41.1
அத்தியாயம் -41
ஒருவாரமாகவே ஈத்தனின் வீடு ஒரே பரபரப்பாக இருந்தது.
எல்லாம் ஈஷாக்குட்டியின் அமர்க்களத்தினால் தான்.
தினமும் காலை எழும் பொழுதே, “பேபி, இன்னும் 7 டேஸ் தான்… அம்மா இன்னும் 6 டேஸ் தான்… ஹேய் இன்னும் 5 டேஸ் தான்…”, என்று ஒவ்வொரு நாளாக குறைத்தப்படியே எழுபவள், இரவு உறங்குவதற்கு முன்பும் அதையே தான் செய்துவிட்டு உறங்குவாள்.
ஈத்தனுக்கு இது பழக்கம் என்பதால் சிரித்தப்படியே, அவனும் அவளுடன் சேர்ந்து அதையே கூறி, அவளை மேலும் உற்சாகம் செய்துக்கொண்டிருக்க…
ஆச்சரியப்பட்டு போனாள் குறிஞ்சி.
இதையே தான் அவளும், வருடா வருடம் கொடைக்கானலில் அமர்ந்து செய்துக்கொண்டு இருந்தாள்.
அந்த மாதம் வந்தாலே போதும். தினம் தினம் ஆவலாக கேலண்டரில் தேதியை பார்த்துப்பார்த்து எண்ணியப்படியே, “இதோ வரப்போகிறது… வரப்போகிறது…” என்று முடிந்த தேதியை கிழிப்பாள்.
ஈத்தன் பிறந்தநாள் வரும் மாதம், அவளுக்கு ஒருவகையான உணர்வுகளை இதயத்தில் தரும் என்றால், இது அவளின் உடல் முழுவதும் உள்ள நரம்புகளை ஒருமாதிரி மீட்டுக்கொண்டே இருக்கும்.
பின்னே, இந்த உலகிற்கு ஒரு அரும்பினை, அவள் தன் மலர் தேகம் உருக்கி, கொண்டு வந்த மாதம் ஆயிற்றே அது. அப்படி தானே இருக்கும்!
அதுவும், அவள் விரும்பும் ஒருவனின் உயிர் அணுவை, தன் உயிர் அணுவுடன் கோர்த்து, அவனின் மீதான அவளுடைய உணர்வுகளுக்கு, உயிர் கொடுத்த சிறப்பான நாள் ஆயிற்றே!
நேற்று தான், ஈத்தனின் கைப்பற்றி பிரசவ அறைக்குள் அவள் நுழைந்தது போல் இருக்கிறது.
ஆனால், அதற்குள்ளே இந்த பூக்குட்டிக்கு பதிமூன்றாவது பிறந்தநாள் வந்துவிட்டு இருந்தது.
________________________________
ஈஷா மெல்ல தூக்கம் கலைந்து படுக்கையில் அசைய ஆரம்பிக்கவும், “ஹேப்பி பர்த்டே பேபி”, என்று தன் மென் குரலில் கூறிய ஈத்தன், புன்னகையுடன் அவளின் முகத்தை வருடி எழுப்பவும்…
“பேபி…” என்று உடனே உற்சாகமாக எழும்பி அமர்ந்தவள், விடிந்துவிட்டதை பார்த்து, “ஹே! ஹேப்பி பர்த்டே டூ மீ” என்று விரிந்த புன்னகையுடன் கூறி, இரண்டு கரத்தினையும் விரித்து ஈத்தனின் கழுத்தை அப்படியே கட்டிக்கொண்டாள்…
அதில், அவளின் உச்சம் தலையில், தன் இதழ்களை மென்மையாக பதித்து எடுத்த ஈத்தன்…
“நீங்க பிறந்ததில் இருந்து டாடி ரொம்ப சந்தோஷமா இருக்கேன் பேபி. நிறைய நிறைய சந்தோஷங்களை டாடிக்கு நீங்க அள்ளி தந்துட்டே இருக்கீங்க. உங்களோட அப்பாவா இருக்கிறதில் எனக்கு அதிக பெருமையும், நிறைவும் டா” என்று அவளின் பிறப்பிற்கான மரியாதையை அந்த நல்ல நாளில் தந்தவன், “மே காட் பிளஸ் யூ ஸ்வீட்டி” என்று வாழ்த்தி, அவளை தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொள்ள…
அகம் மகிழ்ந்துப்போன ஈஷா, “எல்லாத்துக்கும் காரணம் நீங்க தான் பேபி. யூ ஆர் த பெஸ்ட் டாட் இன் த ஹோல் வோர்ல்ட். லவ் யூ சோ மச்” என்று அவனை மேலும் இறுக்கமாக அணைத்துக்கொண்டாள்.
