30.5 அந்திப்போர் 🪻


உமையாள் சொன்னப்பொழுதெல்லாம், அப்படி என்ன பெரியதொரு மாற்றத்தை ஒரு குழந்தையால் ஏற்படுத்திவிட முடியும் என்று பல தடவை ஈத்தன் யோசித்து இருக்கின்றான்… ஆனால் இப்பொழுதோ அந்த பெரிய மாற்றத்தை நேரிலேயே அனுபவித்துக்கொண்டு இருந்தான்…

எண்ணற்ற கவுன்சிலிங்கள்… பயிற்சிகள்… மன கட்டுப்பாடுகள்… என்று அத்தனை அனுபவமானவர்களின் மூலம்… தன் குரலினை பழையப்படி மேம்படுத்தும் சிகிச்சைகளை எடுத்தும்… இறுதிவரை வெற்றியடைய முடியாமல்…

கோடிக்கணக்கான பணத்தையும்… வாய்ப்புகளையும்… அவனை நம்பியவர்களின் நம்பிக்கையையும்… சிறுக சிறுக கடந்த ஒரு வருடாமாக இழந்துக்கொண்டிருந்த ஈத்தனின் குரல்…

எப்பொழுதும் இல்லாத அளவிற்கு… மந்திரம் போட்டது போல்… அதுவும் ஈத்தனே பிரம்மிக்கும் வகையில்… அவ்வளவு அற்புதமாக மாறிவிட்டு இருந்தது…

அன்று அவனின் உள்ளங்கை உணர்ந்த, அவனின் உயிர் அணுக்களில் உண்டான, அந்த சிறு ஜீவனின் அசைவு, அத்தகைய அதிசயத்தை அவனில் ஏற்படுத்திவிட்டிருக்க…

கால் வைத்த இடமெல்லாம் ஈத்தனுக்கு வெற்றி தான்…

குறிஞ்சிக்கு பிரசவ நாள் நெருங்குவதற்குள், நிலுவையில் இருக்கும் படங்கள் அனைத்திற்குமான பாடல்களை, முடித்து கொடுத்து விட வேண்டும் என்று முடிவு செய்துக்கொண்ட ஈத்தனிடம் அவ்வளவு வேகம்… 

குறிஞ்சியை தகுந்த பாதுக்காப்பிற்கு மத்தியில் வைத்துவிட்டு… ஒரு மாதம் அமெரிக்காவிற்கு சென்று ஒப்பந்தமான அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு திரும்பியவன்… அடுத்து வரிசையில் இருந்த தமிழ் பாடல்களையும் முடித்துக்கொடுத்துவிட்டு அமரவும்… குறிஞ்சிக்கு பிரசவ வலி வரவும் சரியாக இருந்தது…

குழந்தையின் தலை திரும்பி விட்டதாக மருத்துவர் கூறியிருந்த நாள் முதலே… ஈத்தன் இரவில் உறங்கும் இடம் ஹால் தான்…

குறிஞ்சியின் அறை வாசலுக்கு முன்பு கட்டிலை போட்டு படுத்துக் கொள்வான்…

அன்றும் அவ்வாறு தான் ஈத்தன் படுத்து உறங்கிக்கொண்டிருக்க…

திடீரென்று பலூன் வெடித்தது போல் ஒரு மெல்லிய சத்தம்…

உடனே விழித்துக்கொண்டான் ஈத்தன்…

அதைத்தொடர்ந்து மிகவும் மெல்லிய முனங்கல் சத்தமும் வர…

நொடியில் தாமதிக்கவில்லை ஈத்தன்… திறந்தே வைத்திருக்கும் குறிஞ்சியின் படுக்கை அறைக்குள் விரைந்துவிட்டான்… 

குறிஞ்சியின் படுக்கையருகே ஈத்தன் நெருங்கவும், அவனின் அடிப்பாதம் மொத்தமும் ஈரத்தை உணர்ந்திருந்தது…

அதில், எட்டி இரவு விளக்கை போட்ட ஈத்தன்… படுக்கையில் இருந்து கீழே வழிந்துக்கொண்டிருக்கும் நீரை பார்த்து… கைகள் நடுங்க… தன் ஃபோனை எடுத்தவன்… செக்யூரிட்டியை காரை தயாராக நிறுத்த கூறிவிட்டு…

