உண்மை காதல் -8
அத்தியாயம் 8
ஹரியின், குரல் கேட்டதும், பூஜையறையில் இருந்து வெளிவந்த அன்னபூரணி,
கிட்சன் சென்று, ஹரிக்கு காஃபி போடுமாறு மிதிலாவிடம் சொல்லிவிட்டு, சிற்றுண்டிகள் சில மட்டும் ஹரிக்காக ஒரு ப்ளேட்டில் வைத்து எடுத்துவந்தவர், ஹாலில் குழந்தையுடன் சோஃபாவில் உட்கார்ந்து கொண்டார்.
மேலே சென்ற ஹரி, சிறு குளியல் ஒன்றை போட்டுவிட்டு, விரைந்து உடைமாற்றிக்கொண்டு, உற்சாகத்துடன் கீழே இறங்கி வந்தான், குழந்தையுடன் விளையாட.
வந்தவன், "ஹாய் லிட்டில் பிரின்ஸஸ்…!!", என்றப்படியே, அன்னப்பூரணியின் அருகில் அமர்ந்து, குழந்தையை அவரிடம் இருந்து அப்படியே தூக்கி கொண்டான்.
மகிழ்மதியோ தன் பொக்கை வாயை திறந்து, கலகலவென்று ஹரியை பார்த்து சிரித்தப்படி.. அவன் கழுத்தைக் கட்டிக்கொள்ள..
நன்றாக கொழுகொழுவென்று இருந்த குழந்தையின் கன்னத்தில், தன்னை மீறி மெல்ல முத்தமிட்ட ஹரி, "OMG, You Are So Beautiful Baby Doll ", என்றான், தன்னுடன் சேர்த்து அவளை அணைத்தப்படி..
அதிலும் குழந்தையின் சிறு அசைவுக்கு கூட, அவளின் குண்டு கன்னங்கள் இரண்டும், ஆடுவதை பார்த்ததும் ஹரிக்கு "ஜிகிலி கேக்", தான் நினைவுக்கு வந்தது.
மெல்ல அதை வருடிவிட்டவனின் கரம் அதன் மென்மையில் அப்படியே குழைந்தது, "அச்சோ சோ சாஃப்ட்", என்றவன் மனக்கண்ணில் மின்னலென்று, பல வருடங்களுக்கு பிறகு, திருச்சியில் பார்த்த ஸ்கூல் பெண்ணின் நினைவு வந்தது, "அவளை மாதிரியே க்யூட்டா இருக்கு இந்த பேபியும்", என்று நினைத்து கொண்டான்,
பொதுவாக நாம் ஜப்பான் மக்கள் யாரை பார்த்தாலும், நமக்கு அவர்கள் அனைவரும் ஒரே போல் இருப்பதைப் போல் தோன்றும்.
அதே போல் அமெரிக்கர்கள், சீனர்கள், ஆப்பிரிக்க மக்கள், ஏன் வட இந்திய மக்கள், தென் இந்திய மக்கள், என ஒரு இடத்தை சேர்ந்த அனைவருமே ஒரே முக அமைப்பில் இருப்பது போல் தெரியும்.
அதே போல் தான் ஹரிக்கும், அமெரிக்காவிலேயே முழுவதும் வளர்ந்ததால், இந்தியர்கள் அனைவரின் முக அமைப்பும் ஒன்றாகவே இருப்பது போல் அவனுக்கு இருந்தது.
அதனால்தான் மிதிலாவை அவனால் தனியாக பிரித்து சுத்தமாக அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை.
ஹரி குழந்தையை கொஞ்சுவதையே பார்த்துக்கொண்டு இருந்த அன்னப்பூரணி, "ஏன் கண்ணா, காலத்துல ஒழுங்கா கல்யாணம் பண்ணி இருந்தா, இந்த மாதிரி எத்தனையோ குழந்தைங்க உனக்கே பிறந்து இருக்கும், நம்ம கூடவே இருந்து இருப்பாங்க, பெண் குழந்தை இல்லாத குறையும் தீர்ந்து இருக்கும்", என்றார் குறையாக.
உடனே ஹரி, "மாம் பிளீஸ், நான் நல்ல மூட்ல இருக்கேன், எல்லாம் நடக்கும் பொழுது நடக்கும்.. கேட்க மறந்துட்டேன், இந்த பேபி யாரோடது, இப்ப தான் பார்க்கிறேன்", என்றான்.. மகிழ்மதியை கொஞ்சியப்படியே..
"இப்படியே போனா, உனக்கு அறுபதாம் கல்யாணம் தான் நான் செய்து பார்க்கனும் ஹரி..", என்ற அன்னபூரணி, ஒரு பெருமூச்சுடன், "மிதிலாமா காஃபி எடுத்துட்டு வாடா..", என்று கிட்சன் நோக்கி குரல் கொடுத்தார்.
உடனே, 'யாரை மாம் சொல்றாங்க' என்று திரும்பி பார்த்த ஹரிக்கு, காபி எடுத்து வரும் மிதிலாவை பார்த்ததும் இன்ப அதிர்ச்சியாகியது.
ஹரி பேசுவதை, அப்பொழுதில் இருந்தே மிதிலா சமையல் அறைக்குள் இருந்து கேட்டுக்கொண்டு தான் இருந்தாள்.
குழந்தையை கொஞ்சியவனின் குரலில் இருந்த குழைவும், மென்மையும், அவளின் ஆழ்மனதில் புதைந்திருந்த நினைவுகளை மேல் கொண்டுவந்து, அழகாக மீட்டியது.
அதன் தாக்கம் அவள் முகம் முழுக்க ஹரியின் மீதான மையலில் ஒளிவீசியது.
'மிதிலா' தான் பெயரா என்று மென்மையாக மனதிற்குள் "மிதிலா" என்று உச்சரித்து பார்த்து..
"அவளை மாதிரியே பேரும் சாஃப்ட்..", என்று நினைத்தவனின் மனமோ நொடியில் தன்னிலையை இழக்க தொடங்கியது.
வார்த்தைகளே அவர்கள் இருவருக்கும் இடையில் தேவையில்லை..!!
அவள் காஃபியுடன் நடந்து அருகே வருவதற்குள்,
அவளை தலையிலிருந்து கால் வரை விரைவாக ஹரி தன் கண்களால் ஸ்கேன் செய்து, தன் நெஞ்சில் நிரப்ப துவங்கினான்.
இன்று மிதிலா, முட்டிவரை உள்ள, மிகவும் எளிமையான கருப்பு நிற, Buff type கவுன் அணிந்து இருந்தாள்.
எந்தவித ஆர்ப்பாட்டமும், ஒப்பனைகளும் இல்லாத, மாலை நேரத்தின், அமைதியான அவளின் தோற்றமே, ஹரியின் கண்களில் வசிகரத்தை கூட்டியது.
அந்த கருப்பு நிற உடை, அவளின் ரோஜா நிறத்தை மேலும் கூட்டி காட்ட, அவளின் வெறுமையான நகை எதுவும் அணியாத, சங்கு கழுத்து வேறு அங்கேயே குடிக்கொள்ள, ஹரியை வா என்று அழைத்தது.
அதில் தன் தலையை லேசாக குலுக்கிக்கொண்டவன், மீண்டும் பார்வையை முகத்திற்கு எடுத்துச் செல்ல..
