38.3
ஒன்னுமில்லை கேர்ள்… இங்க வா…” என்று குறிஞ்சியின் கையைப்பற்றி இழுத்து தன்னருகே மீண்டும் அமர வைக்க பார்த்தான்.
அவளோ ‘மாட்டேன்’ என்று தலையாட்டியவள், “அப்ப, இத்தனை நாளும் வேலைன்னு என்கிட்ட பொய் சொல்லி இருக்கீங்க” என்று இதழ்கள் நடுங்க, அவனை அவள் கேள்வி கேட்க.
ஈத்தனின் புருவங்கள் இரண்டும் உயர்ந்து இருந்தன.
‘என்னை கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதி இருக்கிறது’ என்று அவன் கேட்காமல் கேட்பது போல் இருக்க.
குறிஞ்சியின் முகம் மொத்தமாக கசங்கிவிட்டது.
குற்றம் செய்த நெஞ்சம் ஆயிற்றே.
குறுகுறுத்தது.
அதை மேலும் அதிகரிக்கும் வண்ணம், “சாரி, குறிஞ்சி” என்று வேறு ஈத்தன். அவன் பொய் சொன்னதற்கு அவளிடம் உடனே மன்னிப்பு கேட்டுவிட.
குறிஞ்சியின் கண்களில் இருந்து மெல்ல அணையை உடைத்துக்கொண்டு நீர் துளிகள் துளிர்க்க ஆரம்பித்துவிட்டு இருந்தன.
அதில், “ஷ். குறிஞ்சி மலர். நான் உன்னை ஒன்னும் கேட்கலை. விடு” என்ற ஈத்தன். அவளை வலுக்கட்டாயமாக இழுத்து தன்னுடன் அமர வைத்துக்கொள்ள.
“என்னை மன்னிச்சுடுங்க. நான் உங்களுக்கு எந்த விதத்திலும் உண்மையா இல்லை” என்ற குறிஞ்சி.
வானில் மிதக்கும் மேகத்தை விட மென்மையான மனம் கொண்ட தன்னவனுக்கு, தன்னுடைய கதை எப்படியான வலியை தந்திருக்கும் என்பதை உணர்ந்து…
“உங்களை கஷ்டப்படுத்திட்டே இருக்கேன். என்னால் யாருக்குமே நிம்மதி இல்லை” என்று நெஞ்சம் விம்ம கூறியவள். “நான் பிறந்து இருக்கவே கூடாது” என்று, முகத்தை மூடிக்கொண்டு கதறி அழ ஆரம்பித்துவிட்டு இருந்தாள்..
சாந்தினிக்கும், குமாருக்கும் திருமணமானதில் தொடங்கி, பிறகு குழந்தை இல்லாததால் லோகேஸ்வரியை மீண்டும் குமாருக்கு, மனம் முடித்த கதையெல்லாம் கூறியவள்…
சாந்தினிக்கு அவள் அங்கீகாரம் இல்லாது பிறந்த கதையை கூறும் போது, வெடித்து சிதறி இருந்தாள்.
“ஷ். வேண்டாம் டா குறிஞ்சி. நீ எதுவும் சொல்ல வேண்டாம். போது ம்மா” என்று ஈத்தன் எவ்வளவோ தடுத்தும் அவள் நிறுத்தவே இல்லை.
ஏற்கனவே, இதையெல்லாம் மேலேட்டமாக அறிந்ததில் இருந்தே, நான்கு நாட்களாக தூங்க முடியாமல், விழித்தே கிடப்பவனால்.
அவள் பட்ட வேதனைகளை எல்லாம் அவள் வாயாலேயே கேட்க கேட்க… இதயத்தில் இருந்து ரத்தமே வெளியே கொட்டிவிடும் போல் இருந்தது.
பெற்றவர்களிடமே, அவ்வளவு கவுரவம் பார்த்தவன் ஈத்தன்.
ஆனால் அவன் மனைவியோ, அப்படி என்ற ஒன்றே இல்லாமல் அல்லவா பிறந்து வளர்ந்து இருகின்றாள்.
நெஞ்சே பொறுக்கவில்லை அவனுக்கு.
அவ்வளவு கோபமாக வந்தது.
யாரின் மீது அதை சென்று காட்டுவது என்று தான் தெரியவில்லை.
காட்டினாலும் நடந்து முடிந்தது முடிந்தது தானே!
குறிஞ்சி அனுபவித்த வேதனைகளை அவனால் திருப்பி பெற முடியுமா!
சாந்தினியின் மீது கூட, இப்பொழுது அப்படி ஒரு கோபம் அவனுக்கு. அவனின் அப்பழுக்கற்ற தேவதையை பெற்று, அந்நியாயமாக நரகத்தில் தள்ளிவிட்டாரே. கணவர் பிரிந்த பிறகும் மகளை காப்பாற்றினார் என்று, தவறாக நினைத்து விட்டானே.
அதைவிட இறுதிவரை அந்த அயோக்கியன் தண்டனை அனுபவிக்காமல் போய்விட்டானே. அனைத்தையும் அறிந்து அமைதியாக இருந்த சுற்றத்தார்கள் ஒருப்பக்கம் என்று, அநீதிகளின் வரிசை அனுமார் வால் போல் நீண்டுக்கொண்டே போக.
