4.2 - சங்கீத வானில் ஓர் அந்திப்போர்! 🎼🪻😘📽️
4.2
அனைவரும் சென்றபிறகு, “நீ என்னடா வீட்டுக்கு போகலையா? கிளம்பு கிளம்பு” என்றான் ஈத்தன்…
அதில், “என்னா தலைவரே! மெரினா பீச்ல எதுவும் உங்களுக்கு சிலை வேணுமா! அப்படி எதுவும் ஆசையிருந்தா என்கிட்ட சொல்லுங்க, சத்தமில்லாமல் நான் ஏற்பாடு பண்ணிடறேன். அதைவிட்டுட்டு இவ்வளோ நல்லவராலாம் நீங்க இருக்கனும்னு அவசியம் இல்லை…” என்று சக்தி புலம்ப ஆரம்பிக்க…
“டேய்… அமைதியா வீட்டுக்கு போடா… தூக்கம் வரலையா உனக்கு…?” என்று ஈத்தன் அவனை விரட்டுவதிலேயே குறியாக இருக்க.
“தூக்கமா… க்கும்… ஆத்திரம் மட்டும் தான் வருது… அதுவும் உங்க மேல தான் டன் கணக்கில் வருது…” என்றவன். தன் மனதில் இருந்தவை அனைத்தையும் கொட்ட ஆரம்பித்துவிட்டான்.
“போங்க தலைவரே, அந்த சௌந்தர்யா வேண்டும்னு உங்களை அசிங்கப்படுத்த ஸ்கெட்ச் போட்டு, எனக்கே விபூதி அடிச்சு, நம்ம பாப்பாக்கிட்ட கேள்விக்கேட்டு, என்னலாம் பண்ணிவிட்டுடுச்சு… கொஞ்ச நேரத்தில் எனக்கு அள்ளுவிட்டு போச்சு… வந்த ஆத்திரத்துக்கு இன்னைக்கு நம்ம ஏரியா பசங்களை வச்சு அந்த பொம்பளை மூஞ்சி முகரையெல்லாம் பேத்துடனும்னு இருந்தேன்… கடைசியில் என்கிட்டவே அதை வீட்டுக்கு பத்திரமா அனுப்புற பொறுப்பை கொடுத்துவிடுறீங்க… நீங்க மட்டும் இடையில் வரலைனா அவளைலாம்…” என்றவன் முதுகில் ஒரு அடியைப்போட்ட ஈத்தன், “ஷ் சக்தி. வார்த்தையில் கவனம்” என்று அதட்ட…
“போங்க தலைவரே… உங்க மனசு என்ன பாடுபட்டிருக்கும்” என்ற சக்தியின் கண்கள் கலங்கிவிட… முகத்தை திருப்பிக் கொண்டான்.
“நடந்து முடிஞ்சதை என்னடா பண்ண முடியும். மாத்த முடியும்னா சொல்லு பண்றேன்” என்றான் ஈத்தன்.
“அப்ப அவங்களை எல்லாம் அப்படியே விட்டுடறதா? அதுவும் அந்த நார பையன் நாராயணனை எல்லாம் நல்லா நார் நாரா பிரிச்சு விடனும்” என்றான், ஆவேசமாக.
இரண்டு வருடங்களுக்கு முன்பு ஈத்தனை ஒரு பாடலுக்கு பதிவு செய்ய இயக்குனர் நாராயணன் கேட்க… பாடலை வாங்கி பார்த்தவன் அன்றே வேண்டாம் என்றுவிட்டு இருந்தான்.
இருந்தும் விடாமல் அவனை பிடிக்க வீடு வரை தேடிவந்த நாராயணன், “உங்க குரல் இந்த பாட்டுக்கு ரொம்ப பொருத்தமா இருக்கும் தம்பி” என்று வற்புறுத்த…
“சாரி, மிஸ்டர் நாராயணன். வரிகள் எல்லாம் ரொம்ப ரான்ச்சியா(ஆபாசமா) இருக்கு. இது என்னோட ஸ்டைல் இல்லை. எனக்கு ஒத்து வராது” என்று மீண்டும் ஈத்தன் மறுக்க.
