1. உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே!💕
உண்மை காதல் யாரென்றால்? உன்னை என்னை சொல்வேனே!💕
#Family_Based_Romantic_Tamil_Novel
#Intro🫰❤ அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த, பெண்கள் மகப்பேறு மருத்துவனான, டாக்டர் ஹரி கிருஷ்ணாவிற்கும், திருச்சியில் பள்ளியில் படிக்கும் பதின்ம வயது மிதிலாவிற்கும் இடையில் உருவாகப்போகும் ‘உண்மை காதல்’ பந்தமே இக்கதை❤️ Age Difference Love story🎬
Love 💌 + Romance💋 + Family🫂 + Action🎬 + twist🪢 + Happy Ending 😘
அத்தியாயம் 1
அதிகாலை 4 மணி. புரட்டாசி மாதத்தின் மெல்லிய இதமான காற்றும், அதிகாலைப் பொழுதிற்கே உரிய லேசான ஈரப்பதமும் திருச்சிராப்பள்ளியைத் தழுவிக்கொண்டிருக்க, ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலில் அந்த அதிகாலைப் பொழுது பரவசமாகத் தொடங்கியது.
“கதிரவன் குணதிசைச் சிகாமணி அணைந்தான்
கன இருள் அகன்றது காலைஅம் பொழுதாய்...”
என்று ரங்கநாதருக்குத் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருப்பள்ளியெழுச்சி பாடிக்கொண்டிருக்க, கூடவே "கோவிந்தா... கோவிந்தா..." எனப் பக்தர்களின் பக்திப் பெருக்குடன் கூடிய முழக்கமும், சுப்ரபாதத்தின் மெல்லிய ஒலியும் அந்தப் பிரகாரமெங்கும் எதிரொலித்தது.
விஷ்ணுவரதன், தன் மனைவி துளசி, மூத்த மகள் சங்கமித்ரா மற்றும் இளைய மகள் மிதிலாவுடன் பெருமாளைத் தரிசிக்க வரிசையில் நின்றிருந்தார்.
கூட்ட நெரிசல் வேறு சற்று அதிகமாக இருக்க, மிதிலா மித்ராவிடம், "எப்ப தான் மித்துக்கா இந்த பூஜை முடியும்?" என்று நிமிடத்திற்கு ஒருமுறை கேட்டு நச்சரித்துக் கொண்டே இருந்தாள்.
அதில் மித்ரா, "இன்னும் ஒரு அரை மணி நேரத்தில முடிஞ்சிடும் மிது. ஏன்டி இப்படி விடாம கேட்டுக்கிட்டே இருக்க?" என்று கேட்க,
மிதிலா, "புளி சாதம், பொங்கல் வாசனையெல்லாம் செமையா வருது மித்து. எனக்கு பயங்கரமா பசிக்குது. என்னால் கண்ட்ரோலே பண்ண முடியலை, அதான்" என்றாள் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு.
அதில் மித்ராவிற்குப் பக்கென்று சிரிப்பு வந்துவிட்டது.
இவர்கள் இருவரின் கவனமும் பெருமாள் மீது இல்லாததைக் கவனித்த துளசி, "கொஞ்ச நேரம் அமைதியா, பெருமாளைப் பார்த்து வேண்டிக்கோ மிது, ‘நல்ல மார்க் வாங்கணும்னு’. சும்மா பேசிக்கிட்டே இருக்காத. நீயும் தான் மித்து, அவ தான் சின்னப் பொண்ணுன்னா நீயும் அவகூட சேர்ந்து சிரிச்சிட்டு..." என்று மெல்லிய குரலில் அதட்ட,
அதைப் பார்த்த விஷ்ணு, உடனே மகளின் மனம் அறிந்து, மிதிலாவிடம், "என்னோட பிரசாதமும் உனக்கு தான் குட்டிமா, நீ இப்ப ஒழுங்கா சாமி கும்பிடு" என்றார்.
