40.3
சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய ஈத்தனுக்காக, எப்பொழுதும் போல் சக்தி வந்து மற்ற மேனேஜர்களுடன் காத்திருக்க…
எதுவுமே நடக்காதது போல் வந்து, அவர்களுடன் கிளம்பி இருந்தான் ஈத்தன்…
விமான நிலைய வாசலில் அவனை மறித்து பிடிக்க பார்த்த சினிமா செய்தியாளர்களிடம், நேரடியாக, ‘நோ பெர்சனல் குவொஸ்டின்ஸ். கேட்டா கிளம்பிடுவேன்’ என்றிருந்தவன். இப்பொழுது அமெரிக்காவில் முடித்து தந்துவிட்டு வந்த புதிய பாடல்களை பற்றி மட்டும் பேசிவிட்டு கிளம்பியிருக்க…
அவனிடம் அதைக்குறித்து பேச நினைத்த, அனைத்து மேனேஜர்களின் வாய்களும் தானாக ஜிப் போட்டு மூடப்பட்டுவிட்டு இருந்தது.
ஈத்தனின் ஒவ்வொரு அசைவும், நான் எவ்வளவு மென்மையோ, அதே அளவு அழுத்தமும் கூட என்று சொல்லாமல் சொல்வது போல் இருக்க… அனைவருக்கும் சில வினாடிகளிலேயே மூச்சு முட்டும் உணர்வு…
ஈத்தன், அவன் இல்லாத நேரத்தில் நடந்த அலுவலக சம்பந்தப்பட்ட விஷயங்களை குறித்து கலந்தாலோசித்தப்படியே காரில் வர… அவன் கேட்ட கேள்விகளுக்கான பதில்கள் மட்டும் அங்கு பரிமாறப்பட்டன…
_______________________________
வீட்டு வாசலில் ஈத்தனின் கார் சென்று நின்ற மறுகணமே, “ஏ… பேபி…” என்று ஓடிவந்து ஈத்தனை ஈஷா அணைத்துக்கொள்ள…
“ஹோ… பேபி…”, அவளை பிடித்துக்கொண்ட ஈத்தன்.
குனிந்து அவளின் முதுகில் தட்டிக்கொடுத்து. அவளை அப்படியே தூக்கிக்கொண்டு நடந்தவன்…
வாசலில் நின்றிருந்த குறிஞ்சி அருகே சென்று ஈஷாவை இறக்கி விட்டுவிட்டு…
குறிஞ்சியை பார்க்க.
அவளோ ஆயிரம் வாட்ஸ் பல்பு போட்டது போல்… முகம் முழுவதும் சந்தோஷ மத்தாப்புகளை ஏந்திய வண்ணம் நின்று இருந்தாள்…
அதில், “டிவைன்” என்ற ஈத்தன், அவளை தன் தோளுடன் சேர்த்து அணைத்துவிடுவிக்க…
அங்கு ஒருவனின்(சக்தியின்) வயிற்றில் இருந்து வெளிவந்த புகை, அவன் கண், காது, மூக்கு என்று அனைத்தின் வழியாகவும் வெளியேற தொடங்கி இருந்தது.
அதற்குள் பாதுகாவலர்கள் ஈத்தன் கொண்டுவந்திருந்த லக்கேஜ்களை இறக்கி, வீட்டிற்குள் எடுத்துச்சென்றிருந்தார்கள்…
ஈத்தன், அவனுடன் ஏர்போர்ட்டில் இருந்து வந்திருந்த மேனேஜர்களிடம், நேரமாகிவிட்டதால் “காலை பார்க்கலாம்” என்று விடைக்கொடுத்துவிட்டு…
சக்தியின் புறம் திரும்பியவன்.
“நீங்க வெயிட் பண்ணுங்க சக்தி. ஸ்கூல் விஷயம் பத்தி டிஸ்கஸ் செய்யனும்” என்று அனைவரும் இருந்ததால் ஃபார்மலாக பேசிவிட்டு, மேலே தங்களுடைய அறைக்கு சென்றுவிட்டான்.
