7.2- சங்கீத வானில் ஓர் அந்திப்போர்!
உள்ளாடையில் எவ்வாறு அணையாடையை(napkin) பொருத்த வேண்டும், என்று குழந்தைக்கு செயல்முறை விளக்கம் காட்டியப்படியே செய்தவள், ஒரு வழியாக அவளை தயார் செய்து அழைத்துக்கொண்டு வெளியே வர…
“தேங்க்ஸ் ஆன்ட்டி” என்ற ஈஷா மீண்டும் தந்தையுடன் சென்று ஒட்டிக்கொண்டாள். ஈத்தனும் அவளை தன்னுடன் சேர்த்து அணைத்து பிடித்துக்கொள்ள.
நேரில் அவர்களின் அன்பையும், அந்நியோன்யத்தையும், வாஞ்சையுடன் பார்த்த குறிஞ்சிக்கு, மனம் முழுவதும் கனிந்து நிறைந்தது.
இருவரும் இதே அன்புடன் என்றென்றும் வாழ இறைவனிடம் வேண்டுதல் வைத்தவள்..
“கொஞ்சம் பால் மட்டும் மெஸ்ல இருந்து வாங்கிட்டு வந்து தரேன் ஈஷா. வயிறு காலியா இருந்தாலும் பெயின் வரும். குடிக்கறியா மா?” என்று ஈஷாவிடம் கேட்க.
வெந்நீரில் குளித்ததில் உடலும், குறிஞ்சியின் அணுகுமுறையில் மனமும் சற்று தெளிந்திருந்த ஈஷாவிற்கும், லேசாக பசிப்பது போலிருக்க.. “ஓகே ஆன்ட்டி” என்றாள்
தன் குண்டு கன்னங்கள் இரண்டும் ஆடும் வண்ணம் தலையாட்டி…
அதில், “அழகு பூக்குட்டி ரொம்பவும் சமத்து” என்று தன்னை மீறி உரைத்திருந்த குறிஞ்சி, அதை சற்றும் உணராமல், “5 மினிட்ஸ் சமர் சார். வந்துடறேன்” என்றுவிட்டு வெளியே வந்தாள்.
என்ன நடந்துக்கொண்டிருக்கிறது என்பதை யோசிக்க கூட அவளுக்கு நேரம் இல்லை.
மெஸ்ஸிற்கு சென்றவள்… அங்கிருந்த மேலாளரிடம் கூறிவிட்டு… தானே குழந்தைக்கு பாலையும், பிரட் டோஸ்ட்டையும் தயாரித்து எடுத்துக்கொண்டு விரைந்து திரும்பினாள்.
அங்கு ஈஷா, “பூக்குட்டி மீன்ஸ் Flower Bud தானே பேபி” என்று புதுப்பெயரை ஆராய்ச்சி செய்து முடித்தவள்… “பேபி வயிறு வலிக்குது… கால் வலிக்குது…” என்று மீண்டும் சுருண்டுக்கொண்டுவிட.
சில நிமிடங்களில், கையில் ட்ரேவுடன் அறைக்குள் நுழைந்த குறிஞ்சி கண்டது…
படுக்கையில் ஈஷா படுத்திருக்க… அவளின் கால்கள் இரண்டினையும் தன் மடியில் வைத்து பிடித்துவிட்டுக் கொண்டிருந்த ஈத்தனை தான்…
‘அம்மா பிளீஸ் ம்மா… பிரியட்ஸ் ஓட அவ்வளவு தூரம் ஸ்கூலுக்கு நடந்துப்போக முடியலை ம்மா… ரொம்ப கால் வலிக்குது… அப்பாக்கிட்ட சைக்கிள் வாங்கி தர சொல்லுங்களேன்…’ என்று கேட்டிருந்த குறிஞ்சிக்கு, அன்று அவள் தந்தையிடம் இருந்து விழுந்த அடிகளும், அவளின் அன்னைக்கு விழுந்த திட்டுகளும், பல வருடங்கள் கழித்தும், மறக்காமல் அவள் கண்முன் வந்து சென்றது…
அதையெல்லாம் நினைக்கவே கூடாது, எல்லாம் முடிந்துவிட்டது என்று தன் தலையை உலுக்கி பழையதை விரட்டிவிட்டவள்…
“ஈஷாக்கு மில்க் ரெடி…” என்றப்படியே உள்ளே நுழைந்தாள்.
