☄️45.3 அந்திப்போர் 🪻🫰🎶
சிறிது ஆசுவாசமானப்பிறகு தான், சுற்றியிருந்தவற்றையே கவனிக்க ஆரம்பித்தாள்.
முன்னொரு காலத்தில் அவளுக்கு உடைவாங்க வேண்டும் என்று, அவ்வளவு தயக்கமும், கூச்சமும் போட்டிப்போட, தன் பிடறியை கோதிய வண்ணம், அவள் முன்பு நின்றிருந்த ஈத்தன். இன்று, சிறு கூச்சமுமின்றி அவளுக்கான அனைத்தையும் உரிமையாக வாங்கி அடுக்கியிருந்தான்.
அவளின் நிறத்திற்கு ஏற்ற நிறங்களை கண்டறிந்து, அந்த நிறங்களில் மட்டும் விதவிதமான துணி ரகங்கள் மற்றும் டிசைன்களில்…
அவள் அதிகம் அணியும் புடவையும், சுடிதார்களும்…
ஒருபக்க சுவர் முழுவதுமிருந்த, அலமாரிகளில் அணிவகுத்திருக்க…
மற்றொரு பக்கத்தில் அவளுக்கு நன்றாக இருக்கும் என்று நினைத்து ஈத்தன் வாங்கிய மாடர்ன் உடைகளும்… இரவு உடைகளும் அணிவகுத்திருந்தன...
அதுமட்டுமின்றி, அந்தந்த உடைகளுக்கு ஏற்ற வகையில், தலையில் குத்தும் ஹேர்பின்னில் ஆரம்பித்து காலில் போடும் செருப்பு வரை அனைத்தும், அந்தந்த உடைகளுக்கு கீழேயே எளிதாக எடுத்து உபயோகிக்கும் வகையில் வைத்திருந்தனர்…
ஈஷாவின் அறையில் உள்ளது போலவே, இவளுக்கென்று தனியாக பெரிய கண்ணாடியுடன் கூடிய ட்ரஸிங் டேபிள், உடைமாற்றும் தடுப்பு, நவீன குளியலறை கூட இருந்தது.
ஒவ்வொன்றாக திறந்துப்பார்த்த குறிஞ்சிக்கு, ஆச்சரிய உணர்வும், ஈத்தனின் அக்கறையில் மகிழ்ச்சியும் முதலில் வந்திருந்தாலும்… போக போக மெல்ல மனதிற்கு என்னவோப்போல் ஆக ஆரம்பித்தது…
பல நாட்களாக அவள் ‘ஒன்றுமில்லை… ஒன்றுமில்லை…’ என்றுக்கூறி, அமிழ்த்தி வைத்திருந்த ஒரு விஷயம், இன்று எதிர்பாராத விதமாக மொத்தமாக பந்துப்போல் மேலெழுந்து… அவளின் மனதினை மொத்தமாக நிறைத்துவிட்டு இருந்தது…
மனதினை திசைதிருப்பவே முடியவில்லை…
முதல்முறை ஈத்தன், அமெரிக்காவில் இருந்து அவளுக்கு என்று பொருட்கள் வாங்கி வந்தப்பொழுதும் சரி, அடுத்து ஈஷாவின் பிறந்தநாளுக்கு என்று வாங்கி தந்த பொழுதும் சரி, வந்தளவிற்கு உற்சாகம் ஏனோ குறிஞ்சிக்கு இம்முறை வர மறத்துவிட…
அதற்கு பதிலாக, ‘இனிவரும் தன் வாழ்நாள் முழுவதும், இப்படியே அனைத்தையும் பரிசாக பெற்று தான் வாழ்வோமோ’ என்ற பெரும் கேள்வி தான் அவளுக்குள் வந்து இருந்தது.
அதில், அங்கிருந்த சோஃபா ஒன்றில் அப்படியே தொப்பென்று அமர்ந்துவிட்டாள்.
