39.2
நாளைய அவனின் பிறந்தநாளுக்கு என்று வந்து குவிந்திருந்த, ஒவ்வொரு ரோஜாவினையும் வருடிக்கொடுத்துக்கொண்டே வந்த ஈத்தனின் கரம், சட்டென்று ஒரு இடத்தில் நின்று இருந்தது!
அத்தனை ஆயிரம் ரோஜாக்களுக்கு மத்தியிலும், எப்பொழுதும் போல் தங்க நிறத்தில் Forever Rose என்று அச்சடிக்கப்பட்டிருந்த,
அந்த கருப்பு நிற இதய வடிவிலான வெல்வெட் பெட்டி மட்டும் தனித்து நின்று, அவனின் கவனத்தில் விழுந்து அவனை கவர்ந்திருக்க…
“ஹேய்! உன்னை கண்டுபிடிச்சிட்டேன்.” என்று, அதனை கண்டுபிடித்த மகிழ்வில், கையில் எடுத்து திறந்துப்பார்த்தான் ஈத்தன்.
உள்ளே உண்மையான இதயம் போலவே, அவ்வளவு அழகாக பளிச்சென்று அமர்ந்திருந்தது சிகப்பு ரோஜா மலர் ஒன்று.
அதன் அமைப்பே ஈத்தனை, “Beauty from the Divine” என்று கூறவும் வைத்து இருந்தது.
அடுத்த வருடம் அவனுக்கு மீண்டும் பிறந்தநாள் வரும் வரைக்குமே, அப்படியே சற்றும் வாடாமல் இருக்கும், சிறப்பு அம்சம் கொண்ட ரோஜா அது.
மலர்ந்த ரோஜாவை அப்படியே ஒருவருடத்திற்கு வாடாதப்படி பதப்படுத்தி, Forever Rose/Eternal Rose என்ற பெயரில் பல்வேறு நிறுவனங்களால் விற்கப்படும் அந்த வகை ரோஜாக்கள், வெளிநாடுகளில் மிகவும் பிரசித்தி பெற்றவை.
வருடம் முழுவதுமே அதை நாம் பார்த்தும், நேரடியாக தொட்டும் அதன் இருப்பை உணர முடியும். அதன் பிறகு காகிதப்பூ போல் வாடி விட்டாலும், ஒரு தனி அழகுடனே இருக்கும்.
தங்களின் ஆழமான அன்பின் அடையாளமாக அதனை பகிர்ந்துக்கொள்வார்கள்.
அதில், எப்பொழுதும் போல், யாரோ அமெரிக்க ரசிகர் தான், தனக்கு அர்த்தமாய் இந்த ரோஜாவினை தொடர்ந்து பலவருடங்களாக பரிசாக அனுப்புவதாக நினைத்த ஈத்தன், “கிளவர் ஃபெலோ” என்று அனுப்பிய அந்த நபரை சிலாகித்தவாரே…
அந்த ரோஜாவுடன் இணைக்கப்பட்டிருந்த அச்சு வாசகத்தில் பார்வையை பதிக்க…
எப்பொழுதும் போல் அதில் “Secretly Bloomed for you” என்ற வாசகம் தான் பிரிண்ட் செய்யப்பட்டு இருந்தது.
அதை வாசித்ததும், சட்டென்று குறிஞ்சியின் ஞாபகம் தான் ஈத்தனுக்கு இம்முறை கண்முன் வந்து சென்றது.
அவனுக்காக ரகசியமாக மலர்ந்தவள் என்றால் அவள் தானே, என்று தோன்ற…
“கிரேசி ஆகிட்ட ஈத்தன்” என்று அனைத்திலும் அவளை இணைத்து பார்க்கும் தன்னை தானே கேலி செய்துக்கொண்டவன்…
அதனுடன் வந்திருந்த வாழ்த்து மடலை, ஏதோவொரு ஞாபகத்தில் முதல்முறையாக பிரித்து பார்க்க ஆரம்பித்து…
இறுதியில் மொத்தமாக அதிர்ந்து போய் நின்றுவிட்டு இருந்தான்.
அதில்,
என் மதிப்பிற்குரிய ஈத்தன் சமரவேல் கிருஸ்டோஃபருக்கு, என் உள்ளம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
உங்கள் இதயத்தைப் போல் அழகாக,
உங்கள் கண்களைப் போல் பிரகாசமாக,
உங்கள் வாசத்தைப் போல் இதமாக,
உங்கள் குரலைப் போல் இனிமையாக,
உங்கள் எண்ணங்கள் போல் ஆரோக்கியமாக,
உங்கள் இசையைப் போல் நீண்ட ஆயுளுடன்,
நீங்கள் என்றென்றும் இன்புற்றிருக்க இறைவனை வேண்டுகிறேன்.
