40.1
அத்தியாயம் -40
ஈத்தன் மறுநாள் அமெரிக்காவிற்கு கிளம்ப வேண்டும். அவனுக்கு ஏற்கனவே முன்பதிவு செய்யபட்ட, ஆங்கில பாடல்கள் ரெக்கார்டிங்கள் இருந்தன.
இந்தியா திரும்ப குறைந்தது இரண்டிலிருந்து மூன்று வாரங்களாவது ஆகும் என்று இருந்தான்.
குறிஞ்சிக்கு விசா கைக்கு வர இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால், அவனால் அவளை உடன் அழைத்து போக முடியாத சூழல்.
அதில் குறிஞ்சி ஈத்தனிடம் எடுத்ததுமே, ஈஷாவையும் அவனையும் ஒன்றாக சென்றுவிட்டு வருமாறு கூறிவிட்டு இருந்தாள்.
சென்ற முறையே தான் பார்த்தாளே, பிள்ளையின் அவனுக்கான ஏக்கத்தை.
ஆனால் ஈத்தன் தான் ‘வேண்டாம்’ என்று மறுத்து, ஈஷாவை அவளுடனே விட்டுச் செல்ல போவதாக கூறி இருந்தான்.
இனி ஈஷா, ஆரோக்கியமான முறையில், தன் பிரிவுகளை ஏற்று பழக வேண்டும். அதுதான் அவளின் எதிர்காலத்திற்கும் நல்லது என்று முடிவெடுத்து வாய்ப்பு கிடைத்ததும் செயல்படுத்தவும் பார்த்தான்.
அதில் குறிஞ்சிக்கு தான் மனமே கேட்கவில்லை. இருந்தும், மருந்து கசந்தாலும் ‘நல்லதுக்கு தான்’ என்று குடிப்பது போல், ஈத்தனின் எண்ணங்களை புரிந்து, அவன் முடிவை ஏற்றுக்கொண்டு இருந்தாள்.
ஈத்தனின் தொழில்முறை அப்படியாக இருக்கும் பட்சத்தில், இதையெல்லாம் அவர்கள் பழகி தானே ஆக வேண்டும்.
________________________________
மறுநாள் காலை, எப்பொழுதும் போல் முதல் ஆளாக எழுந்துவிட்ட குறிஞ்சி, முகம் கழுவி தன்னை சுத்தப்படுத்தி திருத்திக்கொண்டு, துணிகள் வைக்கும் அறைக்குள் சென்றவள், அங்கு வைத்திருந்த சாந்தினியின் படம் முன்பு ஐந்து நிமிடங்கள் தன் கண்களை மூடி அப்படியே நின்று இருந்தாள்.
பிறகு அறையைவிட்டு வெளிவந்து, கீழே இருக்கும் சமையல் அறைக்கு சென்றாள்.
அங்கு ஏற்கனவே, அவள் உபயோகிக்கும் பொருட்கள் அனைத்தும் தயாராக வைக்கப்பட்டிருக்க, அவர்கள் மூவருக்குமான காலை பானங்களை தயாரித்து எடுத்துக்கொண்டு அறைக்கு திரும்பியவள்.
ஈத்தன் இல்லாது, படுக்கையில் ஈஷா மட்டும் தனியாக புரண்டு புரண்டு படுப்பதை பார்த்து, “பூக்குட்டிக்கு குட்மார்னிங்” என்று அவளருகே அமர்ந்து அவளை எழுப்பவும்.
பிங்க் நிற இரவு உடைக்குள் பன்னீர் ரோஜாப்போல் இருந்தவள், தன் கண்களை மெல்ல திறந்து குறிஞ்சியை பார்த்து, “குட் மார்னிங் அம்மா” என்றாள், அப்படியே புரண்டு வந்து குறிஞ்சியின் மடியில் தலையை வைத்து படுத்துக்கொண்டு.
