உண்மை காதல் -1
உண்மை காதல் யாரென்றால்??
உன்னை என்னை சொல்வேனே!!
🔴 எச்சரிக்கை: என் கதைகளை, Fair Use என்ற பெயரில் என் அனுமதியின்றி எடுத்து யூ-டியூப் போன்ற செயலியில் ஆடியோ நாவலாக யாரேனும் பதிவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். என் கதைகள் அனைத்திற்கும் Copyrights உள்ளது. ஏற்கனவே YouTube-ல் "Swathi Lakshmi Tamil Audio Novels" என்ற சேனலில், என் கதைகள் ஆடியோ வடிவில் உள்ளன. அதில் இருந்தும், அமேசான் மூலமும் Copyright Strike கொடுத்து, யூடியூப் சேனலை முடக்க செய்யவும், சட்டப்படி நடவடிக்கையும் எடுக்க முடியும்.🔴
அத்தியாயம் -1
வருடம் 2018, அதிகாலை 4 மணிக்கு, மார்கழி மாதம், முதல் நாள், திருச்சிராப்பள்ளியில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலில்,
கௌசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்
உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த
உத்திஷ்ட கருடத்வஜ
உத்திஷ்ட கமலா காந்தா
த்ரைலோக்யம் மங்களம் குரு
என்று, ரங்கநாதருக்கு திருப்பள்ளியெழுச்சி பாடிக் கொண்டிருந்தனர்.
அதில் விஷ்ணுவரதன், அவர் மனைவி துளசி, மூத்த மகள் சங்கமித்ரா மற்றும் இளைய மகள் மிதிலாவுடன், குடும்பமாக பெருமாளை தரிசிக்க நின்று இருந்தார்.
கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது.
அப்பொழுது மிதிலா மித்ராவிடம், "எப்ப தான் மித்துக்கா இந்த பூஜை முடியும்" என்று நிமிடத்திற்கு ஒருமுறை கேட்டு நச்சரித்துக் கொண்டே இருந்தாள்.
மித்ரா, "இன்னும் ஒரு அரை மணி நேரத்தில முடிஞ்சுடும் மிது… கொஞ்சம் பொறேன் டி.. ஏன்டி இப்படி விடாம கேட்டுகிட்டே இருக்க??.." என்றுக்கேட்க..
மிதிலா, "புளி சாதம், பொங்கல் வாசனையெல்லாம் செமையா வருது மித்து, பயங்கரமா பசிக்குது.. என்னால கன்ட்ரோலே பண்ண முடியலை.. அதான்", என்றாள், பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு..
அதில் மித்ராவிற்கு, படக்கென்று சிரிப்பு வந்துவிட்டது..
இவர்கள் இருவரின் கவனமும் பெருமாள் மீது இல்லாததை கவனித்த துளசி, "கொஞ்ச நேரம் அமைதியா, பெருமாள பார்த்து வேண்டிக்கோ மிது, நல்ல மார்க் வாங்கனும்னு, சும்மா பேசிக்கிட்டே இருக்காத, நீயும் தான் மித்து.. அவ தான் சின்ன பொண்ணுனா நீயும் அவக்கூட சேர்ந்து சிரிச்சுட்டு" என்று அரட்ட ..
அதை பார்த்த விஷ்ணு, உடனே மகளின் மனம் அறிந்து, மிதிலாவிடம், "என்னோட பிரசாதமும் உனக்கு தான் குட்டிமா… நீங்க இப்ப ஒழுங்கா சாமி கும்பிடுங்க" என்றார்..
அதில் மிதிலாவின் முகத்தில் பல கோடி மின்னல்கள் தோன்றியது..
இதற்கும் சேர்த்து கடவுளிடம் நன்றி உரைத்தப்படி, எக்ஸாமில் எல்லா சப்ஜெக்டிலும், முழு மதிப்பெண்கள் வாங்கிவிட வேண்டும் என்று வேண்ட ஆரம்பித்துவிட்டாள்..
இப்படியே நிமிடங்கள் பல கடக்க…
காலை 5 மணி அளவில் எல்லா சிறப்பு பூஜையும் முடிந்து, ஐயர் தீபாராதனை தட்டை மக்களை நோக்கி எடுத்து வர ஆரம்பித்தார்…
அதில் மிதிலா தன் கண்கள் மின்ன..
பார்த்த விழி பார்த்த படி
பூத்து இருக்க
காத்திருந்த காட்சி
இங்கு காணக் கிடைக்க
என்று குணா கமலை போன்று, ஐயரை வைத்த கண் வாங்காமல் பார்க்க..
ஐயர் தீர்த்தம், பூ மற்றும் குங்குமத்தை, கற்பூர ஆரத்தியுடன் விஷ்ணு குடும்பத்திற்கு வழங்கினார்.
மிதிலாவோ, கொஞ்சம் கொஞ்சமாக, உள்ளங்கையில் இருந்த தீர்த்தத்தை சப்புக் கொட்டி குடித்துவிட்டு, தீர்ந்ததும்,
மித்ராவிடம் "ஏன் மித்துக்கா.. இவ்வளோ கம்மியா தீர்த்தம் கொடுக்கறாங்க, கொஞ்சம் கூட கொடுத்தா தான் என்னவாம், அட்லீஸ்ட் ஒரு குட்டி கப்லயாச்சும் தரலாம் இல்ல", என்று குறைபட்டுக் கொள்ள...
'உப்புமாவையே அசால்ட்டாக நான்கு பிளேட், உள்ளே தள்ளும் தன் தங்கை மிதுவிடம் இருந்து, வேறென்ன எதிர் பார்க்க முடியும்', என்ற எண்ணத்தில் அவளை பார்த்து மித்து செல்லமாக முறைத்தாள்.
அடுத்து பிரசாதம் தரும் வரிசை ஆரம்பித்ததும், "சீக்கிரம் வாங்க வாங்க" என்று மிதிலா அனைவரையும் அழைத்து சென்று வரிசையில் நின்று, மிளகு பொங்கல், புளியோதரை, சர்க்கரை பொங்கல், சுண்டல் என்று கொடுத்த அனைத்தையும் வாங்கி வந்து, பொந்தாக ஒரு இடத்தில் அமர்ந்து உண்டு முடித்து, விஷ்ணுவின் பங்கையும் வாங்கி பொறுமையாக ருசித்து ரசித்து உள்ளே இறக்க ஆரம்பித்தாள்...
அப்பொழுது துளசி, அவளிடம், "சின்ன குட்டி சீக்கிரம் சாப்பிட்டு முடிடா, அப்பா ஆபீஸ் போகணும், நீங்க ரெண்டு பேரும் ஸ்கூல் போகணும், இல்லனா லேட் ஆகும்", என்று அவசரப்படுத்த.
ஒரு வழியாக கோவிலில் எல்லாம் முடித்துக்கொண்டு, ஆட்டோவில் 4 பேரும் வீட்டுக்கு கிளம்பினார்கள்.
விஷ்ணுவின் குடும்பத்தை பற்றி அதற்குள் நாம் பார்ப்போம்.
விஷ்ணுவரதன் ஒரு தனியார் நகை கடையில், கணக்கு பிரிவில் பணியாற்றுகிறார்.
துளசி இல்லத்தரசி, தையல் வேலை சிலது ஓய்வு நேரத்தில் வீட்டிலே பார்ப்பார், பிறகு தெரிந்தவர்கள் யாராவது கேட்டால், சமையல் பொடி வகைகள், வத்தல் மற்றும் சிறிய அளவிலான பலகாரங்கள் என்று செய்து கொடுப்பார்.
முத்த மகள் சங்கமித்ரா, வயது 18, கம்ப்யூட்டர் சயின்ஸ் டிபார்ட்மெண்டில், பிளஸ்-2 படித்துக் கொண்டிருக்கிறாள்.
சின்னவள் மிதிலா, வயது 15, இப்பொழுது தான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். அவள் தான் நம் கதையின் நாயகி.
பாலில் சிறு துளி எலுமிச்சம் நிறம் சேர்த்த போல் கலவையான நிறத்தில் மித்ரா இருப்பாள். அந்நிறமே அவளைப் பார்ப்பவர்களுக்கு மிகவும் தெய்வீகமான, சாந்தமான பெண்ணாக காட்டும். அதுதான் அவளின் குணமும்.
சின்னவள் மிதிலாவோ,
இன்னுமே பால் முகம் மாறாது, கொஞ்சம் சதைப்பற்றுடன் சப்பியாக(chubby), நல்ல பன்னீர் ரோஜா நிறத்தில், அழகான கருப்பு திராட்சை போன்ற பெரிய கண்மணிகளுடன், நாலரை அடி உயரத்தில், பார்ப்பவர்களுக்கு ஒரு க்யூட்டான டெடிபியர் போல் இருப்பாள். அதிலும் மிதிலாவிற்கு பேசும்போதே கன்னத்தில் குழி விழும். அதை பார்ப்பவர்கள் அனைவரும், நிச்சயம் தங்களை மீறி நன்றாக அவளின் புசுபுசுவென்ற கன்னத்தை கிள்ளி விட்டு விடுவர்.. எதைப்பற்றியும் கவலைப்படாமல் மிகவும் சந்தோஷமாக பட்டாம்பூச்சியை போன்று, எப்பொழுதும் திரிந்துக் கொண்டிருப்பாள்..
விஷ்ணு குடும்பம், மத்தியதரத்து வர்க்கத்தை (middle class) சார்ந்தவர்கள்.
