38.4

அன்று, 


ஈஷா பிறந்து ஆறுமாதம் கடந்த நிலையில், பேசி வைத்தது போலவே, ஈத்தனின் வீட்டில் இருந்து குறிஞ்சியை பிரபுவும், ஐஸ்வர்யாவும் வந்து அழைத்து சென்றுவிட்டு இருந்தனர்.


குறிஞ்சி, ஈத்தன் வீட்டிற்கு வருவதற்கு முன்பே, பிரபுவிடம் கூறிவிட்டு தான் வந்து இருந்தாள்.


“அவர் கொடுத்த பணம் எதுவும் எனக்கு வேண்டாம் மாமா. இவ்வளவு தூரம் நீங்களும், அக்காவும் எனக்காக வந்ததே பெருசு. நீங்களே அந்த பணத்தை வச்சிக்கோங்க”, என்று எப்படியும் அவன் அந்த பணத்தை தரமாட்டான் என்பது தெரிந்து, அவளே கூறுவது போல் கூறிவிட்டவள்.


“அதுக்கு உபகாரமா, இந்த விஷயத்தை யார்கிட்டேயும் முக்கியமா அம்மாக்கும், சித்திக்கும் தெரியாமல் பார்த்துக்கோங்க. நான் ஈத்தன் சாருக்கு குழந்தையை பெத்து கொடுத்துட்டு வந்ததும், அம்மா கூட வேற ஊருக்கு போயிடறேன். ப்ளீஸ்” என்று இருந்தாள்.


அனைத்திற்கும் பிரபு, பலமாக தலையை ஆட்டி சம்மதம் தெரிவித்து, அவளை ஈத்தனுடன் விட்டுவிட்டு வந்து இருந்தான்.


அவனெல்லாம், ஆயிரம் ரூபாய் கொடுத்து இருந்தாலே, அவள் கூறியதை எல்லாம் செய்து தந்து இருப்பான். இங்கோ இரண்டு கோடி ரூபாய். அவன் கனவிலும் கூட காணாத பணம். ‘இனி ராஜா தான் நான்’ என்று அவன் மிதக்க…


ஐஸ்வர்யாவிற்கு தான் ஏனோ ஈத்தனின் கெஸ்ட் ஹவுஸிற்கு சென்று வந்ததில் இருந்தே பயமாக இருந்தது. 1 கோடியை தந்துவிட்டு, ஆளுக்கு 5 கோடி கொடுத்தது போல் அல்லவா ஈத்தன் கையெழுத்து வாங்கிக்கொண்டு இருந்தான். அதுவும் ரவுடி எல்லாம் வைத்து.


நாளை வந்து ‘என் பணத்தை கொடு’ என்று கேட்டால் என்ன செய்வது‌.


கண்முன் சிறையில் வெள்ளை புடவையில், அலுமினிய தட்டுடன், அவள் இருப்பது போல் காட்சிகள் கண்முன் வந்து வந்து செல்ல…


பிரபுவிடம் அவள் விடாமல் புலம்பிக்கொண்டே இருந்தாள்.


அதில் பிரபுவிற்குள்ளும் லேசாக பயம் துளிர்க்க ஆரம்பிக்க. 


குறிஞ்சி திரும்பி வந்தப்பொழுது, அனைத்தையும் அவர்களுக்கு சாதகமாக மாற்றி அமைத்துவிட்டு இருந்தான் பிரபு.


ஏற்கனவே ஈத்தனையும், ஈஷாவையும் பிரிந்து வந்த வேதனையில், மனமெல்லாம் ரணமாகியிருந்த குறிஞ்சி. மருத்துவமனையில் இருந்தே சாந்தினியுடன் கிளம்பிவிடும் எண்ணத்தில் இருந்தாள். 


அவள் கையில், அவள் வாங்கிய கடைசி மாச சம்பளம் முழுதாக இருந்தது. அது தீருவதற்குள்ளே நிச்சயம் வேறு வேலைத்தேடிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது. திறமை உள்ளவள், உழைக்க தயங்காதவள் என்னும் பொழுது என்ன பிரச்சினை அவளுக்கு.


