனையாக எது என்று ஆராய்ந்து..  


சியாட்டலில் உள்ள ஸ்வீடிஷ் மருத்துவமனையை(Swedish Hospital) தொடர்பு கொண்டு, தங்களுடைய விபரங்களை தெரிவித்து விட்டு..  சாஹித்யாவிற்கு அப்பாயின்மென்ட் புக் செய்தான்.


உடனே, அடுத்த மாதத்தில்..  ஒரு நாள் குறிக்கப்பிடப்பட்டு.. டாக்டர் ஹரிகிருஷ்ணா சேதுமாதவனுடன்.. அப்பாயின்ட்மெண்ட் புக் செய்யப்பட்டுவிட்டதாக..  மருத்துவமனையில் இருந்து மெயில் ருத்ரனிற்கு வந்தது..


ஹரியின் பெயரை பார்த்ததும் இந்திய மருத்துவனா என்று ருத்ரனின் புருவம் உயர்ந்தது..  மீண்டும் மருத்துவமனைக்கு தொடர்புக்கொண்டு, ஹரியின் படிப்பு மற்றும் எக்ஸ்பீரியன்ஸை பற்றி விசாரித்து, திருப்தியானவன்.. அமெரிக்கா செல்ல சாஹித்யாவை தயாராக கூறினான். 


நாட்கள் நகர..


மிதிலா, தன்னைப் பற்றி எதுவும் சொல்லாமலேயே ஹரி.. மிதிலாவை பற்றி அனைத்தும் அறிந்து.. அவளுக்காக பார்த்துப் பார்த்து.. யோசித்து ஒவ்வொன்றாக செய்தான்.


மிதிலா, தனக்கு கடவுள் பெற்றவர்களுக்கு பதிலாக ஹரியை கொடுத்துள்ளதாக நினைத்து.. மனதை தேற்றிக்கொண்டு மகிழ்மதியுடன் தன் வாழ்க்கையை வாழ ஆரம்பித்தாள்.


மிதிலாவின் விடுமுறையும் முடிந்து, அவள் பணிக்கு செல்ல வேண்டிய நாளும் வந்து சேர்ந்தது.. 


மிதிலா செல்ல தயாராக, ஹரி, "அவ்ளோ தூரம் போயிட்டு வர கஷ்டமா இருக்கும் பேபி….  நானே வேற இடத்துல மாத்தி விடறேன்… ரிசைன் பண்ணிடு", என்று நிறுத்தி விட்டான்.. 


வேறு இடத்தில் மாற்றி தருகிறேன் என்றவன், இதோ அதோவென அதை மட்டும் இறுதி வரை செய்யவே இல்லை..


மிதிலாவும் ஒரு வேலை ஹரி அந்த வேலையை கவுர குறைச்சலாக நினைக்கின்றானோ, என்று முடிவு செய்து கேட்பதையே நிறுத்திவிட்டாள்.


வீட்டின் பொறுப்பை முழுக்க தன் கையில் எடுத்துக்கொண்டாள்..


சிலசமயம் மதியம், மகிழ்மதியை தூக்கிக்கொண்டு, ஹரிக்கான மதிய உணவை கொடுக்க மருத்துவமனைக்கு சென்று, ஹரியின் ஓய்வு நேரம் முழுக்க அவனுடன் இருந்துவிட்டே வீடு திரும்புவாள்.


அந்நாட்களில் மிதிலாவின் கண்களில் மருத்துவமனையையும், மற்ற டாக்டர்களையும் பார்க்கும் போது தோன்றும் ஏக்கம்..  ஹரியை கொல்லாமல் கொல்லும். 


மிதிலாவோ குறைந்தப்பட்சம் கண்ணால் ஆவது இதையெல்லாம் பார்த்துவிட வேண்டும் என்ற நிலையில் அனைத்தையும் பார்த்து வைப்பாள்.


அங்கு திருச்சியிலோ..


நாளுக்கு நாள் ஆதிகேசவனின் கோபம் அதிகரித்தது..


காட்டுமிராண்டியாக மாறிக் கொண்டு இருந்தான்..  


ஆதிகேசவன் மேல் தொடுக்கப்பட்ட சில மோசடி வழக்குகளும்..  லஞ்சம் வாங்கிக்கொண்டு சிலருக்கு அரசு பணி கொடுத்த வழக்குகளும்.. தகுந்த ஆதாரங்களுடன் நிருபிக்கப்பட்டு இருந்தது. 


அனைத்திற்கும் பின்பு ருத்ரன் இருந்தான்.


அதன் பலனாக ஆதிகேசவன் இனி ஜென்மத்திற்கும் எலக்ஷனில் நிற்க கூடாது என்றுவிட்டனர்.. 


பதவி இல்லையென்றால் அவனால் எங்கிருந்து உயிர் வாழ முடியும்..


உடனே அவன் டெல்லிக்கு கிளம்பி ஓட..


ருத்ரனின் அமெரிக்கா பயணமும், அதன் காரணமும் ஆதிகேசவனுக்கு தெரியாமல் போனது.









கருத்துகள்

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates

Popular posts

Completed- உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே💘- (Completed story available here for free Read)

New Ongoing 💌 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🎼🪻😘💌

Completed-💃🕺அழகான இராட்சசியே அடிக்கரும்பாய் இனிக்கிறியே - Romantic Entertainment

Completed-மகிழ்மதியின் அரசன்- Royal Family Based Romantic love story

1. சங்கீத வானில் ஓர் அந்திப்போர்!😘🕺💃🎼🪻