“என்ன தம்பி நீங்க, ட்ரெண்ட் தெரியாத ஆளா இருக்கீங்க. இதை மட்டும் நீங்க பாடுனீங்கனா எல்லாரும் இதை எப்படி வைப்(vibe) பண்ணிட்டு சுத்து வாங்க தெரியுமா. அதுவும் இந்த ஒரு பாட்டுக்கு மட்டும் ‘கிளாமர் குயின் லியோனிய’ 5 கோடி கொடுத்து இறக்கறோம். உங்க ஹஸ்கி டோனுக்கும், அந்தம்மாவோட செக்ஸியான ஆட்டத்துக்கும், சும்மா ஒவ்வொருத்தனுக்கும் அப்படியே அடிக்காமலே சுர்ருனு போதை ஏறும். என் சர்வீஸ் உங்க வயசை விட அதிகம். சொன்னா கேளுங்க தம்பி. உங்க கேரியர்ல இந்த பாட்டு நல்ல இடம் பிடிக்கும்” என்று அவர் அவனை மீண்டும் மீண்டும் பேசி ஒத்துக்கொள்ள வைக்க பார்க்க… அவனும் விடாது மறுத்தான்.
அதில் அவர், “என்ன தம்பி பெரிய ரான்ச்சி… உங்க அப்பாலாம் சும்மா உரிச்சுவிட்ட கோழி மாதிரி ஒன்னுமே போடாமல் எத்தனை படம் நடிச்சு இருக்கார். நாங்கெல்லாம் காலேஜ் கட் அடிச்சுட்டு அத்தனை ஷோக்கு போவோம். அவர் பையன் நீங்க என்னனா? பணம் எவ்ளோ வேண்டும்னாலும் கூச்சப்படாமல் கேட்டு வாங்கிக்கோங்க. ஆனா நீங்க தான் பண்ணி கொடுக்கனும்” என்று அவனின் தந்தை நடிப்பை வைத்து அவனை மடக்க பார்த்தார்…
இந்தியாவில் முன்னணியில் இருக்கும் நடிகர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளத்தை விட, ஈத்தன் தன் ஆங்கில பாடல் ஒன்றிற்கு வாங்கும் சம்பளம் அதிகமாக இருக்கும். அதுவும் அவனின் இன்டர்நேஷனல் கன்சர்ட்களின் வருமானம் எல்லாம் நம்மூரில் எந்த திரை துறையினரும் நினைத்துப்பார்க்காத அளவிற்கு இருக்கும். இதில் பணத்தை வைத்து நாராயணன் அவனை வாங்கப்பார்த்தார். அவனிடம் இல்லாதா பணமா?
நாராயணனின் இப்பேச்சு பொறுமையின் மறு உருவமான ஈத்தனையே பொறுமையிழக்க செய்தது தான் மிச்சம்.
அதிலும் காமம் கூட தன் குரலில் புனிதம் ஆகவேண்டும் என்ற கொள்கை கொண்டவன் அவன்.
முகத்தில் இருக்கும் புன்னகை சற்றும் குறையாமல் நாராயணனை பார்த்தப்படியே எழுந்த ஈத்தன், “நோ மீன்ஸ் நோ மிஸ்டர் நாராயணன். என் குரலை கண்ட குப்பைக்கெல்லாம் விக்க நான் தயாரா இல்லை” என்றுவிட்டு மேற்கொண்டு எதுவும் பேசாது உள்ளே சென்றுவிட்டான்.
நாராயணின் முகத்தில் ஈயாடவில்லை. அதுவும் வீடு தேடி வந்தவருடனான பேச்சை இப்படி பாதியில் நிறுத்திவிட்டு அவன் செல்வான் என்று கனவிலும் அவர் நினைக்கவில்லை.
அவர் வயதென்ன… அவன் வயதென்ன… அதுவும் அனைவரின் முன்பும் ஈத்தன் எப்படி தன் பட பாடலை குப்பை எனலாம்… முகம் கறுக்க பயங்கர கோபத்துடன் நாராயணன் அங்கிருந்து கிளம்பி இருக்க…
அவரின் கோபத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக அன்றே அந்த படத்திற்கும் மூடுவிழா நடந்து இருந்தது.
தன்னுடைய இயக்கத்தில் வெளிவரும் 25வது படம் பெரிய வெற்றி படமாக இருக்க வேண்டும் என்று அனைத்தும் கலந்த கமர்ஷியல் மசாலா படம் ஒன்றை வடிவமைத்து, அதற்கு ஏற்ப எப்படி எப்படியோ பெரிய தயாரிப்பாளரை பிடிக்க பலருக்கு சொம்பு தூக்கி, அனைத்தையும் பக்காவாக தயார் செய்து வைத்திருந்த மனிதருக்கு பலத்த அதிர்ச்சி.