மருத்துவமனைக்கு அழைத்து குறிஞ்சிக்கு பனிக்குடம் உடைந்து விட்டதாக கூற… 

மருத்துவர், “பயப்பட வேண்டாம் ஈத்தன்… குழந்தை பிறக்க நேரம் ஆகும்… பதட்டப்படாமல் அவங்களை கூட்டிட்டு வாங்க…” என்று அவனுக்கு தைரியம் கூறிவிட்டு வைத்துவிட…

ஈத்தன், ராகவிற்கு செய்தி அனுப்பியப்படியே குறிஞ்சியை பார்த்தான்…

அவளோ தூக்கம் கலையாமலேயே… கண்களை மூடிக்கொண்டு வலியில் முனங்கிக்கொண்டு இருந்தாள்…

கண்களின் ஓரம் வேறு நீர் கசிந்துக்கொண்டே இருந்தது…

அதில் ஈத்தனுக்கு கைக்கால் எல்லாம் அப்படியொரு நடுக்கம்…

இறைவனை துணைக்கு அழைத்தவன்…

“குறிஞ்சி… எழுந்திரும்மா… இங்க பாரு…” என்று அவளின் கன்னத்தை அசைத்து எழுப்பவும்…

குறிஞ்சி உடனே எழுந்துக்கொண்டாள்…

விட்டுவிட்டு பின் முதுகில் உற்பத்தியாகி, இடுப்பின் வழியே பயணித்து, அடிவயிற்றில் சென்று நிலைக்கும் வலியை… பல்லை கடித்து அவள் பொறுத்துக்கொள்ள…

ஏற்கனவே மருத்துவமனைக்கு என்று பேக் செய்துவைத்திருந்த பையை காரில் வைக்க கூறிய ஈத்தன்…

குறிஞ்சியுடன் மருத்துவமனை நோக்கி பறக்க ஆரம்பித்து விட்டான்…

இதில் மருத்துவமனையை அடைய ஈத்தன் எடுத்துக்கொண்டிருந்த… அந்த 45 நிமிடங்களுக்குள்ளே… குறிஞ்சிக்கு பெரிய வலி வர ஆரம்பித்துவிட்டு இருந்தது…

ஆரம்பத்தில் நாகரிகம் பார்த்து வலியை பொறுத்துக்கொண்டு வந்தவள்… ஒருக்கட்டத்தில் அது முடியாது அழ ஆரம்பித்துவிட்டு இருந்தாள்…

முதல் பிரசவம் வேறே…

அவளால் சீட்டில் சுத்தமாக அமரவே முடியவில்லை…

அதில், “ஒன்னுமில்லை குறிஞ்சி… இங்கப்பாரு… நல்லா மூச்சை உள்ளே எடுத்துவிடு… இதோ ஹாஸ்பிடல் போயிடலாம் டா… என் கையை பிடிச்சுக்கோ…” என்று விதவிதமாக ஈத்தன் அவளுக்கு ஆறுதல் கூறியப்படியே எப்படியோ மருத்துவமனையை அடைந்துவிட்டான்…

குறிஞ்சியை பரிசோதித்த மகப்பேறு மருத்துவரோ, “குழந்தை தலை தெரியுது… Rapid labor…” என்று உடனேயே சிறு தாமதமும் இல்லாது அவளை பிரசவ அறைக்கு மாற்றிவிட்டு இருந்தார்…

சிறு வயதிலிருந்தே குனிந்து நிமிர்ந்து எண்ணற்ற வேலைகளை செய்திருந்த அவளின் இடுப்பெலும்பு… பிரசவத்திற்கு ஏற்றவாறு விரைவாக நெகிழ்ந்து… குழந்தை வெளியேறுவதற்கான வழியை விட்டுவிட்டு இருக்க…

கடவுள் புண்ணியத்தில், வலி ஆரம்பித்த ஒருமணிநேரத்திலேயே பிரசவம் ஆரம்பித்துவிட்டு இருந்தது அவளுக்கு…

என்ன குறிஞ்சி தான் நிமிடத்திற்கு நிமிடம், பல மடங்காக அதிகரிக்கும் வலியில் துடித்துப்போனாள்…

“இதில் ஒரு சைன் மட்டும் போடுங்க சார்” என்று நர்ஸ் ஈத்தனிடம் கையெழுத்து வாங்கிக்கொள்ள…

மருத்துவர், “ஈத்தன் நீங்க இங்கேயே லேபர் வார்டில் இருக்க போறீங்களா… இல்லை வெளியில் வெயிட் பண்றீங்களா…?” என்று அவனிடம் கேட்க…

ஈத்தனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை….

