☄️45.1 அந்திப்போர் 🪻🫰🎶
அத்தியாயம் -45
நாட்கள் எப்படி செல்கிறது என்று தெரியாத அளவிற்கு வேகமாக சென்றுக்கொண்டு இருந்தது.
இத்தனை மாதங்களும் பெரிய வீடும், எண்ணற்ற உதவியாட்களும், ஈத்தனின் வேலை பளுவும்… ஈத்தன், குறிஞ்சிக்குள் வர வேண்டிய அன்யோன்யத்தை தூரத்திலேயே பிடித்து வைத்திருந்திருக்க…
இந்த கெஸ்ட் ஹவுஸ் வீடோ, முன்பு போலவே, அதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தூரம் துரத்தி, இருவரையும் நெருக்க ஆரம்பித்து இருந்தது!
காலையிலேயே குளித்து முடித்து, ஆகாய நீல நிறத்தில், வெண்ணிற எம்பராயிடிங் வேலை செய்த அம்பர்லா கட் சுடிதார் அணிந்து, வான் மேகமாக ஹவுஸில் இருந்து இறங்கி வந்த குறிஞ்சி,
கடலில் இருந்து, நன்கு எழும்பி மேலே வந்துவிட்ட சூரியனின் மஞ்சள் அழகை நின்று ரசித்து பார்த்துவிட்டு…
அப்படியே, சிறு சிறு பனி துளிகளை சுமந்தவண்ணம், அங்கு மலர்ந்திருந்த சிகப்பு ரோஜா ஒன்றை இரண்டு இலைகளுடன் சேர்த்து பறித்தவள்… அதை, தன் காதோரம் கூந்தலில் வைத்துக்கொண்டு தோட்டத்தினுள் நடந்தாள்...
முன்தினம் இரவு போட்ட தூரல்கள், தென்னை கீற்றுகளின் அசைவுகளினால், குறிஞ்சி மீது பன்னீராக தெளிக்கப்பட…
அதற்கேற்ப அவள் காதில் Airpods வழியாக,
அதிகாலை மழை தானா!
அவனோடு இனி நானா!
இது நான் கேட்ட காலங்கள் தானா!
திரைப்பட பாடல் ஓடிக்கொண்டிருந்தது.
அந்த வரிகளில் வசியம் ஆனவள், மீண்டும் மீண்டும் அதையே கேட்டு, உடன் சேர்ந்து பாடியப்படியே…
தோட்டத்தில் இருந்த நவீன ஸ்டீல் அடுப்பை ஆன் செய்து, அதில் ஒருபக்கம் முட்டையை உடைத்து ஊற்றி…
மறுபக்கம் காய்கறிகளையும், இறைச்சி துண்டுகளையும் போட்டு வதக்கி எடுக்க…
காலை எழுந்தது முதல் அங்கிருந்த பெரிய நீச்சல் குளத்தில், கைப்பந்து(volleyball) விளையாடி ஆட்டம் போட்டுக்கொண்டிருந்த ஈத்தனும், ஈஷாவும் உணவு வாசத்தை பிடித்தப்படியே, உடல் முழுவதுமிருந்து நீர் சொட்ட சொட்ட மூச்சு வாங்க அங்கு வந்து சேர்ந்தனர்.
“அம்மா எனக்கு ரொம்ப பசிக்குது” என்ற ஈஷா, அங்கிருந்த கேரட்டினை எடுத்து கடிக்க…
“இதோ அஞ்சு நிமிஷம் பாப்பா… நீங்க துணி மாத்திட்டு வரதுக்குள்ளே எல்லாம் ரெடியாகிடும்…” என்றாள் குறிஞ்சி.
அதற்கு, “நோ அம்மா, சாப்பிட்டு திரும்ப பால் விளையாட தான் போறோம்” என்ற ஈஷா, “ஆமாம் தானே பேபி” என்று ஈத்தனிடம் கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டு, “நீங்களும் எங்களோட விளையாட வரனும் அம்மா. தண்ணி மட்டத்தை உங்க ஹைட்டுக்கு பேபி குறைச்சுட்டாங்க” என்றவள், அங்கு போட்டிருந்த சாய்வு நாற்காலியில், ‘சூரிய குளியலுக்கு’ ஏற்றப்படி கால்களை நீட்டி அமர்ந்துக்கொள்ள.
