38.2
குறிஞ்சி டீயுடன் அறைக்குள் நுழைந்தப்பொழுது, அங்கு ஈத்தனுடன், ஈஷா மீண்டும் ஐக்கியமாகிவிட்டு இருக்க.
ஈத்தனுக்கு டீயினை தந்துவிட்டு, அவர்களை பார்த்தப்படியே அமைதியாக அமர்ந்துவிட்டாள் குறிஞ்சி.
ஈஷா, அவளின் ஒருவார கதைகளை ஈத்தனின் மீது சாய்ந்தமர்ந்து கூறியப்படியே இருக்க… அவளிடம் எப்பொழுதும் போல் பேசிக்கொண்டு இருந்த ஈத்தன்…
தப்பி தவறிக்கூட குறிஞ்சிப் பக்கம் தன் பார்வையை திருப்பவில்லை.
அப்பொழுது மட்டும் இல்லை. இதோ இரவு உணவை முடித்துக்கொண்டு வந்து, அவர்களுடன் குறிஞ்சி படுத்தப்பிறகும் அது தொடர்ந்தது.
இரவு உணவின் போதுக்கூட, ஈஷா தான் அவளை தங்களின் பேச்சில் இணைத்துக்கொண்டு இருந்தாள். அப்பொழுது கூட ஈத்தனின் பதில்கள் பட்டும் படாமலே தான் இருந்து இருந்தது.
‘ஏன் இப்படி’ என்று நினைத்த குறிஞ்சிக்கு, சட்டென்று நடுக்கடலில் அவளை தனியாக விட்டுவிட்ட உணர்வு.
‘கடவுளே! இதெல்லாம் என் மன பிரமையா தான் இருக்கனும். என்னை அவர் நிச்சயம் ஒதுக்கி வைக்க மாட்டார். அசதியில் தான் அப்படி இருக்கார். பாப்பா சின்ன பொண்ணுன்னு அவகிட்ட அதை காட்டி இருக்க மாட்டார்’, என்று மனதினுள் ஜபம் போல், திரும்ப திரும்ப அவள் அதையே கூறி தன்னை தேற்றிய வண்ணம், அமைதியாக ஈஷாவை அணைத்துக்கொண்டு படுத்திருக்க.
அவள் உறங்கிவிட்டாள் என்று நினைத்த ஈத்தன், மெல்ல சத்தம் வராதவாறு எழுந்து அறையை விட்டு வெளியேறி இருந்தான்.
அதை பார்த்த குறிஞ்சி, உடனே படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்துவிட்டு இருந்தாள்.
சட்டென்று அவள் மனம் பன்னிரண்டு வருடங்களுக்கு முந்தைய இரவிற்கு பாய்ந்துச்சென்று இருந்தது. அன்றும் இவ்வாறு தானே அவன் அவளை தவிர்த்துவிட்டு தனிமையை நாடினான்.
அப்படியானால், ‘இன்னும் அவர் அவரோட அம்மா, அப்பா விஷயத்தில் இருந்து வெளிவரலையா? இல்லை வேறெதுவும் பிரச்சனையா?’ என்று சந்தேகம் ஆனவள்.
மேலும் ஒரு மணி நேரம் கடந்தும் ஈத்தன் அறைக்குள் வராது போனதில், ஈஷாவின் போர்வையை சரிசெய்துவிட்டு, எழுந்து வெளியே வர…
அவர்களின் படுக்கையறைக்குள்ளே இருந்த வரவேற்பறையில் தான், ஈத்தன் அமர்ந்து இருந்தான்.
அதில் ஆச்சரியமான குறிஞ்சி, ‘இங்க தான் இருக்காரா இவர். பிரச்சனை எதுவும் இல்லை போல. நான் தான் தேவையில்லாமல் யோசிச்சுட்டேன்’ என்று நினைத்து,
“தூக்கம் வரலையா உங்களுக்கு” என்று அவனை நெருங்கி இருந்தாள்.