அதில் அவள் முகத்தில் படந்திருந்த தலை முடிகளை, காதோரம் ஒதுக்கி, குனிந்து அவள் நெற்றியில் முத்தம் வைத்த குறிஞ்சி, “என் ஈஷாக்குட்டிக்கு என்ன இன்னைக்கு தூக்கம் பத்தலை போலயே?” என்றவள், “தூங்குங்க”, என்றப்படியே, அவள் மீது போர்வையை இழுத்து நன்றாக போர்த்திவிடவும், அவளும் குறிஞ்சியின் மெத்தென்ற மடி தரும் கதகதப்பில், தன் தூக்கத்தை சுகமாக தொடர ஆரம்பித்தாள்.
அப்பொழுது தன் முகத்தினை, பூந்துவாலையில் துடைத்தப்படி அங்கு வந்து சேர்ந்த ஈத்தன், ஈஷா உறங்குவதை பார்த்து, “ஹேப்பி மார்னிங் குறிஞ்சி!” என்றான் மெல்ல.
அதில் அவனை புன்னகையுடன் நிமிர்ந்து பார்த்தவள், “குட் மார்னிங்க” என்று அவனை போலவே மெல்லமாக கூறிவிட்டு, ஈஷா மடியில் படுத்திருப்பதால், “உங்களுக்கு டீ அங்க இருக்கு” என்று அருகில் இருக்கும் மேஜையை அவனிடம் காட்டினாள்.
அதில் “ஓ கூல்…”, என்றவன்.
அவனுக்காக அவள் தயாரித்து வைத்திருந்த டீயினை, சூடு தாங்கும் கெட்டிலில் இருந்து கப்பிற்கு மாற்றி எடுத்துக்கொண்டவன்.
மறுக்கையில், குறிஞ்சியின் காஃபி கப்பினையும் எடுத்துக்கொண்டு வந்தான்.
அதை, “தேங்க்ஸ்” என்று குறிஞ்சி வாங்கிக் கொள்ளவும்.
“தேங்க்ஸ்….?” என்று அவளை புருவம் உயர்த்தி, ‘நமக்குள் அது எதற்கு’ என்று கேள்வியாக பார்த்த ஈத்தன், அவளை கண்டிக்கும் விதமாக, காலையிலேயே பளிச்சென்று கண்முன் தெரிந்த, அவளின் குண்டு கன்னங்களில் ஒன்றை, தன் வலது உள்ளங்கைக்குள் அள்ளி, லேசாக அழுத்திவிட்டு சென்று அமரவும்…
குறிஞ்சி கையில் இருந்த காஃபி கப்பை, எங்கே விட்டுவிட போகிறோமோ என்று பதறி கெட்டியாக பிடித்துக்கொண்டு அமர்ந்து இருந்தாள்.
இப்படியே அவன் கண்டித்தால் அவள் கேட்காமல் போவாளா என்ன?
ஈஷாவின் தலை, குறிஞ்சியின் மடியில் இருக்க, அவளுடைய கால்களை தூக்கி தன் மடியில் வைத்துக்கொண்டு ஈத்தன் டீயினை பருக ஆரம்பித்தான்.
அதில் ஈஷாக்குட்டிக்கு இன்னும் சலுகையாகி போக, மேலும் கூடுதலாக சிலபல நிமிடங்கள் தன் தூக்கத்தை தொடர்ந்திருந்தாள்.
பிறகு அவள் எழுந்தப்பின், குறிஞ்சி அவளுக்கு பாலை ஊற்றி தந்துவிட்டு, குளிக்க சென்று விடவும்…
ஈஷாவும், ஈத்தனும் மட்டுமே அறையில் இருந்தனர்.
அப்பொழுது ஈத்தன், “நான் வரும் வரை எப்பவும் போல பேபி சமத்தா, ஹேப்பியா இருக்கனும். டாடி இல்லைன்னு ஃபீல் பண்ண கூடாது” என்றான், ஈஷாவை தன் மடியில் அமர்த்திக்கொண்டு.
அவளின் இன்றைய தாமதமான காலை விழிப்பிற்கு காரணம் அறியாதவன் அவன் இல்லையே.
அதில், “சரி பேபி” என்று சிறிய குரலில் கூறியவள். “நீங்க வொர்க் முடிஞ்சதும் சீக்கிரம் வந்திடனும்” என்றுக்கூறவும்.
