35.1 அந்திப்போர்

அத்தியாயம் -35

இது ஈஷா மற்றும் குறிஞ்சிக்கான நேரம் என்பது புரிந்து… அவர்கள் இருவருக்குள்ளும் செல்லாமல் அமைதியாக நின்றிருந்த ஈத்தன்…

ஒரு எல்லைக்கு மேல், குறிஞ்சியின் உணர்வுகள் வினாடிக்கு வினாடி அதிகரித்துக்கொண்டே செல்லவும்… இதற்கு மேல் ஒரு வினாடி விட்டாலும் அவள் உடைந்துவிடுவாள்… அது அவளின் உடல் நலனுக்கும் நல்லதில்லை… ஈஷாவின் மனநிலைக்கும் நல்லதில்லை என்பதை உணர்ந்து…

சூழ்நிலையை இலகுவாக்க…

குறிஞ்சியின் உள்ளங்கையில் சிறு அழுத்தம் கொடுத்து வருடியப்படியே… அவளை ஈஷாவிடம் இருந்து மெல்ல பிரித்தவன்…

குடிக்க தண்ணீர் எடுத்துவர கூறி குறிஞ்சியை அனுப்பிவிட்டு இருந்தான்.

ஈஷாவின் சிவந்த முகத்தை பார்த்து தன்னை சுதாரித்துக்கொண்ட குறிஞ்சியும்… உடனே சமையல் கட்டிற்குள் சென்று மறைந்துவிட்டு இருந்தாள்…

ஹாலில், “அம்மா ரொம்ப பாவம் இல்ல பேபி. நீங்க சொன்ன மாதிரி நம்மளை ரொம்ப மிஸ் செய்திருக்காங்க. ஐ ஃபீல் சோ பேட் ஃபார் ஹர். இனி நாம அவங்க கூடவே இருக்கலாம். அவங்களுக்கு நிறைய லவ்வை தரலாம்” என்று மனதில் தோன்றுவதை எல்லாம், கலங்கிய கண்களுடன் ஈத்தனிடம் ஈஷா பகிர்ந்துக்கொண்டிருக்க…

“கண்டிப்பா பேபி” என்று ஈஷாவை சமாதானம் செய்த ஈத்தன்… அவளின் மனதினை மெல்ல திசை திருப்பும் பணியையும் பார்த்த வண்ணமே, குறிஞ்சி சென்ற திசையை பார்த்துக்கொண்டு இருந்தான்.

‘உள்ளே அவள் தனியாக தவித்துக் கொண்டு இருப்பாளே’ என்று அவன் மனம் உள்ளே அப்படி அடித்துக்கொண்டிருந்தது‌… இருந்தும் ஈஷாவை தனியாக விட்டு செல்ல முடியாத நிலை அவனுக்கு…

அவன் நினைத்தது போலவே தான், அங்கு குறிஞ்சி தவிப்புடன் நின்று இருந்தாள். அவளுக்கு கைக்கால்களில் எல்லாம் அவ்வளவு நடுக்கம். கட்டுப்படுத்தவே முடியவில்லை. பல உணர்வுகளின் சங்கமத்தால் அடிவயிற்றை எதுவோ உள்ளிருந்து இறுக்கமாக இழுத்து பிடித்தது போல் வேறு இருந்து, வலித்தது அவளுக்கு…

அதில், முதலில் ஒரு சொம்பு தண்ணீரை எடுத்து குடித்து தன்னை கட்டுக்குள் கொண்டு வந்த குறிஞ்சி…

அங்கிருந்த சிறு கைக்கழுவும் தொட்டியில், குளிர்ந்த நீரால் மீண்டும் மீண்டும் முகத்தை நன்கு அடித்து கழுவி… முந்தானையால் அழுந்த துடைத்துக்கொண்டவள்…

ஈத்தனுக்கும், ஈஷாக்கும் குடிக்க நீரினை நன்றாக காய்ச்சி எடுத்து, அதனை குடிக்கும் பதத்திற்கு ஆறவைத்து, சுத்தமான குவளையில் ஊற்றி, வெளியே எடுத்து வர….

‘இவ்வளவு நேரம் உள்ளே என்ன செய்கிறாள்’ என்று நினைத்தப்படியே நின்றிருந்த ஈத்தனுக்கு… அவளின் அந்த தெளிந்த முகத்தை பார்த்த பிறகு தான் மூச்சே சீராக வெளி வர ஆரம்பித்தது…

“தேங்க் யூ அம்மா” என்று ஈஷா வாங்கிக்கொள்ள… மெல்ல அவ்வழைப்பிற்கு பழக ஆரம்பித்த குறிஞ்சி…

ஈத்தனுக்கும் கொடுத்துவிட்டு மீண்டும் சமையலறைக்குள் நுழைந்துவிட்டாள்.

