உண்மை காதல் -6

அத்தியாயம் -6


கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு,


கையில் கைக்குழந்தையுடன், அமெரிக்கா செல்லும் விமானத்தில், அமர்ந்து கொண்டு இருந்தாள், மிதிலா.


அவள் முகமோ முற்றிலும் கலையிழந்து இருந்தது..


நீண்ட தினங்களுக்கு பிறகு, அன்று தான் எந்த முகமூடியும் இன்றி வெளி வந்து, மக்கள் முகத்தை பார்க்கின்றாள்.


கருவளையம் சூழ்ந்த, தன் சிவந்த கண்களால், சுற்றி சுற்றி, மருண்டப்படி பார்த்துக்கொண்டு இருந்தாள்.


அவளுடைய புசுபுசுவென்ற, பால் மனம் மாறாத, அழகான தேகமோ, இன்று எலும்புகளின் மீது தோல் போர்த்தியது போல் உருகி விட்டு இருந்தது.


இளம் ரோஜா நிற சருமமோ வறண்டு மாநிறமாக மாறி இருந்தது.


தலைமுடி குட்டையாக வெட்டிவிட்டு, காவி நிறத்தில் பராமரிப்பின்றி, வெடித்து பறந்து கொண்டு இருந்தது.


மொத்தத்தில், பார்க்க யாரோ போல், உடல்நிலை மற்றும் மனநிலை சரியில்லாத பெண்ணை போல் இருந்தாள்.


அவ்வளவு சிறிதாக எலும்புக்கூடு போல் மெலிந்து இருந்தவளை பார்த்தால், யாரும் ஒரு குழந்தைக்கு தாய் என்று நம்ப மாட்டார்கள். 


கண்களிரண்டிலும், பெரும் உயிர்வலியையும், நிராசையையும் சுமந்துக்கொண்டு வெறுமை சூழ, வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தவளை, நெருங்கிய விமானப் பணிப்பெண்..


அவள் இருக்கைக்கு முன்பு இருந்த தடுப்பில், குழந்தைக்கான தொட்டில் போன்ற அமைப்புடைய சின்ன படுக்கையை(Bassinet) செட் செய்து விட்டுச்செல்ல..


மிதிலா இயந்திரகதியாக, மடியில் இருந்த குழந்தையை தூக்கி, அதில் வசதியாக படுக்க வைத்து, விமானத்தில் கொடுத்த குழந்தைக்கான பிளான்கெட்டை விரித்து, குழந்தையின் மீது போர்த்தி விட்டு, தயாராக வைத்திருந்த பால் புட்டியை எடுத்து வாயில் வைத்துப் பிடித்தப்படி, மெதுவாக மற்றொரு கையால் மெல்ல தட்டி விட ஆரம்பித்தாள்.


குழந்தையும், வசதியாக படுத்துக்கொண்டதுடன், வயிறும் நிறைய தொடங்கியதில், தாயின் தட்டலில் சுகமாக துயில் கொள்ள ஆரம்பித்தது.


மிதிலாவின் அருகில் அமர்ந்திருந்த பெண்மணி, "குழந்தை தான் நல்லா தூங்க ஆரம்பிச்சுடுச்சே மா.. இன்னும் ஏன் தட்டுற.. அப்புறம் அதுவே பழக்கம் ஆகிடும்..", என்றுக்கூற.


சரியென்ற மிதிலா, அப்படியே சாய்ந்து அமர்ந்துக்கொண்டாள். அதுவும் மீண்டும்‌ அதே வெறித்த பார்வையுடன்.


சிறிது நேரத்தில், விமான பணிப்பெண்கள் வந்து, அனைவருக்குமான உணவு ட்ரேவை கொடுத்துவிட்டு செல்ல,


மிதிலா அவளுக்கு தந்த உணவை எடுத்து, கடமைக்காக கொறிக்க தொடங்கினாள்.


அதைப்பார்த்த மிதிலாவின் அருகில் அமர்ந்து இருந்த பெண்மணி, "என்னம்மா இப்படி சாப்பிடற, அதனாலதான் குழந்தைக்கு பால் கிடைக்கல போல, எலிக்குட்டி மாதிரி இருக்க நீயே பார்க்க.. நல்லா அள்ளி சாப்பிட வேண்டாமா….", என்று, அவளை ஒழுங்காக சாப்பிட சொல்லி உரிமையாக கண்டித்தவர், அப்படியே அவளிடம் மெதுவாக பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தார்.


பாவம் எவ்வளவு நேரம் தான் அவரும் வாயை மூடிக்கொண்டு அமர்ந்து இருப்பார்.


மிதிலாவின் பெயரைக் கேட்டுவிட்டு, தன்னுடைய பெயர் சீத்தா என்று தன்னை அறிமுகம் செய்துக்கொண்டவர், தொடர்ந்து,


மிதிலாவிடம், "டெலிவரிக்கு இந்தியா வந்து இருந்துட்டு, இப்ப திரும்ப வீட்டுக்காரர் கிட்ட குழந்தையை தூக்கிட்டு போறீயாமா", என்று கேள்வி எழுப்ப,


மிதிலா, "இல்லை ஆன்ட்டி நான் வேலைக்காக அமெரிக்கா போகிறேன்" என்றாள்.


சீத்தா, "ஓ, அப்ப குழந்தையோட அப்பா எங்க மா, நீ மட்டும் போற" என்றுக்கேட்க..


மிதிலாவின் முகம் அவரது கேள்வியில், என்ன முயன்றும் தடுக்க முடியாத அளவில், சட்டென்று அதீத வருத்தத்தில் சுருங்கி விட்டது.


கண்களில் வேறு மெல்லிய நீர் படலம்..


அதைப்பார்த்த சீத்தாவிற்கு, ஏன் கேட்டோம் என்று ஆகிவிட்டது.


மிதிலாவின் முகமே, அவருக்கு ஏதோ நடக்க கூடாத ஒன்று, அவளின் வாழ்க்கையில் நடந்துவிட்டது என்பதை உறைத்தது.


அருகில் இருந்த நீரை எடுத்து, அவர் மிதிலாவின் கையில் கொடுக்க..


"சாரி.. ஆன்ட்டி", என்ற

மிதிலா அந்நீருடன் சேர்த்து, தன் துக்கத்தையும் மிடர் மிடராக விழுங்கினாள்.


கடந்த மூன்று மாதங்களாக, யாரின் அரவணைப்பும் இல்லாமல், அடுத்து தனக்கு என்ன என்ற நிலையறியாமல், பச்சை பிள்ளையுடன் பரிதவித்து, அல்லாடிக்கொண்டு இருக்கின்றாளே.


கொஞ்சம் தெளிவடைந்த மிதிலா, தண்ணீர் பாட்டிலை கீழே வைத்துவிட்டு, கண்களுடன் சேர்த்து தன் முகத்தையும் அழுந்த துடைத்தவள், சீத்தாவிடம் அவரின் கேள்விக்கு பதிலாக, "பாப்பாவோட அப்பா, இப்போ உயிரோட இல்லை ஆண்ட்டி" என்றாள் உணர்வுகளை இழந்த குரலில்.


அதை கேட்ட சீத்தாவிற்கோ திக்கென்று இருந்தது.


'இவ்வளவு சின்ன வயதில், பச்சை குழந்தையுடன், தனியாக நின்று விட்டாளே, ஐயோ',, என்று மனம் ஒருமாதிரி ஆகிவிட்டது.


மீண்டும் சீத்தா, "ஏன்மா அப்ப அம்மா அப்பா கூட இருக்க வேண்டியதுதானே, கைக்குழந்தையை வச்சிகிட்டு, ஏன் தனியா அமெரிக்கா வரை போற மா…", என்றுக்கேட்க.


முன்பே இவ்வகையான கேள்விகளுக்கு பதிலளிக்க தயாராகி இருந்த மிதிலா, "நான் மாசமா இருக்கும் போது, என் குடும்பத்தில்,

எல்லாரும் என்னை வீட்டில் விட்டுட்டு, ஒன்னா குலதெய்வ கோயிலுக்கு போனாங்க, அப்போ தான் ஆக்சிடெண்டில் எல்லாரும்…" என்றவள், அடுத்தச்சொல்லை, சொல்லக்கூட‌ சக்தி இல்லாது அமைதியாகிவிட்டாள்.


சீத்தாவிற்கு அவள் சொல்லவில்லை என்றாலும் புரிந்தது.


ஏற்கனவே கணவன் இல்லை என்றதே அவருக்கு வருத்தத்தை தந்து இருக்க.. இவளோ குடும்பமே இல்லை என்றதை கேட்டு எவ்வாறு இருக்கும்.


தன்னை நிதானப்படுத்த சிறிது நீரை எடுத்து அவர் பருக வேண்டிதாகிப்போனது.


மேலும் அவர் மனதில், 'எவ்வாறு இவள் அமெரிக்காவில் தனியாக பிழைப்பாள், அதுவும் பச்சை பிள்ளையுடன்', என்ற யோசனை ஓட..


மிதிலாவிடம் அடுத்தடுத்த கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்.


மிதிலா அவரிடம், "எங்களுக்கு நெருங்கிய சொந்தம்னு உதவிக்குனு வர அளவுக்கு யாரும் இல்ல ஆன்ட்டி, இருந்த கடன் எல்லாத்தையும் இருந்த சொத்தைவித்து அடைச்சுட்டு, தெரிஞ்சவங்க ஒருத்தங்க உதவியினால் தான் வேலைக்கு அமெரிக்கா போறேன் ஆன்ட்டி,", என்றாள் கோர்வையாக. 


இப்படியே இவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருக்கும்போதே, 


குழந்தை, பசியிலும், தூக்கம் கலைந்து எழுந்ததிலும், விமானம் உயரத்தில் பறப்பதால் ஏற்படும் காற்று அழுத்தத்தினாலும், வீர்வீரென அழ தொடங்கியது.


உடனே மிதிலா விரைந்து, பால் பவுடரை நீரில் கலக்கி, பாட்டிலில் ஊற்றி, குழந்தையின் வாயில் வைக்க.. 


குழந்தை அழுகையை பட்டென்று நிறுத்திவிட்டு, விறுவிறுவென்று பால் குடிக்க ஆரம்பித்தது.


அடுத்த ஒருசில நிமிடங்களில், பாட்டில் காலியானதும், மீண்டும் குழந்தை தூங்கி விட்டது.


மிதிலா மீண்டும் குழந்தையை தொட்டிலில் போட்டு, குளிருக்கு மூடிவிட்டு அமர..


மீண்டும் சீத்தா அவளுடன் பேச ஆரம்பித்தார்.