ஈத்தன், ஈஷா பிரிவு மட்டும் தான் அவளுக்கிருந்த ஒரே வேதனை. அதில் தான், நொந்துப்போன அவளின் வேரறுந்த தேகத்தையும், கனத்த மார்பு தரும் வலியையும், சீக்கிரம் ஓடிச்சென்று அன்னையின் மடியில் தஞ்சம் அடைந்து அவள் குறைக்கப்பார்க்க… 


பிரபுவும், ஐஸ்வர்யாவும் அங்கு இடையில் வேக தடையை வைத்து, அவளை மொத்தமாக தடம் புரள செய்துவிட்டு இருந்தனர்.


ஐஸ்வர்யாவின் பயத்தை குறிஞ்சியிடம் கூறிய பிரபு, “ஒன்னு நீ எங்க கூடவே இரு குறிஞ்சி. இல்லை நாளைக்கு எதுவும் பிரச்சனையாகி ஈத்தன் எங்க மேல எதுவும் கேஸ் போட்டா, அவருக்கு கொடுக்க மீதி எட்டு கோடியை தந்துட்டு போ. உனக்கு உதவி செய்துட்டு நாங்க எங்க நிம்மதியை தொலைச்சுட்டு இருக்கோம். ஒழுங்கா எங்க கூட எப்பவும் போல இரு. தனியா எல்லாம் போக வேண்டாம். இல்லைன்னா நீ சொன்ன பொய்யெல்லாம் ஈத்தன் கிட்ட இப்பவே சொல்லிடுவோம்” என்று கிட்டத்தட்ட அவளை அவன் மிரட்ட.


அதிர்ந்துவிட்டு இருந்தாள் குறிஞ்சி. 


இருந்தும், ‘அய்யோ! மீண்டும் அந்த பாம்பு புற்றில் சென்று வாழ வேண்டுமா! முடியவே முடியாது!’, என்று அவள் என்ன ஆனாலும் பரவாயில்லை என்று மறுத்தாள். அவளுக்கு தெரியும், பிரபு அப்படி எல்லாம் பணம் போனால் போகிறது என்று, ஈத்தனிடம் சென்று பேசுபவன் இல்லை என்று.


குறிஞ்சி மசியவில்லை என்றதும், மிரட்டலை கைவிட்ட பிரபு, அவளிடம் கெஞ்ச ஆரம்பித்து இருந்தான்.


“உன்னையும், உன் அம்மாவையும் நாங்க யாரும், ஒருவார்த்தை கூட சொல்ல மாட்டோம் குறிஞ்சி. நீ ஒரு ரூபாய் கூட பணம் தர தேவையில்லை‌. வேலை எதுவும் செய்ய வேண்டாம். நீங்க இரண்டு பேரும் எங்க கூட நிம்மதியா வாழலாம். எல்லாமே என் பொறுப்பு. தயவுசெஞ்சு எங்க கூடவே இரு” என்றான்‌.


அதற்கும் குறிஞ்சி மறுப்பு தெரிவிக்க.


கோபம் அடைந்த பிரபு, “அப்ப சரி. முதல்ல உன் அம்மாகிட்ட போய், நீ தாலியில்லாமல் பணத்துக்காக, முறை தவறி குழந்தை பெத்துக்கொடுத்துட்டு வந்ததை சொல்லிட்டு வரேன்‌. 


அடுத்து நேரா ஈத்தன் வீட்டுக்கு போய், உன் அம்மாவை பத்தியும், உன்னை பத்தியும் அவர் கிட்ட சொல்றேன். உன்னை ஏதோ பெருசா நினைச்சுட்டு இருக்கார். உன் அம்மா பத்தி தெரிஞ்சாலே போதும்…” என்றவன். சாந்தினி இருந்த மருத்துவமனைக்குள் நுழைய போக.


குறிஞ்சிக்கு தலையெல்லாம் சுற்ற ஆரம்பித்து இருந்தது.


ஐஸ்வர்யாவிடம், “வேண்டாம் க்கா. என்னை மாமாகிட்ட விட்டுட சொல்லுங்க. போயிடறேன். என்னையும், அம்மாவையும் உங்களுக்கு பிடிக்காது தானே. எங்களை எதுக்கு நீங்க வீட்ல வச்சிக்கனும்” என்றாள் கண்கள் எல்லாம் கலங்க.


