29.1 அந்திப்போர் 🪻🎼😘
அத்தியாயம் -29
தன் கையில் இருந்த மியூசிக் ப்ளேயரை எடுத்த இடத்திலேயே பத்திரமாக வைத்துவிட்டிருந்த ஈத்தன், “ஏன் கேர்ள் இப்படியெல்லாம் என்னை சோதிக்கிற… நான் இப்ப என்ன செய்யுறது… நீயே சொல்லு…”, என்று அப்படியே அங்கிருந்த ஒரு நாற்காலியில் அமைதியாக அமர்ந்துவிட்டு இருந்தான்…
மதரிடம் சற்றுமுன்னர் அவன் கூறியது போல் எளிதாக பிடுங்கி வேறொரு இடத்தில் நடும் நிலையில் குறிஞ்சியின் நேசம் இல்லை என்பதை அவனின் ஆழ்மனம் உணர துவங்கியதின் வெளிப்பாடே அவனின் அந்த செயலற்ற நிலைக்கு காரணம்…
ஈத்தனும்… அவனின் நினைவுகளும்… குறிஞ்சியின் ஒவ்வொரு அணுவிலும் இத்தனை வருடங்கள் கடந்தும்… சிந்தாமல், சிதறாமல் வேர்விட்டு… அவளின் நாடி நரம்பெல்லாம் பின்னி பிணைந்து குடியிருக்க…
அவனுக்கு ‘என்ன செய்வது’ ஒன்றும் புரியவில்லை…
எப்படி அதனை பிடுங்கி எடுப்பது…
முடியும் என்று தோன்றவில்லை…
ஆரம்பிக்கும் முதலே ‘தான் வேறொருவனுக்கு சொந்தமானவள்’ என்று கூறி அவனின் மனதிற்கு விலங்கிட்டு இருந்தவள்… தன் மனதை மட்டும் சுதந்திரமாக அலையவிட்டுவிட்டிருக்க…
ஈத்தனின் மனமோ அவள் போட்டு பூட்டிவிட்ட விலங்குகளை மீறி வெளிவரவும் முடியாமல்… உள்ளேயே இருக்கவும் முடியாமல்… அப்படி திணறியது…
அதில் தன்னிரு கைகளால் முகத்தை அழுந்த மூடியப்படி சில நிமிடங்கள் அப்படியே அமர்ந்திருந்தவன்… இறுதியில் ஒருமுடிவுடன் எழுந்திருந்தான்…
உடன் எவ்வித தயக்கமும் அற்று, அவ்வறையில் இருந்த அடுத்த அலமாரியை திறந்து அதனுள் இருப்பதை பார்வையிட தொடங்கியும் இருந்தான்…
அன்று,
குறிஞ்சிக்கு ஆறாவது மாதம் முடிந்து ஏழு தொடங்கியிருந்த சமயம்…
வாந்தி, மயக்கம் எல்லாம் கனவு போல் நின்று பத்து வாரங்களுக்கு மேல் கடந்துவிட்டிருந்தில்… முன்பு விட்டதற்கு எல்லாம் சேர்த்துவைத்து அவளுக்கு எடுக்க ஆரம்பித்திருந்த பசியில்… இதுவரை இல்லாத அளவுக்கு சதைப்பிடிக்க ஆரம்பித்திருந்தவள்… மெல்ல தாய்மையின் மெருகேற பளபளக்கவும் ஆரம்பித்து இருந்தாள்… வயிறு குட்டி தர்பூசணி பழம் போல் அழகாக வட்டமாக மேடிட்டு இருந்தது…
இன்னும் 16 வாரங்கள் தான்…
ஈத்தன், தன் இருப்பிடத்தை மொத்தமாகவே கெஸ்ட் ஹவுஸிற்கு மாற்றி மாதங்கள் பல கடந்துவிட்டு இருந்தது…
எந்த வேலையாக இருந்தாலும், ராகவ்வை குறிஞ்சியின் பாதுகாப்பிற்கென வீட்டில் விட்டுவிட்டு, பகலில் சென்று முடித்துக்கொண்டு மாலைக்குள் ஓடிவந்துவிடுவான்… அதிலும் வெளியில் இருக்கும் அந்த கொஞ்சம் நேரத்தில் கூட இடைவெளி கிடைக்கும் பொழுதெல்லாம் குறிஞ்சிக்கு பலமுறை அழைத்துப்பேசி, அவளின் நலனை திரும்ப திரும்ப உறுதிப்படுத்திக்கொள்வான்…
ஏனோ அருகில் இருந்து அவளுடைய உடல் உபாதைகளை பார்த்ததில் இருந்து அவனுக்குள் ஒரு பயம்…
அவன் குழந்தையின் நலனும்… அவனுக்காக குழந்தை சுமப்பவளின் நலனும்… அவனின் இரு கண்களாகிப்போய்… அவனை நிம்மதியாக இமைகளை மூட விடுவதில்லை…