“கண்டிப்பா பேபி. ரெக்கார்டிங் முடிஞ்சதும், டாடி உடனே அங்க இருந்து கிளம்பிடுவேன்” என்றவன். “உங்களுக்கு, அங்க இருந்து என்ன வேண்டும் சொல்லுங்க. டாடி முன்னாடியே வாங்கி வச்சிடறேன்” என்று கேட்டு குறித்துக்கொள்ள ஆரம்பித்தான்.
அப்பொழுது, தொலைப்பேசியில் மேலே காட்டிய நோட்டிஃபிகேஷனை கவனித்து, தேதியை பார்த்தவன், “பேபிக்கு பிரெஸ்ட் பெயின் எதுவும் இருக்கா டா? டாக்டர் தந்த டேப்லெட்ஸ் எடுத்தியா? இன்னும் டென் டேஸ் தானே நெக்ஸ்ட் சைக்கிள் ஸ்டார்ட் ஆக இருக்கு” என்று ஈஷாவிடம் விசாரித்தான்.
அவன் கேட்டப்பிறகு தான் ஈஷாவிற்கு, அப்படி ஒரு பிரச்சனை தனக்கு இருப்பதே, ஞாபகம் வந்தது.
அதில் “இந்த மன்த் பெயின் எதுவும் வரலை பேபி. நான் டேப்லெட்டும் எதுவும் எடுக்கலை”, என்றாள் சந்தோஷமாக.
உடனே ஈத்தன் “ஹோ.. தேங்க் காட்…”, எனவும்…
ஈஷா, “தேங்க் காட் இல்லை பேபி. தேங்க் அம்மா!” என்று, அவனை புன்னகையுடன் திருத்தினாள்.
அதில் ஈத்தன் அவளை கேள்வியாக பார்க்கவும்.
“அம்மா என்கிட்ட இங்க வந்ததும் விசாரிச்சாங்க பேபி. உடம்பு எப்படி இருக்குன்னு. அப்ப அம்மாவே தான் அங்க எல்லாம் பெயின் எதுவும் இருக்கான்னு கேட்டாங்க. நான் ஆமாம் சொல்லி டாக்டர் கிட்ட போனதை சொன்னேன்” என்றவள், மேலும் தொடர்ந்து, “அதிலிருந்து அம்மா தினமும் நைட் குளிக்க போகும் முன்னாடி, அங்க கேஸ்டர் ஆயில்(விளக்கெண்ணெய்) வச்சு எனக்கு மஸாஜ் செய்துவிட்டாங்க பேபி. கூட டெய்லி, பிளாக் கலர்ல பால்(ball) ஷேப்ல ஒரு ஸ்வீட் சாப்பிட சொல்லி செய்து தந்து இருக்காங்க. அதனால் தான் வலி வரலை நினைக்கிறேன்” என்றவள்…
அந்த அறையிலேயே இருக்கும் குளிர்சாதன பெட்டியில் இருந்து, அவளுக்கென்று குறிஞ்சி செய்து வைத்திருந்த, கருப்பு உளுந்து, எள், கருப்பட்டி, ஒருசில விதைகள் மற்றும் நட்ஸ் வகைகள் சேர்த்து செய்த சத்து உருண்டைகள் அடங்கிய கண்ணாடி ஜாரினை எடுத்துவந்து, “நல்லா இருக்கும் பேபி சாப்பிடுங்க. உடம்புக்கு நல்லது” என்று ஈத்தனிடம் தந்துவிட்டு, அவளும் ஒன்றை எடுத்து உண்ண ஆரம்பிக்கவும்.
முதலில், அதில் இருந்து சிறிய துண்டை மட்டும் எடுத்து புன்னகையுடன் ருசிப்பார்த்த ஈத்தன், “சூப்பர் பேபி” என்று அதிக இனிப்பு சேர்க்காததில் மேலும் எடுத்து உண்ண ஆரம்பித்து இருந்தான்.
