சங்கீதம்- 26.1 🪻😘🪄
அத்தியாயம்-26
அன்று குழந்தைக்கு ஈடாக, குறிஞ்சிக்கு பணம் கொடுத்து கையெழுத்து வாங்கியதையெல்லாம், இப்பொழுது நினைக்கும் பொழுது ஈத்தனுக்கு… நெஞ்சை யாரோ அழுந்த பிசையும் உணர்வு…
அதில், “நான் அப்படி செய்திருக்க கூடாதுன்னு நினைக்கிறேன் மதர். என்னை மட்டுமே மனசில் வச்சு நிறைய சுயநலமா இருந்துட்டு இருக்கேன். அதில் குறிஞ்சியோட வாழ்க்கை மொத்தமும் கேள்விக்குறியாகிட்டு இருக்கு”, என்று உணர்ச்சி வசத்தில் பழியை மொத்தமாக தன் மீது போட்டுக்கொண்டவன், “ப்ளீஸ் மதர் இப்பவாவது நான் கேட்டதை சொல்லுங்களேன்… குறிஞ்சி எப்படி இங்க வந்து சேர்ந்தா? அவளோட ஃபேமிலி எங்க? இதெல்லாம் தெரிஞ்சா தான் என்னால் அடுத்து என்னன்னு பார்க்க முடியும்” என்றவனுக்கு… அவளின் மார்பில் இன்னும் தவழும் அவன் அணிவித்த மாங்கல்யமும்… காலில் வீற்றிருக்கும் கொலுசுகளும் நினைவில் வந்து படபடப்பை வரவழைத்தன…
அதை அணிவித்தப்பொழுது கூட அவன் இந்தளவிற்கு படபடத்திருக்கவில்லை… மாற்றான் தோட்டத்து மல்லிகை என்ற நினைப்பில் தைரியமாக இருந்தவனிடம், திடீரென்று வந்து, இல்லை அது உன் தோட்டத்து மல்லிகை என்றால் எப்படி இருக்கும்…
ஈத்தனின் பக்க கதையை கேட்டதற்கே, பாவம் மதருக்கு தொண்டையெல்லாம் அடைத்துவிட்டு இருந்தது…
பணம் இருக்கிறது, புகழ் இருக்கிறது, வேறென்ன வேண்டும், அது போதுமே நிம்மதியாக வாழ என்று சாதாரணமாக சொல்லிவிடும் உலகில், அது அனைத்தும் இருந்தும் மகிழ்ச்சியை சுத்தமாக தொலைத்துவிட்டு இருந்தது ஈத்தனின் கடந்தகாலம்…
ஏனோ அவன் மீது அவருக்கு கோபம் வரவேயில்லை. மாறாக அவனுக்காக அவரின் இதயம் தான் கசிந்துருகியது…
அதிலும் பன்னிரண்டு வயது ஈத்தன் அவரின் கண்களில் நீரினையே வரவழைத்துவிட்டு இருந்தான்…
பெற்றவர்கள் செய்யும் தவறுகள் பிள்ளைகளை எங்கு கொண்டு நிறுத்திவிடுகிறது…
சித்ரலேகாவும், ஹன்டரும் அவர்கள் இருவருக்குள் எதிர்க்கொண்ட பிரச்சனைகளும்… மன போராட்டங்களும்… வருத்தம் அளித்தாலும்…
அவர்கள் இருவருமே ஒருசேர தாய் தந்தையாக தோற்றுப்போனதை அவராலேயே ஏற்றுக்கொள்ள முடியவில்லை…
எப்படி பெற்ற குழந்தையை ஒருவரால் மறக்க முடியும்?
நிச்சயம் வேண்டும் என்று செய்திருக்க மாட்டார்கள் தான்…
ஆனால் நடந்துவிட்டதே!
நவீன உலகின் மாற்றங்கள் அவரை பயமுறுத்தியது…
வரும் எதிர்கால சந்ததிகளின் பிரதிபலிப்பாக இருந்தது ஈத்தனின் செயல்…
‘குடும்ப அமைப்பே வேண்டாம்…’ என்று நாட்டில் எத்தனை ஈத்தன்கள் உருவாக இருக்கின்றார்களோ… ஏன் ஏற்கனவே உருவாகி கூட இருக்கலாமே…
அந்த நினைப்பில் ‘ஓ ஜீசஸ்…’ என்று மனதிற்குள் சொல்லியவருக்கு… அதைத்தொடர்ந்து குறிஞ்சியின் செயல்கள் யாவும் பிரமிப்பை அளித்து இருந்தது…
தந்தை துணையில்லாத அவளின் ஏழ்மை வாழ்க்கையும், பெற்ற அன்னைக்கான அவளின் போராட்டமும்… ஒருபக்கம் வேதனையை தந்தது என்றால்…
மறுபக்கம் தனக்கு உதவி கரம் நீட்டியவன் மீது அவள் கொண்ட அன்பும், அக்கறையும், விசுவாசமும்… சிலிர்க்க வைத்து இருந்தது…
ஒன்றுமில்லாமல் வறண்டு… பாலைவனமாக மாற இருந்தவனை… அவளுடைய அர்ப்பணிப்பு தானே இன்று சிகரத்தில் கொண்டு வைத்து இருக்கிறது…
கலியுகத்தில் குறிஞ்சி போன்ற ஜீவன்கள் எல்லாம்… குறிஞ்சி பூ போல அபூர்வம் தானே…
யார் தூக்கி தருவார்கள்… பத்து மாதம் சுமந்த பிள்ளையை… அதுவும் எந்த நம்பிக்கையில் என்ற எண்ணம் தலைத்தூக்க…
ஈத்தன் மீதான குறிஞ்சியின் காதல், அவளை அதை செய்ய வைத்தது மதருக்கு புரிந்தது…
உடன் தன்னிடம் உதவி கேட்டு வந்த பெண்ணை உதாசீனம் செய்யவோ, தவறாக உபயோகிக்கவோ நினையாது… அவளுக்கு பக்கபலமாக உடனிருந்து… அவள் கேட்டதை தாண்டி உதவிய ஈத்தன் மீது… குறிஞ்சி போன்ற பெண்ணிற்கு நேசம் வரவில்லை என்றால் தான் அதிசயமே… என்று நினைத்தவருக்கு…
இருவருமே ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்று தோன்றியது…
அதில் இனியாவது இருவரும் சேர்ந்து நல்லபடியாக வாழட்டும்… அதுவும் குறிஞ்சிக்கு அவளின் மனதிற்கு பிடித்த வாழ்க்கை அமையட்டும் என்று முடிவு செய்த மதர்…
உடனே சென்னையில் இருக்கும் ஒரு கிருஸ்தவ கான்வென்ட்டிற்கு தொடர்பு கொண்டார். அங்கிருக்கும் அவரின் தோழி ஒருவர் மூலம் தான் குறிஞ்சி இங்கு வந்து வேலையில் சேர்ந்து இருந்தாள்.
