2(a). சங்கீத வானில் ஓர் அந்திப்போர்! 🎼🪻😘
அத்தியாயம் -2
வரிசையாக ஈத்தன் அடுத்தடுத்த பாடல்களை பாடிக்கொண்டே போக, குறிஞ்சியோ இன்னமுமே அப்படியே தான், உட்காரும் எண்ணமில்லாது, தொலைக்காட்சி பெட்டியின் முன்பு நின்று இருந்தாள்.
நேரம் கடந்தும் தன் கண்களின் மணிகளை அப்பக்கம் இப்பக்கம் என்று எப்பக்கமும் அவளால் அசைக்க முடியவில்லை.
அசைத்து வேறெங்கும் சென்றாலும் கூட, வினாடிக்குள் மீண்டும் ஈர்க்கப்பட்டு அவனின் கண்களின் மணிகளுக்குள்ளே சிறைப்பட்டு, மாய லோகத்தில் சஞ்சரித்துக்கொண்டு இருந்தாள்.
அவனுடைய தந்தையிடமிருந்து வந்திருந்த அவனின் திருத்தமான செதுக்கப்பட்ட முகத்தோற்றமோ, திடக்காத்திரமான உடல் அமைப்போ, மாசு மருவற்ற வெண்பளிங்கு தேகமோ…
தாயிடமிருந்து வந்திருந்த அடர்த்தியான கருமை நிற கேசமோ…
இன்றைய டிரென்டான முழு ஷேவ் செய்யாது, ட்ரிம் மட்டுமே செய்யப்பட்ட அவனின் நெருக்கமான மீசையும் தாடியுமோ, எவ்வித கெட்ட பழக்கங்களும் இல்லாததின் பலனாக நிறம் மாறாதிருந்த அரிதான அவனின் திண்மையான இளம் ரோஜா நிற அதரங்களோ, இல்லை அவை அசையும் போது வெளிப்படும், சீரான வரிசையில் இடைவெளியற்று நட்டு வைத்திருந்த அவனின் வெண்ணிற பளீர் பற்களோ…
எதுவுமே அவளை அசைக்கவில்லை.
முதல் நாள் தொடங்கியே அவனின் கண்களில் தான் அவளின் தேக்கம், மையல், ரசனை, ஆசை அனைத்தும். முதல் முறை பார்த்தது போலயே இன்றும் பிரமிப்புடனே பார்த்துக்கொண்டு இருந்தாள்.
உச்சி வெயிலில் தகதகக்கும் கடலின் நீலத்தை தன் தூரிகையில் எடுத்து, அவனின் கண்ணின் மணிகளுக்கு வண்ணம் தீட்டிய பிரம்மன், அதைச்சுற்றி யாருக்கும் தெரியாதவாறு சிறிது மயில் தோகையின் பச்சை நிறத்தையும் தூவி விட, யாருக்குமே இல்லாத வித்தியாசமான வசிகர கண்களைக் கொண்டு பிறந்து இருந்தான்.
அவைகளோ சூரிய ஒளியில் மின்னும் நீலமணி கற்கள்(sapphire) போன்று, அங்கிருந்த ஒளி வெள்ளத்தில் விண்மீன்களாய் தனித்து மின்னிக்கொண்டிருந்தன...
அவனைச் சுற்றி அத்தனை ஆயிரம் மக்கள். அனைவருமே அவனின் ரசிகர்கள். வேறென்ன வேண்டும் அவனுக்கு. அத்தனை மகிழ்ச்சி அவன் முகத்தில்.
ஏற்கனவே தயார் செய்த வரிசையில் இருந்த தமிழ் பாடல்களையும், அவனுக்காக வந்திருந்த சில அமெரிக்க ரசிகர்களுக்காக ஆங்கில பாடல்களையும் பாடியவன், இறுதி பாடலுக்கே வந்துவிட்டான்.
யாருக்குமே நேரம் கரைந்துக் கொண்டிருப்பது சிறிதும் தெரியவில்லை.
ஆதவனிடம் மையல் கொண்டு தொடரும் சூரியகாந்தி மலர்களைப்போலவே, மெய்மறந்து அவனிலேயே மையம் கொண்டு விட்டனர்.
“நீ கவிதைகளா?
கனவுகளா?
கயல்விழியே!
நான் நிகழ்வதுவா? கடந்ததுவா?
பதில் மொழியே”
என்று பாடிக்கொண்டிருந்த ஈத்தன், அப்படியே மேடையிலிருந்து குதித்திறங்கி…
“முகம் காட்டு நீ
முழு வெண்பனி
ஓடாதே நீ
ஏன் எல்லையே
இதழோரமாய்
சிறு புன்னகை
நீ காட்டடி
என் முல்லையே”
என்று பாடலுக்கு ஏற்ற முக பாவனை மற்றும் உடல்மொழியுடன், காதலியை பின்தொடர்வது போல் மெல்ல மக்களிடையே நடக்க…
மூச்செடுக்க மறந்தனர் அனைவரும்.
