40.2

ஈத்தன், முதல் நாள் நீண்ட நேரம் குறிஞ்சியுடன் பேசியதோடு சரி. 


மறுநாள் முதல், ரெக்கார்டிங் வேலை, புது படங்களுக்கான ஒப்பந்த கலந்துரையாடல்கள், விளம்பரங்களுக்கான படப்பிடிப்பு என்று போட்டு வைத்த அட்டவணைப்படி ஓட ஆரம்பித்துவிட்டவனுக்கு, நேர வித்தியாசம் வேறு குறுக்கே நிற்க. ஈஷாவிடமும், குறிஞ்சியிடமும் இந்திய நேரப்படி காலை மட்டும் ஒருசில நிமிடங்கள் பேசிவிட்டு வைத்துவிடுவான்.


குறிஞ்சிக்கும், ஈஷாவுடன் நேரம் சரியாக இருந்தது. அவளின் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லவே 24 மணி நேரம் போதாமல் இருந்தவளுக்கு, அந்த மூன்று வாரம் எப்படி போனது என்றே தெரியாத அளவிற்கு போய்விட்டிருக்க…


ஈத்தனுக்கு இன்னும் சில மணி நேரங்களே இருந்தது, இந்தியாவிற்கு செல்லும் விமானத்திற்கு.


குறிஞ்சியிடமும், ஈஷாவிடமும் வீடியோ காலில் அழைத்து பேசியவன்… ‘இந்தியாவில் பார்க்கலாம்’ என்றுவிட்டு வைத்து இருக்க…


ஈஷா, “பேபி… பேபி…” என்று அப்பொழுதில் இருந்தே கடிகார முள்ளை பிடித்து தள்ள ஆரம்பித்துவிட்டு இருந்தாள்.


குறிஞ்சி எப்பொழுதும் போல் வெளியே அமைதியாகவும், உள்ளுக்குள் ஆவலோடும், தொலைப்பேசியில் ஈத்தன் வரும் விமானத்தை கவனித்தப்படியே இருந்தாள்.


நாளை இரவு அவ்வறையில் அவர்களுடன் அவன் இருப்பான் என்ற உணர்வே பெரிதாக இருக்க…


தன் கையில் தலைவைத்து படுத்திருந்த ஈஷாவை அணைத்தப்படியே, ஈத்தன் படுக்கும் இடத்தை பார்த்துக்கொண்டு இருந்தாள் குறிஞ்சி.


அப்பொழுது அவளின் தொலைப்பேசிக்கு, கொடைக்கானலில் அவளுடன் பணிப்புரிந்த மல்லிகாவிடம் இருந்து அழைப்பு வரவும்…


இந்நேரத்தில் எதற்கு அழைக்கின்றாள்… உதவி எதுவும் தேவையோ… என்று நினைத்த குறிஞ்சி…


ஈஷாவிடம் இருந்து சிறிது விலகி வந்து, “சொல்லு மல்லி… என்ன ஆச்சு…” என்று விசாரித்தாள்.


அவளோ, “அக்கா…” என்று மகிழ்ச்சியாக அழைத்தவள், “இத்தனை வருஷத்தில், ஒருதடவை கூட என்கிட்ட, உங்களுக்கு கல்யாணம் ஆனது பத்தி நீங்க சொல்லவே இல்லை. போங்க…” என்றுக்கூறவும்.


குறிஞ்சிக்கு திக்கென்று இருந்தது.


‘மதர்’ நிச்சயம் கூறியிருக்க மாட்டார் என்று அவளுக்கு தெரியும்.


அப்படி இருக்கையில்… எப்படி?


“யார்… யார் சொன்னாங்க மல்லி” என்றாள் பதட்டத்துடன்.


“ம்… யாரா… உங்களோட ஆள் தான் சொன்னார்…” என்றவள். “இதில் பாருங்க…” என்று ஒரு லிங்க்கை எடுத்து அனுப்பவும்…


அதைப்பார்த்த குறிஞ்சியின் கண்கள் அசைய மறுத்து அப்படியே நின்றுவிட்டு இருந்தன.


