21.1 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🪻
அத்தியாயம் -21
"It's okay, Ethan. These things happen. Take your time, and we'll try again” என்ற படத் தயாரிப்பாளர், முகம் தெளியாதிருந்த ஈத்தனை, அவன் கார் வரை வந்து வழியனுப்பி வைக்க…
ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் இருந்து அவனின் கார் வீட்டை நோக்கி புறப்பட்டது…
காரில் பின் சீட்டில் அமர்ந்து, தன் தலையை பின்புறம் சாய்த்து, கண்களை அழுந்த மூடிக்கொண்ட ஈத்தனுக்கு, தனக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை…
‘ஏன்…’, என்று நினைக்க நினைக்க அது அதிகம் ஆவது போல் இருக்க… தன் வலது கரத்தை எடுத்து, படபடக்கும் இடது பக்க மார்பின் மீது அழுத்தமாக வைத்தவன்… தன்னை தானே அமைதிப்படுத்த பார்த்தான்… முடியவேயில்லை…
முதல் சறுக்கல்… கடந்திருந்த ஐந்து வருடங்களில், தொழில் சார்ந்து, ஒருமுறை கூட அவன் எதிர்கொண்டிராத சறுக்கல்… அவன் சிகரம் தொட்டு ஒருநிலைக்கு வந்தப்பின் இப்பொழுது பார்த்து வந்திருந்ததில் பயங்கர தடுமாற்றம் அவனுக்கு…
உமையாள் அம்மையார், மறைந்தப்பின் முதல் இரண்டு வாரங்கள் மட்டுமே ஈத்தன் வீட்டில் அடைந்து இருந்தது எல்லாம். அதற்கே பல ரெக்கார்டிங்கள் அவனுக்கு நிலுவையில் விழுந்துவிட்டு இருந்தன…
அதில் தயாரிப்பாளர்கள் ‘எப்பொழுது ரெக்கார்டிங்’ என்று நேரடியாக அவனிடம், கேட்க முடியாது, “எப்படி இருக்கீங்க ஈத்தன்…” என்று கால் செய்து அவனிடம் மீண்டும் மீண்டும் நலம் விசாரிக்க…
புரிந்துக்கொண்டவன்… வேறுவழியின்றி மீண்டும் வேலைகளை தொடர ஆரம்பித்து, அதில் பழையப்படி மூழ்கியும் விட்டு இருந்தான்…
அவனிடம் அனைவருக்கும் பிடித்தது அந்த வேகமும், அவன் புதிது புதிதாக அறிமுகம் செய்யும் இசை அமைப்புகளும் தான்…
அன்று குறிஞ்சியை சென்று மருத்துவமனையில் அவன் பார்த்த அன்றுக்கூட, அவனுக்கு ஒரு ரெக்கார்டிங் இருந்தது… வெற்றிகரமாக அதனை முடித்துவிட்டு இரவு அவன் திரும்பி வந்துக்கொண்டு இருக்கும் போது தான்… வழியிலேயே இருந்த அம்மருத்துவமனையை பார்த்தவன்… நேரில் சென்று அவளை பார்த்தது எல்லாம்…
அதற்கு பிறகு ஒருமுறை அமெரிக்கா கூட சென்று ஆங்கில பாடல் ஒன்றினை முடித்துக்கொடுத்துவிட்டு திரும்பி இருந்தான்… அதிலும் அப்பாடல் வெகு அருமையாக வந்திருப்பதாக அத்தனை முறை அப்பட இயக்குனரும், தயாரிப்பாளரும் அவனை பாராட்டி இருந்தார்கள்…
அப்படி இருக்கையில் இன்றைய பாடலை சுத்தமாக அவன் சொதப்பிவிட்டு இருந்தான்… இதற்கே அதற்கு இசை அமைத்ததும் அவன் தான்…