உங்களின் ரசிகை,
ரோஜா.
என்று முத்து முத்தாக எழுதப்பட்டிருந்த எழுத்துக்களின் கையெழுத்து…
குறிஞ்சி வீட்டில் அவன் பார்த்திருந்த கவிதையின் கையெழுத்துடன், அப்படியே அச்சுபிசங்காமல் ஒத்துப்போக…
சில வினாடிகளுக்கு ஈத்தனிடம் அசைவே இல்லை…
அவளின் பெயரை கூட அவன் முதன் முதலில் ரோஜா என்று தான் அழைத்து இருந்தான். அவன் மனதில் அப்படி தான் பதிந்து இருந்தது.
உடனே அவை வந்திருந்த முகவரியை எடுத்து பார்த்தான்.
கொடைக்கானலில் உள்ள ஒரு ரோஸ் கார்டனின் பெயர் அங்கு இருக்கவும்… அவனின் சந்தேகம் முழுவதும் ஊர்ஜிதம் ஆகுவது போல் இருக்க…
“அடிப்பாவி” என்று குறிஞ்சியை குறித்து நினைத்தவன்…
மேலும் தன் சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள, அப்படியே அங்கு தரை தளத்தில் அமைந்திருந்த ஸ்டூடியோ அறைக்குள் வேகமாக சென்று நுழைந்து இருந்தான்.
அங்கு சுவற்றில் ஒரு மூலையில் அமைந்திருந்த சிறிய இரண்டடுக்கு செல்ஃபில்…
மேல் அடுக்கில், ஈஷாவின் பிறந்தநாளுக்கு என்று வருடா வருடம் அவனுக்கு வந்தது போலவே வந்திருந்த, பர்ப்பிள் வண்ண ரோஜாவின் பெட்டிகள் இடம்பெற்றிருக்க…
அதற்கு கீழேயுள்ள அடுக்கில், ஈத்தனின் பிறந்தநாளுக்கு என்று வந்திருந்த, சிகப்பு வண்ண ரோஜா பெட்டிகள் இடம்பெற்றிருந்தன…
ஈத்தன் அனைத்தையுமே அவசர அவசரமாக எடுத்து அடிப்பக்கம் திருப்பி பார்த்தான்.
அனைத்துமே கொடைக்கானலில் இருந்து தான் வந்திருந்தன.
பிறகு அதனை எண்ணி பார்த்தான். மொத்தம் பதினொரு பெட்டிகள் இருந்தன. அவள் அங்கு சென்றதில் இருந்தே அனுப்ப ஆரம்பித்து இருந்தாள்.
அதில், “காட்…” என்றவனுக்கு என்ன மாதிரியாக அவன் உணர்கின்றான் என்றே தெரியவில்லை.
அவன் விரல்கள், நடுக்கத்துடன் ஈஷாவின் மலர்கள் மீது எழுதியிருந்த…
To my princess, forever in my heart.
என்ற வாசகத்தை தொட்டுப்பார்த்தது.
காதலியாக அவனை மயக்கினாள் என்றால், ஒரு அன்னையாக அவனை ஓவென்று கதறி அழ செய்யப்பார்த்தாள்.
எப்பேர்ப்பட்ட இடர்பாடுகளுக்கு இடையிலும், அவள் அவனையும் மறக்கவில்லை. அவள் பெற்ற ஈஷாவையும் மறக்காமல் இருந்து இருக்கின்றாள்.
காதல் தீர்ந்ததும் பெற்ற மகனையே மறந்து, அவனை பெற்றவர்கள் கொடுத்த காயங்களை, கடந்த இருபத்தி நான்கு ஆண்டுகளாக, பாறாங்கல் போல் நெஞ்சில் நீங்காமல் சுமந்துக்கொண்டிருந்த ஈத்தனுக்கு…
குறிஞ்சி அவனையும், ஈஷாவையும் ஒருப்பொழுதும் விடாமல் சுமந்துக்கொண்டிருப்பதில், அப்படி ஒரு நிறைவு.
காயங்கள் இருந்த இடமெல்லாம் ரோஜாக்கள் பூக்க ஆரம்பித்தன.
