5.2- சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🪻😘📽️



நேரம் செல்ல செல்ல அவனால் கவனத்தை சரியாக வேலையில் வைக்க முடியவில்லை…


ஈஷாவே மூளைக்குள் சுற்றிக்கொண்டு இருந்தாள்…


எப்பொழுதுமே மகளின் அன்பும், கருணையும் நிறைந்த குணம், அவனை ஒரு தந்தையாக மிகுந்த பெருமிதம் கொள்ள செய்யும்...


ஆனால் அவையே இன்று அவனை யோசிக்க வைத்தன!


வாழ்வில் ஒவ்வொரு அடியையுமே மிகுந்த அலசல்களுக்கும், யோசனைகளுக்கும் பிறகு தான் ஈத்தன் வைப்பான்…


பொறுமையும், நிதானமும் அவனிடம் எப்போதுமே கொட்டி கிடக்கும்…


காரணம் தெரியாத விஷயத்தில் மாட்டி காயம் பட்டுவிட கூடாது என்பது தான்…


அதேதான் ஈஷாவிற்கும்…


மகளின் விஷயங்களை அவ்வளவு உன்னிப்பாக கவனித்துக் கொள்வான்…


கடமைக்காகவோ, பேருக்காகவோ பிள்ளை பெற்றுக்கொண்டவன் இல்லை அவன்…


ஆசையாக பெற்றுக்கொண்டவன்… அவள் தான் அவனின் எல்லாம்…


அதன் பொருட்டு, பன்னிரண்டு வயதில், தனக்கு என்னவெல்லாம் தெரியும் என்று மகளுடன் ஒப்பிட்டு பார்த்தவனுக்கு,

எதிரிகளை எடைப்போடும் அறிவு மகளிடம் கொஞ்சமும் இல்லாதது புரிந்தது.


அதேசமயம், அவள் தனித்து தனக்கு தோன்றியதை வைத்து முடிவெடுக்கும் அளவு வளர்ந்திருந்திருப்பதும் புரிந்தது.


அனைத்து பெற்றோர்களும் எதிர் கொள்ளும் பிரச்சனை தான். பதின்ம வயதை பிள்ளைகள் நெருங்க தொடங்கினாலே, இவ்வாறான பல சிக்கல்கள் வர ஆரம்பித்துவிடுமே.


ஈஷாவாவது சொன்னால் சரியென்று கேட்டுக்கொள்கிறாள். நாட்டில் பல பிள்ளைகள் பெற்றோர் அறிவுரை கூற ஆரம்பித்தாலே தெரித்து ஓடுவதும், ‘எனக்கு எல்லாம் தெரியும்’ என்று எதிர்த்து பேசுவதுமாக பெற்றோர்களுக்கு பெரிய சவாலாகி விடுவார்களே!


ஒற்றை பிள்ளையாக பிறந்து, தனித்தே வளர்ந்திருந்த ஈத்தனுக்கு, யோசிக்க யோசிக்க மகளின் இச்சிறு குறையே பெரிதாக தெரிய ஆரம்பித்துவிட்டது.


உடனே அக்குறைக்கான காரணத்தை அவன் தேட, ஈஷாவை தன் கைக்குள்ளே தான் வைத்து, வளர்த்தது தான் காரணமாக இருக்குமோ என்று சரியாக பிரச்சனையின் நுனியையும் பிடித்துவிட்டான்.


பின்னே நீரில் இறங்குவதற்கு முன்னரே, நீச்சல் கற்றுக்கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது! ஒருசில விஷயங்களை அனுபவங்கள் தானே பக்குவப்படுத்தி புரிய வைக்கும். 


ஆனால் ஈஷாவை எங்கு அழைத்து சென்று நாலு பேருடன் பழக விடுவது என்பது தான் அவனுக்கு இப்பொழுது தெரியவில்லை. 


மனிதனுக்கு மட்டுமே இறைவன் டிசைன் டிசைனாக பிரச்சனைகளை அனுப்புவான் போல்.


ஈஷா அவள் அன்னையின் வயிற்றில் உண்டானதை உறுதி செய்த அடுத்த கணமே, நிலுவையில் இருந்த அடுத்த இரண்டு வருடங்களுக்கான பிராஜெக்ட்கள் அனைத்தையும் விறுவிறுவென்று அவள் பிறப்பதற்குள் முடித்து கொடுத்திருந்த ஈத்தன், அவள் பிறந்து இரண்டு வருடங்கள் ஆகும் வரையிலுமே வேறு எந்த புது பிராஜெக்டிலும் ஒப்பந்தம் கூட செய்துக்கொள்ளவில்லை.