அதிலும் அவன் அமெரிக்காவில் முடித்துக்கொடுக்க வேண்டிய வேலைகள் எல்லாம் ஒருப்பக்கம் மலைப்போல் ஒன்றின் மீது ஒன்றாக குவிந்துக்கொண்டே செல்ல…
அவனோ அதையெல்லாம் கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல்… மருத்துவ கல்லூரி மாணவன் போல் அமர்ந்து விடிய விடிய மகப்பேறு தொடர்பான மருத்துவ புத்தகங்களை வாசித்துக்கொண்டும், பிரவச காலத்தை எளிமையாக கடத்தும் வழிமுறைகளையெல்லாம் ஆராய்ந்துக்கொண்டும் இருந்தான்…
அதன் படி தினமும் குறிஞ்சியை யோகா… உடற்பயிற்சி… நடைபயிற்சி… என்று ஒருவழியும் செய்துவிடுவான்…
அவளுக்கு அதெல்லாம் சிறிதும் கஷ்டமாக இருந்தது கிடையாது…
அவள் உடலை தான் அவளுடைய குடும்பம் அனைத்து பக்கமும் வளைக்கும் அளவுக்கு வேலைவாங்கி தயார்படுத்தி இருந்ததே…
குழந்தைக்கும், அவளுக்கும் என்று ஈத்தன் பார்த்துப்பார்த்து செய்யும் ஒவ்வொன்றையும் ரசித்தப்படியே… அவன் சொல்லும் இடத்தில் தன் பாதத்தை பதித்து தன் பயணத்தை தொடர்ந்துக்கொண்டு இருந்தாள்…
மனதினுள், இவ்வளவு அருமையான குணம் படைத்த மகனை இழந்துவிட்ட அவனின் தாய், தந்தையை நினைத்து உண்மைக்கும் அவளுக்கு பாவமாக இருக்கும்…அதுமட்டுமின்றி எல்லாம் சரியாக இருந்திருந்தால் ஈத்தன் மனைவி, மக்கள் என்று இன்னும் எவ்வளவு சந்தோஷமாக இருந்து இருப்பான் என்ற எண்ணமும் வந்து… மனதில் ஒரு விரக்தியை உண்டாக்கும்…
இனி யார் தான் என்ன செய்ய முடியும்…
அவர்களுக்கு என்ன பிரச்சனையோ பாவம்… என்று நினைத்துக்கொள்பவள்…
அப்பொழுதெல்லாம் தன் வயிற்றை மெல்ல தடவிக்கொடுத்தப்படியே, “செல்லக்குட்டி உள்ளே என்ன பண்றீங்க… இங்க உங்களுக்காக உங்க அப்பா காத்திட்டு இருக்கார்… சமத்துக்குட்டியா வளர்ந்து வெளியே வந்து அப்பாக்கூடவே இருந்து, அப்பாவ பார்த்துக்கனும்… சரியா குட்டித்தங்கம்…” என்று குழந்தையின் நெஞ்சில், ஈத்தனுக்கான தன் நேசத்தை அவளுக்கு தெரியாமலே விதைத்துக்கொண்டே இருப்பாள்…
அன்றும் அப்படித்தான் சற்று உடல் அலுப்பு நீங்க குளித்துவிட்டு வந்தவள்… உடைமாற்றியப்படியே குழந்தையுடன் பேசிக்கொண்டிருக்க…
மாலை வாக்கிங் செல்ல, “குறிஞ்சி…” என்று வெளியில் நின்று ஒருமுறை கதவை தட்டினான் ஈத்தன்…
அதில், “இரண்டு நிமிஷம் சார்… வந்துடறேன்…” என்று அவசரமாக குரல் கொடுத்தாள்… டாப்ஸினுள் வேகமாக தன்னை நுழைத்தப்படி…
“பொறுமையாவே வா கேர்ள்… நான் வெயிட் பண்றேன்…”, என்ற ஈத்தன் அங்கேயே சோஃபாவில் சென்று அமர்ந்துவிட…
துவைத்து பிழிந்து வைத்திருந்த உடைகளை எல்லாம் அவ்வறையுடன் சேர்ந்திருந்த பால்கனியில் காயப்போட்டுவிட்டு…
துப்பட்டாவை தூக்கி தன் இரு தோள்களிலும் கழுத்தை சுற்றிப்போட்டப்படியே… அவள் கூறியது போலவே இரண்டே நிமிடங்களில் வந்து கதவை திறந்திருந்தாள் குறிஞ்சி…