ஐஸ்வர்யாவோ, “அப்படியெல்லாம் இல்லை குறிஞ்சி. உங்களை எனக்கு இப்ப பிடிக்கும். மாமாவுக்கும் தான்‌ பிடிக்கும். பயத்தில் தான் அவர் உன்னை மிரட்டுரார். வீட்டில் கூட அம்மாக்கிட்ட நீதான் ஃபாரின் போயிட்டு வேலை செய்து பணம் தரேன்னு சொல்லி வச்சி இருக்கோம். அவங்களுக்கும் உன் மேல இப்ப கோபம் எதுவும் இல்லை. பெரியம்மா மேலையும் தப்பு கிடையாது, அப்பா மேல தான் தப்பு எல்லாம்னு நாங்க புரிஞ்சிக்கிட்டோம். வா நாம ஒன்னா வாழலாம்” என்றாள். நடிப்பு பாதியும், உண்மை மீதியுமாக. பிரபு சொல்லி கொடுத்தது போலவே.


அதில், குறிஞ்சிக்கு அவளே அவளுக்கு குழிவெட்டி, உள்ளே சென்று படுத்துக்கொள்ள போவது போல் இருந்தது.


கொஞ்சம் கூட நம்பிக்கையே வரவில்லை.


இருந்தும், என்ன செய்து இதில் இருந்து மீள்வது என்றும் தெரியவில்லை.


ஒருபக்கம் சாந்தினி, விஷயம் அறிந்தால் செத்தே விடுவார். அதற்காகவா இவ்வளவு பாடும் அவள் பட்டது.


மறுப்பக்கம் ஈத்தன். நம்பியவள் கழுத்தை அறுத்துவிட்டது போல் அல்லவா ஆகிவிடும். நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை அவளால். 


அவளுக்கு தெரியும், இவர்கள் எண்ணுவது போல் ஒன்றும் ஈத்தன் அவளை தவறாக நினைக்க மாட்டான் என்று. ஆனால் மாறாக, அவனால் அவள் வாழ்க்கை வீணாகிவிட்டதாக எண்ணி, அவன் உடைந்து அல்லவா போய் விடுவான். ஏற்கனவே நம்பிய பெற்றோர் காட்டிய முகத்தில் இருந்தே மீளாமல் இருப்பவன். இதை அறிய நேர்ந்தால், உலகில் யாரையுமே நம்ப மாட்டானே. 


அதிலும், இப்பொழுது அங்கு அவன் மட்டும் இல்லையே. அவளின் உதிரமும் அல்லவா இருக்கிறது. அவன் நிம்மதி பறிபோனால், குழந்தையின் நிம்மதியும் அல்லவா பாதிக்கப்படும்.


அவளை ஈன்றவள் ஒருபக்கம், அவள் நெஞ்சில் சுமப்பவன் ஒருபக்கம், அவள் ஈன்றவள் ஒருபக்கம் என்று அவளின் உலகமான மூவரின் நிம்மதியும், மூன்று திசையில், ஊசி முனையில் நின்று சதிராட…


யோசிக்க கூட அவளுக்கு அவகாசம் இல்லாமல் போனது.


தெரிந்தே மீண்டும் ஓநாய்களின் கூடத்திற்குள், சாந்தினியுடன் நுழைந்து இருந்தாள்.


ஆனால் அவள் எதிர்பாராத விதமாக, நாட்கள் அங்கு நன்றாகவே சென்றது.


வீடு மொத்தமும் புதுப்பிக்கப்பட்டு, நவீன பொருட்களுடன் காட்சி தர, வீட்டு வேலைக்கு, சமையலுக்கு எல்லாம் தனியாக ஆள் போட்டு இருந்தனர்.


அதிலும், எப்பொழுதும் அவளையும், சாந்தினியையும் தேளாய் கொட்டும் லோகேஸ்வரி. அப்படியே பெட்டி பாம்பாய் அடங்கிவிட்டு இருந்தார்.


முதல் தினம் இவளை பார்த்ததும், “வா வா” என்று வரவேற்றவர். “கனடா குளிர்ல நல்லா ஆப்பிள் பழம் மாதிரி சிவந்து ஆளே மாறிட்ட போ. நல்ல தரமான சாப்பாடா, எடைக்கூட நல்லா போட்டு இருக்க”, என்று அவளின் உயர்தர உடையில் ஆரம்பித்து, அனைத்தையும் அக்குவேறு ஆணிவேராக ஆராய்ந்த லோகேஸ்வரி. 