விஷ்ணுவிற்கு அவர் மனைவி மற்றும் மகள்களே உலகம். பிள்ளைகளும் பெற்றவர்களின் தகுதி மற்றும் ஆசைகள் அறிந்து நல்ல முறையில் வளர்ந்து வருகின்றனர்.
விஷ்ணு அவர் சம்பளத்தில், மாதாமாதம் பாதியை, இரு பெண்கள் மீதும், நகை சீட்டு அவர் கடையிலேயே கட்டுவிட்டு, மீதியை இரு பெண்களுக்கும் கல்லூரி செலவிற்கு என்று சேமித்து வருகிறார்..
கிராமத்தில் பரம்பரை சொத்தாக ஒரு வீடும், 5 ஏக்கர் நிலமும் இருக்க, அதை குத்தகைக்கு விட்டுள்ளனர். அரிசி, உளுந்து மற்றும் எண்ணெய் பயிர்கள் என்று முக்கிய பொருட்கள் குத்தகை நிலத்திலிருந்து கிடைத்துவிடும். அதுப்போக துளசியின் வருமானம் வர..
இருப்பதை வைத்து, நிம்மதியாக திருப்தியாக வாழ்க்கையை, ஒரு கூட்டுக்குள் கடக்கின்றனர்..
சங்கமித்ராவிற்கு பிஎஸ்சி(B.Sc) கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு, அரசு பள்ளியில் ஆசிரியர் ஆக வேண்டும் என்பது ஆசை. விஷ்ணு இன்ஜினியர் அல்லது டாக்டர் படிக்க சொன்னதற்கு, வேண்டாம் எனக்கு உங்களை போல் ஒரு அமைதியான, மன அழுத்தம் இல்லாத, பணி மற்றும் குடும்ப வாழ்வே விருப்பம் என்று விட்டாள்.
மிதிலாவிற்கோ நல்ல மதிப்பெண் பத்தாவதில் எடுத்து ,எப்படியாவது பிளஸ்-2வில் பயாலஜி குரூப் படித்து, டாக்டர் சீட் வாங்கி விட வேண்டும். குழந்தைகள் நல மருத்துவர் ஆக வேண்டும் என்பது அவள் கனவு.
அதை நோக்கியே அக்குடும்பத்தின் பயணம் இப்பொழுது…
கோவிலில் இருந்து வீட்டிற்கு அனைவரும் வந்து சேர்ந்ததும், வீட்டிலேயே அதிகாலையில், காலைக்கு என்று செய்து வைத்த உணவை, துளசி மூவருக்கும் பரிமாறினார்.
மிதிலா பட்டுப்பாவாடை சட்டை அணிந்து.. பள்ளிக்கு செல்ல வசதியாக இரட்டை சடை அணிந்தே.. கோவிலுக்குச் சென்று இருந்தாள்.
அதனால் சுலபமாக பள்ளி சீருடை மாற்றிவிட்டு, ரெடியாகிவிட்டாள்.
அவள் தயாரானதும், மித்ராவை அவசரப்படுத்தி கொண்டிருந்தாள், "சீக்கிரம் வா வா.. மிஸ் திட்டுவாங்க.. கேட்ட மூடிடுவாங்க " என்று…
மித்ராவோ தாவணி அணிந்து கோவிலுக்குச் சென்று இருந்ததால், தாவணிக்கு ஏற்ப முடியை ஒற்றை பின்னலிட்டு இருந்தாள். அதை பள்ளிக்குச் செல்ல இரட்டை சடையாக மாற்ற நேரம் ஆகிவிட்டது.
அதற்குள் அவள் உயிரை சின்னவள் எடுக்க ஆரம்பித்துவிட்டாள்..
ஒருவழியாக அனைவரும், காலை தயாராகி வீட்டில் இருந்து கிளம்பிவிட்டனர்..
இனி விஷ்ணுவின் குடும்பத்துடன் நாமும் செல்லலாம்!!
********************************
இடம்: சியாட்டில், வாஷிங்டன் மாநிலம், அமெரிக்கா.
அன்னபூரணி, அவரது மகன் ஹரி கிருஷ்ணாவிடம், இன்று மட்டும் மருத்துவமனைக்கு பகுதிநேர விடுப்பு எடுத்துக்கொண்டு, அவருடன் மார்கழி மாத சிறப்பு பூஜைக்கு, அங்குள்ள பெருமாள் கோவிலுக்கு வருமாறு கெஞ்சிக்கொண்டு இருந்தார்.
ஹரியோ, "நோ மாம், இன்னைக்கு நிறைய அப்பாயிண்ட்மென்ட்ஸ் இருக்கு.., நான் உங்களுக்கு Uber- ல் கார் புக் செய்து தரேன், நீங்க பொறுமையா போயிட்டு வாங்க, எனக்கும் சேர்த்து நீங்களே வேண்டிக்கோங்க.. ", என்று சமாதானம் செய்து கொண்டிருந்தான்.
அன்னபூரணி, "ஹரி கண்ணா.. அம்மாக்காக ஒரே ஒரு நாள், பர்மீஷன் கேட்டு.. வர கூடாதா ?", என்றார், முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு.
அதற்கு ஹரி "சாரி மாம், நான் தான் போகனும் சொல்றேன் இல்ல.. குழந்தைமாதிரி இப்படிலாம் என்னை கார்னர் பண்ணாதீங்க, பிளீஸ்..
அங்க எனக்காக ஹாஸ்பிட்டல்ல, என்னோட பேஷன்ட்ஸ், முன்னாடியே என்னை மட்டுமே பார்க்க வேண்டும்னு, அப்பாயின்மென்ட் கேட்டுவாங்கி, வந்து காத்து இருப்பாங்க...
நான் போகலைனா, அவங்களுக்கு வேற டாக்டரை போடுவாங்க, அதனால் என்னை பார்க்க வந்தவங்களுக்கு கஷ்டம்... பிரக்னன்ட்டா இருக்க லேடிஸ்க்கு இது வேற தேவையில்லாத ஸ்ட்ரெஸ்.. சோ கோவிலுக்கு இப்போ போறதை விட.. என்னை பார்க்க வரும் பேஷண்ட்ஸை பார்க்கிறது தான் நல்லது, பிளீஸ் திங்க் பிராக்டிகலி மாம்", என்றான்.. பொறுமையாக.
அன்னபூரணிக்கு ஹரி சொல்வது புரிந்தாலும்.. சராசரி மனுஷியாக.. நல்ல நாள் அதுவுமாக மகனுடன் செல்ல ஆசைக்கொண்டார்..…
அவர் முகம் சட்டென்று வாடுவதை தாங்க முடியாமல்..
மீண்டும் ஹரி,"மாம், கோச்சிகாதிங்க பிளீஸ், இந்த வாரம் சன்டே, நாம கோவில், ஷாப்பிங், பீச் (Beach) எல்லாம் போகலாம், பிளீஸ் மாம் புரிஞ்சிக்கோங்க..", என்று சமாதானம் செய்ய..
ஒருவழியாக அன்னபூரணி தனியாக செல்வதற்கு ஒத்துக்கொண்டார்.
வேறுவழி…
பிறகு ஹரிக்கு அன்னபூரணி காலை உணவை பரிமாறிவிட்டு. கோவில் செல்ல மெல்லிய காஞ்சிபுர பட்டுப் புடவை அணிந்து கொண்டு கிளம்பி வந்தார்.
ஹரி சொன்னபடி அவருக்கு கேப்(cab) புக் செய்து பத்திரமாக அனுப்பி வைத்தான்.
ஹரிகிருஷ்ணா, மகப்பேறு மருத்துவனாக உள்ளான். அவனிடம் பிரசவம், குழந்தையின்மை மற்றும் பெண்களின் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், ஹார்மோன் மாற்றத்தால் வரும் மூட் ஸ்வீங்க்ஸ், அதற்கான கவுன்சிலிங் என்று அனைத்து வயது பெண்களும் சிகிச்சைக்கு வருவர்.
பிராக்டீஸ் செய்ய ஆரம்பித்த கடந்த ஐந்து வருடங்களில் டாக்டர் ஹரிகிருஷ்ணா என்றாலே, சியாட்டிலில்(Seattle) உள்ள இந்தியர்கள் அனைவருக்கும், தெரியும் அளவிற்கு வளர்ச்சி அடைந்து இருந்தான்.
அன்னப்பூரணி, சென்றவுடன்.. ஹரி கிளம்புவதற்கு தயாராக அவனுடைய அறைக்கு சென்றான்..
அவன் பணிபுரியும், மருத்துவமனையின், மருத்துவர்களுக்கான, தனி யூனிபார்ம் உடையை முதலில் எடுத்து அணிந்தான்.
அந்த இளம் நீல நிற உடை ஹரியின் உடலுக்கு கனக்கச்சிதமாக பொருந்தியது.
உடையை அணிந்து கொண்டு, ட்ரெஸ்ஸிங் டேபிள் முன் சென்று, ஹேர் ஜெல் வைத்து தலையை அழகாக செட் செய்துவிட்டு.. Ralph Lauren மென்ஸ் பர்ஃப்யூம் ஐ எடுத்து உடலில் அடித்தான்,
அடுத்து கையில் வெள்ளை நிற ஆப்பிள் வாட்ச் எடுத்து கட்டிக்கொண்டு, கடைசியாக காலில் வெள்ளை நிற ஸ்போர்ட்ஸ் ஷுவை ஷு ரேக்கிலிருந்து எடுத்து அணிந்து கொண்டு, கண்ணாடியில் மீண்டும் ஒருமுறை அனைத்தையும் சரி பார்த்து விட்டு, மொபைலை எடுத்து கொண்டு அறையை விட்டு வெளியே வந்தவன், garage-ல் இருந்து, அவனது டெஸ்லா ரோட்ஸ்டர் ஆட்டோமேட்டிக் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காரை வெளியே எடுத்து, ஸ்டார்ட் செய்து, அவனது மருத்துவமனை முகவரியை கூகிள் மேப்பில்(google map) போட்டான், கார் ஆட்டோமேட்டிக்காக செல்ல துவங்கியது.