கல்லூரி காதலை மையமாக கொண்ட திரைப்படம் அது. அதற்கென்று ஏற்கனவே இரண்டு பாடல்களையும், ட்ரைலருக்கான சிறப்பு இசையையும் அமைத்து, அவன் கொடுத்திருக்க… அதில் மீதமிருந்த ஒரு பாடலை தான் இன்று முடித்துக் கொடுக்க சென்று இருந்தான்…
இளமையும், மகிழ்ச்சியும், ஆர்வமும், துள்ளலும், சொட்டும் படியான மென்வகை காதல் பாடல் அது…
இளம் பாடகனான ஈத்தனுக்கு அது எல்லாம் அல்வா போல்… எளிதில் முடித்துவிடுவான்…
அதனால் தான் அதை வரிசையில் இறுதியாக அவனும் வைத்திருந்தான்…
இன்று காலை ரெக்கார்டிங் ஸ்டூடியோவிற்கு வந்திருந்தவன், இசைக்குழு மற்றும் மியூசிக் இன்ஜினியர் அனைவரும் தயாராக இருக்க… வழக்கமான குரல் பயிற்சிகளை முடித்துக்கொண்டு, ரெக்கார்டிங் அறைக்குள் சென்றவன்… பாடலுக்கு தேவையான அனைத்து உணர்வுகளையும் தன்னுள் ஏற்றி, எப்பொழுதும் போல் தான் பாடி முடித்து இருந்தான்…
ஆனால் வெளிவந்த பாடலிலோ அவன் குரலில் இயற்கையாக இருக்கும் இளமையும், மென்மையும் மட்டுமே இருந்தன… கல்லூரி ஜோடிக்கு தேவையான மகிழ்ச்சியோ, துள்ளலோ, ஆர்வமோ எதுவும் கேட்பவரின் உணர்ச்சியை தூண்டும் அளவில் அதில் கொஞ்சமும் இல்லை…
அவன் முகத்திலும், இதழ்களிலும் இருந்த மகிழ்ச்சி… குரலில் இல்லாமல் போனதில்…
மீண்டும் மீண்டும் அவன் தன்னை தயார்படுத்திக் கொண்டு பாடியும்… ஏதேனும் ஒருகுறையை அவன் விட்டுக்கொண்டே வந்தான்…
அதில் மொத்த குழுவுமே அதிர்ந்து இருந்தாலும்… அதை வெளிக்காட்டாமல்…
இரவு பத்து மணி வரை அவனுக்காக திரும்ப திரும்ப உழைத்தும், பலனோ பூஜ்ஜியம்…
அதில், அன்றைக்கான ரெக்கார்டிங் செலவுகள் அனைத்தையும் ஈத்தன் தானே தந்துவிடுவதாக தயாரிப்பாளரிடம் கூற…
அதெல்லாம் வேண்டவே வேண்டாம் என்று மறுத்தவர்… அவனை கார் வரை வந்து மரியாதையாகவே அனுப்பி வைத்து இருந்தார்… அவனால் அவர் இதுவரை பார்த்திருந்த லாபங்களுக்கு இதெல்லாம் ஒன்றுமே இல்லை எனலாம்…
இருந்தும் காரில் சென்றுக்கொண்டிருந்த ஈத்தனுக்கு தான் சற்றும் மனம் தெளியவில்லை… அவனுடைய வயதிற்கு மீறி அவனுக்கு கிடைத்திருந்த பேர், புகழ், பணம் போன்ற அனைத்திற்குமான அடித்தளத்தில் இன்று திடீரென்று தோன்றிய நிலநடுக்கம்… அவனை மொத்தமாக ஆட்டம் காண வைத்துவிட்டு இருந்தது…
எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் காரில் இருந்து இறங்கி வீட்டினுள் நுழைந்தவனிடம்… வீட்டு ஒருங்கிணைப்பாளர் ஓடிவந்து பேச…
“டின்னர் எதுவும் வேண்டாம். டீ மட்டும் அனுப்பிவிடுங்க…” என்றுவிட்டு நடந்தவன்…
சட்டென்று நின்று, “மாம், சார், கிட்ஸ் எல்லாம் டின்னர் முடிச்சுட்டாங்களா…” என்று விசாரிக்க…
“முடிச்சிட்டாங்க சார். தோட்டத்தில் தான் பார்பிக்கியூ எல்லாம் மேடம் அரேன்ஜ் பண்ண சொல்லி இருந்தாங்க… இப்ப தான் டின்னர் முடிச்சு… மேல போனாங்க…” என்றார்.