________________________________
அவளின் கொலுசு சத்தம் கேட்க ஆரம்பித்த பொழுதே சுதாரித்துவிட்டிருந்த ஈத்தன்.
“ஆமாம் கேர்ள். கொஞ்சம் ரெஸ்ட்லெஸா இருக்கு” என்றவன். “நீ தூங்கிட்டேன்னு நினைச்சேன்” என்றான்.
அதற்கு, “இல்லை தூங்கலை. தூக்கம் வரலை” என்றவள். “நான் இங்க உட்காரலாமா?” என்று ஈத்தனிடம் அனுமதி கேட்க.
“ஷ்… காட்…” என்ற ஈத்தன். “சாரி குறிஞ்சி. ஏதோ யோசனையில் இருந்திட்டேன். பிளீஸ் சிட்” என்றான், நகர்ந்து அவளுக்கு இடம் விட்டு.
இருவருக்குள்ளும் ஒருசில வினாடிகள் அமைதி.
“எதுவும் பிரச்சனையா” என்றாள் குறிஞ்சி மெல்ல.
“நோ குறிஞ்சி! அதெல்லாம் ஒன்னுமில்லையே” என்று உடனே மறுத்த ஈத்தன். “டீ குடிக்கறியா கேர்ள்” என்று அவளுக்கு டீ கலக்கும் சாக்கில், அவளின் கண்களை பார்ப்பதை தவிர்த்துக்கொள்ள.
அதை உணர்ந்த குறிஞ்சி, “என் மேல என்ன கோபம். சொன்னா சரிசெய்துப்பேனே” என்று கேட்டிருந்தாள் நேரடியாக.
அதில் ஒருகணம் அதிர்ந்துப்போனான் ஈத்தன்.
மறுகணமே, “ஹேய். உன் மேல எனக்கு என்ன கோபம் கேர்ள். அப்படி எல்லாம் எதுவும் இல்லைம்மா”, என்றவன். “சாரி, எனக்கு கொஞ்சம் தொடர்ந்து ஹெட் பெயினாவே இருக்கு. போகவே மாட்டுது” என்று அவனுக்கு தலைவலியை கொடுத்தவளிடமே அதை கூறியவன். அவளுக்கான டீயை கப்பில் ஊற்றி தர.
“அச்சோ. ஏன் நீங்க என்கிட்ட இதை முன்னாடியே சொல்லலை. டேப்லெட் எதுவும் எடுத்தீங்களா. சரியான தூக்கம் இல்லாதது தான் காரணமா இருக்கும். இனி சோகமான பாட்டெல்லாம் வேண்டாம் சொல்லிடுங்க. நீங்க உடம்பை வருத்திட்டு அதெல்லாம் ஒன்னும் செய்ய வேண்டாம். பாருங்க கண்ணெல்லாம் எப்படி மாறிடுச்சு” என்று வருந்தியவள்.
கையில் அவன் தந்திருந்த டீயை மொத்தமாக ஒரே வாயில் குடித்துவிட்டு.
“இருங்க நான் தலையை பிடிச்சு விடறேன். வலி குறைஞ்சா தான் நல்லா தூங்க முடியும்” என்று எழுந்து சோஃபாவிற்கு பின்புறம் சென்று. ஈத்தனுக்கு தலையை பிடித்துவிடவே அவள் ஆரம்பித்துவிட.
ஈத்தனுக்கு ஒருமாதிரியாகிவிட்டது.
அதிலும், அவளை அவன் தவிர்ப்பதை அவள் உணர்ந்தப்பிறகும், அவனையே அவள் சுற்றுவதில், இதயமெல்லாம் பிசைந்தது அவனுக்கு…
என்ன மாதிரியான அன்பு இது…
அவன் பிரமித்துப்போன அதேநேரம், அதற்காக அவள் செய்தவைகள் எல்லாம் கண்முன் வர, தன் கண்களை ஒருகணம் அழுந்த மூடி திறந்து குறிஞ்சியை பார்த்தான் ஈத்தன்…
அவளோ, லேசாக அழுத்தியதற்கே ரத்தம் வெளியே வந்துவிடும் அளவிற்கு, சிவந்துப்போன அவனின் நெற்றியை பார்த்து அதிர்ந்துப்போய், “நான் பண்றது வலிக்குதா உங்களுக்கு” என்றாள்.
