7.1-சங்கீத வானில் ஓர் அந்திப்போர்!
அத்தியாயம்-7
“காட்…! குறிஞ்சி… குறிஞ்சி தானே…!? I couldn't believe my eyes!” என்ற ஈத்தனுக்கே நீண்ட வருடங்களுக்கு பிறகான, எதிர்பாராத சந்திப்பில், மூச்சு விடுவது சற்று சிரமமாக இருப்பது போல் இருந்தது.
அதில் ஆழ் மூச்சு ஒன்றை உள்ளிழுத்து வெளியிட்டவன்…
தன் முன்பு ஆடாமல் அசையாமல் நின்றுவிட்டிருந்த அஞ்சனம் தீட்டியிருந்த பெரிய விழிகள் முன்பு, “ஹாய் கேர்ல்” என்று தன் கரத்தினை அசைக்க…
அவனுடைய கையசையில், “ஹ்ம்ம்” என்று விழித்த குறிஞ்சிக்கு இன்னுமே நிகழ்வது ஒன்றுமே புரியவில்லை…
அவனின் நீலநிற விழிகளினுள் தடுக்கி விழுந்துவிட்டிருந்தவள், அப்படியே திசையேதும் அறியாது எங்கோ அடித்துச்செல்லப்பட்டாள்…
அவளின் இம்முக பாவனையில் ஈத்தனின் இதழ்கள் மெல்ல புன்னகையில் விரிந்துக் கொள்ள, அவளின் காதோரம் சொடுக்கிட்டவன், “கொஞ்சமும் மாறவேயில்லை குறிஞ்சி நீ” என்றப்படியே குனிந்து, அவள் சிதறவிட்ட பொருட்களை விரைந்து சேகரிக்க ஆரம்பிக்க…
ஈத்தனின் விரல்கள் தீண்டாமலேயே காதோரம் தந்துவிட்ட குறுகுறுப்பில், குறிஞ்சிக்கு தேகம் முழுவதும் ஒருமுறை சிலிர்த்து அடங்கியது…
நடப்பதை உணர்ந்தவள், சட்டென்று கீழே தன் ஒரு கால் முட்டியை மடக்கி தரையில் ஊனியப்படி அமர்ந்து, “எப்படி இருக்கீங்க சார்” என்று கேட்டாள், ஈத்தனின் முகம் பார்த்து அவன் நலம் அறிய.
அதில் நிமிர்ந்து அவள் முகம் பார்த்த ஈத்தன், “நான் நல்லா இருக்கேன் குறிஞ்சி. நீ எப்படி இருக்க? மதர் இங்க ஃபேமிலியோட தங்கி இருக்கும் நர்ஸ்ஸ அனுப்பறேன்னு சொல்லி இருந்தாங்க. நீ வருவேன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. ரியல் சர்ப்ரைஸ்” என்றப்படியே பொருட்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டவன்…
“பேபி ரொம்ப பயந்துப்போய் இருக்கா குறிஞ்சி. வந்து அவளுக்கு கைட் பண்ணு. நாம பிறகு பேசலாம். கமான்” என்றவன் மகளை காண உள்ளே விரைந்துவிட…
சூழ்நிலையின் கனம் உணர்ந்து, குறிஞ்சியும் அவனை பின்தொடர்ந்து உள்ளே ஓடினாள்.
அழுகையில், செரி(cherry) பழம் போல் சிவப்பாக மாறிவிட்டிருந்த ஈஷாவின் முகத்தை பார்த்ததுமே, அவளை தன் மார்புடன் வாரி அணைத்து ஆறுதல் படுத்தக்கூறி, அவள் உடலில் உள்ள செல்கள் யாவும் குறிஞ்சியை அப்படி உந்தித்தள்ளியது.
இருந்தும் தன்னுடைய இடம் என்ன என்பதை உணர்ந்து, உணர்வுகளுக்கு கடிவாளம் இட்டவள்.
“ஹாய் ஈஷா! நான் குறிச்சி. உங்களுக்கு ஹெல்ப் பண்றதுக்காக வந்து இருக்கேன். ரெஸ்ட் ரூம் போயிட்டு வரலாம் வரீங்களா?” என்றாள், தன் கரத்தினை ஈஷா முன்பு நீட்டி.
அதில், ‘மீண்டும் ரெஸ்ட் ரூமிற்கா!’ என்று பயந்த ஈஷாவோ, அருகில் நின்றிருந்த ஈத்தனின் இடுப்பை அப்படியே கட்டிக்கொண்டு, அவன் வயிற்றில் முகத்தை அழுந்த பதித்துக்கொள்ள…
அவளின் முதுகில் ஆறுதலாக தட்டிக்கொடுத்த ஈத்தன், “டாடிக்கு தெரிஞ்ச ஆன்ட்டி தான் பேபி. தைரியமா போயிட்டு வாங்க. நான் இங்க தான் உன் கூடவே தான் இருப்பேன்” என்றான்.