அதில், “அம்மாக்கும் இது ரொம்ப பிடிக்கும் பேபி. அவங்களுக்கும் எனக்கு இருந்த மாதிரி பெயின் ரொம்ப வருஷத்துக்கு இருந்துச்சாம். ஸ்கூல் போகவே முடியாத அளவுக்கு இருக்குமாம் பேபி. கிரானி(பாட்டி) என்ன செய்து பார்த்தும் வலி போகலையாம். பாவம் அம்மா” என்றவள், “பிறகு அம்மா நர்ஸ் ஆனதும், அவங்களே சரி செய்துக்கிட்டாங்களாம்” என்று பல தகவல்களை ஈத்தனுக்கு அள்ளி வழங்கியப்படியே.
தந்தையுடன் சேர்ந்துக்கொண்டு லட்டு லட்டாக எடுத்து மொத்த சத்துமாவு உருண்டைகளையும் காலி செய்துவிட்டு, கீழே சென்று யோகா செய்ய முடியாமல், சைக்கிளில் தோட்டம் முழுவதும் வலம் வரத்தொடங்கினார்கள்.
ஈத்தனுக்கு மனம் முழுவதும் அவ்வளவு திருப்தியாக இருந்தது.
அதிலும் அவன் எதுவும் கூறாமலேயே, குறிஞ்சியே ஈஷாவை விசாரித்து, அவளின் பிரச்சனையை கேட்டறிந்து, அத்தோடு விடாமல் அதை சரிசெய்த விதம், எந்தளவிற்கு அவள் ஈஷாவை கவனித்துக்கொள்கின்றாள் என்பதை உணர்த்தியோடு மட்டும் இல்லாது...
ஈஷாவும் சங்கடம் எதுவுமில்லாமல், அவளுடன் இம்மாதிரியான விஷயங்களை மனம் விட்டு பேசி தெரிந்துக்கொள்வதையும் கூற…
அவ்வளவு நிறைவு ஈத்தனுக்கு.
அந்த நிறைவுடனே கிளம்பிவிட்டு இருந்தவன், இந்திய நேரப்படி மறுநாள் இரவு தான் அமெரிக்காவில் தரையிறங்கி இருந்தான்.
அதற்காகவே காத்திருந்த குறிஞ்சி உடனே அவனுக்கு அழைத்து அவன் நலனை விசாரிக்கவும்…
“ஹேய்! நீ இன்னும் தூங்கலையா கேர்ள்” என்ற ஈத்தன். “நான் பத்திரமா வந்துட்டேன். எந்த பிரச்சனையும் இல்லை. இப்ப செக் அவுட் பண்ண போறேன். முடிச்சிட்டு கூப்பிடறேன். சரியா மா” என்றுவிட்டு வைத்தவனால், மீண்டும் உடனே அவளுக்கு அழைக்க முடியாத நிலை.
ஏர்போர்ட்டில் இருந்த ரசிகர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு… ஓரிரு வார்த்தைகள் சினி மீடியா ஆட்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறி முடித்து என்று வெளிவந்தவன்… மேனேஜரிடம் பேசியப்படியே வீடு வந்து சேர்ந்து இருந்தான்…
குளித்துமுடித்து வெளிவந்தவனுக்கு, அங்கு பகலாக இருந்தாலும், இந்திய நேரப்படி கண்கள் சொக்கின…
அதில், மெயில் மட்டும் செக் செய்துவிட்டு, உணவை முடித்துக்கொண்டு வந்து படுக்கலாம் என்று, தன் லக்கேஜில் இருந்து லேப்டாப்பை வெளியே எடுத்தவன்…
அதில் இருந்த பெரிய பெட்டி ஒன்றை, அப்பொழுது தான் பார்த்தான்.
ஈஷா தந்து, அவன் உண்ட சத்துமாவு உருண்டைகள், தனி தனியாக கப்-கேக் வைக்கும் பேப்பரில் நேர்த்தியாக வைத்து, அவ்வளவு அடுக்கப்பட்டு இருந்தது அதில்.
மெல்லிய புன்னகை ஈத்தனின் இதழ்களின் ஓரம்.