அவ்வளவுதான்! மிதிலாவின் முகத்தில் பல கோடி மின்னல்கள் தோன்றியது. 'அப்பாவின் பங்கையும் சேர்த்துச் சாப்பிடலாம்' என்ற உற்சாகத்தில், "தேர்வில் எல்லாப் பாடங்களிலும் முழு மதிப்பெண்கள் வாங்கிவிட வேண்டும்" என்று ரங்கநாதரிடம் கடகடவென வேண்ட ஆரம்பித்துவிட்டாள்.
நேரம் 5 மணியைத் தொட்டதும், மங்கள வாத்தியங்கள் முழங்க, ஐயர் தீபாராதனைத் தட்டை ஏந்தி வர, மிதிலா தன் கண்கள் மின்ன,
“பார்த்த விழி பார்த்த படி
பூத்து இருக்க
காத்திருந்த காட்சி
இங்கு காணக் கிடைக்க”
என்று குணா கமலைப் போன்று, அர்ச்சகரை வைத்த கண் வாங்காமல் பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.
அவர்களை நெருங்கிய அர்ச்சகர் தீர்த்தம், பூ மற்றும் குங்குமத்தை, கற்பூர ஆரத்தியுடன் சேர்த்து விஷ்ணு குடும்பத்திற்கு வழங்கினார்.
மிதிலா கொஞ்சம் கொஞ்சமாக, உள்ளங்கையில் இருந்த தீர்த்தத்தைச் சப்புக் கொட்டி குடித்துவிட்டு, அது தீர்ந்ததும் மித்ராவிடம், "ஏன் மித்துக்கா, இவ்வளோ கம்மியா தீர்த்தம் கொடுக்கறாங்க? கொஞ்சம் கூட கொடுத்தா தான் என்னவாம்? அட்லீஸ்ட் ஒரு குட்டி கப்லயாச்சும் தரலாம் இல்ல" என்று குறைப்பட்டுக் கொள்ள,
'உப்புமாவையே அசால்ட்டாக நான்கு தட்டுகள் உள்ளே தள்ளும் தன் தங்கை மிதுவிடம் இருந்து, வேறென்ன எதிர்பார்க்க முடியும்?' என்ற எண்ணத்தில் அவளைப் பார்த்து மித்து செல்லமாக முறைத்தாள்.
அடுத்துப் பிரசாதம் தரும் வரிசை ஆரம்பித்ததும், "சீக்கிரம் வாங்க வாங்க!" என்று மிதிலா அனைவரையும் அழைத்துச் சென்று வரிசையில் நின்று, கொடுத்த அனைத்தையும் வாங்கிக்கொண்டு, சமத்தாக ஒரு இடத்தில் அமர்ந்து உண்டு முடித்து, விஷ்ணுவின் பங்கையும் ஒரு கை பார்க்க ஆரம்பித்தாள்.
விஷ்ணுவரதன், ஒரு தனியார் நகைக் கடையில் கணக்குத் துறையில் பணியாற்றுகிறார்.
துளசி, இல்லத்தரசி. தையல் வேலை சிலவற்றை ஓய்வு நேரத்தில் வீட்டிலேயே பார்ப்பார். தெரிந்தவர்கள் யாராவது கேட்டால், சமையல் பொடி வகைகள், வத்தல் மற்றும் சிறிய அளவிலான பலகாரங்கள் செய்து கொடுப்பார்.
நடுத்தர வர்க்கக் குடும்பம் அவர்களுடையது.
அதிலிருந்து பிள்ளைகளை எப்படியாவது அடுத்த நிலைக்கு முன்னேற்றிக் கரைசேர்த்துவிட வேண்டும் என்று, சிக்கனமாக கோடுப்போட்டு, பல வருடங்களாக பிள்ளைகளின் கல்லூரி செலவிற்கும், திருமணத்திற்கும் சேர்த்து வைத்துக்கொண்டு வருகிறார்கள்.