அதற்கு, “ஓ கூல்” என்று பேச்சை முடித்துக்கொண்ட ஈத்தன்… படி வழியாக மேல் தளத்தில் உள்ள தன்னறைக்கு செல்ல ஏற ஆரம்பித்தான்…
வீட்டில், உமையாள் அம்மாவிற்கான முப்பதாவது நாள் பூஜை இரண்டு தினங்களுக்கு முன்னர் தான் முடிந்திருந்தது. நெருங்கிய முக்கிய சொந்தங்கள் மட்டும் வந்திருக்க, அவர்கள் முறைப்படி விருந்து படையல் போட்டு பூஜையை முடித்திருந்தார்கள்…
குடும்பமாக இரண்டு தினங்களுக்கு முன்னரே அதற்காக வந்திருந்த சித்ரலேகா… இன்னும் இங்கு தான் இருந்தார்… அவருக்கும் ஒரு ரெக்கார்டிங் இங்கு இருந்ததால்… மொத்தமாக முடித்துக்கொண்டு செல்லலாம் என்று தங்கிவிட்டு இருந்தார்… ஆப்ரஹாமுக்கும் இப்பொழுது எதுவும் பட ஷூட்டிங் இல்லை என்பதால் சித்ரலேகாவுடனே பிள்ளைகளுடன் தங்கிவிட்டார்…
இரண்டாவது மாடிக்கு ஈத்தன் ஏறிச்செல்ல… அங்கிருந்த மிகப்பெரிய லிவ்விங் ஹாலில் போடப்பட்டிருந்த பெரிய சோஃபாவில், சித்ரலேகாவும், ஆப்ரஹாமும் நடுவில் அமர்ந்திருக்க…
சித்ரலேகா மீது சாய்ந்தப்படி எரிக்கும்… ஆப்ரஹாம் மீது சாய்ந்தப்படி எமிலியும் அமர்ந்து… பாப்கார்ன் சாப்பிட்டப்படியே தொலைக்காட்சியில் கார்ட்டூன் படம் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்…
மிகவும் அழகான காட்சி…
அனைத்தையும் கவனித்த ஈத்தனின் கண்கள்… எரிக்கின் தலைமுடியை வாஞ்சையுடன் கோதிக்கொண்டிருக்கும் சித்ரலேகாவின் மீது அப்படியே அசையாமல் நிலைத்துவிட…
“ஏ… ஈத் ப்ரோ ஈஸ் ஹோம்!” என்று அவனை கவனித்துவிட்டு கத்திய எமிலி… துறுதுறுவென முயல் குட்டி போல் அவனை நோக்கி விரைந்து ஓடிவந்தாள்…
அதில் சட்டென்று தன் தலையை குலுக்கி… பார்வையை விலக்கிய ஈத்தன்… அவனிடம் இரண்டு கைகளையும் தூக்கிய வண்ணம் ஓடிவந்த எமிலியை, “ஹே ஸ்வீட்டி… இன்னும் தூங்கலையா நீங்க…” என்று அப்படியே தூக்கிக்கொண்டான்…
அவள் இல்லையென்று தலையாட்டி… குறும்பாக சிரிக்க…
“கியூட்டி பை” என்ற ஈத்தன்… அவளின் முன் நெற்றி முழுவதும் படர்ந்திருந்த… வெட்டிவிடபட்டிருந்த அழகான bangs முடியை காதோரம் ஒதுக்கிவிட்டப்படியே…
அவளை தூக்கிக்கொண்டு சோஃபாவை நோக்கி நடந்தான்…
அங்கு சித்ரலேகாவும், ஆப்ரஹாமும் அவனிடம் ரெக்கார்டிங் எப்படி போனது என்று விசாரித்தார்கள்…
இருவரிடமும் நன்றாக சென்றதாக கூறியவனுக்கு… இருந்த மனநிலைக்கு சற்று நேரம் அங்கேயே அமரலாம் போல் தோன்ற…
மறுகணமே, “எமி அம்மாக்கிட்ட வா… அண்ணாவ டிஸ்டர்ப் பண்ண கூடாது… அண்ணா போயிட்டு ரெஸ்ட் எடுக்கட்டும்” என்றார் சித்ரலேகா.
அதில், உடனே அவனிடம் இருந்து இறங்கிக்கொண்ட எமி… சித்ரலேகாவிடம் ஓடிவிட…
மெல்லிய புன்னகையுடன் சித்ரலேகாவை ஒருபார்வை பார்த்த ஈத்தன்…
அனைவருக்கும் பொதுவாக “குட் நைட்…” என்றுவிட்டு உடனடியாக தன் அறைக்கு திரும்பிவிட்டான்.
