3.1 சங்கீத வானில் ஓர் அந்திப்போர்! 🎶🫰🪻😘
அத்தியாயம்-3
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஈத்தன், இப்படியான கேள்விகள் அவனை பார்த்து கேட்கப்பட ஆரம்பித்ததுமே, ‘என் திருமணம் பற்றியோ, என் மனைவியை பற்றியோ யாரும் எதுவும் கேட்க வேண்டாம். அது என் தனிப்பட்ட விஷயம். பகிர்ந்துக்கொள்ள எனக்கு விருப்பம் இல்லை. நம் உறவு என் இசையுடன் மட்டுமேயானதாக இருக்கட்டும். என் இசையை மட்டும் ரசியுங்கள், விமர்சியுங்கள், விவாதியுங்கள்…’ என்று கூறிவிட்டு இருந்தான்.
அப்படியும் சிலர், ‘குழந்தையின் நிறம் தவிர வேறு எந்த ஒற்றுமையுமே குழந்தைக்கும் அவனுக்கும் இல்லை’ என்று கூறி, ‘அக்குழந்தை அவனுடையதே இல்லை... ஈத்தன் யாரோ ஒரு அனாதை குழந்தையை எடுத்து வளர்க்கின்றான். அதனால் தான் தன் மனைவியை காட்டவில்லை…’ என்றும்,
வேறு சிலர், ‘ஈத்தனின் மேலைநாட்டு கலாச்சார வாழ்க்கை முறையில், முறையற்ற உறவின் பலனாக உண்டான குழந்தை’ என்றும் கூறியவர்கள், உட்ச கட்டமாக அவனை ஒருசில நடிகைகள் உடன் எல்லாம் இணைத்து மூன்றாம் தர ஊடகங்கள் வாயிலாக விதவிதமான கிசுகிசுக்களை வெளியிட்டுக்கொண்டு இருந்தனர்.
அதை பார்த்து கொதித்துவிட்ட ஈத்தன், அவனின் மனைவி குறித்த விவரங்களையும், ஈஷா தன் மகள் தான் என்பதற்கான மருத்துவ ரீதியான ஆதாரங்களையும், அ முதல் ஃ வரை நீதி மன்றத்தில் கொடுத்து, தவறாக பேசியவர்கள் அனைவரின் மீதும், ‘என் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கவோ! கருத்துசொல்லவோ! யாருக்கும் உரிமையில்லை’ என்றுக்கூறி வழக்கு போட்டவன், சட்டப்படி நடவடிக்கை எடுக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய…
அதற்குள் அவனைக்குறித்து அந்நிகழ்ச்சியில் பேசியவர்கள் முதல் மீடியா அலுவலகம் வரை, அனைத்தின் மீதும் அவனின் ரசிகர்கள் பயங்கர தாக்குதல் நடத்திவிட்டனர்…
இதில் மற்றொரு பக்கம் சோசியல் மீடியாவில் அவனை குறித்து புறம் பேசிய பதிவு போஸ்ட்களை பார்த்து, இந்திய மக்களுக்கு நாகரிகம் சிறிதும் இல்லை என்பது போல் வெளிநாட்டு ரசிகர்கள் திட்ட, உள்நாட்டு பிரச்சனை உலக பிரச்சனை ஆகிவிட்டது.
தமிழ் ரசிகர்கள் பெரிதா, ஆங்கில ரசிகர்கள் பெரிதா என்று ஆரம்பித்த சண்டை, ஈத்தன் யாருக்கு என்றெல்லாம் அவனுக்காக உரிமை போராட்டம் எழுந்துவிட…
முதல்முறை ‘ஒரு பாடகனுக்கு போய் இத்தனை பவரா?!’ என்று உலகம் வியந்து பார்க்க இருந்தது.
ஈத்தனுக்கே வியப்பு கலந்த அதிர்ச்சி தான்…
இறுதியில் அவனே களத்தில் நேரடியாக இறங்கி, அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.
இனி அவனுக்காக, ஒரு ரசிகன், ஒரே ஒரு ரசிகன் யாரையாவது தாக்கினால் கூட, இனி நிச்சயமாக நான் பாட மாட்டேன் என்றுவிட்டான்.
அதிலும் கலவரம் செய்த ரசிகர்கள் பலர் வேறு சிறைக்கு சென்றிருக்க… அவனுக்கு என்னவோப்போல் ஆகிவிட்டது…
தங்களின் வாழ்க்கையை பணையம் வைக்கும் அளவிற்கு, அவர்களுக்கு அவன் என்ன செய்துவிட்டான்.
ஜெயிலுக்கு சென்றவர்களின் மனைவிமார்கள், பிள்ளைகள், தாய் தந்தையர்கள் என்று கண்ணீர் வடிக்க… அனைவருக்கும் ஆறுதல் கூறி, வக்கில் வைத்து என்னவென்று பார்த்து, அவர்கள் வெளியே வரும் வரை, அவர்களின் குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாக ஆதரவு அளித்து என்று ஈத்தனுக்கு, ஓரமாக தெருவில் நின்ற தேரை நடுவீதிக்கு இழுத்து முதுகில் கட்டி சுமக்கும் கதையாகிப்போனது.
இருந்தும் அவன் பொருட்டு எழுந்த பிரச்சனைகளை அவனே நின்று சரி செய்தான்.
இதில் சக்தி ஈத்தனிடம் வந்து சேர்ந்ததும் அந்த சம்பவத்தின் போது தான். பத்தாம் வகுப்பில் இருந்தவன், ஈத்தனுக்காக ரசிகர்களுடன் சேர்ந்து அடித்தடியில் இறங்கி இருந்தான். அதில் சிறார்களுக்கான சிறப்பு சிறையில் அவனை அடைத்திருந்தனர்.