பெரியவள் சங்கமித்ரா, வயது 18, கம்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். தோற்றத்திலும் சரி, குணத்திலும் சரி வெகுசாந்தமானவள். வீட்டின் மூத்த பிள்ளைகளுக்கே உரிய பக்குவமும், பொறுப்பும் அதிகம் கொண்டவள்.
சின்னவள் மிதிலா, வயது 15, இப்பொழுது தான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். பெரியவளுக்கு அப்படியே நேர் எதிர். தோற்றத்திலும் சரி, குணத்திலும் சரி.
நல்ல சதைப்பற்றுடன், பன்னீர் ரோஜா நிற கொழுகொழு கன்னங்கள் இரண்டும் ஆட, துறுதுறுவென்ற கருப்புத் திராட்சை போன்ற கருவிழிகளுடன், நன்கு அடர்த்தியான இரட்டை சடையில், நாலரையடி உயரத்தில் இருப்பவள், இன்னுமே வயதிற்கு ஏற்க குமரி முகத்திற்கு மாறாமல், குழந்தை முகத்துடனே தான் இருப்பாள்.
அதிலும் பேசும்போதே அவளுக்கு கன்னத்தில் நன்கு குழி விழும்.
அதைப் பார்க்கும் அவள் தோழிகள் முதல் சொந்தங்கள் வரை அனைவரும், அவளின் கன்னத்தைப் பிடித்து நன்கு கிள்ளி வைத்து விடுவார்கள்.
அதில் தினமும் துளசியிடம், “அம்மா, என் கன்னத்துக்கு மசாஜ் பண்ணி விடுங்க" என்றும்,
மித்ராவிடம், “மித்துக்கா, நான் எப்ப உன்னை மாதிரி ஒல்லி ஆவேன்? பேசாமல் நாம இரண்டு பேரும் உடம்பை மாத்திக்கலாமா?” என்றும் நச்சரித்துக்கொண்டு இருப்பாள்.
மித்ராவும் சிறிதும் சலிக்காமல், “நீ இப்படியே டெடிபியர் பொம்மை மாதிரியே கியூட்டா இரு மிதுக்குட்டி. அதுதான் ரொம்ப அழகா இருக்கும்” என்று தங்கையை சமாதானம் செய்து அணைத்துக் கொள்வாள். “ஏ டெடியா நான்” என்று மிதிலா சந்தோஷத்தில் மித்ராவிற்கு எண்ணற்ற முத்தங்களை தந்து தள்ளிவிடுவாள்.
தாய், தந்தை மற்றும் அக்கா என்ற சிறிய பாச கூட்டினுள் எதைப்பற்றிய கவலையும் சிறிதும் இல்லாமல், சந்தோஷமாகப் பட்டாம்பூச்சியைப் போன்று சுற்றித் திரியும் மிதிலா, உடன் இருப்பவர்களையும் அதே சந்தோஷத்துடனே வைத்துக்கொள்வாள்.
சங்கமித்ராவிற்கு இளங்கலை கணினி அறிவியல் படித்துவிட்டு, அரசுப் பள்ளியில் கணினி ஆசிரியர் ஆக வேண்டும் என்பது ஆசை. விஷ்ணு பொறியியல் இல்லை மருத்துவத்திற்குப் படிக்கச் சொன்னதற்கு, "வேண்டாம் ப்பா, எனக்கு உங்களைப் போல் ஒரு அமைதியான, மன அழுத்தம் அதிகம் இல்லாத, வேலை தான் விருப்பம்" என்று தெளிவாகக் கூறிவிட்டு இருந்தாள்.
மிதிலாவிற்கோ நல்ல மதிப்பெண் பத்தாவதில் எடுத்து, எப்படியாவது பன்னிரண்டாம் வகுப்பில் பயாலஜி பிரிவு படித்து, MBBS சீட் வாங்கி விட வேண்டும் என்ற பெரிய ஆசை. குழந்தைகள் நல மருத்துவர் ஆக வேண்டும் என்பது அவள் கனவு.