அதுவும் பதிலுக்கு அவனிடம் இருந்து காதல் உட்பட இன்றுவரையிலும் எதையும் எதிர்பாராமல் இருக்கும் தேவதைப்பெண்ணை, “நீ எனக்கு கிடைக்க தான், அவ்வளவு கஷ்டங்களையும் கடவுள் எனக்கு கொடுத்தார் போல கேர்ள். தப்பில்லை தப்பில்லை” என்று கண்கள் கலங்க நினைத்தவன்…
உடனே புன்னகையுடன், “கண்டிப்பா, நீ டெவில் தான் கேர்ள். அதுவும் கல்ப்ரிட் டெவில். சந்தேகமே இல்லை”, என்று எண்ணியப்படியே, அங்கிருந்த அவள் அனுப்பிய ரோஜாக்கள் அனைத்தையும், அள்ளிக்கொண்டு, வேக வேகமாக படியேறி தங்களுடைய அறையை நோக்கி ஓடினான் ஈத்தன்…
________________________________
ஈத்தன் வீட்டில் இருந்து குறிஞ்சி சென்ற நான்கு மாதங்களிலேயே, ஈத்தனின் பிறந்தநாள் வந்திருந்தது.
அந்த மாதம் தொடங்கியதில் இருந்தே, குறிஞ்சியின் மனம் முழுவதும் அப்படியொரு கலக்கம். நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தது.
அவனுடன் அவள் இருந்தப்பொழுது வந்த ஈத்தனின் பிறந்தநாள் அன்று, தனியாக மாடியில் தரையில் படுத்த வண்ணம், கண்களின் ஓரம் ஈரத்தில் மினுமினுக்க அவன் இருந்த காட்சி…
மீண்டும் அவனை அப்படியானதொரு சோகத்தில், இந்த பிறந்தநாளும் ஆழ்த்திவிடுமோ என்று பதற வைக்க…
குறிஞ்சி தொடர்ந்து கடவுளிடம், ‘எனக்கு எத்தனை சோதனைகளை வேண்டுமானாலும் தாங்கள்… ஆனால் தயவுசெய்து அவரை மட்டும் அவரின் பிறந்தநாள் அன்று அழ வைத்துவிட வேண்டாம்… ப்ளீஸ்… ப்ளீஸ்…’ என்று ஊண், உறக்கம் மறந்து வேண்டுதல் வைத்துக்கொண்டே இருக்க…
அவளின் வேண்டுதலின் பலனாக, ஈத்தனின் பிறந்தநாள் அன்று நல்லிரவில் அவ்வளவு அழகாக தொடங்கியிருந்தது.
அதை அந்த வாரம் முழுவதும் இணையத்தில் வைரல் ஆகி விதவிதமாக சுற்றிக்கொண்டே இருந்த அவனின் வீடியோக்கள் அவளிடம் கூறி, அவளின் மனதை குளிர்வித்து இருந்தது.
________________________________
அனைத்து வருடங்களுமே ஈத்தனின் வீட்டிற்கு முன், அவன் இங்கு இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, அவனின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக ஒருசில ரசிகர்கள் கேக் வெட்டி, வெடி வெடித்து, பாட்டுப்பாடி என்று கொண்டாடுவது வழக்கம்.
அவன் என்ன கூறினாலும் அதை எல்லாம் அவர்கள் நிறுத்துவதே இல்லை.
ஈத்தன் சொல்லி சொல்லி பார்த்து… ஒருக்கட்டத்தில் ‘போங்கடா’ என்று விட்டுவிட்டு இருந்தான்…
அதிலும், இந்த பிறந்தநாள் எதற்கு தன் வாழ்வில் வருகிறது என்று வருடா வருடம் உள்ளுக்குள் நொந்துக்கொண்டு இருப்பவன். முடிந்தளவு மனிதர்கள் இருக்கும் பக்கமே போக மாட்டான். யாரின் வாழ்த்தையும் கேட்கும் மனதிடம் அவனுக்கு இருந்ததே இல்லை.
பிறந்தநாள் என்றாலே, தன்னுடைய உலகம் என்று அவன் நினைத்த அவனுடைய பெற்றவர்கள், அவனை அப்படியே விட்டுச்சென்றுவிட்ட அந்த பாதுகாப்பற்ற சூழல் தான் அவனுக்கு நினைவில் மீண்டும் மீண்டும் வந்து வருத்தும்.
அதற்கு பயந்தே நத்தையாக தன்னை ஒரு ஓட்டுக்குள் வைத்து பாதுக்காத்துக்கொள்வான்.
அப்படியாக இருந்தவனை, தன் பேச்சின் மூலமே முற்றிலும் மாற்றி, அவனை புதிதாக ஜனனம் எடுக்க வைத்திருந்த குறிஞ்சி மலர்… அவன் தன் வாழ்வினை ஒவ்வொரு நாளும் கொண்டாடும் விதமாக, கையில் ஒரு உயிருள்ள பூச்செண்டினையும் கொடுத்துவிட்டு சென்றிருக்க…
அந்த பூச்செண்டோ, ஈத்தனின் பிறந்தநாள் இரவு பன்னிரண்டு மணிக்கு சரியாக முழித்து கத்தி, ஈத்தனை அழகாக எழுப்பிவிட்டு இருந்தாள்.