இன்ஸ்டாகிராமில் ஈத்தனுக்கு என்று அவனின் ரசிகர்கள் வைத்திருக்கும் தனி அக்கவுண்ட்கள் பலவற்றில் ஒன்றில்…


ஈத்தனின் பிறந்தநாளுக்கு என்று புதிதாக வந்திருந்த AI(Artificial Intelligence - செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அவனின் பழைய காணொளிகளை எல்லாம் எடுத்து, ஒன்று சேர்த்து, திரைப்படம் போல் புதுமையாக தயாரித்து வெளியிட்டு இருந்தார்கள்.


அதனை தயாரித்திருந்தவன், மீண்டும் அதை ஒருமுறை பார்க்கலாம் என்று நேற்று எடுத்து பார்க்கும் போது தான்… 


அதிலிருந்த, ஈத்தன் குறிஞ்சியை கொடைக்கானலில் இருந்து அழைத்து வரும்பொழுது, ஏர்போர்ட்டில் தனி நுழைவு பாதை மூடி, பொது பாதையில் அவன் குறிஞ்சியுடன் வந்திருந்த காணொளியை, உற்று கவனித்து இருந்தான்…


அதில், ‘யாரிந்த பெண் புதிதாக ஈத்தனுடன்’ என்று ஆச்சரியமாகி குறிஞ்சியை பார்த்தவன். அதைத்தொடர்ந்து, அவளுக்கு அருகில் இருந்த ஈஷாவை பார்த்து அதிர்ந்துவிட்டு இருந்தான்.


AI தந்திருந்த காணொளியில் ஈஷாவும், குறிஞ்சியும் அப்படியே அச்சடித்தப்போல் ஒரேமாதிரியாக இருந்தார்கள்.


உடனே அசல் காணொளியை எடுத்து அவன் உற்று பார்க்கவும், அதில் இருக்கும் ஒற்றுமைகளும் தெரிந்தன.


ஈஷாவின் சரும நிறம், ஈத்தனை விடவும் அதிக வெள்ளையாக அமெரிக்கர்களுக்கு இருப்பது போலவே இருக்கும். அதில் நம்மூர் வெப்பத்தில், எப்பொழுதுமே அவள் இளம் பிங்க் வண்ணத்தில் காணப்படுவதால், சட்டென்று யாருக்குமே அவளிடம் இருக்கும் இந்திய ஜாடைகள் எதுவும் தெரிந்தது கிடையாது.


அனைவருமே அவள் அன்னை அமெரிக்காவை சேர்ந்த பெண்ணாக தான் இருக்கும் என்று நினைத்திருக்க…


கண், காது, மூக்கு, வாய், கன்னம், முக வடிவம் என்று அனைத்தையுமே அப்படியே குறிஞ்சியிடம் இருந்து பெற்று ஈஷா பிறந்திருந்தாள். அதுவும் அவள் பூப்பெய்திய பிறகு ஏற்பட்ட உடல் மாற்றங்களால், அந்த ஒற்றுமைகள் அதிகமாக வெளிப்பட ஆரம்பித்துவிட்டிருக்க. அதையெல்லாம் ஏஐ அப்படியே கோடிட்டு காட்டிவிட்டு இருந்தது.


குறிஞ்சியை உற்றுப்பார்க்க ஆரம்பித்த முதல் நாளே, ஈத்தன் அந்த ஒற்றுமைகள் அனைத்தையும் கண்டிருக்க. 


இன்று உலகமே அதை கண்டு இருந்தது!


இன்ஸ்டாகிராமில் ஆரம்பித்து சமூகவலைத்தளங்கள் அனைத்திலும்,


‘மக்களே, நம்ம ஈத்தன் கூட இருக்கும் இந்த பொண்ணை பாருங்க. அடுத்து அப்படியே பக்கத்தில் இருக்கும் ஈஷா அரோராவையும் பாருங்க. ஒரே மாதிரி இருக்காங்க‌ தானே. 