பிள்ளைகள் இருவரின் லட்சியத்தை நோக்கியே அக்குடும்பத்தின் பயணம் இப்பொழுது.
_____________
கோவிலில் இருந்து வீட்டிற்கு அனைவரும் வந்து சேர்ந்ததும், வீட்டிலேயே அதிகாலையில், காலை உணவாகச் செய்து வைத்திருந்ததை, துளசி மூவருக்கும் பரிமாறினார்.
மிதிலா பட்டுப்பாவாடை சட்டை அணிந்து, பள்ளிக்குச் செல்ல வசதியாக இரட்டை சடை அணிந்தே கோவிலுக்குக் கிளம்பி இருந்தாள்.
அதில் சுலபமாகப் பள்ளிச் சீருடைக்கு மாறித் தயாராகி விட்டவள், "சீக்கிரம் வா மித்துக்கா, மிஸ் திட்டுவாங்க, கேட் மூடிடுவாங்க!" என்று மித்ராவை அவசரப்படுத்திக் கொண்டிருந்தாள்.
மித்ராவோ தாவணி அணிந்து கோவிலுக்குச் சென்று இருந்ததால், தாவணிக்கு ஏற்ப முடியை ஒற்றைப் பின்னலிட்டு இருந்தாள். அதைப்பள்ளிக்குச் செல்ல இரட்டை சடையாக மாற்ற சற்று நேரமாகிவிட்டது.
அதற்குள்ளே காலில் வெந்நீர் ஊற்றிக்கொண்டதைப் போல் குதித்து, அவளை ஒருவழி செய்துவிட்டிருந்த மிதிலா, அப்பொழுதும் தப்பித் தவறிக்கூடத் தன் அக்காவை விட்டுவிட்டுச் செல்லலாம் என்று நினைக்கவில்லை.
_____________
அன்று மாலை 5 மணிக்கு மிதிலா மற்றும் மித்ரா, ஒன்றாக ஐந்து மணிக்கு பள்ளியில் இருந்து வீட்டிற்கு கிளம்பினர்.
மித்ரா, "ஹே மிது இன்னைக்கு யார் முதலில் வீட்டுக்கு போறோம்னு பார்க்கலாமா?" என்றாள்.
மிதிலா உடனே, "ஹே ஜாலி ஜாலி மித்து, ஓகே வா, யார் ஃபர்ஸ்ட் போறாங்கன்னு பார்க்கலாம்" என்றவள், விரைந்து சைக்கிளை செலுத்தினாள்.
அவள் மனதில், வீட்டிற்கு சென்றால் அம்மா ஸ்னாக்ஸ் கொடுப்பார்கள் என்ற எண்ணமே அதிகமாக இருந்தது, அதிலேயே விரைவாக சைக்கிளை மிதித்து முதலில் வீட்டிற்கு வந்து விட்டாள்.
பின் வந்து சேர்ந்த மித்ராவை கலாய்த்தப்படி ஆர்ப்பாட்டத்துடன் மிது வீட்டிற்குள் நுழைய,
"வாங்க வாங்க” என்ற துளசி, “என்ன இன்னைக்கு ரெண்டு குட்டியும் சீக்கிரம் வந்துட்டீங்க. சரி போயிட்டு கை, கால் அலம்பிட்டு வாங்க, அம்மா உங்களுக்கு சாப்பிட எடுத்து வைக்கறேன்" என்று அவர்களின் சாப்பாட்டு கூடையை வாங்கிக்கொண்டு சமையல் அறைக்குள் செல்ல.
மிதிலாவும், மித்ராவும் பின்பக்க தோட்டத்திற்கு சென்று கைகால், முகம் என அனைத்தையும் கழுவிக்கொண்டு, பள்ளி சீருடையை மாற்றிக்கொண்டு வந்தனர்.