ஹரி வயது 30, ஆறடிக்கு கொஞ்சம் கூடுதலான உயரம், அமெரிக்க வெப்பநிலைக்கு ஏற்ப, நல்ல நிறமாக, முகத்தில் முழுமையாக தாடி மற்றும் மீசையை ஷேவ் செய்து, அலை அலையான சிகையை ப்ரொபஷனல் ஹேர் கட் செய்து, எங்கேயும் உடலில் எக்ஸ்ட்ரா சதை என்பது இல்லாமல், வெயிட் லிப்டிங் தினமும் செய்வதால் வந்த கையின் முறுக்கு தசைகளுடனும், தொடர் உடற்பயிற்சியினால் உருவாக்கிய சிக்ஸ் பேக்குடனும், பார்க்க ஹாட் அன்ட் ரொமான்டிக், சாக்லேட் பாய் லுக்குடன், மிகவும் வசீகரமாகவும், அதே சமயம் பார்க்க ஆண்மை நிறைந்து மேன்லி யாகவும்(manly) இருப்பான். மருத்துவன் வேறு சொல்லவும் வேண்டுமா??…
அதிலும் அவன் கண்களின் மத்திய லென்ஸ் பெரியதாக, அடர் ப்ரவுன் நிறத்தில், மிகவும் கூர்மையான இருக்கும். அது அவனின் தனி சிறப்பு…
எளிதில் எதிரில் இருப்பவரை ஹிப்னோட்டிசம் செய்யும் மெஸ்மரைசிங் பிரௌன் ஐஸ்.. அவனிடம் கவுன்சிலிங் எடுக்க வரும் நோயாளிகள் பலர் அவனிடம் மகுடிக்கு கட்டுண்ட பாம்பாக அடங்குவதற்கு முக்கிய காரணம் அவனின் விழிகள்.
திருச்சியில் உள்ள இளம் தென்றல், அதை நோக்கி தான் ஈர்க்கப்படுவாளோ என்னவோ…!!
காரில் இளையராஜாவின்,
தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்புல
பாடல் ஒலித்துக்கொண்டு இருந்தது.
மருத்துவ மனைக்கு செல்லும் பொழுது மனம் அமைதியாக இருக்க வேண்டும் என்று, தினமும் ஹரி மெலோடி வகை பாட்டுகளை தமிழிலும், ஆங்கிலத்திலும் கேட்டுக்கொண்டே செல்வான்..
கார் ஸ்வீடிஷ் மெடிக்கல் சென்டரை (Swedish medical center) அடைந்து, அவனுக்குரிய பார்க்கிங்கில் ஆட்டோமேட்டிக்காக சரியாக நின்றது.
ஹரி மருத்துவமனைக்குள் நுழைந்து முதல் வேலையாக, தொலைபேசியை ஆஃப் செய்துவிட்டு, அறைக்குள் போனதும், அவனது உதவி செவிலியர் எமி வந்து, அப்பாயிண்ட்மெண்ட் தகவல்களை சொல்ல ஆரம்பித்தார்.
அதைத்தொடர்ந்து நோயாளிகள் வரிசையாக வர ஆரம்பித்தனர்.. அவனை வேலைகள் இழுத்து கொண்டது.
பிறகு மதிய உணவு இடைவேளையின்போது, தொலைபேசியை ஆன் செய்து, அன்னபூரணிக்கு கால் செய்தான், அவர் பத்திரமாக கோவிலுக்கு சென்று.. அதே காரில் திரும்பி விட்டதாக சொன்னவுடன், நிம்மதியாக வைத்துவிட்டான்.
ஹரி மதிய உணவை ஃபுட் கோர்ட்டில், முடித்துக்கொண்டு, சிறிது நேரம் ஓய்வெடுக்க ஓய்வு அறைக்குள் சென்றான்
அங்கு அவனுடன் பணிபுரியும் மற்ற மருத்துவர்களும் இருந்தனர். இவன் மட்டுமே அப்பிரிவில் இந்தியன்.. அவர்களுடன் சிறிது நேரம் ஓய்வாக.. பேசிவிட்டு மீண்டும் பணியை தொடங்கினான்..
இந்திய மக்கள் முக்கால்வாசிப்பேர் ஹரியிடன் மட்டுமே மருத்துவத்திற்கு அப்பகுதியில் வருவர், நாடு விட்டு நாடு தங்கி இருப்பவர்களுக்கு நம் நாட்டு மருத்துவனை பார்த்ததும் மிகவும் தெம்பாக இருக்கும்..
ஹரியும், எந்த நேரம் என்றாலும், அவன் பார்க்கும் பெண்களுக்கு, பிரசவ வலி என்றால் நேராக வந்து விடுவான். முடிந்த அளவு சுகப்பிரசவம், அப்படி இல்லை என்றாலும், விரைவில் குணம் ஆகும் அளவிற்கு, மிகவும் சிரத்தையாக அறுவை சிகிச்சை செய்து முடிப்பான்.
அந்தளவிற்கு விருப்பப்பட்டு வேலைப்பார்ப்பான்.
என்ன அவனுடன் பணிப்புரியும் பெண் மருத்துவர்கள், செவிலியர்கள், அவன் தோழிகள், என்று ஏகப்பட்ட பேர் அவனிடம் dating வர சொல்லி அழைத்தால் மட்டும், விருப்பம் இல்லை என்று ஒரே வார்த்தையில் மறுத்து விடுவான்..
பலர் காதல் சொல்லியும் அவன் யாரையும் ஏற்கவில்லை..
ஹரி பிறந்தது, வளர்ந்தது, அனைத்தும் அமெரிக்காவில்தான்.
ஹரி உடைய அப்பா சேதுமாதவன், அந்த காலத்திலேயே ஐஐடி (IIT Chennai) சென்னையில் மென்பொருள் பொறியாளர் படிப்பு படித்துவிட்டு, சியாட்டிலில் உள்ள மைக்ரோசாஃப்ட்(Microsoft ) நிறுவனத்தில் நல்ல பதவியில் இருந்தார். அப்படியே அவர்கள் அமெரிக்கவாசிகள் ஆகிவிட்டனர்.
ஹரியின் அம்மா அன்னபூரணி, கல்லூரி படிப்பை கூட முடிக்கவில்லை. அதற்குள் அவருக்கு சேதுமாதவனுடன் மணமுடித்து வைத்துவிட்டனர்.
அன்னப்பூரணி, ஆரம்ப நாட்களில் புதிய சூழ்நிலையில்.. அமெரிக்காவில் ஒன்ற சிரமப்பட… சேதுமாதவனே தன் மனைவிக்கு அனைத்தையும் சொல்லிக் கொடுத்தார்.
கார் ஓட்ட செல்லும் வகுப்பு, நீச்சல் மற்றும் ஆங்கில வகுப்புகளுக்கு, ஹரி பிறக்கும் முன்னே அனுப்பியவர், பிறகும் அன்னபூரணியை கல்லூரிக்கு செல்லுமாறு வற்புறுத்தினார். ஆனால் அவர் ஹரியுடன் இருக்க விருப்பப்பட்டதால் விட்டுவிட்டார்.
ஹரியிடம் உள்ள நல்ல குணங்கள் அனைத்தும் அவனின் பெற்றோரிடம் இருந்து வந்தது.
அதேப்போல் என்னதான் வெளிநாட்டில் செட்டில் ஆனாலும், ஹரிக்கு தாய்மொழி தமிழில், பேச மற்றும் எழுத, அங்குள்ள தமிழ் சிறப்பு வகுப்புகள் மற்றும் தமிழ் சங்கங்களில், அவனது அப்பா சேர்த்துவிட்டு கற்றுக்கொடுத்து இருந்தார்.
ஹரியிடம் இருக்கும் ஒரே ஒரு கெட்ட குணம், அவனுக்கு என்று ஒரு பொருள் கொடுத்து விட்டால், அதை மற்றவர்கள் தொடுவதை கூட அவன் விரும்ப மாட்டான் .
அவன் பெற்றோர்களே பலமுறை அவனை மாற்ற முற்பட்டார்கள். அவன் இதில் மட்டும் அவனது குணத்தை மாற்றிக் கொள்ளவில்லை.
தன்னுடைய பைக்கை யாரும் தொடக் கூடாது. தன் மொபைல், லேப்டாப் யாரும் உபயோகப் படுத்தக்கூடாது. தன் ரூமில் உள்ள பெட்டில் அல்லது சேரில் கூட யாரும் உட்காரக்கூடாது. என்றெல்லாம் நிறைய கோட்பாடுகள் அவனிடம் உள்ளது.
அவன் அலமாரியில் கூட அவனே சிறு வயதில் இருந்து அனைத்தையும் அடுக்கி வைத்துக் கொள்வான்.
அவனுக்கான பர்ஸ்னல் ஸ்பேஸை(personal space), கொஞ்சம் இல்லை அதிகமாக, டீன் ஏஜில் இருந்தே வளர்த்துக் கொண்டான்..
