உண்மை காதல்-2
அத்தியாயம் - 2
விஷ்ணு குடும்பத்திற்கு நாட்கள் விறுவிறுவென்று நகர…
அந்த வருடத்தின் இறுதியை தொட்டு விட்டனர்..
அரசு பொது தேர்வு நாட்கள் பற்றிய அறிவிப்பும் வந்து சேர்ந்தது..
மித்ராவும், மிதிலாவும் மிகவும் தீவிரமாக +2 மற்றும் 10-வது தேர்விற்கு தயாராகி கொண்டு இருந்தனர்.
அதற்கு இடையில் சொந்த ஊருக்கு, குலதெய்வக் கோயிலுக்கு சென்று, வழிபாடும் செய்துவிட்டு வந்தனர்.
இதுவரை விஷ்ணு தேவை இல்லாமல் அலுவலகத்திற்கு விடுமுறை எடுத்தது இல்லை. அதனால் பிள்ளைகளின் இறுதி தேர்வு சமயத்தில் மட்டும் பகுதிநேர விடுமுறை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். மேல் இடத்திலும்.. அவரின் நன்னடத்தையாளும், தொழில் சுத்தத்தாலும் ஒப்புக்கொண்டனர்.
தேர்வுகளும் ஆரம்பித்துவிட, மித்ராவும், மிதிலாவும் இறுதி அரசு பொது பரிட்சைக்கு செல்லும்போது, கூடவே துளசியும், விஷ்ணுவும் பள்ளிக்கு சென்று தேர்வு முடியும் வரை காத்திருந்து அழைத்து வந்தனர்.
பெற்றோரின் துணையுடன் மிகவும் நல்ல முறையில் இருவரும் தேர்வை முடித்து.. கோடை விடுமுறையில் மிகவும் மகிழ்ச்சியாக சுற்றிக்கொண்டு இருந்தனர்.
உடன் மித்ரா, ஒரு சில அடிப்படை கம்ப்யூட்டர் வகுப்புகளுக்கும், கார் ஓட்டக் கற்றுக்கொள்ள, டிரைவிங் ஸ்கூலிற்கும்(driving School) சென்று சேர்ந்து கொண்டாள்.
மிதிலா, அவளுக்கு பிடித்த ஸ்விம்மிங் கிளாஸ் மற்றும் ஆங்கில புலமையை நன்றாக வளர்த்துக்கொள்ள.. கம்யூனிகேஷன் டெவலப்மென்ட் கோச்சிங் சென்டர் சென்று சேர்ந்துக்கொண்டாள்.
இருவரும் சேர்ந்து செல்வதால், வகுப்புகளுக்கு அதிக பணம் செலவு ஆனாலும், பிள்ளைகளுக்கு இப்பயிற்சிகள் எதிர்காலத்தில் துணையாக இருக்கும் என்று பணத்தை பார்க்காமல் விஷ்ணு நல்ல இடத்தில் சேர்த்துவிட்டு இருந்தார்.
அவர் கூற்று நாளை உண்மையாகுமோ..??
அவர் மகளுக்கு அவர் துணை நாளையில்லாது போனாலும்…??
மே மாதம், 28ஆம் தேதி, காலை 10 மணி அளவில், பிளஸ் 2 முடிவுகளும், மாலை 4 மணிக்கு, 10th முடிவுகளும், வர உள்ளது என்று அறிவிக்கப்பட்டது.
தேர்வு முடிவிற்கு முன் தினத்தில் இருந்து… பிள்ளைகளின் முகம் பல கலவையான சிந்தனையுடன் சோர்வாக காணப்பட்டது. பெற்றோர்கள் ஒருவழியாக அவர்களை தேற்றி... அடுத்தநாள் முடிவுகளை காண காத்து இருந்தனர்.
காலை மித்ராவின் தேர்வு முடிவுகள் வந்தது. மிகவும் நல்ல மதிப்பெண் பெற்று தேர்வாகி இருந்தாள்.
அவர்கள் பள்ளியில் முதல் இடமும், திருச்சி மாவட்டத்தில் மூன்றாம் இடமும் மித்ரா பெற்று தேர்வாகி இருக்க..
அனைவருக்கும் மகிழ்ச்சி.
துளசி ஓடிச்சென்று, சுவாமிக்கு நேர்த்திக் கடன் பணத்தை எடுத்து வைத்துவிட்டார்..
மித்ரா பள்ளியில், அவள் எந்த படிப்பை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம் என்ற சலுகையுடன், அவளுடைய கல்லூரி செலவுகளை நிர்வாகமே ஏற்றுக்கொள்ளும் என்று சொல்லிவிட்டனர்.
மித்ராவோ, அவர்கள் சலுகை தந்தாலும், தன்னுடைய பள்ளி ஆசிரியர் ஆக வேண்டும் என்ற கனவை நோக்கி மட்டுமே பயணப்பட்டாள்… ஆதலால் அவள் கலை கல்லூரியிலேயே படிக்கின்றேன் என்று விட்டாள்.
ஆசியர்களுக்கு, அவள் முடிவு முட்டாள்தனமாக பட்டாலும், வாழ்க்கையில் நமக்கான கொள்கைகளையும், கனவையும் உருவாக்கி வைத்துவிட்டு, வேறு சூழ்நிலையில் வேறு வழியை தேர்ந்தெடுத்தால், எவ்வளவு உயரம் நாம் சென்றாலும், நமக்கான திருப்தி அதில் எப்போதும் ஏற்படாது.
பல பிள்ளைகள் பெற்றோருக்காகவும், உறவினர்கள் என்ன சொல்வார்களோ என்றும், தமக்கு பிடிக்காத படிப்பினை தேர்ந்தெடுத்து படித்து முடித்துவிட்டு, அதை சார்ந்த வேலைகளில்.. மிகவும் மன அழுத்தத்துடன் வேலை செய்து வருகின்றனர்.
மித்ரா அதில் ஒருத்தியாக இருக்க விரும்பவில்லை.
அச்சிறு வயதிலேயே தனக்கு என்ன வேண்டும் வேண்டாம் என்பதில் அவள் மிகவும் தெளிவாக இருந்தாள்..
மேலும் மித்ராவிற்கு, அரசும் ஊக்கத்தொகையாக ஒரு தொகையை பரிசாக கொடுப்பதாக அறிவித்திருக்க.. பெற்றோர்களுக்கு தன்னால் முடிந்த சிறு உதவி என்று அகமகிழ்ந்துப்போனாள்.
விஷ்ணு குடும்பத்தில் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டு இருக்கும்போதே மாலை வந்து விட்டது.
மிதிலாவிற்கு காலையில் இருந்தே வயிற்றை கலக்கிக் கொண்டு தான் இருந்தது…
மிதிலாவின் தேர்வு முடிவுகளும் வெளிவந்தது.
மிதிலா பள்ளியில் ஐந்தாம் இடம் பிடித்து தேர்வாகி இருந்தாள்.
பெற்றவர்களுக்கு அவள் மதிப்பெண்ணும் மகிழ்ச்சியே, அவள் ஆசைப்பட்ட பயாலஜி குரூப்பே +2-வில் கிடைக்கப்போவதில்.
