35.2 அந்திப்போர்
சிறிது நேரத்தில் ஈத்தனுக்கு தொலைப்பேசியில் அழைப்பு வர… வெளியே சென்று பேசிவிட்டு உள்ளே வந்தவனுடன்… அவனை தொடர்ந்து உள்ளே வந்த தாமஸ்…
ஈத்தன் மற்றும் ஈஷாவின் பொருட்கள் அடங்கிய இரண்டு சிறிய ட்ராலிகளையும்… அவர்கள் அனைவருக்குமான இரவு உணவையும் வைத்துவிட்டு… ஈத்தனுடன் பேசிக்கொண்டிருக்க…
குறிஞ்சி தான், ‘அச்சோ இங்க சாப்பாடு வச்சி சாப்பிட சின்ன மேஜை கூட இல்லையே… ரூம்ல இருக்கிறதை எடுத்து வந்து போடலாமா… ஆனா அது உயரம் சரி வராதே’ என்று அவர்களின் வசதிக்கு பார்த்து தவிக்க…
ஈத்தனுக்கும், ஈஷாவிற்கும் அந்த வீட்டின் வசதி குறைப்பாடுகள் எதுவுமே கண்ணுக்கு தெரியலை…
குறிஞ்சியுடன் இருக்கும் நேரத்தை மட்டுமே கருத்தில் கொண்டு, அதை மட்டுமே அனுபவித்துக்கொண்டிருந்தனர்…
அவள் வாழும் இடத்தில் அவர்களால் வாழ முடியாதா என்ன?!
குறிஞ்சிக்கு அப்பொழுது தான், அவளுடன் மதர் கூறி தங்கியிருந்த ஆசிரியர் பெண்ணின் ஞாபகம் வந்து, ஓடிச்சென்று அவளின் அறையை பார்த்தாள்…
அந்த அறையோ, சிறு துரும்பு கூட அங்கு இல்லாமல், சுத்தமாக காலி செய்யப்பட்டு காணப்பட…
‘என்ன இது’ என்று உடனே அவளுக்கு குறிஞ்சி தொலைப்பேசியில் அழைத்து விசாரிக்க…
“ஈத்தன் சார், இன்னும் உங்கக்கிட்ட எதுவும் சொல்லலையா அக்கா. சார் இனி உங்களோட சென்னை வீட்டில் தான் எனக்கு ட்யூட்டின்னு சொல்லி, காலையிலேயே வீட்டை காலி செய்ய சொல்லிட்டார்” என்று அப்பெண் கூற…
மொழி அறியாத படம் போல், ‘என்ன பேசுகின்றாள் அவள்’ என்றே குறிஞ்சிக்கு புரியவில்லை…
அதை அவளுக்கு புரிய வைக்கவே அங்கு ஈத்தன் வந்திருந்தான்.
“என்னை என்ன கேர்ள் பண்ண சொல்ற? நீ பாட்டுக்கும் க்ரேசி மாதிரி கண்டதை பேப்பரில் எழுதி குப்பையில் போட்டுட்டு… நடுராத்திரி யாருக்கும் தெரியாமல் கிளம்ப பார்த்துன்னு… அவ்வளவு அமர்க்களம் நீ…”, என்று லேசாக கண்டிக்கும் விதமாக கூறியவன்.
“உன்னை எந்த நம்பிக்கையில் என்னால் தனியா விட முடியும் சொல்லு… அதான்… நான் வரும் வரை உனக்கு சென்டினல்(பாதுக்காப்பு) போட்டேன்…” என்றுவிட…
குறிஞ்சியின் கண்களில் மீண்டும் நீர் திரள ஆரம்பித்துவிட்டது…
இம்முறை வருத்தத்திலோ, பதட்டத்திலோ இல்லை…
மகிழ்ச்சியில் மட்டுமே.
