23.3 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🪻
அதற்குள் தூங்கி முடித்து வெளியே எழுந்துவந்த லோகேஸ்வரி… குறிஞ்சியை டீப்போட சொல்லி விரட்ட…
மனமே இல்லாமல் சென்று போட்டுக்கொண்டு வந்தவள்… அனைவருக்கும் தந்துவிட்டு… மீண்டும் அயர்ன் செய்யும் இடத்தில் அமர்ந்தப்படியே லோகேஸ்வரி பார்த்துவிட போகின்றார் என்று பயந்து பயந்து தொலைக்காட்சியை பார்க்க…
அவளின் புருவங்கள் இரண்டும் சந்தேகமாக சுருங்க ஆரம்பித்தன…
நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது பார்த்தவாறு தான் ஈத்தன் இப்பொழுதும் சிரித்துக்கொண்டு இருந்தான்… ஆனால் அதில் முதலில் இருந்தது போல் இப்பொழுது உயிர்ப்பு சிறிதும் இல்லை… வலுக்கட்டாயமாக சிரித்தும்… கண்களை சிமிட்டியப்படியும் இருந்தான்…
அவன் குரலின் ரசிகர்களுக்கு வேண்டுமானால் அவனுடைய அம்மாற்றம் தெரியாமல் இருக்கலாம்… ஆனால் அவனுடைய ரசிகையான குறிஞ்சிக்கு அது தெரியாமல் போகுமா என்ன?
“என்ன ஆச்சு சாருக்கு…” என்று நினைத்தவளுக்கு இதயம் படபடப்பாகி போனது…
நேரம் செல்ல செல்ல ஈத்தனின் உடல் மொழி முற்றிலும் மாறிவிட்டது…
வலுக்கட்டாயமாக சிரித்துக்கொண்டு இருந்தவன்… அதன்பிறகு அதைக்கூட செய்யவில்லை…
நல்லவேளையாக பாடல்களும் அதற்கு ஏற்றப்போல் இருந்துவிட தப்பித்தவன்…
நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கும் சமயம் மயங்கி சரிந்துவிட்டு இருந்தான்…
அதைப்பார்த்து அதிர்ச்சியில் உறைந்த குறிஞ்சி… அயர்ன் பாக்ஸை தன் கரத்தின் மேல் தேய்த்துவிட்டு இருந்தாள்…
அதில் “ஸ்…” என்று கரத்தினை உதறியப்படி… ஸ்விட்சை நிறுத்தியவளுக்கு… கையும் ஓடவில்லை… காலும் ஓடவில்லை…
ஈத்தனிடம் ஓடிவந்திருந்த அவனின் பாதுகாவலர்கள்… யாரும் நெருங்காத வகையில் அவனை சூழ்ந்துக்கொள்ள… பெரிய கூட்டம் கூடுவதால் ஏற்கனவே எச்சரிக்கை நடவடிக்கையாக வரவழைக்கப்பட்டிருந்த சிறு மருத்துவ குழு விரைந்து மேடையேறி எத்தனை பரிசோதிக்க… பார்த்துக்கொண்டிருந்த அனைவருமே சீட் நுனிக்கு வந்திருந்தார்கள்…
இது முதல் நாள் நடந்தது என்பதையெல்லாம் அனைவருமே மறந்துவிட்டு இருக்க…
“கடவுளே… கடவுளே…” என்று ஜபித்த குறிஞ்சியின் மார்பை… அவள் கண்களில் இருந்து நிற்காமல் வழிந்த நீர் துளிகள் நனைக்க ஆரம்பித்துவிட்டு இருந்தன…
ஈத்தனை அப்படியே தூக்கிக்கொண்டு மேடையின் பின்புறம் இருந்த அறைக்குள் அவர்கள் சென்று மறைந்துவிட…
விட்டால் அனைவருமே தொலைக்காட்சி பெட்டியை உடைத்துக்கொண்டு உள் நுழைந்துவிட்டு இருப்பார்கள்…
நல்லவேளையாக நடுவில் புகுந்த நம்மூர் தொகுப்பாளினி பெண்… ஈத்தனுக்கு ஒன்றும் இல்லை… இப்பொழுது நலமாக இருக்கின்றார்… நீர்சத்து குறைபாடு தான் காரணம் என்று கூறிவிட்டு செல்ல…
குறிஞ்சியால் அதை சற்றும் நம்பமுடியவில்லை….