அதில் நெகிழ்வுடன், “லவ் யூ சோ மச் டா பேபி” என்ற ஈத்தன். “இனி பேபி, டீன் கேர்ள்”, என்று புன்னகையுடன் கூறவும்.
“எஸ்… எஸ்… எஸ்…” என்று, அந்த பதின்ம வயதிற்குள் அடியெடுத்து வைப்பவர்களுக்கே உரிய ஆர்வத்துடன் கூறிய ஈஷா.
சட்டென்று, “அம்மா…” என்று திரும்பி குறிஞ்சியை தேடவும்…
அதற்காகவே காத்திருந்த குறிஞ்சி, “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குட்டிமா” என்றவள், தன்னை நோக்கி வந்த ஈஷாவை வாரி அணைத்து, “எப்பவும் என் பூக்குட்டி சந்தோஷமா, சமத்துக்குட்டியா இருக்கனும். என் பட்டு அம்முகுட்டி”, என்று கொஞ்சி, அவளின் பஞ்சு கன்னத்தில் தன் இதழ்களை பதிக்கவும்…
“லவ் யூ அம்மா… யூ ஆர் மை ஏன்ஜல்… இந்த பிறந்தநாளோட பெரிய பரிசே, என்கூட அப்பா மட்டுமில்லாமல், அம்மா நீங்களும் இருக்கிறது தான்…”, என்ற ஈஷா, “பேபி… நீங்க இந்த பக்கத்தில் கொடுங்க…” என்று தன் மறுகன்னத்தை ஈத்தனுக்கு முத்தம் கொடுக்க காட்டவும்…
மகளின் ஆசைப்புரிந்து ஈத்தனும், குறிஞ்சியும் ஈஷாவின் கன்னங்களை முத்த மழையில் ஒருசேர நனைக்க ஆரம்பித்து இருந்தனர்…
அதில் சுகமாக நனைந்துக்கொண்டிருந்த ஈஷா திடீரென்று, “வெயிட் வெயிட்” என்று அவர்களை நிறுத்தியவள்…
படுக்கையில் இருந்து குதித்திறங்கி குடுகுடுவென்று கீழே ஓடிச்சென்று, சென்ற வேகத்திலேயே மீண்டும் மேலே ஓடிவந்து, தன் கரங்களை நீட்டவும்…
அதில், அவளின் பிறந்தநாளுக்கு என்று ஈத்தனின் ரசிகர்கள் அனுப்பி இருந்த பரிசுப்பொருட்களுக்கு நடுவில் இருந்த, குறிஞ்சி அனுப்பிய பர்பிள் வண்ண ரோஜா பெட்டி இருந்தது.
ஈத்தனுக்கும், குறிஞ்சிக்கும் நடுவில் அமர்ந்து அதை பிரித்துப்பார்த்த ஈஷாவின் முகத்தில் அப்படியொரு சந்தோஷம்…
குறிஞ்சி, அதிகாலையிலேயே அங்கு அந்த ரோஜா இருப்பதை பார்த்துவிட்டு இருந்தாள். ஆனால் ஈத்தன் முதலில் ஈஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, பரிசினை கொடுக்கட்டும், பிறகு நாம் வாழ்த்தி பரிசு கொடுக்கலாம் என்று காத்திருந்தாள். என்னதான் பெற்றவள் அவளாக இருந்தாலும் ஈஷாவை தன் தோளிலும், மார்பிலும் போட்டு, பாதுகாப்பான ஒரு சூழலில் வைத்து வளர்த்து ஆளாக்கியது எல்லாம் அவன் தானே. ஒவ்வொன்றையும் அவள் மனதில் யோசித்து வைத்திருக்க…
ஈஷாவோ, “என்னோட இந்த வருஷ முதல் பிறந்தநாள் பரிசு, அம்மாவோடது தான் பேபி!” என்று அந்த ரோஜாவினை கையில் எடுத்து, தன் மார்போடு அணைத்துக்கொண்டாள்…
அதில், ‘அச்சோ’ என்று குறிஞ்சி பதறி, ஈத்தன் முகத்தை பார்க்கவும்…
அவனோ புன்னகையுடன், “எஸ் பேபி”, என்றவன், “அம்மாவோட பரிசு எப்பவும் விலைமதிப்பற்றது டா. You are blessed(நீ ஆசிர்வதிக்கப்பட்டவள்)” என்றுக்கூறி, ஈஷாவுடன் இணைந்து, குறிஞ்சி அனுப்பிய வாழ்த்து கடிதத்தை வாசிக்கவும்.