சீத்தா, "அமெரிக்காவில் எந்த கம்பெனியில் மா வேலை செய்ய போற, எங்க தங்க போற", என்று விசாரிக்க 


மிதிலா அதற்கு, ஒரு இந்தியன் சூப்பர் மார்க்கெட் கடை பெயரை கூறி, "அங்க தான் ஆன்ட்டி கேஷியரா, வேலை செய்ய போறேன்", என்றாள்.


சீத்தா உடனே, "ஏம்மா நீ எதுவும் டிகிரி முடிக்கலையா, அந்த பில் போடுற வேலை, எப்படிமா குடும்பம் நடத்த பத்தும், குழந்தைக்கு எவ்ளோ செலவு வரும்.. என்ன வயசாச்சு உனக்கு", என்று விடாமல் அவளை போட்டு துருவ..


அவரிடம் இருந்து எப்படி தப்பிப்பது, என்ற வழியறியாத மிதிலா, ஒவ்வொன்றிற்கும் பதில் கூறிக்கொண்டு இருந்தாள்,


"வயசு 25 ஆன்ட்டி, வேற நல்லவேளை கிடைச்சதும் மாறிப்பேன்.. Bcom முடிச்சிருக்கேன் ஆன்ட்டி..", என்றாள், மனதில் வயதை கணக்கிட்டப்படி..


உடனே சீத்தா, "என்னமா சொல்ற உனக்கு வயசு இருபத்தி அஞ்சா..??", என்று ஆச்சரியமாக கேட்டவர், 


அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்துவிட்டு, "15 வயசு பொண்ணு மாதிரி இருக்க பார்க்க, நீயென்னனா திடுதிப்புன்னு வயசு இருபத்தி அஞ்சுன்னு சொல்ற.. ஏற்கனவே உனக்கொரு குழந்தை இருக்குன்னு சொன்னா யாரும் நம்பமாட்டாங்க..", என்றவர்,


தொடர்ந்து, "அந்தளவுக்கு நீ உன் உடம்ப ரொம்ப மோசமா ஆக்கி‌ வச்சிட்டமா மிதிலா, உனக்கு ஒன்னுனா, அந்த பச்சை குழந்தையோட நிலைமையை யோசிச்சு பார்த்தியா, உன்னோட நிலைமை புரியாம இல்லை, ஆனாலும் இனி உன் குழந்தைக்காக பாருமா" என்று கடிய..


"சரி ஆன்ட்டி..", என்ற மிதிலா, சீத்தாவின் அடுத்தக்கேள்விக்கு பயந்து, "கொஞ்சம் தூங்கி எழுந்துக்கறேன் ஆன்ட்டி..", என்று கண்ணை மூடிக்கொள்ள.


'குழந்தை வைத்து இருப்பவள் அசதி இருக்கத்தான் செய்யும்..', என்று நினைத்த சீத்தாவும் தன் கண்களை மூடிக்கொண்டார். அவர் மனம் முழுக்க மிதிலா பற்றிய எண்ணம் தான். அவரும் கணவரை இழந்து தனித்து வாழ்பவர் தான். கிராமத்தில் தனி மனுஷியாக நின்று, இருந்த நிலத்தில் பயிர் வைத்து, பிள்ளையை படிக்க வைத்து என்று படாத பாடு பட்டு இருந்தார். அவர் உழைப்புக்கு பலனாக இன்று மகன் நல்ல நிலையில், மனைவி குழந்தையென்று அமெரிக்காவில் நல்ல வேலையில் இருக்க.. வேறென்ன வேண்டும் அவருக்கு. இப்பொழுது அவருக்கு ஆறு மாதம் இந்திய வாழ்க்கை என்றால், அடுத்த ஆறு மாதம் அமெரிக்க வாழ்க்கை என்று நிம்மதியாக கழிகின்றது.


ஆனால் ஆரம்பத்தில் அவர் கடந்து வந்த பாதைகள் மிக கடினமாகிற்றே.. அதனாலேயே யார் என்ற பரிச்சயம் கூட இல்லாத, மிதிலா பற்றிய தகவல்கள், அவரை பாதித்து இருந்தது.


மிதிலாவிற்கு, வயது வெறும் பத்தொன்பது தான் என்பது பாவம் அவருக்கு தெரியாதே..!!


அதைவிட அவளுக்கு முழு படிப்பு கூட இல்லையே.. கல்லூரியில் அடியெடுத்து வைக்க நினைத்த முதலே கஷ்டங்கள் வரிசைக்கட்டி அல்லவா வந்து இருந்தது.


குருவி தலையில் பனங்காயை வைத்தது போல், வெறும் 19 வயதில் கையில், மூன்று மாத பிள்ளையை வைத்துக் கொண்டு, 


உட்கார இடம் இல்லாது, பிறந்த வீட்டைவிட்டு, நாட்டை விட்டு, பயந்து பதுங்கி, போலி ஆவணங்களுடன், அனாதையாக அல்லவா, அமெரிக்கா நோக்கி பயணப்படுகிறாள்.


கண்களை மூக்கொண்டு படுத்திருந்த மிதிலாவோ பொட்டு தூக்கமின்றி கொட்டக்கொட்ட, மூடிய இமைகளுக்குள் விழித்து இருந்தாள்.


வாழ்வின் முதல் விமானப் பயணம் கூட, அவளுக்கு எந்த விதமான பயத்தையும் கொடுக்கவில்லை.


இதைவிட பல போராட்டங்களை, பயத்தின் எல்லையை, மரணத்தின் வாசலை, என்று அனைத்தையும் ஒருசேர, இந்த சிறுவயதில் உலகம் அவளுக்கு காட்டிவிட்டு இருந்தது.


அதிலும் கண்முன்னே பிரியமானவர்களின் கொடுரமான, இழப்பு வேறு.


விமானத்தில் அனைவரும் தூங்குவதற்கு, வசதியாக விளக்கை அணைத்துவிட..


மிதிலாவின் கண்களில் இருந்து கண்ணீர், மொனமாக விழுந்து வழிந்தோட தொடங்கியது.


விஷ்ணு, துளசி, மித்ரா என்று அவள் குடும்பத்தின் நினைவுகள் அவளை சூழ்ந்துக்கொள்ள, உள்ளம் நொந்துப்போனாள்.


இனி தனக்கு யாரும் இல்லை என்ற நினைவே அவளை கொன்றது.


இதில் அவள் ஆதிக்கேசவன் கண்ணில் வேறு அகப்படாமல் இருக்க வேண்டும்.


அதிலும் அன்று ஆதிகேசவன் சொன்ன "அந்த சின்ன சிறுக்கியை, எப்படியாவது கண்டுபிடிங்கடா, இந்த திருச்சியே அதிரும் அளவுக்கு, அவளோட ரத்தத்தை முழுக்க ஒரு இடம் விடாம தெளிக்கனும், பொண்ணையா பெத்து வச்சு இருக்கான் பொண்ணு, இனி பொண்ண பெத்தவனுக்கலாம் இருக்கு…" என்று 

கோபமாக பழிவெறியுடன் அவன் கூறியது, இன்று வரை அவள் காதினுள் தொடர்ந்து கேட்டு கொண்டே இருந்தது.


அதை நினைத்ததும்.. இப்பொழுது கூட அவளுக்கு உடல் தூக்கிவாரிப் போட்டது.


பயம் பயம் பயம்.


அது மட்டும் தான் இன்றைய அவளின் சொத்து.


மூன்று மாதங்களுக்கு முன்பு, கையில் குழந்தையுடன் அரண்டு போயி, உறைந்து வந்து நின்றவளை அரவணைத்து..


குழந்தை மகிழ்மதியை, அவளிடம் காட்டிக்காட்டி, அவளை மீட்டெடுத்து, இம்மூன்று மாதக்காலமும் தேற்றி, எதிர்க்கால வாழ்க்கையை அவள் எதிர்க்கொள்ள தயார் படுத்தி, அனுப்பி இருந்தனர்.


இதுவரை பெற்றோர்கள் துணை இல்லாமல் ஒரு பாக்கெட் பால் கூட வாங்க கடைக்கு மிதிலா சென்றதில்லை,


பள்ளி, டியூஷன், வீடு என்று அவள் உலகம் இருந்தது.


ஆனால் இனி தனியாக ஒரு குடும்பத்தை அமைத்து, அவள் சுமக்க வேண்டும்.


விமானத்தின் அமைதி மிதிலாவை எதிர்கால வாழ்வை குறித்து சிந்திக்க

தூண்டியது,


அனைவரும் தூங்கி எழுந்தனர்.


அடுத்த விமானமும் துபாயில் மாறினார்.


சீத்தாவும் இவள் உடனே இவள் செல்லும் இடத்திற்கு தான் பயணமானார்.


சீத்தா மிதிலாவிடம் இறங்கும் முன்பு, "உனக்கு ரொம்ப ரொம்ப சின்ன வயசுடா, கண்டிப்பா இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கோ, ஒரு துணை அதுவும் கணவன் துணை ரொம்ப அவசியம் டா… அனுபவத்தில் சொல்றேன்", என்றவர் மேலும்.. பல அறிவுரைகளை அவளுக்கு வாரி வழங்கி, தன்னுடைய ஃபோன் நம்பர் மற்றும், முகவரியை பகிர்ந்துக்கொண்டார்.


விமானம் பறந்துச்சென்று, மெல்ல சியாட்டில் டக்கோமா ஏர்போட்டின், ரன்வேயில் தரை இறங்கியது.


மிதிலா "சியாட்டில் வாஷிங்டன் அமெரிக்கா வெல்கம்ஸ் யூ", என்ற பெயர் பலகையை படித்தவாறு, தன் நெஞ்சில் பரவிய நிம்மதியுடன், இமிகிரேஷன் ஃபார்மாலிட்டீஸ் அனைத்தையும் முடித்துக் கொண்டு, ஏர்போர்ட்டை விட்டு வெளிவந்து, அமெரிக்க மண்ணில் கால் பதித்தாள்.


அதே நேரம் அங்கு மருத்துவமனையில் ஹரி, 

அதிக மகிழ்ச்சியுடன் 

"சியாட்டில் வாஷிங்டன் அமெரிக்கா வெல்கம்ஸ் யூ லிட்டில் ஏன்ஜல்" என்றப்படி, அப்பொழுது தான் இப்பூவுலகிற்கு வந்திருந்த சிசுவை, தன் கையில் ஏந்தி, அந்த சிசுவின் ஸ்பரிசத்தை தொட்டு அனுபவித்துக்கொண்டு இருந்தான்.


