37.2

இன்னுமே தன்னிலை உணராது, கண்கள் எல்லாம் கலங்கி, முகம் மொத்தமும் கலவரம் பூசிக்கொண்டு, மூச்சுவாங்கிய வண்ணம் இருந்த குறிஞ்சியை…

“ஹேய் ஈசி கேர்ள்… ஒன்னுமில்லை… இங்கப்பாரு… I’ve got you, you are safe now” என்று ஈத்தன் சமாதானம் செய்ய…

குறிஞ்சியின் இதய துடிப்புகள் சீராக சில பல வினாடிகள் பிடித்தது.

‘நல்லவேளை இந்த வயசில் விழுந்துவாரி மானம் போகலை…’ என்று நினைத்தவள்… கடவுளுக்கு நன்றி கூறிவிட்டு…

அவர் அனுப்பி வைத்த ஈத்தனுக்கும், “தேங்க் யூ சார்…” என்றவள்… 

அவனின் முறைப்பில் பல்லை கடித்து, கண்களை சுருக்கி, “அச்சோ சாரி, பதட்டத்தில் மறந்துட்டேன்”, என்று அவனிடம் மன்னிப்பு கேட்டவள், “தேங்க்யூ ங்க…” என்றாள் சாரை விடுத்து.

அதில் ஈத்தனின் பார்வையில் இருந்த அனல்… அவனின் கண்களின் நிறத்திற்கு ஏற்ப குளிர தொடங்க…

சற்று நிம்மதியான குறிஞ்சியின்‌ உடல், அப்பொழுது தான் அவளின் உடலில் ஏறும் வெப்பத்தை உணர்ந்து இருந்தது!

அதில் கீழே விழ போகின்றோம் என்ற போது கூட துடிக்காத அளவிற்கு, அவளின் இதயம் எகிறி குதித்து துடிக்க ஆரம்பித்துவிட்டது…

அந்தளவிற்கு, வியர்வையில் குளிர்ந்திருந்த அவளின் மொத்த இடதுப்பக்க இடையையும், ஈத்தனின் நீண்ட உள்ளங்கரம் தனக்குள் அழுத்தி பிடித்து வைத்து இருந்தது.

அதில் மறுநொடியே, உடல் முழுவதும் வெடவெடக்க, பதறிப்போன குறிஞ்சி… அவளின் இடையை இறுக்கமாக பிடித்திருந்தவன் கரம் மீது தன் கரத்தை அழுத்தமாக வைத்தவள்…

அவஸ்தையாக அவன் முகத்தினை நிமிர்ந்து பார்க்க…

“இன்னும் என்ன கேர்ள்…?” என்ற ஈத்தன்… பிறகே அவனின் கரத்தினுள் நெளியும் அவளின் உடலை உணர்ந்து இருந்தான்.

அதிலும் அவன் கரம் மீதிருந்த அவளின் கரத்தின் நடுக்கமும்…

சடுதியில் முகம் முழுவதும் முத்து முத்தாக உற்பத்தியாகிவிட்ட வியர்வையும்…

அவளின் துடிக்கும் ஈர இதழ்களும்…

அவனின் இதய துடிப்பையும் மெல்ல உயர்த்த ஆரம்பிக்க. அவன் இதழ்களில் ஓடிவந்து வந்து அமர்ந்திருந்தது ஓர் மந்தகாச புன்னகை…

அதோடே அவள் கண்களை நெருக்கமாக பார்த்தவன்…

“ஓ நான் குறிஞ்சி மலரை தொடக்கூடாதா…?” என்று மேலும் அவளின் இடையில் அழுத்தம் கூட்டி கேட்க…

‘அச்சோ… என்ன இவர் இப்படியெல்லாம் கேட்கிறார்’ என்று அதிர்ந்து பதறிய குறிஞ்சியின் விழிகள் இரண்டும் தெரித்துக்கொண்டு வெளியே குதிக்க பார்க்க… அவன் கையின் மீதிருந்த அவளின் கையும் தன் அழுத்தத்தை கூட்டி இருந்தது...

