சங்கீதம்- 41.1

📍ஹாய் டியர்ஸ்! எல்லாரும் எப்படி இருக்கீங்க. இங்க நாங்க எல்லாரும் இப்ப நல்லா இருக்கோம். கோவிட் டெஸ்ட் லாஸ்ட் வீக் எல்லாருக்கும் நெகட்டிவ் ஆகிடுச்சு. இனி எந்த பயமும் இல்லை. 

உங்க எல்லாரோட  பிராத்தனைக்கும், அன்புக்கும், மெஸேஜ்க்கும் ரொம்ப ரொம்ப நன்றி டியர்ஸ். Feeling blessed.

சாரி நிறைய பேர் மெஸேஜ் அனுப்பி இருக்கீங்க. உடனே என்னால் ரிப்ளே செய்ய முடியலை. பழையப்படி வேலை செய்ய உடம்பு இன்னும் முழு ஒத்துழைப்பு தர மாட்டுது. ஃபோன் தூக்கி டைப் செய்தாலே. கைவலி... விரல்கள் மரத்து போறதுன்னு... போஸ்ட் கோவிட் எஃபெக்ட்ஸ் கொஞ்சம் இருக்கு... இந்த போஸ்ட்டே வாய்ஸ் டைப்பிங்ல போடுறேன்... அதுக்கான பிசியோதெரபி போயிட்டு வரேன். சீக்கிரம் சரியாகிடும் ☺️

😘 முக்கியமான விஷயம். ஈத்தன் குறிஞ்சி கதைக்கு அடுத்த பதிவு தயார் டியர்ஸ்.

இப்ப போஸ்ட் பண்றேன் வாசிங்க. 

முதல் இருக்கும் அத்தியாயமும் வாசிச்சுட்டு வாசிங்க. அப்ப தான் கனெக்டிவிட்டி புரியும்.

காத்திருந்து வாசிக்கும் தோழமைகள் அனைவருக்கும் என் மனமார்ந்த அன்புகள் 🤗🪻


அத்தியாயம் -41

ஒருவாரமாகவே ஈத்தனின் வீடு ஒரே பரபரப்பாக இருந்தது.

எல்லாம் ஈஷாக்குட்டியின் அமர்க்களத்தினால் தான்.

தினமும் காலை எழும் பொழுதே, “பேபி, இன்னும் 7 டேஸ் தான்… அம்மா இன்னும் 6 டேஸ் தான்… ஹேய் இன்னும் 5 டேஸ் தான்…”, என்று ஒவ்வொரு நாளாக குறைத்தப்படியே எழுபவள், இரவு உறங்குவதற்கு முன்பும் அதையே தான் செய்துவிட்டு உறங்குவாள்.

ஈத்தனுக்கு இது பழக்கம் என்பதால் சிரித்தப்படியே, அவனும் அவளுடன் சேர்ந்து அதையே கூறி, அவளை மேலும் உற்சாகம் செய்துக்கொண்டிருக்க…

ஆச்சரியப்பட்டு போனாள் குறிஞ்சி.

இதையே தான் அவளும், வருடா வருடம் கொடைக்கானலில் அமர்ந்து செய்துக்கொண்டு இருந்தாள்.

அந்த மாதம் வந்தாலே போதும். தினம் தினம் ஆவலாக கேலண்டரில் தேதியை பார்த்துப்பார்த்து எண்ணியப்படியே, “இதோ வரப்போகிறது… வரப்போகிறது…” என்று முடிந்த தேதியை கிழிப்பாள்.

ஈத்தன் பிறந்தநாள் வரும் மாதம், அவளுக்கு ஒருவகையான உணர்வுகளை இதயத்தில் தரும் என்றால், இது அவளின் உடல் முழுவதும் உள்ள நரம்புகளை ஒருமாதிரி மீட்டுக்கொண்டே இருக்கும்.

பின்னே, இந்த உலகிற்கு ஒரு அரும்பினை, அவள் தன் மலர் தேகம் உருக்கி, கொண்டு வந்த மாதம் ஆயிற்றே அது. அப்படி தானே இருக்கும்!

அதுவும், அவள் விரும்பும் ஒருவனின் உயிர் அணுவை, தன் உயிர் அணுவுடன் கோர்த்து, அவனின் மீதான அவளுடைய உணர்வுகளுக்கு, உயிர் கொடுத்த சிறப்பான நாள் ஆயிற்றே!

நேற்று தான், ஈத்தனின் கைப்பற்றி பிரசவ அறைக்குள் அவள் நுழைந்தது போல் இருக்கிறது.

