31. அந்திப்போர் 🪻😘📽️
அத்தியாயம் -31
தன் கூடு வந்து அடைந்துவிட்டிருந்த குறிஞ்சி, மறுநாள் எப்பொழுதும் போல் காலை எழுந்து, பணிக்கு செல்ல தயாரானாள்.
என்ன தினமும், ஒவ்வொன்றையும் ரசித்து ரசித்து செய்தப்படியே கிளம்புபவளுக்கு, இன்று எதிலுமே சிறிதும் கவனம் இல்லை.
கைப்பாட்டுக்கும் பழக்கப்பட்ட வேலைகளை பார்க்க, மனம் முழுவதும் ஈத்தனும், ஈத்தன் வீட்டில் நடந்தவைகளும் தான்.
இந்நொடி வரை அவளால் சிறிதும் நம்பமுடியவில்லை. அவ்வளவு நடந்த பிறகும் எப்படி அவளை ஈத்தன் செல்ல அனுமதித்தான். அவளறிந்த ஈத்தன் அப்படி கிடையாதே. அதுவும் அவளிடம். அதனால் தானே இரவோடு இரவாக கிளம்பிவிட முடிவு செய்திருந்தாள்.
உள் மனம் ஒன்றுக்கூற, நடந்திருந்த நிதர்சனமோ அதற்கு மாறாக அல்லவா இருந்துவிட்டது.
அதை நினைக்கும் பொழுதே முணுக்கென்று அவள் கண்களில் இருந்து நீர் மணிகள் உருண்டோடின…
ஈத்தனுக்கு ‘அவளை பிடித்து வைக்க விருப்பம் இல்லை’ என்பது தானே, அவளை அவன் போக விட்டதற்கு ஒரே காரணமாக இருக்க கூடும்.
நிறைவேறாத இத்தனை வருட காதல் கூட இவ்வளவு வலியை தரவில்லை… ஆனால் நிராகரிக்கப்பட்ட காதல், ஒரே நாளில் நெஞ்சம் முழுவதும் அப்படியொரு வலியுடன் கூடிய வெற்றிடத்தை கொடுத்துவிட்டு இருந்தது…
பூஜையறையை சுத்தம் செய்தவள், தோட்டத்தில் பூத்த மலர்களை பறித்து வந்து சாமி படங்களுக்கு வைத்து அலங்காரத்தை முடித்துவிட்டு…
விளக்கினை ஏற்றி, தன் இருக்கரம் கூப்பி கடவுள் முன்பு நின்று இருந்தாள்.
‘கடவுளே எப்படியாவது இந்த உணர்வில் இருந்து என்னை மீட்டுவிடுங்கள். பழையப்படி அமைதியாக நான் வாழ்ந்துக்கொள்கின்றேனே!’ என்று வேண்டியவள்.
‘அவர் மனதில் இருந்தும் நடந்தவைகளை அகற்றி விடுங்கள். தயவுசெய்து அவரின் அமைதியையும் என்னுடைய நினைவுகள் கெடுக்க வேண்டாம்’ என்று ஈத்தனுக்காகவும், ஈஷா இப்பொழுது இருப்பது போலவே எப்பொழுதும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டுவிட்டு…
செய்து வைத்த காலை உணவை கடமைக்கே என்று தட்டில் எடுத்து வைத்து உண்ண ஆரம்பித்தாள்.
பின்னே, ஒழுங்காக உண்ணாமல் நாளை அவளுக்கு உடலுக்கு ஏதாவது ஒன்று வந்துவிட்டதென்றால், அவளை பார்க்க யார் இருக்கிறார்கள்.
தனிமை பழகியவளுக்கு, அதில் இருக்கும் சாதகம் மட்டும் இல்லை. பாதகங்களும் அத்துப்படியே!
இருபத்தியொரு வயதிலேயே அவ்வளவு மன முதிர்ச்சியுடன் செயல்பட்டு, ஈத்தனிடம் இருந்து விலகி வந்துவிட்டவளுக்கு… 33 வயதில் சொல்லவும் வேண்டுமா?