மனம் ஒருபக்கம் ஈத்தன் கூறியதை சிந்தித்துக்கொண்டிருக்க…

கை ஒருபக்கம் ஈஷாவிற்கு குடிக்க பாலும், ஈத்தனுக்கு குடிக்க டீயும் தயார் செய்துக்கொண்டு இருந்தன…

ஈத்தன் எப்பொழுது? என்ன? சாப்பிடுவான் என்பது மட்டுமில்லாமல்… ஈஷாவின் உணவு பழக்க வழக்கங்களையும் அவளுடன் கழித்த நான்கு தினங்களிலேயே நன்கு அறிந்து வைத்திருந்த குறிஞ்சி…

ஈத்தனுக்கு ரோஜா இதழ்களுடன் தேன் கலந்த டீயை தயாரித்து ஒருபக்கம் ஆறுவதற்கு வைத்துவிட்டு…

ஈஷாவிற்கு பாலில் கலந்து குடிக்க சாக்லேட் சிரப்பை, வீட்டில் வைத்திருந்த கோகோ பவுடர் வைத்து காய்ச்ச ஆரம்பித்தாள். 

அப்பொழுது, தண்ணீர் குடித்த கப்புடன் ஈத்தனும், ஈஷாவும் அங்கு வந்து சேர்ந்தனர்…

மிகவும் சிறிய இடம் என்றாலும், அவ்வளவு நேர்த்தியாக அவ்விடத்திலேயே அனைத்தையும் அடுக்கி வைத்து, குறிஞ்சி உபயோகப்படுத்திக்கொண்டு இருந்தாள்.

ஈத்தன் சென்று அவனுடைய மற்றும் ஈஷாவின் கப்புகளை கைக்கழுவும் தொட்டியில் வைத்துவிட்டு… கைகளை சுத்தப்படுத்திக்கொள்ள…

ஈஷா, “வாவ்! உங்களுக்கு குக்கிங் எல்லாம் தெரியுமா” என்று குறிஞ்சியிடம் ஆச்சரியமாக கேட்டவாறே… சாக்லேட் மணத்தில் ஈர்க்கப்பட்டு அடுப்பை எட்டி பார்க்க…

“தெரியும் செல்லமா… உங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்க நான் செய்து தரேன்… ” என்று புன்னகையுடன் கூறிய குறிஞ்சி…

வெளியே இருட்ட ஆரம்பித்துவிட்டதை ஜன்னல் வழியாக பார்த்து… குழந்தைக்கு பசியெடுக்க ஆரம்பித்துவிட்டதோ என்று நினைத்து… அவசர அவசரமாக… பெரிய பாத்திரத்தில் ஆறிக்கொண்டிருந்த பாலில் அந்த சாக்லேட் சிரப்பை ஊற்றி கலந்து… அழகான ஒரு பீங்கான் கப்பில் முழுவதுமாக நிரப்பி ஈஷாவிற்கு தந்தாள்…

அதனை வாங்கி ஒரு வாய் குடித்த ஈஷா, “சோ யம்மி! அண்ட் சாக்லேட்டி” என்று சப்புக்கொட்டி கூறியப்படியே, மீதியை குடிக்க…

குறிஞ்சிக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது.

சமீபத்தில் தான் ஈஷாவிற்கு பிடிக்கும் என்பதால் கோகோ பழத்தினை வாங்கி வந்து… அதை செய்யவே கற்றுக்கொண்டு இருந்தாள்… 

தனிமையில் வாழ்பவளுக்கு, அதில் எல்லாம் தான் ஏதோ ஒரு மகிழ்ச்சியும், திருப்தியும்.

அதை, அங்கு சமையல் மேடைக்கு அருகிலேயே வரிசையாக வைக்கப்பட்டிருந்த சமையல் புத்தகங்கள், ஈத்தனுக்கு உணர்த்த, அவனுடைய கண்களில் சிறு வியப்பு…

அதை மேலும் அதிகரிக்கும் வகையில் ஈஷா, “அம்மாஆஆ! உங்களுக்கு பக்லவா ஸ்வீட்டும் பண்ண தெரியுமா? பேபியோட ஃபேவரைட் ஸ்வீட் அது…” என்று அங்கிருந்த கண்ணாடி ஜாருக்குள் இருக்கும் துருக்கி(டர்கிஷ்) நாட்டின் பெயர் போன, பிஸ்தா பருப்பில் செய்யும் இனிப்பு பஃபை(puff) பார்த்து ஆர்வமாக கேட்க…

‘ஐயோ…’ என்றானது குறிஞ்சிக்கு.