அதில் இன்னும் பெண்மையின் மென்மையை ஈத்தன் கரம் ஆழமாக உணர… சிறு கூச்சம் கூட இல்லாது வசதியாக அவளில் கரைய ஆரம்பித்துவிட்டு இருந்தான்.

அதில் குறிஞ்சிக்கு தான் இடையில் அதிகரித்துவிட்ட ஈத்தனின் உள்ளங்கை தரும் கதகதப்பில், குளிர் காய்ச்சல் வந்துவிடும் போல் இருந்தது.

ஈத்தனின் எதிர்பாராத இந்த அழுத்தமும், எல்லைத்தாண்டிய அவனின் பேச்சும் ஒருபக்கம் என்றால்…

வினாடிக்கு வினாடி அவனின் நீல விழி பார்வையில் ஏறும் மையல், குறிஞ்சியை மொத்தமாக நிலைக்குலைய செய்ய…

உடலில் எங்கெங்கோ கூச ஆரம்பித்தது அவளுக்கு.

அதில் அவளிடம், ‘உன்னை நான் தொடக்கூடாதா’ என்ற கேள்விக்கு பதில் வேண்டி நின்றிருந்தவனை… அவள் பதில் கூறும் மொழி மொத்தத்தையும் மறந்து பார்க்க…

குறிஞ்சியின் அந்த சிவந்த முகம், ஈத்தனின் மனதில் நொடியில் என்னென்னவோ எண்ணங்களை வரிசையாக தோற்றுவிக்க…

“I hate my mind” என்றவன்…

தன் முக மாற்றத்தை மறைக்க, பக்கவாட்டில் தன் முகத்தை திருப்பிக்கொண்டு இருந்தான்…

ஓரிரு வினாடிகளுக்கு பிறகே குறிஞ்சி பக்கம் மீண்டும் திரும்பி இருந்தான்…

அவளோ இன்னும் அவனின் கரத்தினுள் நெளிந்துக்கொண்டே இருக்க…

அவனில் உருகும், அவளின் கண்கள் இரண்டினையும் மாறி மாறி பார்த்தவன்…

அவளின் இடையில் இருந்த தன் கரத்தினை மெல்ல விலக்க ஆரம்பிக்க… அதை உணர்ந்து ‘அப்பாடா’ என்ற நிம்மதி மூச்சுடன்… குறிஞ்சியும் அவன் கரம் மீதிருந்த தன் கரத்தினை விலக்கிக்கொள்ள…

“கூல்” என்ற ஈத்தன்…

குறிஞ்சி சற்றும் எதிர்பாராத விதமாக… அவளின் இடையை பிடித்திருந்த கரம் மட்டுமில்லாமல்… அவளின் சைக்கிளின் கைப்பிடியுடன் சேர்த்து பிரேக்கை அழுத்தி பிடித்து வைத்திருந்த தன்னுடைய மற்றொரு கரத்தினையும் பட்டென்று விலக்கி இருந்தான்… 

அதில் அப்பொழுது தான் சற்று மூச்சு விட ஆரம்பித்திருந்த குறிஞ்சி… மீண்டும் பதறி… “அச்சோங்க… பிடிங்க பிடிங்க” என்று கத்த… 

கல் நெஞ்சக்காரன் அசையவே இல்லை…

அதில், மொத்தமாக அவன் மீது சைக்கிளுடன் சரிந்துவிட்டிருந்த குறிஞ்சிக்கு… மூச்சே சுத்தமாக வெளிவரவில்லை…

இடையை அவன் தொட்டதற்கே, அவளின் இதயம் இடைவெளியின்றி துடித்து வைத்திருக்க.

இப்பொழுது மொத்தமாக அவனை தொட்டுக்கொண்டு இருப்பதில் மாரடைப்பே வந்துவிடும் போல் இருந்தது அவளுக்கு.