ஏற்கனவே அவளின் கையிருப்பு சேமிப்புகள், கடந்திருந்த சொற்ப மாதங்களிலேயே பெருமளவில் கரைந்துவிட்டிருக்க…
‘இன்னும் கொஞ்சம் நாள் தான், தன் சேமிப்புகள் பூஜ்யம் ஆகிவிடும். பிறகு ஈத்தன் கொடுத்திருந்த கார்டினை உபயோகித்து தான் ஈஷா எது கேட்டாலும் வாங்க முடியும். தனக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களும் கூட வாங்க முடியும். ஏன் ஈத்தனுக்கு பரிசுகள் வாங்கவேண்டுமென்று ஆசைப்பட்டால் கூட, இனி அவன் பணம் மூலம் தான் அவளால் வாங்க முடியும்’ என்ற ஒரு நிலையே, அவளை உள்ளுக்குள் இருந்து ஒருமாதிரி அச்சுறுத்த ஆரம்பித்து இருந்தது…
பல வருடங்களாக, யாரையும் சாராமல், கூழோ கஞ்சியே எதுவாக இருந்தாலும் தன் சுய சம்பாதியத்தில் குடித்து, வாழ்ந்து பழகிவிட்டவளால்… அவ்வளவு எளிதில் இந்த பெரிய மாற்றத்தை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை…
எவ்வளவு யோசித்துப்பார்த்தாலும் நிதர்சனமோ, ‘நீ ஏற்று தான் ஆக வேண்டும்’ என்றிட…
மனதிற்கு இனிய காதலனாக ஈத்தன் இருந்தாலும், விரைவில் அவனிடம் தன் சுயத்தினை தொலைக்க போகிறோம் என்ற உணர்வு, அவளுக்கு உள்ளுக்குள் சிறுக சிறுக ஒரு உணர்வு போராட்டத்தை மறைவாக தந்துக்கொண்டிருக்க…
இன்றோ, அது முழுதாக உயிர் பெற்று கண்முன் நின்றிருந்தது.
____________________________
இதற்கு, விட்டுக் கொடுத்து புரிதலோடு வாழ்க்கையை கொண்டு செல்ல வேண்டும் என்பதை தவிர, வேறு வழியிருப்பதாக குறிஞ்சிக்கு தெரியவில்லை.
அதில் குறிஞ்சி, ஈத்தனின் அவள் மீதான அன்பினையும், அக்கறையையும், அவள் மீதான தற்போதைய ஆசையையும் மட்டும் மொத்தமாக மனதில் நிறுத்தி…
‘இதைவிட இந்த உலகில் வேறு என்ன வேண்டும் குறிஞ்சி உனக்கு? பழகிக்கொள்’ என்று, இந்தியாவில் உள்ள பல கோடி பெண்கள், திருமணமான பிறகு தன் படிப்பு, வேலை, கனவு போன்ற அனைத்தையும் மறந்து, கணவனை சார்ந்து வாழ பழகிக்கொள்வதை போல், அவளும் அந்நொடி முதலே, தன்னை சமாதானம் செய்துக்கொண்டு அதனை பழக முயற்சித்தாள்…
அப்பொழுது சரியாக, அதனை தடுக்கும் விதத்தில், “குறிஞ்சி மலர்” என்று ஈத்தனின் குரல், அவளின் காதினுள் ஒலித்து அவளை அசைத்து இருந்தது.
கடந்த பத்து நிமிடங்களுக்கு மேலாக அவளுக்காக வெளியே காத்திருந்த ஈத்தன், தன் கைக்கடிகாரத்தை ஒருமுறை திருப்பி பார்த்துவிட்டு, வேறு வழியின்றி மணியாவதால் குரல் கொடுத்திருக்க…
தன் சிந்தனையில் இருந்து பட்டென்று வெளிவந்த குறிஞ்சி, உடனே எழுந்து வெளியே வந்துவிட்டாள்.
“எப்பவும் மின்னல் வேகத்தில் ரெடியாகி வரும் குறிஞ்சி மலருக்கு, இன்னைக்கு என்ன இவ்வளவு நேரம்?” என்று அவள் கதவை திறந்ததும் கேட்ட ஈத்தன்… அவளை பார்த்த உடனே, அவள் உடை மாற்றாததை கவனித்துவிட்டான்…
அதில் தன் நெற்றியை சுருக்கியவன், “என்னாச்சு கேர்ள். இன்னும் நீ ட்ரஸ் மாத்தலையா… வெளியே போகனும் சென்னேனே” என்றுக்கேட்க.
‘ஆ… என்ன ட்ரஸ்’ என்று பார்த்தவளுக்கு, பிறகே அவளை ஈத்தன் தயாராக கூறியிருந்தது நினைவிற்கு வந்தது.
அதில், ‘ஸ்…’ என்று தன் இதழ்களை கடித்தவள்…
“சாரி சாரிங்க… மறந்துட்டேன்… ஒரே நிமிஷம்… வந்துடறேன்…”, என்றுவிட்டு அவசர அவசரமாக அறைக்குள் அவள் ஓடப்பார்க்க…
எட்டி குறிஞ்சியின் கரத்தினை ஈத்தன் பிடித்து தடுத்து இருந்தான்.
