39.1
அத்தியாயம்-39
ரோஜா தோட்டத்திற்கு மத்தியில் அமைந்திருந்த அந்த நீச்சல் குளத்தில், மெல்லிய செயற்கை வெளிச்சத்திற்கு மத்தியில், அமைதியாக நீந்திக்கொண்டு இருந்தான் ஈத்தன்.
வந்து ஒருமணி நேரம் மேல் ஆகி இருந்தது.
ஒருப்புறம், குறிஞ்சியிடம் விஷயத்தை பகிர்ந்துவிட்டதில், மனதிற்கு எதிலிருந்தோ விடுபட்ட ஒரு சுதந்திர உணர்வு என்றாலும்…
மறுப்புறம், அவள் வாயாலேயே அவள் பட்ட வேதனைகளை கேட்டு, ஒருமாதிரி வார்த்தைகளால் சொல்ல முடியாத உணர்வுகள், அவனுக்குள் நொடிக்கு நொடி மேலெழுந்துக்கொண்டே இருந்தன…
எப்படி தான், அந்த பிஞ்சு இதயம் அனைத்தையும் தாங்கிக்கொண்டு அவ்வீட்டில் வளர்ந்து வந்ததோ.
ஈத்தனின் கன்னங்கள் இரண்டும், அவனுடைய கண்களில் இருந்து உற்பத்தியான நீரினால் சுட்டன!
அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும் வலிகள் அவைகள் அனைத்தும்.
டைம் டிராவல் மெஷின் எதுவும் தனக்கு கிடைக்காதா? எடுத்துக்கொண்டு பின்னோக்கி பயணித்து, பிறந்த உடனே குறிஞ்சியை தூக்கிக்கொண்டு வந்துவிடலாமே, என்றெல்லாம் பல்வேறு எண்ணங்கள் அவனுக்குள் ஆற்றாமையில் தோன்றிக் கொண்டிருக்க…
அதற்கெல்லாம் சாத்தியம் எதுவுமே இல்லை என்பது புரிந்து, நிதர்சனத்தை ஏற்றுக்கொண்டு, பழையதை மறக்க முயற்சித்துக்கொண்டு இருந்தான்.
அதில் வெற்றிகரமாக, அந்த எண்ணங்கள் சற்று பின்னோக்கிச்செல்லவும், அவனை வந்து சூழ்ந்தது குறிஞ்சியின் அவன் மீதான பிடித்தங்கள்!
உண்மையில், ‘அதனால் அவளுக்கு என்ன பயன்’ என்று நினைத்தவனுக்கு, அவளுக்கு, ‘ஏன் தான் தன்மீது அவ்வளவு அன்பு வந்ததோ’ என்று இருந்தது இப்பொழுது…
பின்னே, அதுமட்டும் அவளுக்கு வராமல் இருந்து இருந்தால்…
சாந்தினி குணமாகியவுடன் அவருடன் தனியாக சென்று, குறைந்தது கடந்த பன்னிரண்டு வருடங்களாவது, நிம்மதியாக ஒரு வாழ்க்கையை வாழ்ந்து இருப்பாளே…
அந்த பிணந்தின்னி கூட்டத்திடம் மீண்டும் சென்று மாட்டியிருக்க மாட்டாளே…
திருமணம் கூட செய்துகொண்டு, குடும்பம், குழந்தை என்று அவளின் குணத்திற்கு நிறைவாக வாழ்ந்து இருக்கலாமே என்று தோன்ற…
சட்டென்று ஈத்தன் நீந்துவதை நிறுத்தி இருந்தான்.
மனதில் தோன்றும் அந்த எண்ணங்கள், அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
நேற்று, இன்று, நாளை முப்பொழுதும் அவள் அவனுடையவளாக இருப்பதில் தான் அவனுக்கு விருப்பமாக இருந்தது. எப்பொழுதில் இருந்து அப்படி மாறினான் என்று தெரியவில்லை.
ஆனால், மொத்தமாக மாறிவிட்டு இருந்தான்.
அதிலும் குறிஞ்சியின் அவன் மீதான அன்பின் பரிசு தானே ஈஷா!
அது இல்லையென்றிருந்தால், ஈஷா எப்படி பிறந்திருப்பாள்?
ஈத்தனின் எண்ணங்கள், அன்று குறிஞ்சி அவனை குழந்தை பெற்றுக்கொள்ள ஒப்புக்கொள்ள வைத்த தினம் நடந்த பேச்சுவார்த்தைகளை நோக்கி பயணித்து இருந்தன…
எப்படியெல்லாம் அவனுக்காக அவள் கொஞ்சமும் பின்வாங்காது வாதாடி இருக்கின்றாள்!