அக்கா அளவிற்கு தான் மார்க் வாங்கவில்லை என்பதை உணர்ந்த மிதிலா. இனி இன்னும் நிறைய ஹார்ட் வொர்க் செய்ய வேண்டும், அப்படி படித்தால் மட்டுமே மருத்துவ சீட்டு பெற முடியும் என்று எண்ணி கொண்டாள். மற்றப்படி அவளுக்கு பொறாமையெல்லாம் இல்லை. அப்படி அவர்கள் வீட்டில் பிள்ளைகளை வளர்க்கவும் இல்லை.
மறுநாள் விஷ்ணு, துளசி மற்றும் பிள்ளைகள் இருவரையும், அவர் வேலை செய்யும் நகை கடைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மித்ரா மற்றும் மிதிலாவிற்கு தங்கத்தில் ஒரே போல் கம்மல், செயின் என்று பரிசாக வாங்கி கொடுத்து, மேலும் ஷாப்பிங் அழைத்து சென்று இருவரையும் உற்சாகப்படுத்தினார்.
பிள்ளைகள் இருவரும், மீதி இருந்த கோடை விடுமுறை நாட்களையும் மகிழ்ச்சியாக கழித்தனர்.
2019 ஆம் ஆண்டு மித்ரா திருச்சியில் புகழ் பெற்ற மகளிர் கலைக்கல்லூரியில் பிஎஸ்சி(B.sc Comp) கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் சேர்ந்து கொண்டாள்.
மிதிலா அதே பள்ளியில், பிளஸ் 1 வகுப்பை தொடங்கினாள். மேலும் இப்பொழுதே பிளஸ் 2 பாடங்களுக்கான சிறப்பு வகுப்புகளுக்கும், கோச்சிங் சென்டர்களுக்கும், ஒரு வருடம் முன்பே மாலை நேரம் செல்லத் துவங்கினாள்.
எப்படியாவது மருத்துவம் படித்துவிட வேண்டும் என்பது மட்டுமே அவள் எண்ணம் முழுவதும் நிறைந்து இருந்தது.
இப்படியாக நாட்கள் இறக்கைக் கட்டிக்கொண்டு பறக்க,
மித்ரா நன்றாக கார் ஓட்டப்பயின்று, லைஸென்ஸ் எடுத்தவுடன், விஷ்ணு மாருதி ஸ்விப்ட் கார் (Maruti Suzuki Swift Car) ஒன்றை மித்ராவின் பெயரிலேயே ரெஜிஸ்டர் செய்து வாங்கினார்.
கார் அவசியம் இல்லை என்றாலும் பெண் பிள்ளைகள் நன்றாக வளர்ந்து விட்டதால், அடிக்கடி பொது வாகனங்களில் செல்வதை தவிர்க்கவே விஷ்ணு வாங்கினார். அதுவும் போன முறை பஸ்ஸில் நெருக்கடியில், கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்புவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது.. அவனவன் கண்களாலேயே பெண் பிள்ளைகளை மொய்க்க, சாமானியன் அவரால் ஒன்றும் செய்ய முடியாது போனது….
அன்றே கார் வாங்கிவிட வேண்டும் என்று முடிவெடுத்து இருந்தார்.
அந்த முடிவே அவர்களை சுழற்றி அடிக்கப்போவது பற்றி பாவம் அவருக்கு தெரியாது அல்லவா..!!
புது கார் வாங்கிய கையுடன், குலதெய்வ கோவிலுக்கு சென்று, புது காருக்கு என்று சிறப்பு வழிபாடு செய்ய ஒரு வெள்ளிக்கிழமை அனைவரும் விடுப்பு எடுத்துக் கொண்டு கிளம்பினார்.
பிள்ளைகள் இருவரும், நீண்ட தினங்களாகவே, லெஹங்கா(Lehenga) மாடல் உடை அணிய வேண்டும் என்று துளசியிடம் சொல்லிக் கொண்டிருக்க…
அவரும் கிடைத்த நேரத்தில், இருவருக்கும் ஒன்றுப்போல், மாம்பழம், ஆரஞ் மற்றும் ரோஜா வண்ணக் கலவையில் மிகவும் சிறப்பாக எம்பிராய்ட் மற்றும் முத்து வேலைகள் செய்து, பிள்ளைகளுக்கு லெஹங்காவை தைத்து தர..
மித்ராவும் மிதிலாவும், முழு ஒப்பனையில் அந்த உடையில் தயாராகி கோவிலிற்கு கிளம்ப..
அவர்களின் வசந்தகால வாழ்க்கையை நோக்கி, ஒரு புயலும் மையல் கொள்ள கிளம்பியது…
கோவிலில் பூஜைகள் நல்லப்படியாக முடிந்து திரும்பி வந்துக்கொண்டிருந்தனர்.
மித்ராவிற்கு மட்டுமே கார் ஓட்டத் தெரியும் என்பதால், அவளை கூகுள் மேப் உதவியுடன் வண்டியை ஓட்டிச்சென்று திரும்பி வந்துக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது சாலையோரம், ஒரு வெண்ணிற பென்ஸ் கார் நின்றுகொண்டிருந்தது.
அந்த பென்ஸ் காரை, இவர்கள் கார் கடந்து செல்லப்பார்க்க, உடனே ஒருவர் ஓடிவந்து, குறுக்கே நின்று, இவர்கள் காரை நிறுத்தச் சொல்லிக்கூற.
மித்ரா உடனே சடன் பிரேக் போட்டு காரை நிறுத்த...
ஓட்டுனர்களுக்கு உண்டான வெண்ணிற யூனிஃபார்ம் உடையில் இருந்த அவர், மித்ராவின் ஜன்னல் புறம் ஓடிவந்து,
எதிர்பாராத விதமாக அவர்கள் கார் பஞ்சர் ஆகிவிட்டது என்றும்.. அவர்கள் முதலாளி சீக்கிரமாக ஒரு வேலை விஷயமாக திருச்சி செல்ல வேண்டும் என்றும் கூறிக்கொண்டிருக்க...
இடையிட்ட விஷ்ணு, "அதுக்கு நாங்க என்ன செய்ய வேண்டும் சார்" என்று கேட்டார்..
ஓட்டுநர், "சார் அது வந்து உங்க கார் கொஞ்சம் அவசரமா எங்களுக்கு தேவைப்படுது.. நீங்க உங்க குடும்பத்தோட கொஞ்சம் எங்க காரில் வெயிட் செயிங்க, எங்க ஆளுங்க சீக்கிரம் வந்து, உங்களை நீங்க போக வேண்டிய இடத்துக்கு கூட்டிட்டு போயி விடுவாங்க.. உங்கள் காரை உங்கள் இடத்தில் பத்திரமா நான் இன்னைக்கே வேலை முடிய ஒப்படைச்சுடுறேன்", என்று கேட்க.