“வெளிநாட்டில் நல்ல வேலை கிடைச்சதும் எங்களை எல்லாம் மறந்துடுவ நினைச்சேன். ஆனா பரவாயில்லை, எங்களையெல்லாம் மனசில் வச்சி நீ பணம் அனுப்பியிருக்க” என்று முந்தானையில் கண்களை துடைத்துக்கொண்டவர். சாந்தினியிடம், “என்னை மன்னிச்சுடுக்கா. இரண்டாம் தாரமா நம்ம வீட்ல அனுப்பின கோபத்தையும், அந்த ஆள் பண்ணதில் வந்த கோபத்தையும், யார் மேல காட்றதுன்னு தெரியாம உன்மேல இத்தனை வருஷமும் காட்டிட்டேன்” என்று உண்மையிலேயே வருந்தி மன்னிப்பு கேட்டுவிட.


சாந்தினிக்கு அவரின் ஜென்மமே விடுதலை பெற்ற உணர்வு.


கடவுளே! எப்பேர்ப்பட்ட பழியினை அவர் வருடக்கணக்காய் சுமந்துக்கொண்டு, புழுவை போல் கூனியப்படியே வாழ்ந்து வந்தார்.


முதல் முறையாக குறிஞ்சி, சாந்தினியின் முகத்தில் நிறைவை பார்த்து இருந்தாள்.


பணம் பாதாளம் வரை பாயும் என்று பெரியவர்கள் தெரியாமலா சொல்லிவிட்டு சென்றார்கள். அவளும், சாந்தினியும் பல வருடங்களாக போராடியும் நடக்காதது, ஈத்தனின் பணம் வந்ததும், சொடுக்கு போடும் நேரத்திற்குள் நடந்துவிட்டு இருந்தது.


அதற்கே, அவள் தன் ஜென்மம் முழுவதையும், அடிமை சாசனம் எழுதி தர தயாராகிவிட்டு இருந்தாள்.


அதிலும் சாந்தினி இப்பொழுது வாக்கரின் உதவியுடன், பழையப்படி நன்றாக நடக்கவும், அவரின் பணிகளை எல்லாம் அவரே பார்த்தும் கொள்ளும் அளவிற்கும் வந்துவிட்டு இருந்தது. குறிஞ்சிக்கு அவ்வளவு ஆறுதலாக இருந்தது.


அதற்கெல்லாம் காரணம் ஆன ஈத்தனை நெஞ்சில் நீங்காமல் சுமந்தப்படியே, பழையப்படி அவளின் வாழ்க்கையை அவ்வீட்டிலேயே வாழ ஆரம்பித்தவள், எப்படியோ ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை சுரந்து நிரம்பி ததும்பும் தாய்பாலினை நிறுத்திவிட்டு, அருகிலேயே இருந்த அவள் படித்த நர்ஸிங் கல்லூரியிலேயே பணியில் சேர்ந்துவிட்டு இருந்தாள்.


சாந்தினி தான், தனிமையில் குறிஞ்சியை திருமணம் செய்துக்கொள்ள கூறி வற்புறுத்திக்கொண்டே இருப்பார். அதிலும் மகள் வேறு சம்பாதித்த பணத்தை எல்லாம் குடும்பத்திற்கு என்று தூக்கி கொடுத்து விட்டதாக நினைத்தவர், தன்னைப்போலவே பிழைக்க தெரியாதவளாக இருக்கின்றாளே என்று வேறு அவருக்கு நிறைய வருத்தம்.


அதிலும் தாய்மை தந்த செழிப்பில் மிளிர்ந்தவளை, பருவத்தில் மிளிர்கிறாள் என்று தவறாக நினைத்து, எப்படியாவது பத்திரமாக அவளை கரை சேர்த்துவிட வேண்டும் என்ற சராசரி அன்னையின் தவிப்பு அதிகரிக்க. “பூம்மா அம்மா சொன்னது என்ன ஆச்சு. கல்யாணத்துக்கு அந்த ஃபோன்ல பதிய சொன்னேனே பதிஞ்சயா மா. எனக்கு அதெல்லாம் தெரியாதனால தானே உன்னை பண்ண சொல்றேன்” என்று தினமும் நச்சரித்தார்.