பார்க்க மென்மையானவனாக தெரிந்தாலும் சில விஷயங்களில் மிகவும் சென்சிட்டிவ் மற்றும் அழுத்தம்.
அதேப்போல் அவனும் யாருடைய பொருட்களையும் தொடமாட்டான். யாருடைய விஷயத்திலும் தலையிட மாட்டான்..
ஹரிக்கு அமெரிக்க நண்பர்களே அதிகம். அமெரிக்காவில் முக்கால்வாசி மக்கள் இக்குணத்துடன் தான் இருப்பார். ஹரி ஒற்றை பிள்ளையாக வளர்ந்ததும் இதற்கு ஒரு காரணம்.
மற்றப்படி பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில், நண்பர்களுடன் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், மலைகளுக்குச் சென்று கேம்பிங் போட்டு, சைக்கிளிங் மற்றும் ஹைக்கிங் செல்வான். இயற்கையுடன் நேரத்தை செலவழிப்பதையே விரும்புவான்.
இப்படியாக நிம்மதியாக அவர்கள் வாழ்க்கை செல்ல, மாற்றம் ஒன்றே மாறாதது என்பதுப்போல் அவர்கள் நிலையும், நிமிடத்தில் மாறியது..
ஹரியின் அப்பாவின் மரணம்.. எதிர்பார்க்க முடியாத நேரத்தில் நிகழ்ந்தது.
மென்பொருள் துறையில் ஏற்படும் மன அழுத்தத்தால், அவருக்கு மாரடைப்பு வந்ததா என்று தெரியவில்லை.
சந்தோசம் மட்டுமே வாழ்க்கையாகது அல்லவா..
எதிர்பாராத விதமாக.. ஹரிக்கு 26 வயது இருக்கும்போதே, திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் , சேதுமாதவன் சில நிமிடங்களில் மரணத்தை தழுவினார்.
இதோ அவர் மறைந்து நான்கு ஆண்டுகள் கடந்து விட்டாலும்.. இன்றும் அதிலிருந்து அவர்கள் முற்றிலும் வெளிவரவில்லை..
அன்னபூரணி கடந்த 27 வருடமாக, சேதுமாதவனும், ஹரியும் மட்டுமே உலகம் என்று இருந்துவிட்டார்.
கடைசி நாள், அவர் திடீரென்று அன்னபூரணியிடம், ஹரிக்கு நல்ல தமிழ் பெண்ணாக பார்த்து திருமணம் செய்ய வேண்டும்.. அவன் குணத்திற்கு அதுதான் நல்லது.. இங்குள்ள பெண்களின் குணம் அவனின் எதிர்பார்ப்புடன் ஒத்து போகாது, இப்போதே பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு சென்று இருந்தார்.
அதை நிறைவேற்றவே அன்னபூரணி இப்பொழுது போராடிக்கொண்டு உள்ளார்.
அமெரிக்காவில் வசித்து வந்ததால் நம்மூர் அளவிற்கு, அக்கம் பக்கம் மக்களுடன் அந்த அளவிற்கு நெருக்கமான பழக்கவழக்கங்கள் அவர்களுக்கு இல்லை .
அன்னபூரணிக்கு துணைக்கு சிபெரியன் ஹஸ்கி (Husky) வகையை சார்ந்த பிரவுன் அண்ட் வைட் கலர் மிக்ஸ்ட் வகை நாயை ஹரி வாங்கி வைத்துள்ளான். அது அவருடன் வாக்கிங் செல்லும் போது துணையாக செல்லும் மற்றும் வீட்டில் இருக்கும் போதும், அவர் உடனே இருக்கும், வீட்டிற்கும் பாதுகாப்பாக உள்ளது..
தற்சமயத்திற்கு, அது ஒன்றே அன்னபூரணியின் புலம்பலை வேறு வழியின்றி கேட்டுக்கொண்டு உள்ளது.
மாலை 5 மணி அளவில் ஹரி மருத்துவமனையில் பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பினான்.
வந்த உடனே எப்பொழுதும் போல் அவனுடைய அறைக்கு சென்று, குளித்துவிட்டு, இலகுவான உடைக்கு மாறி விட்டு, கீழ் இறங்கி வந்து..
அன்னப்பூரணியிடம், இன்று நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்துகொண்டு.. அவர்களின் தோட்டத்தில் சிறு வாக்கிங் ஒன்றை முடித்துவிட்டு வந்து.. இரவு உணவு சேர்ந்து சமைத்து, டின்னரை முடிக்க..
அந்தநாள் இனிமையாக முடிந்தது.
அவரவர் அறைக்கு தூங்கச் சென்றனர்.
எப்பொழுதும் போல் படுக்கையில் விழுந்த அன்னப்பூரணியின் மனதை, ஹரியின் தொடர் திருமண மறுப்பிற்கு என்ன காரணம்??? என்ற எண்ணம் போட்டு அரிக்க தொடங்கியது.
***********************************
அங்கு திருச்சியில்,
அன்று மாலை மிதிலா மற்றும் மித்ரா, ஒன்றாக ஐந்து மணிக்கு பள்ளியில் இருந்து வீட்டிற்கு கிளம்பினர்.
மித்ரா, "ஹே மிது இன்னைக்கு யார் முதலில் வீட்டுக்கு போறோம்னு பார்க்கலாமா", என்றாள்.
மிதிலா உடனே, "ஹே ஜாலி ஜாலி மித்து.. ஓகே வா, யார் ஃபர்ஸ்ட் போறாங்கன்னு பார்க்கலாம்", என்றவள், விரைந்து சைக்கிளை செலுத்தினாள்.
அவள் மனதில், வீட்டிற்கு சென்றால் அம்மா ஸ்னாக்ஸ் கொடுப்பார்கள் என்ற எண்ணமே அதிகமாக இருந்தது.. அதிலேயே விரைவாக சைக்கிளை மிதித்து முதலில் வீட்டிற்கு வந்து விட்டாள்.
பின் வந்து சேர்ந்த மித்ராவை கலாய்த்தப்படி ஆர்ப்பாட்டத்துடன் மிது வீட்டிற்குள் நுழைய..
துளசி ,"வாங்க வாங்க.. என்ன ரெண்டு பேரும் சீக்கிரம் வந்துட்டீங்க இன்னைக்கு... சரி போயிட்டு… சீக்கிரம் கை, கால் அலம்பிட்டு வாங்க.. அம்மா உங்களுக்கு சாப்பிட எடுத்து வைக்கறேன்", என்று அவர்களின் சாப்பாட்டு கூடையை வாங்கிக்கொண்டு சமையல் அறைக்குள் செல்ல…
மிதிலாவும், மித்ராவும் தோட்டத்திற்கு சென்று கை கால் முகம் அனைத்தும் கழுவிக்கொண்டு, பள்ளி சீருடையை மாற்றிக்கொண்டு உள்ளே வந்தனர்..
வீட்டின் மையப்பகுதியில் இருந்த ஊஞ்சலில் துளசி, பால் மற்றும் சிற்றுண்டி தட்டை வைத்து இருக்க..
துள்ளி குதித்து வந்த மிதிலா, முதலில் பாதாம், முந்திரி, ஏலக்காய் கலந்து தயாரித்த மசாலா பாலை, கையில் எடுத்து, அதை ஆழ்ந்து ஒருமுறை சுவாசித்து..
அதன் மணத்தை தன் மனதில் நிரப்பிக்கொண்டு. "மா செமையா இருக்கு மா.. எப்படிம்மா நீங்க மட்டும் எப்பவுமே இவ்வளவு சூப்பரா சமைக்கறீங்க..", என்றப்படியே… பொறுமையாக ஊதி ஊதி ரசித்து ருசித்து குடிக்க ஆரம்பித்தாள்… அவளின் உலகமே, அவ்வுணவில் தான் அச்சமயம் அடங்கி இருந்தது..
சிறிது நேரத்தில்,
மித்ரா தயாராகி மாலை டியூஷனுக்கு சென்று விட்டாள்.
மாலை விளக்கு வைத்து, பூஜை முடித்துவிட்டு வந்த துளசி, மிதிலா இன்னும் ஊஞ்சலில் ஆடிக்கொண்டு இருப்பதை பார்த்து…
"மிது, எவ்ளோ நேரம் தான் விளையாடுவ.. போதும் படிக்க உட்காரு.. இப்ப விளையாடிட்டு.. அப்புறம் மார்க் குறைஞ்சுடுத்துன்னு வந்து அழவ.." என்று அவளை முடுக்க..
உடனே விளையாட்டை கைவிட்டவள், புத்தக பையை எடுத்துக்கொண்டு வந்து அமர்ந்து, ஹோம் ஒர்க் செய்ய ஆரம்பித்து விட்டாள்.
அதைப்பார்த்த துளசி, புன்னகையுடன் இரவு உணவு தயாரிக்க சமையலறைக்குள் சென்றுவிட்டார்.
பதினைந்து வயதே ஆன மிதிலா இன்னும் பூப்பெய்தக் கூட இல்லை, அதனாலேயே துளசிக்கு, எங்கே மகள் பத்தாம் வகுப்பு பொது தேர்வு சமயத்தில், வயதுக்கு வந்துவிட்டால், படிக்க முடியாமல் போய்விடுமோ என்று ஒரு பயம். அவர்கள் பள்ளியில் வேறு மிகவும் கெடுபிடி, பயோலஜி குரூப்பை கேட்டு வாங்குவதற்குள் பெரும்பாடு ஆகிவிடும்.. அதனாலேயே அவளை படிக்கச் சொல்லி கொண்டே இருப்பார்.