நீர்சத்து குறைபாட்டிற்கான அறிகுறிகள் எதுவுமே அவனிடம் இல்லவே இல்லையே… அதைவிட பாடகனான அவன்… நீர் சம்பந்தப்பட்ட பொருட்களை அதிகளவில் அல்லவா எடுத்துக்கொண்டே இருந்து இருப்பான்…
மற்ற இரு பாடகிகள் நிகழ்ச்சியினை தொடர…
தன் தொலைபேசியுடன் தோட்டம் பக்கம் ஓடிய குறிஞ்சி… எதை பற்றியும் யோசிக்கவில்லை… உடனே ஈத்தனுக்கு அழைத்துவிட்டாள்…
ஆனால் அவளின் அழைப்பை ஏற்க தான் அந்தப்பக்கம் யாருமில்லை…
மீண்டும் மீண்டும் முயற்சித்து பார்த்தவள்…
“சார் எப்படி இருக்கீங்க? இப்ப தான் டீவியில் பார்த்தேன்…” என்று குறுஞ்செய்திகள் பல அனுப்பியவள்…
அடுத்து அவளிடம் இருந்த டிரஸ்ட் மேனேஜரின் நம்பருக்கு அழைத்தாள் எதுவும் தெரியுமா என்று விசாரிக்க… அவருக்கோ விஷயமே இவள் கூறிய பிறகு தான் தெரியவே செய்தது… “யாருகிட்டேயும் விசாரிச்சு பார்த்துட்டு சொல்லு சார்…” என்றுவிட்டு வைத்தவள்…
கூகுளில் ஏதேனும் செய்தி உள்ளதா என்று ஆராய…
தொலைகாட்சியில் சொன்னதையே தான் போட்டு சில ஆங்கில செய்திகள் இருந்தன…
அதற்குள் உள்ளிருந்து லோகேஸ்வரி குரல் கொடுக்கவும்… முதல் முறை அவ்வளவு ஆத்திரமாக வந்தது குறிஞ்சிக்கு…
பல்லை கடித்துக்கொண்டு வீட்டினுள் நுழைந்தவள்… மீதி துணிகளை விடுவிடுவென்று அயர்ன் செய்து முடித்துவிட்டு… இரவுக்கு என்ன செய்ய வேண்டும் என்று ஐஸ்வர்யாவிடம் கேட்க…
பிரபு, “எங்களுக்கு எதுவும் வேண்டாம்… பேபி மூட் அவுட்ல இருக்கா… நாங்க வெளியே போறோம்…” என்றவன்… லோகேஸ்வரிக்கும், பூஜாவிற்கும் என்ன வேண்டும் என்று கேட்டுக்கொள்ள சொல்ல…
மதியம் சாப்பிட்டதே செரிக்காமல் அங்கும் இங்கும் உருண்டுக்கொண்டிருந்த லோகேஸ்வரி தனக்கு சப்பாத்தியும்… முட்டை குருமாவும் வேண்டும் என்றார்… பூஜா தனக்கு மினி பூரி வேண்டும் என்று கேட்க…
எதிலுமே குறிஞ்சிக்கு மனம் ஒட்டவில்லை… கடமைக்கே என்று செய்தவளுக்கு… அடுப்பின் அனலில் கையில் சுட்ட இடம் வேறு அப்படி காந்தியது…
அனைத்தையும் செய்து முடித்து வைத்துவிட்டு… பஸ் பிடித்து மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தவள்… ஃபோனில் சார்ஜ் தீரும் வரை… மீண்டும் மீண்டும் ஈத்தனுக்கு அழைத்தப்படியும், செய்தி அனுப்பியப்படியும் கிடந்தாள்…
அவளின் அடிவயிற்றில் அப்படி ஒரு பதட்டம்… உடனேயே ஈத்தனிடம் பேச வேண்டும்… அவனுக்கு என்ன ஆனது என்று பார்க்க வேண்டும்… என்ற உணர்வுகள் நேரமாகமாக அதிகரித்துக்கொண்டே சென்றது…
வசதி வாய்ப்புகள் இருந்து இருந்தால்… ஃபிளைட் பிடித்துக்கூட ஓடியிருப்பாள்…
என்ன செய்வது… இல்லையே…
இயலாமையில்… குளியலறைக்குள் ஓடி… சத்தம் வராமல் அழுதுத்தீர்த்தவள்… முகம் கழுவிக்கொண்டு வெளியே வர…
மகளின் முக மாற்றம் சாந்தினிக்கு தெரியாமல் போகுமா…
“பூ ம்மா அம்மாக்கிட்ட வாடா” என்று அவளை அருகே அழைத்தவர்… அவளின் முகத்தினை வருடியபடியே… “சித்தி ரொம்ப திட்டிட்டாளா டா” என்று விசாரித்தார்…
“இல்லம்மா…” என்ற குறிஞ்சி… “காலையில் தலைக்கு குளிச்சதில் கொஞ்சம் தலைவலியா இருக்குமா… அவ்வளவு தான்… மாத்திரை போட்டா சரியாகிடும்மா…” என்று சமாதானம் கூற…
“சரி தைலம் எடுத்துட்டு வந்து இங்க பாடு டா… அம்மா தலை பிடிச்சு விடறேன்… சரியாகிடும்…” என்ற சாந்தினி… குறிஞ்சி நாற்காலியை இழுத்துவந்து அவர் அருகே போட்டு… அருகில் தலைசாய்த்து படுக்கவும்…படுத்தப்படியே தைலத்தை எடுத்து அவள் நெற்றியில் தேய்த்து விட்டு… அவளுக்கு இதமாக பிடித்துவிட ஆரம்பிக்க…