அங்கோ மிதிலாவின் ரோஸ் நிற உதடுகள் அவன் கண்களில் பட்டு, நேற்றைய இதழ்களின் இணைவை ஞாபகம் செய்துவிட, ஹரியின் உடல் அக்கணம் வானில் ஜிவ்வென்று பறந்து சென்றது.
பஞ்சு போன்ற அந்த உதடுகளின் மென்மையை, இன்றும் ஹரியின் உதடுகள் அக்கணம் சற்றும் மறக்காது உணர்ந்தன.
மேலும் உணர வேறு துடித்தன.
அதில் மீண்டும் தன் தலையை குலுக்கிக்கொண்டவன், பார்வை கீழிறக்க,
அங்கோ அடுத்தக்கட்ட சோதனை.
நேற்று அவன் உதடுகளும், அவன் கைகளும் உணர்ந்த, அவளின் அதி மென்மையான துடி இடை, நதியாக வளைந்து நெலிந்து சென்றது.
உடை மூடி இருந்ததில்,
ஏமாற்றத்துடன் கண் பார்வையை இன்னும் கீழே இறக்கினான் ஹரி,
அங்கு அவனை ஏமாற்றாமல், பெண்ணின், மூங்கில் போன்ற கால்கள், ஹரியை பார்த்து பளப்பளத்தது.
நேற்று உணர்ந்த அவளின் கால்களின் கதகதப்பை இன்றும் அவன் கால்கள் உணர்ந்தது போல் சூடாகியது.
இதுவரை அவன் உணராத உணர்வுகள் இவை.
அமெரிக்காவில் எத்தனை பெண்களை அவன் இதைவிட குறைந்த நீச்சல் உடையில் பார்த்து இருக்கின்றான்.
ஏன் எத்தனை பெண்களுக்கு அவன் பிரசவம் பார்த்து இருக்கின்றான்..
எங்கும் அவன் சலனம் அடைந்தது இல்லை.
தன் இணையிடம் மட்டுமே ஒரு ஆணுக்கு வரும் உணர்வுகள். அவனுக்கு அதிசயமாக மிதிலாவிடம் வந்து இருந்தது. அதுவும் ஒரே நாளில். ஏதோ ஜென்ம ஜென்மமாக அவளுடன் பழகியதை போல் உணர்ந்தான் அவன்.
நேற்று நடந்த, ஒரு சில நிமிட விழிகளின் சங்கமத்திலேயே, மிதிலா தான், தன் காதல் மந்திரத்தை அவனுக்குள் தன்னை அறியாது கடத்திவிட்டு இருந்தாள்.
ஹரியின் ப்ரௌன் நிறக் கண்கள் மேலும் பெரிதாக விரிந்து, மிதிலாவை ரசனையுடன் வருடி, அவன் உணர்ச்சிகளை அப்படியே காட்டிவிட.
அதை கண்ட மிதிலாவோ, அதிர்ந்து, அதன் கணம் கொஞ்சமும் தாளாமல், குனிந்து கொண்டாள்.
சத்தமேதும் இன்றி, பாவையவள் மனதில், பல சரவெடிகளை, கொளுத்தி போட்டான் ஹரி.
தாமரை நிறத்தில் இருந்த பெண்ணவள், ஹரியின் பார்வையால், சூடாகி தகித்துத் தகித்து, உடல் முழுவதும் வினாடியில் செந்நிறம் பூசிக்கொண்டாள்.
அவளின் அப்பெண்மையின் வெளிப்பாடோ, மேலும் மேலும் ஹரியின் உணர்வுகளை அதிகப்படுத்தின..
ஹரிக்கும் தன்னை பிடித்து இருக்கிறது என்ற எண்ணமே, மிதிலாவை இப்பூலோகம் விட்டு, சொர்க்கத்திற்கு அழைத்து சென்றது..
பத்து அடி அவள் எடுத்து வைத்து வருவதற்குள் இருவரும் ஏழு ஜென்மம் வாழ்ந்து விட்டனர்.
பக்கவாட்டில் அமர்ந்திருந்த அன்னபூரணியோ தன் மகனின் பார்வை மாற்றத்தை கொஞ்சமும் அறியாது போனார்.
ஹரியை நெருங்கிவிட்ட மிதிலாவால், திடமாக நிற்கக்கூட முடியவில்லை,
காலின் அனைத்து விரல்களையும், நிலத்தில் அழுந்த ஊன்றி திடமாக நிற்க முயன்றால்.
ஹரி, தன் கரத்திலிருந்த குழந்தையை, அன்னபூரணியிடம் கொடுத்து விட்டு காஃபியை, "தேங்க் யூ", என்றப்படி, மிதிலாவின் கைகளில் இருந்து வாங்கினான்.
அப்பொழுது அன்னபூரணி, மிதிலாவை ஹரியிடம் அறிமுகம் செய்யும் பொருட்டு, "ஹரி இவதான் பா மிதிலா, நான் சொல்லி இருக்கேன் இல்ல, நம்ம ஊரு பொண்ணு, ரொம்ப பொறுப்பான பொண்ணுப்பா, இந்த வயசுலேயே அவ்ளோ பக்குவம், இந்த அழகான குட்டி தேவதையோட அம்மா கண்ணா", என்று அன்னபூரணி,
தன் மகனின் தலையில், ஒரு பெரிய இடியை சத்தமின்றி இறக்கினார்.
ஹரிக்கு, தன் காதுகள் கேட்ட செய்தி உண்மைதானா என்று புரியாமல், அதீத அதிர்ச்சியில் மிதிலாவை ஏறிட்டு பார்த்தான்.
அவள் முகத்தில் எந்த மாறுதலும் இல்லை, ஒருவித இறுக்கமான முகபாவனையே மிதிலாவின் முகத்தில் ஹரிக்கு தெரிந்தது.
அவனின் கனவுக்கோட்டை, நொடியில் இடிந்துப்போனது.
ஹரியினால், அந்நிமிடத்தின் தாக்கத்தினை, சுத்தமாக சமாளிக்க முடியவில்லை.
ஹரியின் முக மாற்றங்கள் அனைத்தையும், மிக நெருக்கத்திலேயே மிதிலா, தன் காதல் நெஞ்சம் துடிக்க, கண்டாள்.
ஹரியின் கைகள் உதறல் எடுத்தது, சூடான காபியை மேலேயே கொட்டிக் கொண்டான்.
அந்த சூட்டை கூட ஹரி உணரவில்லை, அன்னபூரணி தான் பதறி ஹரியின் பக்கம் நெருங்கி, "என்ன ஹரி இப்படி ஊத்திகிட்ட", என்று கத்த.
அந்த சத்தத்தில் மீண்ட மிதிலா, உடனே விரைந்து, பிரிட்ஜை நோக்கி, ஐஸ் பேக் எடுக்க ஓடினாள்.
அதற்குள் சுதாரித்து பட்டென்று எழுந்த ஹரி, "ஒன்னும் இல்லை மாம், நான் பார்த்துக்கறேன், டிரஸ் சேன்ஜ் பண்ணிட்டு வரேன்", என்று விட்டு பாய்ந்து விரைவாக படி ஏறினான்.
ஹரிக்கு நடந்த நிகழ்வு அனைத்தும் கொடும் கனவாக இருந்தது.