இது என்னுடைய குழந்தை. நான் தான் வளர்க்க வேண்டும் என்று தன்னை முழுமையாக குழந்தை வளர்ப்பில் விரும்பியே ஈடுபடுத்திக்கொண்டு இருந்தான்.


அவளுடைய இரண்டாவது பிறந்தநாள் முடிந்த பிறகு தான், மீண்டும் பட வாய்ப்புகளை ஏற்க ஆரம்பித்து இருந்தான்.


ஆரம்பத்தில் அவள் தூங்கும் நேரங்களில் ரெக்கார்டிங் முடித்தவனால் அவள் வளர வளர அது முடியாமல் போனது.


அப்பொழுது தான் நீண்ட யோசனைக்கு பிறகு, ஈத்தன் ஒரு பெண்ணை கேர் டேக்கராக பார்த்து எடுத்து தவறு செய்திருந்தான். 


எடுத்ததுமே அப்பெண்ணுடன் ஈஷா நன்றாக பொருந்திப்போக, அமெரிக்கா செல்லும் பொழுதும் கூட உடன் அழைத்து சென்று விடுவான். 


அப்பெண் வந்தப் பிறகு, குழந்தை பற்றிய கவலை ஏதுமின்றி, வேலை நேரத்தில் தன் முழு கவனத்தையும் அவன் தன் வேலையில் செலுத்த, இசை துறையில் அவனின் உயரம் மடமடவென வளர்ந்துக்கொண்டே சென்றது.


அப்பொழுது பார்த்து ஒருநாள் அப்பெண், வீட்டில் தனக்கு திருமணத்திற்கு பார்க்கிறார்கள், எனக்கு குழந்தை ஈஷாவை மிகவும் பிடித்து இருக்கிறது, அவளை விட்டு செல்ல முடியாது என்றும், ஈத்தனையும் அவள் காதலிப்பதாக கூறி, அவளை திருமணம் செய்துக்கொள்ள கேட்க, திகைத்த ஈத்தன் உறுதியாக மறுத்துவிட்டான்.


அதில் மறுநாளே அவள் வேலைக்கு வருவதை நிறுத்திவிட்டாள்.


அதன் பிறகு வந்தவர்களிடம் ஈஷாவோ பழக மறுத்து, அப்பெண்ணையே தேடித்தேடி ஏங்கி அழ, ஈத்தனுக்கு பயங்கர கஷ்டக்காலம் அது. 


சிறுவயதில் இருந்தே ஈஷாவை முடிந்தளவிற்கு அவன் அழவே விட்டது இல்லை. அவள் அழ ஆரம்பித்தாளே அவனுக்கு இதயம் படப்படக்க ஆரம்பித்துவிடும். அப்படி இருக்கும் போது ஈஷாவின் அத்தேடலும், அழுகையும் அவன் நெஞ்சில் அழியாத வடுவாகிப்போனது.


ஈஷாவுடனே முழுநேரமும் இருந்து அப்பெண்ணிற்கான தேடலை சுத்தமாக மறக்க வைத்தவன், அதன் பிறகு தப்பி தவறிக்கூட யாரையுமே நம்பி ஈஷாவை அவன் விடுவதில்லை. 


அனைத்தையும் ஒரே ஆளாக பார்க்க கஷ்டமாக இருந்தாலும் மகளுக்காக பொறுத்துக்கொண்டான்.


நாளடைவில் ஈத்தனின் கவனிப்பில், ஈஷாவிற்கும் அவனை தாண்டிச் சென்று தேட எதுவுமே இருக்கவில்லை.


அவளுடைய அம்மா, அப்பா, தோழன், ஆசான்… என உலகில் உள்ள அனைத்து உறவுகளாகவும் அவனே மாறிப்போனான்.


அவனாலும் அவளை விட்டு இருக்கவே முடியாது போனது. 


அவனுடைய வேலை, இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் அவனை மாறிமாறி பயணிக்க வைக்க, இரண்டு நாட்டிலும் ஈஷாவிற்கு ஏற்றப்போல், ஹோம் ஸ்கூலிங்கிற்கு அனைத்தையும் ஏற்பாடு செய்துவிட்டான். 


ஈஷா நன்றாக ஓடியாடி விளையாட ஆரம்பித்த சமயம் முதலே, அவளுடன் வெளியே செல்ல அவனுக்கு ஆசையிருந்தாலும், அவளை நம்மூரில் பொது இடங்களுக்கு அவனால் எங்குமே அழைத்து செல்ல முடிந்ததில்லை. 


அவர்கள் இருவரின் மகிழ்ச்சிக்காக என்று போனால், ரசிகர்கள் ஒன்றுக்கூடி போக்குவரத்து முதல் அனைத்திலும் குளறுபடி செய்துவிடுவார்கள்.