குறிஞ்சிக்கு இன்னுமே உள்ளே இதயம் படபடவென்று அடித்துக்கொண்டு தான் கிடந்தது…
அதை உணர்ந்தப்போல் சாந்தினி, “என் பூக்குட்டி மனசில் என்ன விஷயம் ஓடுது… நெத்தி எல்லாம் இப்படி சுடுதே…” என்று சரியாக அவளின் நாடிப்பிடித்து விசாரிக்க…
என்ன கூறுவாள் அவள்…
“தெரியலை ம்மா” என்றவள்… அழுகையை அடக்கியப்படியே அன்னையின் கழுத்தை அப்படியே கட்டிக்கொண்டாள்…
அவளின் அத்தனை தவிப்புகளுக்கும் காரணமான ஈத்தனோ… அங்கு கையில் மெடிக்கல் ரிப்போர்ட்டுன் அடித்தீர்த்த சித்ரலேகாவின் முன்பு… அப்படியே ஆடாமல், அசையாமல் இடித்த புளிப்போல் அமர்ந்து இருந்தான்…
கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்கு முன்பே, அவன் ஒப்பந்தம் செய்துக்கொண்ட இசை நிகழ்ச்சி தான் நேற்று நடைபெற்று இருந்தது…
அதில் பாடிய மூன்று இசை கலைஞர்களுமே… உலகளவில் அதிக ஃபேன் ஃபாலோவர்ஸ் வைத்திருப்பவர்கள் என்பதால் தான் அவ்வளவு கூட்டம்…
அதிலும் ஒரு நல்ல விஷயத்திற்காக தான் அந்த இசை விழா என்னும் போது… தங்களின் பங்கு நிச்சயம் அதில் இருக்க வேண்டும் என்று ரசிகர்களுக்குள் நல்ல போட்டி…
அதில் நம்மூர் மதிப்பில், அதற்கான நுழைவு சீட்டு கட்டணமாக குறைந்தது 8000-த்தில் ஆரம்பித்து… முதல் வரிசையில் அமர்பவர்களுக்கு 50,000 வரை வசூலித்து இருந்தார்கள்…
அதைத்தொடர்ந்து நியூயார்க்கிற்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஏற்கனவே விமானத்திற்கான பயணச்சீட்டு பெற்று… ஹோட்டல்களிலும் முன்பதிவு செய்துவிட்டு இருக்க…
ஈத்தனால் பட ஒப்பந்தங்களை ரத்து செய்தது போல் இதனை செய்ய முடியவில்லை… அதுவும் நல்ல காரியத்திற்காக என்று இலவசமாக செய்துதருகிறேன் என்று ஆரம்பித்துவிட்டு பின்வாங்குவது அவப்பெயரை பெற்று தருமே…
ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய ஏமாற்றமாகவும்… அவன் மீது நம்பிக்கையின்மையும் தருமே…
அதுமட்டுமின்றி அவன் விலகுவதாக இருந்தால், ரசிகர்களுக்கான நுழைவு சீட்டு கட்டணம் முதல், நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்ய செலவு செய்த மொத்த தொகை, உடன் அதில் பணிப்புரிய ஒப்பந்தம் ஆன பேக் ஸ்டேஜ் மேடை கலைஞர்கள் அனைவருக்குமான ஊதியம் என அனைத்தையும் அவன் தான் தர வேண்டும்… அதுவும் அமெரிக்க டாலரில்… அன்றைய ஈத்தனின் நிலைக்கு அது மிக மிக அதிகம்… கொடுத்துவிட்டால் அதன் பிறகு அவனுக்கு என்று இருப்பது மிகவும் சொற்பம் ஆகிவிடும்…
அனைத்தையும் நன்கு யோசித்துப்பார்த்தவனுக்கு… பணம் போவதை விட… ரசிகர்களின் நம்பிக்கையை இழப்பது பெரிதாக தெரிந்தது…
கடந்த ஐந்து வருடங்களாக அவனை உயிர்ப்புடன் வைத்திருந்தது அவர்களின் கைத்தட்டல்களும், அன்பும் தான் என்னும் போது…
கடைசி ஆயுதத்தை கையில் எடுத்து இருந்தான்…
மனநிலையை தொடர்ந்து மகிழ்வாக வைத்திருக்க, Serotonin Boosters, Dopamine Enhancers மற்றும் Anxiety Reducers போன்ற மருந்துகளை எடுத்துக்கொண்டு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு இருந்தான்…
ஆரம்பத்தில் அவன் சிரித்துக்கொண்டே நன்கு பாடியதற்கான காரணம் அதுதான்…
ஆனால் போக போக, அதன் வீரியத்தை அவன் உடலால் தாங்கமுடியாமல் போக… இறுதியில் சுயநினைவு இழந்து மயங்கிவிட்டு இருந்தான்…
📌அடுத்த பாகம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻
கருத்துகள்
கருத்துரையிடுக