விஷ்ணுவிற்கு மிகவும் அதிர்ச்சியாகிவிட்டது . அவர் இதெல்லாம் நமக்கு எப்படி சரிவரும்.. என்ற சாதாரண மிடில்கிளாஸ் மக்கள் மனநிலையில்.. "இல்லை சார் எங்களுக்கு இது சரிப்படாது.. நீங்க வேற காரை பார்த்துக்கோங்க, நாங்க கிளம்புகிறோம் ", என்றவர்..
மித்ராவிடமும், "மித்துமா டஸ்ட் அதிகமா இருக்குப்பாரு.. விண்டோ கிளாஸை ஏத்திவிட்டு.. காரை எடு..", என்றார் விரைவாக.
அதற்குள், ஏற்கனவே மிகவும் தாமதம் ஆவதால் எரிச்சலில் இருந்தவன், கடும் சீற்றம் கொண்ட புயலென, காரிலிருந்து விரைந்து இறங்கி அங்கு வந்திருந்தான்.
அவன் ருத்ரன்.
மாநிறத்திற்கும் வெண்மை நிறத்திற்கும் இடையில் உள்ள நிறத்தில், நன்றாக முறுக்கேறிய உடலுடன், வெள்ளை நிற சட்டை மற்றும் கருநீல நிற கோட் சூட்டில், இடது கையில் சில்வர் நிறத்தில் ரேடோ வாட்ச் மற்றும் வலது கையில் பிளாட்டினம் பிரேஸ்லெட், காதுகளில் ஒற்றை பெரிய வைர கல் ஸ்டர்ட் என்று பார்க்க கம்பீரமாக இருந்தவன்…,
கண்களிலும், உடல் மொழியிலும் அலட்சியமும், சீற்றமும் வழிந்தோட..
அவனின் குணத்திற்கு ஏற்ப காற்றில் அடங்காது அலைப்பாயும் சிகையுடன்.. ஆணழகனாக நடந்து வந்தவன் இவர்கள் காரை நெருங்கிவிட...
காரிலிருந்து அவன் வெளி வந்ததுமே... விஷ்ணு அவன் தோற்றத்திலும், அவனின் தோரணையிலுமே பேச்சை பட்டென்று நிறுத்தி விட்டு இருந்தார்.
அவன் தோற்றம் நிறுத்த வைத்து இருந்தது என்று சொல்வது தான் சரி.
விஷ்ணுவிற்கு மனதில் எப்படி இந்த இடத்தை விட்டு செல்வது, பெண்பிள்ளைகளை வேறு வைத்துள்ளோமே என்று மனம் பதைபதைப்பாக இருந்தது.
பல்வேறு வகையான சிந்தனைகள் அவர் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.
துளசிக்கும் ஒன்றும் புரியவில்லை, யார் இவர்கள் என்று தெரியாமல், அவர் மனமும் அடித்துக்கொண்டு தான் இருந்தது.
உள்ளிருக்கும் தன் பிள்ளைகளை அவன் பார்க்க வேண்டாம் என்ற எண்ணத்துடன்.. காரில் இருந்து உடனே விஷ்ணு கீழிறங்கி கொண்டார்.
டிரைவர் ஓடிச்சென்று அவனிடம், விஷ்ணு சொன்னவற்றை, சிந்தாமல் சிதறாமல் கூற..
விஷ்ணுவையும், அவரின் காரையும் பார்த்துக்கொண்டே கேட்டுக்கொண்டவன்..
விஷ்ணுவிடம் வந்து, "ஹாய் அங்கிள் நான் ருத்ரன்", என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு…
நேரடியாக "டிரைவர் எல்லாம் சொல்லியாச்சுன்னு சொன்னார்.. எனக்கு ஒரு எமர்ஜென்சி வேலை திருச்சியில் இருக்கு.. சோ உங்க கார் எனக்கு இப்ப வேண்டும் அங்கிள், டோன்ட் வொர்ரி நீங்க சேஃபா உங்க வீட்டுக்கு போக நான் ஏற்பாடு செய்கிறேன்..", என்றான் முடிந்தளவு பொறுமையாக….
விஷ்ணுவும் தன்மையாக அவரின் மறுப்பை தெரிவிக்க.
ருத்ரனின் பொறுமை குறையத் தொடங்கியது.
"அங்கிள் உங்க கார் எனக்கு இப்ப கண்டிப்பா வேண்டும்..", என்றான் அழுத்தமாக. நீங்கள் தந்துதான் ஆகவேண்டும் என்ற நிபந்தனையை அந்த அழுத்தம் மறைமுகமாக சுமந்துக்கொண்டு இருந்தது.
விஷ்ணு, "என்ன சார் மிரட்டுற மாதிரி பேசறீங்க.. அதனால் தான் இதெல்லாம் சரிவராது சொன்னேன்.. ப்ளீஸ் வேற கார் பார்த்துக்கோங்க.. இன்னைக்கு தான் நாங்க காரையே கடையில் இருந்து எடுத்தோம்", என்றுக்கூற..
"ப்ச்…. இப்ப என்ன அங்கிள் உங்க பிரச்சனை", என்ற ருத்ரன், மேலும், "நான் உங்க காரோட விலையை விட.. இரண்டு மடங்கு பணத்தை இப்பவே செட்டில் பண்ணிடறேன்.. போதுமா..", என்றான்.
அவன் குரலில் இருந்த பணிவு.. முகத்தில் சற்றும் இல்லை…
நடப்பதை ஏதோ சினிமா பார்ப்பது போல் ஆர்வமாக உள்ளிருந்து பார்த்து கொண்டு இருந்த மிதிலாவோ உடனே, "அப்பா இந்த டீல் சூப்பரா இருக்கு.. அப்ப நாம ரெண்டு கார் வாங்கலாம் இல்ல.. கொடுத்துடுங்க", என்று காரினுள் இருந்து குரல் கொடுத்தாள்.
அவள் குரல் கேட்டு.. உடனே காருக்குள் ருத்ரன் தன் பார்வையை செலுத்திப்பார்க்க.
உச்சி வெயில் அனைவருக்கும் மண்டையை பிளக்க.. ருத்ரனிற்கு மட்டும் அவன் மீது பனிமழை பொழிய துவங்கியது..
உள்ளே பார்த்தவனின் பார்வை.. பாவையின் கூர் பார்வையில் சிக்குண்டு .. அதீத மையலுடன் காருக்குள் மையம் கொண்டது. "எப்பா என்ன பார்வை டா இது??.. வேற எதையுமே பார்க்க முடியலயே".. என்று அவனுக்கு தலையே கிறுகிறுத்தது..
"சிம்பிளி பியூட்டிஃபுல் அண்ட் கார்ஜியஸ்.. ஹோம்லி ஆல்சோ", என்று பல வகையில் பெண்ணவளின் அழகை அவன் மனம் ஆராதிக்கத் தொடங்கியது.
விஷ்ணு கண்டன பார்வை ஒன்றை மிதிலாவின் மீது செலுத்த. உடனேயே அவள் பயத்தில் வாயை மூடிக்கொண்டாள்.
