4.1-சங்கீத வானில் ஓர் அந்திப்போர்! 🎼🪻😘📽️
சகல வசதிகளுடன் வீடு போலிருந்த உயர்ரக கேரவனின் உள் அறைக்குள் இருந்த சொகுசு படுக்கையில், ஈத்தன் கொடுத்த இரவு உணவை சமத்தாக உண்டுவிட்டு, இலகுவான இரவு உடைக்கு மாறியிருந்த ஈஷா, நல்ல உறக்கத்தில் இருந்தாள்.
அவளருகேயிருந்த ஈத்தன் ஈஷாவின் உறக்கம் கலையாத வண்ணம், தொலைபேசியில் சன்னக்குரலில் பேசிக்கொண்டு இருந்தான்.
அவன் அன்னை சித்ரலேகா ஏதோ கூற, “நோ மாம். நான் விசாரிக்க சொல்லி இருக்கேன். நீங்க எதுவும் தலையிட வேண்டாம். நான் பார்த்துக்கறேன்” என்றான் உறுதியுடன். அதில் சித்ரலேகா, “இதெல்லாம் நம்ம ஸ்டேட்டஸுக்கு தேவையா ஈத்தன்? அப்படி என்ன பிடிவாதம் உனக்கு வெளியே சொல்லக்கூடாதுன்னு” என்றவர், எப்பொழுதும் ஆரம்பிக்கும் பல்லவியை ஆரம்பித்துவிட…
ஈத்தன் ஒரு வார்த்தை பதில் பேசவில்லை.
அழைப்பை துண்டிக்கவுமில்லை.
இறுதியில் அவருக்கே வாய் ஓய்ந்து, “இவ்வளவு அழுத்தம் உனக்கு இருக்கக்கூடாது ஈத்தன்” என்றுவிட்டு மூச்சு வாங்க…
“சாரி மாம்… ப்ளீஸ் டேக் கேர்…” என்றுவிட்டு ஈத்தன் தொலைபேசியை வைத்துவிட்டான்.
அதில் கைக்கு அடக்கமாக இருந்த மகனை தொடர்ந்து அப்படியே வைத்துக்கொள்ளாது விட்டுவிட்ட சித்ரலேகாவினால், இப்பொழுது வெறும் பல்லை மட்டுமே கடிக்க முடிந்தது.
அதற்குள் அவன் தந்தை ஹன்டரிடம் இருந்து அவனுக்கு குறுஞ்செய்தி வந்திருந்தது.
“Is everything ok Eth(ஈத்)?” என்று நிலவரத்தை அவர் ஒரே வரியில், கால் செய்யாது மெஸேஜ் வாயிலாக கேட்க.
அதில் நிம்மதியானவன், “Yes dad, everything's fine” என்று அவனும் ஒரே வரியில் பதில் அனுப்பி, அவ்வுரையாடலை அத்துடன் முடித்துவிட்டான்.
பெற்றவர்களின் அன்பையும், அனுசரணைகளையும் எதிர்பார்க்கும் நிலையையும், அவர்கள் கொடுத்தால் அதை ஏற்கும் நிலையையும், ஈத்தன் எப்பொழுதோ கடந்துவிட்டு இருந்தான்.
அவர்களின் இவ்வன்பும், அனுசரணையும் அவனுக்கு இதமாக இல்லாமல், சுமையாக இருந்தது தான் காலத்தின் கொடுமை!
வண்டி சென்னையின் அதீத நெரிசல் மற்றும் இரைச்சலை கடந்து, கிழக்கு கடற்கரை சாலையில் சுகமாக பயணித்து, நகரத்தைவிட்டு நன்றாக தள்ளி அமைந்திருந்த ஈத்தனின் தனி வில்லாவிற்குள் நுழைந்தது.