தன் கண்களை மூடி திறந்த, குறிஞ்சியின் முகம் முழுவதும் ஈத்தனின் மேன்மை குணத்தில் கனிந்து இருந்தது.
________________________________
முதலில் ஈஷாவிற்கு தலைக்கு ஊற்றி அனுப்பிவிட்ட குறிஞ்சி, அடுத்து அவளும் குளித்துமுடித்து அங்கேயே குளியல் அறையுடன் இணைக்கப்பட்டிருக்கும் உடைமாற்றும் அறைக்குள் நுழையவும்…
ஈஷா, “அம்மா உங்களுக்கும், எனக்கும் பேபி நியூ ட்ரஸ் கொடுத்து இருக்காங்க… சீக்கிரம் போட்டுட்டு ரெடியாகி வர சொன்னாங்க… கோவில் போறோம் நாம… வாங்க வாங்க…” என்று தன் உடையை அணிந்தப்படியே அவளை அழைத்தாள்.
அதில், ‘அச்சோ… எனக்குமா ட்ரஸ்… ஏன்?’ என்று நினைத்தப்படியே வந்த குறிஞ்சி…
அவள் கண்முன், அவ்வளவு அழகாக பஃப் கை வைத்து தைக்கப்பட்ட, மெல்லிய தங்க ஜரிகை வேலைப்பாடுகள் கொண்ட, இளம் தாமரை நிற பேபி பிங்க் பட்டு பாவாடை சட்டையில் நின்ற ஈஷாவை பார்த்து, “ஓ குட்டிம்மா… ரொம்ப அழகா இருக்கீங்க… இந்த கலர் உங்களுக்கு அற்புதமா இருக்கு டா…” என்றவள், “அச்சோ என் குட்டிக்கு என் கண்ணே பட்டுடும் போல” என்று பதறி திருஷ்டி முறிக்கவும்…
கலகலவென்று சிரித்த ஈஷா, “அம்மா எனக்கு ஹெல்ப் பண்ணுங்க…” என்று திரும்பி நின்றாள்.
அதில், அவள் மேல் சட்டையின் பின்புறம் இருந்த கொக்கிகளை போட்டுவிட்ட குறிஞ்சி, ஈஷாவின் இடை தொடும் கூந்தலை உலர வைக்க ஆரம்பிக்கவும்…
ஹேர் ட்ரையர் அளவில் இருந்த, ஒரு புதிய கருவியை கொண்டு வந்து குறிஞ்சியிடம் கொடுத்த ஈஷா, “அம்மா இன்னைக்கு நாம இரண்டு பேரும் லூஸ் கர்ல்ஸ் ஹேர் ஸ்டைல் பண்ணிக்கலாம்” என்றாள், ஆசையாக.
அதை வாங்கி பார்த்த குறிஞ்சிக்கு, அதை வைத்து எப்படி ஈஷாவின் கூந்தலை சுருள் சுருளாக அவள் கூறியது போல் மாற்றுவது என்று தெரியவில்லை. அதைவிட கரெண்ட் வேறு என்பதால், குழந்தையின் முடியை எதுவும் பாழாக்கிவிடுவோமோ என்று அவள் அஞ்சவும்…
“இட்ஸ் ஓகே அம்மா” என்ற ஈஷா, “நான் பேபிக்கிட்ட பண்ணிட்டு வரேன்… நீங்க ரெடியாக ஸ்டார்ட் பண்ணுங்க… உங்க ட்ரஸ் அங்க இருக்கு…” என்று ஒரு பெரிய கவரை குறிஞ்சிக்கு காட்டிவிட்டு ஈஷா கிளம்பிவிட…
ஈஷாவின் பட்டு பாவாடை போலவே, தாமரை வண்ணத்தில் உடல் முழுவதும் மெல்லிய தங்க ஜரிகை வைத்து நெய்யப்பட்ட, மென் பட்டிலான பட்டு புடவை ஒன்று குறிஞ்சிக்காக அங்கு காத்திருந்தது.
அதுவும் அவள் எளிதாக அணியும் வகையில், முன்பே புடவையில் மடிப்பு எல்லாம் வைத்து பின் செய்யப்பட்டு, பொருத்தமாக தைக்கப்பட்ட ஜாக்கெட்டுடன் இருக்கவும்…
“இவர் எப்ப இதெல்லாம் ரெடி செய்து வாங்கி வந்தார்” என்று அனைத்தையும், தன் கண்கள் விரிய எடுத்து பார்த்த குறிஞ்சி…
________________________________
அதன் அடியில் இருந்த மரப்பெட்டி ஒன்றை கவனித்து, திறந்து பார்த்து அதிர்ந்துவிட்டாள்.
