2(b). சங்கீத வானில் ஓர் அந்திப்போர்! 🎼🪻😘
சுற்றியிருந்த இசைக்கருவிகளுடன் அமர்ந்திருந்த தன் குழுவிடம் சென்று பேசியவன், இவ்வளவு நேரம் தொடர்ந்து வாசித்ததில் அவர்களும் எவ்வளவு சோர்ந்திருப்பர் என்பதை உணர்ந்து, அவர்களை ஓய்வெடுக்க செல்லக்கூறிவிட்டு, மீண்டும் மேடைக்கு நடுவில் வந்து மைக்கை கையில் எடுத்தான்.
அவனையே பார்த்துக்கொண்டிருந்த குறிஞ்சிக்கு அப்பொழுது தான், தான் இன்னும் கைப்பையை கூட கழட்டாமல் நிற்பது புரிந்து, தலையில் தட்டிக்கொண்டவள்...
தன் அலைப்பேசியை கையில் எடுத்து, கேமிராவை ஆன் செய்து, தொலைக்காட்சியில் தெரியும் ஈத்தனை, தன் அலைப்பேசிக்குள் சிறையெடுக்க ஆரம்பித்துவிட்டாள்...
“என்ன டார்லிங்ஸ்! எப்படி போச்சு கன்சர்ட்… எல்லாரும் ஹேப்பியா…” என்று கேட்ட ஈத்தன் மைக்கை மக்கள் பக்கம் திருப்பிக்காட்ட…
“ஹேப்பி ஈத்தன்” என்று பலர் கத்தினர்…
சிலரோ, “பத்தலை ஈத்தன்…” என்று மேலும் பாடக் கூறி கேட்டு, “வீ வான்ட் மோர்…” என்று, விளையாட்டு மைதானம் விட்டு கிளம்ப மறுத்து அடம் செய்யும் குழந்தைப்போல் சண்டித்தனம் செய்ய ஆரம்பித்துவிட…
“அச்சோ… இப்பவே அவர் குரல் மாறின மாதிரி இருக்கு… இன்னும் வேற கேட்கிறாங்களே!” என்று குறிஞ்சி வருத்தப்பட.
மைக்கில் “ஓ காட்…” என்று சிரித்த ஈத்தன்… “சாரி டார்லிங்ஸ்… எனக்கும் தொடர்ந்து பாட ஆசையா தான் இருக்கு… ஆனால் முடியலை… இதுக்கப்புறம் இன்னைக்கு பாடினால் வோக்கல்(குரல்) போயிடும்… ரெக்கார்டிங்ஸ் நிறைய இருக்கு… ப்ளீஸ் அன்டர்ஸ்டாண்ட்” என்று தன்மையாக தன்னிலையை எடுத்துக்கூறினான்.
அதில் வருத்தமாக இருந்தாலும் சரியென்று உடனே அனைவரும், “டேக் கேர் ஈத்தன்” என்று கத்த…
குறிஞ்சிக்கு அப்பொழுது தான் நிம்மதியானது.
ஆனால் ஈத்தனுக்கோ தன்னை தேடுபவர்களை விட்டு பிரிய மனமில்லாமல் இருக்க, மனதில் விடுவிடுவென்று வேறு கணக்கு போட்டவன், “ஜஸ்ட் டென் மினிட்ஸ் பிரேக் கொடுங்க டார்லிங்ஸ். ஃபிரஷ் ஆகிட்டு வந்துடறேன். கொஞ்சம் நேரம் பேசிட்டு போகலாம். சரியா!” என்றான்.
அதில் போன உற்சாகம் மக்களிடம் மீண்டும் வந்து தொற்றிக்கொண்டது.
அனைவரும் ஒத்துக்கொண்டதும், கீழே அமர்ந்திருந்த சக்தியை பார்த்துவிட்டு, ஈத்தன் உள்ளே சென்றுமறைய, மேடையேறி சென்ற சக்தி தொகுப்பாளினி பெண்ணிடமும், ப்ரோகிராம் குழுவிடமும், ஈத்தனின் ஆஸ்கர் விழா காணொளியை, மேடையில் இருந்த பெரிய திரையில் வெளியிட்டு, அவன் வரும் வரை அதைப்பற்றிப்பேச கூறிவிட்டு இறங்கியவன்.