வலியினை பத்திரமாக மனதின் ஒரு ஓரம் தள்ளி வைத்துவிட்டு, தோளில் தன் ஹேண்ட் பேக்கினை மாற்றியப்படியே பள்ளிக்கு கிளம்பியவள்… வீட்டின் கேட்டினை பூட்ட…
அத்தகவல் சுட சுட ஈத்தனின் பர்சனல் மொபைலிற்கு “Madam is leaving her home” என்று பறந்துச்சென்று இருந்தது.
ஈத்தன் மொத்தமாக தன்னை விட்டுவிட்டான் என்று குறிஞ்சி நினைத்திருக்க….
அவனோ மிகவும் இறுக்கமாக அவளை பிடித்து வைத்திருந்தான்!
________________________________
நேற்று கொடைக்கானலில் இருந்து கிளம்புவதற்கு முன்பு மதரிடம், “நீங்க சொன்னதை எல்லாம் யோசிச்சு பார்த்தேன் மதர். ஈஷாக்கிட்ட குறிஞ்சி பற்றிய உண்மைகளை எல்லாம் சொல்லிடலாம் இருக்கேன். She deserves her mom's love and affection. அது அவளோட உரிமை” என்று கூறிய ஈத்தன்.
தொடர்ந்து, “அவளை அதுக்கு தயார்படுத்த மட்டும் எனக்கு கொஞ்சம் நேரம் வேண்டும்”, என்றவன்…
இறுதியில், “சீக்கிரம் வந்து நான் குறிஞ்சியை என்கூடவே அழைச்சிட்டு போயிடறேன் மதர்” என்று இருந்தான்…
அதில் மதருக்கு, அப்படி ஒரு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி.
பின்னே குறிஞ்சிக்கு ‘வேறு திருமணம் செய்து வைக்க போகின்றேன்’ என்று சற்றுமுன்னர் தானே அத்தனை முறை உறுதியாக கூறி இருந்தான்.
அதற்குள் இப்படி ஒரு இனிய மாற்றமா? என்று திகைத்துப்போனார்.
அவரின் அந்த பார்வையை உணர்ந்தும்… உணராதது போல் ஈத்தன் நின்றுக்கொண்டிருக்க…
தன் புருவங்களை சுருக்கி, ஈத்தனையே ஆழ் பார்வை பார்த்துக்கொண்டிருந்த மதர், “அப்ப குறிஞ்சியை ஈஷாவோட அம்மாவா மட்டும் தான் அழைச்சிட்டு போக போறியா ஈத்தன்…?” என்று நேரடியாக கேட்டு இருந்தார்.
ஈத்தன் அவரிடம் எதிர்ப்பார்த்த கேள்வி தான்.
அதில், “நோ மதர்” என்று அழுத்தமாக கூறியவன்…
“குறிஞ்சியை ஈத்தனோட மனைவியாகவும் தான் அழைச்சிட்டு போக போறேன்” என்று சிறு புன்னகையுடன் கூறியவன், “He too deserves his wife's love and affection” என்று இருந்தான்.
அதில் மதரின் முகத்தில் நல்ல விரிந்த புன்னகை.
“ரொம்ப சந்தோஷம் ஈத்தன். எவ்ளோ நாள் வேண்டுமோ எடுத்துக்கோ. நீ மனம் மாறினதே எனக்கு போதும். ஜீசஸோட வழி நடத்தல் உன்னை நிச்சயம் நல்ல பாதையில் பயணிக்க வைக்கும்”, என்றார்.
அதற்கு, “தேங்க் யூ மதர்”, என்ற ஈத்தன்…
தாமஸிற்கு அழைத்து, குறிஞ்சி வந்து சேர, இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என்று விசாரித்தவன்…
அடுத்து குறிஞ்சியின் பாதுகாப்பிற்கு என்று அவன் வரவைத்திருந்தவர்களை அழைத்து மதருக்கு அறிமுகப்படுத்தி… அந்த ஏற்பாடுகளையும் முடித்துவிட்டே ஈஷாவுடன் கிளம்பி இருந்தான்…
அதன் எதிரொளிப்பாக, குறிஞ்சியுடன் புதிதாக ஒரு நர்ஸ் ட்ரெயினிங்கிற்கு என்று வந்து பணியில் சேர்ந்து அவளுடனே நிழலாக இருந்தாள்…
அதுமட்டுமின்றி மாலை அவளை மதர் அழைத்ததாக கூறி அவளுக்கு தகவல் வர…
சென்று பார்த்தவளிடம்…
“எப்படி இருக்க குறிஞ்சி” என்று விசாரித்த மதர்…
“நம்ம ஸ்கூலில் புதுசா ஜாயின் செய்திருக்கும் இங்க்லீஷ் டீச்சர் இவங்க” என்று ஒரு பெண்ணை குறிஞ்சிக்கு அறிமுக படுத்தி…
“இங்க தான், நம்ம குவார்ட்டசில் தங்கி வேலை செய்ய போறாங்க குறிஞ்சி” என்றவர்.