‘ச்சீ இப்படியுமா மனிதர்கள் இருப்பார்கள்’ அருவருத்துப்போனான் ஈத்தன். அவன் பிறந்து வளர்ந்த சூழலும், மக்களும், நாகரிகங்களும் முற்றிலுமே வேறாக இருக்க. குறிஞ்சியும், அவள் குடும்பமும் வேற்றுகிரக வாசிகளாக அவனுக்கு தெரிந்தனர்.
வறுமையை அனுபவிப்பது வேறு, துன்புறுத்துதலை அனுபவிப்பது வேறல்லவா!
நினைக்க நினைக்க அவனுக்குள் அவ்வளவு அழுத்தம்.
அன்று அவனின் பிறந்தநாளில், குறிஞ்சி அவனுக்கு என்ன கஷ்டம் என்று கேட்டு, அவன் கூறவில்லை என்றதும், “ஏன் இந்த பிச்சைக்காரி கிட்ட எதுக்கு நாம காரணம் சொல்லனும்னு பார்க்கறிங்களா சார்?” என்று அவள் கேட்க ஒரே காரணத்திற்காக. அப்படி இல்லை என்று நிருபிக்கவே தன்னுடைய கடந்த காலம் முழுவதையும் அவளிடம் கொட்டி இருந்தவன். இனிமேலும் அவள் மனதில் அப்படி ஒரு எண்ணம் எக்காரணம் கொண்டும் வர கூடாது என்று,
அவள் அவனை விட்டு பிரியும் முன், அவனின் தனி சம்பாத்தியத்தில் பாதியை அவளுக்கு நன்றி கடன் என்ற பெயரில், அப்படியே காசோலையாக எழுதி கொடுத்தனுப்பி இருந்தான் அவன்.
அன்று, அவள் மீது அவனுக்கு காதல் மட்டும் தான் இல்லையே தவிர… அந்த சிறிய மூன்றெழுத்து சொல்லை விட, மதிப்பு மிக்க பெரியதான மற்ற அனைத்தும், அவள் மீது அவனுக்கு இருந்தன…
அவனின் தாய், தந்தைக்கு மேல் என்பதைவிட… அனைத்திற்கும் மேலாக அவளை அவன் வைத்து இருந்தான்…
________________________________
யாருமே இல்லாத காலத்தில், அவளுக்கு ஈத்தன் எப்பேர்ப்பட்ட உதவியை செய்தான் என்பதை கூறிய குறிஞ்சி…
அவனுக்கு அவள் குழந்தை பெற்றுக்கொடுக்க முடிவெடுத்ததையும், அதற்காக அவள் கூறிய பொய்களையும், சந்தர்ப்பம் அப்படியாக அமைந்துவிட்டதையும், அவள் கூற கூற…
ஈத்தனுக்கு அவன் எவ்வாறெல்லாம், அவளின் அன்பினால் ரட்சிக்க பட்டான் என்றும், ஏமாற்றப்பட்டான் என்றும் ஒருசேர அறிய நேர்ந்தது.
இருபத்தி மூன்று வயதில் போதிய அனுபவமின்மையும், இளகிய மனமும், பெற்றோர் தந்திருந்த காயங்களின் பலனாக திடமில்லாது போன உள்ளமும், தனிமையும், கையில் புரண்ட கோடிக்கணக்கான பணமும், அவனை எத்தகைய செயல்களை எல்லாம் செய்ய வைத்துவிட்டு இருந்தது.
‘எல்லாம் சரியாக செய்துவிட்டோம்’ என்று இத்தனை காலம் அவன் நினைத்தவை எல்லாம் முற்றிலுமே தவறாகிவிட்டதை, அறிந்த கணமே. அப்படி அதிர்ந்துப்போய் இருந்தான் ஈத்தன்.
ராகவ்வை கூட, “என்னடா விசாரிச்ச நீ” என்று திட்டிவிட்டு இருந்தான்…
அவனோ ஈத்தனை விடவே அதிக அதிர்ச்சியில் அல்லவா இருந்தான்.
“நான் எல்லா இடத்திலும், விசாரிச்சு தான் உங்களுக்கு சொன்னேன் சாரே. இவனுங்க இந்தளவுக்கு வீட்டில் ஒரு வேஷமும், வெளியில் ஒரு வேஷமுமா வாழ்ந்து, மொத்தமா எல்லார் கண்ணிலும் மொளகாய் பொடியை, தூவி விட்டுட்டுகிட்டு இருந்து இருக்கானுவன்னு யாருக்குமே தெரியலை. மன்னிச்சிடுங்க சாரே”, என்று புலம்பியவன். “இனி எந்த குடும்ப கேஸையும் நான் எடுக்கவே மாட்டேன்.” என்று சபதம் வேறு எடுத்துக்கொள்ள.
இதற்குமேல் அவனை ஈத்தன் என்ன கூறுவது.
கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள், குறிஞ்சியுடன் ஒரே வீட்டில் அவன் வசித்தும், அவனாலும் தானே அவளை குறித்து, ஒன்றையும் கண்டறிய முடியவில்லை.
‘மனித மனங்கள் எவ்வளவு ரகசியமாக இருக்கிறது’ என்று அவன் எண்ணிக்கொண்டு இருக்கும் பொழுது…
குறிஞ்சி, ஈத்தனை விட்டு பிரிந்துச்சென்ற பிறகு நடந்ததை அவனிடம் பகிர ஆரம்பித்து இருந்தாள் குறிஞ்சி.
________________________________
🔴அடுத்த அத்தியாயம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻
https://swathilakshmitamilnovels.blogspot.com/2025/07/384.html
கருத்துகள்
கருத்துரையிடுக