அடுத்த நாள்.. காலை 4 மணிக்கு.. எப்பொழுதும் போல் எழுந்த துளசி, முதலில் குளித்துவிட்டு பிள்ளைகளுக்கு சத்துமாவு கஞ்சியும், விஷ்ணுவிற்கும் அவருக்கும், பில்டர் காபியும் போட, ஆரம்பிக்கும்போதே விஷ்ணு எழுந்து வந்து விட்டார்.
அவர் ப்ரெஷாகிவிட்டு வந்து பிள்ளைகளை எழுப்பிவிட, மிதிலாவோ விஷ்ணுவிடம், "இன்னும் கொஞ்ச நேரம் தான் பா.. ப்ளீஸ்பா ஒரு ஃபைவ் மினிட்ஸ் பா.. கண்ணெல்லாம் ஒட்டிக்கிச்சு பா திறக்கவே முடியல", என்று கெஞ்சிக் கொண்டிருந்தாள்…
துளசி பிள்ளைகள் இருவரையும் 5 மணிக்கே எப்பொழுதும் எழுப்பி விடுவார்.. இதில் மிதிலா மட்டும் எழுந்துக்கொள்ள சிறிது வம்பு செய்வாள்.
ஒருவாறாக எழுந்தவள், "பா இந்த சத்து மாவு கஞ்சி எல்லாம் யாருப்பா கண்டுபிடிச்சது.. நீங்க மட்டும் காபி குடிக்கறிங்க.. நான் மட்டும் இத குடிக்கணுமா.. எத்தனை வயசு ஆனா தான் எனக்கு காபி குடுப்பீங்க… ப்ளீஸ் எனக்கு காபி கொஞ்சம் குடுங்க அம்மாவுக்கு தெரியாம", என்று அட்டூழியம் செய்து, கொஞ்சம் அவரிடம் சிறிய கப்பில் ஊற்றி கொடுக்கச்சொல்லி வாங்கி குடித்துவிட்டு தான் படிக்க அமர்ந்தாள்...
மித்ரா ஆறரை மணிக்கே, பள்ளிக்கு செல்லும் சீருடையில் கிளம்பி, புத்தகங்களை அடுக்கி கொண்டு, காலை செல்லும் டியூஷனுக்கு சென்று விட்டாள்.
அவளுக்கு காலை மற்றும் மதிய உணவை மிதிலா பள்ளியில் கொடுத்து விடுவாள்.
மிதிலா கொஞ்சம் நேரம் அமர்ந்து படித்துவிட்டு சென்றவள், தயாராகி பள்ளிக்கு கிளம்பிவிட, விஷ்ணுவும் அலுவலகத்திற்கும் சென்றுவிட்டார்.
அனைவரும் சென்றவுடன், துளசி சமையல் அறையை சுத்தப்படுத்தி விட்டு, தோட்ட வேலைக்கு சென்றார்.
10 மணி அளவில், தெருவில் காய்கறி விற்கும் ஒரு தாத்தா வந்து... துளசி எடுத்து வைத்திருந்த காய்கறிகளை எடுத்துக்கொண்டு… அதற்கான பணம் கொடுத்துவிட்டு சென்றார்.
பிறகு துளசி சிறிது நேரம் எப்பொழுதும் போல் தூங்கி எழுந்து, மதிய உணவை உண்டுவிட்டு, விடுவிடுவென்று தையல் வேலைகளை பார்க்க ஆரம்பிக்க, அந்த நாள் விடுவிடுவென்று ஓடி மறைந்தது.
அந்த வாரம் வேறு துளசிக்கு வேலைகள் லைன் கட்டி நின்றது.
தெரிந்தவர் ஒருவர், அவர் பெண்ணிற்கு தலை தீபாவளிக்கு சீர்செய்ய, பலகாரங்கள் செய்து தருமாறு கேட்டுக்கொண்டிருந்தார்.
மேலும் சிலரும் திபாவளிக்கு பலகாரம் ஆர்டர் கொடுத்து இருந்தனர்..
துளசியும் பிள்ளைகளுக்கு தீபாவளிக்கு துணிமணிகள், பட்டாசு, தின்பண்டங்களுக்கு ஆகுமென்று.. அனைத்தையும் ஒத்துக்கொண்டு இருந்தார்.
இது போன்ற பெரிய ஆர்டர்கள் வரும்பொழுது துளசி, துணைக்கு குமுதம் என்ற பெண்மணியை அழைத்துக் கொள்வார்.
குமுதம், அந்த தெருவில் உள்ள பெரிய வீடுகளில், வீட்டு வேலை செய்கிறவர்.
குமுதத்திற்கு துளசி அழைத்தால் போதும்.. மிகவும் சந்தோஷமாக உதவிக்கு வந்து விடுவார்.
துளசி, குமுதத்திடம் விஷயத்தை சொல்லி, மறுநாளில் இருந்து உதவிக்கு வர சொல்லிவிட்டு இருந்தார்...
அதன்படி அடுத்த நாள், குமுதம் வந்தவுடன் துளசி அவருடன் சேர்ந்து, பொருட்கள் வாங்க தயாரித்த லிஸ்டை ஒருமுறை சரிபார்த்துவிட்டு, குமுதத்தின் கணவர் ஆறுமுகத்தின் ஆட்டோவிலேயே, கடைத்தெருவிற்கு சென்று பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்பினர்…
வாங்கி வந்த பொருட்களை மாடியில் காய வைத்து.. அரைத்து என்று அன்றைய பொழுது அதிக வேலைகளுடன் கழிய..
துளசி எளிமையான இரவு உணவை செய்து வைத்துவிட்டு, நேரமே அசதியில் படுத்துவிட்டார்..
மித்ரா, விஷ்ணுவுடன் சேர்ந்து மீதம் இருந்த வீட்டு வேலைகளை பார்க்க.. மிதிலாவோ முதல் ஆளாக அறைக்குள் சென்று துளசியை கட்டிக்கொண்டு தூங்க ஆரம்பித்துவிட்டு இருந்தாள்..
மித்ரா தங்கை எந்த வேலையையும் செய்யவில்லை.. நாம் மட்டும் எதற்கு செய்ய வேண்டும் என்றெல்லாம் எண்ணுபவள் இல்லை.
அவளுக்குமே இன்னும் மிதிலா குழந்தை தான்.
மறுநாள் துளசி, குமுதத்தை துணைக்கு வைத்துக்கொண்டு, அனைத்து வகை பலங்காரங்களையும் சுட…
அன்று மாலை பள்ளியிலிருந்து வந்து ஆர்வமாக வீட்டிற்குள் நுழைந்த மிதிலா…
என்ன என்ன ஐட்டங்களோ
துளசியின் வீட்டினிலே
சென்று பார்த்தால் தெரிந்து விடுமே
என்ன என்ன ஐட்டங்களோ
என்று வடிவேல் மாடுலேஷனில் பாடிக்கொண்டே தோட்டத்திற்கு ஓடிவந்தவள்… பலகாரங்களை ஒருக்கை பார்க்க ஆரம்பித்தாள்…
இதை மட்டும் ஹரி பார்த்தால், இவ்வளவு எண்ணெய் பலகாரமா இவள் சாப்பிடுகிறாள் என்று நெஞ்சை பிடித்துக்கொண்டு சரிந்து விடுவான்..
அந்த வார இறுதி வந்த, வார விடுமுறையில், விஷ்ணு குடும்பம், தீபாவளிக்கு துணிமணிகள், பட்டாசு பொருட்கள், பிள்ளைகளுக்கு ஃபேன்ஸி ஐட்டம் என்று திருப்தியாக ஷாப்பிங் சென்று வாங்கிக்கொண்டு வீடு திரும்பினர்.
விஷ்ணு, அவருடைய தீபாவளி போனஸ் பணத்தில் துளசி, மித்ரா மற்றும் மிதிலாவிற்கு புதிதாக வெள்ளி கொலுசு மற்றும் சாமி வீட்டிற்கு புது விளக்கு என்று வாங்கி வந்து இருந்தார்...
பணம் கொடுக்க குமுதத்தை வரச்சொல்லியிருந்த துளசி, அவருக்குண்டான பணத்துடன் சேர்த்து தீபாவளிக்கு என்று அவருக்கும், அவரது கணவர் மற்றும் பிள்ளைகளுக்கும் வாங்கிய துணிமணிகளையும்.. உடன் திபாவளி அன்று சமைக்க தேவையான மளிகை சாமான் பொருட்கள், காய்கறிகள், பலகாரங்கள் என்று தாராளமாக வைத்து
துளசி கொடுக்க…
குமுதத்திற்கு மகிழ்ச்சி தாளவில்லை.
இல்லாத பெற்றவர்களுக்கு தானே, தங்கள் பிள்ளைகள் விழா நாட்களில், மற்ற பிள்ளைகள் பார்த்து, ஏங்கும் கஷ்டம் தெரியும்.
மிகவும் சந்தோஷமாக அனைத்தையும் பெற்றுக் கொண்டு, "உங்க குடும்பம் எப்பவும் சந்தோஷமா வாழனும் அக்கா", என்று வாழ்த்தி ,"வேற எந்த உதவி வேணும்னாலும் சொல்லுங்க அக்கா.. ஓடிவந்து செய்றேன்", என்றுவிட்டு கொடுத்த பொருட்களுடன் நிறைவாக சென்றார்.