தொடர்ந்து, “அதில் தான் ஒரு சின்ன பிரச்சனை. இவங்களுக்கு அலார்ட் செய்திருந்த குவார்ட்டசில்… கொஞ்சம் பேட்ச் அப் வொர்க் முடிக்காமல் இருக்கு… பார்த்திட்டு இருக்காங்க… அது முடியும் வரை… உன்கூட இவங்களை தங்க வச்சிக்கறியா குறிஞ்சி” என்று கேட்க…
‘ஐயோ என்கூடவா’ என்று அதிர்ந்துப்போன குறிஞ்சியாள்… அந்த அதிர்ச்சியை, வெளியில் சிறிது கூட, காட்டிக்கொள்ள முடியவில்லை…
அதைவிட அவளிடம் மதர் ஒன்று கேட்டு எப்படி முடியாது என்று அவளால் சொல்ல முடியும்…
வேறுவழியின்றி தன் தலையை சம்மதமாக அவள் ஆட்டி வைக்க…
“அக்கா” என்று எடுத்ததுமே அவளுடன் அந்த புதுப்பெண் அட்டையாக ஓடிவந்து ஒட்டிக்கொண்டு இருந்தாள்.
குறிஞ்சி, அவள் வீட்டில் இருந்த மற்றொரு அறையில் போட்டு வைத்திருக்கும், தோட்டத்திற்கு தேவையான பொருட்கள் மற்றும் கைவினை பொருட்கள் அனைத்தையும்… வெளியில் எடுத்து வைத்துவிட்டு… அந்த அறையை சுத்தம் செய்து வந்திருந்த புதுப்பெண்ணிற்கு தர…
தான் கொண்டுவந்திருந்த பொருட்கள் அனைத்தையும் அதில் வைத்துக்கொண்டவள்…
தன்னிடம் அது இல்லை, இது இல்லை, எங்கு சென்று வாங்குவது என்று குறிஞ்சியை ஒரு வழிசெய்ய ஆரம்பித்துவிட்டாள்…
சிறுப்பெண் என்பதால் குறிஞ்சியும் மறுக்காது, அவளை அழைத்துச்சென்று அவளுக்கு வேண்டிய பக்கெட்டில் இருந்து அனைத்தையும் உடனிருந்து வாங்கிக்கொண்டு வந்து சேர…
அவளோ குறிஞ்சி சமைத்து தந்த சுவையான இரவு உணவினை சமத்தாக உண்டுவிட்டு… குறிஞ்சி தூக்கத்தில் சொக்கி விழும் வரை, அவளை அமர்த்தி, விடாமல் கதைப்பேசிக்கொண்டு இருந்தாள்…
இதற்கு மேல் விட்டால் அவ்வளவு தான், அமர்ந்திருக்கும் இடத்திலேயே குறிஞ்சி படுத்து உறங்கி விடுவாள், என்ற நிலைக்கு குறிஞ்சி வந்தப்பிறகு தான்…
அப்பெண், “அக்கா வாங்க தூங்க போகலாம். மீதியை நாளைக்கு காலையில் எழுந்து பேசிக்கலாம். குட் நைட்” என்று, ‘திரும்பவும் காலையிலா… ஐயோ!’ என்று குறிஞ்சியை உள்ளுக்குள் அலறவிட்டுவிட்டே… அறைவாசலில் அவளை விட்டுட்டு சென்று இருந்தாள்.
விட்டால் அவளுடனே அறைக்குள்ளும் நுழைந்து, அவளை கட்டிப்பிடித்தே அப்பெண் உறங்கி இருப்பாள்.