விஷயம் அறிந்து பலர் துக்கம் விசாரிப்பது போல் வேறு விசாரிக்க… ஈத்தன் மேல் வன்மம் வளர்ந்துக்கொண்டே சென்றது…
உண்மையில் அவருக்கு நடந்த எதிலுமே ஈத்தனின் பங்கு சிறு துளியும் இல்லை…
ஈத்தனிடம் பேசவென்று இவர் உடன் அழைத்துசென்றிருந்த இருவர் தான் காரணம்.
அவர்கள் தான், ஈத்தனிடம் இவர் சிறிதும் நாகரிகம் இல்லாது பேசியதை பற்றி வெளியில் கூறிவிட… நாளை நாராயணன் ஈத்தனிடம் இப்படி பேசியது வெளியே தெரியவந்து, மக்கள் அவர் படத்தினை புறக்கணித்துவிட்டால் என்ன செய்வது?
இயக்குனருக்கு ஒன்றும் இல்லை. தயாரிப்பாளர் தலையில் தானே துண்டு விழும். அதிலும் தயாரிப்பாளர் சங்கத்திலும், ஈத்தனின் குடும்பம் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில் நாராயணனை உடனே அவரின் தயாரிப்பாளர் கை கழுவிவிட்டார்.
சரியென்று வேறு தயாரிப்பாளர்களிடம் நாராயணன் முயற்சித்து பார்க்க, ஈத்தன் விஷயத்தில் யாருக்குமே ரிஸ்க் எடுக்க துணிச்சல் இல்லை.
நாளடைவில் விஷயம் சினிமா வட்டாரம் முழுவதுமே காட்டுத்தீயாக பரவிவிட… முதலில் அவர் பதிவு செய்து வைத்திருந்த சில முன்னணி நல்ல நடிகர்கள் கூட கழண்டுவிட்டனர்…
அதில் நாராயணனின் தன்மானம் சுத்தமாக அடிப்பட்டுவிட்டது…
ஆவேசமாக தன் மொத்த சொத்தையும் பல வட்டிக்கு அடகு வைத்து, கையிருப்பு மொத்தத்தையும் போட்டு என்று அவரே தன் சொந்த தயாரிப்பில் படத்தினை உருவாக்க ஆரம்பித்துவிட்டார்.
ஆனால் திரட்டிய பணத்தை வைத்து பாதி படம் கூட அவரால் முடிக்க முடியாது போனது. அதில் மனுஷன் நாய் படாத பட்டு, ஏறாத இடமில்லாது, எப்படி எப்படியோ கிடைத்த பணம் வைத்து மீதியை எடுத்து, இந்த வருட தொடக்கத்தில் தான் அப்படத்தினை முடித்து இருந்தார்.
அதை பொங்கலுக்கு வெளியிட்டு, போட்ட பணம் மொத்தத்தையும் கலெக்ஷனில் அள்ளிவிட வேண்டும் என்று அவர் கனா காண… மொத்தமாக படம் ஊற்றிக்கொண்டது…
படத்தில் எடிட்டிங் சரியாக இல்லை… விட்டுவிட்டு ஷூட்டிங் எடுத்ததில் கதாபாத்திரங்களின் நடிப்பு ஒரேப்போல் இல்லாததால், படத்துடன் ஒன்ற முடியவில்லை… மசாலா படம் என்பதால் பொங்கலுக்கு செல்லும் குடும்ப ஆடியன்ஸிற்கு படம் செட் ஆகவில்லை… போன்ற பல குறைகள் வரிசையாக வந்த வண்ணம் இருக்க.
அதே பொங்கலுக்கு ஈத்தனின் ‘ஈஷா ப்ரொடெக்ஷனில்’ முதல் முறையாக வெளியான சாதாரணமான வெகுஜன குடும்பப் படம் ஒன்று, மெகா ஹிட் அடித்து, தேசிய விருதுக்கே பரிந்துரைக்கப்பட்டு சென்றுவிட்டு இருந்தது.
ஈத்தனின் தாத்தாவுடைய ஓம் புரொடக்சன்ஸ் கம்பெனியை, அவனுடைய தாத்தா மற்றும் பாட்டியின் மறைவிற்கு பிறகு அவன் அம்மா சித்ரலேகா தான் பார்த்துக்கொள்கிறார். அவர் பெரிய பட்ஜெட் மற்றும் மெகா ஸ்டார்களின் படங்களை மட்டுமே வெளியிட்டுக்கொண்டு இருந்தார்.
