37.1

அத்தியாயம் -37

குறிஞ்சி கொடைக்கானல் விட்டு, ஈத்தனுடன் சென்னை வந்து ஒரு மாதத்திற்கு மேல் கடந்துவிட்டு இருந்தது‌.

அப்படி இருந்தும், அவர்கள் இருவரின் உறவும் கிணற்றில் போட்ட கல் போல் பெரிதாக எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே நாசுக்காகவே இருக்க... ஈஷா குறிஞ்சியின் உறவு மட்டும், முற்றிலும் அதற்கு எதிர்மாறாக மாறிவிட்டு இருந்தது.

ஈத்தன் மற்றும் குறிஞ்சி போல் எவ்வித தயக்கமும் இல்லாமல், தனக்கு பிடித்த குறிஞ்சியுடன் ஈஷா அப்படி ஒட்டிக்கொண்டு இருந்தாள்.

அதிலும், ஈத்தன் தவிர்த்து ஈஷா நெருக்கமாக பழகும் முதல் நபராக குறிஞ்சி இருந்தது மட்டுமில்லாது, அவள் பழகும் முதல் பெண்ணாகவும் குறிஞ்சி இருக்க…

ஈத்தனுடன் அவள் உறவு ஒரு மாதிரி என்றால், குறிஞ்சியுடன் அவளின் உறவு வேறு மாதிரியாக இருந்தது.

குறிஞ்சியை தாயாக பார்ப்பது மட்டுமில்லாமல், புதிதாக தனக்கு கிடைத்த தோழியாகவும் ஈஷா அவளை பார்த்தாள்.

பாட நேரம் போக, மற்ற நேரங்களில் குறிஞ்சிக்கு வீட்டை சுற்றிக்காட்டுவது, அவளுக்கு பிடித்தவற்றை காட்டுவது என்று ஆரம்பித்த ஈஷா…

அப்படியே அவளுடன் சேர்ந்து வரைவது, கிராஃப்ட்(craft) வொர்க் செய்வது, அனிமேஷன் படங்களை பார்ப்பது, தோட்டத்திற்கு சென்று விளையாடுவது என்று படிப்படியாக நாளுக்கு நாள் முன்னேறிக்கொண்டே சென்றவள்…

அதற்கு அடுத்தப்படியாக, கண்ணிற்கு மை வைப்பதில் ஆரம்பித்து, குறிஞ்சியிடம் இருந்து அவளை கவர்ந்த விஷயங்களை எல்லாம் உரிமையாக, “அம்மா எனக்கும் இதை சொல்லித்தாங்க” என்று ஆர்வமாக கேட்டு கற்றுக்கொள்வது, அதேப்போல் குறிஞ்சிக்கு தெரியாதவற்றை எல்லாம், அவளை பிடித்து வைத்து அவளுக்கு கற்றுக்கொடுப்பது என்று இருபத்தி நான்கு மணி நேரம் போதவில்லை ஈஷாவிற்கு.

சாந்தினி நன்றாக இருந்த காலத்தில் எல்லாம், குறிஞ்சி கூட அப்படி தான், பார்த்தவற்றை, கேட்டவற்றை எல்லாம் சாந்தினியிடம் வந்து கொட்டிவிடுபவள்… அவர் செய்யும் வேலைகளை எல்லாம் அவரின் முந்தானையை பற்றிக்கொண்டே கேட்டு கேட்டு கற்றுக்கொள்வாள்.

இப்பொழுது ஈஷா அவளுடன் அதேப்போல் சுற்றுவதில், சிறகில்லாமல் வானில் பறந்த குறிஞ்சி, ஈஷா வளைத்த பக்கமெல்லாம் நாணலாக வளைந்து அவளுக்கு ஏற்றப்படி நடந்துக்கொள்ள, இன்னும் சலுகையாக குறிஞ்சியிடம் ஒட்டிக்கொண்டாள் ஈஷா.