குறிஞ்சியின் வேலை தான் அது என்பதை யாரும் அவனுக்கு கூற வேண்டியதில்லையே.
கவனிக்கப்படுவது அவ்வளவு சுகமாக இருந்தது.
அப்பொழுது தான், குறிஞ்சிக்கு அவன் ஏர்போர்டில் பிறகு அழைப்பதாக கூறி, அழைக்காமல் விட்டது நினைவு வந்தது.
“காட்… மறந்துட்ட ஈத்தன்” என்றவன்…
குறிஞ்சியின் எண்ணை தொலைபேசியில் பார்க்கவும், அவள் இன்னும் ஆன்லைனில் இருப்பதாக காட்டியது.
அதில் உடனே அவளுக்கு அழைத்துவிட்டான்.
அவளும் முதல் ரிங் முடிவதற்கு முன்பே எடுத்துவிட…
“ஹே, சாரி குறிஞ்சி. ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சிட்டேன். தூங்கி இருக்கலாம் இல்ல நீ” என்றான், ஈத்தன்.
அதில், “அதெல்லாம் ஒன்னும் பிரச்சினை இல்லைங்க” என்ற குறிஞ்சி, “நீங்க இன்னும் சாப்பிடலையா… ரொம்ப சோர்வா இருக்கீங்க போல…” என்று விசாரிக்கவும்…
ஒருகணம் ஃபோனை தன் காதில் இருந்து எடுத்து, ‘வீடியோ காலில் இருக்கிறோமா’ என்று டிஸ்ப்ளேவை பார்த்துவிட்டு, மீண்டும் காதில் வைத்தவன்…
“ட்ராவல் டயர்ட் தான் கேர்ள். வேற எதுவுமில்லை. நீ எப்படி இருக்க? பேபி எப்படி இருக்கா? தூங்கிட்டாளா? அங்க எல்லாம் ஓகேவா…” என்று வரிசையாக விசாரிக்க ஆரம்பித்தவன். பசியில் அவள் தந்துவிட்டதை எடுத்து ஒரு கடி கடித்து நாசுக்காக உண்ண ஆரம்பிக்கவும்.
“சாப்பிடறீங்களா… பொறுமையா சாப்பிட்டு முடிச்சு பிறகு கூப்பிடுங்க… நான் முழிச்சிட்டு தான் இருப்பேன்” என்று இருந்தாள் குறிஞ்சி.
அதில், “காட்… கேமிரா எதுவும் என்மேல வச்சி அனுப்பிட்டயா கேர்ள்” என்ற ஈத்தன்.
“நீ கொடுத்துவிட்டிருக்க அந்த ஹெல்தி பால்லை தான் சாப்பிடறேன். சோ குட் அண்ட் ஃபில்லிங். லவ் இட்” என்றவன். “மணி என்ன ஆகுது. தூங்கும் எண்ணம் இல்லையா கேர்ள் உனக்கு” என்று கேட்டப்படியே. லேப்டாப்பை திறந்து மெயில்களில் பார்வையை பதித்தான்.
அவன் கரத்தின் சூட்டை கேட்டு அடம்பிடிக்கும் தன் கரத்துடன், ஜோடி சேர்ந்துக்கொண்டு வர மறுக்கும் அந்த உறக்கத்தை குறித்து, என்னவென்று குறிஞ்சி அவனிடம் கூறுவது.
அவன் இல்லாது போனாலும் அந்த அறை முழுவதும் நிறைந்திருக்கும் அவன் வாசத்தை சுவாசித்தப்படியே… அவனின் பழைய மியூசிக் கன்செர்ட் வீடியோ ஒன்றில் நீண்ட நாட்கள் பிறகு மூழ்கி… இவ்வளவு நேரமும் சுதந்திரமாக முத்தெடுத்துக்கொண்டு இருந்தவள்…
நல்ல பிள்ளையாக, “உங்கக்கிட்ட பேசிட்டு தூங்கலாம்னு இருந்தேன்” என்றாள் மெல்ல.
அதற்கு, “ம்… பேசலாமே…” என்ற ஈத்தன்.