“ஈஷா பாப்பா, அப்பா உங்களை உள்ளே கூட்டிட்டு வர சொன்னாங்க. வாங்க போகலாம்” என்று ஈத்தனின் மகளை யாரின் கவனமும் கவராத வகையில் அழைத்துக்கொண்டு, ஒரு ஓரமாக மேடையேறி, ஈத்தன் இருந்த அறைக்கு போக முற்பட.
அப்பொழுது, ஈத்தன் வாங்கிய விருதுகள் பற்றிப் பேசிக்கொண்டிருந்த, தொகுப்பாளினி பெண், திடீரென்று “ஈத்தன் சார் வரும் வரை, அவருடைய மினி ஏஞ்சல் அவர் இல்லாத குறையை தீர்த்து வைக்க, நம்முடன் பேச வராங்க பாருங்க…” என்று யாரும் எதிர்பாராத விதமாக கூற…
உடனே மொத்த மீடியா கேமராக்களும், சக்தியுடன் சென்றுக் கொண்டிருந்த ஈத்தன் மகளை குறிவைக்க ஆரம்பித்துவிட்டன.
அதில் என்ன நடக்கிறது என்று அதிர்ந்து ஒருகணம் நின்ற சக்தி. மறுகணம் கேமராவின் கவனம் முழுவதும் தங்கள் புறம் திரும்பிவிட்டதில் முகமாற்றத்தை மறைத்துக்கொண்டு, காதில் இருந்த புளூடூத் வழியாக தொகுப்பாளினியிடம், “இடியட். உன்கிட்ட நான் என்ன சொல்லிட்டு வந்தேன். பைத்தியம் மாதிரி என்ன பேசிட்டு இருக்க?” என்றவன், குழந்தை கேட்காதவண்ணம் வண்ண வார்த்தைகள் கொண்டு சிரித்தப்படியே திட்ட…
அவளோ அவன் பேசுவதை காதில் வாங்காமல், “என்ன மக்களே சந்தோஷமா” என்று மைக்கில் பேசிக்கொண்டே போனாள்.
அதில் அரங்கமே பயங்கர ஆரவாரம் ஆகிவிட்டது.
குறிஞ்சிக்குமே ஆச்சர்யம் தாங்கமுடியவில்லை.
இன்றுவரை அவர்களுடைய ஈத்தனின் மகளை, பார்த்து மட்டுமே இருந்தவர்கள். இன்று முதல்முறை அவளின் குரலை கேட்க போகின்றனர். அதில் அனைவருக்குமே எதிர்பார்ப்பு கலந்த ஆர்வம் தான்.
தொகுப்பாளினி பெண்ணை, சக்தி திட்டுவதை உணர்ந்துக்கொண்ட ஈஷா, “எதுக்கு சக்தி ப்ரோ இவ்ளோ டென்ஷன்! நாம ரூம் போறது தெரியாமல் பாவம் அந்த ஆன்ட்டி பேசிட்டாங்க. இதை நான் சரிப்பண்றேன். பிளீஸ் டோன்ட் ஹர்ட் ஹர்” என்று சக்தி அப்பெண்ணை திட்டுவதில் மனம் தாங்காது கூறியவள்.
“ஈஷா பாப்பா வேண்டாம்” என்ற சக்தியின் வார்த்தைகளை கேட்காது. மேடையின் மையத்தை நோக்கி நடக்கவே ஆரம்பித்துவிட்டாள்.
ஈத்தனோ வெளியே நடப்பது எதுவும் அறியாது, குளியலறைக்குள், தொண்டையின் வறட்சியை சரிசெய்யும் மவுத் வாஷ் போன்ற மருந்தினை உபயோகித்துவிட்டு, களைப்பு நீங்க முகத்தை கழுவி ஃபிரஷ் ஆகிக்கொண்டு இருந்தான்.
வானில் ஒளிரும் நக்ஷத்திரம் ஒன்று, பூமியில் தரையிறங்கி நடைப்பயில்வது போல், சில லட்சங்களை விழுங்கிய, கருநீல நிறத்திலான தரைவரை புரலும் பார்டி கவுனில், அங்காங்கே சிறு சிறு வைர நகைகளில் மிளிர்ந்தவண்ணம், தன் இளம் ரோஜா நிறத்திலான கொழு கொழு கன்னங்கள் இரண்டும் ஆட, இடைத்தாண்டி வளர்ந்திருந்த செமி கர்ல் செய்யப்பட்ட கார் கூந்தலை சரிசெய்தப்படியே, படப்படப்பு என்பது சிறிதும் இல்லாது, மேடைக்கு மத்தியில் வந்து நின்று இருந்தாள். ஈத்தனின் தேவதை.