எத்தனை ஆயிரம் குழந்தைகளை, பிறந்ததும் முதன் முதலில் கையில் ஏந்தி இருந்தாலும், ஒவ்வொரு முறையும் அந்த ஸ்பரிசத்தில் தன்னை முதல் முறை போலவே துளைத்துக்கொண்டே தான் இருக்கின்றான். எத்தனை நிறைவான வாழ்க்கை.


மிதிலா, குழந்தை மகிழ்மதியை ஒரு கையில் ஏந்திக்கொண்டு, மறுக்கையில் சிறு டிராலி ஒன்றை இழுத்துக்கொண்டு, கால் டாக்ஸி இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தாள்.


அமெரிக்காவின், சுத்தமான ஜில்லென்ற காற்று, மிதிலாவின் முகத்தை தழுவியது..


புது ஊர், புது மனிதர்கள், முற்றிலும் புதிய கலாச்சாரம் மற்றும் புது மொழி என்று அனைத்தையும் உள்வாங்கிக்கொண்டு பார்த்தாள்.


இனி யாருக்கும் பயந்து ஓட வேண்டாம் என்ற எண்ணமே, அவளுக்கு சற்று 'அப்பாடா' என்று இருந்தது.


கால் டேக்சிக்கு புக் செய்தவள் வரும் வரை காத்து இருந்தாள்.


சிறிது நேரத்திலேயே அமெரிக்க குளிர்காற்று அவளை தடத்தடக்க செய்தது. 


அவள் அணிந்திருந்த, திருச்சியில் ஹரி வாங்கிக் கொடுத்திருந்த, மெல்லிய மஞ்சள் நிற கவுன், கொஞ்சமும் குளிரை கட்டுப்படுத்தவில்லை.


குழந்தைக்கு எப்பொழுதும் மேலே துண்டை சுற்றி வைத்திருப்தால், குழந்தைக்கு ஒன்றும் தெரியவில்லை.


மிதிலாவின் முகத்தையே கண் இமைக்காது மகிழ்மதி பார்த்துக்கொண்டு இருக்க…


"மகிக்குட்டி.. அம்மாவ என்ன இப்படி பார்க்கறீங்க", என்று அப்படியே அவளை ஆதரவாக அணைத்துக்கொண்டாள்.


குழந்தையின் சூட்டில் அவளும், அவள் மார்பின் சூட்டில் குழந்தையும் இதம் காண..


இவர்களுக்கான டாக்ஸி வந்து நின்றது.


அதில் லக்கேஜ்களை ஏற்றிவிட்டு, குழந்தையை கார் சீட்டில் பொறுமையாக உட்காரவைத்து, மிதிலா கவனமாக சீட் பெல்ட்டை போட்டு விட ஆரம்பித்தாள்.


குழந்தைக்கான பிரத்தியோகமான கார் சீட், விபத்து ஏற்பட்டாலும் குழந்தைகளை அதிக பாதிப்பு இல்லாமல் காப்பாற்றும், 14 வயது வரை குழந்தைகள் பின் சீட்டில் தான், அதுவும் பிள்ளைகளுக்கு உண்டான தனி சீட்டில் தான் பயணிக்க வேண்டும் என்று பல விதிமுறைகள் அமெரிக்காவில் உள்ளது, மீறினால் குறைந்தபட்சம் 30 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.


குழந்தையை ஒழுங்காக உட்கார வைத்து முடித்த மிதிலா, குழந்தையின் அருகிலேயே அமர்ந்துக்கொண்டு, அவள் செல்ல வேண்டிய முகவரியை டிரைவரிடம் சொல்ல.. கார் அவள் போக வேண்டிய இடத்தை நோக்கி ஓடத்தொடங்கியது.


அதே நேரம் அங்கு, மருத்துவமனையில் இருந்து, பணிமுடிந்து கிளம்பிய ஹரி, வீடு நோக்கி காரில் சென்று கொண்டு இருந்தான்.


ஏனோ அவன் மனம் இன்று மிகவும் புத்துணர்ச்சியாக சந்தோஷமாக இருந்தது,


ஹரி காரில் ஓடிய பாடலுடன் சேர்ந்து ஹம் செய்துக்கொண்டு இருந்தான்.

 

கிளம்பும் முன்பே அன்னப்பூரணிக்கு கால் செய்து இருந்தவன், "சீக்கிரம் ரெடியாகுங்க மாம், இன்னைக்கு ஈவ்னிங் கோவிலுக்கு போயிட்டு, நைட் டின்னர் வெளியில் முடிச்சுட்டு, அப்படியே பீச்சில் மூன் வாக் போயிட்டு வரலாம், ஐயம் ஃபீலிங் சோ ஹேப்பி நவ்.. கிளம்ப போறேன்" என்றிருக்க,


ஹரியின் உற்சாகமான குரலை கேட்ட அன்னபூரணியும், மகிழ்ச்சியுடன், "சரி ஹரி.. ரெடியா இருக்கேன்..", என்று இருந்தார்.


தன்னவளின் வருகையை அவன் உள் உணர்வுகள் உணர்ந்து கொண்டனவோ என்னவோ..!!


மிதிலா பயணித்த கார், ஒரு தனி வீட்டிற்கு முன்பு சென்று நின்றது.


தன் கையில் இருந்த ஃபோனில், கொடுத்திருந்த அட்ரஸில் இருந்த வீட்டு எண்ணும், இதுவும் ஒன்றா என்று சரிபார்த்துவிட்டு, ஏர்போட்டில் மணி எக்ஸ்சேஞ்சில் மாற்றிய டாலரை எடுத்து, டிரைவரிடம் கொடுத்துவிட்டு, இறங்கியவள், முதலில் பெட்டியை வெளியே எடுத்து வைத்துவிட்டு, குழந்தையை கார்சீட்டிலிருந்து வெளியே தூக்க முற்பட,


அதற்குள் வீட்டினுள் இருந்து, வெளியே வந்துவிட்டிருந்த ஆதித்யா விரைந்து வந்து, மிதிலாவை இன்முகத்துடன் வரவேற்று, பெட்டிகளை வீட்டின் புறம் எடுத்து வைக்க..


மிதிலாவோ, திக்கு தெரியாத காட்டிற்குள் இருப்பது போல், அனாதரவான தோற்றத்துடன், தோளில் குழந்தையை தூக்கி சுமந்தப்படி, ஆதித்யாவை பார்த்து புன்னகைத்தாள்.


அவளுடைய தோற்றம் மனதை பாதித்தாலும், ஆதித்யன் எதுவும் அவளிடம் காட்டிக் கொள்ளவில்லை.


அதற்குள் ஆதித்யன் மனைவி கயல்விழியும் வெளியில் வந்து, மிதிலாவை அன்புடன் அழைத்துவிட்டு, குழந்தையை வாங்கிக் கொண்டாள்.


மிதிலாவை வீட்டிற்குள் அழைத்துச் சென்றவர்கள்,

அங்கிருந்த கெஸ்ட் ரூமை காண்பித்து, அவளை ஃபிரெஷ் செய்துக்கொண்டு வர சொல்லி அனுப்பினர்.


மிதிலா, பத்து நிமிடத்திலேயே குளித்து முடித்து, குளிருக்கு ஏற்ற போல் ஜீன்ஸ் அணிந்து கொண்டு, விரைந்து ஹாலிற்கு வந்தாள்.


ஹாலில் குழந்தை, ஆதித்யனின் தோளின் மீது சுகமாக தூங்கிக்கொண்டு இருந்தது.


மூன்று மாத குழந்தை என்பதால், பெரும்பாலும் அவளுக்கு நாள் தூக்கத்தில் தான் கழியும்.


மிதிலா வந்ததும், கயல்விழி அவளை டைனிங் டேபிளிற்கு அழைத்துச் சென்று, காலை உணவை சூடாக பரிமாறி, உடன் காஃபி கப்பையும் வைக்க..


மிதிலாவோ, புதிய சூழல், புதிய மனிதர்கள், உடன் பயணிக்கும் ஆயிரம் மனப்போராட்டம் என்று தத்தளித்தவள், எப்பொழுது வேண்டுமானாலும், உடைந்து கதற தயாராக இருக்கும், தன் மனதை அடக்கிக்கொண்டு, அவர்கள் மனம் நோகாதப்படி உண்டாள்.


இடையில் குழந்தை எழுந்துவிட, கயல் மிதிலாவிடம் முறைகள் கேட்டு பால் கலக்கி கொடுத்தாள்.


ஆதித்யா மிதிலாவிடம், "நீ கயல் கூட பேசிட்டு இருமா, இல்ல ரெஸ்ட் எடு, நான் குழந்தையை வெளியில் தோட்டத்தில் கொஞ்ச நேரம் வச்சு இருக்கேன்", என்றவன், கயலிடம் கண்களாலே "பார்த்துக்கோ" என்று சமிக்ஞை செய்துவிட்டு, குழந்தையுடன் வெளியில் சென்றுவிட்டான்.


ஆதித்யா சென்றதும், மிதிலா கயலிடம், "அக்கா எனக்கு தங்க வீடு பார்த்துட்டீங்களா, எப்ப நாம அங்க போறோம்," என்றாள் தயக்கத்துடன்.


கயல், "ஏன்டா அவசரப்படுற, ஒரு ஒருவாரம் இங்கே இருந்து ரெஸ்ட் எடுத்துட்டு, எல்லா இடமும் பழகினதும் அங்க போங்கடா, குழந்தைக்கு ஏதாவது ஆச்சுன்னா என்ன பண்ணுவ..", என்றவள்,


மேலும் தொடர்ந்து, "தேவையான பொருள் எல்லாமும் வேற வாங்கனும், 

நீ வேலைக்கு போற இடமும் உனக்கு பழகணும்,

பஸ் ரூட், பாப்பாக்கு 'டே கேர்' ன்னு எவ்ளோ இருக்கு, கொஞ்சம் பொறுமையாகவே எல்லாம் அமைஞ்சதும் போலாம் டா", என்றுக்கூற.


இவ்வளவு உள்ளதா என்ற எண்ணத்துடன் மிதிலா, "சரிக்கா", என்று தலையாட்ட.


சிறிது நேரத்தில் ஆதி குழந்தையை உள்ளே தூக்கி வந்து விட்டான்,


குழந்தைக்கு புதிய குளிர்க்காற்று ஏதேனும் செய்துவிட போகின்றது என்று.


மிதிலாவிடம் குழந்தையை கொடுத்தவன், "நாளைக்கு எல்லாரும் ஷாப்பிங் போகலாம், உனக்கும் பாப்பாக்கும், குளிருக்கு ஏத்த Winter Clothes வாங்கிட்டு வரலாம்மா", என்றான்.


மிதிலா "சரிங்கண்ணா", என்று மகிழ்மதியை வாங்கிக்கொண்டாள்.