அவளுடன் ஏதேதோ பேசியப்படியே தன் வேலைகளை செய்து முடித்து… உடை மாற்றிக்கொண்டு… கீழே செல்ல தயாராகிவிட்டவன்…
தொலைப்பேசியை அணைக்கும் முன்பு…
“உன்கிட்ட ஒன்னு பேசனும் நினைச்சேன் கேர்ள். பேசவா…?” என்று இருந்தான்.
அதில் குறிஞ்சிக்கு அடிவயிற்றில் சில்லென்ற உணர்வு.
நீண்ட நெடிய வருடங்களுக்கு பிறகு தன்னிடம் என்ன எடக்கு மடக்காக கேட்க போகின்றானோ, என்று உள்ளுக்குள் அரண்டுப்போனவள்…
எப்பொழுதும் போல் அதை வெளியே கொஞ்சமும் காட்டிக்கொள்ளாமல்…
“சொல்லுங்க… என்கிட்ட என்ன தயக்கம் உங்களுக்கு” என்று இருந்தாள்.
அதில், “நேத்து பேபிக்கிட்ட பேசும் போது சில விஷயங்கள் ஷேர் செய்தா…” என்று, ஈஷா கூறியதை அவளிடம் கூறியவன்.
“உனக்கு உடம்பு இப்ப ஓகேவா இருக்கா குறிஞ்சி… இல்லை பேபிக்காக சரியாகிடுச்சுன்னு சொன்னயா… கைனோ கிட்ட அப்பாயிண்மெண்ட் போடவா… ஒருமுறை பார்த்துட்டு வந்துடலாம்…” எனவும்…
குறிஞ்சியின் முகம் முழுவதும் குப்பென்று சிவந்து, முத்து முத்தாக வியர்த்துவிட்டு இருந்தது.
‘ஐயோ! இந்த குட்டி எதுக்கு அவர்கிட்ட போய் இதை சொன்னா’ என்று தன் தலையில் கை வைத்துவிட்டு இருந்தவளுக்கு, ‘எப்படி, என்ன…’ அதுவும் ஈத்தனிடம் பேசுவது என்று தெரியவில்லை…
அதற்குள் ஈத்தன் வேறு, “என்னாச்சு குறிஞ்சி… என்கிட்ட ஷேர் செய்ய முடியலைனா ஓகே… நீ மட்டும் கூட டாக்டரை…” என்று பேசிக்கொண்டே போக.
“அச்சோ… இப்ப அந்த பிரச்சனை எதுவும் எனக்கு இல்லைங்க…” என்று ஈத்தனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறியவள், “எனக்கு நிறைய தூக்கம் வருது. குட் நைட்” என்று ஃபோனை உடனே அணைத்துவிட்டாள்.
அதில், “ஓ மேன்” என்ற ஈத்தன், மீண்டும் அவள் சகஜமாக பேச எத்தனை நாட்கள் ஆகுமோ என்று புன்னகையுடன் கணக்கிட ஆரம்பித்து இருந்தான்.
குறிஞ்சிக்கோ, தொலைப்பேசியை அணைத்தப்பிறகும், சாதாரணமாக நீண்ட நேரம் எடுத்தது.
அதன்பிறகு தான் ‘அச்சோ, அவர் நம்ம மேல இருக்கும் அக்கறையில் தானே கேட்டார். இப்படி கட் பண்ணிட்டோமே. என்ன நினைச்சு இருப்பார்’ என்று நினைத்தாலும், திருப்பி உடனே அவனுக்கு அழைத்து பேச முடியவில்லை அவளால்.
நீண்ட காலம் பொத்தி வைத்த பெண்மைக்கு, ஆணின் சிறிய நெருக்கத்தை ஏற்க கூட பெரும் போராட்டமாக இருக்க.
ஆசைக்கும், நாணத்திற்கும் இடையில் தள்ளாடிக்கொண்டே இருந்தாள்.
________________________________
🔴 அடுத்த அத்தியாயம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻
https://swathilakshmitamilnovels.blogspot.com/2025/08/402.html
கருத்துகள்
கருத்துரையிடுக