ஆனால், அதற்குள்ளே இந்த பூக்குட்டிக்கு பதிமூன்றாவது பிறந்தநாள் வந்துவிட்டு இருந்தது.
________________________________

ஈஷா மெல்ல தூக்கம் கலைந்து படுக்கையில் அசைய ஆரம்பிக்கவும், “ஹேப்பி பர்த்டே பேபி”, என்று தன் மென் குரலில் கூறிய ஈத்தன், புன்னகையுடன் அவளின் முகத்தை வருடி எழுப்பவும்…

“பேபி…” என்று உடனே உற்சாகமாக எழும்பி அமர்ந்தவள், விடிந்துவிட்டதை பார்த்து, “ஹே! ஹேப்பி பர்த்டே டூ மீ” என்று விரிந்த புன்னகையுடன் கூறி, இரண்டு கரத்தினையும் விரித்து ஈத்தனின் கழுத்தை அப்படியே கட்டிக்கொண்டாள்…

அதில், அவளின் உச்சம் தலையில், தன் இதழ்களை மென்மையாக பதித்து எடுத்த ஈத்தன்…

“நீங்க பிறந்ததில் இருந்து டாடி ரொம்ப சந்தோஷமா இருக்கேன் பேபி. நிறைய நிறைய சந்தோஷங்களை டாடிக்கு நீங்க அள்ளி தந்துட்டே இருக்கீங்க. உங்களோட அப்பாவா இருக்கிறதில் எனக்கு அதிக பெருமையும், நிறைவும் டா” என்று அவளின் பிறப்பிற்கான மரியாதையை அந்த நல்ல நாளில் தந்தவன், “மே காட் பிளஸ் யூ ஸ்வீட்டி” என்று வாழ்த்தி, அவளை தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொள்ள…

அகம் மகிழ்ந்துப்போன ஈஷா, “எல்லாத்துக்கும் காரணம் நீங்க தான் பேபி. யூ ஆர் த பெஸ்ட் டாட் இன் த ஹோல் வோர்ல்ட். லவ் யூ சோ மச்” என்று அவனை மேலும் இறுக்கமாக அணைத்துக்கொண்டாள்.

அதில் நெகிழ்வுடன், “லவ் யூ சோ மச் டா பேபி” என்ற ஈத்தன். “இனி பேபி, டீன் கேர்ள்”, என்று புன்னகையுடன் கூறவும்.

“எஸ்… எஸ்… எஸ்…” என்று, அந்த பதின்ம வயதிற்குள் அடியெடுத்து வைப்பவர்களுக்கே உரிய ஆர்வத்துடன் கூறிய ஈஷா.

சட்டென்று, “அம்மா…” என்று திரும்பி குறிஞ்சியை தேடவும்…

அதற்காகவே காத்திருந்த குறிஞ்சி, “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குட்டிமா” என்றவள், தன்னை நோக்கி வந்த ஈஷாவை வாரி அணைத்து, “எப்பவும் என் பூக்குட்டி சந்தோஷமா, சமத்துக்குட்டியா இருக்கனும். என் பட்டு அம்முகுட்டி”, என்று கொஞ்சி, அவளின் பஞ்சு கன்னத்தில் தன் இதழ்களை பதிக்கவும்…

“லவ் யூ அம்மா… யூ ஆர் மை ஏன்ஜல்… இந்த பிறந்தநாளோட பெரிய பரிசே, என்கூட அப்பா மட்டுமில்லாமல், அம்மா நீங்களும் இருக்கிறது தான்…”, என்ற ஈஷா, “பேபி… நீங்க இந்த பக்கத்தில் கொடுங்க…” என்று தன் மறுகன்னத்தை ஈத்தனுக்கு முத்தம் கொடுக்க காட்டவும்…

மகளின் ஆசைப்புரிந்து ஈத்தனும், குறிஞ்சியும் ஈஷாவின் கன்னங்களை முத்த மழையில் ஒருசேர நனைக்க ஆரம்பித்து இருந்தனர்…

அதில் சுகமாக நனைந்துக்கொண்டிருந்த ஈஷா திடீரென்று, “வெயிட் வெயிட்” என்று அவர்களை நிறுத்தியவள்…

படுக்கையில் இருந்து குதித்திறங்கி குடுகுடுவென்று கீழே ஓடிச்சென்று, சென்ற வேகத்திலேயே மீண்டும் மேலே ஓடிவந்து, தன் கரங்களை நீட்டவும்…

அதில், அவளின் பிறந்தநாளுக்கு என்று ஈத்தனின் ரசிகர்கள் அனுப்பி இருந்த பரிசுப்பொருட்களுக்கு நடுவில் இருந்த, குறிஞ்சி அனுப்பிய பர்பிள் வண்ண ரோஜா பெட்டி இருந்தது.