அதில் எல்லாம் ஈத்தனுக்கு சிறு பொறாமை கூட இல்லை…

மகிழ்ச்சி மட்டுமே…

அவன் ஏங்கிய விஷயங்கள் எல்லாம், அவனின் லட்டுக்குட்டிக்கு இரட்டிப்பாக கிடைக்கும் போது, கசக்குமா என்ன அவனுக்கு…

அதுமட்டுமின்றி, ஈஷாவுடன் இருக்கும் பொழுது குறிஞ்சியின் விழிகளில் நிரம்பி ததும்பும் ஆசை கலந்த நேசமும், தாய்மையில் அப்படி கனிந்துருகும் அவளின் மென் தேகமும், அவனை அவள் பால் அப்படி நெகிழ செய்திருந்தது…

முன்பு கவனிக்க தவறியவற்றை எதையும் இப்பொழுது அவன் தவறவிடுவதில்லை…

அதில், அவர்கள் இருவரும் மேலும் சேர்ந்திருக்கும் வகையில், எங்கு சென்றாலும் ஈஷாவை தன்னுடனே அழைத்துச்செல்பவன், இப்பொழுது அதை முற்றிலுமே தவிர்த்து, குறிஞ்சியிடமே அவளை வீட்டிலேயே விட்டு செல்ல ஆரம்பித்து இருந்தான்.

அதில் ஈத்தன் ஆசைப்பட்ட போலவே மேலும் குறிஞ்சியுடன் ஒட்டிக்கொண்ட ஈஷா, குறுகிய காலத்திலேயே ஈத்தனுக்கு இணையாக குறிஞ்சியை பார்க்க ஆரம்பித்துவிட்டு இருந்தாள்.
________________________________

அன்று வீட்டில் தான் ஈத்தன் இருந்தான்.

வீட்டில் இருந்த ஸ்டூடியோ அறையில், ஒரு புதிய படத்திற்கான டீசரில் பேக்கிரவுண்டில் இணைக்க, அந்த படத்திற்கு தக்க மியூசிக் தயாரித்துக் கொண்டு இருந்தான்.

எப்பொழுதும் போல் அவன் கண்கள், அருகில் இருக்கும் அறையில் படித்துக்கொண்டிருந்த ஈஷாவை, சிசிடிவியில் அப்பொழுது அப்பொழுது பார்த்துக்கொண்டன.

மதியம் 2 மணியுடன் ஈஷாவிற்கு வகுப்புகள் முடிந்துவிட…

குறிஞ்சியுடன் அவள் தோட்டம் பக்கம் செல்வதை பார்த்த ஈத்தன்… இதற்கு மேல் குறிஞ்சி பார்த்துக்கொள்வாள் என்ற நம்பிக்கையுடன் தன் வேலையில் மொத்த கவனைத்தையும் திருப்பி இருந்தான்.

அங்கு தோட்டத்தில், “ஒன்னுமில்லை ம்மா. பயப்படாதிங்க. நான் ஹெல்ப் பண்றேன். ரொம்ப ஈசி…” என்று குறிஞ்சியிடம் பேசிக்கொண்டிருந்த ஈஷா. குறிஞ்சியை சைக்கிளில் அமர வைத்து, அவளுக்கு சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்துக் கொண்டு இருந்தாள்.

அதில் குறிஞ்சிக்கோ தொடைகள் இரண்டும் அப்படி நடுங்கின.

அறியாத வயதில், விழுவோம் போன்ற கவலைகள் எதுவும் இல்லாது பழக வேண்டியதை. இப்பொழுது போய் பழக சொன்னால் எப்படி இருக்கும்.

“செல்லம்மா… நாளையில் இருந்து ஓட்ட ஆரம்பிக்கலாமா…” என்று குறிஞ்சி பின்வாங்க பார்க்க…

ஈஷா விடுவதாக இல்லை.

அதில், வேறுவழியின்றி குறிஞ்சியும் தட்டு தடுமாறி பழக ஆரம்பித்தாள்.