கயல்விழி, "கொஞ்ச நேரம் தூங்கி எழுமா.. பேபியையும் பெட்ல படுக்க வைக்கலாம்.. ரொம்ப நேரம் கையிலேயே வச்சு இருந்தா உடம்பு வலிக்கும்னு அம்மா சொல்லுவாங்க", என்றுக்கூற..


உடனே அறைக்குள் வந்த மதிலா, மகிழ்மதியை படுக்கையில் படுக்க வைத்து.. அவளுக்கு தெரிந்த வகையில், லேசாக குழந்தையின் கை கால்களை நீவிவிட.. குழந்தை அவளை பார்த்து சோம்பளாக ஒரு புன்னகையை அள்ளிவிசினாள்.


மிதிலா, "மகிக்குட்டிக்கு, அம்மா மசாஜ் பண்ணது பிடிச்சு இருக்கா..", என்றப்படியே, குழந்தையின் உடலை துடைத்துவிட்டு, உடைமாற்றிவிட்டவள், அவளும் அருகில் படுத்துக்கொண்டாள்.


சிறிது நேரத்தில் குழந்தையுடன் சேர்ந்து, அவளும் பயண அலுப்பில் அசந்து தூங்கிவிட்டாள்.


கயல் வந்து பார்த்துவிட்டு, இருவருக்கும் சேர்த்த போல், பிளாங்கெட் ஒன்றை எடுத்து, போர்த்தி விட்டு ரூம் கதவை அடைத்து விட்டு, சென்றாள்.


ஆதித்யா மற்றும் கயல்விழி தம்பதியருக்கு திருமணமாகி 3 வருடம் ஆகின்றது. இருவரும் ஐடி வேலையில் அமெரிக்காவில் உள்ளனர். அளவான அமைதியான குடும்பம். 


ஹாலில் ஆதித்யன் இந்தியாவிற்கு பேசிக்கொண்டு இருந்தான்,


"இரண்டு பேரும் சேஃப் டா மிதுன்", என்று இவன் கூற.


அந்தப்புறம் இருந்த மிதுன், "இன்னைக்கு தான் எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கு டா.. இந்த மூனு மாசமும் அவங்களை பாதுகாத்து தேத்தி, எல்லாம் ரெடி பண்றதுக்குள்ளே போதும் போதும்னு ஆகிடுச்சு..", என்றான்.


ஆதித்யா, "ஆமாம் டா, என்ன சொல்றதுனே தெரியலைடா, யாருக்கும் இந்த மாதிரியான நிலை வரக்கூடாது, இனியாச்சும் எல்லாம் ஒழுங்கா நடக்கனும், நான் பார்த்துக்கறேன் பயம் வேண்டாம், யாரும் கண்டுபிடிக்க முடியாது", என்றான்.


மிதுன், "அங்கேயே யாரையும் பார்த்து அந்த பொண்ணுக்கு கல்யாணம் செய்து வச்சுடனும்.. இப்படியே விட்டுட முடியாது இல்ல", என்றான்.


ஆதித்யன், " ஹ்ம்ம் டா, கொஞ்சம் வருஷம் போகட்டும், ரொம்பவும் சின்ன பொண்ணா இருக்கா..", என்றவன் மேலும், "ஆதிகேசவன் பத்தி ஏதாவது அப்டேட் இருக்கா டா" என்றுக்கேட்க.


அப்படியே அவர்கள் இருவருக்கும் இடையில் பேச்சு நீண்டது.


அறையில் மூன்று மணி நேரத்திற்கு மேல், நல்ல தூக்கத்தில் இருந்த மிதிலா, திடீரென்று கத்த ஆரம்பிக்க, அவளின் சத்தத்தில் குழந்தையும் தூக்கம் கலைந்து அழ,


ஆதித்யனும், கயலும் ஹாலில் இருந்து பதறி அறைக்குள் ஓடினர்.


இருவருமே அவர்களின் கண்ணுக்கு இரண்டு குழந்தைகளாக தான் தெரிந்தனர்.


ஆதித்யன் தன் கரத்தில், அழும் குழந்தையை ஏந்தியப்படி வெளியே செல்ல,


கயல், மிதிலாவை பிடித்து உலுக்கி, எழ வைத்தாள்.


அவளோ உடல் முழுக்க வெட வெடக்க அரண்டு போயி எழுந்து அமர்ந்தவள், "ஹையோ என் குழந்தை எங்க..", என்று கேட்டு கத்தி அழ,


கயலுக்கு, அவளை தெளிய வைத்து சமாதானம் செய்யவே போதும் போதும் என்று ஆகி போனது.


மிதிலா முகம் கழுவி விட்டு வெளியே வர, ஆதித்யன் மகிழ்மதியை தன் மடியில் போட்டு கொஞ்சி கொண்டு இருந்தான்.


குழந்தையும், கலகலவென்று சிரித்துக்கொண்டு இருந்தது.


புசுபுசுவென மிருதுவாக, பெரிய கண்களை வைத்து அழகாக, வாய் கொள்ளா சிரிப்புடன், இருக்கும் குழந்தையின் பொக்கை வாயை பார்க்கும்போது, யாருக்கு தான் பிடிக்காது.


அதுவும் தன் உயிர் நண்பனின் ஜாடையில் வேறு இருப்பவளின் மீது பேரன்பு தான் ஆதித்யனுக்கு தோன்றியது.


நீண்ட நாட்களுக்கு பிறகு, சிறிது தூக்கம், வயிறு நிறைய சாப்பாடு, உடலுக்கு ஓய்வு, மனதுக்கு சிறிது இனிமை, பயம் இல்லா இடம், என்று மிதிலாவும் தன் இறுக்கத்தை சிறிது தளர்த்தினாள்.


அங்கு அன்று இரவு, ஹரி அன்னப்பூரணியுடன், ஹோட்டலில் இரவு உணவு உண்ணும் பொழுது அவனுக்கு கொடுத்த, lucky fortune cookie- யில், "gonna to meet your life partner soon" என்று வந்து இருந்தது.


எதிர்காலத்தில் இது நடக்க போகின்றது என்று, ஏதேனும் ஒரு வாசகத்தை சிறு பேப்பிர் துண்டில் பிரிண்ட் செய்து, அதை பிஸ்கெட்டினுள் வைத்து இருப்பார்கள். பிஸ்கெட்டை இரண்டாக உடைக்கும் பொழுது அப்பேப்பர் வெளிவரும்.


அதில் தான் ஹரிக்கு, விரைவில் நீ உன் வாழ்க்கை துணையை சந்திக்க போகின்றாய் என்று வந்து இருந்தது.


அதை பார்த்ததும் ஹரிக்குள் ஏதோ ஒரு உணர்வு ஆழ் மனதில் தோன்றியது.


இதுவரை இந்த மாதிரியான வாசகங்கள் அவனுக்கு வந்ததே இல்லை, இதுவே முதல் முறை.


வீட்டிற்கு வந்தவன், அந்த பேப்பரை பத்திரமாக, ட்ரி ஹவுஸில் இருந்த, சிறிய வின்டேஜ் டப்பாவினுள் போட்டு வைத்தான்.


மறுநாள், ஆதித்தியா மற்றும் கயல்விழியுடன்,

குழந்தையை தூக்கிக் கொண்டு மிதிலா ஷாப்பிங் சென்றாள்.


குளிருக்கு தகுந்தாற்போல் உடைகள், குழந்தைக்கான பிரத்தியோகமான பொருட்கள், வீட்டிற்கு தேவையான பொருட்கள் என்று என்னென்ன வேண்டுமோ, அனைத்தையும் வாங்கினர்.


மீதியை ஆன்லைனில் வாங்கிக்கொள்ளலாம், இரண்டொரு நாளில் டெலிவரி செய்துவிடுவார்கள், என்றான் ஆதித்யன். 


மறுநாள் மிதிலா, பணிக்கு செல்ல வேண்டிய கடைக்கு சென்று பேசிவிட்டு, அக்ரிமென்டில் கையொப்பம் இட்டுவிட்டு, வந்தனர்.


அடுத்து மிதிலா தங்கப்போகும் ஸ்டுடியோ டைப் வீட்டை(studio type apartment) சென்று பார்த்துவிட்டு, அங்கும் முன் பணத்தை கட்டி, லீஸ்ஸில் கையெழுத்து போட்டனர்.


ஒருவர் தங்கும் வகையிலான ஒரு ரூம் மட்டுமே, அட்டாச்டு பாத்ரூம் உடன் இருக்கும், மற்றும் சின்ன கிச்சன் ஒரு மூலையில் செட் செய்து இருப்பர், அங்கேயே ஸ்டவ், ஃப்ரிட்ஜ், டிஸ்வாஷர், ஓவன், மைக்ரோ ஓவன், என்று அனைத்தும் இருக்கும்,


300 ஸ்கொயர் ஃபீட்டிலேயே, இவ்வளவும் இருக்கும், தனியாக பெட்ரூம் இல்லாததால் வாடகையும் கம்மி.


ஒருவர் மட்டுமே தங்க முடியும்.


அதற்கு அடுத்த நாள் சென்று, வீட்டின் பக்கத்திலேயே குழந்தைக்கான, டேக் கேர்களையும் பார்த்தனர், இரண்டு மூன்று இடங்களில் விசாரித்து விட்டு, ஒன்றை தேர்ந்தெடுத்தனர்,


பஸ் ரூட் அனைத்தையும் பார்த்துக் கொண்டாள்.


அனைத்தும் திருப்தியாக முடிந்தது.


ஆதித்யா, பணத்தை கட்ட வந்தபோது மறுத்துவிட்ட, மிதிலா, "இருக்கட்டும்ணா காசு தீர்ந்து போச்சுனா வாங்கிக்கறேன்", என்று, அவளே அனைத்திற்கும் பணத்தை கட்டிவிட்டாள்.


விஷ்ணு துளசியின் வளர்ப்பு, அவளை யாரிடமிருந்தும் எதையும் இலவசமாக ஏற்றுக்கொள்ள விடவில்லை.


வீட்டிற்கு அட்வான்ஸ், டே கேருக்கு அட்வான்ஸ், பொருட்கள் வாங்கிய செலவு, விமான பயணச்சீட்டு, போலி பாஸ்போர்ட் மற்றும் சர்டிஃபிகேட் என்று பல வகையில் மிதிலாவின் கையிருப்பு குறைந்து இருந்தது.


எனவே விரைவில் வேலைக்கு செல்ல வேண்டும் என்று முடிவு எடுத்து இருந்தாள். 