மிதமான சூட்டில் இருந்த பாலை கப்பில் ஊற்றி கொடுத்தவள்… டோஸ்ட்டில் தேன் தடவி முடிக்கும் முன்பே குழந்தை பசியில் கொடுத்த பாலை அருந்திவிட்டு இருந்தாள்…
நல்லவேளை டோஸ்ட் செய்து எடுத்துவந்தோம் என்று நினைத்துக்கொண்ட குறிஞ்சி… அருகிலேயே இருந்து அவள் வயிறு நிறையும் வரை உணவை கொடுத்து… ஈர துணி ஒன்றை எடுத்துவந்து அவளின் வாயையும் கையையும் சுத்தம் செய்துவிட…
குறிஞ்சியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த ஈஷா திடீரென்று, “யூ ஆர் சோ கைன்ட் அண்ட் ஸ்வீட் ஆன்ட்டி” என்றாள்.
அதில் ஈத்தன் மற்றும் குறிஞ்சியின் விழிகள் ஆச்சரியத்துடன் ஒன்றுடன் ஒன்று கலந்து பட்டென்று விலகிக் கொண்டன.
“தேங்க்ஸ் ஈஷா” என்ற குறிஞ்சி, “வயிறு வலிக்குதுன்னு சொன்னீங்களே, காட்டுங்க நான் மெதுவா மசாஜ் செய்து விடறேன். சரியாகிடும்” என்று லேசாக சூடுபடுத்தி எடுத்துவந்திருந்த பாதாம் எண்ணெய்யை குழந்தையின் அடிவயிற்றில் தடவி, மெல்ல பிடித்துவிட ஆரம்பிக்க…
அவளிடம் குளிக்க மறுத்தது போல் மறுக்காமல், ஈஷா அமைதியாக படுத்துக்கொண்டாள்.
சிறிது நேரத்திலேயே அவளின் வலித்த வயிறு, வலியை மறக்க, “ஆன்ட்டி, யூ ஆர் த பெஸ்ட்!” என்ற ஈஷா, ஈத்தனிடம் “லவ் யூ பேபி. குட் நைட்” என்றப்படியே உறங்கி விட்டாள்.
எடுத்துவந்த ஹாட் வாட்டர் பேக்கில், ஒன்றை அவளின் முதுகு பக்கமும், மற்றொன்றை அவளின் வயிற்று பக்கமும் வைத்துவிட்டு போர்வையை போர்த்திய குறிஞ்சி, “உங்க பேபி நல்லா தூங்கியாச்சு சமர் சார்…” என்றாள்.
“எஸ்…” என்ற ஈத்தன், “தேங்க்ஸ் குறிஞ்சி. கொஞ்சமும் நான் இன்னைக்கு இப்படியாகும்னு நினைக்கலை. இந்த சிட்டுவேஷனை எப்படி கடக்க போறேன்னு இருந்துச்சு. உடனே நீ வந்துட்ட…” என்றவன்…
மணியை பார்க்க… நள்ளிரவு பன்னிரண்டை அது கடந்துவிட்டு இருந்தது…
“ஓ மை காஷ்… டைம் மிட் நைட் தாண்டிடுச்சு… நீ கிளம்பு குறிஞ்சி… மார்னிங் பார்க்கலாம்…” என்று படுக்கையில் இருந்து எழுந்துக்கொண்டான்.
“எமர்ஜென்சி அப்ப நைட் டியூட்டி பார்க்கிறது எனக்கு வழக்கம் தான் சமர் சார்… ஒன்னும் பிரச்சனை இல்லை… உங்களுக்கு தான் குரலே மாறிடுச்சு” என்ற குறிஞ்சி, “வார்ம் வாட்டர் எடுத்துட்டு வந்து இருக்கேன். கொஞ்சம் குடிங்க சார்” என்று கெட்டிலில் இருந்து கப்பில் நீரை ஊற்றியவள், அதில் சிறிது எலுமிச்சை சாறை பிழிந்துவிட்டு, தேனையும் ஊற்றி கலந்துக்கொடுக்க…
ஈத்தனுக்கு அது மிகவும் தேவையாக இருந்தது…
“தேங்க் யூ” என்று வாங்கிக்கொண்டவன்…
“நீ கொஞ்சமும் மாறவேயில்லை குறிஞ்சி. அதே கேரிங். அதே டெடிக்கேஷன். பேபி கூட பார்த்த உடனே உன்னைபத்தி கேட்ச் பண்ணிட்டா பாரு…”, என்ற ஈத்தன், “வா அங்க உட்கார்ந்து பேசலாம்” என்று டீயுடன் சூட்டில் இருந்த சிறிய வரவேற்பு அறைக்கு சென்று அவன் அமர…
இத்தனை நேரம் இல்லாத பயம் குறிஞ்சிக்குள் இப்பொழுது வந்திருந்தது.