________________________________
அதிலும் ஐஸ்வர்யா, ‘குறிஞ்சிக்கு நிச்சயதார்த்தம் எல்லாம் எதுவும் நடக்கவில்லை சார். அவளுக்கு திருமணம் செய்வது குறித்து நாங்கள் யாரும் நினைத்தது கூட கிடையாது. உங்களை சம்மதிக்க வைக்க தான் அவள் அவ்வாறு பொய் சொன்னாள். மாப்பிள்ளை எல்லாம் யாருமே இல்லை’ என்று சொன்ன கணம். ‘என்ன அதுவும் பொய்யா?’ என்று ஈத்தன் அப்போது அதிர்ந்து இருந்தாலும்…
இப்பொழுது அவளின் அந்தப்பொய் தான், அவனின் தோட்டத்தில் அவளின் வாசத்தை வீச வைத்தது என்பதை புரிந்துக்கொண்டான்.
என்ன, அது ‘பொய்’ என்று மட்டும் அப்பொழுதே அவனுக்கு தெரிய வந்திருந்தால், இந்நேரம் உலக மக்கள் தொகை வளர்ச்சிக்கு அவனும், குறிஞ்சியும் தங்களின் பங்களிப்பை, அதிகளவில் வழங்கி முடித்து இருப்பார்கள்.
அதிலும், சிறிது நேரம் முன்பு குறிஞ்சி அவனை பார்த்த பார்வை…
அவனின் கோபங்கள் முழுவதையும், கற்பூரத்தை விடவும் வேகமாக அல்லவா கரைத்துவிட்டு இருந்தது.
இருந்த சூழ்நிலையில், தன் தோல்வியை கொஞ்சமும் வெளிக்காட்டிக்கொள்ள முடியாமல், அவளிடம் பொய்யாக முறுக்கிக்கொண்டு ஓடிவந்திருந்தானே!
முப்பத்தியாறு வயது ஈத்தனுக்கே அந்த நிலை என்றால்! இருபதுகளின் தொடக்கத்தில் இருந்த ஈத்தனெல்லாம், அவள் விழி சிறைக்குள் எப்பொழுதோ விழுந்து, மொத்தமாக சரணடைந்து இருப்பானே!
இப்பொழுதும், அவளின் அந்த அஞ்சனம் தீட்டப்பட்ட, கருந்திராட்சை விழிகளின் விரிந்த அசைவற்ற ஆளைமிழுங்கும் பார்வையை நினைத்தவுடனே…
ஈத்தனின் உடல் முழுவதும் புது புது மாற்றங்கள்! இன்ப தூரல்கள்!
அதில், “குறிஞ்சிமலர்…” என்று நீரினை போட்டு இரண்டு பக்கமும் அடித்து இருந்தான் ஈத்தன்!
எத்தனையோ பெண்களின் கண்களில் அவனுக்கான மயக்கத்தை அவன் கண்டு இருந்தாலும்…
குறிஞ்சியின் மயக்கம் மட்டுமே, அவனை மயங்க செய்ய…
வலிக்கு பயந்து, அவன் வேண்டவே வேண்டாம் என்று ஒதுக்கி வைத்த உணர்வுகள், மொத்தமாக ஓடிவந்து அவனை சூழ்ந்திருந்தின!
________________________________
அதேநேரம், அங்கு அறைக்குள் அவன் விட்ட இடத்திலேயே நீண்ட நேரம் நின்றிருந்த குறிஞ்சி, கால் வலிக்க ஆரம்பித்தப்பிறகே அங்கிருந்த இருக்கையில் சென்று அமர்ந்து இருந்தாள்.
ஈத்தனின் கோபம், அவளுக்கு கடுகளவு மனக்கசப்பினையும் தந்திருக்கவில்லை.
அவளுக்கு தெரியாதா அவளுடைய ஈத்தனை பற்றி.
அதில், தாய் தனது குழந்தையின் முதல் எதிர்ப்பை சுவீகரிப்பது போலவே, ஈத்தனின் இன்றைய வெள்ளை கோபத்தை ரசித்து ஏற்றுக்கொண்டு இருந்தாள்.