படிகள் ஏறும் பொழுதே, ஹரியின் கண்களில் இருந்து, நீர் மளமளவென சூடாக இறங்க ஆரம்பித்து விட்டது.
அவனின் மென் உணர்வுகள் அனைத்தும் கானல் நீராகி மறைந்துவிட்டப் போல் இருந்தது.
யாரின் முகத்தையும் ஹரியால் பார்க்க முடியவில்லை.
விரைவாக அவ்விடத்தை விட்டு அகல வேண்டும் என்பதே அவன் மனதில் இருந்தது.
அதனாலேயே அறைக்குள் விரைந்து வந்து சேர்ந்தான்.
இதுவரை அவன் எதிர்க்கொள்ளாத உணர்வு, யாருக்கும் அதை அவன் காட்ட விரும்பவில்லை.
அதைவிட பயங்கர அவமானமாக இருந்தது அவனுக்கு.
என்ன காரியம் செய்து விட்டான் நேற்றில் இருந்து.
உடல் முழுக்க எரிந்தது ஹரிக்கு.
ஏஞ்சலினா உடனான நீண்ட நாள் காதலையே ஹரி எளிதாக கடந்து விட்டு இருந்தான்.
ஆனால் இன்று..??
மிதிலாவுடனான, சில நிமிட உணர்வுகளையே, அவனால் தாங்க முடியாமல் போனது.
அவளுடன் பேசவில்லை, பழகவில்லை, யாரென்று தெரியவில்லை. இருந்தும், அவளிடம் தன் மனதை மொத்தமாக பறிக்கொடுத்து விட்டு இருந்தான்.
அவளின் பெயர் கூட சற்று முன்னர் தானே தெரியும்.
அவள் கண்கள் காண்பித்த பாவனைகளில், கண்ட முதல் நொடியிலேயே, விழுந்து விட்டு இருந்தான்.
அவனால் மிதிலா உடனான ஒருநாள் எண்ணங்களை மறக்கவும் முடியவில்லை, அடக்கவும் முடியவில்லை,
வாழ்க்கையையே ஒரே நாளில் வெறுத்து விட்டான்.
எப்பொழுதும் உற்சாகத்துடனும், புத்துணர்வுடனும், எதிர்மறை எண்ணங்கள், எதுவும் இல்லாமல் இருக்கும் ஹரி, இன்றோ தன் சுயம் மறந்து, ஒரு சில நிமிடங்களிலேயே மொத்தமாக மாறி விட்டு இருந்தான்.
ஐந்து நிமிட ஸ்பரிசத்திலே மிதிலா ஹரியை மொத்தமாக வீழ்த்தி இருந்தாள்.
மிதிலாவின் உண்மையான காதலின் சக்தி, இங்கு ஹரியிடம் உருவெடுத்து, அவன் உதிரத்தில் கலந்து இருந்தது.
ஆனால் விதியின் சதி இருவரையும் வேதனையுற செய்துவிட்டது,
ஹரி, திருமணமாகி ஒரு குழந்தையுடன் இருக்கும் ஒரு பெண்ணின் மீதான, அவனின் எண்ணத்தை நினைத்து மிகவும் வெட்கப்பட்டான்.
மனதில் மிதிலாவிடம் பலமுறை மன்னிப்பும் கேட்டு வைத்தான்.
எவ்வாறு இவ்வளவு கீழ் தரமாக நடந்துக்கொண்டேன், என்ற எண்ணமே அவனை வாட்டி வதைத்தது.
அதனால் தான் மிதிலா நேற்று உடனே தன்னிடம் இருந்து விலகி ஓடினாளா, அவள் கண்ணீருக்கு காரணம் இதுதானா..??
இன்றும், தலைக் கவிழ்ந்தே இருந்தாளே, தன்னை சகிக்க முடியாமல் தானோ..??
ஒன்றும் புரியவில்லை அவனுக்கு.
மிதிலாவின் நேற்றய பார்வையை, இப்பொழுது நினைத்து பார்த்தாள் கூட, அவனுக்கு அது காதல் சொல்லியது போலவே தோன்றியது.
அனைத்தும் தன் கற்பனையா, என்று தன்னிரக்கத்திலும் வேதனையிலும் கரைந்தான்.
எவ்வளவு முயன்றும் மனதைக் கட்டுப்படுத்த முடியவில்லை ஹரியால், குளியல் அறைக்குள் சென்று, உடைகளை களைந்து விட்டு, பாத்டப்பில், ஷவருக்கு அடியில், தன்னை நிதானப்படுத்த, நின்று கொண்டான்.
ஹரியின் மனதில், எவ்வளவு முயன்றும், காயத்தின் வலி, அதிகரிக்கவே செய்தது.
இதெல்லாம் வேலைக்கு ஆகாது என்று நிதர்சனத்தை உணர்ந்தவன், அப்படியே பாத்டப்பினுள், நீரில் அமிழ்ந்து அமர்ந்து, தன் மனதை ஒருநிலைப்படுத்தி, மிதிலாவை தன் மூளைவிட்டு அப்புறப்படுத்த ஆரம்பித்தான்.
இது தவறு, இது தவறு, என்று மனதில் உறுதியெடுத்துக் கொண்டப்பின், எழுந்து, குளித்து முடித்து வெளியில் வந்தான்.
அவ்வளவு தான் இனி இதை மறந்துவிடுவேன், பிரச்சனை முடிந்தது என்று நினைத்துக்கொண்டான்.
இனி தான் ஆரம்பம் என்று தெரியாது போனான்.
இங்கு கிட்சனிற்குள் சென்ற மிதிலாவிற்கோ, ஹரியின் அதிர்ச்சியான முகமே மனதில் தேங்கியது.
"தன்னை தவறாக நினைத்து விட்டாரா..??
தன்னால் வேதனை அடைந்துவிட்டாரா..??
கடவுளே, நான் என்ன பாவம் செஞ்சேன், ஏன் எனக்கு மட்டும், திரும்ப திரும்ப இவ்வளவு வேதனை..??
சாக கூட எனக்கு தைரியம் இல்லையே, மகிழ்மதிக்காக வேற நான் வாழ்ந்து ஆகனுமே..!!
என்னால எல்லாருக்கும் பிரச்சனை, இதுக்கு ஒரு முடிவே இல்லையா..??", என்று மனதினுள் அழுது கரைந்தாள்.
வீட்டு வேலை வேறு முடிக்க வேண்டும், கதறி நிம்மதியாக அழ கூட தனக்கு குடுப்பனை இல்லேயே, என்றுவேறு சுய தன்னிரக்கம் தாளாது, மனதினுள்ளே குமைந்தாள்.
அவள் கைகள் பரபரவென்று வேலைகளை செய்து முடித்தது.
கனத்த மனதுடன், அனைத்தையும் எடுத்து வைத்தவள், மணியாகிவிட்டதை அன்னப்பூரணியிடம் கூறி, அவர் கொடுத்த பணத்தை பெற்றுக்கொண்டு, குழந்தையுடன் வீட்டிற்கு கிளம்பி விட்டாள்.
மிதிலா சென்றப்பின், அன்னபூரணி ஹரியை ஃபோன் செய்து உணவு உண்ண கீழே வர அழைத்தார்.
பொதுவாக ஹரி புது ஆட்களுடன் அவ்வளவாக உடனே பேசி பழக மாட்டான்.