அவளுக்கு அப்படி ஒரு இனிப்பு இருக்கிறது என்பதை அறிமுகம் செய்ததே ஈத்தன் தானே.

அவளின் படுக்கை அறையில் இருக்கும் பொருட்கள் மட்டுமில்லாமல்… சமையல் அறையில் இருக்கும் பொருட்கள் கூட ஈத்தனுக்கு அவளின் ரகசியங்களை கூற…

அவன் இதழ்களின் ஓரம் மெல்லிய புன்னகை.

அதோடு அவன் அவளை பார்க்க.

குறிஞ்சியோ ‘ஈத்தன் தன்னை பற்றி என்ன நினைப்பானோ’ என்று அவன் பக்கமே திரும்பவில்லை…

இந்த காதல் என்னவெல்லாம் செய்கிறது என்று நினைத்த ஈத்தனின் இதழ்கள் மேலும் விரிந்துக்கொண்டன…

அதற்குள் ஈஷா, “Amma, may baby and I please have some of that sweet treat?” என்று குறிஞ்சியிடம் அந்த இனிப்பை அவளுக்கும், ஈத்தனுக்கும் கேட்டு இருந்தாள்.

அதில் ஈத்தன் சட்டென்று ஈஷா பக்கம் திரும்பி இருந்தான்.

இதுவரை ஈஷா அவனை தவிர வேறு யாரிடமும் எதையும் கேட்டது இல்லை. கேட்கும் நிலையில் அவன் அவளை வைத்ததும் இல்லை. அப்படி அவளை அவன் வளர்க்கவும் இல்லை.

ஆனால் இன்று அவள் தானாக உரிமை எடுத்து குறிஞ்சியிடம்… அதுவும் அவனுக்காக கேட்டதில்… மகளின் பாசம் புரிந்து நெகிழ்ந்து போனான்…

குறிஞ்சியோ, “அச்சோ குட்டிமா இந்த வீட்டில் இருக்கிறது எல்லாமே உங்களது தான் டா. பர்மீஷன் எல்லாம் நீங்க கேட்க வேண்டியதில்லை. எடுத்துக்கோங்க” என்று அந்த கண்ணாடி ஜாரில் இருந்த மொத்த ஸ்வீட்டையும் தட்டில் கொட்டி கொடுக்க…

“வாங்க பேபி” என்று ஈஷா தட்டுடன் ஹாலை நோக்கி கிளம்பிவிட்டாள்.

ஈத்தனும், குறிஞ்சியும் மட்டும் அங்கிருக்க…

குறிஞ்சி, ஈத்தனுக்கு என்று போட்டு வைத்த டீயை வடிக்கட்டி கப்பில் ஊற்றி, “எடுத்துக்கோங்க சார்” என்று தன் சங்கடங்கள் அனைத்தையும் மறைத்துக்கொண்டு, அவனை உபசரிக்க…

“உனக்கு கேர்ள்?” என்றான் ஈத்தன்.

அவளுக்கு காஃபி போட என்று வைத்திருந்த பாலை, ஈஷாவிற்கு கொடுத்துவிட்டிருந்த குறிஞ்சி, “நான் இப்ப எதுவும் குடிக்க மாட்டேன் சார்” என்று கூறி முடிப்பதற்குள… அங்கு அவள் வரிசையாக வைத்திருந்த கப்புகளில் ஒன்றை எடுத்து… தன் கப்பில் இருந்து பாதி டீயை அவளுக்கு ஊற்ற ஆரம்பித்துவிட்டு இருந்தான் ஈத்தன்…

அதில் “அச்சோ சார். நீங்க குடிங்க. உங்களுக்கு தேவைப்படும். நான் எனக்கு போட்டுக்கறேன்” என்று குறிஞ்சி தடுக்க…