அதைத்தொடர்ந்து, அந்த வாரக்கடைசியில், வாங்கிய பொருட்கள் அனைத்தையும், மிதிலாவிற்கு பார்த்திருந்த வீட்டில் வைத்துவிட்டு, மிதிலாவையும் புதிய வீட்டில் குடி அமர்த்திவிட்டு, ஆதித்யா மற்றும் கயல் தம்பதியினர் சென்றனர்.


இனி அவள் தான் அவளையும், மகிழ்மதியையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.


தற்சமயம் மிதிலாவிற்கு ஒரு வருடத்திற்கு மட்டுமே, அமெரிக்காவில் வேலைச்செய்ய வொர்க்கிங் விசா உள்ளது.


அதற்குள் அவள் ஒரு நிரந்தர வேலையில் சேர்ந்து, விசாவை எக்ஸ்டென்ஷன் செய்ய வேண்டும். இல்லை தற்சமயம் இருக்கும் இடத்தில், வேலையை நிரந்தரம் ஆக்க வேண்டும்.


மறுநாளில் இருந்து வேலைக்கு செல்ல தொடங்கினாள்.


மூன்று மாத குழந்தையை விட்டுவிட்டு செல்ல, மிதிலாவிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. 


இருந்தும் பொறுத்துக்கொண்டாள். வேறுவழி, வயிறு என்று உள்ளதே, தனக்கு மட்டுமா குழந்தைக்காகவும் பணம் ஈட்ட வேண்டுமே.


புதிய பணி மற்றும் போக்குவரத்து, வீட்டு வேலை, குழந்தை பராமரிப்பு, கடை வேலை என்று மிதிலாவை இழுத்துக்கொண்டது,


கவலைப்பட கூட அவளுக்கு நேரம் இல்லை தற்பொழுது.


நாள் முழுக்க உழைத்து களைத்து இரவில் படுக்கையில் விழுபவள், மகிழ்மதியை அப்படியே வாரி அணைத்துக்கொள்வாள் தனக்குள். மிதிலாவிற்கு அவ்வளவு இதமாக இருக்கும், அவளின் வலிகள் அனைத்திற்கும் அச்சிறு பஞ்சு பொதியே மருந்து.


இப்படியே நாட்கள் மாதங்களாக வேக வேகமாக உருண்டோட,


மிதிலாவின் நாட்கள் சீராக சென்றது.


வார இறுதி நாட்களில், ஆதித்யன் வந்து, அவன் காரில் இவர்களை அவன் வீட்டிற்கு அழைத்து செல்வான்.


கோவில், ஷாப்பிங் போன்ற இடத்திற்கும் ஒன்றாக செல்வர்.


வேலைக்கு செல்லும் இடத்தில், யாரும் மிதிலாவை, தோண்டித் துருவவில்லை, 


நம்மூர் போல் இல்லாமல், யாரும் யாருடைய வாழ்க்கையிலும், தேவை இல்லாமல் நுழையாமல், அவரவர் வேலையை அவரவர் பார்த்தனர்.


மிதிலாவை " சிங்கிள் மதர்" ஆக ஏற்றுக்கொண்டனர்.


இருந்த ஒரே கஷ்டம், மிதிலா வேலைக்கு செல்லும் கடைக்கு, பேருந்தில் சென்று திரும்ப நீண்ட நேரம் பிடித்தது.

 

இதில் காலை மாலை வேறு, டே-கேர் சென்று குழந்தையை விட்டுவிட்டு தூக்கிக்கொண்டு வர வேண்டும்.


நம்மூர் போல் ஆங்காங்கே, அங்கங்கு கடைகளும் இருக்காது, எல்லா இடத்திற்கும் பஸ்சும் போகாது, என்பதால், அவளுக்கு சிரமமாக இருந்தது.


அங்கு பெரும்பாலும் அனைவரும் கார் வைத்து இருப்பதால், மற்றவர்களுக்கு அது சிரமமாக தெரியாது.


மிதிலாவிடம் கார் இல்லாதது பெரும் குறையாக இருந்தது.


கார் டாக்ஸி புக் செய்தால் வேறு, குறைந்தது ஒரு முறைக்கே 5000ரூபாய் ஆகும், எனவே நடந்தே சென்று வந்தாள்.


நாள் முழுக்க நின்றுக்கொண்டும்.. நடந்துக்கொண்டும் இருப்பதில், மொத்தமாக சோர்ந்து, முன்னைவிட அதிகமாக இளைத்து போனாள்.


அதைப் பார்த்த ஆதித்யன் உடனே, மிதிலாவை பகுதிநேர டிரைவிங் ஸ்கூலில் சேர்த்து விட்டு விட்டான்.


அவள் முன்பே கொஞ்சம் காரோட்ட மித்ராவிடம் கற்றுக் கொண்டதால், எளிதாக பழகிக் கொண்டாள்.


டிரைவிங் லைசென்ஸ் வாங்கியவுடன், ஒரு செகனண்ட் காரை பார்த்து, லோன் போட்டு ஆதித்யா வாங்கிக் கொடுத்தான்.


இது எக்ஸ்ட்ரா செலவு என்றாலும், மிதிலாவிற்கு கார் மிகவும் உபயோகமானதாக இருந்தது. பெட்ரோல் செலவும் அங்கு கம்மி என்பதால் சமாளித்துக்கொண்டாள்.


இப்படியே மேலும் சில மாதங்கள் கடந்துவிட, 


திடீரென்று ஒரு நாள் மகிழ்மதிக்கு வாந்தி மற்றும் ஜுரம் வந்துவிட்டது.


பிறந்ததில் இருந்து அவளுக்கு சளிக்கூட பிடித்தது இல்லை.


திடீரென்று ஒரு நாள் இரவு தூங்கிக்கொண்டு இருந்தவள் எழுந்து, தொடர்ந்து வாந்தியெடுக்க ஆரம்பித்துவிட, மிதிலா பயந்துப்போனாள்.


எதையும் அவளால் யோசிக்கவும் முடியவில்லை. அதற்கான பக்குவமும் அவளிடம் இல்லாது இருக்க..


குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடி, காரை எடுத்தவள், நேராக

எமர்ஜென்சி கேர் சென்று குழந்தையை சேர்ந்துவிட்டாள்.


அங்கு குழந்தைக்கு ஜுரத்திற்கு மருந்து கொடுத்து, வாந்திக்கு குளுக்கோஸ் ஏற்ற ஆரம்பித்தனர்.


அதன் பிறகு தான் மிதிலா ஞாபகம் வந்தவளாக ஆதித்யனுக்கு அழைத்து கூறினாள்.


ஆதித்யனுமும், கயலும் அந்நள்ளிரவே ஓடிவர, அவர்களை பார்த்த மிதிலா, ஒரே அழுகை, மகிழ்மதியை நினைத்து.


ஸ்கூலில் ஏதாவது வாயில் வைத்து இருப்பாள் அல்லது செரிக்காமல் இருந்து இருக்கும் என்று அவளை சமாதானம் செய்தனர்.


ஒருநாள் முழுக்க மகிழ்மதியை மருத்துவமனையில் வைத்திருந்து, அனைத்தும் சரியான பிறகு வீடு திரும்பினர்.


ஒரு நாள் உடல்நிலை சரியில்லாமல் போனதுக்கே குழந்தை உடல் நலிந்து சோர்ந்து போனாள். அவளை விட அதிகமாக மிதிலா.


அன்று ஆதித்யனும், கயலும் மிதிலா உடனே, அவளுக்கு துணையாக தங்கிவிட்டனர், 


மறுநாள் தான், ஆஃபீஸ் வேலை இருப்பதால் கிளம்பினர். 


கான்ட்ராக்டில் இருப்பதால் அவர்களால் திடீரென்று விடுமுறை கூற முடியாத நிலை.


அந்த வாரம் முழுவதும் மிதிலா, பணிக்கு செல்லவில்லை, குழந்தையை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அவள் உடனே இருந்தவள், மறு வாரத்தில் இருந்து தான் செல்லத் தொடங்கினாள்..


குழந்தையும் பழையப்படி உடல் நலம் தேறி, மீண்டுவிட்டு இருந்தாள்.


நாட்கள் மீண்டும் பழையப்படி கழிய, 


மிதிலாவிற்கு பிரச்சனைகள் வேறு வழியில் வந்து சேர்ந்தது.


மகிழ்மதியை அன்று ஒரு நாள் முழுக்க, எமர்ஜென்சி கேரில் வைத்திருந்தற்கான பில்லாக, ஒரு பெரும் தொகை வந்து சேர்ந்து இருந்தது.


ஏற்கனமே, இவள் ஒரு வாரம் பணிக்கு செல்லாததால் அவ்வாரதிற்கு உண்டான சம்பளம் அவளுக்கு அம்மாதம் கொடுக்கவில்லை.


டே-கேர் ஃபீஸ்,

வீட்டு வாடகை, கார் கடன், சாப்பாடு, குழந்தைக்கான டயாப்பர் செலவு, பால்பவுடர் செலவு என்று ஏற்கனமே அவள் சேமிப்புப்பணம் முக்கால் வாசிக்கு மேல் கரைந்திருக்க, திகைத்துப்போனாள்.


"என்ன இது, இந்த ஊர்ல ஒருநாள் ஹாஸ்பிடல்ல வச்சு இருந்ததுக்கு போயிட்டு ஒன்றரை லட்சம் கேட்கறாங்க.. தப்பா எதுவும் கணக்கு செய்துட்டாங்களா", என்று குழம்பியவள், இன்ஷுரன்ஸூக்கு ஃபோன் போட்டு விசாரிக்க.. அவர்களோ இங்கு அனைத்து வித மருத்துவமும் விலை அதிகம் தான். எமர்ஜென்சி கேர் செலவுகள் ஒரு கட்டத்திற்கு மேல் சென்றால் தான் நாங்கள் கவர் செய்வோம்.. என்றனர்.


குழந்தைக்கு ஹாஸ்பிடல் பில் மற்றும் அந்த வாரத்திற்கான பிடிக்கப்பட்ட சம்பளம் என்று கிட்டத்தட்ட அதுவே, இந்திய மதிப்பில் மூன்று லட்சம்.


மிதிலா அவள் வேலை செய்யும் கடையிலேயே விசாரித்து பார்த்தாள்.


அங்கேயே சம்பள பணத்தின் மீது லோன் தருவதாக கூற, ஹப்பாடா என்று பெற்றுக்கொண்டாள்.


ஆதித்யாவிடம் சொல்லி இருந்தால், கண்டிப்பாக அவன் வந்து கட்டி இருப்பான்.


மிதிலா தான் கடைசியாக தேவையென்றால் கேட்டுக் கொள்ளலாம் என்று நினைத்து அவனிடம் சொல்லவில்லை.