நிச்சயம் ஈஷாவோட அம்மா இந்த பொண்ணா தான் இருக்கனும். அப்ப ஈத்தனுக்கு இவங்க?’ என்ற கேள்வியுடன், காணொளியில் அனைத்தையும் வட்டமிட்டு விளக்கமாக காட்டி, ஷேர் செய்திருக்க…


ஒருசில நிமிடங்களிலேயே காட்டுத்தீ போல் அந்த புகைப்படங்களும், காணொளிகளும் உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்துவிட்டு இருந்தன.


அத்தனை ஆயிரம் கமெண்ட்கள். 


‘இது உண்மையா?’


‘ஈத்தனுக்கு திருமணம் ஆகிவிட்டதா?’


‘அப்படியானால் ஈஷா ஈத்தன் மகள் தானா?’


என்று சிலர் ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் கேட்டிருக்க…


பலரோ, 


‘நோ?’


‘ஈத்தன் பக்கத்தில் கூட வர முடியாதப்பெண் இவள்’


‘நிச்சயம் அவன் மனைவியாக இருக்க வாய்ப்பேயில்லை.’


‘ஈத்தனுக்கு இன்னும் திருமணமே ஆகவில்லை’


என்று அவன் மீதிருந்த அதீத எண்ணங்களில், அவனுக்கு திருமணம் ஆனதை ஏற்றுக்கொள்ளமுடியாது, அழுது புலம்பி, எதிர்மறையாக கண்டப்படி கருத்துக்களை பதிவு செய்துக்கொண்டும் இருந்தார்கள்.


அப்படியும் ஆங்காங்கே,


‘ஈத்தனின் தேர்வு, அவனை போலவே ஆர்பாட்டம் இல்லாது அழகாக இருக்கிறது’


‘வாழ்த்துக்கள் ஈத்தன் ’


போன்ற நேர்மறையான கருத்துக்களையும் பார்க்க முடிந்தது தான்.


குறிஞ்சியின் கண்கள் அதில் எதிலுமே பதியவில்லை. மற்றவர்களின் கருத்துக்கள் அவளுக்கு எதற்கு?


அவளின் கண்ணாளனே, அங்கு அவளுக்காக கருத்துப்பெட்டியில் கருத்து போட்டு இருக்கும் போது.


இப்படி ஒரு விஷயம் பரவ ஆரம்பித்த ஒருசில நிமிடங்களிலேயே, ஈத்தனின் சமூக வலைதளங்களுக்கான தனி குழுவின் மூலம், அவனுக்கு விஷயம் சென்றிருக்க…


அதை திறந்துப்பார்த்தவனுக்கு முதலில் சுள்ளென்று ஒரு எரிச்சல்.


என்னுடைய தனிப்பட்ட விஷயங்களை இப்படி அலசி, ஆராயும் உரிமையை யார் இவர்களுக்கு தந்தது என்று.


பிறகு, அதீத ஆர்வத்தில் செய்து இருக்கிறார்கள், ‘விடு ஈத்தன்’ என்று தன்னை தானே அமைதிப் படுத்திக்கொண்டவன்.


AI வைத்து அந்த பையன் செய்திருந்த காணொளியை முழுதாக பார்த்துவிட்டு…


கீழே,


"Hello! I appreciate your enthusiasm and sharp observations. I was particularly impressed by your AI video - it showcased your stunning creativity! However, going forward, respect my personal boundaries and address my wife as Kurunji Malar Christopher, not 'இந்த பொண்ணு'. Thank you for your understanding. 


Best regards, 

Ethan Samaravel Christopher”


என்று நேரடியாக அவனே முதல்முறையாக கருத்துத்தெரிவித்து. அந்த பிரச்சனையை அப்படியே முடித்து வைத்துவிட்டு தான் விமானமே ஏறியிருந்தான்.


பதிவு செய்தவனின் ஆர்வத்தையும், திறமையையும், அவன் செய்த காணொளியையும், முதலில் மனம் திறந்து பாராட்டி இருந்த ஈத்தன்…


அப்படியே மெல்ல யாருக்கும் தெரியாமல் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல், “இருப்பினும், இனிமேல் என்னுடைய தனிப்பட்ட விஷயங்களுக்கு மதிப்பளி” என்று ஒரு கொட்டு வைத்துவிட்டு…


உடன் அவன் பதிவில் ‘இந்த பொண்ணு’ என்று குறிஞ்சியை மீண்டும் மீண்டும் மொட்டையாக அடையாளப்படுத்தியதை சுட்டிக்காட்டி, இனி என் மனைவியை ‘குறிஞ்சி மலர் கிருஸ்டோஃபர்’ என்று அழைக்கும் படி கூறிவிட்டு…


ஆரோக்கியமான முறையில் விடைப்பெற்று இருந்தான்.