எனவே ஈத்தன் புது முயற்சியாக டைரெக்டர் தொடங்கி, நாயகன், நாயகி, நகைச்சுவை கதாபாத்திரங்கள், துணை நடிகர்கள் தொட்டு அனைவரையுமே புதுமுகங்களாக போட்டு படம் எடுத்து, ஈஷாவின் பெயரில் புதிதாக புரொடக்ஷன்ஸ் தொடங்கி வெளியிட்டான். அப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் கூட அவன் பாடவில்லை. அனைவருமே புதுமுகங்கள் தான்.
நல்ல திறமை இருந்தும் ஒருமுறை கூட வாய்ப்பு கிடைக்காதவர்களாக தேடி எடுத்துப்போட… அவர்களும் கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்டு உழைக்க… பலன் கைமேல் கிடைத்துவிட்டு இருந்தது.
வெறும் 10 கோடியை போட்டு, அவன் 250 கோடி கலெக்ஷன் பார்த்துவிட்டு இருந்தான்.
அதில்தான், வேண்டும் என்றே ஈத்தன், தான் படம் ரிலீஸ் செய்த பொழுது அவனும் ரிலீஸ் செய்து, தன் படத்தினை ஒன்றுமில்லாது செய்துவிட்டான் என்று நாராயணனுக்கு பயங்கர ஆத்திரம்.
படம் வெளியான பிறகு, ஒருவாரம் கழித்து நடந்த ஒரு பிரஸ் மீட்டில் நாராயணன், ‘மக்களுக்கு நல்ல டெக்னாலஜி வைத்து, அனுபவசாளிகளை போட்டு படம் எடுத்தால் எதுவும் பிடிப்பது இல்லை. நடுத்தர பிச்சைக்கார கூட்டத்தின் வாழ்க்கையை சுற்றி எடுத்தால் தான் பிடிக்கிறது. வர வர மக்களின் மூளை மழுங்கி ரசனை போயிவிட்டது’ என்று வயிற்றெரிச்சல் தாளாதுக்கூறிவிட…
‘என்னது நடுத்தர மக்கள் உனக்கு பிச்சைக்காரர்களா… நாங்கள் இல்லை என்றால் உன் நிலை தான் பிச்சைக்காரன் நிலை…’ என்று அவரின் படம் பார்க்க நினைத்த ஒருசில உள்ளங்களும் பின்வாங்கிவிட… உண்மையில் நாராயணன் நிலை நடுத்தெருவிற்கு வந்துவிட்டு இருந்தது.
ஈத்தன் வந்த லாபத்தை வைத்து, மேலும் பல புதுமுகங்களை எடுத்து, அடுத்த செட், லோ பட்ஜெட் ஷூட்டிங்கே ஆரம்பித்துவிட்டு இருந்தான்…
தமிழ் சினிமா துறையினை முற்றிலும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் முனைப்புடன் அவனின் ஈஷா ப்ரோடெக்ஷன்ஸ் இருக்க மக்களிடம் நல்ல வரவேற்பு.
அதில் தான் பல வருடங்களாக கதாநாயகியாக வேண்டும் என்ற ஆசையுடன் இருந்த தொகுப்பாளினி சௌந்தர்யாவும், ஈஷா ப்ரோடெக்ஷன்ஸ் நடத்திய இரண்டாம் படத்திற்கான ஆடியேஷனுக்கு செல்ல…
அவளுக்கு கொடுக்கும் காட்சிக்கு ஏற்ப சரியான நடிப்பு வரவில்லை என்று நடுவர்கள் நிராகரித்துவிட்டு இருந்தனர்.
ஈத்தனிடம் வந்து அவள் அதைக்கூறி வாய்ப்பு கேட்க, அவன் நன்றாக பயிற்சி எடுத்துக்கொண்டு அடுத்தமுறை முயற்சி செய்துப்பார், ரெகமெண்டேஷன் எதுவும் இதில் கிடையாது என்று கூறி மறுத்துவிட்டு இருந்தான்.
தான் முன்னேறும் வழியை பார்க்காது, ஈத்தனின் காலை வாரிவிட ஏதேனும் ஒரு வழி கிடைக்காதா என்று, வழி மீது விழி வைத்து பார்த்துக்கொண்டிருந்த நாராயணன், சௌந்தர்யாவை மடக்கிவிட. நடிகையாகும் ஆசையில் மதியிழந்த பட்சியும் மடங்கிவிட்டு இருந்தது.