“இல்லை கேர்ள். இதமா இருக்கு” என்றான் ஈத்தன்.
அதில் அவன் நெற்றியை மேலும் இதமாக குறிஞ்சியின் விரல்கள் வருடி… பிடித்துவிட…
சிறிது நேரம் அமைதியாக இருந்த ஈத்தனால் அதற்கு மேலும் அமைதிக்காக்க முடியவில்லை.
“போதும்…” என்று அவளின் கையை பற்றி தடுத்தவன்.
அப்படியே அவளின் கைப்பற்றி இழுத்துவந்து, பழையபடி அருகே அமர்த்தி இருந்தான்.
உடன், “உன் சித்தி வீட்டை நீ ரொம்ப மிஸ் பண்ணியிருப்ப இல்ல குறிஞ்சி. மார்னிங் அவங்களை போய் பார்த்துட்டு வரலாமா?” என்று அவளிடம் கேட்க.
குறிஞ்சிக்கு தூக்கிவாரிப் போட்டு இருந்தது.
“ஏ ஏன் திடீர்னு. இப்ப போயிட்டு” என்றாள், அதிர்ச்சியை மறைக்க முடியாது திக்கி திணறி.
அதற்கு, “திடீர்னு தான் தோணுச்சு கேர்ள்”, என்ற ஈத்தன். “அவங்களும் உன்னை தேடி இருப்பாங்க இல்ல. நாளைக்கு போயிட்டு பேசலாம்” என்றுக்கூற.
“இல்லை வேண்டாம்…”, என்று தடுத்த குறிஞ்சி.
“அவங்க யாரும் இப்போ பழைய இடத்தில் இல்லை. எங்க போனாங்க தெரியாது. ஒருமுறை வந்து பார்த்துட்டு போனேன். ஃபோன் நம்பர் கூட எதுவும் இல்லை. இனி அவங்களை பார்க்க முடியாது” என்றாள் படப்படவென்று இந்த பேச்சினை முடித்துவிடும் நோக்கில்.
அதற்கு ஈத்தனோ, “ராகவ் கிட்ட முன்னாடியே சொல்லி வச்சி இருந்தேன் குறிஞ்சி. அப்பவே உன் சித்தி வீட்டு அட்ரெஸ் தேடி எனக்கு அனுப்பிட்டான். வெயிட் அ செக்கெண்ட். அந்த மெஸேஜை எடுக்கறேன்” என்றவன், ஃபோனில் அதை தேட…
குறிஞ்சியின் முகத்தில் முத்து முத்தாக வியர்வை உற்பத்தியாக ஆரம்பித்து இருந்தது.
எச்சில் கூட்டி விழுங்கியவள்.
“வீட்டை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் போனதில் என்மேல அவங்க எல்லாம் ரொம்ப கோபமா இருப்பாங்க. நாம அவங்களை பார்க்க போக வேண்டாம்…” என்றாள் ஈத்தனின் கைப்பற்றி.
“இத்தனை வருஷத்துக்கு யார் கேர்ள், கோபத்தை இழுத்து வச்சிருப்பா. நான் பேசிக்கறேன் விடு” என்றவன். “இதோ உன் மாமாவோட புது நம்பர் கூட இருக்கு பாரு. மெஸேஜ் அனுப்பலாம்…” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள்ளே. ஈத்தன் கரத்தில் இருந்து அவன் ஃபோனை பறித்திருந்த குறிஞ்சி.
“நான் தான் வேண்டாம்னு சொல்றேன் இல்ல சார்”, என்றவள், அந்நேரத்திலும் “சொல்றேன் இல்லங்க” என்று சாரை திருத்திக்கொண்டு அவனை பார்த்தவள்.