ஈஷாவின் நிலையில், தன்னிலை அனைத்தையும் மறந்துவிட்டவளுக்கு, நிதர்சனம் உறைக்க, உடல் மொத்தமும் ஜில்லிட ஆரம்பித்தது.
எப்படியோ தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு, அடியெடுத்து வைக்க மறுத்த கால்களை, தள்ளிக்கொண்டு…
‘முருகா எனக்கு சோதனை எதுவும் தந்துடாத… ப்ளீஸ் ப்ளீஸ்… இப்ப தான் நான் நிம்மதியா வாழ ஆரம்பிச்சு இருக்கேன்’ என்ற வேண்டுதலுடன் சென்று ஈத்தன் முன்பு அமர்ந்தாள்.
ஆனால் முருகரோ, “சாரி சிஸ்டர்… நான் கொஞ்சம் பிசி… சி யூ லேட்டர்” என்று கழண்டுக்கொண்டு விட…
“அம்மா… அக்கா… மாமா… குழந்தைங்க… எல்லாம் எப்படி இருக்காங்க குறிஞ்சி?” என்று ஈத்தன் சரியாக, அவள் வேண்டாம் என்று நினைத்ததை கேட்டான்.
அதில் குறிஞ்சிக்கு அவளின் உள்ளங்கைகள் வேர்க்க ஆரம்பித்தன.
ஈத்தன் அவள் முகத்தையே பார்த்துக்கொண்டு இருக்க…
எச்சில் கூட்டி விழுங்கியவள்…
“எல்லாரும் நல்லா இருக்காங்க சார். அம்மா தான் இப்ப இல்லை” என்றாள் தலையை குனிந்தப்படி.
அதில், “சாரி குறிஞ்சி” என்ற ஈத்தன், என்ன ஆனது என்று விசாரித்து, மீண்டும் தன் வருத்தத்தை தெரிவித்தவன்…
“மதர் நீங்க ஃபேமிலியா இங்க வொர்க் செய்றதா சொன்னாங்க. உன் ஹஸ்பண்ட்க்கும் இங்க ஸ்கூல்ல தான் வேலையா குறிஞ்சி” என்று அடுத்துக்கேட்க.
மல்லிகா பற்றி மதர் கூறியதை, ஈத்தன் தனக்கு என்று நினைத்தது குறிஞ்சிக்கு புரிய… இதுவும் நல்லதுக்கு தான் என்ற எண்ணத்துடன்…
பளிச்சென்று “ஆமாம் சார்” என்றாள் நிம்மதியாக…
அதற்கு “கூல்” என்ற ஈத்தன், அடுத்து “குழந்தைங்க?” என்று கேள்வியாக கேட்டு நிறுத்தினான்.
அதற்கும் அசராமல், “பொண்ணு ஒன்னு, பையன் இரண்டு சார்” என்றாள் குறிஞ்சி புன்னகையுடன். அவசரத்தில் எண்ணிக்கை கூடிவிட்டதில் அவளுக்கே சிரிப்பு வந்துவிட்டு இருந்தது.
“ஸ்வீட்…” என்ற ஈத்தனின் முகத்திலும் மெல்லிய புன்னகை.
🔴அடுத்த பாகம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻
https://swathilakshmitamilnovels.blogspot.com/2025/02/73.html
Super 💖
பதிலளிநீக்குதன்னைப் போலவே
பதிலளிநீக்குதன் மகளையும் பார்த்துக் கொள்ளும்
தனக்குத் தெரிந்த பெண்ணாய் குறிஞ்சி....
தன்னை பற்றி அனைத்தும் தெரிந்தவனிடம்
தன் நிலையை கூறாது திருத்தமாய் மறைக்கும் குறிஞ்சி...
தெய்வம் கை விரிக்க
தெரிந்த உண்மைகள் தெரியாத விஷயங்கள் தீர்க்க முடியாத
தீர்ப்புகள் பல இருக்கும் போலவே...