விஷ்ணு, அவன் கூலர்சினுள் இருந்த பார்வை மாற்றத்தை உணராது, ருத்ரனிடம் தன்மையாக, "இல்லை சார் வேண்டாம்.. நாங்க குலதெய்வ கோவிலுக்கு போயிட்டு வரோம்.. வீட்டுக்கு நேரா போகனும். எனக்கு உங்க பணம் வேண்டாம், இந்த வழியா வரும் வேற காரை பார்த்துக்கோங்க, தயவு செய்து எங்களுக்கு வழி விடுங்க.. லேடிஸ் வேற இருக்காங்க.. வெயிட் பண்ண முடியாது", என்றார்….
அவர் குரலில் நிகழ்காலத்திற்கு திரும்பிய ருத்ரன், சட்டென்று யோசித்து, "ஓகே அங்கிள் நீங்க நேரா உங்க வீட்டுக்கு போகலாம்.. ஃபேமிலியா வேற வந்து இருக்கீங்க, ஐ கேன் அண்டர் ஸ்டேண்ட்..", என்றுக்கூற..
விஷ்ணுவிற்கு ஹப்பாடா என்று இருந்தது..
ஆனால் உடனே ருத்ரன், "சேம் டைம், டிரய் டூ அண்டர்ஸ்டாண்ட் மை சிட்டுவேஷன்.. திருச்சியில் இருந்து கார் வந்து நான் போக லேட் ஆகிடும். சோ எனக்கு லிஃப்ட் (lift) மட்டும் கொடுங்க, நான் போக வேண்டிய இடத்தில் என்னை நீங்க இறக்கிவிட்டுட்டு போங்க.. I need to attend the meeting urgently.. so please..", என்றான் பணிவுடன் .
இவனின் புதிய அவதாரம் கண்டு டிரைவர் மலைத்துவிட்டார்…. ருத்ரனா இது.. இவ்வளவு பணிவாக பேசுவது என்று அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது…. ருத்ரன் கூலர்ஸ் போட்டு இருந்ததால் அவன் கண்களில் வழிந்த மையல் அவருக்கும் தெரியாது போனது..
ருத்ரனுடைய பேச்சின் தோரணையும், தோற்றமும், பணமும் விஷ்ணுவை நொடிக்கு நொடி மிரளச் செய்தது.
இவனை பகைத்துக் கொண்டால், நிச்சயம் எதிர்காலத்தில் பிரச்சனை வரும் என்று புரிந்துக்கொண்ட விஷ்ணு.. "சரி வாங்க", என்று வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டார்.
காரில் முன் பக்கம் மித்ராவும், விஷ்ணுவும் அமர்ந்துக்கொள்ள.. பின்பக்கம் துளசி மற்றும் மிதிலா அமர்ந்திருந்தனர்.
ருத்ரன் நேராக சென்று பின்புறக் கதவை திறந்து, ஜம்பமாக மிதிலாவின் அருகில் அமர்ந்ததும்..
அவன் செல்லவேண்டிய இடத்தை கேட்டு, கூகுளில் போட்டு மித்ரா வண்டியை செலுத்தினாள்.
ருத்ரனிற்கு மனம் முழுவதும் இறெக்கை கட்டிக்கொண்டு பறப்பது போல் இருந்தது.
காரில் இருந்து வரும் சம்பங்கி பூ மற்றும் பவள மல்லியின் மணம் அவனை கிறங்க செய்தது.
சற்று முன் கேட்ட பெண்ணவளின் குரலை மீண்டும் மீண்டும் ரிவைண்ட் செய்து பார்த்துக் கொண்டு இருந்தான் மனதில்… தேனினும் இனிய குரல் என்பார்களே, அது இதுதானோ என்று அவன் மனம் ஆராய்ச்சி செய்ய தொடங்கியது..
பெண்ணவளின் இளமையான எந்த ஒப்பனையும் இல்லாத அழகில் சொக்கிப் போனான்.
பெண்ணின் கடைக்கண் பார்வையில் கூட….. தன் மீதான சிறு கிறக்கத்தையோ மயக்கத்தையோ ருத்ரன் காணவில்லை.. அதுவே அவனுக்கு அவளை மேலும் மேலும் பார்க்க தூண்டியது...
இதுவரை ருத்ரன் பார்த்த பெண்கள் அனைவரும், அவனை பார்த்தவுடன் மயங்கி வழிந்துகொண்டு அவனிடம் பேசுவார்கள் அல்லது அவர்கள் பார்வையில் ஆவது மயக்கத்தை இவன் கண்டுள்ளான்.
பெண்களை பெற்றவர்களும் ருத்ரனிடம் வலிய வந்து விசாரிப்பார்கள். அதுவே ருத்ரனிற்கு அவர்கள் மேல் ஒருவித அலட்சிய பாவத்தை கொடுத்து இருந்தது..
இன்றோ விஷ்ணு குடும்பமே, அவனுக்கு மிகவும் வித்தியாசமாக தெரிந்தது. அவன் பார்த்தது அவ்வளவு தான்..
அவன் எண்ண அலைகளை களைக்கும் விதமாக துளசி ருத்ரனிடம், சிறிது குங்குமப் பிரசாதத்தை எடுத்து கொடுத்தார்.
ருத்ரன் அதை மறுக்கும் எண்ணம் சிறிதும் இன்றி, "தேங்க்ஸ் ஆன்ட்டி…", என்று அமைதியாக எடுத்து தன் நெற்றியில் வைத்துக்கொண்டான்.
யாரின் வீட்டிற்கும் செல்லாதவன், மிகவும் ஹை சொசைட்டி வாழ்க்கையில் பழக்கப்பட்டவன், இவர்களின் சாதாரண காரில் பயணிப்பது, அவர்களுக்கு நல்லாதா?? கெட்டதா??
கார் சென்று கொண்டிருக்கும் பொழுதே மிதிலா, "அம்மா எனக்கு பசிக்குது புளி சாதம் வேண்டும் ", என்று நச்சரிக்க ஆரம்பிக்க…
துளசிக்கு பயங்கர கோபம் வந்துவிட்டது, "மிது அமைதியா வா.. புளிசாதம் வீட்டுக்கு போயிட்டு சாப்பிடலாம்", என்றார் மெல்ல ருத்ரனிற்கு கேட்காத வகையில்.
மிதிலாவோ மீண்டும் மீண்டும், எனக்கு ரொம்ப பசிக்குது என்று அடம்பிடிக்க…
நமக்குன்னு வந்து வாச்சு இருக்காளே இந்த சின்னக்குட்டி.. நேரம் காலம் தெரியாமல்.. என்று துளசியும், விஷ்ணுவும் மனதில் நினைத்து நொந்துக் கொண்டனர்..
துளசி தனது பொறுமையை இழந்து, "கோவில்ல இப்ப தானே மிது சாப்பிட்ட.. அதுக்குள்ளே என்ன மறுபடியும் பசி.. சும்மா அதே நினைப்பில்.. கண்ணை மூடி தூங்கு", என்றார் கடுமையாக.
மூன்றாம் நபர் முன்பு எவ்வாறு நடந்துக்கொள்ள வேண்டும் என்று அவளுக்கு தெரியவும் இல்லை..