ஈஷா சைக்கிளின் பின் பக்கத்தை பற்றியப்படியே குறிஞ்சியுடன் வர…

மாலை நெருங்குவதற்குள்ளே, குறிஞ்சி சைக்கிளை தனியாக பேலன்ஸ் செய்ய ஆரம்பித்துவிட்டு இருந்தாள்.

அதில் ஈஷாவிற்கு பயங்கர குஷி…

அங்கேயே குறிஞ்சியுடன் மாலை ஸ்நாக்ஸ் சாப்பிடப்படியே ஈஷா, “பார்த்தீங்களா அம்மா! நான் சொன்னேன் இல்ல. செம ஈசி. இன்னும் கொஞ்சம் தான். ஓட்டிடலாம்” என்று குறிஞ்சியுடன் மீண்டும் சைக்கிளை எடுத்தவள். தொடர்ந்து குறிஞ்சியை சைக்கிளை மிதிக்க வைக்க பார்க்க…

குறிஞ்சிக்கும் இப்பொழுது தைரியம் கூடி, ஆர்வம் வந்துவிட்டு இருந்தது.

அதில் இருவரும் நேரம் போவது தெரியாமல் தோட்டத்தில் சுற்றிக்கொண்டு இருந்தனர்.

ஒருவழியாக தொடர்ந்து சைக்கிளை மிதிக்க கற்றுக்கொண்டாள் குறிஞ்சி. 

அதில் ஈஷா சைக்கிளின் பின்புறத்தை பற்றியப்படியே குறிஞ்சியுடன் அவள் ஓட்டும் வேகத்திற்கு இணையாக ஓடி வர…

“போதும் செல்லம்மா… உனக்கு கால் வலிக்கும்… நாளைக்கு திரும்ப ஓட்டலாம்…” என்ற குறிஞ்சி… ஈஷாவை நிறுத்த பார்க்க…

இளம் இரத்தம் ஓய்வை கேட்குமா என்ன…

“எனக்கு ஒன்னும் இல்லைம்மா… நீங்க இப்படியே ஓட்டுங்க…” என்று அவள் விடவே இல்லை.

இருந்தும் ஈஷாவின் முகத்தில் உற்சாகத்தை தாண்டி தெரியும் சோர்வு, குறிஞ்சியை தாக்க…

“அப்ப நீ நடுவிலேயே நில்லு செல்லம்மா… நானே தனியா ஓட்டுறேன்…” என்ற குறிஞ்சி. ஈஷாவிற்காக தன்னுடைய தைரியம் மொத்தத்தையும் திரட்டி வைத்து, அந்த கூடைப்பந்து மைதானத்திற்குள்ளே தனியாக ஓட்ட முயற்சித்து, வெற்றியும் கண்டு இருந்தாள்.

அதில் மகிழ்ச்சியாக துள்ளி குதித்த ஈஷா…

“அம்மா நான் போயிட்டு என்னோட இன்னொரு சைக்கிளை எடுத்துட்டு வரேன்… நாம இரண்டு பேரும் சேர்ந்து ஒரு ரைட் பொறுமையா தோட்டத்தில் போயிட்டு வரலாம்…” என்றுவிட்டு வீட்டை நோக்கி ஓடிவிட…

சைக்கிளில் அமர்ந்தப்படியே செந்நிறத்தில் சிவந்து… இருள் கவிழ தயாராகிவிட்டிருந்த அந்தி வானத்தை நிமிர்ந்து பார்த்த குறிஞ்சியின் முகம் பூவாய் மலர்ந்து இருந்தது.

பள்ளி நாட்களில் இந்த சைக்கிள், அவளுக்கு எட்டா கனியாக இருந்த பல கனிகளில் ஒன்று…

வீட்டில் பயன்பாடு இல்லாது நின்றுக்கொண்டிருந்த ஐஸ்வர்யாவின் பழைய சைக்கிளை, அவள் பள்ளிக்கு ஓட்டிச் செல்ல கேட்டதற்கே, அவளுக்கு அத்தனை அடி விழுந்து இருந்தது. அதிலும் அதை சாக்காக வைத்து சாந்தினிக்கும், அவளுக்கு விழுந்ததை விட இரண்டு மடங்காக அடி விழுந்துவிட… சைக்கிள் என்ற வார்த்தையை கூட அவள் கூறுவது இல்லை.