ஈத்தனுக்கும், குறிஞ்சிக்கும் நடுவில் அமர்ந்து அதை பிரித்துப்பார்த்த ஈஷாவின் முகத்தில் அப்படியொரு சந்தோஷம்…

குறிஞ்சி, அதிகாலையிலேயே அங்கு அந்த ரோஜா இருப்பதை பார்த்துவிட்டு இருந்தாள். ஆனால் ஈத்தன் முதலில் ஈஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, பரிசினை கொடுக்கட்டும், பிறகு நாம் வாழ்த்தி பரிசு கொடுக்கலாம் என்று காத்திருந்தாள். என்னதான் பெற்றவள் அவளாக இருந்தாலும் ஈஷாவை தன் தோளிலும், மார்பிலும் போட்டு, பாதுகாப்பான ஒரு சூழலில் வைத்து வளர்த்து ஆளாக்கியது எல்லாம் அவன் தானே. ஒவ்வொன்றையும் அவள் மனதில் யோசித்து வைத்திருக்க…

ஈஷாவோ, “என்னோட இந்த வருஷ முதல் பிறந்தநாள் பரிசு, அம்மாவோடது தான் பேபி!” என்று அந்த ரோஜாவினை கையில் எடுத்து, தன் மார்போடு அணைத்துக்கொண்டாள்…

அதில், ‘அச்சோ’ என்று குறிஞ்சி பதறி, ஈத்தன் முகத்தை பார்க்கவும்…

அவனோ புன்னகையுடன், “எஸ் பேபி”, என்றவன், “அம்மாவோட பரிசு எப்பவும் விலைமதிப்பற்றது டா. You are blessed(நீ ஆசிர்வதிக்கப்பட்டவள்)” என்றுக்கூறி, ஈஷாவுடன் இணைந்து, குறிஞ்சி அனுப்பிய வாழ்த்து கடிதத்தை வாசிக்கவும்.

தன் கண்களை மூடி திறந்த, குறிஞ்சியின் முகம் முழுவதும் ஈத்தனின் மேன்மை குணத்தில் கனிந்து இருந்தது.
________________________________

முதலில் ஈஷாவிற்கு தலைக்கு ஊற்றி அனுப்பிவிட்ட குறிஞ்சி, அடுத்து அவளும் குளித்துமுடித்து அங்கேயே குளியல் அறையுடன் இணைக்கப்பட்டிருக்கும் உடைமாற்றும் அறைக்குள் நுழையவும்…

ஈஷா, “அம்மா உங்களுக்கும், எனக்கும் பேபி நியூ ட்ரஸ் கொடுத்து இருக்காங்க… சீக்கிரம் போட்டுட்டு ரெடியாகி வர சொன்னாங்க… கோவில் போறோம் நாம… வாங்க வாங்க…” என்று தன் உடையை அணிந்தப்படியே அவளை அழைத்தாள்.

அதில், ‘அச்சோ… எனக்குமா ட்ரஸ்… ஏன்?’ என்று நினைத்தப்படியே வந்த குறிஞ்சி…

அவள் கண்முன், அவ்வளவு அழகாக பஃப் கை வைத்து தைக்கப்பட்ட, மெல்லிய தங்க ஜரிகை வேலைப்பாடுகள் கொண்ட, இளம் தாமரை நிற பேபி பிங்க் பட்டு பாவாடை சட்டையில் நின்ற ஈஷாவை பார்த்து, “ஓ குட்டிம்மா… ரொம்ப அழகா இருக்கீங்க… இந்த கலர் உங்களுக்கு அற்புதமா இருக்கு டா…” என்றவள், “அச்சோ என் குட்டிக்கு என் கண்ணே பட்டுடும் போல” என்று பதறி திருஷ்டி முறிக்கவும்…

கலகலவென்று சிரித்த ஈஷா, “அம்மா எனக்கு ஹெல்ப் பண்ணுங்க…” என்று திரும்பி நின்றாள்.

அதில், அவள் மேல் சட்டையின் பின்புறம் இருந்த கொக்கிகளை போட்டுவிட்ட குறிஞ்சி, ஈஷாவின் இடை தொடும் கூந்தலை உலர வைக்க ஆரம்பிக்கவும்…

ஹேர் ட்ரையர் அளவில் இருந்த, ஒரு புதிய கருவியை கொண்டு வந்து குறிஞ்சியிடம் கொடுத்த ஈஷா, “அம்மா இன்னைக்கு நாம இரண்டு பேரும் லூஸ் கர்ல்ஸ் ஹேர் ஸ்டைல் பண்ணிக்கலாம்” என்றாள், ஆசையாக.