ருத்ரனின் தோரணையும், பண வளத்தையும், பார்த்தோ ஆராய்ந்தோ தெரிந்து கொள்ளும் பக்குவம் அவளுக்கு இல்லை…
இவர்கள் சம்பாஷனையை ருத்ரன் அமைதியாக கேட்டுக்கொண்டு தான் இருந்தான்.. தன்னால் தான் துளசி மறுக்கின்றார் என்றும் அவனுக்கு புரிந்தது..
மிதிலாவின் முகமோ துளசி திட்டியதும் வாடி, அழ தயாரானது..
பால் வண்ண முகம்.. நொடியில் இரத்த நிறத்தில் சிவந்து மாறிப்போனது..
அதை பார்த்து ஏனோ மனம் தாங்க முடியாமல் ருத்ரன் உடனேயே, "ஆன்ட்டி எனக்கும் பசிக்குது.. சோ எனக்கும் மிது குட்டிக்கும், சேர்த்து பிரசாதம் வச்சு கொடுங்களேன்..", என்று உரிமையாக, அவன் நிலையில் இருந்து இறங்கி வந்து கேட்டுவிட்டான்.
காரில் இருந்த அனைவருக்கும் மிகுந்த அதிர்ச்சி.. அவனின் நடை, உடை, பாவனையிலேயே அவனது வசதி, மிதிலா தவிர அனைவருக்கும் தெரிந்து இருந்தது.
அதனால் தான் துளசி, எப்படி அவன் முன்பு பாத்திரத்தை எடுத்து திறந்து இவளுக்கு தருவது.. என்று நாகரிகம் கருதி மறுத்திருந்தார்...
மிதிலாவின் மீது வந்த கடுப்பில், ருத்ரனுடைய மிது குட்டிக்கும் என்ற உரிமையான உச்சரிப்பை... அச்சமயம் அனைவருமே.. கவனிக்க மறந்திருந்தனர்.
வேறு வழியில்லாமல் துளசி, ருத்ரனிற்கும், மிதிலாவிற்கும் சிறு தட்டில் பிரசாதம் வைத்துக் கொடுத்தார்… அமைதியாக..
வீட்டிற்கு சென்றதும் மிதிலாவை கண்டிக்க வேண்டும் என்று.. விஷ்ணுவும் துளசியும்.. மனதில் நினைத்துக் கொண்டனர்.
மிதிலா சிறு பிள்ளை போல், கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து ரசித்து உண்பதையும்... அவளுடைய முகம் ஒவ்வொரு வாய் உண்ணும் பொழுதும் மாறுவதையும்... சிறு சிரிப்புடன் "ஓ மை காட், இவ பயங்கர foodie ஆ இருப்பா போலயே", என்று நினைத்தப்படியே ருத்ரன் அவளை கவனித்துக்கொண்டு இருந்தான்…
எப்பொழுதும் வெளியே சென்றால்.. ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் மட்டுமே
சாப்பிடுபவன், இன்று இவர்கள் தந்த உணவை சாப்பிட்டான்.
இதுவரை அவன் புளிசாதம் போன்ற உணவுகளையே முதலில் சாப்பிட்டதில்லை..
இப்படியே நிமிடங்கள் கடக்க..
முடிந்தளவு விரைந்து காரை செலுத்தி, ருத்ரன் இறங்கும் இடத்திற்கு மித்ரா வந்து சேர்ந்தாள்.
ருத்ரனோ, பாவையின் மீது கொண்ட புது மையலிலும், அவன் நாசி நுகர்ந்த பூவின் நறுமணங்களிளும், உண்ட உணவின் மயக்கத்திலுமே, அக்கணம் எதுவும் விசாரிக்க மறந்து, காரில் இருந்து இறங்கிக் கொண்டான்.
ருத்ரன், விஷ்ணுவிடம் நன்றி சொன்னதும்.. அவர்களும் விரைவாக, விட்டால் போதும் என்று கிளம்பிவிட்டனர்.
ருத்ரனின் கனவான, இரும்பு தொழிற்சாலை தொடர்பான, முக்கியமான கலந்துரையாடல் இன்று..
ருத்ரனிற்கு, மீட்டிங் முடிந்த பிறகு தான் விஷ்ணு குடும்பத்தை பற்றி, கேட்காததே நினைவு வந்தது. மிது என்ற பெயரைத் தவிர வேறு எதுவும் அவனுக்கு, அவர்கள் குடும்பத்தில் இருந்து அப்பொழுது தெரியாது.
உடனே ஃபோன் போட்டு, கார் நம்பரை பார்த்தாரா என்று, டிரைவரிடம் விசாரித்தான். அவரும் தெரியவில்லை என்று விட்டார்.
அவன் முதலாளி எதற்கு கேட்கிறார் என்று அவனுக்கு தெரியாதா.. அவரும் பெண்ணைப் பெற்றவர் ஆயிற்றே, அதனால் எந்த தகவலும், தெரிந்தும் சொல்லவில்லை .
அவர்களின் கார் நிறம் மட்டுமே அவன் நினைவில் இருந்தது.. என்ன மாடல் என்று தெரிந்து இருந்தால் கூட ஷோ ரூம்களில் ஆராய்ந்து உடனே கண்டுபிடித்து இருப்பான்..
"சரிப்போ….", என்று அதை அப்படியே விட்டுவிட முடிவு செய்தவன்.. மற்ற வேலைகளை பார்க்க ஆரம்பித்தான்.
அன்று இரவு எப்பொழுதும் போல் பப்பிற்கு சென்ற ருத்ரன், ட்ரிங்க்ஸை எடுத்து பருக ஆரம்பிக்க..
அங்கு வந்து இருந்த, அவனுக்கு தெரிந்த பெண்களில் சிலர் வந்து, அவனை நடனம் ஆட அழைத்தனர்…
எழுந்து சென்றவனால், ஏனோ அன்று சகஜமாக ஆட முடியவில்லை..
திடிரென்று ஏதோ ஒரு ஒவ்வாத தன்மை அங்கு அவனுக்கு..
உள்ளே சென்றிருந்த மதுபானம், காலையில் பார்த்த பாவையின் எண்ணத்தை தானாக மேலெழுப்பிவிட்டு, அங்கு உள்ள பெண்களுடன், அவளை ஒப்பிட்டு பார்த்து தோற்றது…
தனியாக அதைப்பற்றி சிந்திக்க வேண்டும் போல் வேறு இருக்க…
உடனே வெளியேறியவன், டிரைவரை தவிர்த்துவிட்டு காரை எடுத்துக்கொண்டு தனியாக கெஸ்ட் ஹவுஸ் வந்துவிட்டான்.
அங்கு முதலில் மதுவாடைப் போக ரெப்ரெஷ் செய்து கொண்டு, வெளிவந்தவன், சுவிம்மிங் ஃபூல் அருகே உள்ள சாய்வு நாற்காலியில் அமைதியாக படுத்துக் கொண்டு, வானையே பார்த்துக்கொண்டு இருந்தான்.
அவன் மனம் முழுவதும் இன்று பார்த்ததையே நினைத்துக் கொண்டு இருந்தது. அவனால் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை..
இதுயென்ன இப்படி, என்று அவனுக்கே அதிர்ச்சியாக கூட இருந்தது.