ஈத்தன் தன் வாழ்நாளில் லஞ்சம் கொடுத்தது எதற்கு என்றால், சக்தியை எந்த வழக்கும் இல்லாது வெளிக்கொண்டுவர கொடுத்தது தான். ஒரு பள்ளி மாணவனின் எதிர்காலம் தன்னால் பாதிக்கப்பட்டுவிடவே கூடாது என்று பணத்தை தண்ணியாக அள்ளி செலவு செய்து இருந்தான்.
இறுதியாக, இனி ரசிகர்கள் யாரும் என் தனிப்பட்ட பிரச்சனைகளில் தலையிட வேண்டாம், நானே பார்த்துக்கொள்கின்றேன், அவரவர் அவர்களின் குடும்பத்தை பாருங்கள். நம் உறவு இசையுடன் நிற்கட்டும் என்று மீண்டும் அழுத்திக்கூறி பிரச்சனையை முடிக்க.
அவனை குறித்து பேசிய தனியார் நிறுவனங்களும், போட்ட பதிவுகளை மன்னிப்பு அறிக்கையுடன் எடுத்துவிட்டனர்.
அச்சம்பவத்திற்கு பிறகு, அவன் தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து எந்த மீடியாவும் பேசுவதும் இல்லை, கேட்பதும் இல்லை.
ஏன் ஈத்தன் உடனே பல வருடங்களாக இருக்கும் சக்தி கூட கேட்டது இல்லை.
அப்படியும் மீறி எங்காவது அவனைப்பற்றி தவறான விஷயங்களோ, ஏன் சிறு கமெண்டோ, சமூக வலைத்தளங்களில் எங்காவது வந்தால் போதும். அவனின் மேலை நாட்டு ரசிகர்களும் சரி, நம் தமிழ் ரசிகர்களும் சரி, தவறாக போட்டவனை கிழித்து தொங்கப்போட்டு, ரிப்போர்ட் அடித்து, அந்த பதிவையே போட்ட ஒருசில நிமிடங்களிலேயே எடுக்க வைத்துவிடுவர்.
அந்தளவிற்கு மக்களுடன் இசை மூலம் பின்னிப்பிணைந்து விட்டு இருந்தான்.
அவனுக்கு பயந்து என்பதை விட, அவனின் ரசிகர்களின் எண்ணிக்கையை பார்த்து பயந்தே, அவனை எதிர்க்க யாரும் துணிவதில்லை!
அவனின் திருமணம் பற்றியும், மனைவி பற்றியும் அறிய, அவன் மீது அன்புக்கொண்ட அனைவருக்குமே நெஞ்சம் முழுவதும் ஆசையிருந்தாலும், அவனுடைய உணர்வுகளை மதித்து, பல வருடங்களாகவே அக்கேள்வி கேட்கப்படாமலேயே நின்றுவிட்டு இருந்தது.
இன்றோ அம்மில்லியன் டாலர் கேள்வி கேட்கப்பட்டுவிட்டது.
அதுவும் அவனிடம் இல்லை.
காற்றுக்கூட வலிக்க தீண்டி விட கூடாது என்று, அவன் பொத்தி வைத்து செல்லமாக வளர்க்கும், அவனின் தங்க மகளிடம்.
அதில் யாருக்குமே சந்தோஷம் இல்லை.
முகத்தை கூட சரியாக துடைக்காது, நனைந்த மேல் சட்டையை கூட மாற்றாது ஓடிவந்திருந்த ஈத்தனின் தோற்றம், உண்மையான ரசிகர்களின் மனதை கசக்கிப்பிழிய…
தொகுப்பாளினி பெண்ணை கொல்லும் வெறி அனைவருக்கும். ஈஷா மட்டும் அருகில் இல்லாதிருந்தால் இந்நேரம் அவள் மீது பல செருப்புகள் பறந்து வந்து விழுந்து இருக்கும்.
ஈத்தனின் வெளிப்படையான பதட்டம் மிகுந்த தோற்றத்தில் குறிஞ்சியோ மடிந்தேவிட்டாள்.
முகம் பார்க்கும் கண்ணாடியை போல் இவ்வளவு நேரமும் அவனின் சந்தோஷத்தை கண்டு மகிழ்ந்தவள், இப்போழுதோ உயிர் வலியை தன்னில் சுமந்தாள். என்ன செய்ய முடியும் அவளால்.
கண்ணீர் மளமளவென கொட்ட, “கடவுளே சமர் சாரையும், பூக்குட்டியையும் இந்த சூழ்நிலையில் இருந்து எப்படியாவது காப்பாத்தி விடுங்க. தயவு செஞ்சு அவங்களை கஷ்டப்படுத்தாதிங்க. இந்த வாரம் நான் 108 குடம் தண்ணி அபிஷேகம் பண்றேன். அங்கப்பிரதட்சணம் பண்றேன்” என்று வரிசையாக வேண்டுதலை மட்டுமே அவர்களுக்காக அவளால் வைக்க முடிந்தது.
🌼அடுத்த பாகம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻
https://swathilakshmitamilnovels.blogspot.com/2025/02/32.html
பொது இடங்களில்
பதிலளிநீக்குபலருக்கு நடக்கும்
கண்ணுக்கு தெரியாத
காட்டுமிராண்டித்தனம்
அடுத்தவர் வாழ்க்கையின்
ரகசியத்தை தெரிந்து கொள்ள துடிக்கும்
தவறான மனோபாவம்....
தவித்து நிற்கும் தந்தை
துடித்து பார்க்கும்
ரசிகர்கள்
துயரம் போக்க வேண்டுதல் வைக்கும் தாங்காத பாவை...
தெய்வத்தின் துணை யார் பக்கம்....