_______________________________
ஈத்தன் குறிஞ்சியிடம் ஒரு ட்ராலியையும், ஈஷாவிடம் ஒரு ட்ராலியையும் தந்துவிட்டு குளிக்கச்சென்றிருக்க…
ஈஷா விடுவிடுவென்று அவளிடம் கொடுத்ததை பிரித்து பார்த்து முடித்துவிட்டு இருந்தாள்.
அதில், அவள் வாங்கி வர கூறியிருந்த பெயிண்டிங் சம்மந்தப்பட்ட பொருட்களுடன், மேலும் புதிதாக மார்கெட்டிற்கு வந்திருந்த பல கிராஃப்ட் பொருட்கள் மற்றும் அவளுக்கு புது உடைகள், ஷூக்கள், விதவிதமாக தலையில் போடும் கிளிப்கள், அவள் வயதுக்கு தகுந்த சின்ன சின்ன நகைகள் என்று அவ்வளவு இருக்க. ‘ஈத்தனுக்கு இதெல்லாம் வாங்க தெரியுமா’ என்று ஆச்சரியமாக பார்த்துக்கொண்டு நின்று இருந்தாள் குறிஞ்சி.
பயங்கர குஷியில் இருந்த ஈஷாவோ, “அம்மா, வாங்க உங்களோடதையும் ஓப்பன் செய்யலாம்…” என்று குறிஞ்சியை அழைக்கவும்…
குறிஞ்சிக்கு சொல்ல தெரியாத உணர்வுகள் பல மனதினுள்.
இதற்கு முன்பும், அவர்கள் இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் இருந்த காலத்தில், ஈத்தன் அவளுக்கு நிறைய வாங்கிக்கொடுத்து இருந்தாலும்…
ஆனால், அது எல்லாம் கடமைக்கு என்ற சொல்லுக்கு பின் நின்றிருக்க…
இதுவோ…?
கணவன் என்ற அடையாளத்திற்கு பின் நின்று, அவளை ஒரு வழி செய்தது.
அவளுக்கு என்று, அவன் வாங்கிவந்த பொருட்களை, பார்க்க வேண்டும் என்ற எண்ணம் கூட, நாணத்தை வர வைக்குமா என்று வியந்து போனவள்…
“நீங்களே திறங்க பாப்பா” என்றாள் கன்னங்கள் இரண்டும் குழைய.
அதில் ஈஷா உடனே திறந்து, ஒவ்வொன்றாக வெளியே எடுக்க ஆரம்பித்தாள்.
குறிஞ்சிக்கு என்று, ஹேண்ட் பேக், வேலெட், கூலர்ஸ், கைக்கடிகாரம், கையில், காதில், கழுத்தில் அணியும் வகையிலான, செட் செட்டான மேற்கத்திய பாணியில் செய்த நகைகள், தோட்டத்தில் போட்டு நடக்கும் படியான ஸ்போர்ட்ஸ் ஷூக்கள் என்று அனைத்துமே நல்ல பிராண்டட் வகைகளாக, அதேநேரம் அவளுக்கு பொருந்தும் வண்ணம் வாங்கி வந்திருந்தவன்…
உடன் அவள் அதிகம் உபயோகப்படுத்தும் கண், உதடு மற்றும் நகம் சம்பந்தப்பட்ட அழகு சாதனப் பொருட்களையும் பார்த்து பார்த்து சேர்த்து இருந்தான்.
அதேப்போல், எப்பொழுதும் குறிஞ்சி, இரவுகளில் குளித்தப்பின் நைட்டி போன்ற இலகுவான இரவு உடைகள் எதையும் அணியாது, சுடிதாரை மட்டுமே அணிவதை பார்த்திருந்த ஈத்தன், அவளுக்கு மூங்கிலில் இருந்து நெய்யப்பட்ட, மிகவும் மென்மையான, அதே சமயம் இலகுவான பைஜாமா வகை இரவு உடைகள் கூட நிறைய வாங்கி வந்திருக்க…
பேருக்கு எதையோ, பணத்தை கொட்டி அள்ளி வந்தேன் என்று இல்லாமல், ஈத்தன் ஒவ்வொன்றையும் அவளுக்கு உபயோகமாக இருக்கும் விதத்தில், யோசித்து யோசித்து வாங்கி இருப்பதும்,
அவளை, எவ்வளவு தூரத்திற்கு அவன் அறிந்து வைத்திருக்கின்றான் என்பதையும் குறிஞ்சிக்கு புரிய வைக்க…
அவன் மீதான மையல் கூடி நின்று இருந்தாள்.