ஈத்தனை திரும்பி பார்த்தாள் குறிஞ்சி.
ஏற்கனவே சென்ற வாரம் நீச்சல் கற்றுத்தருகிறோம் என்று அவளை தூக்கிச் சென்று அப்பாவும், மகளும் படுத்திய பாடு கொஞ்சம் நஞ்சமில்லை!
ஈத்தனை முதல் முறை சட்டையின்றி, அதுவும் அவ்வளவு நெருக்கத்தில் பார்த்து, கண்களையே திறக்க முடியாது கூசிப்போய், பன்னிரண்டு வயது மகளை, இல்லை இல்லை பதிமூன்று வயது மகளை அருகில் வைத்துக்கொண்டு, ‘ஆண்டவா!’ என்று குறிஞ்சி திணறிய திணறல் ஒருபக்கம் என்றால்…
அவளுக்கு நீச்சல் உடை வேறு ஆர்டர் செய்ய வேண்டும் என்ற ஈஷாவை பார்த்து, நிஜத்திற்கும் மிரண்டு போய் இருந்தாள்.
இறுதியில் அவள் முகம் பார்த்து, ‘அம்மா பயப்படுறாங்க பேபி. ட்ரெயினர் வந்து முறையா சொல்லிக்கொடுக்கட்டும். நெக்ஸ்ட் டைம் மூனு பேரும் சேர்ந்து என்ஜாய் பண்ணலாம்’ என்று ஈத்தன் அவளை தூக்கிவந்து கரையில் விட்டு விடுவித்து இருந்தான்.
அந்த நிமிடத்திற்குள்ளான நெருக்கத்திற்கே மூச்சைவிட முடியாது இழுத்து பிடித்துக்கொண்டு இருந்தவள்… அவன் விட்டதும் ‘போதுமடா சாமி’ என்று தப்பித்தோம் பிழைத்தோம் ஓடிவிட்டது எல்லாம் குறிஞ்சிக்கு கண்முன் வந்து சென்றது.
அதில் தான் ‘மீண்டுமா…’ என்று கலவரமாக ஈத்தனை திரும்பி பார்த்தாள்.
____________________________
“ரிலாக்ஸ் குறிஞ்சி மலர்” என்று அவள் அருகே வந்து நின்ற ஈத்தன், அடுப்பில் இருந்தவற்றை எல்லாம் திருப்பிப்போட்டப்படியே “உனக்கு ஃபுல் கவர் ஸ்விம் சூட்(Full Cover Swimsuit) தான் ஆர்டர் போட்டு எடுத்திருக்கேன் கேர்ள். நீயும் கூடவே இருக்கனும்னு பேபி ரொம்ப ஆசைப்படுறா. கொஞ்சம் கன்சிடர் பண்ணேன்” என்றவன்…
“நானும் ஷர்ட் போட்டுக்கறேன்” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூற.
ஆடை சுதந்திரத்திற்கு பேர் போன நாட்டில் பிறந்தவனின், ஆடை சுதந்திரத்தை சத்தமின்றி பறித்திருந்த குறிஞ்சி, தன்னை மீறி சட்டென்று சிரித்துவிட்டாள்.
அதில், “சிரிக்கறியா கேர்ள் நீ?” என்ற ஈத்தனுக்கும் சிரிப்பு தான். எப்படியெல்லாம் மாற வேண்டியிருக்கிறது! எப்படியெல்லாம் என்னை மாற்றுகிறாள் என்று.