அழகாக இருக்கும் பெண்களை பார்த்து ரசிப்பதும், ஏன் அவர்களின் சம்மதத்துடன் அதற்கு மேல் செல்வதும்.. அவனுக்கு பழக்கம் தான். ஆனால் அந்த லஸ்ட்டை அத்தோடு அவன் மறந்துவிட்டு இருப்பான்.
இத்தனை மணி நேரம், சிறு ஸ்பரிசம், ஏன் பார்வை பரிமாற்றம் கூட இன்றி அவனுக்குள் இருப்பது அவள் மட்டுமே..
அவளை நினைத்தாலே அவன் மனதை மயிலிறகால் வருடுவது போல், அவ்வளவு சுகமாகவும் புத்துணர்வாகவும் இருந்தது..
அவளின் பெரிய அழகிய நயன விழிகளில் அவனுக்கான தேடலைக் காண அவன் மனம் ஏக்கம் கொண்டது..
அக்கணம் தான் அவனுக்கு அவனின் ஆசைகள் தெள்ளத் தெளிவாக புரிந்தது…
அப்படியே எழுந்து சென்றவன்.. உணர்வுகளின் பிடியில் அப்படியே நீச்சல் குளத்தில் குதித்து.. நீந்த ஆரம்பித்தான்.
அதைத்தொடர்ந்து, விஷ்ணுவின் குடும்பத்தை நோக்கி ருத்ரனின் தேடுதல் வேட்டை ஆரம்பமானது….
அவனின் கண் எது மீது பட்டாலும், மறுகணம் அவன் காலடியில் அப்பொருளை அவன் தந்தை கொண்டு வந்து கொட்டிவிடுவார்…
இம்முறை அவனின் ஆசை வித்தியாசமாக…
விஷ்ணு குடும்பம் ருத்ரனின் மையலில் இருந்து தப்பிக்குமா ?
***********************************
ருத்ரன், "பார்ன் வித் சில்வர் ஸ்பூன் " என்பார்களே, அப்படியில்லை அதைவிட இவன், "பார்ன் வித் பிளாட்டினம் ஸ்பூன்".
பிறந்த நொடியில் இருந்தே கொண்டாடப்பட்டவன்..
ருத்ரனின் தந்தை ஆதிகேசவன், திருச்சி தொகுதியில் கடந்த 28 வருடங்களாக தொடர்ச்சியாக எம்எல்ஏ வாக உள்ளார்.
தற்சமயம் ஆளுங்கட்சி எம்எல்ஏவாக(MLA) இருக்கின்றார். அவர் கட்சி தோற்றாலும் சரி, ஜெயித்தாலும் சரி, அவரின் கட்டுப்பாட்டில் தான் திருச்சி எப்பொழுதும் இயங்கும்.
ஆதிகேசவனை தெரியாதோர் திருச்சியில் யாரும் இருக்க மாட்டார்கள்.
அந்த அளவிற்கு மக்களை அதட்டி, உருட்டி, அனைவர் வயிற்றிலும் முடிந்த அளவு அடித்து, தனி சர்வாதிகாரம் செய்து கொண்டு வருகிறார்.
அரசியல் போர்வையில் உலா வரும் கலியுக இராட்சஷன்..
அவரின் ஒரே மகன் தான் ருத்ரன்..
இதில் ஆதிகேசவன், அதிக ஜோதிட நம்பிக்கை உடையவன், காலை எழுவதில் இருந்து.. இரவு படுக்கும் வரை ஜோதிடர் சொன்னபடியே செய்வான்.
ஆதிகேசவனிடம், இந்த ராசியில் உள்ள பெண்ணை திருமணம் செய்ய ஜோதிடர் சொன்னவுடன்.. உடனே தேடி செய்துகொண்டார்.
முதலில் ஆண் பிள்ளை தான் பிறக்க வேண்டும் என்று ஜோதிடர் சொன்னதும், முதன்முதலில் ஆதிகேசவன் மனைவி மாதவி, கருவுற்றவுடன் டாக்டரை மிரட்டி, என்ன குழந்தை என்று ஸ்கேனில் பார்த்து, பெண் குழந்தை என்று மருத்துவர் சொன்னவுடன் அக்கருவை வளரவிடாது அப்படியே அழித்து விட்டார். இதேபோல் அடுத்த இரண்டு முறையும் நடந்தது..
அதற்கே மாதவி பாதி உடலாக ஆகிவிட்டார்..
பிறகுதான் ருத்ரன் பிறந்தான்.
மீண்டும் ஜோசியர், ஒரு குழந்தை தான் உனக்கு நல்லது கேசவா.. இரண்டாவது குழந்தை பிறந்தால் அது உனக்கு எமனாக வரும் என்றவுடன்.. மாதவிக்கு ஆதிகேசவன் அறுவை சிகிச்சை செய்ய கூறி கர்ப்பப்பையையே நீக்கி விட்டான்.
பெற்ற பிள்ளைகளுக்காக உயிரை விடும் பெற்றோர்கள் வாழும் நாட்டில் தான் இத்தகையவனும் இருக்கின்றான்.
சொந்த மனைவிக்கே இந்நிலைமை என்றால், இத்தகையவனிடம் விஷ்ணுவின் குடும்பம் சிக்கினால்..??
உலகத்தில் உள்ள அனைத்து கெட்ட விஷயங்களின் உட்சமே ஆதிகேசவன்.
மாதவிக்கு, கணவனின் இத்தகைய செயல்கள் வெறுப்பை தர, ஆரம்பத்தில் எதிர்த்துப்பேசி உடலில் ஒருயிடம் விடாது அடியை வாங்கிக்கொண்டு, இரவு நேரங்களில் மூர்க்க தனமான கூடலையும் அனுபவித்து, ஒன்றும் முடியாது பயத்தில் வாயை மூடிக்கொண்டார்..
நாளடைவில் மாதவி, உலக வாழ்க்கையையே வெறுத்துவிட்டார்.
ருத்ரன் பிறந்த வருடம் வந்த தேர்தலில், ஆதி கேசவன் நின்று, மாபெரும் வெற்றியை பெற்று எம்எல்ஏ ஆகிவிட்டான்.
அதிலிருந்தே தப்பி தவறிக்கூட, ஜாதகம் பார்க்காமல் எதுவும் செய்வதில்லை.
அனைத்து அண்டர் கிரவுண்ட் வேலைகளும் செய்ய தொடங்கினான்.
புறம்போக்கு நிலங்களை கைப்பற்றுதல், மெயின் இடத்தில் உள்ள இடங்களின் பத்திரத்தை, அதன் உரிமையாளரிடம் இருந்து மிரட்டி கைப்பற்றுதல், போதை மருந்துகளை சப்ளை செய்வது ..என்று தங்கு தடை இன்றி அனைத்து கெட்ட விஷயங்களும் அவன் மேற்பார்வையில் நடந்தது.
பார்க்கும் அழகிய பெண்களை எல்லாம் சீரழித்து, அவர்களை மற்ற அமைச்சர்களுக்கும் அனுப்புதல் என்று, அவனுடைய பாவக்கணக்குகள் ஏராளம். இதில் குடும்பப் பெண்களும் அடக்கம்.