ஈத்தனின் ஆண் வாசனை அவளை மொத்தமாக நிறைக்க ஆரம்பிக்க… இதற்கு மேல் தன்னால், ‘இந்த உணர்வுகளை எல்லாம் என்னால் தாங்க முடியாது… அச்சோ போதும் ஓடிவிடலாம்’ என்று நினைத்த குறிஞ்சி…

சைக்கிளில் இருந்து வேகமாக இறங்க பார்க்க… முடியவில்லை… ஒழுங்கில்லாமல் இருந்த பொசிஷனில் ஒன்றும் புரியாமல் அவள் அப்படியும் இப்படியும் அவன் மீதே அசைய…

அவளின் செய்கைகள் அனைத்தையும் குறுகுறுப்பு புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்த ஈத்தனின் கரம்… இப்பொழுது மீண்டும் குறிஞ்சியின் இடையை நோக்கி செல்ல ஆரம்பித்து இருந்தது…

இம்முறை தன் விரல்களின் நுனி கூட படாதவாறு, அவளின் இடையில் இருந்து சரிந்திருந்த புடவையை மீண்டும் மேலேற்றி, எப்பொழுதும் அவள் செய்வது போலவே, அவளின் பளிச்சென்ற எலுமிச்சை நிற இடையை, அந்த கருப்பு நிற சாஃப்ட் காட்டன் புடவையை வைத்து மறைத்து சரிசெய்த ஈத்தன்…

ஆடை மறைத்துவிட்ட அவளின் இடையில் அழுத்தமாக தன் கரத்தினை பதிய வைத்து… சைக்கிளையும், அவளையும் நேராக நிமிர்த்தி நிற்க வைக்க…

குறிஞ்சி தன் இரண்டு கண்களையும், மிக மிக இறுக்கமாக எப்பொழுதோ மூடிவிட்டு இருந்தாள்.

ஈத்தன் அவள் புடவையை சரி செய்த விதத்திலேயே, அவளை அவன் எவ்வளவு தூரத்திற்கு கவனித்து இருக்கின்றான் என்று தெரிந்திருக்க… குறிஞ்சியின் அடிவயிற்றில் பல கலவரங்கள்…

அதை மேலும் அதிகரிக்கும் வண்ணம் “இப்ப நான் டச் பண்ணலை கேர்ள். நீ கண்ணை திறக்கலாம்” என்று வேறு ஈத்தன் கூற…

உள்ளுக்குள், ‘அச்சோடா’ என்றானவள். ‘இன்று இவருக்கு என்ன ஆனதோ’ என்று எண்ணி, தன் கண்களை மேலும் இறுக மூடிக்கொள்ள…

“பேபி, வேர் ஆர் யூ? அம்மா எங்க இருக்கீங்க?” என்று அவர்களை காணாமல் தேடும் ஈஷாவின் குரல் கேட்க…

சட்டென்று இருவரின் உணர்வுகளும் வடிந்து இருந்தது…

“பேபி டேடி இங்க இருக்கேன்… வா டா…” என்று குரல் கொடுத்த ஈத்தன்… குறிஞ்சியின் கைப்பற்றி சைக்கிளில் இருந்து இறக்கிவிட…

அவளுக்கு நீண்ட நேரம் சைக்கிளை மிதித்ததில் இரண்டு கால்களும் கிடுகிடுவென்று நடுங்கின. அதில் அவள் தோளினை சுற்றி தன் கரத்தினை போட்ட ஈத்தன். அவளை தன்னுடன் சேர்த்து நிற்க வைத்துக்கொள்ள.

அதற்குள் அங்கு தன் சைக்கிளில் பறந்து வந்துவிட்ட ஈஷா…

குறிஞ்சியின் முகத்தை பார்த்தே…

“ஆர் யூ ஓகே அம்மா” என்று ஓடிவந்து அவளின் கையை பற்றிக்கொள்ள…

நடந்ததை அவளிடம் பகிர்ந்துக்கொண்ட ஈத்தன். இனி கவனமாக இருக்குமாறு இருவரிடமும் கூறி, நாளை சைக்கிள் ஓட்டலாம், இப்பொழுது வீட்டிற்கு போகலாம் என்றான்.