அதில் பொறுத்தது போதும் என்று ஒருநாள் குறிஞ்சி, “இப்ப என்னம்மா கல்யாணத்துக்கு அவசரம். நான் கொஞ்சம் வருஷமாவது, உங்கக்கூட நிம்மதியா இருந்துக்கறேனே. இப்ப எல்லாம் பொண்ணுங்க 28 வயசுக்கு அப்புறம் தான் கல்யாணம் செய்துக்கறாங்க. முதல்ல வேலையில் நல்லா எக்ஸ்பீரியன்ஸ் எடுத்து ஸ்டாங் ஆகனும். அதுக்கு அப்புறம் தான் கல்யாணம் எல்லாம். இப்போதைக்கு எனக்கு எந்த குடும்ப பாரமும் வேண்டாம். நீங்க தயவு செஞ்சு எதையும் யோசிக்காமல் நிம்மதியா இருங்க. இல்லை உடம்புக்கு திரும்ப எதுவும் வந்திடும்” என்று சாந்தினியின் வாயை மொத்தமாக அடைத்துவிட்டு இருந்தாள்.


சாந்தினியும், ‘சரி திருமணம் செய்து என்ன பெரிதாக நாம் கண்டோம். மகளாவது அவள் மனம் போல் கொஞ்சம் காலம் சந்தோஷமாக இருக்கட்டும்’ என்று அமைதியாகிவிட.


குறிஞ்சிக்கு ‘அப்பாடா’ என்று நிம்மதியாகிப்போனது.


தினமும் சாந்தினி இரவு உறங்கியப்பிறகு. ஈத்தனுடனும், அவளின் பூக்குட்டியுடனும் மானசீகமாக ஒரு வாழ்க்கையை திருப்தியாக வாழ்ந்து, தன்னை தானே சாந்திப்படுத்திக்கொள்ள பழகிக்கொண்டு இருந்தாள்.

________________________________


முதல் ஒருவருடம் எவ்வித தொல்லையும் இல்லாமல் சீராக ஓடி மறைந்திருக்க…


குறிஞ்சியை அவள் சொன்ன பொய்கள் மொத்தமாக ஓடிவந்து ஓரே இரவில் தாக்கி, வாழ்க்கையின் நுனியில் அவளை அமர வைத்து இருந்தது.


நல்ல பொய்யோ, கெட்ட பொய்யோ, பொய் பொய் தானே…


தீ என்றாலே சுட தானே செய்யும்…


ஈத்தன், இப்பொழுது சில மாதங்களுக்கு முன், ஈஷா விஷயத்தில் ஒரே இரவில் அனைத்தையும் அனுபவித்தது போலவே… அன்று குறிஞ்சி பலவருடங்களுக்கு முன்பாகவே மொத்தமாக அனுபவித்து முடித்துவிட்டு இருந்தாள்…

________________________________


சாந்தினி உறங்கிய பிறகு, அவளை ‘வெளியே வா’ என்று அழைத்துச்சென்றிருந்த ஐஸ்வர்யா. “மாமா உன்கிட்ட பேசனும் சொல்றாங்க. பேசு குறிஞ்சி”, என்று நின்றுக்கொள்ள.


குறிஞ்சிக்கு இருவரின் முகமுமே, ஏதோ தனக்கு ஆபத்து வரப்போகிறது என்பதை உணர்த்துவது போல் இருந்தது.


அதற்கு ஏற்ற போலவே, பிரபு பேச ஆரம்பித்து இருந்தான்.


அவனுக்கு தெரிந்த ஒரு தம்பதி, நீண்ட காலமாக குழந்தை வரம் வேண்டி காத்திருப்பதாக கூறியவன். ஈத்தனுக்கு அவள் உதவியது போலவே, அவர்களுக்கும் அவளை குழந்தைப்பெற்று தந்து உதவக்கூறி கேட்க.


நெஞ்சை பிடித்துக்கொண்டு இருந்தாள் குறிஞ்சி.