அது ஒன்றே, குறிஞ்சி தான் அவன் மனைவி என்பதையும், அவளின் மரியாதை எந்தளவிற்கு அவனுக்கு முக்கியம் என்பதையும் அனைவருக்கும் காட்டிவிட்டிருக்க…


சந்தேகம் மொத்தமும் தீர்ந்து இருந்தது.


முன்பு கதறிய கூட்டங்களுக்கு சுற்றியுள்ள பூமியே ஒருசில வினாடிகள் சுற்றுவதை நிறுத்திவிட்டது போல் இருந்தது.


உடன் அவனின் மொழி புலமை ஒருபக்கம், பல செலிபிரிட்டிகளை, ‘அடப்பாவி எப்படி இவ்ளோ அழகா இதை முடிச்சு வச்சான். அவன் திட்டுனா மட்டும் இந்த மக்களுக்கு வலிக்க மாட்டுது. இதையே நாம சொல்லி இருந்தா, திமிரு பிடிச்சவன். நம்ம காசில் தானே இவன் வாழுறான்னு திட்டி திட்டியே சோலிய முடிச்சு விட்டு இருப்பானுங்க’ என்று மலைக்க வைத்து இருக்க.


குறிஞ்சிக்கோ துடைக்க துடைக்க நிற்காமல் அவளின் கண்களை சுற்றி குளம் உண்டாகிக்கொண்டே இருந்தது.


விவரம் தெரிந்த நாள் முதல், தன்னுடைய அடையாளத்தையே விதி அழித்துவிட்டதே, அப்படி என்ன பாவம் நாம் செய்தோம், என்று இனிஷியல் இல்லாத தன் பெயரை பார்த்து அவள் எண்ணியிருக்க…


அவ்விதியோ அந்த சாக்கடையில் அவளின் அடையாளம் இருக்க கூடாது என்று காத்திருந்து, அவ்வளவு அழகாய் அவளுக்கு ஒரு அடையாளத்தை கொடுத்து இருந்தது…


இவ்வுலகில் அவள் அதிகம் விரும்பும், மதிக்கும் ஈத்தனின் பெயர் அவளுக்கு அடையாளமாக அவளின் பெயருடன்… அதுவும் உலகம் பார்க்கும் வகையில்…


அவ்வளவு பிடித்தது அவளுக்கு…


அழுத்தமாக தன் இதழ்களை குறிஞ்சி மலர் கிருஸ்டோஃபர் என்று ஈத்தன் போட்டிருந்த பதவின் மீது, பதித்து எடுத்தாள் குறிஞ்சி…


இதைவிட அழகான நாள் ஒன்று அவளுக்கு தன் வாழ்க்கையில் மீண்டும் வருமா என்று நினைக்கும் அளவுக்கு இருந்தது, அந்த நாள் அவளுக்கு கொடுத்த அன்பளிப்பில்.


எதையுமே பதிலுக்கு எதிர்பார்க்காமல் அவள் செய்த அனைத்திற்கும், அவள் எதிர்பாராத விதத்தில் பலன்கள் வந்துக்கொண்டே இருந்தன.

_______________________________

🔴 அடுத்த அத்தியாயம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻 

https://swathilakshmitamilnovels.blogspot.com/2025/08/403.html

கருத்துகள்

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates

Popular posts

New Ongoing 💌 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🎼🪻😘💌

Completed- உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே💘- (Completed story available here for free Read)

🔴My Complete Novel List: Ongoing and Finished

Completed-💃🕺அழகான இராட்சசியே அடிக்கரும்பாய் இனிக்கிறியே - Romantic Entertainment

Completed-மகிழ்மதியின் அரசன்- Royal Family Based Romantic love story