உடனே அதற்கு ஒப்புக்கொண்ட ஈஷா… குறிஞ்சியுடன் நடக்க…

அங்கு உள்ளுக்குள் ஓட்ட வைத்திருக்கும் பேட்ரி காரினை செக்யூரிட்டியை எடுத்து வரக்கூறிய ஈத்தன்‌‌… இனி லேடி செக்யூரிட்டியை தோட்டத்தில் ஈஷா மற்றும் குறிஞ்சி இருக்கும் போது உடன் இருக்குமாறு பார்த்துக்கொள்ள கூறிவிட்டு…

குறிஞ்சியையும், ஈஷாவையும் காரில் அமர வைத்து, அவனே ஓட்டிக்கொண்டு வீட்டிற்கு சென்று இருந்தான்.

குளித்துவிட்டு வந்த குறிஞ்சியை ஈத்தன் சொன்னதாக கூறி, ஈஷா படுத்து ஓய்வெடுக்க கூற…

குறிஞ்சிக்கும் அது தேவையாக இருந்தது. சைக்கிள் கொடுத்த அனுபவத்தால் இல்லை. ஈத்தன் கொடுத்திருந்த அனுபவத்தால்.

அவனின் ஒரே தொடுகையில், அவளின் உடலில் இருக்கும் சக்தி மொத்தமும் எங்கே போனது என்று புரியாமல்… படுக்கையில் படுத்தவளுக்கு… இன்னும் ஈத்தனின் கரம் அவள் இடையை அழுத்தும் உணர்வு…

‘கடவுளே’ என்று நினைத்தவள்… ‘நல்ல வேளை ஈஷாக்குட்டி வந்து காப்பாற்றினாள்… இல்லை என்றால் அவ்வளவு தான்’ என்று குறிஞ்சி நினைக்க…

அவளின் ஈஷாக்குட்டியோ, அன்று இரவே அவளை ஈத்தனிடம் விட்ட இடத்திலேயே மீண்டும் நிறுத்தி, மாட்டிவிட்டு இருந்தாள்.
________________________________

மேலே மாடி தோட்டத்தில், ஈத்தனுடன் சேர்ந்து ரோஜா செடிகளை பராமரிக்கும் வேலையை பார்த்துவிட்டு, கீழிறங்கி அறைக்குள் வந்த ஈஷா, “அம்மா, சாப்பிட போகலாம் வாங்க. ஐ யம் ஹங்ரி” என்று இரவு உணவிற்கு குறிஞ்சியை அழைக்க…

“அச்சோ! செல்லம்மாக்கு பசிக்குதா… முன்னாடியே வந்து இருக்கலாம் இல்ல…” என்று மணி போனது தெரியாமல் ஈத்தன் நினைப்பில் இருந்துவிட்ட குறிஞ்சி, படுக்கையில் இருந்து உடனே எழுந்துக்கொண்டாள்.

சுடிதாரின் மீதிருந்த துப்பட்டாவை ஒழுங்காக சரிசெய்தப்படியே அவள் கிளம்ப, ஈத்தன் அறைக்குள் நுழைந்து இருந்தான்.

அவனின் பர்ஃபியூம் மணத்தை தொடர்ந்து அவனை கண்டுவிட்ட குறிஞ்சிக்கு, பட்டென்று அடிவயிற்றை எதுவோ உள்ளிருந்து இழுத்துப்பிடிப்பது போல் இருக்க. அடுத்த அடியை எடுத்து வைக்க மறந்து அப்படியே அவள் நின்றுவிட்டாள்.

அவளின் கை வேறு தானாக ஓடிச்சென்று இடையை தொட்டும் பார்த்துக்கொள்ள…

குறிஞ்சியையும், ஈத்தனையும் மாறி மாறி திரும்பி பார்த்த ஈஷா, “என்ன ஆச்சு அம்மா… ஏன் பேபியையே முறைச்சு பார்க்கறீங்க…” என்று குறிஞ்சியின் கையைப்பிடித்து இழுத்தப்படியே கேட்க.

“அச்சோ… நான் முறைக்கலாம் இல்ல பாப்பா…” என்று பதறி பட்டென்று தன் பார்வையை ஈத்தனின் மீதிருந்து விலக்கிக்கொண்ட குறிஞ்சி, ‘நம் பார்வை முறைக்கும் போலவா இருக்கிறது’ என்று திருதிருவென முழிக்க…

ஈத்தனால் வந்த சிரிப்பை அடக்க முடியாமல் போனது.