அந்நேரம் அவன் மனம் வெகுவாக உமையாளை தான் தேடியது…
ரெக்கார்டிங்கிற்கு கிளம்புபவனை புன்னகை முகத்துடன் அனுப்பி வைப்பவர்…
ரெக்கார்டிங் முடித்து வருபவனை, அதே புன்னகை முகத்துடன் வரவேற்று…
அவன் முகம் பசியுடன் காணப்பட்டால் நேரடியாக உணவு மேஜைக்கு இழுத்து சென்று விடுவார்…
இல்லை என்றால் அவனுக்கான டீயை கொண்டு வர கூறி… அவரே கலந்து அவனுக்கு கொடுத்து… அவன் அருந்தி முடித்ததும்… தன் மடியில் அவனை படுக்க வைத்து, அவன் தலைமுடியை கோதியப்படியே ரெக்கார்டிங் பற்றி அனைத்தையும் விசாரிப்பார்…
“என்னை குழந்தை மாதிரி நீங்க ட்ரீட் பண்றீங்க பாட்டி… போங்க…” என்று ஈத்தன் பலமுறை கூறினாலும்… “உனக்கு எத்தனை வயசானாலும் நீ எனக்கு குழந்தை தான் சமரா…” என்பவரின்… அந்த வருடல்கள் மட்டும்… என்றும் நின்றதில்லை…
அந்தளவிற்கு அவனுக்கு எல்லாமுமாக இருந்தவர் அவர்…
அமெரிக்காவிற்கு அவன் சென்று இருந்தால் கூட வீடியோ காலில் அவனுடன் இணைந்துக்கொள்வார்…
அதையெல்லாம் நினைத்தப்படியே, இன்று முதல் முறை விழுந்து வாரி எழுந்துவந்திருந்த ஈத்தன் குளித்து முடித்து, இரவு உடைக்கு மாறி, “ஐ மிஸ் யூ வெரி பேட்லி பாட்டி” என்றப்படியே… தனக்கான டீயை தயாரித்து… தனிமையில் குடிக்க ஆரம்பித்தான்…
காலையில் இருந்து மீண்டும் மீண்டும் பாடியதில்… தொண்டையில் கழுத்தில் எல்லாம் அவனுக்கு நல்ல வலி… அதுக்கூட அவனுக்கு பெரிதாக தெரியவில்லை…
ஏன் பாடல் சரியாக வரவில்லை என்பது தான் மீண்டும் மீண்டும் மூளைக்குள் ஓடிக்கொண்டு இருந்தது…
அதை சிறிய பிரச்சினையாக நினைத்து அவனால் விட முடியவில்லை…
கீழே இறங்கி, தோட்டத்திற்கு சென்றவன்… அவனுக்கு மிகவும் பிடித்த பாடல்களை, இசைகளை கேட்டப்படியே… அங்கிருந்த ரோஜாக்களை சுவாசித்தப்படியும்… வருடியப்படியும்… நிலவு வெளிச்சத்தில் சிறிது நேரம் நடந்துவிட்டு… தோட்டத்திலேயே அமர்ந்தவன்…
அன்றைய பாடலில் இருந்து சில பகுதிகளை மட்டும் தனியாக பிரித்து அந்த ஏகாந்த இரவில் திறந்தவெளியில் பாடி, புதிவு செய்து, திரும்ப ஒலிக்கவிட்டு பார்க்க… காலையில் இருந்தப்படியே தான் உயிர்பற்று இருந்தது அப்பாடல்…
அதில் “காட்…” என்றவன்… பதட்டம் அதிகரிக்க… அவன் இதற்கு முன்பு பாடிய பாடல்கள் சிலதை எடுத்து பாடி பதிவு செய்து கேட்டுப்பார்க்க…
பிரச்சனையின் முடிச்சினை ஈத்தன் கண்டுப்பிடித்துவிட்டு இருந்தான்…
வலி நிறைந்த சோகப்பாடல்கள் அனைத்தையும் சரியாக பாடி இருந்தவன்… மகிழ்ச்சி நிரம்பிய பாடல்களை மட்டும் சொதப்பிவிட்டு இருந்தான்…
ஆழ் மனதில் இருப்பது தானே… குரலின் வழியே வெளிவரும்…
சென்ற வாரம் அவன் முடித்துக்கொடுத்திருந்த பாடல்கள் எல்லாமே சோகப்பாடல்கள் வகையாக இருந்துவிட்டு இருக்க… அவனுடைய மாற்றம் அவனுக்கு தெரியாமல் போய்விட்டு இருந்தது…
‘நன்றாக இருக்கின்றேன்… நன்றாக இருக்கின்றேன்…’ என்று அவனுக்கு அவனே எத்தனையோ முறை கூறிக்கொண்டு, “கூல்… கூல்…” என்று கூலாக வலம் வந்தாலும்… உண்மை வெளிச்சத்திற்கு வர தொடங்கிவிட்டு இருந்தது…
தனிமையை விரும்பி ஏற்பது வேறு… தனிமையை ஏற்படுத்திக்கொள்வது வேறல்லவா…?
அதிலும் குடும்பம், நண்பர்கள் என்று எண்ணற்ற எதிர்கால கனவுகளுடன் உற்சாகமாக கழிக்க வேண்டிய 23 வயதில்… தனிமை எப்படி இனிக்கும்…?
ஊரை ஏமாற்றலாம்… ஆனால் அவனை அவனே எப்படி ஏமாற்றிக்கொள்ள முடியும்…?