முதலில், அவளின் நெற்றில் தன் கரத்தினை பதித்து அவளுக்கு உடல்நிலை எதுவும் சரியில்லையா என்று பார்த்தவன்… கழுத்திலும் தன் கரத்தினை பதித்து பரிசோதிக்க…
அத்தனை குழப்பங்களுக்கு மத்தியிலும் அவன் தீண்டலில் குறிஞ்சியின் உடல் முழுவதும் சிலிர்த்தெழுந்தது…
அதில் சிறு மென் புன்னகையுடன், “கூல் கேர்ள்! ஜஸ்ட் டெம்ப்ரேட்சர் பார்த்தேன். ஃபைன்” என்ற ஈத்தன், “உன்னோட ரூம்ம பார்த்துட்டு இருந்தியா கேர்ள் நீ? பிடிச்சிருக்கா உனக்கு? புது இன்டீரியர் பத்தி நீ எதுவும் செல்லலையே?” என்று அத்தனை எதிர்பார்ப்புடன் கேட்க…
குறிஞ்சியிடம் சட்டென்று ஒரு தடுமாற்றம்…
முன்பு மனதினை அடைத்த உணர்வு, மீண்டும் ஓடிவந்து அதைப்போல் மனதினை அடைத்தது…
எச்சில் கூட்டி விழுங்கியவள் தன்னை சமன்படுத்திக்கொள்ள முயல…
முடியவில்லை…
முன்பு போல், மனதில் ஒன்றை வைத்துக்கொண்டு, வெளியே ஈத்தனிடம் சாதாரணமாக நடிக்க முடியவில்லை… ஏன் அவன் கண்களை தொடர்ந்து காண கூட முடியவில்லை…
அதிர்ந்துப்போனவள், மீண்டும் மீண்டும் தன்னை சமன்படுத்திக்கொள்ள பார்த்தாள்…
ஈத்தனோ அவளை உணராது, “நியாயப்படி, என்னோட ரூம்ல தான் உன்னோட திங்க்ஸ் எல்லாம், நான் வச்சி இருக்கனும் குறிஞ்சி மலர்” என்றவன்…
“ஆனால் பேபி கவனத்தை அது கண்டிப்பா ஈர்க்கும். அப்புறம் அன்னைக்கு மாதிரி எதுவும் கேட்டு வச்சிடுவா. நம்மால் தான் பதில் சொல்ல முடியாது. காட்…” என்று புன்னகையுடன் கூறி… பல புது இளம் கனவுகளுடன், குறிஞ்சியின் விழிகளை அவன் ஆழ பார்க்க…
அங்கு அவன் அதிகமாக எதிர்பார்த்த வெட்கம் சுமந்த படபடக்கும் இமைகளையும், துடிக்கும் இதழ்களையும் காணவே காணோம்…
அதில், சட்டென்று ஈத்தனின் நீல விழிகள் கூர்மை பெற்றன.
‘நாம் கூறியது இவளுக்கு புரியவில்லையா’ என்று அவளை மேலும் ஆழ்ந்து பார்த்தவன், நொடியில் அவளின் அலைப்புறும் விழி மொழியையும், சீரற்ற அவளின் மார்புகளின் ஏற்ற இறக்க அசைவுகளையும் கவனித்துவிட்டான்.
அதில் உடனே, “என்னடா குறிஞ்சி” என்று அவளை அவன் விசாரிக்கப்பார்க்க…
“ம்… எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குங்க… எல்லாமே அவ்ளோ அழகு…” என்று உடனே குறிஞ்சியிடமிருந்து அவன் முதலில் கேட்ட கேள்விக்கு, இப்பொழுது பதில் வந்து இருந்தது. அதுவும் அவளின் முகம் கொள்ளாத புன்னகையுடன்.
தன்னை அமைதிப்படுத்திக்கொண்டு பதில் கூற என்று குறிஞ்சி எடுத்துக்கொண்ட நேரத்தில், ஈத்தன் எங்கோ சென்றுவிட்டு இருந்ததை பாவம் அவள் அறியாது போனாள்.
____________________________
🍄 அடுத்த அத்தியாயம்
https://swathilakshmitamilnovels.blogspot.com/2025/11/454.html
கருத்துகள்
கருத்துரையிடுக