அதில் ‘எல்லாத்துலையும் இந்த பொண்ணு மின்னல் வேகம் தான்’ என்று நினைத்த ஈத்தன்… அவள் முகம் பார்த்து, தன் கண்களை சுருக்கி, “ஹேய் குறிஞ்சி பாத்(bath) எடுத்தயா நீ… இப்ப போயிட்டு ஏன்… டாக்டர் ஃபீவர் வரும்னு சொன்னாங்க இல்லை…” என்று பரபரக்க…
“ஹாஸ்பிடல் போயிட்டு வந்தது கொஞ்சம் ஒருமாதிரி இருந்துச்சுங்க சார்… அதான் கொஞ்ச நேரம் மட்டும் வெந்நீல நின்னுட்டு வந்துட்டேன்… ஒன்னும் ஆகாது” என்று அவள் இழுக்க…
ஈத்தன் அதற்குள் தெர்மாமீட்டரை எடுக்க சென்றுவிட்டு இருந்தான்…
இன்று காலை அவளுக்கு மாதாந்திர பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு சென்று இருந்தனர். பரிசோதனை முடிய, அவளுக்கு மருத்துவர் ஏழாம் மாதம் போடும் நோய் தடுப்பூசியை(Tdap) போட்டு அனுப்பி இருந்தார்… உடன் ஜுரம் எதுவும் வந்தால் மாத்திரை எதுவும் போட வேண்டாம்… உடனே மருத்துவமனைக்கு வந்துவிடவும் கூறி இருந்தார்…
அதில் தான் ஈத்தனுக்கு பதட்டம்…
குறிஞ்சிக்கோ, அவள் பணியில் இருந்த மருத்துவமனையில் பார்த்தவரை, அப்படி யாருக்கும் ஜுரம் எதுவும் வந்தது கிடையாது என்பதால்… அவளுக்கு இது பெரிதாக தெரியவில்லை…
காரில் உட்கார்ந்து சென்று வந்ததில், கால்களில் தான் ஒரே குடைச்சல் அவளுக்கு…
அதில் தான் சற்று சுடுநீரில் கால்களை வைத்திருந்துவிட்டு… சிறு குளியலையும் போட்டுவிட்டு வந்து இருந்தாள்…
ஈத்தனிடம் அதை கூறினால்… “வா கால்லை பிடித்துவிடுகிறேன்…” என்று கூட ஆரம்பித்துவிடுவான் என்பதால்… அதை அவள் மறைத்துவிட்டு இருக்க…
ஈத்தன் அவளின் உடல் வெப்பநிலையை குறித்துவைத்துவிட்டு… வாக்கிங்கிற்கு அழைத்து சென்றான்…
தினமும் மாலை அவர்கள் வீட்டை சுற்றியிருந்த தென்னந்தோப்பினுள் போட்டிருக்கும் ஒருவழி சாலையில்… வெயில் குறைந்து அந்தி ஆரம்பிக்கும் போது அவளுடன் கிளம்புபவன்… அந்தி முடிவதற்கு முன் அவளை அழைத்துவந்து வீட்டில் விட்டுவிடுவான்…
நாள் முழுவதும் வீட்டின் உள்ளே இருப்பவளுக்கு… அந்த கடற்கரை காற்றும்… தென்னையின் தென்றலும்… மெல்லிய இளம் வெயிலும்… மினி டூர் போல் தான் இருக்கும்…
அதிலும் உடன் நடக்கும் ஈத்தன்…
திட்டு வாங்கி வாங்கியே புளித்துப்போயிருந்த காதுகளுக்கு… அவனின் அக்கறையான பேச்சுக்கள் அதிமதுரமாக இனிக்கும்…
அன்றும் அவ்வாறு தான் நடந்து சென்றவர்கள்… திரும்பி வரும் பாதி தூரத்தில் குறிஞ்சி… “சார் கொஞ்சம் உட்கார்ந்துட்டு போகலாமா…” என்று சற்று மூச்சுவாங்க நின்றுவிட…
“ஷோர் குறிஞ்சி உட்கார்” என்று அங்கு அருகில் இருந்த பென்ச்சில் அவளை அமர வைத்தவன்… அவளுக்கு அருந்த நீரினை தர…
அதை குடிக்கக்கூட குறிஞ்சிக்கு அலுப்பாக இருந்தது…
அதில் மெதுவாக அருந்திவிட்டு அவனிடம் பாட்டிலை நீட்டினாள்…
குறிஞ்சியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த ஈத்தன்… “நான் பேட்ரி கார் எடுத்துட்டு வர சொல்றேன் குறிஞ்சி… அதில் போயிடலாம்… யு லுக் ரெஸ்ட்லெஸ்” என்றான்.