எத்தனை நாட்கள், ‘ஈத்தன் தன்னை கண்டுக்கொள்ளாமல் அப்படியே விட்டு விட்டானே… அவ்வளவு தான் நானா அவனுக்கு…’ என்று அவள் தவித்து இருப்பாள்…
இன்று அதெல்லாம் ஒன்றுமில்லாமல் போயிவிட்டு இருந்தது…
அதில் அவள் இதழ்கள் மெல்ல புன்னகைக்க…
“காட்… எல்லாத்தையும் செய்துட்டு சிரிக்கறியா கேர்ள் நீ…” என்ற ஈத்தன்… சிரிப்பதில் நன்கு பெரிதாகிவிட்ட அவளின் கன்னத்தில் எப்பொழுதும் போல் லேசாக தட்டியவன்… அத்துடன் முடிக்காமல் அவனின் பெருவிரல் மற்றும் ஆட்காட்டி விரலால் அவளின் மொத்த கன்னத்தையும் கிள்ளுவது போல் அள்ளியெடுத்துக்கொள்ள…
குறிஞ்சியின் இதயம் துடிப்பதையே நிறுத்திவிட்டது.
ஈத்தனின் தொடுகையில் வந்திருந்த வித்தியாசத்தை, அவளின் தேகமும், பார்வையில் வந்திருந்த மாற்றத்தை அவள் கண்களும், அச்சு பிசகாமல் உணர்ந்து, அவளின் தேகம் மொத்தமாக ஒருமுறை சிலிர்த்து அடங்க…
அதிர்ச்சியில் பெரிதாக விரிந்துவிட்ட அவளின் விழிகளை பார்த்தப்பிறகு தான்… ஈத்தனுக்கு அவன் செய்துக்கொண்டிருப்பது புரிந்தது…
அவனுக்கும் அது அதிர்ச்சியளிக்க…
“Oh man, what have you done now?” என்று பட்டென்று தன் கரத்தினை விலக்கிக்கொண்டவன்… அக்கரம் கொண்டே தன் முன் தலைமுடியை அழுந்த கோதி… ஒன்றும் நடக்காதது போல் முகத்தை வைத்துக்கொண்டு… தன்னை சமன் செய்துக்கொள்ள பார்க்க…
அவனின் செயல்களில் குறிஞ்சி தான் திருதிருவென விழித்துக்கொண்டு நின்று இருந்தாள்.
________________________________
நல்லவேளையாக, ஈத்தனிடம் இருந்து குறிஞ்சியையும்… குறிஞ்சியிடம் இருந்து ஈத்தனையும்… காப்பாற்றவே, அங்கு, “பேபி…” என்றவாறு ஈஷா வந்து சேர்ந்தாள்.
ஈத்தன் போலவே தான், இரவு உணவிற்கு முன் குளிக்கும் பழக்கம் கொண்டவள் ஈஷா.
அதில் ஈத்தன் குறிஞ்சியிடம், “பேபி வாஷ் எடுக்கனும்” என்று கூற…
“ரூம்ல இருக்கும் பாத்ரூம்ல ஹீட்டர், ஷவர் எல்லாம் இருக்கு சா…” என்றவள்… ஈத்தனின் பார்வையில் சாரில் ‘ர்’ ரை அப்படியே மிழுங்கிவிட்டு…
“ஈஷாக்கு பிடிக்குமான்னு தெரியலை. நீங்க ஒருமுறை பார்த்துட்டு சொல்லுங்க… இல்லைன்னா நான் அவளை ஸ்கூல்ல இருக்கும் பாத்ரூம்க்கு குளிக்க கூட்டிட்டு போயிட்டு வரேன்” என்றாள்.
“நோ பிராப்ளம் குறிஞ்சி. நான் அன்னைக்கு பார்க்கும் போது நீட்டா தான் இருந்தது. அது போதும். பேபி அடாப்ட் ஆகிப்பா…” என்ற ஈத்தன்…
அவனுடைய மற்றும் ஈஷாவின் பெட்டியுடன் அறைக்குள் நுழைய போக…
‘இவர் எப்ப நம்ம வீட்டு பாத்ரூமை பார்த்தார்’ என்று யோசிக்கும் போது தான் குறிஞ்சியின் மண்டையில் பல்ப் எரிந்தது…
அதில் ‘அச்சோ…’ என்று குடுகுடுவென்று ஓடி வந்தவள்…
“வேண்டாம்…” என்று ஈத்தனின் கரம் மீது தன் கரம் வைத்து… தாழ்ப்பாளை திறக்க விடாமல் பிடித்துக்கொள்ள…
“என்ன கேர்ள்…?” என்று அவள் புறம் திரும்பிய ஈத்தனுக்கு… அவள் முகம் பார்த்தே எல்லாம் புரிந்துவிட்டது.