அதன் பின்னர், பத்தாம் வகுப்பில் அவளுக்கு அரசாங்கம் கொடுத்த இலவச சைக்கிளையாவது ஓட்டலாம் என்று அவள் ஆசையாக தள்ளிக்கொண்டு வந்து வீட்டில் நிறுத்தியிருக்க…

மறுநாள் காலையே அது அங்கு இல்லை.

லோகேஸ்வரி அதை அப்படியே பக்கத்து வீட்டு பெண்மணிக்கு விற்று காசாக்கி ஏப்பம் விட்டுவிட்டு இருந்தார்.

அதையெல்லாம் நினைந்து பார்த்தவள்…

“என் பூக்குட்டியோட சைக்கிளை தான், நான் முதன் முதலா ஓட்டனும்னு இருந்து இருக்கு போல. எவ்ளோ ஆசையா என் செல்லம் எனக்கு சொல்லி கொடுத்தா. என் சர்க்கரைக்கட்டி!” என்று அந்த கொடிய கடந்த காலத்தை விரட்டி… சுகமான நிகழ்கால மகிழ்ச்சியினை மட்டும் நினைவில் நிறுத்தி… குறிஞ்சி அதை அனுபவிக்க…

ஜில்லென்ற தென்றல் காற்று அவளை வருடிச்சென்றது.

வெயிலில் காய்ந்திருந்தவளுக்கு அது இதமாக இருக்க… ஈஷா வரும் வரை சைக்கிளை ஓட்டி பயற்சி செய்யலாம் என்று குறிஞ்சி மீண்டும் மெல்ல சைக்கிளை ஓட்ட ஆரம்பித்தாள்.

ஓட்ட ஓட்ட தடுமாற்றம் எதுவும் இல்லாது நன்றாக அவளுக்கு பேலன்ஸ் கிடைக்க, சிறிது சிறிதாக வேகத்தை கூட்டிக்கொண்டு இருந்தாள் குறிஞ்சி…

அதேநேரம் அங்கு வீட்டிற்குள் சென்றிருந்த ஈஷா, ஈத்தனிடம் நடந்ததை எல்லாம் ஒப்பித்துவிட்டு, தங்கள் அறைக்கு சென்று இருந்தவள். ரெஸ்ட் ரூம் சென்றுவிட்டு, கசகசவென்றாகிவிட்ட உடையை மாற்றிவிடலாம் என்று உடைமாற்றும் அறைக்குள் நுழையவும்…

இங்கு குறிஞ்சியின் சைக்கிள், பைக் வேகத்தில் பறக்கவும் சரியாக இருந்தது.

ஏதோ ஒரு தைரியத்தில் கொஞ்சமே கொஞ்சம் அவள் வேகமாக மிதித்ததற்கே, அந்த வெளிநாட்டு சைக்கிள் அவ்வளவு வேகமாக ஓட ஆரம்பித்துவிட்டு இருக்க… குறிஞ்சிக்கு பதட்டத்தில் சற்று முன்னர் கற்றுக்கொண்டவைகள் அனைத்தும் மறந்துவிட்டு இருந்தது.