என்ன ஈத்தன் தான் முன் தினம் அவளிடம், எமர்ஜென்சி தவிர்த்து மற்றப்படி, அவ்வறைக்குள் எக்காரணம் கொண்டும் அவள் செல்ல கூடாது என்று நிபந்தனை விதித்து இருந்தான்.
பின்னே, அவனுடைய மனைவியின் ரகசியங்களை காக்கும் பொறுப்பு அவனுக்கும் இருக்கிறதே!
அறைக்குள் நுழைந்து கதவை அடைத்த குறிஞ்சிக்கு, புது பெண்ணின் இடைவிடாத பேச்சில், இரண்டு தினங்களாக நெஞ்சை போட்டு அழுத்திய பாரத்தின் எடை சற்று குறைந்தது போல் இருந்தது.
அதில், குளியல் அறைக்குள் சென்று முகத்தை குளிர்ந்த நீரில் நன்கு கழுவி, வந்த உறக்கத்தை தூர அடித்து விரட்டிவிட்டு வெளிவந்தவள்…
அறைக்குள் இருக்கும்… அவளின் ஈத்தனையும்… ஈஷாவையும்… மனம் நிறையும் வரை வருடிக்கொடுத்துவிட்டு…
ஈத்தனின் பாடல்களை மெல்லிய சத்தத்தில் ஒலிக்கவிட்டப்படியே…
அவர்கள் இருவரின் உடையையும், தன் கன்னத்தோடு இணைத்து அவர்களை உணர்ந்தப்படியே…
உறங்க ஆரம்பிக்க…
அங்கு ஈத்தனோ விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டு இருந்தான்.
காலையில் இருந்தே அவன் அதை தான் செய்துக்கொண்டு இருந்தான்…
அதில் அவன் எதிரில் நின்றிருந்த அனைவரும் அவனை நேரடியாக முறைக்க முடியாமல், தங்கள் நிலையை நினைத்து நினைத்து நொந்துப்போய் இருந்தனர்.
காலை பத்து மணிக்கு ஒரு புதிய படத்திற்கான பாடல் ரெக்கார்டிங்கிற்கு என்று ஸ்டூடியோவிற்கு வந்திருந்தவன், அப்பொழுது ஆரம்பித்து இப்பொழுது இரவு மணி பத்தாகியும், வேலையை முடித்து தராமல், அவர்களை கதறவிட்டுக்கொண்டு இருந்தால், என்ன ஆவார்கள் அவர்கள்…
கிட்டத்தட்ட ஈத்தன் வயது தான் அந்த பட இயக்குனருக்கும் இருக்கும்.
அதில், “என்ன ப்ரோ இது…”, என்று சற்று உரிமையாக பேச ஆரம்பித்தவர். “பிரேக் அப் சாங் ஆ போயிட்டு… திரும்ப திரும்ப பிக் அப் சாங் மாதிரியே பாடறீங்களே ப்ரோ… நான் எதுவும் தப்பா பேசுறனா… உங்களுக்கு நான் பேசுறது புரியலையா… நீங்க இந்த பாட்டை சோகமா பாடனும் ப்ரோ… ஆடியன்ஸ் அதை கேட்டு அழனும்… ரொமான்ஸ் மோடுக்கு போயிட கூடாது…” என்று படித்து படித்து ஈத்தனுக்கு விளக்கம் கூறிய அந்த இயக்குனர்…
மீண்டும் ரெக்கார்டிங்கை தொடங்க…
முன்பை விட இன்னும் அதிக புத்துணர்வுடன் காதலாக பாடி வைத்தான் ஈத்தன்.
அதில் இயக்குனரும், ப்ரொடியூசரும் விட்டால் தங்கள் தலையை பிய்த்துக்கொண்டு சாலையில் ஓடும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
ஈத்தனோ அதைவிட பாவமாக நின்று இருந்தான். அன்று சந்தோஷ ஹார்மோன்கள் சுரக்காமல் அவதிப்பட்டான் என்றால்… இன்றோ சோக ஹார்மோன்கள் சுரக்காமல் அவதிப்பட்டான்.