லாபத்தில் பாதி பணத்திற்கு குறைவில்லாமல், எப்பொழுதும் துளசி குமுதத்திற்கு கொடுத்து விடுவார்.
மற்றவர்கள் உழைப்பு நமக்கு எதற்கு என்று எண்ணுபவர்.
அவரின் நல்ல மனதே, நாளை பெரும் சூறாவளி ஒன்று அவர்களின் நந்தவனத்தின் மீது வீசி.. அனைத்தையும் பிய்த்து எறிந்து விட்டு செல்லும் நேரத்தில், துணையாக நிற்கும்.
"செய்த தர்மம்
தக்க சமயத்தில்
உயிர் காக்கும்" என்ற பழமொழி உண்மையாகும்…
***********************************
அங்கு அமெரிக்காவில்,
அந்த வார விடுமுறையின் பொழுது, ஹரி மற்றும் அன்னபூரணி, தமிழ் சங்கத்தில் நடக்கும் ஒரு கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இருவரும் நிகழ்ச்சிகளை பார்த்து விட்டு மகிழ்ச்சியாக வீடு திரும்பினர்.
அம்மகிழ்ச்சியை குலைக்கும் விதமாக, அன்னபூரணி, ஹரியிடம் ஒரு கவரைக் கொடுத்தார்.
ஹரி, "வாட் மாம்?? கவர்ல என்ன இருக்கு.." என்று கேட்டுக் கொண்டே .. அவர் கொடுத்த கவரை பிரித்தான் .
அன்னபூரணி, "உனக்காக கல்யாணத்திற்கு வந்த ஒரு வரனோட பயோடேட்டா தான், கவரில் இருக்கு கண்ணா, அந்தப் பொண்ணும் டாக்டர் தான், உன்னை அந்த பொண்ணு பார்த்துட்டு புடிச்சிருக்குன்னு அவங்க அம்மா, அப்பா கிட்ட சொல்லி இருப்பாப்போல, அவங்க இன்னைக்கு என் கிட்ட வந்து பேசிட்டு, ஜாதகம், போட்டோ, அப்புறம் அந்த பொண்ணோட பயோடேட்டா விவரத்தையும் கொடுத்துட்டு.. பேசிட்டு.. போனாங்க பா. ரொம்ப நல்ல குடும்பமாகவும் தெரியறாங்க ஹரி, அவங்க எங்களுக்கு ஜாதகத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லை, உங்களுக்கு பிடிச்சிருந்தா முடிச்சிடலாம் அப்படின்னு சொல்லிட்டாங்க.. எனக்கும் திருப்தியா இருக்கு.. நீயும் பாத்துட்டு சொல்லு கண்ணா.. முடிச்சுடலாம்", என்றவர்.. மேலும் "நீ அந்த பொண்ண வேண்டாம்னு சொல்றதுக்கு ஒரு காரணமும் இல்லை ஹரி, நல்ல அறிவு, கூடவே நல்ல அழுகும், உனக்கு சரிசமமா..", என்றார் அழுத்தமாக..
அந்த அழுத்தம் நீ ஒற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும் என்ற நிபந்தனையை சுமந்துக்கொண்டு இருந்தது.
அதில் அதிர்ச்சி அடைந்த ஹரி, "இந்த அளவுக்கு வந்துட்டாங்களா மாம்.. அய்யோ.. எப்படி மாம்கிட்ட இருந்து தப்பிக்கிறது' என்று தெரியாமல் முழிக்க…
அவனின் கள்ள முழியை பார்த்து கொண்டே அன்னபூரணி, "ஹரி நீ நீதானம்மா பார்த்துட்டு கூட சொல்லு முடிவ, எப்படியும் உனக்கு கல்யாணம் பண்ணித்தானே ஆகணும், எவ்ளோ நாள் தான் இப்படியே இருப்ப, வயசு இப்பவே 30 ஆகிடுச்சு.. இதுக்கு மேல வெயிட் பண்ண முடியாது, உனக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணனும்னு பார்க்கிறேன். உங்க அப்பா போனதிலிருந்தே, எனக்கு மனசு சரி இல்லை, உனக்குன்னு ஒரு குடும்பத்தை அமைத்துக் கொடுத்தா தான் எனக்கு ரொம்ப நிம்மதியாக இருக்கும் கண்ணா" என்றார்..
அதற்கும் ஹரியிடம் நோ ரியாக்ஷன்..
உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை விட அவன் தயாராக இல்லை.
அவன் முகத்தைப்பார்த்த அன்னபூரணிக்கு மனமே விட்டுப்போனது, "ஒன்னு உனக்கு எந்த மாதிரி பொண்ணு புடிக்கும் சொல்லு, இல்ல வேற எந்த பொண்ணு மேல விருப்பம் இருக்குனாலும் சொல்லு ஹரி", என்றுக்கேட்க..
"கொஞ்சம் நாள் போகட்டும் மாம் சொல்றேன்..", என்று அவன் ஆரம்பிக்க.
"எத்தனை கொஞ்ச நாள் ஹரி?, திருப்பி திருப்பி அப்புறம் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றதை தயவு செஞ்சு இன்னையோட விட்டுடு கண்ணா, இல்லை அட்லீஸ்ட் எதனால கல்யாணம் வேணாம்னு சொல்ற அதையாச்சும் சொல்லு, உன் அம்மா ஒன்னும் முட்டாள் இல்லை", என்றவர் அவனை அதுக்கு மேல் கடிய மனது இல்லாது.. விடுவிடுவென்று மனவருத்தத்துடன், அவருடைய அறைக்குள் சென்றுவிட்டார்.
ஹரி அவரை தடுத்து சமாதானம் கூறும் வழியறியாது, அப்படியே அந்த கவருடன்.. அவனுடைய அறைக்கு வந்து சேர்ந்தான்…
***********************************
அறைக்குள் வந்த ஹரியின் மனம் ஒரு நிலையில் சுத்தமாக இல்லை, கல்யாணம் என்றாலே வேப்பங்காயாக அவனுக்கு கசந்தது...
மன மாற்றத்திற்கு தோட்டத்திற்கு போகலாம் என்ற முடிவுடன் ஹரி மீண்டும் கீழே இறங்கி வந்தான்.
தோட்டத்தில் ஹரிக்கு பதினைந்து வயது இருக்கும்போது, அவன் தந்தை சேது மாதவன் அங்கு இருந்த மரத்தில் சின்னதாக.. ஒரு மர வீடு அமைத்து அவனுக்கு பிறந்தநாள் பரிசாக கொடுத்து இருந்தார்..
ட்ரீ ஹவுஸ்(Tree house)..
ஹரி எப்பொழுதும்.. கதை புத்தகங்கள் வாசிக்க, இல்லை மனம் ஒருமாதிரி இருந்தாலும், மிகவும் சந்தோஷமாக இருந்தாலும், தனியாக இருக்க வேண்டும் என்று நினைத்தாலும், எப்பொழுதும் ட்ரீ ஹவுஸிற்கு வந்து விடுவான்.
கடந்த பதினைந்து வருடங்களாக அவனுக்கு மிகவும் பிடித்த இடம்.. மனதிற்கு மிகவும் நெருக்கமான இடமும்.
தோட்டத்தில் உள்ள நான்கு பெரிய மரத்திற்கு நடுவில் மேல்புறத்தில்.. மரத்தினால் செய்த ஒரு சிறு அறையை பொருத்தி.. ட்ரி ஹவுஸை வடிவமைத்து இருப்பார்கள்... கீழே இருந்து மேலே போக கயிறு ஏணி மட்டுமே இருக்கும்.
அன்னப்பூரணி கொடுத்த கவரை எடுத்துக்கொண்டு ட்ரீ ஹவுஸிற்குள்(tree house)
வந்த ஹரி, அங்கு இருந்த சிறு ஜன்னலின் கீழே, போட்டிருந்த ஒருவர் மட்டும் படுக்கும் அளவிளான, பெட்டில் அமர்ந்து, பின்புறம் இருந்த குஷ்ஷனில் சாய்ந்தவன், அப்படியே அமைதியாக தன் கண்களை மூடிக்கொண்டான்.
மனம் இதற்கு என்ன நிரந்தர தீர்வு என்று யோசிக்க ஆரம்பித்தது…
நிமிடங்கள் பல கடக்க..
அருகில் திடீரென்று கேட்ட பறவைகளின் கீச் கீச் சத்தத்தில், தன் சிந்தனையில் இருந்து வெளிவந்த ஹரி கண்களை திறந்தான்..
எதிர்திசையில்..
அவன் கண் முன், அழகாக, வட்ட வடிவில், கடலில் இருப்பது போலவே, இயற்கையான பொருட்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டு இருந்த மீன் தொட்டியில் வித்தியாசமான வண்ணங்களில், நிறைய மீன்கள் அழகாக அங்கு நீந்திக் கொண்டு இருந்தன..
ஹரிக்கு எப்பொழுதும் மீன்கள் ஒன்றுடன் ஒன்று விளையாடிக்கொண்டே, இருக்கும் காட்சியை பார்ப்பதற்கு மிகவும் பிடிக்கும்...
சிக்கலான பிரசவங்களை பார்த்து தாயையும் சேயையும் பத்திரமாக காப்பாற்றி முடிப்பதற்குள், அவன் மனம் ஒருவழி ஆகிவிடும்..
சில நாட்கள், ஒரே நாளில் பத்து பிரசவத்திற்கு மேல் கூட பார்க்க வேண்டிய சூழல் அவனுக்கு வரும்..
