☄️45.2 அந்திப்போர் 🪻🫰🎶
ஈஷாவின் பிறந்தநாளை திகட்ட திகட்ட கொண்டாடிவிட்டு, ஒருமாதத்திற்கு பிறகு மூவரும் வீடு வந்து சேர்ந்தனர்.
உள்ளே நுழையும் பொழுதே, வரவேற்பறையில் சக்தியும், மற்ற மேனேஜர்களும் காத்திருப்பதை பார்த்த குறிஞ்சி…
வரவேற்பாய் சிறு தலையசைப்பை அவர்களுக்கு கொடுத்துவிட்டு, ‘அறைக்கு செல்கிறேன்’ என்று ஈத்தனிடம் கண்களால் கூறியவள், ஈஷாவுடன் உடனே அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்.
ஈஷாவிற்கும், அன்றைக்கான ஹோம் ஸ்கூலிங் ஆசிரியர் வந்து காத்திருக்க…
“ட்ரஸ் மாத்திட்டு கிளாஸ் போறேன் அம்மா” என்றாள் ஈஷா.
காலை உணவை முடித்துக்கொண்டு தான் வந்து இருந்ததால், “சரி பாப்பா” என்று அவளுடன் பேசியப்படியே படியேறிய குறிஞ்சி, தங்களின் படுக்கை அறையை திறக்க…
முற்றிலும் மாறிவிட்டு இருந்தது அந்த அறை!
சுவற்றின் நிறம் முதல் வேறாக இருக்க, ‘இது நம் அறைதானா!’ என்று குழம்பி நின்றிவிட்ட குறிஞ்சியின் கையை பிடித்து, “வாவ் அம்மா! என்னோட ஃபேவரைட் கலர்” என்று குதித்த ஈஷா, “இங்க பாருங்க, நான் கொடைக்கானல்ல எடுத்த ஃபோட்டோஸ்!” என்று துள்ளியப்படியே அவளை உள்ளே இழுத்து சென்றாள்.
இளம் லாவண்டர் நிறத்தில் மாறிவிட்டிருந்த அறையில் இருந்த, படுக்கை விரிப்புகள், கால் மிதியடிகள், ஜன்னல் திரைச்சீலைகள் என அனைத்தும் அந்த இளம் லாவண்டர் நிறத்திற்கு ஏற்ற நிறங்களில் மாறிவிட்டிருக்க…
அதை மேலும் மெருகேற்றும் வகையில், அதே நிறத்தில் கொடைக்கானலில் ஈஷா எடுத்திருந்த குறிஞ்சி மலர்களின் புகைப்பட்டங்கள் அனைத்தும்… வரவேற்பறையில் தொடங்கி, ஆங்காங்கே அறைக்குள் முழுவதுமாக ஃபிரேம் செய்யப்பட்டு அணிவகுத்திருந்தன...
அதுமட்டுமின்றி, படுக்கைக்கு எதிர்ப்புறம் இருந்த சுவற்றின் மத்தியில்… ஈத்தனும், குறிஞ்சியும் இதய வடிவம் வருவது போல், தங்களின் இரண்டு கைகளையும் கோர்த்திருந்தப்படி கொடைக்கானலில் எடுத்திருந்த புகைப்படம், நன்றாக பெரிது செய்யப்பட்டு மாட்டியிருக்க…
அந்த இதயத்தின் உள்ளே, அவர்கள் மூவரும் ஒன்றாக சேரும் முன்னர் எடுத்த புகைப்படங்களான…
ஈத்தன், குறிஞ்சி திருமண புகைப்படங்களும்…
குட்டி ஈஷாவை, குறிஞ்சி தூக்கி வைத்திருந்த படங்களும்…
ஈத்தனுடன் ஈஷா இருந்த புகைப்படங்களும் இடம்பெற்றிருக்க…
அந்த இதயத்தின் வெளியே, இப்பொழுது அவர்கள் சேர்ந்த பின்னர் எடுத்த புகைப்படங்கள் பல இடம்பெற்றிருந்தன. ஈஷாவின் 13-வது பிறந்தநாள் படங்கள் கூட அதில் இருந்தன.
பார்க்கவே அவ்வளவு அழகான கவிதைப்போல் இருந்தது!
‘எப்படியெல்லாம் யோசிக்கின்றார்கள்’ என்று நினைத்த குறிஞ்சியின் கண்களும், இதழ்களும்… ஈஷாவிற்கு இணையாக, சிறுப்பிள்ளையாக உற்சாகத்தை வெளிப் படுத்திக்கொண்டிருந்தன...
____________________________
மாற்றங்கள் அத்துடன் முடியவில்லை…
அவர்கள் அறையின் ஒருப்பக்கத்தில்,
கொடைக்கானல் வீட்டில் குறிஞ்சி வைத்திருந்த மூங்கில் ஊஞ்சல், அங்கு அவள் மாட்டியிருந்தது போலவே, சிறிய ரோஜா தொட்டிகளுடன் தொங்கி கொண்டிருந்தது.
அதைப் பார்த்ததும், ஈஷா ஓடிச்சென்று அதில் அமர்ந்து ஆட துவங்கிவிட்டாள்.