அப்பொழுது ஈஷா, “அம்மா என்கிட்டேயும் இதே கலர்ஸ்ல நைட் டிரஸ் இருக்கு. இனி நாம இரண்டு பேரும் ஒரே மாதிரி போடலாம்…” என்றவள்… படுக்கை மீது ஏறி நின்றுகொண்டு குறிஞ்சி மீது ஈத்தன் வாங்கி வந்திருந்த உடைகளை வைத்து பார்த்துக்கொண்டிருக்கவும்…
குளித்து முடித்து, உடை மாற்றிக்கொண்டு, உலர வைத்த முன்னெற்றி முடி சிலுசிலுக்க, ஈத்தன் வெளிவந்திருந்தான்.
_______________________________
அறையில் குப்பென்று பரவ தொடங்கிய அவனுடைய மணத்திலேயே, அவன் வரவை உணர்ந்த குறிஞ்சி, “போதும் பாப்பா… அடுத்ததை பார்க்கலாம்” என்று ஈஷாவிடம் கூறியவள். அவள் கீழே எடுத்து வைத்திருந்த ஷாலை எடுத்து கழுத்தை சுற்றிப்போட்டுக்கொள்ள…
ஈத்தன் வந்து அங்கு அமர்ந்திருந்தான்.
“நீங்க கேட்டது எல்லாம் இருக்கா பேபி. இல்லைனா சொல்லுங்க நான் ஷிப் பண்ண சொல்றேன்” என்று ஈஷாவிடம் ஈத்தன் விசாரிக்க.
“எல்லாமே இருக்கு பேபி. பர்ஃபெக்ட். நீங்க வாங்கிட்டு வந்த மத்த திங்க்ஸும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. லவ் யூ பேபி” என்றிட.
“லவ் யூ டூ பேபி”, என்ற ஈத்தனின் பார்வை இப்பொழுது குறிஞ்சியின் பக்கம் திரும்பி இருந்தது.
“என்ன கேர்ள்… என்ன வாங்கிட்டு வரன்னு நான் அத்தனை முறை கேட்டும் நீ ஒன்னும் சொல்லலை… ஓரளவுக்கு எனக்கு தெரிஞ்ச லேடிஸ் கலெக்ஷன்ஸ் வாங்கிட்டு வந்தேன்… பிடிச்சு இருக்கா… உன் டேஸ்ட்க்கு மேட்ச் ஆகுதா…” என்று கேட்டான்.
குறிஞ்சியோ ‘என்ன கேட்கிறார் இவர்?’ என்று பார்த்து இருந்தாள்.
பின்னே, அவன் அவளுக்கென்று வாங்கியது என்ற விஷயம் ஒன்றே அவளுக்கு போதாதா!
அனைத்துமே அவளுக்கு பொக்கிஷங்கள் ஆயிற்றே…
“எல்லாமே பிடிச்சிருக்கு… ரொம்ப நல்லாருக்கு…” என்றவளுக்கு அடுத்து என்ன கூறுவதென்று தெரியவில்லை. நன்றியெல்லாம் கூறக்கூடாது என்று அவன் தான் ஏற்கனவே தடைவிதித்து இருந்தானே. சொல்வதென்றால் ஈஷா போல் ‘லவ் யூ’ தான் அவள் சொல்ல வேண்டும்.
என்ன அது நெஞ்சம் முழுவதும் நிறைந்திருந்தாலும்… வார்த்தைகளுக்குள் அடக்கி வெளியிட தெரியவில்லை…
அதில் அவள் அமைதியாக நின்றிருக்க…
அவளின் பார்வையே, ஈத்தனுக்கு வேண்டியதை கூறி முடித்து இருந்தது.
அதற்குள், “ஓ பேபி…” என்றாள் ஈஷா. குறிஞ்சியின் பெட்டிக்குள் சிகப்பு நிறத்தில் இதயவடிவில் இருந்த ஒரு பெட்டியை பார்த்து.