அதனால் தான் அன்னபூரணி ஹரியை மிதிலா இருக்கும் போது, மீண்டும் அழைக்கவில்லை.
அன்னப்பூரணி அழைத்ததும், ஹரி மீண்டும் தன் முகத்தை கழுவிவிட்டு உணர்வுகளை மறைத்துக் கொண்டு கீழே வந்தான்.
ஒரே நாளில் அவன் முகம் அவனின் 35 வயதை காட்டியது.
ஹரியின் முகத்தை பார்த்த அன்னபூரணி பதறி, "ஏன் கண்ணா காஃபி கொட்டியதில் ரொம்ப சூடு பட்டுடுச்சா, ஒன்னுமில்லைன்னு சொன்னியே, மருந்து எதாச்சும் போட்டயா, நான் பார்க்காமலே விட்டுட்டேனே..??", என்று பரிவுடன் அவனிடம் விசாரித்தவரின் கண்கள், அவனின் காலை ஆராய்ந்தது.
ஹரி, "அது ஒன்னும் அவ்வளவு சூடு இல்லை மாம், கொஞ்சம் தலைவலி தான் இருக்கு, மார்னிங்கே இன்னைக்கு ஆப்ரேஷன்.. அதைத்தொடர்ந்து OP-ன்னு நல்ல பிசி.., அதான்", என்றான்.
அன்னபூரணி, "சரி கண்ணா, சீக்கிரம் சாப்பிட்டுட்டு போயிட்டு நல்லா ரெஸ்ட் எடு, காலைலயே உனக்கு கொஞ்சம் முடியாம தானே இருந்துச்சு.. டாக்டர்னாலே சொந்த பிரச்சனையை பார்க்க முடியாதுப்போல..", என்றப்படி அவனுக்கு உணவை பரிமாறியவர், "தாயும் சேயும் நல்லா இருக்காங்க இல்ல கண்ணா இப்போ", என்று விசாரிக்க..
ஹரி, "எஸ் மாம், இரண்டு பேரும் ஃபைன்", என்றவன், உணவை விருப்பமே இல்லாது கொறிக்கத்தொடங்க.
அவன் அருகே, தனக்கான உணவுடன் அமர்ந்த அன்னபூரணி, மிதிலாவின் கடந்தகாலத்தை பற்றி ஹரியிடம் பகிரத்தொடங்கினார்.
மிதிலாவின் கணவரும், பெற்றோர்களும், இவள் மாசமாக இருக்கும் சமயத்தில், விபத்தில் இறந்துவிட்டதை கூறியவர்,
அதைத்தொடர்ந்து அவளுக்கு வந்து சேர்ந்த கடன் தொல்லை, உறவினர்கள் யாரும் இல்லாத நிலையை கூறி, இறுதியில் இங்கே வந்து கடையிலும், வார இறுதியில் வீடுகளிலும் அவள் வேலை செய்வதை, பகிர்ந்துக்கொள்ள.
இவை அனைத்தும் ஹரிக்கு அந்நாளின் இரண்டாம்கட்ட உச்சகட்ட அதிர்ச்சியைக்
கொடுத்தது.
அவன் நேற்று வைத்த புள்ளிக்கு அருகில், இன்றுடன் முற்றுப்புள்ளி வைத்து ஒரேடியாக முடித்துவிட நினைத்தால், அதுவோ தொடர் கதையாய் நீண்டது.
ஹரி, எதுவும் வெளியில் காட்டிக் கொள்ளாமல், விரைந்து உணவை முடித்துக்கொண்டு மேலே வந்துவிட்டான்.
படுக்கையில் விழுந்த ஹரிக்கு, மிதிலா எதிர்கொண்ட கஷ்டத்தை நினைத்து மிகவும் வேதனையாக இருந்தது.
"போதும்டா சாமி, ஒரே நாளில் எவ்வளவு தான் நான் தாங்குவது", என்று மொத்தமாக சோர்ந்து விட்டான்.
ஒரு புறம் அவனை அறியாமலேயே மனதிற்கு நிம்மதியாகவும் இருந்தது.
அன்னபூரணியின் மூலம் கேட்ட மிதிலாவின் கடந்தகாலம், அவனை மீண்டும் மிதிலாவை பற்றியே சிந்திக்க வைத்தது.
————————————
இங்கோ வீட்டிற்கு வந்த மிதிலாவும், அவன் நினைவில் தான் தத்தளித்துக் கொண்டு இருந்தாள்.
ஹரியின் முகத்தில் தோன்றிய பாவனைகள் அனைத்தும் மிதிலாவிற்கு நன்றாக புரிந்தது.
ஹரி, என்றுமே தனக்கு எட்டாக் கனி தான் போல் என்ற உண்மை உரைத்து, மிகவும் வேதனை உற்றாள்.
கடமையே என்று குழந்தைக்கு உணவு ஊட்டி, தூங்க வைத்தவள்..
நேற்றுப்போல் இன்றும் சமையல் அறை தரையில் அமர்ந்து, தான் ஆசைப்பட்டது எதுவுமே தனக்கு கிடைக்காது, என்று நினைத்தவள், அவளின் தற்போதைய நிலையையும் எண்ணி, தலையில் அடித்துக்கொண்டு அழுது கரைந்தாள்.
அனைவரும் தன்னை அடையாளப்படுத்தி சொல்லும், 'சிங்கிள் மாம்' என்ற சொல், அவளை எப்பொழுதும் ஒன்றும் செய்ததில்லை, ஆனால் இன்று ஹரியின் கண்களில், தான் திருமணமான, ஒரு குழந்தையின் தாய், என்று கேட்டவுடன் உண்டான மாற்றத்தை அறவே வெறுத்தாள்.
ஒருபுறம் ஹரி தன்னை அடையாளம் காணவில்லை என்ற நிம்மதி, மறுபுறம் அவன் தன்னை மறந்து விட்டான் என்ற கவலை.
ஒருபுறம் ஹரிக்கும் தன்னை பிடித்துள்ளது என்ற நிம்மதி, மறுபுறம் அது அடுத்த கணமே அவனிடம் இருந்து மறைந்து போனது என்ற கவலை.
"நான் அப்படி என்ன பாவம் செஞ்சேன், என்னை ஏன்மா எல்லாரும் விட்டுட்டு போயிட்டீங்க.. என்னால முடியலைமா..", என்று வாய்விட்டு கதறியவள்.. தன்னுடைய விதியையும், நினைத்து நினைத்து நொந்து போனாள்.
அவ்விரவு எப்படியோ நகர்ந்துவிட..
இதற்குப் பிறகு ஹரியின் கண்ணில் கண்டிப்பாக படவேக்கூடாது என்று உறுதி எடுத்து கொண்டவள்.. எப்பொழுதும் போல் தயாராகி வேலைக்கு ஓடினாள்.
அன்று மதியம் இரண்டு மணிப்போல் அவளுக்கு அழைத்த அன்னபூரணி, மிதிலாவை திபாவளிக்கு குழந்தையுடன் அவர்களின் வீட்டிற்கு வருமாறு அழைக்க..
மிதிலா அவரிடம், "பிளீஸ் ஆன்ட்டி, அம்மா அப்பா யாரும் இல்லாத முதல் தீபாவளி, என்னால் வரமுடியாது.. பண்டிகை தினம்னால் கடையிலும் நிறைய வேலை", என்று கூறி ஒரேடியாக மறுத்துவிட்டாள்.