அதை வாங்கி பார்த்த குறிஞ்சிக்கு, அதை வைத்து எப்படி ஈஷாவின் கூந்தலை சுருள் சுருளாக அவள் கூறியது போல் மாற்றுவது என்று தெரியவில்லை. அதைவிட கரெண்ட் வேறு என்பதால், குழந்தையின் முடியை எதுவும் பாழாக்கிவிடுவோமோ என்று அவள் அஞ்சவும்…

“இட்ஸ் ஓகே அம்மா” என்ற ஈஷா, “நான் பேபிக்கிட்ட பண்ணிட்டு வரேன்… நீங்க ரெடியாக ஸ்டார்ட் பண்ணுங்க… உங்க ட்ரஸ் அங்க இருக்கு…” என்று ஒரு பெரிய கவரை குறிஞ்சிக்கு காட்டிவிட்டு ஈஷா கிளம்பிவிட…

ஈஷாவின் பட்டு பாவாடை போலவே, தாமரை வண்ணத்தில் உடல் முழுவதும் மெல்லிய தங்க ஜரிகை வைத்து நெய்யப்பட்ட, மென் பட்டிலான பட்டு புடவை ஒன்று குறிஞ்சிக்காக அங்கு காத்திருந்தது.

அதுவும் அவள் எளிதாக அணியும் வகையில், முன்பே புடவையில் மடிப்பு எல்லாம் வைத்து பின் செய்யப்பட்டு, பொருத்தமாக தைக்கப்பட்ட ஜாக்கெட்டுடன் இருக்கவும்…

“இவர் எப்ப இதெல்லாம் ரெடி செய்து வாங்கி வந்தார்” என்று அனைத்தையும், தன் கண்கள் விரிய எடுத்து பார்த்த குறிஞ்சி…
________________________________

அதன் அடியில் இருந்த மரப்பெட்டி ஒன்றை கவனித்து, திறந்து பார்த்து அதிர்ந்துவிட்டாள்.

உள்ளே‌ அவள் புடவையின் இளஞ்சிவப்பு நிறத்திற்கு தோதாக, அசல் மாணிக்கம் மற்றும் வைர கற்களால் செய்த தங்க குடை ஜிமிக்கி, கழுத்து மாலை, வளையல்கள் என்று கண்களை கூச செய்யும் வகையில் வரிசைக்கட்டி நின்றிருக்க…

குறிஞ்சிக்கு மூச்சே வெளிவரவில்லை.

அதுவும் தலையில் போடும் கிளிப் கூட அதில் கற்கள் பதித்து தங்கத்தில் இருந்து, அவளை மிரள செய்துவிட்டு இருந்தது.

அவள் எல்லாம் புடவையின் நிறத்திற்கு மேட்சாக போட வேண்டும் என்றால், மிஞ்சி மிஞ்சி போனால் அதே நிறத்தில் கண்ணாடி வளையல்களை வாங்கி போட்டு அந்த ஆசையை தீர்த்துக்கொள்ளும் ரகமாக இருக்க. இங்கோ ஈத்தன் ஒரு புடவைக்கு, அதைவிட பல மடங்கு விலையில் மேட்சிங்காக நகையை செய்துக்கொண்டு வந்திருக்க, பார்த்ததும் பதட்டம் வரும் தானே.

ஈத்தனின் செல்வநிலை அவள் அறியாதது இல்லை.

இருந்தாலும், பழக்கம் இல்லாததால் சட்டென்று ஒரு உணர்வு.

ஏற்கனவே தினம் தினம் நாம் வானத்தில் அண்ணாந்து பார்த்து ரசித்த நட்சத்திரம் ஒன்று, திடீரென்று தரையிறங்கி நம் வீட்டு வாசலுக்கு வந்து, ‘இனி உன்னுடன் தான் நான் இருக்கப்போகிறேன்’ என்று சொன்னால் என்ன மனநிலையை நமக்கு தருமோ, அதே மனநிலையில் தான், ஈத்தனை அவன் மீதான பிரம்மிப்பு விலகாமல் இன்னும் பார்த்துக்கொண்டு இருந்தாள். இதில் இது வேறு வந்து சேர்ந்துக்கொண்டு அதில் மேலும் எண்ணெய் ஊற்றவும்…

கவரில் இருந்த மற்றொரு பெட்டியை, அதில் என்ன குண்டு இருக்கிறதே என்ற பயத்துடனே எடுத்து பிரித்தவள்…

முன்பு இருந்த அதிர்ச்சி முற்றிலும் விலகி, கண்கள் இரண்டும் மையலில் மிதக்க நின்று இருந்தாள்.

காரணம், அதன் உள்ளே கிஃப்ட் பேக் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த வாசனை திரவியம் மற்றும் பாடி லோஷன் தான்.

அது அவளுக்கு மிகவும் பிடித்த மைசூர் மல்லியின் மணத்தில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு இருந்தது.

அவளுடன் கழித்த ஒவ்வொரு நிமிடத்தையும் என்பதை விட, ஒவ்வொரு வினாடியையும் ஈத்தன் இன்னும் எந்தளவிற்கு ஞாபகத்தில் வைத்திருக்கிறான் என்பதை, அது சொல்லாமல் சொல்ல…

வேறென்ன வேண்டும் அவளுக்கு?

அகம் நிறைந்து போனாள். 