அவன் பணம் இருக்கின்றதா என்று விசாரிக்கும் சமயத்திலும், நிறைய இருக்கின்றது என்று பொய் கூறி விடுவாள்.


ஆனால் இப்படியே போனால், அடுத்து எதுவும் திடீர் செலவு வந்தால் பணத்திற்கு என்ன செய்வது, என்று மிதிலாவிற்கு மனதை அரிக்க தொடங்கியது,


ஏற்கனவே கையில் ஒன்றும் இல்லை.


இவளின் முகம், ஒரு வாரமாக வாட்டமாக இருப்பதை கவனித்து, உடன் பணிபுரியும் ஒரு மெக்ஸிக்கோவை சேர்ந்த பெண்மணி விசாரித்தார். 


மிதிலாவும் அவள் மனதில் இருந்ததை பகிர்ந்துகொண்டாள்.


அவரும் இவளை போலவே கணவனின்றி தனியாக குழந்தையை வைத்துக்கொண்டு இருப்பவர்.


மிதிலாவின் பிரச்சனையை உடனே புரிந்துக்கொண்டார்.


அவர் மிதிலாவிடம், நான் வார இறுதி நாட்களில், ஒரு சில வீட்டிற்கு, வீட்டு வேலை செய்ய செல்வேன்,


ஒருவீட்டிற்கு, மூன்று மணி நேரம் தான் பிடிக்கும் வேலைகளை முடிக்க.. அதற்கே ஆனால் $200 (Rs.15,000) வரை தருவார்கள். வேண்டும் என்றால் நீயும் உடன் வா, சேர்த்துவிடுகின்றேன் என்றார்.


மிதிலா உடனே, குழந்தையை வார இறுதியில், ஒரு நாள் மட்டும் டேக்கேரில் விட்டுவிட்டு, பணிக்கு அப்பெண்ணுடன் வருவதாக ஒற்றுக்கொண்டாள்.


விஷ்ணுதுளசியின் செல்ல மகளாக, பிறந்ததிலிருந்து வளம் வந்தவள், 


நன்றாகப் படித்து டாக்டராக வேண்டும், என்ற கனவுடன் இருந்தவள், 


இன்று அடுத்த வேலைக்கு பணத்திற்கு என்ன செய்வது என்று பயந்து, வீட்டு வேலை செய்ய போகின்றாள்.


காலம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும், ஒவ்வொரு கட்டத்திலும், வெவ்வேறாக, அதனுடைய ஆட்டத்தை தொடங்கி, காய்களை நகர்த்துவது போல் மனிதர்களை நகர்த்தி என்னென்னவோ செய்கிறது.


இதோ அப்பெண்ணுடன், மிதிலா வார இறுதி நாட்களில், வீட்டு வேலை செல்ல தொடங்கி இரண்டு மாதம் ஆகிவிட்டது.


இப்பொழுது வேலை செய்யும் இடத்தில், வாங்கிய கடன்களையும், வந்த பணத்தில் அடைத்து விட்டு இருந்தாள். 


வாழ்க்கையையும் ஓரளவு புரிந்து கொண்டிருந்தாள்.


அதன்படி பணத்தை தேவைக்கு ஏற்றப்படி பார்த்துப்பார்த்து செலவு செய்து, மீதியை அப்படியே சேர்த்து வைத்துக்கொண்டாள்.


குழந்தையும் நாளுக்கு நாள் வளர்த்துக்கொண்டே இருந்தது.. குழந்தையின் ஒவ்வொரு மாற்றத்தையும் மிதிலா பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தாள்.


அதுவும் ஏழு மாதம் கடந்த நிலையில் ஒருநாள், அவளே எழுந்து உட்கார ஆரம்பித்துவிட..


மிதிலாவிற்கு மகிழ்ச்சி தாளவில்லை..


தினமும் இரவு நேரத்தில், மடியில் அமர வைத்து, ஆயிரம் கதை குழந்தைக்கு சொல்லி, பருப்பு சாதம் அல்லது இட்லியை குழைத்து ஊட்டிவாடுவாள்.


அவளின் இன்றைய வாழ்வாதாரமே அக்குழந்தை தானே.


முன்பெல்லாம் ஒருநாளைக்கு நூறு முறை அழுபவள், இப்பொழுதெல்லாம் வாரம் ஒருமுறை தான் அழுவது. 


காலம் அவளின் காயத்தை ஆற்றி, வடுவாக மாற்றிவிட்டு இருந்தது.


நிதர்சனம் பழையதை பின் தள்ளிவிட்டு இருந்தது.


இவள் இங்கு அப்படி இருக்க, அங்கு இதுவரை சீராக எந்த பிரச்சனையும் இல்லாது போயிக்கொண்டிருந்த, ஹரியின் வாழ்க்கையில் பிரச்சனைகள் வர ஆரம்பித்து இருந்தது.


அன்னபூரணிக்கு வயது ஐம்பத்தி ஐந்தை கடந்து இருக்க.. அவருக்கு கர்ப்பப்பையில் சில கோளாறுகள் வந்திருந்தது.


ஹரியே மகப்பேறு மருத்துவன் தான் என்பதால், அவரை அதிக அக்கறையுடன் மருத்துவனாக பார்த்துக்கொண்டான்.


அன்னபூரணியால், முன்பு போல் வேலைகள் எதுவும் செய்ய முடிவதில்லை, எப்பொழுதும் உடல் அசதி, ரத்தசோகை என்று அவரை வாட்டியது.


என்னதான் ஹரி அவரை பார்த்துக் கொண்டாலும், அவர் மனமோ வேறொன்றை எதிர்ப்பார்த்தது.


ஹரியின் திருமணம் தான் அது.


வயது 34-யை கடந்த நிலையிலும், அவன் திருமணத்திற்கு ஒற்றுக் கொள்ளாதது, இன்னும் அவரை உரு குலைத்தது.


ஹரியை பார்ப்பவர்கள் நிச்சயம் அவனுக்கு, வயது 28 வயதிற்குள் தான் இருக்கும் என்று சத்தியம் செய்வார்கள்.


இருந்தாலும் வயது ஆனது, ஆனது தானே, 


முன்பாவது ஏகப்பட்ட வரன்கள் வந்தது, அனைத்தையும் ஹரி உறுதியுடன், ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி தட்டிக் கழித்து முடித்துவிட்டு இருக்க..


இப்பொழுது அந்த அளவிற்கு வரன்கள் வருவதில்லை.


இவனுக்கு பார்த்த பெண்களுக்கு எல்லாம் திருமணம் முடிந்து, குறைந்தது இரண்டு குழந்தைகளே பிறந்து.. பள்ளிக்கு செல்லவே ஆரம்பித்துவிட்டு இருந்தனர்.


இனி எங்கு சென்று இவனுக்கு பெண் தேடுவது என்று யோசித்து யோசித்தே அன்னப்பூரணி சோர்ந்து விட்டார்.


அவன் மேல் அப்படி ஆற்றமையாக வந்தது. 

சின்ன பிள்ளை என்றால் அடித்து கூட திருத்தலாம்.


நன்றாக படித்து மருத்துவனாக இருப்பவனை, என்ன சொல்லி திருத்துவது, என்று அவருக்குப் புரியவில்லை.


வெளியிலும், மனம் விட்டு பேச, யாரும் ஆள் இல்லை.


வீட்டின் தனிமை அவரை கொன்றது.


சில நண்பர்கள் இருந்தாலும், யாரும் அரை மணி நேரம் மேல் பேசும் அளவிற்கு தற்சமயம் இல்லை.


அவர் அவர்களுக்கு, அவரவர் பேர பிள்ளைகளுடன், நேரம் செலவழிக்கவே

சரியாக இருந்தது.


சொந்தங்களிடம் பேசலாம் என்று பார்த்தாலும், அவர்கள் ஒருப்புறம் ஹரியின் திருமணத்தை குறித்து விசாரித்து பயமுறுத்தி விட.. பாவம் என்ன செய்வார் அவர்.


இவை அனைத்தும் சேர்ந்து ஒருப்புறம் அன்னபூரணியின் ஸ்ரெட்ஸ் லெவலை, அதிகப்படுத்தி ஹார்மோன்களை தாறுமாறாக ஏற்றிக்கொண்டு இருந்தது.


அதன் மூலம், ஏற்கனவே இருந்த கர்ப்பபை பிரச்சினைகள் இப்பொழுது பூதகரமாகிப்போனது.


மாத மாதம், மாதவிடாய் காலத்தில், ரத்தப் போக்கு அதிகரித்து, கர்ப்பப்பை கொஞ்சம் கொஞ்சமாக தன் பலத்தினை இழக்க தொடங்கி இருந்தது.


ஏற்கனவே அவருக்கு வயது வேறு அதிகம். இதனையெல்லாம் தாங்கும் சக்தி இல்லை.


ஹரி மருத்துவனாக அனைத்தையும் அன்னபூரணிக்கு பார்த்து பார்த்து செய்தான், ஆனால் மகனாக அவருடைய மனப் போராட்டத்தை அறிந்தும், அதை சரிசெய்ய முடியாமல் தோற்று நின்று விட்டான்.


அமெரிக்க கலாச்சாரத்தில் வளர்ந்திருந்தவன், திருமணம் செய்வதும், செய்யாமல் போவதும் அவரவர் முடிவு, அதில் மற்றவர்கள் கருத்து கூற எதுவும் இல்லை என்று இருந்து விட..


பெற்ற மனம் தான் அடித்துக்கொண்டது..


பாவம் ஹரிக்கு 2k கிட் தான் செட் ஆகும், அதுவும் அவள் வளர்ந்து, தயாராக வந்துவிட்டாள், என்பதை அறியாது போனார்.


இப்படியாக அவர் உடல் நலன் குறைந்துக் கொண்டிருக்க, அன்னபூரணிக்கு அச்சமயம் வீட்டு வேலைக்கு உதவிக்கு ஆள் தேவைப்பட்டது.


அவருடைய நண்பர்களிடமும், அவர்களின் குடியிருப்புக்கு அருகில் இருந்தவர்களிடமும், சொல்லி வைத்து இருந்தார்.


மிதிலா வார இறுதியில் பணிக்குச் செல்லும் ஒரு வட இந்திய நாட்டவர்கள் வீட்டில், இவள் தமிழ் பெண் என்பதை அறிந்து கொண்டவர்கள், அன்னபூரணியிடம் மிதிலாவை பற்றி கூறினர்.


உடனே அன்னப்பூரணி, சம்மதம் என்றால் வரச்சொல்லுங்கள் என்று விட்டார்.