அதற்கு மேல் அன்னபூரணியும் அவளை வற்புறுத்தவில்லை.
அவ்வார இறுதியிலும் மிதிலா ஹரியின் வீட்டிற்கு பணிக்கு போக வில்லை.
அன்னபூரணியிடம் கடையில் கூடுதலான வேலை வந்துவிட்டது, அது இது என்று நழுவி விட்டாள்.
ஹரியின் வீட்டிற்கு வேறு ஒரு ஆள் வந்து அன்னபூரணிக்கு உதவினார்.
ஹரி மிதிலாவை பற்றி அன்னபூரணியிடம் விசாரிக்க, அவர் மிதிலாவின் வேலை பளுவை பற்றி கூறினார்.
ஹரி, மிதிலா தன்னுடைய பார்வையை தவறாக நினைத்து தான் வரவில்லை என்று நினைத்து கொண்டான்.
மிதிலா தன்னைக் குறித்து தவறாக நினைத்தது, ஹரிக்கு மிகவும் வேதனையாக இருந்தது.
மிதிலாவோ, ஹரியை மீண்டும் வருத்தப்பட வைக்க வேண்டாம் என்றே நினைத்தாள், அதைவிட வேறொரு முக்கிய காரணமும் இருந்தது, ஹரி மீண்டும் மீண்டும் தன்னை காணும் பொழுது தன்னை கண்டு பிடித்துவிட்டால் என்ன செய்வது, அல்லது தன்னை பற்றி விசாரித்து தெரிந்து கொண்டால் என்ன செய்வது, போலீஸில் வேறு பிடித்துக் கொடுத்து விட்டால், யார் மகிழ்மதியை இனி பார்த்துக் கொள்வது, என்ற பயத்தில் ஹரியை இனி காணவே கூடாது என்ற எண்ணத்தில் இருந்தாள்.
ஆம் திருச்சி போலீஸ், மிதிலாவை வலைவீசி தேடிக் கொண்டு இருக்கிறது.
ஏற்கனவே அவள் மீது தமிழ்நாட்டில் இரண்டு வழக்குகள் இருக்கும் நிலையில், லட்சக்கணக்கில் செலவு செய்து, போலி பாஸ்போர்ட் மற்றும் விசாவில், அமெரிக்காவிற்கு வந்து, பதுங்கி வாழும் மிதிலா மாட்டினாள், அமெரிக்க போலீஸே அவளை கைது செய்துவிடும்.
————————————
மிதிலாவை, ஹரி பார்க்காதே, இரண்டு வாரங்கள் கழிந்து விட்டு இருந்தது.
மிதிலாவின் கண்ணாமூச்சி ஆட்டத்தால் ஹரி தான் தவித்து விட்டான்.
ஒரே நல்ல விஷயம், அவளின் பிரிவு, ஹரிக்கு அவனுடைய மனதை தெளிவாக படம் பிடித்து காட்டி இருந்தது.
முதல்முறை, ஹரியுடனான மிதிலாவின் சந்திப்பின்போது, மிதிலா அவளுடைய இதயத்தை ஹரியிடம் பறி கொடுத்து இருந்தாள்.
இரண்டாவது முறை, ஹரியுடனான மிதிலாவின் சந்திப்பில், ஹரி அவனுடைய இதயத்தை மிதிலாவிடம் பறி கொடுத்து இருந்தான்.
இரு இதயமும் இடம் மாறிய நிலையில், மூன்றாவது சந்திப்பில், விதியின் விளையாட்டால், இருவருமே மனதளவில் அடிவாங்கிவிட்டு இருந்தனர்.
அதிலும் மிதிலாவின் இந்த ஒரேடியான விலகல் செயல், ஹரியை அவளை தேடிச்சென்று பார்க்கவிடாது தடுத்துவிட்டது.
மேலும் வாரங்கள் சில கடக்க,
ஆதித்யாவிற்கு அமெரிக்காவிலேயே வேறு மாநிலத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டது.
மாத சம்பளத்தை நம்பி வாழ்பவர்களால் ஏதும் செய்ய முடியாத நிலை.
மிதிலாவிற்கு ஆயிரம் பத்திரம் கூறி, அவளிடம் விடைபெற்றுக்கொண்டு, ஆதித்யா மற்றும் கயல்விழி தம்பதியர் வீட்டை காலி செய்து கொண்டு கிளம்பினர்.
மிதிலாவால், வேறொரு மாநிலத்திற்கு, பணியை மாற்றிக்கொண்டு செல்ல இயலாது, அவளுடைய வொர்க்கிங் விசா வாஷிங்டன் மாநிலத்திற்குள் மட்டுமே செல்லும், என்பதால் தான், மனமே இன்றி, அவளை தனியாக விட்டு சென்று இருந்தனர்.
————————————
இங்கு அன்னபூரணியோ, எப்பொழுதும் போல், சில வரன்களை காண்பித்து, மீண்டும் ஹரியை திருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்த..
ஹரியும் எப்பொழுதும் போல், ஒற்றுக்கொள்ளவே இல்லை.
"வேற பார்க்கலாம் மாம், எனக்கு செட் ஆகாது..", போன்ற காரணங்களை எப்பொழுதும் சொல்லி மறுக்கும் ஹரி, இம்முறை உறுதியாக, தனக்கு திருமணமே வேண்டாம்.. இனி எந்த வரன் பற்றிய பேச்சும் என்னிடம் வேண்டாம் என்றுவிட்டு இருக்க.
அதில் அதிர்ந்த அன்னப்பூரணி, ஹரி இப்படியே நின்று விடுவானோ, தனக்கு பிறகு யார் அவனுக்கு துணை, என்றெல்லாம் நினைத்து நினைத்து, அதிக மன உளைச்சலுக்கு ஆளாகிப்போனார்.
அதன் விளைவாக, அந்த மாதம், இதுவரை இல்லாத அளவிற்கு, அதிக ரத்தப்போக்கு அவருக்கு ஏற்பட்டது.
ஏற்கனவே அன்னபூரணிக்கு, லேட் மெனோபாஸ் காரணமாக, மாதவிடாய் சுழற்சியில் இருந்த பிரச்சனைகள், இப்பொழுது அதிகமாகிவிட்டது., கருப்பை நாளுக்கு நாள் தன் பலத்தை இழக்க தொடங்கி இருந்தது.
அதில் இரண்டு மூன்று நாட்களிலேயே, மிகவும் உடல் நலன் குறைந்து நலிவடைந்துவிட்டார்.
அவரால் எழ கூட முடியவில்லை,
இடுப்பு வலி, கால் வலி, என்று சுத்தமாக ஒன்றும் முடியவில்லை.
ஹரி தான் மருத்துவமனைக்கு விடுமுறை எடுத்துக்கொண்டு, உடன் இருந்து பார்த்துக்கொண்டான்.
அன்று அன்னப்பூரணிக்கு வேண்டியவை அனைத்தையும் செய்து முடித்த ஹரி, அவ்வாரத்திற்கு தேவையான காய்கறிகள் மற்றும் மற்ற சமையல் பொருட்கள் வாங்க முடிவு செய்த ஹரி, இந்தியன் சூப்பர் மார்க்கெட்டிற்கு, கிளம்பினான்.