காவல்துறைக்கு எத்தனையோ முக்கிய வேலைகள் இருக்கும். அதில் இவர்கள் வேறு சென்று சேர்ந்துக்கொண்டால்… 


அதைவிட அதிக மக்கள் நெருக்கடியில், ஈஷாவிற்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயம் வேறு ஈத்தனுக்கு உண்டு… 


எங்காவது சென்னை-பாண்டிசேரி சாலையில் யாருமற்ற இடங்களுக்கு சென்று வருவார்கள். அவ்வளவு தான். அமெரிக்கா சென்றாலும் கிட்டத்தட்ட இதே நிலை தான்.


அனைத்து நாட்டிலுமே, சினிமா துறையினுள் காலடி எடுத்து வைத்துவிட்டாலே, தனி மனித சுதந்திரம் என்ற ஒன்று மொத்த குடும்பத்திற்குமே அல்லவா பறிபோய்விடுகிறது.


இதில் ஈத்தனுக்கு நெருங்கிய நண்பர்கள் என்றும் யாரும் இல்லை. 


நெருங்கிய உறவினர்களிடமும் அவன் நெருங்கியது இல்லை. பெற்றவர்களுமே அதில் அடக்கம் தான்.


சக்தி மட்டும் தான் சற்று விதிவிலக்கு. அவனுடைய விலகலை எல்லாம் பொருட்படுத்தாமல் வந்துவந்து அவனுடன் ஒட்டிக்கொள்வான். ஆனால் அவனுக்கே பத்துப்பேர் புத்திமதி சொல்ல வேண்டும் என்ற நிலை தான்.


இப்பொழுது ஈஷாவை யாருடன் நம்பி பழக விடுவது என்று பெரும் கேள்வி ஈத்தனுக்குள்?


அதைவிட நேற்று மேடையில் நடந்தது போல், இனி வருபவர்கள் யாரும், மகளிடம் ஏதேனும் கேள்வி கேட்டால் என்ன செய்வது?


அனைத்தையும் நினைக்க நினைக்க, அவன் மனதினுள் ஈஷாவை பெற்றவளின் நினைவு தான் மீண்டும் மீண்டும் சதிராடியது!


அவனுடைய நம்பிக்கையை ஒருகணம் கூட சிதறவிடாது காப்பாற்றியவள்! இக்கணம் வரையுமே காப்பாற்றுபவள்! இவ்வுலகிலேயே அவன் அதிக மதிப்பு வைத்திருப்பவள்! 


‘ஏன் அவளைப்போல் யாருமே இல்லை’ என்று எத்தனை லட்சம் முறை நினைத்திருப்பானோ தெரியாது. இன்றும் அதையே தான் நினைத்தான்.


இப்படியே கடகடவென்று அடுத்த மூன்று மாதங்கள் ஓடிவிட்டன.


இறுதியாக ஈத்தனும் எப்படியோ, ஈஷாவிற்கு வெளி உலகை காட்ட ஒரு விடையையும் கண்டுப்பிடித்துவிட்டு இருந்தான்.


அதன் பிறகென்ன வேலைகள் மின்னல் வேகத்தில் நடந்து முடிய, இதோ ஈஷாவுடன் கொடைக்கானல் நோக்கி தன் தனி விமானத்தில் பறந்துக்கொண்டு இருக்கின்றான்!


ஈஷாவிற்கு உலகத்தை காட்ட போகின்றானா?!


இல்லை தன் உலகத்தை காண போகின்றானா?!

🔴அடுத்த பாகம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻 😘 

https://swathilakshmitamilnovels.blogspot.com/2025/02/61.html

கருத்துகள்

  1. Heroine irukura ooruku ponna kutitu varana vaa rasa unakaga dan wait pannitu iruka

    பதிலளிநீக்கு
  2. அன்னை பற்றி
    அறியாத வயதில் அரவணைத்து செல்ல அருகில் வந்தவளை அனுதினமும் வேண்டி அழுத பிள்ளையை அன்னையாய் மாறி அவனுக்குள் புதைக்க...
    அவன் உலகம்
    அவளாய் இருக்க
    அவள் உலகம்
    அவனா இருக்க அவர்களின் உலகம்
    அன்பின் பிள்ளையால்
    அகம் சேருமோ????

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates

Popular posts

Completed- உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே💘- (Completed story available here for free Read)

New Ongoing 💌 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🎼🪻😘💌

Completed-💃🕺அழகான இராட்சசியே அடிக்கரும்பாய் இனிக்கிறியே - Romantic Entertainment

Completed-மகிழ்மதியின் அரசன்- Royal Family Based Romantic love story

🔴My Complete Novel List: Ongoing and Finished