“அச்சோ! பூக்குட்டிக்கு நிறைய திருஷ்டி வந்துடுமே” என்று குறிஞ்சு மீண்டும் மீண்டும் தன்னிரு கரம் கொண்டு தொலைக்காட்சியில் தெரிந்தவள் உருவத்திற்கு நெட்டு முறித்துக்கொண்டு இருந்தாள்.
ஈத்தன் வைத்துவிட்டு சென்ற மைக்கை எடுத்து குழந்தையின் கையில் தொகுப்பாளினி பெண் கொடுக்க, புன்னகையுடன் வாங்கிக்கொண்டவள், அனைவரையும் பார்த்து, “ஹாய் படீஸ். எல்லாரும் எப்படி இருக்கீங்க? நான் ஈஷா அரோரா”, என்று தன்னை முறையாக அறிமுகப்படுத்திக்கொண்டு பார்க்க.
அவளுடைய குரலை உள்வாங்கிய அனைவரும் ஒருகணம் தங்களின் கண்களை மூடித்திறந்தனர். ஈத்தனின் குரலுடன் ஒப்பிட்டு பார்த்தனர். அவனின் குரலைவிட மிக மெல்லிய தென்றல் போன்ற பெண்மை நிறைந்த குரல். இருந்தும் அத்தனை தெளிவான தமிழ் உச்சரிப்பு. அப்பப்பா அப்படி மனதை வருடிச்சென்றது.
கூட்டத்தில் சொன்ன பதில்கள் எதுவும் ஈஷாவிற்கு புரியவில்லை.
அதில் சிரிக்கும் தன் கருவிழிகளை சுருக்கியவள், “சாரி படீஸ், நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு சுத்தமா புரியலையே” என்றுக்கூறி… “இப்ப நாம எப்படி பேசிக்கிறது?” என்று கன்னத்தில் ஒரு விரல் வைத்து யோசிக்க. அவளின் பாவனையில் அனைவருக்கும் அவளை அள்ளிக்கொஞ்ச கைகள் பரபரத்தன.
திரும்பி அருகில் நின்றிருந்த தொகுப்பாளினி பெண்ணை பார்த்த ஈஷா, “நீங்க தானே ஆன்ட்டி என்னை கூப்டீங்க. சொல்லுங்க? நான் எப்படி எல்லார் கிட்டேயும் பேசுறது” என்று, பால் மனம் மாறாத புன்னகையுடன், அவளை தலைசாய்த்து பார்த்து கேட்க.
அதில் அருகில் இருந்தவளுக்கு மனம் என்று ஒன்று இருந்திருந்தால், நிச்சயம் அதில் சற்று ஈரம் கசிந்திருந்து இருக்கும். ஆனால்?
“ஒழுங்கா குழந்தைக்கிட்ட பேசு. இதுக்கு மேல மீடியா முன்னாடி எதுவும் சொதப்பின அவ்ளோ தான். ஒழுங்கா வீடு போயி சேர மாட்ட” என்று சற்று இடைவெளிவிட்டு நின்றிருந்த சக்தி, தொகுப்பாளினியினை காதில் பொறுத்தியிருந்த ப்ளூடூத் கருவி வாயிலாக மிரட்ட. அவனை பார்த்து சரியென்று தலையசைத்தவள்.
ஈஷாவை பார்த்து, “வாவ்! எங்க ஈத்தன் சார் பொண்ணு என்கிட்டவா பேசினாங்க...? என்னால் நம்பவே முடியலையே” என்று கையில் கிள்ளிப் பார்த்து ஆச்சரியம் அடைந்தது போல் பேசியவள். “உங்க பேர் தான் அழகுன்னு நாங்க பார்த்தா, நீங்க அதைவிட அழகா வந்து நிற்கறீங்க ஈஷா. இப்ப உங்க குரல். ஓ மை காட். எல்லாத்தையும் விடவும் அவ்வளவு அழகா இருக்கு. வருஷம் முழுக்க கேட்க சொன்னா கூட நீங்க பேசுறதை நாங்க கேட்டுட்டே இருப்போம். அழகோ அழகு நீங்க” என்று டன் கணக்கில் ஐஸ் கட்டியை தூக்கி குழந்தையின் தலையில் வைத்து, “சொல்லுங்க ஈஷா. நீங்க என்ன படிக்கறீங்க? எந்த ஸ்கூல் நீங்க?” என்று கேட்க.