அவன் கரத்தை விடாமல் இறுக்கமாக பிடித்துக் கொண்டு… வாய்விட்டு கத்தி கதறி அழுதுக்கொண்டிருந்த குறிஞ்சியை பார்த்துவிட்டு… அந்த அறையை அவன் சுற்றி பார்க்க…

அவன் கண்களில் தெரிந்த மிரட்சியை புரிந்துக்கொண்ட அந்த அனுபவம் வாய்ந்த மருத்துவர்…

“உங்களுக்கு நர்வசா இருந்தா சொல்லுங்க ஈத்தன்… நடுவில் போட ஸ்கிரீன் இருக்கு… போட்டுக்கலாம்…”, என்றார்…

அதில், “தேங்க் காட்…” என்ற ஈத்தன்… ஒருவினாடி கூட குறிஞ்சியை பிரியவில்லை…

கடக்கும் நிமிடங்கள் ஒவ்வொன்றும் ஈத்தனுக்கும், குறிஞ்சிக்கும், மறு ஜென்மம் எடுப்பது போல் இருந்தது.

“ப்ளீஸ் மேடம்… ஒரே ஒரு புஷ் தான்… கொஞ்சம் கோ ஆப்ரேட் பண்ணுங்க… இந்த புஷ்ல பேபி வந்துடும்…”, என்று அதையே நூறாவது முறையாக மருத்துவர் கூற…

உடலில் உயிர் என்ற ஒன்று இருக்கிறதா என்ற நிலைக்கு குறிஞ்சி தள்ளப்பட்டாள். அவளால் சுத்தமாக முடியவில்லை.

எப்படியோ மூச்சை இழுத்துப்பிடித்து, தன் மொத்த சக்தியையும் கூட்டி, அடுத்த வலி வந்ததும், இது தான் கடைசி என்று முக்கி முக்கி அவள் புஷ் செய்ய… 

அப்பொழுதும் குழந்தை வெளிவரவில்லை…

“இன்னும் கொஞ்சம் நல்லா புஷ் பண்ணுங்க மேடம்…” என்று மருத்துவர் கூற…

“என்னால முடியலை… தயவுசெஞ்சு ஆப்ரேஷன் செய்து குழந்தையை எடுக்க சொல்லுங்க…”, என்று ஈத்தனிடம் அழுது தீர்த்தாள்…

அவனின் கைவிரல்கள் உடையும் வண்ணம் குறிஞ்சி அழுத்தி பிடித்துக் கொண்டிருப்பதிலேயே… அவளின் வலியின் அளவை புரிந்து கொண்டிருந்த ஈத்தன்…

“சாரிடா குறிஞ்சி… சாரிடா… இவ்ளோ பெயின் இருக்கும்னு எனக்கு தெரியாது டா…”, என்று அவள் முகத்தை பற்றி தன் மார்புடன் அணைத்துக்கொண்டவன்…
 
“ஒரே ஒரு புஷ் தான் டா… ப்ளீஸ் ப்ளீஸ்” என்று அவளை உந்த…

ஈத்தனின் மகள் அவனை காண உலகிற்கு வந்துவிட்டு இருந்தாள்.