மிதிலாவும் அன்னபூரணியின் வீட்டிற்கு தனியாக சென்று, அன்னபூரணியிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, அவர்கள் வீட்டில் பணி செய்ய தொடங்கினாள்.


முக்கால்வாசி வேலையை ஹரியே முடித்து வைத்துவிட்டு இருப்பான்.


மிதிலாவுக்கு சிறிது வேலை தான் இருக்கும்.


வீட்டை வேக்கம் மிஷின் மூலம் சுத்தம் செய்வது,

 

துணிகளை, வாஷிங் மெஷினில் போட்டு எடுத்து, டிரையரில் டிரை செய்து, அயர்ன் செய்து வைப்பது,


குப்பைகளை மொத்தமாக எடுத்துச்சென்று கொட்டுவது, ஜன்னல் பிரிட்ஜ் போன்றவற்றை சுத்தம் செய்வது, போன்ற வேலைகளே அவளுக்கு இருக்கும்.


அனைத்திற்கும் மெஷின் இருந்ததால், சுலபமாக கற்றுக் கொண்டு செய்தாள்.


இனி தன் வாழ்க்கை முழுவதும், இவ்வாறு தான் எங்காவது வீட்டு வேலை செய்ய வேண்டும் போல என்று நினைத்தாலே, மிதிலாவிற்கு அழுகையாக இருக்கும்.


அதுவும் ஆரம்பத்தில் மற்றவர்களின், இடத்தை மற்றும் பொருட்களை தொட்டு சுத்தம் செய்யவே அவளுக்கு அவ்வளவு அருவருப்பாக, வேதனையாக இருக்கும்.


வேறு வழியில்லை, மகிழ்மதிக்காகவும், அவர்கள் இருவரின் எதிர்கால வாழ்விற்கும் செய்து தானே ஆக வேண்டும்.


ஏற்றுக்கொண்டாள் விதியை.


அவள் உண்டு, அவள் வேலை ‌உண்டு, என்று அன்னப்பூரணி சொன்னதை விரைவாக

செய்துவிட்டு, மகிழ்மதியுடன் நேரம் செலவழிக்க என்று ஓடிவிடுவாள்.


இதுநாள் வரை மிதிலா, ஹரியை பார்த்ததில்லை.


வார இறுதியில் அவன் அவுட்டிங் சென்றுவிடுவதால் அவளால் அவனை பார்க்க முடியாது போனது.


அதேப்போல் ஹரி அவன் அறையை அவனே சுத்தம் செய்துத்கொள்வதால், ஏதேனும் ஃபோட்டோ மூலம் கூட அவள் அது அவன் வீடு என்பதை கண்டறியவில்லை.


அன்னபூரணி மகன் டாக்டர் என்று மட்டும் மிதிலாவிடம் ஒரு முறை சொல்லி இருந்தார்.


மிதிலாவும் எதுவும் அவரிடம் குடும்ப விஷயங்களை கேட்டதில்லை.


அதையெல்லாம் கேட்டு தெரிந்துக் கொள்ள வேண்டும், வீட்டு உரிமையாளர்களிடம் அவர்களுக்கு ஏற்றப்போல பேசி, கைக்குள் போட்டு வைத்து கொள்ள வேண்டும், போன்ற சிறு புத்திகள், விஷ்ணு துளசியின் மகளுக்கு சுட்டு போட்டாலும் வராதே..!!


நாட்கள் யாருக்கும் காத்திருக்காமல் ஓடியது.


குழந்தை கூட இப்பொழுது எழுந்து நிற்கவே தொடங்கிவிட்டு இருந்தாள்.


குழந்தை வளர்ப்பு மிதிலாவிற்கு ஒன்றும் அவ்வளவு சிரமமாக இல்லை, குழந்தையை நன்றாக ஸ்கூலில் பார்த்து கொண்டனர்.


வீட்டில் இருக்கும் நேரத்தில் குழந்தை முக்கால் வாசி நேரம் தூங்கிவிடுவாள்.


நைநையென்று என்று ஒருநாளும் மிதிலாவை தொல்லை செய்தது இல்லை.


இப்பொழுது அன்னபூரணி ஒருவரின் வீட்டிற்கு மட்டுமே, ‌மிதிலா தொடர்ந்து வார இறுதிகளில், வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தாள்.


ஆதித்யாவிடம் இதுவரை மிதிலா வீட்டு வேலைக்கு செல்வது குறித்து சொல்லவே இல்லை. சனிக்கிழமை வேலைக்கு செல்பவள், ஞாயிறு அவர்களை சென்று பார்த்துவிட்டு வருவாள்.


இப்பொழுது கயல்விழி வேறு மூன்று மாதம் மாசமாக இருப்பதால், அவளை போட்டு மசக்கை படுத்த, அவளின் கம்பெனி வேலைகளையும் சேர்த்து ஆதித்யன் பார்க்க வேண்டியதாகி இருந்தது. எனவே மிதிலா அவர்களை எவ்விதத்திலும் தொல்லை செய்தது இல்லை.


இவ்வாறாக நாட்கள் செல்ல, அன்று அமெரிக்காவில் அனைவருக்கும் அரசு விடுமுறை.


மிதிலா குழந்தையுடன் வீட்டில் இருக்க..

 

அன்று பார்த்து அன்னபூரணி, மிதிலாவிற்கு அழைத்து, உதவிக்கு வர முடியுமா என்று கேட்டார்.


மிதிலா, "தப்பா நினைக்காதிங்க ஆன்ட்டி இன்னைக்கு வர முடியாத சூழல்,

என் குழந்தையை விடுற டே-கேர்லயும், இன்னைக்கு லீவ் விட்டு இருக்காங்க ஆன்ட்டி, அதனால நான் கூட இருந்து பார்த்துக்கனும்.. சாரி", என்று அவள் மறுக்க.


அன்றுதான் அன்னபூரணிக்கு, மிதிலாவிற்கு திருமணம் ஆகிவிட்டது என்ற விஷயமும், அவளுக்கு குழந்தை இருப்பதும் தெரியவே வந்தது.


உடனே அன்னபூரணி, "பரவாயில்லைம்மா, நீ குழந்தையை தூக்கிக்கிட்டு கூட வாமா" என்றார் அவர்.


சரியென்ற மிதிலாவும், பணம் கூடுதலாக கிடைத்தால், மகிழ்மதிக்கு ஏதேனும் புது உடைகள், பொம்மைகள் வாங்கலாம், என்ற எண்ணத்துடன் குழந்தையை தூக்கிக்கொண்டு, அன்னபூரணியின் வீட்டிற்கு சென்றாள்.


அன்றும், ஹரி கேம்பிங் சென்றுவிட்டு இருந்ததால், மிதிலாவை அவன் பார்க்கவில்லை.


அன்னபூரணி, அவ்வாரம் தீபாவளி வருவதால், வீடு மற்றும் சாமி அறை அனைத்தையும், சுத்தம் செய்யவே மிதிலாவை அழைத்து இருந்தார்.


மிதிலா வந்தவுடன், குழந்தையை பார்த்த அன்னபூரணி, அசந்து விட்டார்.


அவ்வளவு அழகாக புசுபுசுவென்று, பளிங்குபோல் இருந்த, குழந்தையை பார்க்கவே அவ்வளவு நிறைவாக இருந்தது.


முதன் முதலில் மிதிலாவின் குடும்பம் பற்றி அன்னபூரணி அன்று அவளிடம் விசாரித்தார்.


அவள் அனைவரிடமும் சொல்லும் கதையையே அன்னப்பூரணியிடமும் கூறினாள்.


அன்னபூரணிக்கு, இவ்வளவு சின்ன வயதில் கணவனை இழந்து, பெற்றோரை இழந்து, கை குழந்தையுடன் கஷ்டப்படுகிறாளே, என்று மிகவும் கஷ்டமாகிவிட்டது.


இத்தனை நாள், அவளை பற்றி எதுவும் நாம் விசாரிக்காமல், இருந்து விட்டோமே என்று வேறு மிகவும் தன்னிரக்கமாக இருந்தது.


மிதிலாவின் மீதான பாசமும், மதிப்பும், பல மடங்கு உயர்ந்தது அதன் பிறகு.


அதிலும் வந்ததில் இருந்து வாய் கொள்ளா சிரிப்புடன், வீட்டை சுற்றி தவழும் குழந்தையை பார்க்கும் பொழுதே, அவரையே மீறி அவர் கண் கலங்கிப்போனது.


கடவுளே இவங்க இரண்டு பேருக்கும் ஒரு நல்ல வழியை காட்டுப்பா, என்று மனதார வேண்டிக் கொண்டார்.


அன்னபூரணிக்கு கால் வலி அதிகமாக இருந்ததால், 

அவரால் நீண்ட நேரம் நிற்க முடியவில்லை. 


எனவே அன்று மதிய சமையலை மிதிலா செய்ய, அன்னபூரணி குழந்தையுடன் ஹாலில் அமர்ந்து, மகிழ்வாக நேரத்தை செலவு செய்தார்.


குழந்தையின் அருகில் குழந்தையாய் மாறி அவளுக்கு விளையாட்டு காட்ட.. அவருக்கு நேரம் போனதே தெரியவில்லை.


அன்றைய வேலைகள் அனைத்தையும் முடித்துக்கொண்டு மிதிலா கிளம்ப, அன்னபூரணி எப்பொழுதும் கொடுக்கும் பணத்தை விட இரண்டு மடங்காக தர, மிதிலா "ஐயோ ஆன்ட்டி, இதெல்லாம் வேண்டாம், எனக்கு ஒருமாதிரி இருக்கு, நான் செய்யற வேலைக்கு மட்டும் குடுங்க போதும்…", என்றவள், பாதியை திரும்ப கொடுத்து விட்டு சென்று விட்டாள்.


அந்தவாரம் வரும் வெள்ளிக்கிழமை அன்று தான் தீபாவளி.


மிதிலாவிற்கு பிறந்தது முதல் உடனிருந்த உறவுகள் யாரும் இல்லாத முதல் தீபாவளி, ஆனால் மகிழ்மதி என்ற புதிய உறவுடன்.


ஆதித்தயனும் கயல்விழியும் அவளை அவர்கள் வீட்டிற்கு வரச்சொல்லி அழைக்க.. மிதிலா "இல்லைணா.. எனக்கு மனசுக்கு ஒருமாதிரி இருக்கும்.. நான் வரலை.. நீங்களும் அக்காவும் சாமி கும்பிடுங்க.. நான் பிறகு வரேன்", என்று மறுத்துவிட்டாள்.


சாஸ்திரப்படி அவளுக்கு இவ்வருடம் தீபாவளி இல்லாததால், அவர்களும் வற்புறுத்த வில்லை.