அதில், “என் பேபிக்கு பசிக்க ஆரம்பிடுச்சா” என்று உடனே எழுந்துக்கொண்ட ஈத்தன்.
ஈஷாவை ஒரு கையில் தூக்கி வைத்தப்படியே, மறு கையால் குறிஞ்சி எடுத்து வைத்துவிட்டு சென்றிருந்த தாய்ப்பாலில், ஒரு கவரை மட்டும் குளிர்சாதனப் பெட்டியில் இருந்து எடுத்துவந்து,
அதற்குண்டான பிரத்யேகமான வெதுவெதுப்பாக மாற்றும் இயந்திரத்தின் மூலம், குழந்தை குடிக்கும் மிதமான சூடு பதத்திற்கு கொண்டு வந்து, அதனை பாட்டிலில் ஊற்றிய ஈத்தன்…
“பேபிக்கு மில்க் ரெடி…”, என்று அவளின் வாயில் வைக்கவும்…
அவன் கை மீதே தன்னுடைய கையினையும் வைத்து, கெட்டியாக பாட்டிலை பிடித்துக்கொண்டு, சமத்தாக தன் அன்னை வைத்துச்சென்ற பாலை, ஒரு சொட்டுக்கூட வீணாக்காமல் குடித்து முடித்த ஈஷா…
முழு உற்சாகத்துடன், அந்த நடுயிரவு வேளையில் விளையாட தயாராகி இருந்தாள்…
அதில், “பேபி ஒழுங்கா தூங்கனும்” என்ற ஈத்தன்…
அவளை தன் தோளில் படுக்க வைத்து, முதுகில் தட்டியப்படியே, அறையுடன் இணைந்திருந்த போர்ட்டிகோவில் காற்றோட்டமாக நடக்க…
அவளோ, “ஆ… ஊ…” என்று ஈத்தனிடம் பேசியப்படியே… அவன் தோள் பகுதியை எச்சிலில் குளுப்பாட்டிக்கொண்டு தூங்காமல் இருந்தவள்.
எங்கிருந்தோ திடீரென்று கேட்ட வெடிசத்ததில் திடுக்கென்று தூக்கிப்போட… சத்தம் வந்த திசையை கலக்கத்துடன் தேடவும்…
“ஓ மை பேபி! சாரி டா… பயந்துட்டிங்களா… ஒன்னுமில்லை… ஒன்னுமில்லை…” என்று அவளை தன் மார்போடு அணைத்துக்கொண்ட ஈத்தன், உடனே வீட்டிற்குள் அவளை தூக்கிக்கொண்டு ஓட பார்க்கவும்…
ஈஷாவோ, திடீரென வானில் பல வர்ணங்களில் பூப்போல் மலர்ந்த, வான வேடிக்கைகளை தன்னை மறந்து ஆவென பார்க்க ஆரம்பித்து இருந்தாள்.
அதற்கு பிறகு, அவள் ஈத்தனை உள்ளே செல்ல விடவேயில்லை.
“வானிற்கு நீ தூக்கி செல்கிறாயா… இல்லை நானே போய் கொள்ளவா…”, என்று அவன் கைகளுக்குள் குதித்து குதித்து, வானை நோக்கி ஒரே ஆட்டம்…
அதில், “என் பேபிக்கு பயமா இல்லையா…” என்றப்படியே, அவளின் காதுகளை சத்தம் பாதிக்காத வகையில் பஞ்சை வைத்து அடைத்த ஈத்தன்.
அவளின் ஆட்டத்தில் அவனும் உற்சாகமாகி அவளை கொஞ்சியப்படியே, அங்கேயே நின்று அவளுடன் வானவேடிக்கைகளை பார்க்கவும்…
“தந்தை இருக்கும் போது எனக்கு என்ன பயம்” என்று ஈஷா, கைத்தட்டி சிரித்தப்படியே, தன் சிறிய கண்களை எவ்வளவு பெரிதாக திறக்க முடியுமோ, அவ்வளவு பெரிதாக திறந்து வைத்துக்கொண்டு, வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தவள்…
சில நிமிடங்களிலேயே வான வேடிக்கைகள் முடியவும், ‘இன்னும் வேண்டும்’ என்று ஈத்தனின் முகத்தை தன் பல் இல்லாத வாயால் போட்டு கடிக்க ஆரம்பித்து இருந்தாள்.
அதில் தன்னை மறந்து சிரிக்க ஆரம்பித்த ஈத்தன்…
அந்த சந்தோஷத்தை அவனுக்கு தந்த ரசிகர்களை காண, ஈஷாவை தூக்கிக்கொண்டு வெளியே சென்று இருந்தான்.
🔴அடுத்த அத்தியாயம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻
கருத்துகள்
கருத்துரையிடுக