கையில் கடகடவென்று சைக்கிள் பேலன்ஸ் சரியாக இல்லாது ஆட, எங்கே பிரேக்கை பிடித்தால் கீழே விழுந்து விடுவோமோ என்ற பயத்திலேயே, “ஈஷா பாப்பா… கொஞ்சம் சீக்கிரம் வாங்க…” என்று கத்தி அழைத்தப்படியே,
வேகத்தை சற்றும் குறைக்காமல் அப்படியே அந்த பேஸ்கெட் பால் கோர்ட்டிற்குள்ளே ஓட்டிக்கொண்டிருந்தவள்…

ஈஷாவை காணாது திரும்பி திரும்பி பார்க்க… அந்த கவன சிதறலில் சைக்கிள் தடம் மாறி அருகில் சறுக்கலாக இருந்த பல ஏக்கர் புல்வெளியின் பக்கம் திரும்பி ஓட ஆரம்பித்து இருந்தது…

அதில் “கடவுளே!” என்ற பயத்தில் வாய்விட்டே அலறிய குறிஞ்சி, சரிவில் அவள் மிதிக்காமலேயே எகிறி குதித்து இன்னும் வேகம் கூடி ஓடிய சைக்கிளை, ‘திருப்ப வேண்டும், ப்ரேக்கை அழுத்த வேண்டும்’ என்றெல்லாம் நினைத்தாளே தவிர ஒன்றையும் அவள் செயல்படுத்தவில்லை…

அதற்குள்ளே அங்கு பள்ளத்தில் வரிசையாக நின்றிருந்த பெரிய பெரிய மரங்களை, அவளுடைய சைக்கிள் நெருங்கிவிட்டு இருந்தது.

அதில், ‘போச்சு… போச்சு… இன்று இடுப்பு உடைந்து, கைக்கால் முறிய போவது உறுதி’ என்ற முடிவுக்கு வந்துவிட்டு இருந்தவள்.

நெஞ்சம் அதிர… பயத்தில் கண்களை இறுக மூடிக்கொண்டு, ‘அவ்வளவு தான்… இதோ விழப்போகிறோம்…’ என்று வரவிருக்கும் வலியை எதிர்நோக்க…

அவள் எதிர்ப்பார்த்த மாதிரியே மரத்தில் மோதிய சைக்கிள் பல்டி அடித்து கீழே விழுந்து இருந்தது…

அதில் “ஆ…”. என்று கத்த ஆரம்பித்தவள்…

“ஷ் குறிஞ்சி… கண்ணை திற… உனக்கு ஒன்னும் இல்லை…” என்ற ஈத்தனின் குரலில் பட்டென்று தன் கண்களை திறந்தவள்…

பிறகு தான், தான் இன்னும் தன்னுடைய சைக்கிளிலேயே இருப்பதை உணர்ந்து இருந்தாள்.

அப்படியானால் சத்தம் வந்ததே என்று அவள் குழம்பி மரத்தினை பார்க்க… அங்கு ஒரு சைக்கிள் கிடந்தது…

ஈஷா, ஈத்தனையும் சைக்கிள் ஓட்ட அழைத்திருக்க… தன்னுடையதை கராஜில் இருந்து எடுத்துக்கொண்டு வந்திருந்தவன்… குறிஞ்சியை காணாது… தன் மொபைலில் இருக்கும் சிசிடிவியை ஆன் செய்து அவள் எங்கே என்று பார்க்க… அதற்குள்ளே அவள் பயத்தில் போட்ட சத்தம் அவன் செவிகளை எட்டி இருந்தது.

அதில் நொடியும் தாமதிக்காமல் தன்னுடைய சைக்கிளை மிதித்தவன்… மின்னல் வேகத்தில் அவளை தாண்டிச் சென்று… தன்னுடைய சைக்கிளை அப்படியே விட்டுவிட்டு… அவளுடைய சைக்கிளை தன் காலால் மரித்து, அப்படியே பிடித்து நிறுத்தி இருந்தான்.

🔴 அடுத்த அத்தியாயம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻 


கருத்துகள்

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates

Popular posts

New Ongoing 💌 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🎼🪻😘💌

Completed- உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே💘- (Completed story available here for free Read)

🔴My Complete Novel List: Ongoing and Finished

Completed-💃🕺அழகான இராட்சசியே அடிக்கரும்பாய் இனிக்கிறியே - Romantic Entertainment

Completed-மகிழ்மதியின் அரசன்- Royal Family Based Romantic love story