சிறிது நேரம் முன்பு கூட… சித்ரலேகாவின் கதகதப்பான அணைப்பினுள் அடங்க… அவனுள் இன்னும் வளராமல் மறைந்துக்கொண்டிருந்த அந்த பன்னிரண்டு வயது ஈத்தன்… ஆசைக்கொண்டானே… ஏங்கினானே… தவித்தானே…
அவர் ஒன்றும் மறுக்க போவதில்லை தான்…
ஆனால் அவனின் ஈகோவும், சூடுகண்ட இதயமும், அவனை ஒரு அடிக்கூட எடுத்துவைக்க விடாமல் தடுக்க… என்ன செய்வது…
இந்நேரம் உமையாள் இருந்து இருந்தால் நிலைமையே வேறாக இருந்து இருக்கும்…
ஈத்தனின் மனதை பாதிக்கும் விஷயம் எதையும் அவர் நடக்கவே விட மாட்டார்…
ஈத்தனுக்கும் தெரியாத, சித்ரலேகாவும் அறியாத வகையில் காட்சிகளை மாற்றி அமைத்துவிடுவார்…
இரண்டு பேருமே அவருக்கு முக்கியம் ஆயிற்றே…
என்ன செய்வது இப்பொழுது அவர் இல்லையே…
கடந்த ஒரு வாரமாகவே ஈத்தனின் கண்முன், சித்ரலேகாவும் ஆப்ரஹாமும் அவர்களின் பிள்ளைகளுடன் இயல்பாக வலம் வர…
ஈத்தனின் ஆழ்மனம் அவனின் சிதைந்த கூட்டினை தேடி ஓடிவிட…
உமையாள் மீட்டுக் கொண்டு வந்திருந்த ஈத்தன், அவனுக்கே தெரியாது மீண்டும் ஆரம்ப நிலைக்கே பின்னோக்கி செல்ல ஆரம்பித்துவிட்டு இருந்தான்…
அதன் முதல் அறிகுறி தான் இன்று வெளிப்பட்டிருந்தது… அதையே ஈத்தனால் சற்றும் தாங்க முடியவில்லை என்றால்… இனி வருபவைகளை எவ்வாறு தாங்குவான்…
ஒரு இழப்பில் இருந்து மீள எப்பொழுதும் மனிதனுக்கு அடுத்த பிணைப்பு தேவையாகுமே…
பன்னிரண்டு வயது ஈத்தன் மீள உமையாளும், மயில்வாகனமும் அவனுக்கு பக்க துண்களாக இருக்க…
இப்பொழுது அவர்களின் இழப்பிலிருந்து… அவன் யாரை கொண்டு மீள்வது…?
மனிதன் உயிர் வாழ, உணவு, இருப்பிடம், உடை, பணம் மட்டும் போதாதே… அதைத்தாண்டி உறவு, அன்பு, அரவணைப்பு, சமூக இணைப்புகள், நோக்கம், அர்த்தம் போன்ற பல தேவைகள் இருக்கிறதே…
இதில் பின்பாதி எதுவுமே ஈத்தனுக்கு இல்லை என்னும் போது… உமையாள் பயந்தவை அனைத்தும் அவனுக்கு நடக்க ஆரம்பித்து விட்டன…
நெருங்கிய நண்பர்கள் என்று யாராவது அவனுக்கு இருந்து இருந்தாலாவது பரவாயில்லை… அப்படியும் அவனுக்கு யாருமில்லை…
யாருடன் அவன் நெருங்கினாலும்… அவனின் தாய் தந்தை குறித்த பேச்சு… நிச்சயம் அங்கு வந்துவிட… பள்ளி கல்லூரிகளில் யாருமே வேண்டாம் என்று ஒதுங்கிக்கொள்ள ஆரம்பித்தவன்… அப்படியே இருந்து விட்டான்…
எந்த பிள்ளைகளுமே, தங்கள் பெற்றோரின் அந்தரங்கத்தை அறிந்துக்கொள்ளவோ, அதை குறித்து மற்றவர்கள் பேசுவதையோ, விரும்புவது இல்லை தானே…
பலன்…
தனிமை.
நீருக்குள் அமிழ்த்தி மறைத்து வைத்திருக்கும் பந்துப்போல்… அவனுக்குள் இருந்த வெறுமை மீண்டும் அதன் வேர்களை அவனுள் பரப்பி… அவனுடைய உயிர்ப்பை கொஞ்சம் கொஞ்சமாக உறுஞ்சி… மேலெழும்ப ஆரம்பித்து விட்டது…
🔴அடுத்த பாகம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻
கருத்துகள்
கருத்துரையிடுக