அப்பொழுது எல்லாம் இரவுகளில் அப்பெண்களின் கதறல் சத்தம் அவன் காதை நிறைக்கும்.. தூங்கவே முடியாது.. அந்நாட்களில் அவன் மனதை பழைய நிலைக்கு கொண்டு வருவது இம்மரவீடு தான்..
அதில் முழுக்க முழுக்க மன அமைதி தரக்கூடிய பொருட்களே நிறைந்து இருக்கும்…
ஹரி, சின்ன சின்ன வின்டேஜ் கலெக்சன்(vintage collection), அதாவது பழங்காலத்தில் பயண்பாட்டில் இருந்த பொருட்கள் சிலவற்றை.. அந்த மாதிரியான பொருட்கள் விற்கும் கடைகளில் இருந்து வாங்கி வந்து.. அங்கு சேர்த்தும் வைத்திருப்பான்.
ராந்தல் வடிவம் உடைய விளக்கு, தண்ணீர் ஜாடி, பழங்கால வடிவிலான பூந்தொட்டி, பழங்கால கடிகாரம், என்று நிறைய பழமை மாறாத பொருட்கள், அந்த ட்ரீ ஹவுஸ் முழுவதும் இருக்கும்.
அது மட்டுமின்றி, அங்கு அனைத்து மூலைகளிலும்.. வீட்டிற்குள்ளேயே வளர்கின்ற மாதிரியான மூங்கில் மற்றும் அதிக ஆக்சிஜன் தரக்கூடிய செடிகளும் அடக்கம்..
அதில் ஒரு மூங்கில் செடிக்கு கீழே அழகாக, இரண்டடி உயரத்தில், கல்லால் ஆன ஒரு புத்தர் சிலை உண்டு, அந்த புத்தர் சிலையின் தலை பகுதியில்… சின்ன நீர் வீழ்ச்சியில் (small water fountain) இருந்து எப்பொழுதும் தண்ணீர் கொட்டுவது போல் வடிவமைத்து இருந்தனர்.
அதிலிருந்து சீராக தண்ணீர் கொட்டும் சப்தம், எப்பொழுதும் அங்கு கேட்டுக்கொண்டே இருக்கும்..
அதன் உடன், அதிக மனம் மயக்கும் வாசனைகள் தரும் பூக்கள் பூக்கும் பூச்செடிகளும், அழகாக தொட்டியில் அங்கங்கே தொங்கிக்கொண்டு இருக்கும்...
அங்கிருந்த அதீத ரம்மியமான சூழல், ஹரியின் மனதை கொஞ்சம் கொஞ்சமாக, இதமாக வருடிவிட்டது.
"மாம் மனசு கஷ்டப்படாத மாதிரி, எப்படி எனக்கு கல்யாண வாழ்க்கையில் விருப்பம் இல்லைன்னு சொல்றது", என்ற சிந்தனை ஹரியின் மனம் முழுவதையும் நிறைக்க.
அவன் எண்ண அலைகள், அப்படியே சில வருடங்கள் பின்னோக்கி சென்றது...
ஹரிக்கு பள்ளிக்காலத்தில் உடன் பயின்ற பெண்கள் அனைவரும் சக நண்பர்களாகவே தெரிந்தனர். சிறு வயதில் இருந்து இறுதிவரை, ஒரே நண்பர்கள் குழுவுடன் படித்ததால், அவனுக்கு தன் சக தோழிகள் யாரின் மீதும் காதல் எண்ணம் இறுதி வரை வராமலேயே போனது, யாரின் கெட்ட நேரமோ..
அவன் வீட்டில் அவன் காதல் திருமணம் செய்தாலும் யாரும் ஆட்சேபிக்க போவதில்லை.
ஆரம்பம் முதலே, டேட்டிங் மற்றும் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் அவனுக்கு விருப்பமில்லை .
அன்னபூரணி மற்றும் சேதுமாதவன் போலவே மனமொன்றி, ஒருத்தியுடனே தன் காதல் வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற ஆசை, டீன் ஏஜ் தொடக்கம் தொட்டே அவனின் மனதில், வேர்விட்டு இருந்தது…
வருடம் 2007, ஹரி தன் மருத்துவப் படிப்பிற்காக போஸ்டனிற்கு சென்றவன், அங்கிருந்த ஹார்வர்ட் மெடிக்கல் ஸ்கூலில்.. நண்பர்களுடன் தங்கி MBBS படிக்க ஆரம்பித்த சமயம் அது..
அப்பொழுது, அவனின் சுயக்கட்டுப்பாட்டின் உறுதியிலும், ஹரியின் குணம், படிப்பு மற்றும் திறமையிலும் ஒருத்தி கவரப்பட்டு வந்து விழுந்தாள்…
அதிலும், இந்திய உடலமைப்பை கொண்ட வசிகரமான ஆண்மை ததும்பும், அவனின் அழகு, அவளை கயிறுக்கட்டி இழுத்தது.
அவள் "ஏஞ்சலினா மிக்கேல்" ரஷ்ய நாட்டை சேர்ந்தப்பெண்.
ஹரியிடம் நேரடியாக வந்து அவள் தன் மனதை திறந்துக்காட்ட…
பார்க்க மிகவும் துறுதுறுப்பாகவும், அழகாகவும், திறமையாகவும் இருந்த பதினெட்டு வயது, மெழுகு பாவை ஏஞ்சலினாவை.. ஹரிக்கும் ஏனோ உடனே பிடித்து போக.. ஏஞ்சலினாவின் காதலை ஏற்றுக்கொண்டான்.
அதன்பிறகு என்ன காதல் பறவைகளாக இருவரும் சேர்ந்து பறந்தனர்.
ஹரிக்கு, தன்னை விரும்பும் பெண் மீது காதல் கொள்ள, அவ்வளவு பிடித்து இருந்தது.
பருவ வயது சலனம் அவனை அப்படியே அவளிடம் கட்டிப்போட.
ஆரம்பத்தில் இருவரும் அவரவர் விருப்பங்களை மற்றும் குடும்ப கதைகள் அனைத்தையும் தங்கு தடையின்றி பகிர்ந்து கொண்டனர்.
காதலர்களுக்கு பேசவா சொல்லித்தரவேண்டும்.. ஊரில் உள்ள அனைத்து கதைகளையும் தேடித்தேடி பேசித் தீர்த்தனர்.
ஹரிக்கு புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கம் போன்ற பழக்கங்கள் சுத்தமாக எதுவுமில்லை.
அமெரிக்காவில் கஞ்சா, புகை, மது போன்றவை அனைத்தும்.. 18 வயதிற்கு மேற் உள்ளவர்களுக்கு சுலபமாக பணம் இருந்தால் கிடைக்கும் என்ற நிலை.
ஆண்ப்பெண் பேதமின்றி பாதிக்குமேல், போதைக்கு அடிமையாகி விடுவார்கள்.
18 வயதை எப்பொழுது தொடுவோம் அதை எப்பொழுது முயற்ச்சித்து பார்ப்போம் என்ற ஆர்வம் பெரும்பாலான இளம் நெஞ்சங்களில் நஞ்சாக இருந்து வரும்..
அதில் ஏஞ்சலினாவும் ஒருத்தி. அனைத்திலும் நன்றாக கைதேர்ந்துவிட்டு இருந்தாள்.
ஹரிக்கு ஏஞ்சலினாவின் இந்த பழக்கங்கள் சுத்தமாக பிடிக்கவில்லை, என்றாலும் அவன் அவளை மாறச் சொல்லி கட்டாயப் படுத்தவில்லை.
ஏஞ்சலினாவை அப்படியே ஏற்றுக்கொள்ள தயாரானான். அவன் வளர்ந்த கலாச்சார முறைகளில் யாரும் யாரின் பர்சனல் ஸ்பேஸிலும் நுழைய மாட்டார்கள்.. அவர்கள் தங்களின் வாழ்க்கை துணையாக இருக்கும் பட்சத்திலும்.
அதையே தான் அவனும் கடைப்பிடித்தான்.
ஆனால் ஏஞ்சலினாவிற்கு ஹரியின் இந்த குணங்கள் பிடிக்கவில்லை. அவள் ஹரியுடன் காதல் சொல்லி அவன் ஏற்றுக் கொண்டவுடன், அவனுடன் டேட்டிங், லிவ்விங் ரிலேஷன்ஷிப்ல் வாழ ஆசைப்பட்டாள், ஹரி இதற்கு ஒத்துவராததால் அவனை வெறுக்க தொடங்கினாள்..
புறத்தோற்றத்தை பார்த்து வரும் ஈர்ப்பு எத்தனை நாட்களுக்கு தாக்குப்பிடிக்கும்.
அதிலும் முதல் முறை அவள் அதீத உணர்வுகளின் பிடியில் சிக்கி, ஹரியின் இதழை முதல் முறை சுவைக்க ஆரம்பிக்க.. இரண்டே வினாடியில் ஹரி, அவள் மீது இருந்து வந்த சிகரெட் நாற்றத்தில், அவள் மீதே வாந்தி எடுத்துவிட்டிருந்தான்..
அன்று ஏஞ்சலினாவிற்கு அது பெருத்த அவமானம் ஆகிப்போனது..
அவனவன் அவளுக்காக ஏங்கி கிடக்க.. இவன் இப்படி செய்தால் எப்படி…
ஹரி ஆயிரம் சாரி சொல்லியும், அவளால் சற்றும் இதை எளிதில் கடக்க முடியவில்லை..