என்ன அதை உணரும் நிலையில் ஈத்தன் தான் இல்லை…

புயலடித்துவிட்டு சென்றது போல் நின்றுக்கொண்டு இருந்தான்…

குறிஞ்சியோ இதற்கு மேல் என்னால் முடியாது என்று மொத்தமாகவே மயங்கிவிட்டு இருந்தாள்…
____________________________

குறிஞ்சிக்கும், குழந்தைக்கும் என்று மருத்துவமனையில் தந்திருந்த பெரிய சூட்டில் ஈத்தன் அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்க…

கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்கு பிறகு தான் குறிஞ்சியை அங்கு ஷிஃப்ட் செய்திருந்தனர்… உடன் குழந்தையையும்…

மருத்துவர் குறிஞ்சியிடம் பேசிக்கொண்டிருக்க…

வெள்ளை நிற பூந்தூவலைக்குள்… முத்துப்போல் துயில் கொண்டிருக்கும் ஈத்தனின் சிறிய தேவதையை… நர்ஸ் பெண்… ஈத்தனிடம் தர…

பத்திரமாக அந்த பொக்கிஷத்தை தன் இருகரம் கொண்டு ஏந்திக்கொண்ட ஈத்தன்…

அப்பொழுது தான் குழந்தையின் முகத்தையே முழுதாக பார்த்தான்…

பேபி பிங்க் நிறத்தில் பொம்மை போல் அவ்வளவு வடிவாக இருந்தாள்.

“தேங்க் யூ காட்…” என்றவனின் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி… பெருமிதம்…

சற்றுமுன்னர் நடந்த கலோபரத்தின் தாக்கம் எல்லாம்… சூரியன் வந்ததும் விலகிவிடும் பனிப்போல் விலகி ஓடிவிட…

ஈத்தனின் வானில் அழகாய் ஓர் விடியல்…

ஈத்தன் தன் ஆள்காட்டி விரல் கொண்டு… பட்டும் படாமல் குழந்தையின் கன்னத்தை மெதுவாக ஸ்பரிசத்து பார்த்தவன்… அது தந்த மென்மையில் கரைந்தே போனான்.

மருத்துவர் வெளியேறியதை கூட அவன் உணரவில்லை…

குழந்தையையே தான் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்…

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு அல்லவா!

அப்பொழுது மெல்ல தன் கண்களை திறக்க பார்த்த குழந்தை… வெளிச்சம் தாங்காமல்… கண்களை மூடி மூடி திறக்க…

அந்த கருப்பு வெள்ளை பூவிழியை கண்டுவிட்ட…

ஈத்தனிடம் அவ்வளவு பரபரப்பு…

“காட்! என் பேபி எவ்ளோ அழகு…” என்றவன்… ஆசையாக அந்த குண்டு கன்னத்தை மீண்டும் ஸ்பரிசித்து பார்க்க…

அவ்வளவு தான் குழந்தை சினுங்க ஆரம்பித்து விட்டாள்.

அதில் “சாரி பேபி. டாடி உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டேனா…”, என்ற ஈத்தன். “கூல்… கூல்…” என்று லேசாக தன் கரத்தினை ஆட்டி தாலாட்ட…

அவனிடம் வந்த நர்ஸ், “சார் குழந்தைக்கு பசிக்க ஆரம்பிச்சுடுச்சு சார்…மேடம் கிட்ட கொடுங்க…”, என்றார்.

அதில், “ஊப்ஸ்…”, என்ற ஈத்தன், குழந்தையின் செப்பு இதழ்கள் விடாமல் அசைவதை பார்த்து, “சாரி பேபி… நீங்க பசிக்குதுன்னு சொன்னது டாடிக்கு புரியலை டா…” என்றவன்… 

குறிஞ்சியிடம் குழந்தையை தூக்கிச்சென்று கொடுக்க… 

தன் உதிரத்தில் உதித்தவளை ஏந்த நெஞ்சம் முழுவதும் அவாக்கொண்டு காத்திருந்த குறிஞ்சியும், கையில் குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருந்ததையெல்லாம் மறந்து உடனே குழந்தையை தன் மார்புடன் அணைத்தப்படி வாங்க முற்பட…

“சார் சார் என்ன பண்றீங்க…”, என்று ஓடிவந்த நர்ஸ். “மேடம் வெயிட் எதுவும் இப்போதைக்கு தூக்க செய்யக்கூடாது… கையில் ட்ரிப்ஸ் வேற போகுது… நீங்க குழந்தையை உங்க கையிலேயே வச்சு… அவங்க ஃபீட் பண்ண ஹெல்ப் பண்ணுங்க…”, என்றவர்… “நான் மேடமுக்கு அடுத்து போட வேண்டிய டிரிப்ஸ் பாட்டில் எடுத்துட்டு வரேன்”, என்றுவிட்டு வெளியேறிவிட…

ஈத்தனின் பார்வையும், குறிஞ்சியின் பார்வையும் ஒன்றுடன் ஒன்று மோதி… உடனே சங்கடம் கொண்டு விலகிக்கொள்ள...