கிளம்பும் முன்பு, அன்னப்பூரணியின் அறைக்குள் சென்ற ஹரி, "மாம் நான் ஷாப்பிங் போயிட்டு சீக்கிரம் வந்துடறேன். எதாவதுனா உடனே எனக்கு கூப்பிடுங்க..", என்றவன், சிறு இடைவெளிவிட்டு மீண்டும் தொடர்ந்து, "வீணா கண்டதையும் மனசில் போட்டு குழப்பிக்கிட்டு, இருக்க உடம்பு பிரச்சனையை அதிகமாக்காதிங்க மாம். ப்ளீஸ்.. நான் கல்யாணம் வேண்டாம்னு சொல்றேனா அதில் ஒரு காரணம் இருக்கும்னு ஏன் உங்களுக்கு புரிய மாட்டுது. கல்யாணம் தான் உலகமா..??, வீணா உங்க உடம்பையும் கெடுத்துக்கிட்டு, எனக்கும் மேலும் மேலும் கஷ்டம் தரீங்க.. ப்ளீஸ் மாம், என்னோட விருப்பப்படி வாழ விடுங்க.. நான் சந்தோஷமா தான் இருக்கேன்.. எத்தனை நாள் என்னால லீவ் எடுத்துட்டு வீட்ல இருக்க முடியும்.. கொஞ்சம் யோசிச்சு பாருங்க மாம்..", என்றுவிட்டு கிளம்பி இருந்தான்.
பெற்ற மனம் தான் அவனின் பேச்சில் மேலும் அடித்துக்கொண்டது.
ஒருவேளை மிதிலாவின் மீது எந்த உணர்வும் வாராது இருந்தால் கூட ஹரி திருமணத்திற்கு சம்மதம் கூறி இருந்து இருப்பானோ என்னவோ..
அவனே பெரும் குழப்பத்தில் இருக்க, அன்னப்பூரணியோ இந்த நேரம் பார்த்து திருமண பேச்சை மீண்டும் ஆரம்பித்து, அவனை ஒரேடியாக முருங்கை மரத்தில் ஏற்றிவிட்டு இருந்தார்.
காரை பார்க்கிங் ஏரியாவில், பார்க் செய்துவிட்டு, உள்ளே சென்ற ஹரி, ஒவ்வொரு பகுதியாக சென்று, வேண்டிய பொருட்களை எடுத்து ட்ராலியில் போட்டுக்கொண்டு, பில் கவுண்டர் நோக்கி நடந்தவன்.
அப்பொழுது தான், ஒரு கேஷ் கவுண்டரில் மிதிலா நின்றுக் கொண்டிருப்பதையே பார்த்தான்..
மறுகணம் பார்த்தவனின் இதயத்திலோ, தீ பிடித்து இருந்தது.
மிதிலாவிற்கு தன் மீது விருப்பமில்லை என்று நினைத்து, அவளை தப்பி தவறிக்கூட தொந்தரவு செய்ய கூடாது என்று முடிவெடுத்து இருந்த ஹரியோ, மிதிலாவை நேரில் பார்த்ததும், தன் கட்டுப்பாடுகள் அனைத்தையும் நொடியில் இழந்துவிட்டு இருந்தான்.
எவ்வளவு கட்டுப்படுத்தினாலும், அவனால் அவன் கண்களை அவளிடம் இருந்து திருப்ப கூட முடியவில்லை.
கடையில் பகல் நேரம் என்பதால் அவ்வளவு கூட்டம் இல்லை, இருந்த அனைவரும் பில் போட்டு செல்லட்டும் என்று முடிவெடுத்த ஹரி, காத்துக்கொண்டு இருந்தான்.
மிதிலா, வருபவர்களிடம் இன்முகமாக பேசி பில் செய்து அனுப்பிக்கொண்டு இருந்தாள்.
அழகாக பீச்(Peach) நிறத்தில் கவுன் அணிந்து, அதன் மேல் நீல நிற ஜீன்ஸ் கோட் அணிந்து இருந்த மிதிலா, எந்தவித ஒப்பனையும் இல்லாமல் நிர்மலமான முகத்துடனே, ஹரியின் கண்களுக்கு, வசீகரமாக தெரிந்தாள்.
சிறிது நெருங்கி அவளை மேலும் உற்றுநோக்கியவன் கண்ணில், அவள் அனைவரிடமும் சிரித்துப் பேசினாலும், அவள் கண்களில் இருந்த வெறுமை தெரிந்தது.
அவளின் இழப்புகள் பெரிதானவை என்று நினைத்துக்கொண்டான்.
அனைவரும் சென்றுவிட்டனர்.
ஹரி வைத்த கண் வாங்காமல் மிதிலாவை பார்த்துக்கொண்டே, அவள் இருந்த கவுண்டரை நெருங்க..
பிரத்யேகமான பர்ஃப்யூம் நறுமணத்துடன் கலந்த ஹரிக்கே உண்டான மணம், மிதிலாவின் நாசியை தீண்ட..
மறுவினாடி மிதிலாவின் உள்ளுணர்வுகள் விழித்துக் கொண்டன.
ஐந்து வருடங்களுக்கு முன்பு இருந்தே, வாசனை திரவியங்களுடன் கலந்த, ஆணவனின் பிரத்யோக மணம், மிதிலாவின் நினைவில் பசுமரத்தாணியாய் உள்ளதல்லவா!!
கண்களில் மின்னலுடன், அன்னிச்சையாக விழிகளை உயர்த்திய மிதிலா, சுற்றும் முற்றும் ஹரியை எங்கே என்று தேட..!!
அவளுடைய செயல்கள் அனைத்தையும் உள்வாங்கிக்கொண்டே இருந்த ஹரிக்கு அப்படி ஒரு ஆச்சரியம்..!!
தன்னை தான் தேடுகின்றாளா..??, என்ற அவனின் சந்தேகத்திற்கு அடுத்த கணமே பதில் கிடைத்து இருந்தது.
ஹரியை மிதிலா பார்த்துவிட்டு இருந்தாள்.
அந்நொடி, பல லட்சம் மின்னல்கள் தன்னிச்சையாக அவள் கண்களில் உருவாகியது, அவள் முகம் சட்டென்று பூத்துக்குலுங்கி, விகாசித்தது.
இம்முறை ஹரி கவனமாக, அவளிடம் உருவாகும் தனக்கான உணர்வுகளை, கொஞ்சமும் தவறவிடாது, மகிழ்ச்சியுடன் தன் கண்களால், படம் பிடித்து கொண்டான்.
ஹரியின் மன களிப்பிற்கோ அளவேயில்லை..!!
மிதிலாவோ ஓரிரு வினாடிகளிலேயே, சட்டென்று தன்னுடைய, செய்கைகளையும், உணர்வுகளையும், ஹரியின் ஆழ்ந்த கூர்மையான விழிகள், அளவிடுவதை உணர்ந்து, சுதாரித்துக்கொண்டாள்.
சட்டென்று தன் உணர்வுகள் அனைத்தையும் மறைத்து, முகத்தை நிர்மலமாக வைத்துக்கொண்டாள்.
ஹரியே ஒருகணம், இவ்வளவு நேரமும், தான் கண்டது பொய்யோ என்று எண்ணும் வகையில் இருந்தது அவள் செய்கை.