எத்தனையோ பெண்கள், இவனால் வாழ்க்கை இழந்து, குடும்பம் இழந்து, பிள்ளைகளை இழந்து, சமூகத்தில் ஒரு அங்கீகாரத்தை இழந்து, மனநிலை பாதிக்கப்பட்டு.. உடல் நிலை சீர்கெட்டும்.. தற்கொலை செய்துகொண்டும் என்று அழிந்தனர்.
ஆதிகேசவன், ருத்ரனை அவனின் அதிர்ஷ்ட புதையல் ஆகவே பார்த்தான்.
இப்பேர்பட்ட தந்தைக்கு பிறந்த மகன் எப்படி வளர்ந்து இருப்பான்.
ருத்ரனிற்கு, "எது நல்லது", "எது கெட்டது", என்று எதையும் சொல்லித்தர யாரும் இல்லை.
மாதவி சுதாரித்து, ருத்ரனை அடக்கப்பார்க்க, ஆதிகேசவன் அதற்கு அனுமதிக்கவில்லை.
ருத்ரன் மிகப் பெரிய பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்தான்.
கேட்டது, கேட்காதது, அவன் மனதில் நினைத்தது, என்று அனைத்தையும் அவன் தந்தை வாங்கி குவிக்க, இவ்வுலகில் இளவரசனாக வளம் வந்தான்..
மேற்படிப்பை ஃபாரினில் தொடர..
அங்கு மது, மாது, போதை அனைத்திலும் கற்றுத் தேர்ந்தான்.
வாழ்க்கை வாழ்வதற்கே, அந்த வாழ்வை வாழ தனக்கு அத்தனை தகுதியும் உள்ளது என்று.. அனைத்தையும் திகட்டத் திகட்ட அவன் வாழ்ந்து பார்த்தான்.
பெண்களை மயக்க, மிகவும் ஆணழகனாகவும், பணக்காரனாகவும் இருந்தால் போதும், என்ற இறுமாப்பில் களிப்புற்றான்…
அவனிடம் தானாக வந்து விழுந்தவர்களே அனைவரும்.
இதுவரை அவன் தேடிசென்றது இல்லை.
இனியும் இதுவே தொடருமா??
இதுநாள் வரை பெண்களை படுக்கையில், ஒருவித எண்டர்டெயின்மெண்டாக பார்த்தவனின் மனதில் முதல் சலனம்….
******************************
அங்கு அமெரிக்காவில்,
ஹரியின் வீட்டில், ஒரு நாள் காலைப் பொழுதிலேயே அன்னபூரணி இந்தியாவிற்கு கால் பேசிக்கொண்டு இருந்தார்.
சேதுமாதவனின், ஒன்றுவிட்ட சகோதரர் தான், கால் செய்து இருந்தார்.
சேதுமாதவன் குடும்பம் இதுவரை குடும்ப சொத்துக்களை பிரிக்கவில்லை. அதனால் அவர் சகோதரர், இனி பிரித்துவிடலாம், நீங்களும் ஒரு முறை இந்தியா வந்து செல்லுங்கள் என்று வற்புறுத்தி கொண்டிருந்தார்.
ஹரியின் கையெழுத்து வேண்டும் என்றும், அதனால் ஹரியையும் அழைத்து வருமாறு, அன்னபூரணியிடம் தகவலை பகிர்ந்து விட்டு, அனைவரையும் விசாரித்துவிட்டு ஃபோனை வைத்தார்.
ஹரி என்னவென்று விசாரிக்க…
அன்னபூரணி, ஹரியிடமும் விஷயத்தை கூறி, எப்பொழுது விடுமுறை எடுக்க முடியும் பார்த்து, இந்தியா செல்ல டிக்கெட் புக் செய்யுமாறு கூறினார்.
ஹரிக்கும் வயது 30 ஆகிவிட்டது..
அவன் வேறு கல்யாணம் செய்துக்கொள்ள மாட்டேன்.. அது இது என்று தள்ளிப்போட்டுக் கொண்டு இருக்கின்றான். இந்தியா சென்று ஏதாவது அமைந்தால் நன்றாக இருக்கும் என்று அன்னபூரணியின் மனம் வேறு கணக்குப் போட்டது.
90s kids-களுக்கு உண்டான சாபம், எங்கு சென்றாலும் விடாது என்பது பாவம் அவருக்கு தெரியவில்லை.
பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்க தொடங்கினார்.
ஹரி மருத்துவமனையில், அப்பாயின்மென்ட்களை சரி பார்த்து விட்டு, அடுத்த வாரத்திலிருந்து 10 நாள் விடுப்புக்கு ஏற்பாடு செய்தான்.
விடுமுறை ஏற்றுக்கொள்ளப்பட்டதும், டிக்கெட்டையும் ஆன்லைனில் முன்பதிவு செய்து விட்டான்.
இந்த பயணம் ஹரியின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துமா????
அன்னபூரணி அம்மாவின் எண்ணம் நிறைவேறுமா??
ஏதாவது சம்திங்? சம்திங்?? நடக்குமா..
வாருங்கள் நாமும் ஹரியுடன் இந்தியா சென்று பார்க்கலாம்.
இடம் : Seattle Tacoma airport, Washington.
ஹரி, அன்னப்பூரணியுடன், ஏர்போர்ட்டில் செக்கின்காக வரிசையில் காத்து கொண்டு இருந்தான். இந்தியா செல்ல.
அவர்கள் முறை வந்ததும், பேக்கேஜ் ஏரியாவில்(Baggage area) ட்ராலிகளை ஒப்படைத்துவிட்டு, சோதனைகள் செய்யும் இடத்திற்கு சென்று அதை முடித்துவிட்டு, போடிங் கேட்(boarding gate number) நம்பரை சரிபார்த்து, அவர்களுக்கான கேட்டுக்கு சென்று அமர்ந்தனர்.
அன்னபூரணி சொந்தங்களை பார்க்கப்போகும் எண்ணத்திலும், சென்றமுறை அவர்களை காண கணவருடன் சென்ற ஞாபகங்களையும் நினைத்தும், கலவையான மனநிலையில் அமர்ந்து இருந்தார்.
மாலை ஐந்து முப்பது அளவில்,
Seattle(SEA) to Dubai(DXB)
Flight Number EK 230-Boeing 777-200LR
விமான பயணிகளுக்கான அழைப்பு வந்தது.
கேட்டில்(Gate) பயணிகள் அனைவரும் பிளைட்டில் செல்ல லக்கேஜ்களை ஆயத்த படுத்தினர்.
பிசினஸ் கிளாஸ் மக்களுக்கான அறிவிப்பு வந்ததும்… ஹரி மற்றும் அன்னபூரணி உள்ளே சென்றனர்.
மிக நீண்ட பயணம் 15 மணி நேரம் ஆகும், இவர்கள் துபாய் செல்லவே .
மீண்டும் அங்கிருந்து சென்னைக்கு விமானம்..