அன்று குறிஞ்சியிடம் ஈத்தன் கூறிய, ‘கடமைக்காக நான் அழைக்க வரவில்லை. விருப்பத்துடன் தான் அழைக்க வந்தேன்’ என்பதை, அவ்வளவு வேலைகளுக்கு மத்தியிலும், ஈத்தன் அவளுக்கென்று பார்த்து பார்த்து செய்யும், இந்த சின்ன சின்ன விஷயங்கள் தான் அதிகமாக நிருபிக்க.

அந்த லோஷன் மற்றும் பர்ஃபியூமை உடனே எடுத்து உபயோகித்து, அவளை சுற்றி கமழும் மல்லியின் மணத்தில், சிறகில்லாமல் வானில் பறந்தப்படியே, தன் முக அலங்காரத்தினை செய்து முடித்தவள்…

அணிந்திருந்த உடையை கலைந்துவிட்டு, ஈத்தன் தந்த புடவையை எடுத்து உடுத்த ஆரம்பித்தாள்.
________________________________

ஜிகு ஜிகுவென்று ஒருயிடம் விடாது, டிசைன்களை அள்ளிக்கொட்டி நிரப்பி, பார்த்ததும் திகட்ட வைப்பது போல் இல்லாமல், சிறு சிறு தங்க நிற கற்களை, கைகளின் முடிவிலும், கழுத்தின் ஓரத்திலும் மட்டும் வைத்து, நேர்த்தியாக தைக்கப்பட்டிருந்த அந்த தாமரை நிற பேபி பிங்க் ஜாக்கெட், குறிஞ்சியின் உடலை அவ்வளவு பாந்தமாக தழுவிக்கொண்டது.

தாலி கயிற்றை உள்ளே போட்டு மறைத்துவிட்டு, ‘எதுவும் தெரிகிறதா’ என்று அங்கு ஒரு பக்க சுவர் முழுவதையும் அடைத்துக்கொண்டிருந்த கண்ணாடியில் சரிப்பார்த்த குறிஞ்சிக்கு, அப்பொழுது தான் கச்சிதமாக தைக்கப்பட்ட அந்த ஜாக்கெட் கருத்தில் பதிந்து, அவள் அளவு எதுவும் தரவில்லை என்பதே ஞாபகத்திற்கு வந்தது.

சரியாக அந்நேரம் பார்த்து ஈஷா உள்ளே நுழையவும்…

உடைமாற்றும் திரைக்கு அந்தப்பக்கம் நின்றப்படியே, “குட்டிம்மா… அம்மாவோட ட்ரஸ் அளவு நீங்க தான் அப்பாக்கு எடுத்து கொடுத்தீங்களா…” என்று விசாரித்தாள் குறிஞ்சி.

அதற்கு, “நோ அம்மா…” என்ற ஈஷா, ஆங்கில பாடல் ஒன்றை பாடியப்படியே தன்னுடைய மேக்கப்பை தொடரவும்.

புடவையை ஓரிரு நிமிடங்களிலேயே கட்டிமுடித்து வெளிவந்த குறிஞ்சி… ஈஷா அவளுக்கு அவளே அவ்வளவு அழகாக போட்டுக்கொண்டிருந்த மேக்கப்பை பார்த்து…

ஈஷாவின் இடது கன்னத்தில், கண் மைக்கொண்டு சிறிதாக திருஷ்டி பொட்டு வைத்துவிட்டு…

தன்னுடைய கூந்தலை வார ஆரம்பிக்கவும்…

ஈஷா, “அம்மா உங்களுக்காக பேபி வெயிட் பண்றாங்க… அவர்கிட்ட போய்ட்டு என்னை மாதிரியே ஹேர் ஸ்டைல் பண்ணிக்கோங்க… நாம இரண்டு பேரும் ஒரே மாதிரி ரெடியாகலாம்னு சொன்னேன் இல்ல” என்றாள், அவளின் அலை அலையாக வளைந்து நெளிந்து செல்லும் கூந்தலை காட்டி.

அதில், “ஐயோ பாப்பா… எனக்கு எதுக்கு அதெல்லாம்…” என்று பதறி மறுத்த குறிஞ்சி, “அப்பாக்கு தொந்தரவா இருக்கும்… மணியாகிடுச்சு பாரு… இதெல்லாம் சின்ன பிள்ளைங்க ஹேர் ஸ்டைல் டா… அம்மாக்கு சரிவராது…” என்று எவ்வளவோ சொல்லி வேண்டாம் என்றுவிட…

“பேபி…” என்று ஈத்தனின் குரல் வெளியே இருந்து கேட்டு இருந்தது.

உடனே வெளியே ஓடிய ஈஷா, அப்படியே அனைத்தையும் ஒன்று விடாமல் தன் தந்தையிடம் ஒப்பித்துவிட்டு இருந்தாள்.

அதில், “குறிஞ்சி…” என்று ஈத்தன் அவளை அழைக்கவும்.