“அம்மாக்காக உதவினதால் தான் ஈத்தன் சாருக்கு அந்த உதவியை நான் பண்ணேன். என்னால் வேற யாருக்கும் அதை பண்ண முடியாது. அவங்க தம்பதிதானே வேற வாடகை தாய் அவங்களுக்கு கிடைப்பாங்க” என்று குறிஞ்சி ஒரேயடியாக மறுத்துவிட்டாள்.


ஈத்தன் கட்டிய தாலியை, அவனுடன் சேர்த்து நெஞ்சில் சுமப்பவளால், அவனின் உயிர் அணுக்களை தாங்கிய இடத்தில், எவ்வாறு வேறொருவரின் உயிர் அணுக்களை சுமக்க முடியும்.


நினைக்கும் பொழுதே வயிற்றை பிரட்டிக்கொண்டு வந்து இருந்தது குறிஞ்சிக்கு. ஓடிச்சென்று வயிற்றில் இருந்ததை எல்லாம் மொத்தமாக வாந்தியாக எடுத்தும் அவளுக்கு அருவருப்பு குறையவில்லை. உடல் முழுவதும் கம்பளி பூச்சி ஊர்வது போல் இருந்தது.


அக்கணம் தான் ஈத்தன் மீது அவளுக்கு ஆரம்பத்தில் இருந்தே எந்தமாதிரியான உணர்வுகள் இருந்து இருக்கிறது என்று புரிந்தது. பின்னே ஒருமுறை கூட அவள் ஈத்தனுக்கு குழந்தைப்பெற்று கொடுக்கும் முன் இப்படியெல்லாம் யோசித்தது இல்லையே.


முகத்தை துடைத்துக்கொண்டு அவள் வெளியே வந்தப்பிறகு…


பிரபு, “கொஞ்சம் நான் சொன்னதை யோசிச்சு பாரு குறிஞ்சி. எப்படியும் நீ யாரையும் கல்யாணம் செய்துக்க போறது இல்லை. அதுக்கு யாருக்காவது ஒருத்தருக்கு உபயோகமாகவாச்சும் நீ இருக்கலாம் இல்லை. உனக்கு எவ்ளோ புண்ணியம் சேரும்” என்று அவளை கரைக்க பார்க்க.


குறிஞ்சி, ‘முடியவே முடியாது’ என்றுவிட்டு, அறைக்குள் சென்றுவிட்டு இருந்தாள்.


மீண்டும் மறுநாள்‌, முன்தினம் போலவே அவளை ஐஸ்வர்யா வந்து அழைத்துச்செல்ல… 


பிரபு, “நீ சும்மா ஒன்னும் பெத்து கொடுக்க வேண்டாம் குறிஞ்சி. முப்பது லட்சம் உனக்கு கொடுக்கிறேன்னு சொல்றாங்க. வாங்கிட்டு பெத்து கொடு. உன்னோட ஃபோட்டோ பார்த்தே அவங்களுக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. அதுமட்டுமில்லாமல் உன்னை ஹாஸ்பிடல்லயும் பார்த்து, உன்னோட குணத்தில் மயங்கி. நீ பெத்து கொடுத்தா, குழந்தை நல்லா இருக்கும்னு நினைக்கிறாங்க” என்று மெல்ல அவளுக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பிக்கவும்…


குறிஞ்சிக்கு சிக்கலின் வீரியம் புரிய ஆரம்பித்து இருந்தது. இருந்தும் ஒன்றும் தெரியாததுப்போலவே, “என்ன சொன்னாலும் என்னால் யாருக்கும் குழந்தை பெத்துக்கொடுக்க முடியாது”, என்று அவள் உறுதியாக தன் மறுப்பினை தெரிவிக்க.


அதிசயமாக அன்று ஐஸ்வர்யா, “நமக்கு எதுக்கு மாமூ திரும்பவும் இந்த வேண்டாத வேலை. அமைதியா இருக்கிறதை வச்சிட்டு வாழலாம். அவ என்ன குழந்தை பெத்து கொடுக்கிற மெஷினா. ஒவ்வொருத்தருக்கும் பாவம் பார்த்து பெத்துக்கொடுத்துட்டு இருக்க. இன்னியோட இந்த பேச்சை விடுங்க.” என்று தொல்லை தாங்காமல் கூறி, அவளும் மறுப்பு தெரிவிக்க.