அப்படியும் அவளுக்கு பயம் கொஞ்சமும் விட்டுபோகவில்லை…
வீட்டில் யாரேனும் வயதில் மூத்த பெண்களுடனோ, இல்லை பள்ளியில் தோழிகளுடனோ பழகி வளர்ந்திருந்தால், சற்று தைரியமாக சூழ்நிலையை எதிர்கொண்டு இருப்பாளோ என்னவோ!
விதி அவளுக்கு பெண் வாடையையே கொடுக்காது விட்டுவிட… வாழ்வில் முதல் முறை அப்படி அஞ்சி நடுங்கினாள்…
புது ஆள் முன்பு அவளால் அழக்கூட முடியவில்லை…
அதில், “பேபி” என்றாள் உதடுகள் துடிக்க ஈத்தன் முகம் பார்த்து.
ஈத்தனுக்குமே அச்சூழலை எளிதில் கையாள முடியவில்லை. குழந்தையாக பார்த்த மகளின் திடீர் உடல் மாற்றம் ஆச்சரியம், பயம், அசௌகரியம் என்று பல உணர்வுகளை தந்தன. இருந்தும் எதையும் வெளிக்காட்டாமல் ஈஷாவை தேற்றிக்கொண்டிருந்தான்.
அவளின் முகம் முழுவதும் வருடி, நெற்றியில் தன் இதழ்களை பதித்து, “டாடி சொல்றேன் இல்ல பேபி. ஆன்ட்டி கூட போயிட்டு வாடா. உனக்கு ஒன்னுமில்லை நம்பு பேபி. நான் உன்கிட்ட பொய் சொல்லுவேனா என்ன?” என்ற ஈத்தன்.
ஈஷாவின் கரத்தினை எடுத்து குறிஞ்சியின் கரத்தினுள் வைக்க…
பூவை விட மென்மையான குழந்தையின் கரத்தினை, கெட்டியாக பற்றிக்கொண்ட குறிஞ்சி, “பயப்படாம என்கூட வாங்க ஈஷா. நான் பார்த்துக்கறேன். ட்ரெஸ்ட் மீ” என்றாள் கனிவுடன்…
அதில் குறிஞ்சியின் முகத்தினை திரும்பி பார்த்த ஈஷா, மெல்ல எழுந்துக்கொள்ள…
“ஆன்ட்டி சொல்றபடி செய் பேபி”, என்று குளியலறை வாசல் வரை ஈத்தன் வந்து அவளை விட்டு வந்தான்.
உள்ளே சரியான பதத்தில் ஈஷா குளிக்க நீரை நிரப்பிய குறிஞ்சி, “ட்ரஸ் ரிமூவ் பண்றீங்களா… லைட்டா ஒரு குளியல் போட்டுட்டு புது ட்ரஸ் மாத்திக்கலாம்… நான் ஹெல்ப் பண்றேன்” என்றாள்.
ஈஷா, “இல்லை வேண்டாம் ஆன்ட்டி… நானே குளிச்சுக்கறேன்…” என்று மறுக்க.
மீண்டும் உதிரத்தை பார்த்து அவள் பயந்துவிட போகின்றாள் என்று குறிஞ்சி, “நீங்க டவல் கட்டிட்டு உட்காருங்க ஈஷா… ஜஸ்ட் டூ மினிட்ஸ் தான்… நான் குளிச்சு விடறேன்” என்று நயமாக பேசி, அவளை துண்டிற்கு மாற்றி, அங்கிருந்த ஸ்டூலில் அமர வைத்தவள்…
அவளுக்கு தேவையானவை அனைத்தையும் சொல்லிக்கொடுத்தப்படியே, குளிக்க வைத்து முடித்து, “அவ்ளோ தான் டா… இருங்க நான் உங்களுக்கு ட்ரஸ் எடுத்துட்டு வரேன்…” என்று குறிஞ்சி வெளியே வர.
படுக்கை விரிப்பை மாற்றிக்கொண்டிருந்த ஈத்தன், ஈஷாவிற்கு தேவையான உடைகள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்து இருந்தான்.
அவன் இதையெல்லாம் செய்யவில்லை என்றால் தான் ஆச்சரியம் என்று நினைத்த குறிஞ்சி, உடைகளுடன் தான் எடுத்து வந்த பொருட்களையும் சேர்த்துக்கொண்டு குளியலறைக்குள் விரைந்தாள்.
🔴அடுத்த பாகம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻
https://swathilakshmitamilnovels.blogspot.com/2025/02/72.html
தந்தையிடமிருந்து தனித்து செல்ல பயந்து தவிக்கும் மகளை தாயன்போடு நெருங்கி
பதிலளிநீக்குதயக்கத்தை நீக்கி
தெரியாத விஷயங்களை
தெளிவாக உரைக்க....
தேடும் படலத்தின்
தீர்வை நோக்கி....