“அச்சோ! இந்த சின்ன குட்டியை…” என்று கைகளை பிசைந்த வண்ணம் வெளியே வந்த குறிஞ்சி…

அங்கு சோஃபாவில் அமர்ந்திருந்த ஈத்தனை பார்த்து ஒருகணம் மூச்சு விட மறந்து நின்றுவிட்டு இருந்தாள்.

புத்தம் புதிய வெண்ணிற பட்டு வேஷ்டி சட்டையில், நீல கண்கள் இரண்டும் பளிச்சென்று மினுமினுக்க, ஆளை விழுங்கும் கொள்ளை அழகுடன் அமர்ந்து இருந்தான்.

அவர்களின் திருமண தினத்தன்று இறுதியாக அவனை வேஷ்டி சட்டையில் அவள் பார்த்தது.

அதற்கு பிறகு இன்று தான் பார்க்கிறாள்.

புதிதாக வைத்திருக்கும் தாடி, மீசை தவிர, மற்றப்படி அப்படியே தான் அவன் மேனியின் புத்துணர்வு குறையாமல் இருப்பது போல் இருக்க. அவளின் கண்கள் அவனை இன்ச் பை இன்ச்சாக அளவிட கிளம்பிவிட்டு இருந்தன.

அதை, அவளின் விழி அசையா பார்வையிலேயே உணர்ந்து, ‘ஓ குறிஞ்சி மலர்!’ என்று இன்பமாக அதிர்ந்த ஈத்தன், லேசாக தன் மூக்கின் நுனி பகுதியை தேய்த்து தன் உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொண்டு…

“அம்மாவை வந்து உட்கார சொல்லுங்க பேபி” என்றான் ஈஷாவிடம்.

அந்த சத்தத்தில், சட்டென்று தன்னுணர்வு மீண்ட குறிஞ்சி, செய்துக் கொண்டிருந்த காரியத்தில் பதறி, ஈஷா கவனித்து இருப்பாளோ என்று ஆராய… 

அவளோ, “அம்மா பயப்படாமல் வாங்க… நல்லா இல்லைனா விட்டுடலாம்…” என்று குறிஞ்சியின் கைப்பற்றி, ஈத்தனிடம் இழுத்து சென்றுவிட்டாள்.
________________________________

ஈத்தன் மேலே சோஃபாவில் அமர்ந்து இருக்க. அவனுக்கு முன்பு, கீழே தரையில் போட்டிருந்த குஷ்ஷனில் குறிஞ்சி அமர்ந்திருந்தாள்.

ஈஷாவின் கூந்தலை விட நீளமாக இருந்த குறிஞ்சியின் கூந்தலை, முதலில் லேசாக பற்றி பரிசோதித்த ஈத்தன்…

இன்னும் கூந்தல் முடிவில் ஈரம் சொட்டுவதை பார்த்து ஈஷாவிடம், “பேபி டவல் எடுத்துட்டு வாங்க…” என்று அனுப்பிவிட.

அவள் சென்றதும், சட்டென்று திரும்பி ஈத்தனை பார்த்த குறிஞ்சி, “உங்களுக்கு வீண் சிரமம். பாப்பாக்கிட்ட நான் சொன்னேன், அவளுக்கு புரியலை. சாரிங்க” என்றாள் படபடவென்று, அவனுக்கு போய் தனக்கு தலை சீவும் வேலையை பார்க்க வைத்துவிட்டதில் சங்கடமாக.

அதற்கு, “எனக்கு சிரமம்னு உன்கிட்ட நான் சொன்னேனா கேர்ள். அமைதியா இரு” என்றப்படியே, அவள் தன் நெற்றியில் வைத்திருந்த ஸ்டிக்கர் பொட்டினை அழுத்தி ஒழுங்காக வைத்துவிட்ட ஈத்தன்.

“இன்னைக்கு பேபியோட பிறந்த நாள் மட்டும் இல்லை குறிஞ்சி… நீ அம்மாவாவும், நான் அப்பாவாவும் ஆன ஸ்பெஷல் நாளும் ஆச்சே”, என்றவன், “நாம அதை செலிப்ரேட் பண்ணனும் தானே”, என்று கேட்க…

அவன் கூறிய அந்த அம்மா, அப்பாவில் குறிஞ்சியின் தலை தானாக ‘ஆம்’ என்று ஆட…

“கூல்” என்று அவள் கன்னத்தில் தட்டிய ஈத்தன், “அப்ப வேறெதையும் நினைக்காமல், ரிலாக்ஸா என்ஜாய் பண்ணு கேர்ள்” என்றப்படியே அவளின் அஞ்சனம் தீட்டப்பட்ட கருவிழிகள் இரண்டையும் பார்த்து, “பிளவுஸ் ஃபிட்டிங் சரியா இல்லையா குறிஞ்சி. பேபிக்கிட்ட நீ விசாரிச்சன்னு சொன்னா!” என்றவன் பார்வை, வெகு சாதாரணமாக அவள் விழிகளில் இருந்து கீழிறங்கி, அவளின் கழுத்தை கடந்து பயணிக்க பார்க்கவும்.