பிரபுவிற்கு ஐஸ்வர்யாவை இழுத்து வைத்து கன்னம் கன்னமாக அறைய தோன்றியது.


இருந்தும், “அதுக்கு இல்ல பேபிமா” என்று அவளை அறைக்குள் அழைத்துச்சென்று அன்று சமாளித்தவன். அவளிடம் என்ன கூறினானோ தெரியாது. 


மறுநாள் முதல், அவளும் பிரபுவுடன் சேர்ந்து குறிஞ்சியை குழந்தை பெற்றுக்கொடுக்க கூறி கேட்க தொடங்கி இருந்தாள்.


அதில், மனம் வெறுத்துப்போன குறிஞ்சி, இனி இந்த வீட்டில் இருக்க முடியாது என்று முடிவுசெய்து, சாந்தினியுடன் வெளியேறிவிடுவதாக கூறிவிட…


மீண்டும் அவள் கூறிய பொய்கள் அனைத்தும், அவளுக்கு எதிரான ஆயுதமாக தயாராகி வந்து, வழிமறித்தது.


“இங்க பாரு குறிஞ்சி. இந்த வீட்டை விட்டு உன்னால் எங்கேயும் போக முடியாது. ஒழுங்கா நான் சொல்றதை கேட்டு அடங்கி நடந்துக்கோ” என்ற பிரபு. “எம்.எல்.ஏ ஆசைத்தம்பிய தெரியுமா உனக்கு” என்று கேட்க.


“தெரியாது” என்று தலையாட்டினாள்.


“அவருக்கு தான் நீ குழந்தை பெத்து தர போறதா பேசி முடிச்சு இருக்கேன். அவருக்கு ஏற்கனவே ஒரு பொண்ணு இருக்கு. ஆனா ஆண் வாரிசு வேண்டும்னு நினைக்கிறார். அவரோட மனைவிக்கு நாப்பது வயசுக்கு மேல ஆனாதால் குழந்தை தங்கலை. அதான் காதோட காதா உன்னை வச்சி வேலையை முடிக்க பிளான். இப்ப இருக்க டெக்னாலஜி மூலம் ஆண் குழந்தை, பெண் குழந்தை எது வேண்டும்னாலும் செலக்ட் பண்ணி, செயற்கை கருவுறுதல் மூலம் பெத்துக்கலாமாமே. ஏற்கனவே அறுபது லட்சம் பேசி முடிச்சு கைநீட்டி பணத்தை வாங்கிட்டேன். ஒழுங்கா பெத்து கொடுத்துடு. பத்து மாச வேலை தான்” என்றான், ருசி கண்ட பூனையாக, பணத்தின் அதீத சுவையில் மயங்கி.


குறிஞ்சி, “என்னோட உயிரே போனாலும் நான் இதுக்கு சம்மதிக்க மாட்டேன். நீங்க என்ன வேண்டும்னாலும் பண்ணிக்கோங்க” என்று முரடுப்பிடிக்க.


“சரி நல்லது” என்ற பிரபு. “நாளைக்கு காலை வரை தான் உனக்கு டைம். அதுக்குள்ளே சம்மதம் சொல்லிடு. இல்லைன்னா உன் அம்மாகிட்ட எல்லாத்தையும் சொல்லிடுவேன்” என்று அவளை மிரட்டியவன்…


“அடுத்து உன்னோட ஈத்தன் சார் சட்டத்துக்கு எதிரா, உன்னை வச்சி குழந்தை பெத்துக்கிட்டதை மீடியாவை மொத்தமா கூட்டி சொல்லிடுவேன். பார்த்துக்கோ” என்று இருந்தான்…


குறிஞ்சியின் மறுப்பு மூலமே, அவளின் நாடியை சரியாக பிடித்து பிரபு அடித்துவிட…


செத்துவிட்டு இருந்தாள் குறிஞ்சி.


இரவு முழுவதும், தன் வாழ்க்கை அவ்வளவு தான், என்று அவள் அழுதே கழிக்க…


கடவுள் அன்று இரவே, அவளின் ஒரு பாரத்தை இறக்கி வைத்துவிட்டு இருந்தார்.