“ஷ்… குடி கேர்ள்…” என்று அவளிடம் அதை தந்த ஈத்தன்…

“கொஞ்சம் ரிலாக்ஸா இரு குறிஞ்சி. நீ உன்னை ரொம்ப ஸ்ட்ரெஸ் பண்ணிக்கிற. நான் உன்னை பத்தி எப்பவும் தப்பா நினைக்க மாட்டேன் டா. ஃபிரியா இரு” என்று அவளின் கன்னத்தில் தட்டி கூறி, “பேபி தனியா இருக்கா பாரு. வா அங்க போகலாம்.” என்று அவளை அழைத்தவன்…

சட்டென்று ஞாபகம் வந்தவனாக, “இனி எப்பவுமே நான் உனக்கு சார் இல்லை குறிஞ்சி. ஈத்தன் கூப்பிடு. இல்லை முன்னாடி மாதிரி சமர்னு கூட கூப்பிடு. பட் சார் கண்டிப்பா வேண்டாம். சரியா மா” என்று இலகுவாக கூறிவிட்டு சென்றுவிட…

‘அம்மாடி எத்தனையை தான் நான் இன்னைக்கு பார்க்கிறது’ என்று குறிஞ்சி தான் அயர்ந்து போனாள்.

ஈஷா பிறந்த சமயம், மருத்துவமனையில் தங்கியிருந்த நாட்களில் அவனை ‘சார்’ என்று அழைக்கக்கூடாது என்று ஈத்தன் படித்து படித்து குறிஞ்சியிடம் கூறியிருக்க… அவளுக்கு அதுமட்டும் தான் வாயில் வந்தது… அதில் முடிந்தளவு அவனை, யாரும் உடன் இருந்தால், அழைக்கவே மாட்டாள்…

வெகு ஜாக்கிரதையாக இருந்துக்கொள்வாள்.

அப்படி இருந்தும் ஒருமுறை மட்டும் தவறுதலாக மருத்துவர் முன்பே ‘சா..’ அழைக்கப்போனவள்… ஈத்தனின் எச்சரிக்கை பார்வையில்… அதை அப்படியே ‘சமர்’ என்று சமயோசிதமாக மாற்றி கூறி தப்பித்துவிட்டாள்… 

பிறகு அதுவே தொடர்கதையாகி… 

சார்… சமராகி… 

சமர்… சமர் சாராகி 

என்று பல குளறுபடிகள்…

காதல் வருவதற்கு முன்பே, அவன் மீது அவளுக்கு அவ்வளவு மரியாதை வந்துவிட்டு இருந்ததில்… அவனை அவளால் ஒருமுறை கூட இயல்பாக பெயர் சொல்லி அழைக்க முடிந்தது இல்லை…

இன்று மீண்டும் அந்த சோதனை ஆரம்பித்துவிட்டதில்… 

‘ஐயோ! என்னால் அவரை, பேர் சொல்லி கூப்பிட முடியவே முடியாது…’ என்று நின்று விட்டவள்… 

ஒருசில நிமிடங்கள் கழித்து மெல்ல ஹாலிற்கு வர…

அங்கு அவளும், ஈத்தனும் சேர்ந்து முதன் முதலாக எழுதிய உயிர் கவிதை…

அவள் ஆசை ஆசையாக பார்த்து அமைத்த ஊஞ்சலில் அமர்ந்து, ஆடியப்படியே இனிப்பை சாப்பிட்டுக்கொண்டிருக்க…

அவள் அருகே பிளாஸ்டிக் நாற்காலி போட்டு அமர்ந்திருந்த ஈத்தனும்… டீ குடித்தப்படியே, இனிப்பை சிறிது சிறிதாக ரசித்து உண்டுக்கொண்டிருந்தான்…

‘கண்ணா இரண்டு லட்டு தின்ன ஆசையா’ என்பது போல் அவளின் இரண்டு லட்டுகளையும் கண்களில் நிரப்பிக்கொண்ட குறிஞ்சி…

ஈத்தன் சொன்னது போல், நிழலுடன் வாழ்ந்தது போதும், இனி நிஜத்துடன் வாழலாம் என்று முடிவெடுத்து தன் முதல் அடியை எடுத்து வைத்து, அவர்களுடன் சென்று சேர்ந்துக்கொண்டாள்.
________________________________

📍அடுத்த அத்தியாயம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻

கருத்துகள்

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates

Popular posts

New Ongoing 💌 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🎼🪻😘💌

Completed- உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே💘- (Completed story available here for free Read)

🔴My Complete Novel List: Ongoing and Finished

Completed-💃🕺அழகான இராட்சசியே அடிக்கரும்பாய் இனிக்கிறியே - Romantic Entertainment

Completed-மகிழ்மதியின் அரசன்- Royal Family Based Romantic love story