குழந்தையோ பொறுத்தது போதும் என்று தன் அழுகையை சினுங்கலில் இருந்து மாற்றி கத்தி அழ ஆரம்பித்துவிட்டாள்…

அதில் ஈத்தன் மொத்தமாக பதறி விட்டான்.

அதுவும் அந்த சின்ன முகத்தில் அழுகையை அவனால் பார்க்கவே முடியவில்லை…

“வொய் பேபி… பிளீஸ் பிளீஸ் டோன்ட் க்ரை” என்றவனின் முகமும்… மகளின் பூ முகம் கசங்கி சிவந்துவிட்டதில்… சிவந்துவிட்டு இருந்தது…

குறிஞ்சிக்கோ சுற்றம் அனைத்துமே மறந்துவிட்டது.

அவள் உலகில் அவள் குழந்தையின் பசி மட்டுமே!

“சார் சீக்கிரம் குழந்தையை கிட்ட கொண்டுவாங்க… குழந்தைக்கு அழுதழுது தொண்டை புண்ணாகிட போகுது…”, என்றப்படியே… ஏற்கனவே நனைய தொடங்கிவிட்டிருந்த… தன் மருத்துவ கவுனில் இருந்த மேல் பட்டனை அவசர அவசரமாக அவள் கழட்ட ஆரம்பித்துவிட்டாள்…

அதில் ஈத்தனின் கரம் தானாக அவளருகே குழந்தையை நகர்த்திச்சென்றுவிட…

குழந்தையை அப்படியே தன் மார்புடன் சேர்த்து குறிஞ்சி அணைத்துக்கொள்ள …

ஸ்விட்ச் போட்டது போல் தன் அழுகையை உடனே நிறுத்திவிட்ட குழந்தை… தாயிடம் விறுவிறுவென அமுதுண்ண ஆரம்பித்துவிட்டாள்…

முதல் முறை என்பதால் குறிஞ்சிக்கு காம்புகளில் அத்தனை வலியாக இருந்தது. இருந்தும் வலியை மீறிய ஒரு நிம்மதி உடல் மொத்தமும்.

இயற்கையின் படைப்புகள் யாவும் அவ்வளவு அழகானவை!

தாய்மையின் சுகத்தை தன் கண்களை மூடிக்கொண்டு குறிஞ்சி அனுபவிக்க…

குழந்தையை பத்திரமாக பிடித்துக்கொண்டு நின்றிருந்த ஈத்தனின் கண்கள் இரண்டும் அவளின் முகத்தை தான் வினாடிக்கூட சிமிட்டாது வியப்புடன் பார்த்துக்கொண்டு இருந்தன…

அவ்வறை மொத்தமும் நிறைந்திருந்த குழந்தையின் வாயசைக்கும் சத்தமும்… மூச்சு விடும் சத்தமும்… இருவருக்குமே தேவ கானமாக இருந்தது…

தந்தையின் இதயத்துடிப்பும், தாயின் இதயத்துடிப்பும் ஒன்றாக சேர்ந்து, இருவரின் அணைப்பிலும் இருந்த குழந்தையை தாலாட்ட… 

சுகமாக தன் குட்டி வயிற்றை நிரப்பிக்கொண்ட குழந்தை… அப்படியே வாய் அசந்து தூங்கிவிட்டாள்…

குழந்தையின் வாய் அசைவு நின்றுவிட்டதை உணர்ந்த குறிஞ்சி, அப்பொழுது தான் நிகழ்காலம் உணர்ந்து தன் கண்களை பட்டென்று திறந்தவள்...