வீட்டின் மையப்பகுதியில் இருந்த ஊஞ்சலில், துளசி பால் மற்றும் சிற்றுண்டி தட்டை இருவருக்கும் தயாராக வைத்திருக்க.
துள்ளி குதித்து வந்த மிதிலா, முதலில் பாதாம், முந்திரி மற்றும் ஏலக்காய் தட்டிப்போட்டு தயாரித்திருந்த மசாலா பாலை, கையில் எடுத்து, அதை ஆழ்ந்து ஒருமுறை வாசம் பிடித்து, "ம்மா செமையா இருக்கு மா, எப்படிம்மா நீங்க மட்டும் இவ்வளவு சூப்பரா சமைக்கறீங்க" என்றப்படியே, பொறுமையாக ஊதி ஊதி ரசித்து ருசித்து குடிக்க ஆரம்பிக்க.
மகளின் பாராட்டில் துளசிக்கு இருந்த கொஞ்ச நஞ்ச வேலை அலுப்பும் பறந்துவிட்டது.
சிறிது நேரத்திலேயே, மித்ரா மாலை டியூஷனுக்கு கிளம்பிவிட, மாலை விளக்கு வைத்து, பூஜை முடித்துவிட்டு வந்த துளசி, மிதிலா இன்னும் ஊஞ்சலில் ஆடிக்கொண்டு இருப்பதை பார்த்து,
"மிதுக்குட்டி, எவ்ளோ நேரம் தான் விளையாடுவ? போதும் படிக்க உட்காரு. இப்ப விளையாடிட்டு, அப்புறம் மார்க் குறைஞ்சிடுச்சுன்னு வந்து அழுவ" என்று அவளை முடுக்க.
உடனே விளையாட்டை கைவிட்ட மிதிலா, ஓடிச்சென்று புத்தக பையை எடுத்துக்கொண்டு வந்து அமர்ந்து, ஹோம் ஒர்க் செய்ய ஆரம்பித்து விட்டாள்.
அதைப்பார்த்த துளசி, புன்னகையுடன் இரவு உணவு தயாரிக்க சமையலறைக்குள் சென்றுவிட்டார்.
பதினைந்து வயதை தொட்டுவிட்ட மிதிலா இன்னும் பூப்பெய்தவில்லை. அதற்கான அறிகுறிகளும் இதுவரை அவளிடம் தென்பட்டது இல்லை.
அதில் தான் துளசிக்கு, பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடக்கும் சமயத்தில் அவள் பூப்பெய்துவிட்டால் என்ன செய்வது, அவளால் சரியாக படிக்க முடியாமல் போய்விடுமோ என்று ஒரு பயம். மற்ற நேரங்களில் நன்கு துள்ளி திரிபவள் சிறிதாக சளி, காய்ச்சல் வந்தால் கூட தாங்க முடியாமல் மொத்தமாக சுருண்டுவிடுவாள். அப்படியான உடல்வாகுடன் இருப்பவள் புது உடல் மாற்றத்தை எப்படி எதிர்கொள்வாள் என்று தெரியாது அல்லவா?
அவர்கள் பள்ளியில் வேறு மிகவும் கெடுபிடி, 95 சதவீதம் மேல் மதிப்பெண் எடுத்தால் தான் பயோலஜி குரூப் கிடைக்கும்.
அதுகிடைத்தால் தான் மிதிலாவால் அவளுக்கு பிடித்த டாக்டருக்கு படிக்க முடியும்.
அதனாலேயே துளசி, காரணம் இதுவென்று வெளியில் சொல்லாமல், அவளை தினமும் படிக்க கூறிக்கொண்டு இருப்பார்.
அதேநேரம், இந்தியாவிலிருந்து பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் அமெரிக்காவிற்கு, அப்பொழுது தான் விடியல் தொடங்கி இருந்தது.
அன்புடன்
சுவாதி லக்ஷ்மி 💕

கருத்துகள்
கருத்துரையிடுக