அக்கணம் அவனின் லைவ் ஷோ பார்த்துக்கொண்டிருந்த அனைத்து நடிகர்களின் மனமும், ஒன்றுப்போல், ‘இவன் மட்டும் நடிக்க வந்துவிடவே கூடாது’ என்று வேண்டிக்கொண்டது.
இப்பாடலை இயர் ஃபோனில் கேட்கும் பொழுதே உருகிப்போவாள் குறிஞ்சி. இன்றோ நேரில், அதுவும் பாடலின் வரிகளுக்கு ஏற்ற முகபாவனைகளுடன் ஈத்தன். சொல்லவும் வேண்டுமா? உடல் மொத்தமும் கூசி சிலிர்த்தது அவளுக்கு.
ஈத்தனுக்கோ தன்னை சுற்றியிருந்த மக்கள் யாருமே கண்ணுக்கு தெரியவில்லை. எப்பொழுதும் போல், அவனின் காதலியான சிவப்பு நிற ரோஜா மலர்களைக்கொண்ட மாயை தோட்டம் தான் அவனைச்சுற்றி மலர்ந்து விரிந்துக் கிடந்தது.
தங்களின் கண்முன் இருப்பவனுக்கு வயது முப்பத்தாறு என்று, அவனே சத்தியம் செய்து சொன்னால் கூட யாரும் நம்ப முடியாத தோற்றமும், உற்சாகமும், அவனின் தேகம் முழுவதும் பரவிக்கிடக்க…
அனைவருக்கும் அவனின் வயதை தலையில் ஆணியடித்து திடமாக கூறும் வகையில், தொலைக்காட்சியில் அவனுடைய பன்னிரண்டு வயது மகளை காட்டத்தொடங்கினர்…
தடுப்புகளுக்கு முன்பிருந்த முதல் வரிசையில் பவுன்சர்களுக்கு மத்தியில், பாதுகாப்பாக சக்தியுடன் அமர்ந்திருந்தவள். தன் தந்தையையே பார்த்தவண்ணம் இருக்க…
அழகே நான்
உனக்கென்னவே
முதல் பிறந்தேன்
இளங்கொடியே நீ
எனக்கென்னவே
கரம் விரித்தாய்
என் வரமே!
என்று பாடிய வண்ணம், ஈத்தன் தன் மகளை கடக்கும் பொழுது, லேசாக அவள் தலையை தன் வயிற்றுடன் சேர்த்து அணைத்துப்பிடித்து விடுவித்து விட்டு நகர,
நொடியில் அவனின் கண்களில் வந்து சென்றிருந்த தாய்மை உணர்விலும், அதுத்தந்திருந்த மென்மையிலும், குப்பென்று மலர்ந்துவிட்ட அவன் மகளின் முகத்திலும், அனைவரின் முகமும் மொத்தமாக கனிந்துப்போனது.
அவனின் உயிர், உலகம் அனைத்தும் அச்சிறு ரோஜா குவியலே!
தந்தையின் பாசம் என்ன என்பதையே அறியாத குறிஞ்சிக்கோ, அக்காட்சி தெவிட்டா தேன்சுவையாகிப்போய் உயிர்வரை தித்திக்கச்செய்ய… அவளின் கண்களில் தேங்கியிருந்த கண்ணீர் உணர்வுக்குவியலாக பெருகி பட் பட்டென்று விழ ஆரம்பித்துவிட்டன…
மீண்டும் மேடையேறிய ஈத்தன் மீதி பாடலை பாடிமுடித்து மைக்கை அதன் தாங்கியில் வைக்க. அரங்கம் முழுவதுமிருந்த மக்கள் அனைவரும் அப்பொழுது தான் உயிர் வந்தது போல் முழித்து, ‘என்ன அதற்குள் கன்சர்ட் முடிந்துவிட்டதா? நேரம் என்ன?’ என்று, கைக்கடிகாரத்திலும், அலைப்பேசியிலும் நேரத்தை பரிசோதித்து, வருத்தத்துடன் நிகழ்காலத்திற்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
அடுத்த பாகம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻
அலைமோதும் கடலெனவே,
பதிலளிநீக்குஅமர்ந்திடும் இசைபிரியர்கள்,
நீ பாடும் பாடலில்,
தன்னை மறந்து
சுவாசிக்க மறந்து காற்றில் மிதந்து
இருப்போருக்கு நடுவில்
எனை மறந்து
நான் அதில் கரைந்து போகிறேன்....