வியாழக்கிழமை அன்று மீண்டும் அவளுக்கு அழைத்த அன்னபூரணி, மிதிலாவை, சில மளிகை சாமான்களை, அவள் வேலை செய்யும் இந்தியன் ஸ்டோரில் இருந்து, பூஜைக்கு வாங்கிக்கொண்டு வருமாறு சொல்ல..


அவர் உடல்நிலையை கருத்தில் கொண்டு சரியென்ற மிதிலா, அன்று மாலை அன்னபூரணி சொன்ன பொருட்களை வாங்கிக்கொண்டு, குழந்தையை டேக்கேரில் இருந்து பிக்கப் செய்து கொண்டு, அன்னபூரணியின் வீட்டை நோக்கி சென்றாள்.


அங்கு பொருட்களை அன்னபூரணியிடம் ஒப்படைத்து விட்டு, உடனே மிதிலா கிளம்ப, "கொஞ்சம் நேரம் குழந்தையோட இங்கேயே இரு டா, நாள் முழுக்க தனியா தான் இருந்தேன், அவனும் இன்னும் வரலை, நீயும் தான் போயிட்டு என்ன செய்ய போற", என்றுக்கேட்க.


மிதிலா வேறு வழியின்றி ஒப்புக்கொண்டாள்.


அன்னபூரணி, மிதிலாவிற்கு காபியும், குழந்தைக்கு ஏற்ற சிற்றுண்டியும், தயார் செய்து எடுத்து வந்து கொடுத்தார்,


அதற்கே அவருக்கு உடம்பு சிரமத்தை கொடுத்தது.


மிதிலா காபி குடித்து விட்டு, அன்னபூரணிக்கு அன்றைக்கு, மீதி இருந்த வேலைகளை அவர் மறுக்க மறுக்க செய்ய ஆரம்பித்தாள்.


மிதிலா உடைகளை மெஷினில் போட மாடிப்படி ஏற, அப்பொழுது அன்னபூரணி மிதிலாவை நிறுத்தி, ட்ரீ ஹவுசில் இருக்கும், ஸ்கிரீன், மேட் மற்றும் பெட் கவர், பிளான்கெட், தலையணை உறை போன்ற பொருட்களையும், தீபாவளியை முன்னிட்டு சுத்தம் செய்ய, துவைக்க எடுத்து வர சொன்னார்.


சரியென்று சொல்லி அவளும் தோட்டத்திற்கு சென்றாள்.


அங்கு இருந்த ட்ரீ ஹவுசிற்கு மிதிலா இதுவரை சென்றதேயில்லை.


இதுவரை சினிமாக்களில் மட்டுமே பார்த்து இருந்த ட்ரீ ஹவுசை, நேரில் பார்க்க போகும் உற்சாகத்துடன், அவள் ஏற ஆரம்பிக்க, கயிறு ஏணி கிடுகிடுவென்று ஆடி அவளை பயமுறுத்தியது.


இருந்தும் ஆர்வத்துடன் ஏறினாள்.


கயிறு ஏணி முழுவதும் வேறு சம்பங்கி கொடி பரவி பூ பூத்து இருந்தது.


சம்பங்கி பூவை பார்த்ததும் மிதிலாவிற்கு துளசியின் ஞாபகமும், அவர்கள் வீட்டில் கூடத்தில், சம்பங்கி பூவின் வாசனை எங்கும் நிரம்பி இருந்ததும், ஞாபகம் வந்தது.


அதே நினைவுகளுடன் ட்ரீ ஹவுஸ் உள்ளே சென்ற மிதிலா, ஒரு நிமிடம் அப்படியே, தன் கண்கள் விரிய நின்று விட்டாள்.


அங்கு இருந்த, மீன் தொட்டி, புத்தர் சிலை, அழகான சின்ன நீர்வீழ்ச்சி, பறவைகளின் கூடு, பல ரம்மியமான வாசனைகள் வரக்கூடிய பூச்செடிகள் என்று ஒவ்வொன்றும், மிதிலாவை இவ்வுலகை மறக்க செய்தது.


அவள் மனதில் இருந்த பல கசப்பான நினைவுகள், 

இயற்கையின் அழகில், சிறிது நேரம் பின்னோக்கி சென்றுவிட்டு இருந்தது.


அவளின் வயதிற்கு உரிய ரசனையுடன், அனைத்தையும் ரசித்தாள்.


சில நிமிடங்களுக்கு பிறகு, அங்கு கேட்ட, பறவைகளின் கீச் கீச் சத்தத்தில், கனவுலகில் இருந்து திரும்பி வந்த மிதிலா, வந்த வேலையை எண்ணி, தன் தலையில் தட்டியப்படி, விடுவிடுவென்று அனைத்து உறைகளையும் களைந்து, கையில் எடுத்துக்கொண்டு கீழிறங்க தொடங்கினாள்.


சின்ன கயிறு ஏணியில் அனைத்து பொருட்களையும் வைத்துக்கொண்டு அவளால் சுத்தமாக இறங்க முடியவில்லை,


கால் இரண்டும் கிடுகிடுவென்று ஆடியது.


அப்பொழுது அங்கு,  வின்டேஜ் கலெக்ஷன் கடையில் இருந்து, அந்தக்கால பழைய ரேடியோ ஒன்றை வாங்கிக்கொண்டு வந்திறந்த ஹரி, அதை ட்ரீ ஹவுஸில் வைக்க..


அங்கு வந்து சேர்ந்தான்.


அன்றும் அவனுக்கு Fortune Cookie-யில்,

"Something precious is waiting for you " என்று வந்து இருந்தது.


அதை நினைத்தப்படியே, அவன் புன்னகை முகத்துடன், அவன் ட்ரீ ஹவுஸை நோக்கி வந்திருக்க..


அப்பொழுது ஹரியின் காதில், ஒரு பெண்ணின் பேச்சுக் குரல் கேட்டது, அதுவும் தமிழில்.


அதில், யாரது தமிழில் இங்கு பேசுகிறார்கள், என்று பார்க்க, ஹரி விரைந்து ட்ரீ ஹவுஸ் பக்கம் வந்தான்.


அங்கு மிதிலா தான் துணி மூட்டையுடன், ஒவ்வொரு படியாக பொறுமையாக இறங்கிக் கொண்டும், ஒரு பக்கம் புலம்பிக்கொண்டும் இருந்தாள்.


"ஆண்டவா எப்படியாச்சும் என்னை காப்பாத்திடு, இந்த டாக்டர் ஏன் இவ்வளவு கஞ்சமா கயிறு ஏணி வச்சி இருக்காரு தெரியல, மரத்தில் ஏதாவது படி வச்சி இருக்கலாம் இல்ல, ஐயோ கால் இரண்டும் டேன்ஸ் ஆடுதே", என்று புலம்பிக் கொண்டே கீழே இறங்கினாள்.


ஹரி அவளின் புலம்பலை கேட்டு, "இன்ட்ரெஸ்டிங்" என்று சிரித்துவிட்டு, 


மிதிலாவை நோக்கி "ஹே கிரேஸி, டிரஸை கீழே போட்டுட்டு இறங்கு, நானா கஞ்சம், நீதான் உன் ப்ரெயினை, யூஸ் பண்ணாம கஞ்சமா இருக்க..", என்று குரல் கொடுக்க.


மறுகணம் மிதிலா, யாருடா இது இங்கு, என்று பதறி, 

ஏணியில் அடுத்து வைத்த காலை ஒழுங்காக வைக்காமல், பேலன்ஸ் தவறி கீழே விழ தொடங்கினாள்.


மிதிலாவையே பார்த்து கொண்டு இருந்த ஹரி அதிர்ந்து,  "ஓ காட்" என்று நினைக்கும் பொழுதே, 


அவன் முகத்தில் முதலில் துணி மூட்டை வந்து விழுந்தது,


அவன் அதை விளக்கும் முன், மிதிலாவும் ஹரியின் மீது வந்து விழுந்து இருந்தாள்.


ஹரியால் சுத்தமாக சுதாரிக்க கூட முடியவில்லை.


முயன்று ஹரி மிதிலாவை தாங்குவதற்குள், அவளோ கீழே பேலன்ஸ் இல்லாமல் சரிந்து, பிடிக்க வந்த ஹரியையும் சேர்த்து இழுத்துக்கொண்டு,  வலிக்குமே என்ற பயத்தில் "போச்சு போச்சு", என்று கத்திக்கொண்டே கீழே பொத்தென்று, விழுந்து இருந்தாள்.


தோட்டம் முழுக்க புல் தரை என்பதாலும், நிறைய துணியுடன் சரிந்ததாலும் மிதிலாவிற்கு ஒன்றும் அடிப்படவில்லை.


அதில் நல்லவேளை என்று அவள் எண்ணி முடிப்பதற்குள், ஹரியும் அவள் மேலேயே மொத்தமாக சரிந்து விழுந்து விட, அவனின் பாரத்தை சுத்தமாக, அவளால் தாங்க முடியாது போனது.


அனைத்தும் மின்னல் வேகத்தில் நடந்து முடிந்து இருந்தது.


ஹரி சட்டென்று சுதாரித்து எழ முற்பட, அவனால் கொஞ்சமும் நகர கூட முடியவில்லை.


ஸ்கிரீன் மற்றும் பெட்ஷிட்டு துணியுடன் சேர்ந்து விழுந்ததால், ஹரியும் மிதிலாவும் போர்வை மற்றும் நீண்ட ஸ்கிரீன் துணி என்று அனைத்திலும் தாறுமாறாக சிக்கிக்கொண்டு இருந்தனர்.


இருவரும் ஒன்றாக எழுந்தால் தான் உண்டு, தனியாக விலக்க இயலவில்லை.


மிதிலாவோ ஹரியின் பாரத்தை தாங்க முடியாது, "ஆஆஆஆ, மூச்சே விட முடியல, ஸ்ஸ்.. அவுச்.. ம்மா.." என்று முனங்கியப்படி, போர்வையை முகத்தில் இருந்து விலக்க.


அவளின் முகத்தின் மிக அருகில் ஹரியின் முகம்.


மிதிலாவிற்கு தன் மூச்சே ஒரேடியாக நின்று விட்டது போல் ஆனது.

கருத்துகள்

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates

Popular posts

Completed- உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே💘- (Completed story available here for free Read)

New Ongoing 💌 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🎼🪻😘💌

Completed-💃🕺அழகான இராட்சசியே அடிக்கரும்பாய் இனிக்கிறியே - Romantic Entertainment

Completed-மகிழ்மதியின் அரசன்- Royal Family Based Romantic love story

1. சங்கீத வானில் ஓர் அந்திப்போர்!😘🕺💃🎼🪻