என்ன அந்த அவதி பெரும் கொடுமையாக இருந்தது என்றால், இந்த அவதி பெரும் சுகமாக இருந்து படுத்தியது.
"Girl, what are you doing to me? You're driving me crazy” என்று யாருக்கும் தெரியாமல் தனியாக புலம்பியவனால்… காதலிக்கப்படும் போதையில் இருந்து தெளிந்து வெளிவரவே முடியவில்லை…
‘லவ்ல ஏதுடா பிரேக்கப் எல்லாம். எதுக்கு பிரேக்கப் சாங் எல்லாம் பாட சொல்லி மனுஷனை சாவடிக்கறாங்க…’ என்று இயக்குனரை வேறு மனதினுள் திட்டியவன்.
வேறுவழியின்றி, தன் மனநிலையை சோகமாக மாற்ற, பல சோக காட்சிகளை திரையில் போட்டு பார்த்து… வராத சோகத்தை ‘வா வா’ என்று கைப்பிடித்து இழுத்த ஈத்தன்… ஒருவழியாக இரவு ஒரு மணிக்கு தான் ரெக்கார்டிங்கை வெற்றிகரமாக முடித்து கொடுத்து இருந்தான்…
ஏன், எதற்கு என்றெல்லாம் தெரியாது… உறங்கும் போது கூட அவன் இதழ்கள் சிரித்துக்கொண்டே இருந்தன…
அதை சுற்றியிருப்பவர்களும் கவனிக்க ஆரம்பித்துவிட்டதின் விளைவாக…
“தலைவரே… என்னமோ நீங்க ஒரு வாரமாவே சரியில்லை… ஏதோ பரவச நிலையில் இருக்க போலவே இருக்கீங்க… என்ன விஷயம் சொல்லுங்க…” என்று சக்தி அவனை விடாமல் போட்டு நச்சரிக்க தொடங்கி இருந்தான்.
ஈஷாக்கூட “என்ன ஹேப்பி நியூஸ் பேபி” என்று அவனின் மலர்ந்த முகத்தை பார்த்து பலமுறை கேட்டுவிட்டாள்…
அதில் இப்படியே இதை வளரவிடுவது தவறு என்று உணர்ந்த ஈத்தன்… அதற்கான மருந்தை உரியவளிடம் சென்று பெறுவதற்கு முன்னர்…
ஈஷாவிடம் குறிஞ்சி குறித்து பேச வேண்டும் என்று நினைக்க…
எப்படி? எங்கிருந்து அதனை ஆரம்பிப்பது என்பது தான் அவனுக்கு தெரியவில்லை…
மகள் என்ன நினைப்பாள்?
நான் சொல்வதை புரிந்துக் கொள்வாளா?
என்னை தவறாக நினைப்பாளா?
இல்லை குழம்பி போவாளா?
குறிஞ்சியை ஏற்றுக்கொள்வாளா?
பல கேள்விகள், சந்தேகங்கள் அவனுக்குள்.
கண்ணாடி பாத்திரத்தை விட பத்திரமாக கையாள பட வேண்டிய விஷயம் ஆயிற்றே.
அதிலும் ஈஷாவின் வயது, அவளை சிறு குழந்தை என்றோ, இல்லை எல்லாம் தெரிந்த பெண் என்றோ, ஒரு கோட்டில் நிறுத்த முடியாத வயதாக அல்லவா இருக்கிறது.
தோட்டத்தில் அமைந்திருந்த பெரிய நீச்சல் குளத்தில், மேலிருந்து சறுக்கல் வழியாக வந்து குதித்தப்படி விளையாடிக்கொண்டிருந்த ஈஷாவை பார்த்தப்படியே, இதையெல்லாம் ஈத்தன் நினைத்துக்கொண்டிருக்க…
இறைவன் அவனுக்கான வழியை விரைவிலேயே காட்டிக்கொடுத்துவிட்டு இருந்தார்.
என்ன? அவனின் செல்ல மகளை கஷ்டப்படுத்தி, அதை அவர் காட்டிக்கொடுத்ததில் தான்… அவன் கொஞ்சம் இல்லை நிறையவே துடித்துப்போனான்.
________________________________
🔴அடுத்த அத்தியாயம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்
கருத்துகள்
கருத்துரையிடுக