“அளவெல்லாம் ரொம்ப சரியா இருக்குங்க” என்று அவசரமாக அவன் பார்வையின் போக்கை தடுத்த குறிஞ்சி.

“ஈஷா பாப்பாக்கிட்ட அளவு ட்ரஸ் யார் கொடுத்து இருப்பாங்கன்னு தெரிஞ்சிக்க தான் விசாரிச்சேன். வேறொன்னுமில்லை” என்றாள் விளக்கமாக.

அதற்கு, “ஓ…” என்று சற்று கேலியாக கூறிய ஈத்தன். “உனக்கு மட்டும் தான், என் பொருட்களை, எனக்கு தெரியாமல் எடுக்க தெரியுமா கேர்ள்” என்று மென் புன்னகையுடன் கேட்கவும்.

சட்டென்று திருதிருத்தவள், ஈத்தனின் புன்னகை மேலும் விரியவும், ‘ஐயோ இவருக்கு அதெல்லாம் எப்ப மறக்கும்…’ என்று திரும்பிக்கொண்டாள்…

ஒருபக்கம் சங்கோஜமாக இருந்தாலும்…

மறுபக்கம், அவளின் அனுமதியில்லாது, அவளிடம் ஈத்தன் எடுத்துக்கொள்ளும் இந்த உரிமைகள் யாவும் தேனாக தித்தித்து, அவளை மேலும் பூரிப்படைய செய்தன.

அதற்குள் ஈஷா துண்டுடன் வந்துவிடவும்.

குறிஞ்சியின் நுனி முடியை அள்ளி துடைத்துவிட்ட ஈத்தன்…

அவள் முடி முழுவதும் சிக்கல் ஆகாமல் தடுக்கும் மற்றும் சூடு தாங்கும் உயர்தர ஸ்ப்ரேக்களை அடித்துவிட்டு…

முன்பக்கம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக முடியினை எடுத்து, கையில் இருந்த கருவிக்குள் கவனமாக விட்டு எடுத்துக்கொண்டே அவன் வரவும்…

“வாவ் அம்மா… உங்க முடி ரொம்ப அழகா இருக்கு…” என்று அப்பொழுதில் இருந்தே ஈஷா துள்ளி குதிக்க ஆரம்பித்துவிட்டு இருந்தாள்.

அதில், பட்டுப்போன்ற மென்மையுடன், சுருள் சுருளாக முன்புறம் வந்து விழுந்த தன் குழல்களை, ஆசையாக தொட்டு தொட்டு பார்க்க ஆரம்பித்த குறிஞ்சி…

சில கணங்களில் சிலிர்க்க ஆரம்பித்த தன் உடலை கட்டுப்படுத்த தெரியாது, பதறி திரும்பியவள், ஈத்தனின் கரத்தினை அசைய முடியாதவாறு அழுத்தமாக பற்றிக்கொண்டு இருந்தாள். 

காரணம், ஈத்தனின் விரல்களின் ஸ்பரிசத்தை, அவள் தன் செவியோரம் தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாக முதுகில் உடை மறைக்காத பாகங்களில் எல்லாம் அழுத்தமாக உணர ஆரம்பித்தது தான்.

இன்னும் அவன் விரல்களின் வெக்கையை, அவளின் குளிர் தேகம் தேக்கி வைத்திருக்க. மெல்லிய நடுக்கம் அவளின் உடலில்.

ஈத்தனோ அவள் செயல் புரியாது, “வாட் கேர்ள்” என்றான்.

அதற்கு என்ன பதில், அதுவும் ஈஷாவின் முன்னிலையில் கூறுவது என்று குறிஞ்சிக்கு தெரியவில்லை.

அதில், ஏசி குளிரிலும் முத்து முத்தாக அவளுக்கு வியர்க்க ஆரம்பித்துவிட…

“அது… அது…” என்று சீரற்ற மூச்சுகளுடன் கூறியவள், “முதுகில் கரெண்ட் ஷாக் பட்ட மாதிரி இருந்துச்சுங்க” என்று சமாளித்து… பட்டென்று தன் முதுகினை முந்தானை நுனியை இழுத்து போர்த்தி மொத்தமாக மூடி மறைத்துவிட்டாள்.

‘ஷாக் அடித்தப்போல்’ என்று அவள் கூறும் பொழுதே, அதற்கு சாத்தியமில்லாததில் சுதாரித்துவிட்ட ஈத்தன்… அடுத்து அப்பட்டமாக அவள் செய்து வைத்த செயலில்…

‘ஓ மை காட்…’, என்று, அவளை முறைக்காமல் முறைத்து அமர்ந்து இருந்தான்.