ஒரு முடிவுடன் அவளை நெருங்கிய ஹரியின், இதழோரம் புன்னகையில் துடித்துக்கொண்டு இருந்தது.
ஹரி அருகில் வந்ததும், மிதிலா கடமைக்காக, ஹரியிடம் ஒரு "ஹாய்"-யை, செயற்கை சிரிப்புடன் சொல்லிவிட்டு, பில் போட தொடங்கினாள்.
ஹரி ஒன்றும் பேசவில்லை.
அவள் பில் போட்டு முடித்ததும், பணம் செலுத்த, தன் கார்டை எடுத்து நீட்டினான்.
மிதிலா வாங்கி, ஆன்லைன் டிரான்ஸ்பர் செய்துவிட்டு, ஹரியிடம் கார்டை திருப்பி கொடுத்துவிட்டு, பொருட்கள் அடங்கிய பையை எடுத்து ஹரி உடைய கார்ட்டில்(cart) வைத்துவிட்டு "தேங்க்ஸ் ஃபார் ஷாப்பிங், அண்ட் ஹேவ் அ நைஸ் டே", என்றாள் உதட்டில் ஒட்டி வைத்த செயற்கை புன்னகையுடன்.
ஹரியை முன்பே பார்த்திருப்பது போலும், தெரிந்தவன் போலும், அவள் கடைசிவரை சுத்தமாக காண்பித்துக் கொள்ளவில்லை.
மிதிலாவிற்கு தன்மீது ஒரு கிரேஸ் இருக்கிறது என்பதை கண்கூடாக கண்டிருந்த ஹரிக்கு.. மிதிலாவின் இச்செய்கைகள் கொஞ்சம் கோபத்தை கொடுத்தது.
ஹரி தனக்கு பின்பு யாரேனும் இருக்கின்றார்களா..?? என்று திரும்பி பார்த்தான்.
ஒருவரும் இல்லை.
மறுகணம், மிதிலாவின் அருகில் நெருங்கி வந்த ஹரி, பட்டென்று அவள் எதிர்பாராத விதமாக, அவள் கையைப் பற்றி தன் அருகில் இழுத்தான்.
மிதிலா பதறியப்படி, அவன் அருகில் வந்து நிற்க..
அவள் காதருகே குனிந்த ஹரி, "ஹே ஹனி!!! ஹோப் யூ நோ மீ!! ", என்றுக்கேட்க..
மிதிலாவின் இதயம் வாய் வழியாக எகிறி குதிக்க பார்த்தது..
ஹரியை பொறுத்தவரை இதுதான், இருவருக்கும் இடையே நடக்கும், நெருக்கமான முதல் உரையாடல்.
ஆனால் மிதிலாவோ, திருச்சியில், தன்னை பார்த்ததை தான், ஹரி சொல்கின்றான், என்று நினைத்து பதறிவிட்டாள்,
அவள் பதட்டத்தை பார்த்த ஹரி, அவளை மேலும் நெருங்கி, அவளை தன் தோளுடன் லேசாக அணைத்து,
"ஏன் பேபி, என்னை பார்த்தாலே, இப்படி பயப்படுற, உன்னோட ஹார்ட் பீட், எனக்கே கேட்குது, ஈசி ஹனி, ஃபீல் ஈசி ", என்றான் இன்னும் இன்னும் அவளை நெருங்கி.
அவனுடைய நெருக்கமும், அருகில் ஒலிக்கும் குரலும், மேலும் மேலும், மிதிலாவை கலவரப்படுத்தியது, இதில் எங்கிருந்து அவள் ரிலாக்ஸாவது.
'தன்னை பார்த்து தான் ஏனோ பயப்படுகிறாள்,' என்று உணர்ந்த ஹரி, சில வினாடி சிந்தித்து, அவளை சமாதானப்படுத்த, பொதுவான விஷயம் பேச முடிவெடுத்து, "மாம்க்கு ரொம்ப உடம்பு சரி இல்லை பேபி, நீ ஏன் வரலை பார்க்கவே, மாம் உன்னை ரொம்பவே மிஸ் பண்றாங்க, உனக்கு என்ன ஆச்சு ஏன் வரலைன்னு பொலம்பிகிட்டே இருக்காங்க", என்று அவன் அவளை தேடி புலம்பிய கதையை, உல்டாவாக மாற்றி கதைவிட..
அன்னப்பூரணிக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறியதும், மிதிலா பதறி, "ஆன்ட்டிக்கு என்ன ஆச்சு, இப்ப எப்படி இருக்காங்க டாக்டர், அச்சோ, கண்டிப்பா இன்னைக்கு ஈவினிங் நான் வந்து பார்க்கிறேன், ஆன்ட்டி கிட்ட சொல்லுங்க..", என்றாள்.
நன்றி என்ற உணர்வு அவளுக்கும் இருக்கும் தானே..!!
ஹரி, "மாம்க்கு கொஞ்சம் ஓவர் பிளீடிங்கா இருக்கு இப்ப, என்னை தவிர வேற யாரும் கூட இல்லாததால், கொஞ்சம் லோன்லியாவும் ஃபீல் பண்றாங்க, சோ நீ வந்து பார்த்தா கொஞ்சம் பெட்டரா ஃபீல் பண்ணுவாங்கனு நினைக்கிறேன்", என்றான்.
உடனே மிதிலா, இதுவரை அன்னப்பூரணி தனக்கு கொடுத்த பணம், எவ்வளவு உதவியாக இருந்துள்ளது, அதைவிட அவர் எவ்வளவு பாசமாக பேசுவார், அவரை நிச்சயம் பார்த்துவிட்டு வரவேண்டும் என்று முடிவெடுத்து,
ஹரியிடம், "இன்னைக்கு ஈவ்னிங், மகியை பிக் அப் செய்துட்டு நேரா உங்க வீட்டுக்கு வந்து, ஆன்ட்டியை பார்க்கிறேன் டாக்டர். அவங்க கிட்ட சொல்லிடுங்க. எனக்கு இந்தளவுக்கு உடம்பு முடியாம இருப்பாங்கன்னு தெரியாது..", என்றாள் வருத்தமாக.
அவள் இந்தளவிற்கு பேசியதே போதும், அடுத்து என்னவென்று வீட்டில் வைத்து, நேரடியாக பேசி முடிவு எடுத்துக்கொள்ளலாம்.. என்று முடிவெடுத்த ஹரியும், மிதிலாவிடம் "ஓகே பாய்.. ஈவ்னிங் பார்க்கலாம்", என்று சொல்லிவிட்டு, அவனுடைய ஷாப்பிங் வண்டியை தள்ளிக்கொண்டு செல்ல துவங்கினான்.
ஹரியையே பார்த்துக்கொண்டு இருந்த மிதிலாவிற்கு ஏனோ அவன் பிரிந்ததும் உயிரே போனது போல் இருந்தது, அவனின் ஹனி, பேபி போன்ற அழைப்புகள், அவளுக்கு புரிந்தும் புரியாமலும் என்று கலந்த நிலை.
ஹரி, சட்டென்று நின்று மிதிலாவை திரும்பிப்பார்த்தான்.
ஹரி திரும்பி பார்த்ததும், ஒரு விநாடி திடுக்கிட்ட மிதிலா, பட்டென்று வழக்கம் போல் தன் முகத்தை மாற்றிக்கொண்டு, கம்யூட்டரில் ஏதோ பார்ப்பது போல் குனிந்துக்கொண்டாள்.