குறிஞ்சியும் அதைப்பார்க்க…
ஈஷா, அதை வெளியே எடுத்து குறிஞ்சியின் கையில் தந்து, “ஓப்பன் பண்ணுங்க அம்மா” என்றவள்.
ஈத்தனிடம் திரும்பி, “நான் இங்க இருக்கலாமா பேபி” என்று குறும்பாக கேட்டு இருந்தாள்.
அதில் ஈத்தனின் புருவங்கள் இரண்டும் ஆச்சரியத்தில் உயர்ந்து இருந்தன.
‘மகள் வளர்கிறாள்’ என்பது புரிய…
புன்னகையுடன், “இருக்கலாம் டா பேபி” என்றவன். அவளை இழுத்து தன் மடியில் அமர்த்திக்கொண்டு…
குறிஞ்சியை பார்க்க.
அவளும் ஈத்தன் போல் தான் ஆச்சரியத்தில் நின்று இருந்தாள். உடன் ஈத்தன் போலவே ஈஷாவும், எவ்வளவு நாகரிகமாக இருக்கின்றாள் என்ற பெருமிதமும் சேர்ந்துக்கொள்ள…
கையில் இருந்த பெட்டியை திறந்துப்பார்த்தவள், முதல்முறை ஈத்தன் முன்பு வாய்விட்டு சிரித்துவிட்டு இருந்தாள்…
உள்ளே ஆரஞ்சு வண்ணத்தில் அவ்வளவு அழகாக… அவளுக்கு மிகவும் பிடித்த மோத்திசூர் லட்டுகள்… கொழுக் மொழுக்கென்று ஒன்றுடன் ஒன்று இடித்துக்கொண்டு அமர்ந்து இருந்தன…
அமெரிக்காவில், நம்மூர் லட்டை தேடி பிடித்துக்கொண்டு அவளுக்கென்று வாங்கி வந்திருந்த ஈத்தன், குறிஞ்சியின் சிரிப்பில், “வாட்…” என்று அவளை தன் கண்களை சுருக்கி பார்க்கவும்.
குறிஞ்சி பட்டென்று தன் வாயை கைவைத்து மூடி, சிரிப்பை அடக்கிக்கொண்டாள்.
ஈஷா என்னவென்று புரியாமல் இருவரையும் மாறி மாறி பார்க்கவும், குறிஞ்சி “ஸ்வீட் குட்டிமா. சாப்பிட்டு பார்த்து, எப்படி இருக்குன்னு சொல்லுங்க” என்று அவளுக்கு தர.
ஈஷா ஒன்றை எடுத்துக்கொண்டாள்.
குறிஞ்சி ஈத்தனை பார்க்கவும்.
அவன், “இவ்ளோ சுகர் என்னால் சாப்பிட முடியாது கேர்ள். நீ சாப்பிடு. உனக்காக தான் வாங்கினேன். சாரி” என்றான்.
“அச்சோ சாரி எல்லாம் ஏன்… இருக்கட்டும் ங்க…” என்ற குறிஞ்சியும் ஒன்றை எடுத்துக்கொண்டு… பெட்டியை மூடிவைத்துவிட்டு அமரவும்…
ஈஷா, “டூ குட் பேபி. மில்க் கேக் மாதிரி ரிச்சா இருக்கு. ஸ்வீட்னெஸ் கூட தான். பட் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. கொஞ்சம் ட்ரை பண்ணுங்க” என்றாள் கண்களை மூடி லட்டை மென்றப்படியே ஈத்தனிடம்.
அதில், “அப்படியா பேபி” என்ற ஈத்தன்.
குறிஞ்சி பக்கம் திரும்பவும்.
“எடுக்கவா…” என்றாள், அருகில் இருந்த பெட்டியை பார்த்தப்படியே குறிஞ்சி…
அதற்கு, “நோ… வேஸ்ட் ஆகிடும்… அவ்ளோ வேண்டாம்” என்ற ஈத்தன்.
குறிஞ்சியின் கைப்பற்றி அவள் உண்டுக்கொண்டிருந்த லட்டில் இருந்து கொஞ்சம் மட்டும் கடித்து… ருசி பார்க்க ஆரம்பிக்கவும்…
குறிஞ்சியின் கையில் இருந்த லட்டு வழுக்கிக்கொண்டு கீழே விழ பார்த்து இருந்தது.