நுழைவு வாயிலில் தொடங்கி, கிட்டத்தட்ட 50 ஏக்கருக்கு தொடர்ந்து அத்தனை உயரமான மரங்கள் காடுப்போல். இடையில் வண்டி செல்வதற்கான சாலைக்கு மட்டுமே இடம்விட்டு இருந்தனர். சுற்றி நான்கு புறமுமே அவ்வாறு தான். உள்ளே என்ன இருக்கின்றது என்று யாராலும் அனுமானிக்க முடியாதவாறு அரணாக மரங்கள் அமைந்திருந்தது. ஈத்தனின் மனதைப்போலவே.
அதைக் கடந்தால், சில ஏக்கருக்கு அடர் சிகப்பு நிறத்தில் கம்பளம் விரித்தது போல் சிகப்பு ரோஜாக்கள் மட்டும் அடங்கிய பரந்து விரிந்த மலர்வனம். நிலா வெளிச்சத்திலும், இரவு நேர விளக்குகளின் வெளிச்சத்திலும் அத்தனை அழகுடன் மிளர்ந்துக்கொண்டு இருந்தன.
அதையும் கடந்தால், பச்சை பசேலென்று பட்டுப் போல் சீராக வெட்டி பராமரிக்கப்பட்ட புல் தரை, செயற்கை நீரூற்றுகளுடனும், ஓய்வு கூடங்களுடனும் என்று எங்கெங்கும் பணத்தின் செழுமை தான்.
அதுமட்டுமின்றி மாளிகையின் மற்ற புறங்களில், டென்னீஸ் கோர்ட், பேஸ்கட் பால் கோர்ட், கொல்ஃப், ஈஷா ஸ்கேட்டிங் பயிற்சி செய்வதற்கான பிரத்யோக இடம், சைக்கிள் ஓட்ட தனி சிறப்பு பாதை, நவீன இன்ஃபினிட்டி நீச்சல் குளம், என்று அங்கு இல்லாததே இல்லை.
ஈஷா பிறந்த பிறகு தான், ஈத்தன் இந்த வில்லாவை உருவாக்கி இங்கு குடியேறி இருந்தான். இதேப்போல் அமெரிக்காவிலும் ஒன்று அவனுக்கு உள்ளது.
ரெக்கார்டிங் பொறுத்து இரண்டு நாடுகளுக்கும் மாறி மாறி பறந்துக்கொண்டு இருப்பான்.
ஈஷாவின் தூக்கம் சிறிதும் கலையாத வகையில், மெல்ல தன்னிரு கைகளில் அவளை ஏந்திய ஈத்தன், கேரவனில் இருந்து இறங்கி தன் பல அடுக்கு மாளிகையினுள் நுழைந்து, லிஃப்ட்டின் மூலம் ஐந்தாவது தளத்திற்கு சென்றான்.
கீழே கேரவனை அதற்கான கராஜிற்கு அனுப்பிய சக்தி மற்ற உதவியாளர்களுடன், ஈத்தனுக்காக வரவேற்பறையில் காத்துக்கொண்டு இருந்தான்.
வெளியாட்கள் யாராக இருந்தாலும், தரை தளத்துடன் சரி. அதில் சக்தியும் அடக்கம்.
மேல் தளங்களுக்கு, குறிப்பிட்ட பாதுகாவலர்களுக்கும், அவர்களின் மேற்பார்வையில் சுத்தம் செய்ய வருபவர்களுக்கும், மட்டுமே அனுமதி.
ஈஷாவை படுக்கையில் படுக்கவைத்து, போர்வையை போர்த்திவிட்டு, அவளருகேயே அமர்ந்துவிட்டான் ஈத்தன்.
மனம் எங்கெங்கோ பயணித்துக்கொண்டு இருந்தது.
சில நிமிடங்களில் ஈஷாவின் மூச்சு மீண்டும் அவள் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றதை உறுதிப்படுத்தும் விதமாக சீராக வர ஆரம்பிக்க… அதை உணர்ந்த ஈத்தன் குனிந்து, “சாரி டா பேபி” என்று அவளின் நெற்றியில் தன் இதழ்களை மெல்ல பட்டும் படாமல் ஒற்றியெடுக்க… ஈஷாவின் இதழ்கள், “லவ் யூ பேபி!” என்று அந்த நேரத்திலும் அவனின் ஸ்பரிசம் உணர்ந்து முணுமுணுக்க…
வேறென்ன வேண்டும்!