அடுத்து சென்னையில் இருந்து திருச்சிக்கு செல்ல லோக்கல் விமானம்… என்று 25 மணிநேரத்திற்கு மேலான பயணம்.
துபாய் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தவர்கள், சென்னை செல்லும் ஃபிளைட்டிற்காக காத்திருக்கும் இடத்தில்,
சொந்தங்களுக்கு கொடுக்கலாமென்று, அன்னப்பூரணி, உலர் பழங்கள் மற்றும் உயர்ரக நட்ஸ்கள் விற்கும் கடைக்குள் சென்று பார்த்துக்கொண்டிருக்க..
ஹரிக்கு போர் அடித்தது…
அதனால் அங்கு அருகிலுள்ள கிஃப்ட் ஷாப்பினுல்(gift shop) நுழைந்து, அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருந்தான்.
அப்பொழுது ஹரியின் பார்வையில் அங்கு இருந்த, ஒரு அழகிய சிறிய டைமென்ட் பென்டன்ட்( diamond pendant ) உடன் இருந்த பிளாட்டினம்( Platinum ) செயின் விழுந்து, அவன் மனதை மிகவும் கவர்ந்தது.
கடையில் போட்டிருந்த இதமான லைட் வெளிச்சத்தில் பளிச்சென்று அது ஒளிவீச, அதன் அழகில் மிகவும் ஹரி லயித்து விட்டான்.
எதற்கு வாங்குகின்றோம்?? என்றே தெரியாமல், அந்த செயினை வாங்கினான்.
கடை உரிமையாளர் செயினில்… ஏதாவது பிரிண்ட் செய்ய வேண்டுமா.. என்று ஹரியிடம் கேட்டார்??
ஹரி, செயினே சிறியதாக உள்ளது, எங்கு பிரிண்ட் செய்வீர்கள்??, எப்படி செய்ய முடியும் ?? என்று விளக்கம் கேட்டான்.
கடைக்காரர், கொக்கி போடும் இடத்தில் மைக்ரோ அளவில் எழுத்துக்களை பிரிண்ட் செய்வோம், அதனை மேக்னிபையரில் மட்டுமே காண முடியும் என்று விளக்கம் தர.
ஹரி, "ஓ.. இன்ட்ரெஸ்டிங்" என்று நினைத்து, எப்பொழுதும் இந்த செயின், அவன் உடனே இருக்க வேண்டும் என்பதற்காக, "Together forever" என்று பிரிண்ட் செய்ய சொன்னான்…
ஹரி சொன்னதை உடனே பிரிண்ட் செய்து.. செயினை கிஃப்ட் பாக்ஸில் வைத்து கடையில் தர...
செயினை, ஹரி தனியாக எடுத்து, அவனுடைய வாலெட்டில் பத்திரமாக உள்ளே வைத்தான்.
பிறகு ஹரியும் அன்னப்பூரணியும், அங்குள்ள fresh juice கடையில், ஜூஸ் அருந்திவிட்டு, அவர்களுக்கான அடுத்த விமானத்திற்கான கேட்டில்(gate) காத்துக்கொண்டு இருந்தனர்.
அடுத்த விமானத்திற்கான அறிவிப்பு வந்தது.
EK 542 Boeing 777-300ER
Dubai(DXB) to Chennai (MAA)
அந்த விமானத்தில் ஏறிய இருவரும்…
இந்திய நேரப்படி அதிகாலை 3 மணி அளவில் சென்னை வந்து சேர்ந்தனர்.
அடுத்து Indian immigration இல் அனைத்து ஃபார்மாலிட்டீஸ்-யையும் முடித்து, லக்கேஜ்களை சரிபார்த்து எடுத்தனர்.
சென்னை ஏர்போர்ட்டில், ஏற்பட்ட காற்று பற்றாக்குறையும், வெப்பநிலையும், காற்றின் மாசு தன்மையும், இருவரையும் மிகவும் சோர்வடைய செய்தது. அன்னபூரணிக்கு கொஞ்சம் பிபியும் லோ ஆனது.
உடனே ஹரி பதறி அன்னபூரணியிடம், "திருச்சி பிளைட்டை கேன்சல் பண்ணிடறேன், நாம இங்கேயே ஒரு ஹோட்டல்ல ரெஸ்ட் எடுக்கலாம் மாம்", என்றான்...
அன்னபூரணி அதற்கு மறுத்துவிட்டார் .
இன்னும் ஒரு மணி நேரம் தானே சென்றுவிடலாம். அங்கே போய் ஒரேடியாக ஓய்வெடுத்துக் கொள்ளலாம் ஹரி என்றார்.
பிறகு Indigo Local Flight -ல், "Chennai To Trichy" க்கு சென்றனர்.
திருச்சி ஏர்போர்ட்டில் கால் பதித்த நொடி.. ஹரிக்கு ஏனோ மனம் ஒரு மாதிரியாக தள்ளாடியது…
சிறிது படபடப்பாகவும் இருந்தது..
அதே சமயம் உள்ளுக்குள்ளே ஒரு வித மகிழ்ச்சியும் பரவியது…
உடலை ஏதோ மெல்லிய மயிலிறகால் வருடுவது போல் பரவசமாக இருக்க..
அவனவளின் சுவாசம் கலந்த தென்றல் காற்று, அவனை தீண்டி, அவனுள் நிறைந்ததோ..!!
ஆழ்ந்து ஒரு மூச்சை எடுத்து அதை அனுபவித்தான்.
***********************
⚠️டார்லிங்ஸ், அடுத்த பதிவு வெள்ளிக்கிழமை போடுறேன். யாரெல்லாம் மூன்று கதையும் ஃபாலோ பண்றீங்க. இப்படியே நான் ஒருநாள் விட்டு ஒருநாள் அத்தியாயம் போடவா, இல்லை தினமும் போடவா? உங்களுக்கு வாசிக்க எப்படி நேரம் வசதிப்படும் சொல்லுங்க. ஒருநாள் மிஸ் பண்ணாலும் முன்னாடி இருக்கும் யூடி போயிடும். அதனால் தான் இரண்டு நாளுக்கு ஒருதடவை இப்ப போடுறேன். சாய்ஸ் உங்களது. கமெண்டில் சொல்லுங்க. அப்புறம் உடனுக்குடன் நான் அப்டேட் போட்டதும் தெரிஞ்சுக்க, என்னுடைய Whatsapp channel and Facebook group- சேர்ந்துக்கோங்க. நான் கதை போட்டதும் நோட்டிஃபிகேஷன் உங்களுக்கு கிடைச்சும். லிங்க் கீழே இருக்கு⚠️
வாட்ஸ் அப் சேனல் லிங்க் ⏬
https://whatsapp.com/channel/0029VaDvQSJK0IBeiSBQXN2K
Facebook Group Link⏬
https://www.facebook.com/share/Vm2dnLne2Vn2Mfoa/?mibextid=
A7sQZp
கருத்துகளை தெரிந்துக்கொள்ள ஆவலாக காத்துக்கொண்டு இருக்கின்றேன்.
அன்புடன் உங்கள் சுவாதி லக்ஷ்மி
💕
Super ma
பதிலளிநீக்கு