ஹரிக்கு அவன் வாழ்வின் முதல் இதழொற்றலே, அவனுக்கு மோசமான அனுபவத்தை தந்துவிட.. முதல் முறை எப்படி இவளுடன் தான் இறுதிவரை குப்பை கொட்டுவது என்ற எண்ணம் அவனுள்ளும் எழுந்துவிட்டது..
மாதங்கள் சில கடக்க.. வார இறுதி நாட்களில் ஹரியை பப்புக்கு போகலாம் என்று அவள் விடாது நச்சரிக்க.... ஹரி தனக்கு கொஞ்சமும் ஸ்மோக்கிங் ஸ்மெல் ஒற்றுக்கொள்ளாது என்றுக்கூறி மறுக்க..
ஹரியை ஏஞ்சலினா கிண்டல் செய்ய ஆரம்பித்தாள், "யூ ஆர் வேஸ்ட்டிங் யுவர் லைஃப் மேன்", "யூ டோன்ட் நோ.. ஹவ் டூ எஞ்சாய் லைஃப்!!!!", என்பால் வேண்டுமென்றே… அப்பொழுதாவது வருவானென்று.
ஹரிக்கு சுர்ரென்று கோபம் தலைக்கு ஏற ஆரம்பித்தது.. முயன்று அமைதி காத்தான்…
ஹரியை தவிர்த்து ஏஞ்சலினா மற்ற ஆண் நண்பர்களுடன் பப்பிற்கு செல்ல ஆரம்பித்தாள்.
ஹரி அதற்கு ஒன்றும் அவளை சொல்லவில்லை..
ஆனால் அதைத்தொடர்ந்து, இருவருக்கும் இடையில், பெரிய அளவில், கருத்துவேறுபாடு ஏற்பட ஆரம்பித்தது.
தாமரை இலை தண்ணீராய் உறவு மாற..
ஏஞ்சலினா வேறொருவனை பிடித்தவிட்டாள்.
உடனே அவள் ஹரியிடம் லவ் பிரேக்கப் செய்துக்கொள்ளலாம் என்றுப்பேசியவள்..
ஹரி, காரணம் கேட்க..
"நீ ஷோக்கேஸ்ல இருக்க ஷோ பீஸ் மாதிரி பார்க்க மட்டும் தான் அழகா இருக்க ஹரி.. மத்தப்படி உன்னை வச்சு நான் ஒன்னும் பண்ண முடியலை. எனக்கு உன்னால் கொஞ்சமும் சந்தோசம் கிடைக்கவில்லை. நீ இப்படி இருந்தா எந்த பொண்ணுக்கும் உன்னை பிடிக்காது ஹரி, உனக்கு யாரும் செட்டாக மாட்டாங்க…", என்றவள்..
மேலும் "உனக்கு ஹார்மோன்கள் சரியா சுரக்கிறதான்னு முதல்லே செக் செய்யனும்.. ஏதோ தப்பு உள்ளது உன்னிடம்", என்று வேறு இறுதியாக கிண்டல் செய்து, அவனிடம் வம்பு வளர்த்துவிட்டே பிரிந்தாள்....
அதுமட்டுமின்றி ஹரியை பற்றி அவதூறாக, அதுவும் அவனுக்கு ஏதோ வீக்னெஸ் என்றெல்லாம், வேறு அவன் நண்பர்கள் மத்தியில் அவள் பல கதைகளை பரப்பி விட. ஹரியை பற்றி அறிந்த, அவன் நண்பர்கள், ஏஞ்சலினா சொன்னதை எதையும் காதில் கூட வாங்கவில்லை.
ஏஞ்சலினா அவனை பற்றி கூறியது எல்லாம் ஹரிக்கு மிகுந்த வருத்தத்தையே கொடுத்தது. அவளை போன்ற குணம் உடையவளை போயி காதலித்ததற்காக மிகவும் வேதனைப்பட்டானே தவிர… எந்த சண்டையும் அவளிடம் அவன் வீணாக போட்டுக் கொள்ளவில்லை..
ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும் என்று ஒதுங்கி விட்டான்.
அதுவும் அவள் பிரிந்த பிறகு, ஏதோ ஒருவித அழுத்தத்தில் இருந்து வெளி வந்து, சுதந்திர காற்றை சுவாசிப்பது போன்ற எண்ணமே அவனுள் மிஞ்சியது..
அந்த மாற்றம் அவன் மனதில் எதிர் விளைவு ஒன்றை ஏற்படுத்தியது..
லவ், மேரேஜ், கமிட்மெண்ட், அட்ஜெஸ்ட்மெண்ட் போன்ற எதுவும் தனக்கு செட் ஆகாது என்று முடிவு எடுத்துவிட்டான்..
இதில் இருந்து தள்ளி இருப்பதே தனக்கு நிம்மதி என்ற எண்ணம் ஆழமாகி போனது அவன் மனதில்…
இன்றும் அது மாறவில்லை…
அதிலும் அவன் நண்பர்களில் எத்தனை எத்தனையோ பேர், பத்து பதினைந்து காதல், ஒன்றுக்கு மூன்று திருமணம் கூட செய்துப்பார்த்து, அத்தனையையும் ஒத்துவராது டைவர்ஸ் செய்து, அடுத்ததை தேட…
முரட்டு சிங்கிளாக நிம்மதியாக இருந்துக்கொள்ளலாம் என்று அவன் முடிவெடுத்து பல வருடங்கள் ஆகிறது.
எதிர்காலத்தில் இவ்வெண்ணம் அனைத்தையும் ஒன்றும் இல்லாமல் செய்யவே, திருச்சியில் ஒரு செங்காந்தள் மலர்.. மொட்டுவிட்டு விறுவிறுவென்று வளர்ந்து வருவதை அறியாது போனானே…
அவனிடம் அவன் பார்த்தது அனைத்தும், ஒருவகையான வயது ஈர்ப்பு மட்டுமே என்று யார் சொல்வது.
உண்மை காதலாக இருந்திருந்தால், இந்த அளவு விரைவில் அதிலிருந்து வெளியில் வர முடியுமா என்ன??
இதில் அவனின், "ஒருத்தனுக்கு ஒருத்தி", என்ற கருத்து வேறு விளையாடிவிட்டது. இனி யாரிடமும் தனக்கு ஈர்ப்பு ஏற்படாது, அது தன்னுடைய குணம் அல்ல என்று அவனே முடிவு செய்து விட்டான்.
வரும் காலத்தில் திருமணம் ஆகி, கையில் குழந்தையுடன் இருக்கும் ஒருத்தியிடம்.. பார்த்த ஒரே நிமிடத்திலேயே.. தலைக்குப்புற அவன் விழுந்து கிடப்பான் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்.
அன்று இரவு,
ஹரியிடம் அன்னபூரணி திருமணம் பற்றி முடிவு கேட்க, "பிளீஸ் மாம் கொஞ்சம் டைம் கொடுங்க.. பிளீஸ் டோண்ட் ஃபோர்ஸ் மீ..", என்று மிகவும் சங்கடமாக முகத்தை வைத்து கொண்டு அவன் கெஞ்ச…
ஹரியின் முகமே அவன் மனதில் ஏதோ ஒரு பெரும் குழப்பம் இருப்பதை காட்ட, "கொஞ்ச நாள் தான் ஹரி" என்று ஒப்புக்கொண்டார்.
அவராலும் வேறு என்ன தான் செய்ய முடியும், இவ்வளவு வளர்ந்த பிள்ளையை எவ்வாறு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கவா முடியும்.
*********************************
அங்கு விஷ்ணுவின் குடும்பமோ.. அந்த வருட தீபாவளியை கொண்டாடி தீர்த்தனர்.
அன்று அதிகாலையிலேயே எழுந்து, தலையில் நல்லெண்ணை வைத்து தலைக்கு குளித்துவிட்டு, புத்தாடைகளில் மஞ்சள் வைத்து சாமியிடம் வைத்து வணங்கிவிட்டு அணிந்துகொண்டவர்கள்,
பல பலகார வகைகளை செய்து தலைவாழை இலைபோட்டு ஒன்றாக பரிமாறி, கடவுளுக்கு படைத்து, தீபாராதனை காட்டி, குடும்பமாக கடவுளை வணங்கிவிட்டு.. ஒன்றாக அமர்ந்து, தீபாவளிக்கான சிறப்பு பலகார உணவை திருப்தியாக உண்டனர்.
அடுத்து பிள்ளைகள், வாங்கி வந்த பட்டாசுகளை, வெடிக்க எடுத்துக்கொண்டு தெருவிற்கு சென்றனர்.
"இருளின் மீது ஒளியின் வெற்றியைக் குறிக்கும் நாள் தீபாவளி".
விஷ்ணுவின் குடும்பத்தில் இனி ஒளி வீசுமா?? அல்லது அந்த ஒளியே அவர்களை விழுங்கி விடுமா??
அடுத்த வருட திபாவளியில் நரகாசுரனால் இவர்கள் வதைபடுவார்களா??
அல்லது நரகாசுரனை இவர்கள் வதைப்பார்களா??
பார்ப்போம்..!!
*****************
Nice ud
பதிலளிநீக்குGood starting sis...
பதிலளிநீக்குVery interesting
பதிலளிநீக்குSuper Sis
நீக்குஅமெரிக்க வாழ்க்கையில் பரிசுத்தமான இந்திய டாக்டர், சவால் தான்.
பதிலளிநீக்குInteresting
பதிலளிநீக்கு