அவள் காதோரமிருந்த ரோஜாவை, “டிவைன்” என்று மெல்ல வாசம் பிடித்த ஈத்தன், அவள் பின்புறம் விரித்துவிட்டிருந்த நீண்ட கூந்தலில் கொஞ்சம் அள்ளி, அவளின் இரண்டு தோள்களின் வழியாக முன்புறம் போட்டுவிட…
எதிர்பாராத விதமான,
ஈத்தனின் குளிர்ந்த விரல்களின் தீண்டலில், குறிஞ்சிக்கு தேகமெங்கும் குளிர் பரவ ஆரம்பித்தது…
அதில், ‘என்ன’ என்று அவள் சுதாரித்து திரும்புவதற்குள்ளே…
அவள் தன் கழுத்தை சுற்றி போட்டிருந்த பெரிய துப்பட்டாவினை, ஈத்தன் தன் கரத்தில் உருவி எடுத்துக்கொண்டு இருந்தான்…
அதில் அதிர்ந்த குறிஞ்சி, சட்டென்று தன் மேல் உடை சரியாக உள்ளதா என்று குனிந்துப்பார்க்க… அவளின் துப்பட்டா இவ்வளவு நேரமும் அங்கு செய்த பணியை, இப்பொழுது கச்சிதமாக அவளின் கூந்தல் பார்த்துக்கொண்டு இருந்தது… அதை கண்டு நிம்மதி ஆனவளுக்கு…
மறுநொடியே, அடி வயிற்றினுள் மில்லியன் பட்டாம்பூச்சிக்கள் பறக்கும் உணர்வு. எதனால் ஈத்தன் அவள் கூந்தலை அள்ளி முன்புறம் போட்டான் என்பது புரிந்து…
‘அச்சோ…’ என்று தன் கண்களை மூடி திறந்தவள், திரும்பிப்பார்க்க…
ஈத்தன், அவள் துப்பட்டாவினைக்கொண்டு, அங்கிருந்த ஈஷாவின் முகத்தின் ஈரத்தை துடைத்துவிட்டு, அவளின் தோளை சுற்றி குளிருக்கு இதமாக அதை போர்த்தியும் விட்டப்படி இருந்தான்.
அதை பார்த்த குறிஞ்சியின் கண்கள், அதையும் காதலுடன் உள்வாங்கிக்கொள்ள…
அவள் பார்வையை உணர்ந்து, ஈத்தன் திரும்பி அவளை பார்த்த ஒரு பார்வையில், கன்னங்கள் இரண்டும் குறிஞ்சிக்கு குழைந்து சிவக்க ஆரம்பித்துவிட… உடனே about turn போட்டு, அடுப்பு பக்கம் திரும்பிக்கொண்டு இருந்தாள்…
அதற்குமேல் பசி பொறுக்கமுடியாது, “அம்மாஆ” என்று ஈஷா எழுந்து அடுப்பிடம் வந்துவிட…
ஈத்தனும், அவளும் அங்கு நின்றப்படியே உண்ண ஆரம்பித்தார்கள். உடன் குறிஞ்சிக்கும் இடையிடையே ஊட்டி விடப்பட்டது.
அடுத்து குறிஞ்சி, தோசைமாவினை ஊற்ற எடுக்கவும்…
மூவரில் யார் பெரிய தோசை, அதுவும் முறுகலாக சுடுகிறார்கள் என்று ஒரு பெரிய போட்டி நடந்து, மொத்த தோசை மாவும் காலியானது.
பிறகு அதை மொத்தமும், நீச்சல் குளத்தில் மதியம் வரை பந்து விளையாடி கரைத்து, களைத்து… மாலை வரை அந்த தோட்டத்திலேயே இளநீரை குடித்தப்படி ஒன்றாக படுத்துக் கிடந்து என்று…
தாய் தந்தையின் அன்பினையும், அரவணைப்பையும் ஒருசேர ஈஷாவும்…
அதனை ஒருசேர தொலைத்த ஈத்தனும்…
அப்படி என்றால் என்னவென்றே அனுபவித்திராத குறிஞ்சியும்…
சொர்க்கமாய் அனுபவித்து தள்ளினார்கள்.
____________________________
🍄அடுத்த அத்தியாயம்:
https://swathilakshmitamilnovels.blogspot.com/2025/11/452.html
கருத்துகள்
கருத்துரையிடுக