இன்று தான் செய்த காரியத்தின் மூலம் எத்தனை பேரின் வெறுப்பினை சம்பாதித்துவிட்டோம், இந்நிலையில் நாளை நடிகையானாலும் தன்னை மக்கள் வரவேற்பார்களா என்ற அறிவு சுத்தமாக சௌந்தர்யாவிற்கு இல்லை.
ஈத்தன், தான் உண்டு தன் வேலை உண்டு என்று அவன் வழியில் அவன் பாட்டிலும் சென்றுக்கொண்டிருக்க, இவ்விரண்டு பேரும் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொண்டு குழிக்குள் சென்று படுத்துவிட்டு இருந்தனர்.
இதனையெல்லாம் சக்தியிடம் எடுத்துக் கூறிய ஈத்தன், “இந்த அடிதடி, பழிவாங்குறது எல்லாம் நம்ம வேலை இல்லைடா… ஒவ்வொன்னுத்துக்கும் அதையெல்லாம் இறங்கி பண்ண ஆரம்பிச்சா அதுவே நம்ம தொழிலாகிடும்… பிறகு நம்ம வேலையை எப்ப நாம பார்க்கிறது?” என்றவன்…
தொடர்ந்து, “எதுவா இருந்தாலும் அதை இந்த யுனிவர்ஸ் பார்த்துக்கும். நாம நல்லது செய்தா நமக்கு யுனிவர்ஸ் நல்லதை தரும். கெட்டதை செய்தா கண்டிப்பா நமக்கு கெட்டதை தராமல் போகாது” என்றவன், “பேபியை என்கூட நானே இருந்து கூட்டிட்டு போகாதது என் தப்பு தான். அதோட பலன் தான் எல்லாம்” என்றான்.
அதில் பதறிய சக்தி, “மன்னிச்சுடுங்க தலைவரே. ஈஷாபாப்பா கூட நான் இருந்தும், நான் தான் கோட்டை விட்டுட்டேன். என் தப்பு தான் எல்லாம்” என்றான்.
“இனி அப்படி எதுவும் நடக்காதப்படி பார்த்துக்கலாம் சக்தி” என்ற ஈத்தன், மனதினுள் ‘இனி பேபிய யாரை நம்பியும் விடக்கூடாது…’ என்று உறுதி எடுத்துக்கொண்டு…
சிறிது நேரம் சக்தியுடன் பேசி, அவன் சமாதானம் ஆனப்பிறகு அவனை அனுப்பி வைத்தான்.
இல்லையென்றால் எதையாவது அவன் இழுத்துவைத்துவிடுவான். பிறகு யார் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று நிற்பது, அதைவிட அவன் குடும்பத்திற்கு யார் பதில் சொல்வது.
ரசிகர்களை தூண்டிவிட்டு குளிர் காயும் குணம் ஈத்தனுக்கு என்றுமே இருந்தது இல்லை.
அதேப்போல் இந்த சண்டை, கூச்சல், சத்தம், பழிவாங்குதல், மிரட்டுதல், தன் பலத்தினை மற்றவருக்கு காட்டுதல், எல்லாம் அவனுக்கு பயங்கர அலர்ஜி. அமைதி விரும்பி.
அவனை பொறுத்தவரை வாழ்க்கை என்றால் பல இடர்ப்பாடுகள் வர தான் செய்யும். அதற்காக ஒவ்வொரு இடர்பாடுகளுடனும் சென்று அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, வாழ்க்கையை வீணாக்க முடியாது. வந்த இடர்பாடை கடந்து மீண்டும் அது தன்னை தொடாத இடத்திற்கு சென்று அமர்ந்துவிட வேண்டும் என்றே நினைப்பான்.
அதனால் தான் அவன் வளர்ந்து வரும் போது அவன் மீது பூசப்பட்ட இனம், மொழி மத சாயங்கள் அனைத்தையும் கடந்து, அவை தீண்ட முடியாத சிகரத்தின் உச்சியில் அமர்ந்து இருக்கின்றான்.
🔴 அடுத்த பாகம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்
https://swathilakshmitamilnovels.blogspot.com/2025/02/43.html
செல்வ செழிப்பில் செல்லமாக இருந்தாலும்
பதிலளிநீக்குதடம் மாறி செல்லாத
தன்னலமற்ற தலைவன்...
நேர்மையின் வழியில்
நியாயத்தின் பேரில்
நாளும் நல்லதையே
நினைத்து வாழும்
நல்லவனுக்கு தான்
நான்கு பக்கமும் அடி...
நடப்பவை நன்மைக்கே..