ஊஞ்சலின் அருகிலேயே, வேலைப்பாடுகள் கொண்ட மர அலமாரி ஒன்று, குறிஞ்சியின் புத்தகங்கள், ஸ்வெட்டர் பின்னும் பொருட்கள் என, ஓய்வு நேரத்தில் அவள் செலவிடும் அனைத்தையும் தாங்கிக்கொண்டு இருந்தது.
அதற்கெல்லாம் மணிமகுடமாக, அவளுக்கு மிகவும் பிடித்த காஃபி போட தேவையான பொருட்கள் வேறு, சிறிய மேஜை ஒன்றில் வைக்கப்பட்டிருக்க…
ஈஷாவிற்கு பிடித்தது மட்டுமின்றி, தனக்கு பிடித்ததையும் ஈத்தன் பார்த்து பார்த்துச் செய்திருப்பதில், காதல் கொண்ட குறிஞ்சியின் நெஞ்சம் மொத்தமும் விடாத பனி மழைதான்.
அவள் முகம் முழுவதும், மேலும் மகிழ்ச்சியில் நிறைந்துவிட்டது.
____________________________
உள்ளே உடைமாற்றும் அறையின் நிறம் கூட, அறைக்கு ஏற்றப்படி மாறி இருந்தது.
அவசர அவசரமாக உடைமாற்றிய ஈஷா, “நான் கிளாஸ் முடிச்சிட்டு வந்து மீதியை பார்க்கிறேன் அம்மா. டாடா” என்றுவிட்டு கீழேயிறங்கி ஓடிவிட.
படுக்கை அறையினுள் இருந்த இன்டர்காம் ஒலித்தது.
விரைந்துச்சென்று குறிஞ்சி அதனை ஏற்க…
“உன்னோட ப்ரூஃப் டாக்குமெண்ட்ஸ் எல்லாம் வேண்டும் கேர்ள். எடுத்து வை” என்ற ஈத்தன், “வெளியே போற மாதிரி ரெடியும் ஆகிடு. 10 மினிட்ஸ்ல ரூமுக்கு வரேன்” என்றுவிட்டு வைத்துவிட.
‘ஏன்? எதற்கு?’ என்று பல கேள்விகள் மனதில் எழுந்தாலும், ‘வந்து ஈத்தன் கூறுவான்’ என்ற எண்ணத்துடன் தன் அரசாங்க அடையாள அட்டைகள் அனைத்தையும், லாக்கரில் இருந்து எடுத்து தனியாக வைத்த குறிஞ்சி…
சுடிதாரில் இருந்து காட்டன் புடவைக்கு மாற்றிக்கொள்ளலாம் என்று, மீண்டும் உடைமாற்றும் அறைக்குள் நுழைந்தவள், எப்பொழுதும் அவள் உடைகள் இருக்கும் அலமாரியை திறக்க…
அதில் அவள் உடைகள் எதுவும் இல்லை. பழையப்படி ஈஷாவின் உடைகள் அங்கு அடுக்கப்பட்டு இருந்தன.
அதில், ‘எங்கே என் உடைகள்?’ என்று புருவத்தை சுருக்கியவள், ஒவ்வொரு அலமாரியாக திறந்துப்பார்த்து எதிலும் காணாமல், ‘தூக்கிப்போட்டு விட்டார்களா’ என்று திகைத்துப்போனாள்.
ஒவ்வொன்றும் அவளின் உழைப்பாகிற்றே!
அதைவிட, அவளின் உயிரான அன்னையின் புகைப்படம் வேறு அதில் இருந்ததே!
வினாடியில் கண்கள் இரண்டும் கலங்கி சிவந்து விட்டது குறிஞ்சிக்கு.
அப்பொழுது தான் அந்த அறையில் புதிதாக இணைந்திருந்த ஒரு கதவை குறிஞ்சி கவனித்தாள்.
கிடைத்த இந்த ஒருமாத இடைவெளியில், ஈஷாவின் உடைமாற்றும் அறையை, அவர்களின் அறைக்கு அருகில் இருந்த அறையுடன் இணைத்து, குறிஞ்சிக்கும் ஏற்ற வகையில் பெரிதாக்கி இருந்தனர்.
புதிதாக இணைந்திருந்த அந்த பக்கத்து அறைக்குள் குறிஞ்சி நுழைய…
அங்கு நடுநாயகமாக, அவளின் அன்னையின் பெரிது செய்யப்பட்டு மாட்டியிருந்த புகைப்படம் கண்ணில் பட்டு… அவளின் படபடக்கும் நெஞ்சை அப்படியே அமைதிப்படுத்தி இருந்தது…
அவள் வைத்திருந்த பழைய படமும் அங்கேயிருக்க, ‘வினாடியில் என்னென்னவோ நினைத்து பயந்துவிட்டோமே’ என்று நினைத்த குறிஞ்சி, சாந்தினியின் புகைப்படத்தை எடுத்து அப்படியே தன் நெஞ்சுடன் சிறிதுநேரம் அணைத்துப் பிடித்துக்கொண்டாள்.
____________________________
🍄அடுத்த அத்தியாயம் செல்ல:
https://swathilakshmitamilnovels.blogspot.com/2025/11/453.html
கருத்துகள்
கருத்துரையிடுக