அவள் பேசியதை கேட்டு முகம் பிரகாசிக்க நின்றிருந்த ஈஷா, “நான் இப்போ Grade 7-ல் இருக்கேன். ஹோம் ஸ்கூலிங்கில் படிக்கிறேன் ஆன்ட்டி” என்றாள்.
“ஓ கிரேட்” என்ற தொகுப்பாளினி, “உங்களுக்கு யாரை ரொம்ப பிடிக்கும் ஈஷா?” என்று அடுத்து கேட்க.
சற்றும் தேங்காமல், “என் பேபியை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்” என்றாள் குழந்தை.
அவள் யாரை பேபி என்று கூறுகின்றாள் என்று இந்நேரம் உலகிற்கே தெரிந்து இருக்கும்.
இருந்தும் தொகுப்பாளினி பெண், ஒன்றும் தெரியாததுப்போல், “பேபியா! உங்க பேபி யாரு?” என்று கேட்க.
“என் டாடா தான் என் பேபி” என்றாள் குழந்தை பெருமித புன்னகையுடன்.
அதில், “சோ கியூட். எல்லா பொண்ணுங்க மாதிரி தான் நீங்களும். டாடிஸ் லிட்டில் பிரின்ஸஸ்” என்ற தொகுப்பாளினி, “ஈஷாக்கு அடுத்து யாரை பிடிக்கும்?” என்று கேட்க.
“அடுத்தும் என் பேபியை தான் எனக்கு பிடிக்கும்” என்றாள் குழந்தை உடனே.
அதில் அனைவரும் சிரிக்க…
“என்ன அடுத்தும் உங்க பேபி தானா?” என்று ஆச்சர்யம் காட்டி பேசிய தொகுப்பாளினி…
ஈஷாவின் பின்புறம், புயல் வேகத்தில் கதவை திறந்துக்கொண்டு வெளிவந்த ஈத்தனை பார்த்துவிட்டாள்…
அவனும் அவளை தான் பார்த்தவண்ணம் நடந்துவந்துக்கொண்டு இருந்தான்.
வெண்ணை திரண்டு வரும் நேரம் தாழி உடைந்த கதைப்போல், அவளுக்கான நேரம் கூடி வந்திருந்த சமயம் ஈத்தன் வந்துவிட்டதில், பதட்டம் அடைந்த தொகுப்பாளினி, படப்படவென, “ஓ! அப்போ ஈஷா பேபிக்கு அவங்க அம்மாவை பிடிக்காதா? சோ சேட்(sad)! அம்மா பாவமில்ல. ஈஷாக்கு ஏன் அவங்க அம்மாவை பிடிக்காது?” என்று கேட்க நினைத்ததை கேட்டேவிட்டாள்.
அதில் நொடியில் அரங்கம் மொத்தமும் அப்படியொரு அமைதி.
ஈத்தனின் நடையும் கூட ஒருகணம் உறைந்து நின்றுவிட்டு இருந்தது.
அடுத்த பாகம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻
Kurinji ku ethan ah terium ah illa ippadi urugitu irukale, anchor ku iniku iruku periya katcheri enna pesa sonna enna pesitu iruka loose pakki
பதிலளிநீக்குVery interesting sis, super👍
பதிலளிநீக்குSuper sister
பதிலளிநீக்குSuper
பதிலளிநீக்குசூப்பர் 👌
பதிலளிநீக்குபாடகனின் ரத்தம்
பதிலளிநீக்குமேடை ஏறி நடக்க
வண்ண விளக்குகள்
அவள் புறம் திரும்ப
பார்க்கும் கண்களுக்கு விருந்தாக
பிள்ளை நிலா
புன்னகையுடன் வளம் வர
பேசும் கிளிப் போல
பிள்ளை மொழியில்
சந்தத்துடன் இருக்கும் பாடல் வரிகள் போல
சந்தோசத்துடன் பதில் அளிக்கும் தேவதையை
வேதனை தரும் கேள்வியை கேட்டிருக்க கூடாது
மேடை நாகரிகம் தெரியாத பெண்ணே....