அவளுடைய செய்கையில், சுவாரசியம் ஆன ஹரி,
"இன்ட்ரஸ்டிங், இட்ஸ் வெரி இன்ட்ரஸ்டிங், ஹவ் கிரேசி ஷி ஈஸ், என்னை என்ன ஒன்னுமே தெரியாதவன்னு நினைச்சுட்டாளா..??", என்று நினைத்த ஹரி, மீண்டும் மிதிலாவை நோக்கி நடந்து வந்தான்.
அவன் அருகில் வந்ததும், தன்னை அவன் கண்டு கொண்டதை அறியாமல், மிதிலா ஹரியிடம், "என்ன டாக்டர், ஏதாவது வாங்க மறந்துட்டீங்களா", என்றாள் ஒன்றுமே தெரியாததுப்போல்.
அதில் அவனுக்கு இன்னுமே சிரிப்பு வந்தது.
ஹரி இல்லை என்று தலை அசைத்தான்.
மிதிலா, "வேற என்ன டாக்டர்", என்றுக்கேட்டு திருட்டு முழி முழிக்க..
'ஒழுங்கா நடிக்க கூட உனக்கு தெரியலை பேபி.. சோ ஸ்வீட்..', என்று மனதினுள் அவளை கொஞ்சிய ஹரி, "நீதான் பேபி சொல்லனும்", என்றான்.
மிதிலா உடனே, "என்ன, என்ன நான் சொல்ல வேண்டும்", என்றாள் திக்கி திணறி.
ஹரி மிதிலாவின் முகத்தின் மிக அருகில் வந்து, தன் ஆள்காட்டி விரலால், அவள் கண்ணை காண்பித்து, "இந்த கண்ணு, என்கிட்ட, வேற ஏதோ அப்பப்ப பேசுது, ஆனா உன்னோட மூளை அதை உடனே தடுக்குது, அதைவிட என்னை தெரியாத மாதிரி வேற ஏன் ஆக்ட் பண்ண ஃபர்ஸ்ட், நவ் ஐ நீட் கிளியர் ஆன்சர், ஃபிரம் யூ, உன் மனசுல என்ன இருக்கு", என்றான் நேரடியாக.
மிதிலாவோ, அகப்பட்டவுடன், இதற்கு என்ன ரியாக்ஷன் கொடுக்கவேண்டும் என்றே தெரியாமல், பேய் முழி முழித்தாள்…
அவளின் பாவனையில் மொத்தமாக விழுந்த ஹரி,
"ஹவ் இன்னசன்ட் அண்ட் டேன்ஜரஸ் ஷி ஈஸ்", என்று நினைத்துக்கொண்டான்.
திருதிருவென்று முழித்து கொண்டு இருந்தவளின், நெஞ்சின் இடதுபுறம் இதயத்தின் மீது, தன் ஆள்காட்டி விரலை அழுத்தமாக வைத்த ஹரி, "ஏன் உன் ஹார்ட் சொல்றத நீ கேட்க மாட்டற, பாரு எப்படி துடிக்குது, ", என்று கேட்க.
அவ்வளவு தான், ஹரியின் விரல் அவள் நெஞ்சின் அழுத்தமாக படிந்ததும், இன்னும் அதி வேகமாக அவள் இதயம் துடிக்கத் துவங்கியது.
மயக்கம் வரும் போல் ஆனது அவளுக்கு.
ஹரி அவனுடைய விரலை எடுக்காமலேயே, மீண்டும் அவள் காதோரம் குனிந்து, "ஆக்சிடோசின் ஹார்மோன் லெவல், உனக்கு ரொம்ப அதிகமா ஆயிடுச்சு போல பேபி, முகம் திடீர்னு பளபளன்னு பிங்கா மாறிடுச்சு, என்ன விஷயம் சொல்லு..", என்றுக்கேட்டான் குறும்புடன்..
அதற்கு என்ன பதில் சொல்வாள் பெண்ணவள்.
ஹரியின் தொடர் அதிரடி செயல்களினால், மொத்தமாக உறைநிலையிக்கே சென்று விட்டாள்.
கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது அவளுக்கு.
ஹரிக்கும், ஏன் இவ்வாறு நடக்கிறோம் என்று தெரியவில்லை அச்சமயம்.
ஆரம்பத்தில் விளையாட்டாக, மிதிலாவிடம், வம்பிழுக்க தொடங்கி, அது பாதைமாறி சென்று கொண்டு இருந்தது.
அவனின் நெருக்கமும், தொடுகையும், உரிமை பேச்சும், மிதிலாவை வேறொரு மாயலோகத்திற்கு அழைத்துச்சென்றது.
புரியாத உணர்வுகளில், சிக்கித் தவித்தாள், உடலில் ஒவ்வொரு அணுவிலும் ஏற்பட்ட புது புது மாற்றங்களால்.
20 வயதில் அந்தளவிற்கு முதிர்ச்சியும், போதிய அனுபவமும் இல்லை.
அதிலும் அவள் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக சந்தித்தவையும், தனிமையும் அவளை ஒரு கூட்டுக்குள் அடைத்து வைத்து இருந்தது.
இன்றோ ஹரியின் தொடர் தாக்குதல்கள், பெண்ணவளை அடுத்த கட்ட உணர்வுகளுக்கு எடுத்துச் சென்று இருந்தது.
என்ன, அதன் கணத்தை தான், சிறு பாவை அவளால் கொஞ்சமும் தாங்க முடியாமல் போனது.
அப்படி இப்படி கொஞ்சமும் அசையாது, ஹரியையின் கண்களையே, மந்திரத்திற்கு கட்டுண்டவள் போல், பார்த்துக்கொண்டு இருந்தாள்.
அப்பொழுது பார்த்து, அடுத்த ஆள் பில் போட கேஷ் கவுண்டரில் மிதிலாவை நோக்கி நெருங்கினார்.
அவரின் வரவை உணர்ந்த ஹரி, மிதிலாவின் தற்போதைய நிலையை மனதில் நினைத்து சிரித்துக்கொண்டு,
மிதிலாவின் காதில் ஹஸ்கி வாய்ஸில் "See you in the evening baby, get ready for everything okay, you can't hide anywhere here after, என்கிட்ட மாட்டிகிட்ட", என்றவன், பட்டும்படாமல் அவள் காதில் சிறு அழுத்தத்துடன், தன் உதட்டினால் ஒரு முத்தம் கொடுத்து, பித்தம் தலைக்கு ஏறி, "I'm Feeling Very Very Hot Now, I Need Some Air, Oh My God, Bye Baby ", என்றவன், இதற்கு மேல் இங்கு நிற்க முடியாது என்று புரிந்து, வெளியேறிவிட்டான்.
மிதிலாவோ அவன் கூறி சென்ற வார்த்தைகளின், பலனாய், செக்க சிவந்த செவ்வானமாக மாறி நின்று இருந்தாள்.
அவள் அடிவயிற்றிலோ ஹரியின் வார்த்தைகள், ஒவ்வொன்றும் பட்டாம்பூச்சியாக தன் சிறகை விரித்து பறந்தது.
எப்படியோ தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு, வந்து நின்ற கஸ்டமருக்கு, பில் போட தொடங்கினாள்.
கருத்துகள்
கருத்துரையிடுக