பின்னே என்னவாம், இவள் மட்டும் அவனை முப்பொழுதும் ரசிக்கலாம். ஆனால் அவன் அவளின் எதையும் ரசிக்க என்ன, பார்க்க கூட கூடாதாமே! என்ன அந்நியாயம் இது! உரிமை பட்டவன் அவன் தானே!

அனைத்தையும் செய்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல் குறிஞ்சி அமர்ந்திருக்க…

அனைத்தையும் மனதில் குறித்துக்கொண்ட ஈத்தன், மீதி வேலையை செய்து முடிக்க.

“அம்மா, யு லுக் சோ யங்!” என்று குறிஞ்சியை சுற்றி வந்த ஈஷா, “பேபி சூப்பர்” என்று ஈத்தனையும் பாராட்டினாள். 

இப்படி அவர்கள் மூவரும் குடும்பமாக ஒன்றாக அமர்ந்து இருக்கும் பொழுதுகள் ஈஷாவிற்கு மிகவும் பிடித்திருக்க, ஈத்தன் அவளுக்கென்று அணிய தந்திருந்த நகைப்பெட்டியையும், குறிஞ்சிக்கு தந்திருந்ததையும் அங்கேயே வைத்து அணிந்துக்கொள்ளலாம் என்று தூக்கிக்கொண்டு வந்துவிட்டாள்.

குறிஞ்சிக்கு செய்திருந்தது போலவே, மாணிக்கம் மற்றும் வைர கற்களால் ஆன தங்க ஆபரணங்கள், ஈஷாவின் வயதிற்கு ஏற்ற அளவுகளிலும், டிசைகளிலும் இருந்தன.

அதில் இருந்த, சிறிய ஜிமிக்கியை எடுத்து, ஈஷாவின் காதில் ஈத்தன் கவனமாக போட்டுவிட…

குறிஞ்சி தரையில் கால் மடக்கி அமர்ந்து, ஈஷாவின் கால்களில் கொலுசுகளை போட்டுவிட என்று…

ஈத்தனும், குறிஞ்சியும் ஒவ்வொரு நகையாக எடுத்து, தங்கள் மகளுக்கு அணிவித்து முடித்தார்கள்.

தன் கண்களை நிறைத்த மகளின் அழகில், “வாவ்! என் பேபி எவ்ளோ அழகு” என்றான் ஈத்தன்.

அதில், “உண்மையாவா பேபி” என்று சந்தேகமாக கேட்ட ஈஷாவின் கன்னத்தை, முயல் குட்டியை வருடுவது போல் வருடி, “எஸ் பேபி!” என்று ஈத்தன் கூறவும்.

ஈஷாவின் பார்வை இப்பொழுது குறிஞ்சியிடம் அதை உறுதிப்படுத்திக்கொள்ள பாய்ந்தது.

குறிஞ்சியோ, மகளின் இந்த முழு அலங்காரத்தில், “கோவில் சிலை மாதிரி இருக்கீங்க குட்டிம்மா”, என்றாள் மனம் முழுவதும் நெகிழ்ந்து.

அதில் குறிஞ்சியின் இடையை சுற்றி கைப்போட்டு அவளை அணைத்துக்கொண்ட ஈஷா…

“சீக்கிரம் நீங்களும் நகையெல்லாம் போடுங்க அம்மா… தனியா நான் மட்டும் போட்டிருக்க எனக்கு ஷையா இருக்கு”, என்றவள்…

“பேபி வாங்க… நாம ரெண்டு பேரும் அம்மாக்கு ஜுவல்ஸ் போட ஹெல்ப் பண்ணலாம்…”, என்று குறிஞ்சியின் நெஞ்சில் சிறிய அணுகுண்டினையும், ஈத்தன் நெஞ்சில் மல்லிகை பந்தினையும் ஈஷா போட்டுவிட…

“ஷோர் பேபி…” என்று குறிஞ்சி போலவே ஒன்றும் தெரியாத முகத்துடன் கூறிய ஈத்தன், முதலில் தன் கையில் எடுத்தது என்னவோ கழுத்து மாலையை தான்.

‘ஷாக் அடித்ததுப்போல் இருந்தது’ என்று கூறியவளுக்கு, அதற்கான வைத்தியம் பார்த்தாக வேண்டும் தானே!
____________________________

அடுத்த பதிவிற்கு செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻 

கருத்துகள்

கருத்துரையிடுக

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates

Popular posts

New Ongoing 💌 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🎼🪻😘💌

Completed- உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே💘- (Completed story available here for free Read)

My Complete Novel List: Ongoing and Finished

Completed-💃🕺அழகான இராட்சசியே அடிக்கரும்பாய் இனிக்கிறியே - Romantic Entertainment

Completed-மகிழ்மதியின் அரசன்- Royal Family Based Romantic love story