அதிலும் உலகில் ஆயிரம் கெட்ட வார்த்தைகளும், காயப்படுத்தும் வார்த்தைகளும் இருந்தும், அதை எதையும் சந்தர்ப்பம் கிடைத்தும் உபயோகப்படுத்தாது, சிறு ஆக்ரோஷமும் காட்டாது, “ஒழுங்கா போய்ட்டு படுத்து தூங்கு கேர்ள்” என்று அவளை திட்டியவனை என்னவென்று சொல்வது!
அவன் கன்னத்தை பிடித்து கிள்ளி கொஞ்ச தான் தோன்றியது குறிஞ்சிக்கு.
அதிலும் இறுதியில், ‘ஐ ஹேட் யூ’ என்றுவிட்டு அவன் ஓடிய ஓட்டத்தில், தன்னை மறந்து புன்னகைத்தப்படியே நின்றுவிட்டு இருந்தவள், நீண்ட நேரம் பிறகே, சுரணை வந்து தலையில் தட்டிக்கொண்டு வந்து அமர்ந்து இருந்தாள்.
எதிர்பாராத விதமாக ஈத்தனுக்கு உண்மை எல்லாம் தெரிந்துவிட்டதில் வருத்தமாக இருந்தாலும், ஈத்தனிடம் திறந்த புத்தகமாகிவிட்டதில், ‘ஹப்பாடா’ என்ற உணர்வே அவளிடம் அதிமிஞ்சி இருந்தது. முதல் நாள் தொடங்கியே அவனின் நம்பிக்கைக்கு தகுதியில்லாது போனதில், அவளுக்கு வானளவு வருத்தம் உண்டே.
இவை அனைத்தையும் விட, இனி அந்த குடும்பத்தால், தனக்கு எதுவும் பிரச்சனை இல்லை என்பது அவளின் ஒவ்வொரு அணுக்களிலும் சிறிது சிறிதாக பட்டாம்பூச்சிகளை பறக்க செய்து, அவளின் முகம் முழுவதும் மத்தாப்புகளை கொளுத்தி போட ஆரம்பித்து இருந்தது…
வாழ்க்கை முழுவதையுமே ஏதோ ஒரு இறுக்கத்துடனே, ஒவ்வொரு கட்டத்திலும் கடத்திக்கொண்டு இருந்தவள். முதல்முறை நிம்மதியாக சுதந்திரமாக காற்றை உள்ளிழுத்து வெளியிட ஆரம்பித்து இருந்தாள்.
________________________________
அதேநேரம் அங்கு மன சஞ்சலங்கள் அனைத்தையும் சமன் படுத்திவிட்டு, தன் கண்களை மூடியப்படி, அமைதியாக நிர்மலமான மனதுடன் நீரில் மிதந்துக்கொண்டிருந்த ஈத்தன்…
திடீரென்று கேட்ட சத்தத்தில், பட்டென்று தன் கண்களை திறந்துப்பார்க்க…
அவன் கண்முன், வானில் பல வர்ணங்களில் வானவேடிக்கைகளின் வர்ணஜாலங்கள்! அவனின் ரசிகர்களினால், அவ்வளவு அழகாக அரங்கேற ஆரம்பித்து இருந்தன…
அதை கண்டு புன்னகையுடன், “தேங்க் யூ டார்லிங்ஸ்…” என்று வானை நோக்கி ஒரு பறக்கும் முத்தத்தை அனுப்பிய ஈத்தன். தன் கை கடிகாரத்தை திருப்பி மணியை பார்த்தான்.
அது இரவு 11 என்று காட்டியது.
அதில், “ஊப்ஸ்… இவ்ளோ நேரம் ஆகிடுச்சா…”, என்று உடனே நீந்தி வெளிவந்தவன், அங்கேயே நீச்சல் குளத்திற்கு அருகில் இருக்கும் ஷவருக்கு அடியில் சென்று நின்று, தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு…
இரவு உடைக்குமாறி கிளம்பியவன்…
தலையை துவட்டியப்படியே வீட்டிற்குள் சென்று நுழையவும்…
அங்கு வரவேற்பறையில், வெளிகேட்டில் இருந்து செக்யூரிட்டி வந்து வைத்துவிட்டு சென்றிருந்த, பொருட்கள் யாவும் அவனை வரவேற்ற வண்ணம் அமர்ந்து இருந்தன.
அதில், “ஓ மை காட்!” என்ற ஈத்தன், “அதுக்குள்ளே இவ்ளோ ஃபிளவர்ஸ் டெலிவரி ஆகிடுச்சா” என்று ஆச்சரியமாக பார்த்தப்படியே அதனை நெருங்கி இருந்தான்.