அதில், “அம்மாக்கு இன்னும் சைக்கிள்ள இருந்து விழப்போன நினைப்புன்னு நினைக்கிறேன் பேபி…” என்றான் ஈத்தன் வேண்டுமென்றே.

அதில் உண்மையிலுமே ஈத்தனை முறைக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட குறிஞ்சி… நிமிர்ந்து ஒருப்பார்வை அவனை பார்த்துவிட்டு… எங்கு அதையும் ஈஷா பார்த்துவிடுவாளோ என்று அஞ்சி உடனே தலையை குனிந்துக்கொள்ள…

ஈத்தனின் புன்னகை மேலும் விரிந்து இருந்தது.

‘வெரி சென்சிட்டிவ். லைட்டா டச் பண்ணதுக்கே எவ்வளவு கலட்டா இந்த கேர்ள்…’ என்று நினைத்தவனுக்கு ‘இன்னும் எவ்வளவு இருக்கிறது’ என்று எண்ணங்கள் எங்கெங்கோ பயணிக்க, ‘காட்…’ என்று தலைக்கோதி அந்த எண்ணங்களுக்கு கடிவாளமிட்டு உணவு மேஜைக்கு சென்று இருந்தான்.

பணியாள் வந்து அவர்கள் மூவருக்கும் தேவையானவற்றை வைத்துவிட்டு விலகிக்கொண்டார்.

ஈத்தனின் உணவு பழக்கவழக்கங்கள் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு எப்படியோ, அப்படியே தான் இன்றும் மாறாமல் இருந்தது.

லென்டில் சூப் எனப்படும் பல்வேறு பருப்புகளை ஒன்றாக போட்டு வைத்த சூப், உடன் அதிக சத்துக்கள் நிறைந்த பேக் செய்யப்பட்ட சாம்மன்(Salmon) மீன், மற்றும் காய்கறி சாலட். இதுதான் ஈத்தனின் பெரும்பான்மையான நாட்களின் இரவு உணவு.

ஈஷாவும் அதையே தான் விரும்பி உண்பாள். ஈத்தன் தான் அவளுக்கு அதனுடன் அவித்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கார்ன், இல்லை ஏதேனும் பழங்கள் சேர்த்து, வளரும் பிள்ளை என்பதால் கூடுதலாக உண்ண வைப்பான்.

அன்றும் அதேப்போல் அவன் அவளுக்கு பார்த்து பார்த்து பரிமாறி முடித்து… தன்னுடைய தட்டில் இருந்தும் முதல் சில வாய்களை எடுத்து அவளுக்கு ஊட்டி விட…

அதை எல்லாம் மென் புன்னகையுடன் பார்த்தப்படியே குறிஞ்சி தன்னுடைய தோசையை சாப்பிட ஆரம்பித்து இருந்தாள்.

அவள் வந்த மறுநாளே சமையல் ஆள் வந்து அவளுக்கு என்னனென்ன மாதிரியான உணவுகள் பிடிக்கும் என்று லிஸ்ட் எடுத்துக்கொண்டு சென்றிருக்க… தினமும் அதில் ஒன்று அவளுக்கு சரிவிகிதத்தில் சத்தாக தயாராக்கப்பட்டு வந்துவிடும்… அதில் இன்று அவளுக்கு பிடித்த தோசையிருக்க… ஈத்தனின் இன்றைய வம்பை சற்று மறந்து, ரசித்து சாப்பிட ஆரம்பித்து இருந்தாள்…

அப்பொழுது எதிர்ச்சையாக குறிஞ்சியின் தட்டை பார்த்த ஈஷா. அவள் கையால் தோசையை எடுத்து, அனைத்து வண்ண சட்டினி மற்றும் சாம்பாரில் தோய்த்தெடுத்து உண்பதை ஆச்சரியமாக பார்த்து வைக்க.

குறிஞ்சிக்கு அதன் பிறகுதான் ஏதோ நினைப்பில் எப்பொழுதும் போல், கையால் உணவை எடுத்து உண்ண ஆரம்பித்துவிட்டு இருந்தது தெரிந்தது.