“முடிஞ்சது எல்லாம் முடிஞ்சதாவே இருக்கட்டுமே”, என்று ஏறத்தாழ காலில் விழாத குறையாக கெஞ்சினாள்.
அதில், “ஏன். என்னாச்சு கேர்ள். வேறெதுவும் பிரச்சனையா. அவங்க உனக்கு எதுவும் தொந்தரவு கொடுத்தாங்களா. என்கிட்ட சொல்லு கேர்ள். நான் பார்க்கிறேன்” என்று ஈத்தன் அவளிடம் மிகவும் தன்மையாகவே கேட்டான். அவளுக்கு ஒரு வாய்ப்பை தந்து.
அதை அறியாத குறிஞ்சியோ, “ச்சே ச்சே. அப்படி எல்லாம் எதுவும் இல்லைங்க. எனக்கு போயிட்டு அவங்க எப்படி தொந்தரவு கொடுப்பாங்க. எனக்கு தான், நான் பண்ணதில் ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு” என்று சமாளித்தாள்.
அதில், ஈத்தனின் ரத்தம் சூடாக தொடங்க, “எதுக்கு குறிஞ்சி. அவங்க பார்த்து வச்ச அந்த ரொம்ப நல்ல மாப்பிள்ளையை, எனக்காக நீ வேண்டாம்னு விட்டுட்டு, வீட்டை விட்டு வெளியேறியதிலா…” என்று அவனே எடுத்து கொடுக்க.
“ஆமாங்க… அதே தான்”, என்று உடனே அதை பிடித்துக்கொண்டு, பலமாக தலையாட்டியவளின் தலை அப்படியே, அசைவற்று நின்று இருந்தது.
ஈத்தனின் அந்த பார்வை அவளை ஏதோ செய்ய.
“என்னாச்சு…”, என்றாள் திக்கி திணறி.
“ஒன்னுமில்லை குறிஞ்சி” என்ற ஈத்தன். “நீ உன் குடும்பம் பத்தி சொன்னதில் நிறைய மறந்துட்டேன். சாரி. திரும்ப சொல்றியா” என்றுக்கேட்க.
“ம் சொல்றேன் ங்க” என்ற குறிஞ்சி. “என்னையும், அம்மாவையும் என் அப்பா தனியா விட்டுட்டு போயிட்டாங்க. சித்தியும், சித்தப்பாவும் தான் எங்களுக்கு ஆதரவு த த தந்து…” என்றவள் ஈத்தனின் பார்வை நொடிக்கு நொடி மாறும் விதத்தில், சோஃபாவில் இருந்து எழுந்து நின்று இருந்தாள்.
“ம் மேல சொல்லு கேர்ள். ஏன் எழுந்துட்ட…” என்ற ஈத்தன்,
“உனக்கும், உன் அம்மாவுக்கும் ஆதரவு தந்து…” என்று மீண்டும் எடுத்து கொடுக்க.
குறிஞ்சி ஒரு வார்த்தை பேசவில்லை.
ஈத்தன் தன் குரலை கொஞ்சம் கூட உயர்த்தவில்லை, கண்களால் கூட முறைக்கவில்லை, எப்பொழுதும் போல் தான் இருந்தான். ஆனால் அவன் அடித்துவிட்டது போல் நடுங்க ஆரம்பித்துவிட்டு இருந்தாள் குறிஞ்சி.
அதைப்பார்த்த ஈத்தன், “காட்…” என்று தன் முன் தலைமுடியை அழுந்த கோதிவிட்டான்.
இது தான் நடக்க கூடாது என்று நினைத்து இருந்தான்.
முடிந்தளவு தன்னை கட்டுப்படுத்தவும் பார்த்தான்.
ஆனால், அவனால் ஒளிவு மறைவுடன் ஒரு உறவை, குறிஞ்சிப்போல் இயல்பாக எடுத்துச்செல்ல முடியவில்லை.
🔴அடுத்த அத்தியாயம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻
கருத்துகள்
கருத்துரையிடுக