“நாட் பேட்…” என்று லட்டை சுவைப்பார்த்து முடித்த ஈத்தன். பிறகே அவன் கரத்தினுள் மெல்ல நடுங்கும் குறிஞ்சியின் கரத்தினை உணர்ந்து இருந்தான்.
அவளின் உறைந்த நிலையில் தான்… அவனுக்கும் அவனுடைய செயல் உரைத்தது…
ஆனால் குறிஞ்சிப்போல் அவன் அதிரவெல்லாம் இல்லை…
விருப்பத்துடன் தன் மாற்றத்தை சுவீகரித்தவன்…
குறிஞ்சியின் கன்னத்தில் லேசாக தட்டி, “சாப்பிடு கேர்ள்” என்று அப்படியே தட்டிய கன்னத்தை அழுத்தி பிடித்துவிட்டு விடவும்…
சுயம் திரும்பிய குறிஞ்சியின் முகம் முழுவதும் சூடாகி ஆங்காங்கே சிவக்க தொடங்கி இருந்தது.
அதைவிட கையில் இருந்த அவன் கடித்த லட்டை எப்படி உண்பது என்று தெரியாமல்… திருதிருவென விழித்தவண்ணம்…
அதை கடித்தவள்…
கூச்சம் தாளாமல் மறுபக்கம் திரும்பிவிட்டு இருந்தாள்…
_______________________________
ஈத்தன் கீழே வந்து ஐந்து நிமிடங்களுக்கு மேலாகி இருந்தது.
அவனும் எதுவும் பேசவில்லை.
அவன் அருகில் அமர்ந்திருந்த சக்தியும் எதுவும் பேசவில்லை.
இருவருக்குள்ளும் பெரும் அமைதி.
‘யாருக்கும் நான் எதுவும் விளக்கம் தர தேவையில்லை’ என்ற ஈத்தன்… சக்தியை மட்டும் தனியே அழைத்து அமர வைத்திருந்ததிலேயே,
சக்திக்கு, ஈத்தன் மனதில் அவனுக்கென்று இருக்கும் இடம் புரிந்திருக்க…
விஷயம் வெளியானது முதலே ஒருமாதிரி, ‘அவ்வளவு தானா நாம் அவருக்கு. ஒருவார்த்தை நம்மிடம் கூறவில்லையே’ என்று இருந்தவன், அப்படியே குளிர ஆரம்பித்து இருந்தான்.
அனைத்தையும் விட இந்த விஷயத்திற்காக தானே அவன், பன்னிரண்டு வருடங்களுக்கு முன் சிறைக்கு எல்லாம் சென்றுவிட்டு வந்து இருந்தான்.
ஈத்தனை நிமிர்ந்து பார்த்தான்.
ஈத்தன் சக்தியிடம், இதை எப்படி பேசுவது யோசித்த வண்ணம் அமர்ந்திருக்க…
“வாழ்த்துக்கள் தலைவரே” என்று ஈத்தனுக்கு எந்த கஷ்டமும் தரக்கூடாது என்று பேச்சை தொடங்கிய சக்தி.
“என்ன தலைவரே…
நர்ஸூ…
நம்பிக்கையானவங்களா தெரிஞ்சாக…
அது இதுன்னு என்னென்னமோ சொன்னீங்க…
அப்பவே எனக்கு சந்தேகம் ஆச்சு…
உங்களை நான் என்னவோன்னு நினைச்சேன்… ஆனா நீங்க…”
என்று ஓட்டத்தொடங்கவும்…
“டேய்…” என்ற ஈத்தன். “நான் சொன்னது எல்லாமே உண்மை தான் சக்தி…” என்றான் புன்னகையுடன்.
அதில், “தலைவரே… நீங்க தான் பேபி… நான் இல்லை” என்ற சக்தி, “போங்க… அவங்க என்னை விட அதிகமா உங்களை சைட் அடிக்கறாங்க… நான் உங்களை தவிர யாரையுமே சைட் அடிச்சது இல்லை…” என்று உண்மையிலேயே கண்களில் தண்ணி வைத்துக்கொண்டு அழவும்.