சாந்தினியின் உயிர் எதிர்பாராத விதமாக தூக்கத்திலேயே பிரிந்துவிட்டு இருந்தது. மகளுக்கு இனியாவது பாரமாக இருக்க வேண்டாம் என்று ஒரேயடியாக சென்றுவிட்டு இருந்தார்.


அவளை ‘பூம்மா, பூக்குட்டி…’ என்றெல்லாம் உலகில் போற்றி கொஞ்சிய ஒரே உறவும்… உலகில் இல்லாமல் போயிவிட்டதில்… மொத்தமாக இடிந்துப்போய்விட்டு இருந்தாள் குறிஞ்சி.


ஆனால், அவரின் சாம்பல் கூட சரியாக காற்றில் கலந்து இருக்காது.


அதற்குள், மீண்டும் அவளை போட்டு பிரபு நெருக்க… அப்பொழுதும் அவளால் அவன் கேட்டதற்கு சம்மதிக்க முடியவில்லை.


ஆனால் அவனிடம் ‘சரியென்று’ சம்மதம் கூறியவள்…


ஃபீனிக்ஸ் பறவையாக தன்னை தானே செதுக்கிக்கொண்டு, அங்கிருந்து ஒரேயடியாக பறந்துவிட்டு இருந்தாள்.


நரியிடம், நல்லவன் வேஷம் போட்டால் செல்லுமா என்ன? 


நரி வேஷம் போடுவது தானே சரியாக இருக்கும்‌. போட்டு தப்பித்துவிட்டாள்.


அதுவும் அழகாக முத்து முத்தாக ஒரு காகிதத்தில், “நான் யாருக்காக வாழ்ந்தேனோ. அவரே இப்பொழுது இவ்வுலகில் இல்லை. இனி எனக்கு இவ்வுலகில் உயிர் வாழ கொஞ்சமும் விருப்பம் இல்லை. இனி யார் எப்படி போனாலும் எனக்கு கவலை இல்லை. நான் போகிறேன். மொத்தமாக. போதும் இந்த வாழ்க்கை எனக்கு. இனி யாருடனும் போராட என் மனதிலும், உடலிலும் தெம்பில்லை” என்று எழுதியிருந்தவள். உடன் “என் அம்மாவிற்கு இறுதி நாட்களை இனிமையாக தந்ததற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. அதற்கு பரிசாக என்னிடம் இருப்பதை எல்லாம், இதில் வைத்திருக்கிறேன். எடுத்துக்கொள்ளுங்கள்” என்று அவளிடம் இருந்த மீதி பணம், சில்லறை உட்பட அனைத்தையும் வைத்துவிட்டு, தன்னுடைய பொருட்கள் எதையும் எடுக்காமல், யாருக்கும் சந்தேகம் வராதவாறு, ஈத்தனின் வீட்டில் இருந்து எடுத்து வந்திருந்த பொருட்களுடன் கிளம்பிவிட்டு இருந்தாள்…


அவளே இல்லை என்னும் போது. நிச்சயம் பிரபு ஈத்தனை தொட துணிய மாட்டான் என்று ஒரு நம்பிக்கை அவளுக்கு‌. மீறி தொட்டாலும் ஈத்தன் அதை சமாளிப்பான். இல்லை என்றாலும் ஈத்தனிடம் தான் சட்ட ரீதியான கோப்புகள் அனைத்தும் சரியாக இருக்கிறதே. அது அவனை காப்பாற்றும். மீறினாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று, புதிய வாழ்க்கையை கொடைக்கானலில் தொடங்கிவிட்டு இருந்தாள்.

________________________________

🔴அடுத்த அத்தியாயம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻 

https://swathilakshmitamilnovels.blogspot.com/2025/07/385.html

கருத்துகள்

கருத்துரையிடுக

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates

Popular posts

New Ongoing 💌 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🎼🪻😘💌

Completed- உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே💘- (Completed story available here for free Read)

🔴My Complete Novel List: Ongoing and Finished

Completed-💃🕺அழகான இராட்சசியே அடிக்கரும்பாய் இனிக்கிறியே - Romantic Entertainment

Completed-மகிழ்மதியின் அரசன்- Royal Family Based Romantic love story