சிலிர்த்துப்போனான்!
“லவ் யூ டூ பேபி!” என்று மெல்ல சத்தம் வராது கூறியவன், எழுந்து கதவை மூடிவிட்டு, வெளி வந்தான்.
கீழே சக்தி மற்ற சீனியர் மேனேஜர்களுடன் அமர்ந்திருக்க… மணியை பார்த்தப்படியே வந்தமர்ந்த ஈத்தன், “என்ன ஆச்சு ரவி? நான் சொன்னதை விசாரிச்சிட்டீங்களா?” என்று கேட்க.
“எஸ் சார். நீங்க கெஸ் பண்ணப்படியே, நாராயணன் தான் சௌந்தர்யாவ டிரிகர் பண்ணி இருக்கார். சௌந்தர்யா வெறும் அம்பு தான்” என்றார்…
அதற்கு “ஓ… ஓகே…” என்ற ஈத்தன் முகத்தில், ‘நான் எதிர்பார்த்தது தான் இது’ என்ற பாவனை தவிர வேறெந்த பாவனையும் இல்லை.
அதில், ‘என்ன மனுஷன் யா! இவருக்கு எதிரா ஒருத்தன் இப்படி செய்து இருக்கான் சொல்றேன். சின்ன கோபமோ ஆவேசமோ எதுவுமே முகத்தில் காணோமே’ என்று எப்பொழுதும் போல், ஈத்தனின் டிசைன் புரியாது, அவன் முகத்தையே ரவி பார்த்துக்கொண்டிருக்க…
ஈத்தனோ, சக்தி புறம் திரும்பி, “சௌந்தர்யாவ அவங்க வீட்டில் பத்திரமா ட்ராப் பண்ணியாச்சா? எதுவும் பிரச்சனையில்லை இல்ல சக்தி” என்று விசாரித்தான்.
ஈத்தனின் இந்த அக்கறையில் மற்றவர்கள் முன் எதுவும் கூறமுடியாது உள்ளுக்குள்ளே புகைந்த சக்தி, “எதுவும் பிரச்சனை இல்லை சார். சௌந்தர்யா மேடத்தை நம்ம ஆளுங்க ரொம்ப பத்திரமா அவங்க வீட்டில் ட்ராப் பண்ணிட்டாங்க” என்றான், தன் கோபத்தை வார்த்தைகளில் அதீத பவ்யம் கொடுத்து காட்டி…
அதில், “குட்…” என்று லேசாக புன்னகைத்த ஈத்தன், மீண்டும் ரவியின் புறம் திரும்பி, “சௌந்தர்யா கூட போட்டிருந்த ஃபியூட்சர் ஆக்ரிமெண்ட்ஸ் எல்லாம் நாளைக்கே லாயர் வச்சு கேன்சல் செய்து, பேலன்ஸ் செட்டில்மெண்ட் எல்லாம் பக்காவா முடிச்சிடுங்க ரவி. இனி அவங்களுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இருக்க கூடாது” என்றவன், அத்துடன் அந்த தொகுப்பாளினி விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு. இசைவிழா பற்றிய மற்ற பேச்சிற்கும், நாளைய அப்பாயிண்மெண்ட் பற்றிய விவரங்களுக்கும் தாவிவிட்டான்.
அனைத்தும் முடிய, “ஓகே ரவி… நாளைக்கு பார்க்கலாம்” என்ற ஈத்தன், அனைவருக்கும் விடைக்கொடுத்து அனுப்பிவைக்க…
சக்தி மட்டும் நகராமல் அங்கேயே இருந்தான்.
🔴 அடுத்த பாகம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻
அம்மாவிடம் பொறுமை
பதிலளிநீக்குஅப்பாவிடம்
அளவான பேச்சு
அனைத்திலும் நிதானம்
அன்பு மகளின் மேல்
அக்கறையான நேசம்
அரணாக ரசிகர்கள்
ஆனாலும் தவிக்கும்
அவன் மனம்.....