ஒரு புறம் அவனுக்கு பயங்கர சிரிப்பு வர… மறுபுறம் அவள் படும் பாட்டை நினைத்து பாவமாகவும் இருந்தது…
குறிஞ்சி, ஈஷாவை கண்ணால் காட்டி, ‘வேண்டாம்’ என்று அவனிடம் பார்வையாலேயே கெஞ்சினாள்.
அவன் முன்னால் மானம் போனது பத்தாமல். மகள் முன்பு வேறு அவளின் மானம் பறக்க வேண்டுமா என்ற தவிப்பு அவளிடம்.
அதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைப்பது போல் ஈஷா, “பேபி இந்த ரூம்ல தான் நீங்க காட்டுன நம்மளோட ஃபோட்டோ கலெக்ஷன்ஸ், திங்க்ஸ் எல்லாம் அம்மா வச்சி இருக்காங்களா… சீக்கிரம் ஓப்பன் பண்ணுங்க…. நான் பார்க்கனும்…” என்று இருந்தாள்.
அதில் நிஜமாலுமே குறிஞ்சிக்கு மாரடைப்பு வந்துவிடும் போல் இருந்தது.
‘அடப்பாவி…’ என்று அவள் ஈத்தனை அதிர்ச்சியாக பார்க்க…
“கூல் கேர்ள்” என்று அவளிடம் கூறிய ஈத்தன்…
அறை கதவை திறந்து ஈஷாவுடன் உள்ளே நுழைந்து இருந்தான்.
________________________________
“ஹோ! Breathtaking பேபி!” என்று அந்த அறையை, ஒருமுறை நின்ற இடத்திலேயே நின்று சுற்றி பார்த்த ஈஷா…
அவளின் சிறு வயது புகைப்படங்களை எல்லாம் பார்த்து பயங்கர ஆர்வம் ஆகி… ஒவ்வொன்றாக பார்க்க தொடங்கிவிட்டு இருந்தாள்…
ஈத்தனின் கையை பற்றியப்படியே நடந்தவள்…
“பேபி இது எப்போ எடுத்தது…”
“அது எப்போ எடுத்தது…”
என்று அவ்வளவு மகிழ்ச்சியாக கேட்டுக்கொண்டிருக்க…
ஈத்தனும் அவளுக்கு இணையாக அவளுடன் நடந்தப்படியே, இயல்பாக பதில் கூறிக்கொண்டிருந்தான்…
அதில் குறிஞ்சிக்கு மனதில் இருந்த சங்கடங்கள் மெல்ல குறைய ஆரம்பித்தது…
தாய் தந்தை இடையேயான காதலையும், அன்பையும் ஆரோக்கியமான முறையில் பிள்ளைகள் அறிந்துக்கொள்வதில் தவறு என்ன இருக்கிறது. சொல்லப்போனால் அது தானே அவர்களின் மனதில் ஆழ பதிந்து, குடும்ப அமைப்பு மீதான நல்ல கண்ணோட்டத்தையும், ஈர்ப்பையும் தரும்.
குறிஞ்சி அவர்கள் மீது வைத்திருக்கும் அன்பினை, ஈஷா புரிந்துக்கொள்ள வேண்டும் என்று தான் ஈத்தன் அனைத்தையும் அவளுடன் பகிர்ந்தது. அதிலும் பன்னிரண்டு வயது பெண்ணான அவளுக்கு குறிஞ்சி மீது அவ்வளவு எளிதாக பிடிப்பு வந்துவிடுமா…
ஈத்தன் தானே வர வைக்க வேண்டும்.
அவன் பிரித்து வைத்ததை, அவனே சேர்த்தும் வைத்து இருந்தான்…
________________________________
📍அடுத்த அத்தியாயம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻
கருத்துகள்
கருத்துரையிடுக