“டேய் சக்தி” என்று அவனை அணைத்துக்கொண்ட ஈத்தன்.
“குறிஞ்சி… ரொம்ப ஸ்வீட் டா…” என ஆரம்பிக்கவும்…
“இல்லை… நான் தான் ஸ்வீட்…” என்று அதற்கும் அடம்பிடித்தான் சக்தி. இரண்டாவது குழந்தை வந்ததும், முதல் குழந்தை பண்ணும் சேட்டைப்போல்.
அவனை சமாதானம் செய்வதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது ஈத்தனுக்கு.
சில பல முத்தங்களை லஞ்சமாக கொடுத்து கொஞ்சம் அவனை தேற்றியவன்… முதல்முறை அன்று சக்தியை தங்களுடன் இரவு உணவு உண்ண அழைத்துச்சென்று இருந்தான்.
உண்மையான அன்பு எங்கிருந்தாலும், அதன் மதிப்பை உணர்ந்து, போற்றுபவன் ஆயிற்றே ஈத்தன்.
_______________________________
இரவு எப்பொழுதும் போல் ஈஷா படுத்ததும் உறங்கிவிட்டு இருக்க…
ஈத்தன் அமர்ந்து லேப்டாப்பில் ஏதோ செய்துக்கொண்டு இருந்தான்…
குறிஞ்சியோ, அவன் படுத்து கைப்பிடிக்கும் தருணத்திற்காக கண்களை மூடியப்படியே, தூங்காமல் விழித்து காத்திருக்க…
ஏதோ ஒரு உள்ளுணர்வில் அவளை திரும்பி பார்த்த ஈத்தன்… அவளின் மூடிய விழிகளுக்குள் ஓடும் கண்ணின் மணிகளை பார்த்து…
“குறிஞ்சி மலர்” என்றழைத்தான்.
பட்டென்று தன் கண்களை திறந்தவள்… அவனை பார்க்கவும்…
“இந்த பக்கம் வந்து படுக்கறியா கேர்ள்” என்றான்… அவனுக்கு அருகில் அந்தப்பக்கம் இருந்த அதிக இடத்தை காட்டி…
திடீரென்று அவன் அப்படி கேட்பான் என்று கனவிலும் நினைத்துப்பார்த்திராத, குறிஞ்சியின் தொண்டை குழிக்குள், அவளின் உயிர் மேலும் கீழும் ஓடி விளையாட…
திறந்த கண்களை பழையப்படி மீண்டும் மூடிக்கொண்டாள்.
அவள் ஒன்றும், ஒன்றும் தெரியாத வயதில் இல்லையே, அவன் அழைப்பதற்கான காரணம் அறியாமல் போக.
அவளிடம் மட்டுமே அவன் கேட்க கூடிய விஷயம். அவளும் அவனிடம் மட்டுமே பெற கூடிய விஷயம்.
அமைதியாக தன் கண்களை மூடி படுத்திருந்தவள், சிறிது நேரத்தில் மீண்டும் தன் கண்களை திறந்து அவனை பார்த்தாள்…
ஈத்தன் இன்னும் அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்க…
“கொஞ்சம் நாள் கழிச்சு வரவா” என்றாள் சிறு குரலில் அவனிடம்.
அதற்கு, “ம்… வரலாம்… நான் வெயிட் பண்றேன்” என்ற ஈத்தன், அடக்கப்பட்ட புன்னகையுடன் அதனுடன், “கொஞ்ச நாள் தான்” என்பதையும் சேர்த்துக்கொள்ள…
அவன் இதழ்கள் பெருந்தன்மையாக புன்னகைத்தாலும்… அவன் நீல கண்களோ அப்பட்டமாக அவளை கேட்டப்படி பார்த்து வைத்து இருந்தது…
அதில், குறிஞ்சியின் துப்பட்டா நொடியில் அவள் முகத்தை முழுதாக மூடிக்கொண்டுவிட.
அவள் கையை பிடித்து தன் மடி மீது வைத்துக்கொண்டு, புன்னகையுடன் வேலையை தொடர்ந்தான் ஈத்தன்.
_______________________________
🔴 அடுத்த அத்தியாயம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻
கருத்துகள்
கருத்துரையிடுக