அங்கு, அவன் ரசிகர்கள் பல்வேறு நாடுகளில் இருந்து அவனுக்காக அனுப்பியிருந்த, ஆயிரக்கணக்கான சிகப்பு நிற ஒற்றை ரோஜாக்களும், பிறந்தநாள் கார்டுகளும் அணிவகுத்திருக்க…
அதன் மதிப்பை உணர்ந்து, ஆசையாக வருடிக்கொடுக்க ஆரம்பித்தது ஈத்தனின் கரம்.
________________________________
இசை உலகினில் தன் காலடியினை அவன் பதித்த முதல் வருடமே, அவனுடைய பிறந்தநாளிற்கு லாரிகளில் ஏற்றும் அளவிற்கு அவ்வளவு பரிசுப்பொருட்கள் வந்து, அவன் வீட்டில் குவிந்து இருந்தன.
அதில் ஒவ்வொன்றின் விலைகளும், ஆயிரத்தில் தொடங்கி லட்சங்கள் வரை சென்றிருக்க…
அதிர்ந்த ஈத்தன், “இனி, தனக்கு யாரும் இதுப்போல் தனிப்பட்ட பரிசுப்பொருட்கள் எதுவும் அனுப்ப வேண்டாம்” என்று, அனைத்தையும் அனுப்பியவர்களுக்கே முடிந்தளவு திருப்பி பாதுகாப்பாக அனுப்பிவைத்துவிட்டு, முகவரி இல்லாத மீதியை வெளிப்படையாகவே ஆசிரமங்களுக்கு அனுப்பிவிட்டு இருந்தான்.
அவன் என்ன நாட்டிற்காக போராடும் வீரனா… இல்லை அவர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்தையும் முன்னேற்றிச்செல்லும் தலைவனா… எதுவும் இல்லையே…
பின்னே எதற்கு இதெல்லாம்…
வந்திருந்த பரிசுகள் அனைத்தும், அன்பின் அடிப்படையில் தான் என்றாலும், மிகவும் அதிகப்படியாக தெரிந்தது ஈத்தனுக்கு.
அதிலும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பெயர்களை அதிகம் பார்த்தவன்… இதை அப்படியே வளரவிடக்கூடாது என்று தான்… ஆரம்பத்திலேயே வெட்டிவிட்டு இருந்தான்…
உட்சத்தில் இருக்கும் சினிமா நட்சத்திரங்கள் கூட செய்யாத விஷயத்தை, பத்தொன்பது வயது பையன் பொறுப்புடன் செய்து வைத்ததில்…
“யாரந்த இளம் பாடகன்…” என்று அனைவரையும் அவனை தேட வைத்து, மேலும் மக்களிடம் அவனை கொண்டு சேர்த்திருந்தது…
அதற்கு அடுத்த வருடம் வந்த அவனுடைய பிறந்த நாளுக்கு, அவனின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து விலையுயர்ந்த பரிசுகளை அனுப்புவதை, அவனின் ரசிகர்கள் குறைத்துக்கொண்டார்களே தவிர… மொத்தமாக அவன் கேட்டது போல் அனுப்புவதையே நிறுத்தவில்லை…
அவன் வேண்டுமானால் சொல்லலாம், ‘நான் யாரும் இல்லை உங்களுக்கு’ என்று…
ஆனால் அவனின் ரசிகர்களுக்கு தெரியுமே! அவனின் காந்த குரல் தான், அவர்களின் பல காயங்களுக்கு மருந்து என்றும், இளைப்பாறும் நிழற்கூடம் என்றும்…
அதில் ஒருக்கட்டத்தில்… ஈத்தனின் தொடர் மறுப்புகளை ஏற்றுக்கொள்ள முடியாது…
அவனின் ரசிகர்கள் அனைவரும் ஒரேப்போல், அவனுக்கு பிடித்த ஒற்றை சிகப்பு ரோஜாவுடன், தங்களின் கைப்பட எழுதிய வாழ்த்து மடலை வைத்து, இதை மட்டுமாவது ஏற்றுக்கொள் என்று அவனுக்கு அனுப்பி வைக்க…
ஈத்தனும், அதற்கு மேல் எதுவும் பிகு செய்யாமல், அந்த சிறிய அன்பளிப்பை மட்டும் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்து, அதுவே வழமையாக மாறிவிட்டு இருந்தது…
________________________________
🔴அடுத்த அத்தியாயம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻
https://swathilakshmitamilnovels.blogspot.com/2025/07/392.html
கருத்துகள்
கருத்துரையிடுக