தன் மேலாடையை இழுத்து மூடிவிட்டு நிமிர்ந்து ஈத்தனை பார்த்தாள்…

அவனோ அவளின் முகத்தை தான் இன்னும் பார்த்துக்கொண்டு இருந்தான்…

அதிலும் அந்த பார்வை…

குறிஞ்சியின் இதயத்தின் தாளத்தை தப்பி துடிக்க வைத்துவிட்டது…

“சார்… உங்க பேபி தூங்கிட்டாங்க” என்றாள் திக்தி திணறி…

“எஸ்…” என்றவன்… “தேங்க் யூ சோ மச் குறிஞ்சி…”, என்றுக்கூற…

“எதுக்குங்க சார்… இருக்கட்டும்…” என்றாள் குறிஞ்சி மென் புன்னகையுடன்...

அடுத்து ஈத்தன் “சாரி குறிஞ்சி… நீ வெயிட் எதுவும் லிஃப்ட் செய்யக்கூடாதுன்னு சொல்ல… எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலை…” என்றவன், சற்று முன் நடந்ததற்கு “நான்…” என்று விளக்கம் கொடுக்க வர…

உடனே, “எனக்கு உங்களை தெரியும் சார். எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை. நீங்க எதை பத்தியும் நினைக்க வேண்டாம்…” என்று அவனின் பேச்சுக்கு குறிஞ்சி முற்றுப்புள்ளி வைத்துவிட்டாள்…

கட்டிய கணவனாலேயே, தன் குழந்தை தன் மனைவிடம் பசியாறும் போது, அவள் மார்பகங்களை காம கண் கொண்டு பார்க்க முடியாது என்னும் போது, அவளுடைய ஈத்தன் அவளை பார்த்துவிடுவானா என்ன?

அவனை முழுதாக நம்பினாள்.

அதை அவன் இறுதிவரை காப்பாற்றியதற்கு சாட்சி கூற வேறு, அவள் கழுத்தில் தாலி இருக்கிறதே.

ஈத்தனுக்கோ குறிஞ்சியின் ஈடற்ற அர்பணிப்பில், அவள் மீதான மரியாதை, அவன் மனதில் விண்ணைத்தாண்டி உயர்ந்துக்கொண்டு இருந்தது.

அதில், “இந்த உலகத்திலேயே நீதான் குறிஞ்சி ரொம்ப அழகு” என்றவன்…

“உன் வயிற்றில் பிறந்த என் பேபி ரொம்ப கொடுத்து வச்சவ… தேங்க் யூ சோ மச் குறிஞ்சி… எத்தனை ஜென்மம் நான் எடுத்தாலும் நீ எனக்கு செய்யும் உதவிக்கெல்லாம் என்னால் ஈடு செய்யவே முடியாது கேர்ள்” என்றுவிட்டு…

“யூ ஆர் சோ கைன்ட் அண்ட் ஸ்வீட்” என்றான்.

அதற்கு என்ன பதில் கூறுவாள்‌ குறிஞ்சி…

தன் இதயத்தை பொன் உருக்குவது போல் பேசி பேசியே உருக்குபவனிடம், தன் உணர்ச்சிகளை காட்டாதிருப்பதே பெரும்பாடாகி அல்லவா போகிறது அவளுக்கு.

பின்னே உரிமையாக தாலிக்கட்டிய காதல் கணவன் கூற வேண்டியவை அனைத்தையும், அவன் அவளிடம் கூறினால் என்ன ஆவாள் பெண்ணவள்.

அப்பொழுது ஈத்தன் அவளிடம், “ஆர் யூ ஓகே குறிஞ்சி” என்று அவளுடைய உடல்நிலையை விசாரிக்க.

“ஓகே தான் சார்… இப்போ பரவாயில்லை…”, என்று அவள் கூறிக்கொண்டிருக்கும் பொழுதே நர்ஸ் உள்ளே வந்துவிட இருவரின் பேச்சும் நின்று இருந்தது…
________________________________
அடுத்த அத்தியாயம் லிங்க் கீழே



கருத்துகள்

கருத்துரையிடுக

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates

Popular posts

New Ongoing 💌 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🎼🪻😘💌

Completed- உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே💘- (Completed story available here for free Read)

🔴My Complete Novel List: Ongoing and Finished

Completed-💃🕺அழகான இராட்சசியே அடிக்கரும்பாய் இனிக்கிறியே - Romantic Entertainment

Completed-மகிழ்மதியின் அரசன்- Royal Family Based Romantic love story