உள்ளே அவள் புடவையின் இளஞ்சிவப்பு நிறத்திற்கு தோதாக, அசல் மாணிக்கம் மற்றும் வைர கற்களால் செய்த தங்க குடை ஜிமிக்கி, கழுத்து மாலை, வளையல்கள் என்று கண்களை கூச செய்யும் வகையில் வரிசைக்கட்டி நின்றிருக்க…
குறிஞ்சிக்கு மூச்சே வெளிவரவில்லை.
அதுவும் தலையில் போடும் கிளிப் கூட அதில் கற்கள் பதித்து தங்கத்தில் இருந்து, அவளை மிரள செய்துவிட்டு இருந்தது.
அவள் எல்லாம் புடவையின் நிறத்திற்கு மேட்சாக போட வேண்டும் என்றால், மிஞ்சி மிஞ்சி போனால் அதே நிறத்தில் கண்ணாடி வளையல்களை வாங்கி போட்டு அந்த ஆசையை தீர்த்துக்கொள்ளும் ரகமாக இருக்க. இங்கோ ஈத்தன் ஒரு புடவைக்கு, அதைவிட பல மடங்கு விலையில் மேட்சிங்காக நகையை செய்துக்கொண்டு வந்திருக்க, பார்த்ததும் பதட்டம் வரும் தானே.
ஈத்தனின் செல்வநிலை அவள் அறியாதது இல்லை.
இருந்தாலும், பழக்கம் இல்லாததால் சட்டென்று ஒரு உணர்வு.
ஏற்கனவே தினம் தினம் நாம் வானத்தில் அண்ணாந்து பார்த்து ரசித்த நட்சத்திரம் ஒன்று, திடீரென்று தரையிறங்கி நம் வீட்டு வாசலுக்கு வந்து, ‘இனி உன்னுடன் தான் நான் இருக்கப்போகிறேன்’ என்று சொன்னால் என்ன மனநிலையை நமக்கு தருமோ, அதே மனநிலையில் தான், ஈத்தனை அவன் மீதான பிரம்மிப்பு விலகாமல் இன்னும் பார்த்துக்கொண்டு இருந்தாள். இதில் இது வேறு வந்து சேர்ந்துக்கொண்டு அதில் மேலும் எண்ணை ஊற்றவும்…
கவரில் இருந்த மற்றொரு பெட்டியை, அதில் என்ன குண்டு இருக்கிறதே என்ற பயத்துடனே எடுத்து பிரித்தவள்…
முன்பு இருந்த அதிர்ச்சி முற்றிலும் விலகி, கண்கள் இரண்டும் மையலில் மிதக்க நின்று இருந்தாள்.
காரணம், அதன் உள்ளே கிஃப்ட் பேக் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த வாசனை திரவியம் மற்றும் பாடி லோஷன் தான்.
அது அவளுக்கு மிகவும் பிடித்த மைசூர் மல்லியின் மணத்தில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு இருந்தது.
அவளுடன் கழித்த ஒவ்வொரு நிமிடத்தையும் என்பதை விட, ஒவ்வொரு வினாடியையும் ஈத்தன் இன்னும் எந்தளவிற்கு ஞாபகத்தில் வைத்திருக்கிறான் என்பதை, அது சொல்லாமல் சொல்ல…
வேறென்ன வேண்டும் அவளுக்கு?
அகம் நிறைந்து போனாள்.
அன்று குறிஞ்சியிடம் ஈத்தன் கூறிய, ‘கடமைக்காக நான் அழைக்க வரவில்லை. விருப்பத்துடன் தான் அழைக்க வந்தேன்’ என்பதை, அவ்வளவு வேலைகளுக்கு மத்தியிலும், ஈத்தன் அவளுக்கென்று பார்த்து பார்த்து செய்யும், இந்த சின்ன சின்ன விஷயங்கள் தான் அதிகமாக நிருபிக்க.
அந்த லோஷன் மற்றும் பர்ஃபியூமை உடனே எடுத்து உபயோகித்து, அவளை சுற்றி கமழும் மல்லியின் மணத்தில், சிறகில்லாமல் வானில் பறந்தப்படியே, தன் முக அலங்காரத்தினை செய்து முடித்தவள்…
அணிந்திருந்த உடையை கலைந்துவிட்டு, ஈத்தன் தந்த புடவையை எடுத்து உடுத்த ஆரம்பித்தாள்.
________________________________
🔴 அடுத்த அத்தியாயம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻
https://swathilakshmitamilnovels.blogspot.com/2025/08/412.html
கருத்துகள்
கருத்துரையிடுக