சில நேரங்களில் இப்படி நடப்பது வழக்கம் தான்…
ஆனால் குறிஞ்சிக்கு சற்று நேரம் அங்கேயே இருக்க வேண்டும் போல் இருக்க…
கண்ணுக்கு எட்டும் தூரத்தில் தெரிந்த வீட்டினை பார்த்தவள்…
“வேண்டாம் சார்… கொஞ்சம் தூரம் தானே… ஒரு அஞ்சு நிமிஷம் உட்கார்ந்துட்டு போகலாம்… முடியலைனா சொல்றேன்…” என்றாள்…
சரியென்று அவளுடன் ஈத்தனும் அமர்ந்துவிட… அடுத்த பத்து நிமிடத்தில் சட்டென்று வானிலை மாறி… வேகமாக இருள் சூழ தொடங்கிவிட்டது…
உடன் மெல்லிய தென்றல் காற்றும், சூறாவளியாக மாறி…
பெரிய பெரிய தூரல் தலையில் விழ ஆரம்பித்து விட்டு இருந்தது…
அதில், “ஓ நோ…” என்று அதிர்ந்துப்போன ஈத்தன்… “வா குறிஞ்சி சீக்கிரம் வீட்டுக்கு போயிடலாம்… ஃபீவர் வர போகுது…” என்றவன்… அவளை கைப்பிடித்து முடிந்தளவு வேகமாக நடக்க வைத்துக்கொண்டே… மறுபக்கம் பேட்டரி காரினை எடுத்து வர கூறி கால் செய்து இருந்தான்…
குறிஞ்சியும் தன் துப்பட்டாவின் நுனியை தூக்கி தலையில் போட்டப்படி நடக்க…
ஒருசில நிமிடங்களிலேயே தூரல் அடைமழையாகிவிட்டு இருந்தது…
உடன் இடிசத்தம் வேறு ஒன்று கேட்க ஆரம்பிக்க…
அவ்வளவு தான் ஈத்தன்…
மரங்களுக்கு இடையே நிற்பது பெரும் ஆபத்து என்பதால்…
பட்டென்று தன் கரங்களில் குறிஞ்சியை அள்ளி எடுத்து… அவளின் உடல் அதிரா வண்ணம் தன்னுடன் அணைத்துப் பிடித்துக்கொண்டு… வீட்டை நோக்கி ஓட ஆரம்பித்துவிட்டு இருந்தான்…
ஈத்தனின் செய்கையில் ஒருகணம் அதிர்ந்திருந்தாலும்… மறுகணமே தன்னை நிதானப்படுத்திக்கொண்ட குறிஞ்சி… தன் வயிற்றில் அணைவாக இருக்கரத்தையையும் வைத்துக்கொண்டாள்…
பேட்ரி காரினை ஆள் சென்று எடுப்பதற்குள் ஈத்தன் வீட்டிற்குள் நுழைந்துவிட்டு இருந்தான்…
🪻 அடுத்த அத்தியாயத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻
கருத்துகள்
கருத்துரையிடுக