அதில், எங்கு அவர்கள் இருவருக்கும், தான் நாகரிகம் குறைந்தவளாக தெரிவோமோ, பிடிக்காதோ என்று நினைத்தவள், உடனே, “ஒரு நிமிஷம் பாப்பா… நான் கைக்கழுவிட்டு வந்துடறேன்…” என்று எழுந்துக்கொள்ள பார்க்க.

“வொய் கேர்ள்…” என்று அவளை தடுத்த ஈத்தன். “உனக்கு எது கம்ஃபர்ட்டோ அப்படியே சாப்பிடு. அது உன்னோட உரிமை. நாங்க யாரும் உன்னை ஜட்ஜ் பண்ண மாட்டோம். வேற யாரும் பண்ணாலும் நீ அதையெல்லாம் கேர் பண்ண கூடாது” என்றவன்… 

ஈஷாவிடம் ‘உமையாள் பாட்டி, மயில் தாத்தா எல்லாம், அம்மா சாப்பிடுவது போல் தான் கையால் சாப்பிடுவார்கள்…’ என்றுக்கூற…

“ஓ! இன்ட்ரெஸ்டிங்!” என்ற ஈஷா, “அம்மா ஆ…” என்று குறிஞ்சியிடம் தனக்கு ஊட்டிவிட கூறி வாயை திறந்து காட்டி இருந்தாள்.

அதில் பூவாய் மலர்ந்துவிட்ட குறிஞ்சி, தோசையை அவளுக்கு பிடித்தவாறு தேங்காய், தக்காளி, புதினா என்று அனைத்து வித சட்டினியிலும், சாம்பாரிலும் தொட்டு எடுத்து ஈஷாவிற்கு ஊட்டிவிட…

அதை மெல்ல ஆரம்பித்த ஈஷா, “வாவ் அம்மா… நீங்க சாப்பிடும் முறையில் தோசை ரொம்ப சூப்பரா இருக்கு…” என்று ஒரே நேரத்தில் தெரியும் பல சுவையில் அவள் கவரப்பட்டு சப்பு கொட்ட…

குறிஞ்சி அடுத்தடுத்த வாயை எடுத்து அவளுக்கு ஊட்டி விட ஆரம்பித்து இருந்தாள்…

அதில் ஒருசில நிமிடங்களுக்குள்ளே பசியிலும், சுவையிலும் ஈஷாவின் வயிற்றுக்குள் இரண்டு தோசை சென்றுவிட்டு இருந்தது.

அப்பொழுது குறிஞ்சி அடுத்த வாயை எடுத்து ஈஷாவிற்கு ஊட்டப்போக. அவளோ, “பேபி… இங்க வாங்க…” என்று ஈத்தனை மேலும் அருகில் நெருங்கி வர அழைத்தவள்…

“அம்மா கையால் சாப்பிடும் போது ஃபுட் ரொம்ப யம்மியா இருக்கு… நீங்களும் ட்ரை பண்ணுங்க” என்றுக்கூற…

ஈத்தன், குறிஞ்சி இருவரின் கண்களும் அவசர அவசரமாக ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு இருந்தன…

அதில், ‘ஐயோ… இது என்ன புது வம்பு’ என்று சங்கோஜத்தில் குறிஞ்சி தன்னுடைய பார்வையை உடனே விலக்கிக் கொள்ள…

ஈஷா, “அம்மா இந்த வாயை பேபிக்கு ஊட்டிவிடுங்க…” என்று கோர்த்துவிட…

எதிரில் இருப்பவன் பேபியாக இல்லாமல் போனதில் குறிஞ்சிக்கு உணவேந்திய உள்ளங்கை கூச ஆரம்பித்து இருந்தது.

🔴அடுத்த அத்தியாயம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻 


கருத்துகள்

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates

Popular posts

New Ongoing 💌 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🎼🪻😘💌

Completed- உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே💘- (Completed story available here for free Read)

🔴My Complete Novel List: Ongoing and Finished

Completed-💃🕺அழகான இராட்சசியே அடிக்கரும்பாய் இனிக்கிறியே - Romantic Entertainment

Completed-மகிழ்மதியின் அரசன்- Royal Family Based Romantic love story