அத்தோழி தான், குறிஞ்சிக்கு சொந்த பந்தம் யாருமில்லை என்று மதரிடம் கூறியிருக்க, இவரும் அதை நம்பி, அவளுக்கு இந்நாள் வரை கொடைக்கானலில் அடைக்கலம் கொடுத்து இருந்தார்.
ஒருசில நிமிடங்களிலேயே மதரின் தோழி லைனில் வர, தன் தோழியிடம் ஈத்தன் குறித்து கூறிய மதர், அவனையும் அவரிடம் பேச வைக்க… ஈத்தன் கூறிய தகவல்களை கேட்டவருக்கு… அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்…
பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர் சொன்னப்படியே குழந்தை ஈஷாவை ஈத்தனிடம் ஒப்படைத்துவிட்டு… ஈத்தனின் வீட்டில் இருந்து கிளம்பிவிட்டிருந்த குறிஞ்சி… அவள் நர்ஸிங் படித்த கிருஸ்துவ கல்லூரியினுடனே சேர்ந்திருந்த மருத்துவமனையில் செவிலியராக பணியாற்ற தொடங்கி இருந்தவள்…
அவள் அன்னையின் இறப்பிற்குப் பிறகு, வீட்டில் திருமணம் செய்துகொள்ள தொந்தரவு செய்வதாகவும், தனக்கு அந்த மாப்பிள்ளையை சுத்தமாக பிடிக்கவில்லை என்றும், திருமணத்திலும் தனக்கு இஷ்டமில்லை என்றும் கூறி, அங்கு தலைமை பொறுப்பில் இருந்த சிஸ்டரிடம்(Nun) வேறு பாதுகாப்பான இடத்தில் தனக்கு ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்டிருந்தவள்…
அவரின் ஏகப்பட்ட குறுக்கு விசாரணையில் துவண்டு… ஈத்தனின் பெயரை மட்டும் மறைத்து… அவன் சாந்தினிக்கு செய்த உதவிகளையும்… அவனுக்காக அவள் குழந்தை பெற்று கொடுத்ததையும் கூறியவள்… அவனை தவிர வேறு யாரையும் அவளால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தன்னிலையை விளக்கி… அவரிடம் உதவிப் பெற்று… கொடைக்கானலுக்கு சென்று சேர்ந்ததாக கூற…
ஈத்தனுக்கு அவளுக்கு பிடித்து, நிச்சயம் செய்திருந்த திருமணத்தையே வேண்டாம் என்று தன் சொந்த வீட்டை விட்டே குறிஞ்சி வெளியேறிவிட்டு இருந்ததில், அதிர்ச்சி ஒரு பக்கம் என்றால், மறுபக்கம் அவ்வளவு இஷ்டமா என்மீது அவளுக்கு, எப்பொழுதிலிருந்து என்ற வியப்பு…
இன்னுமே நம்ப முடியவில்லை அவனால்…
அவளின் அந்த இஷ்டம் தான் அவனை இவ்வளவு தூரம் கட்டி இழுத்துக்கொண்டு வந்துள்ளது என்பதை பாவம் அறியாது போனான்.
இந்தமுறையும் ஈத்தனுக்கு குறிஞ்சியின் பிறப்பின் ரகசியமோ… ஐஸ்வர்யா மற்றும் பிரபுவின் உண்மை நிறமோ தெரிய வராமலே போயிவிட்டு இருந்தது…
காதலிக்கும் பிள்ளைகள் சிலர் பெற்றவர்களை எதிர்த்து வீட்டைவிட்டு வெளியேறிவிடுவது போலவே குறிஞ்சியும் வெளியேறிவிட்டாதாக நினைத்தவன்… இந்த பிரபுவும், ஐஸ்வர்யாவும் அப்பொழுதே என்னிடம் வந்து இதைக்குறித்து பேசியிருந்து இருக்கலாம், அப்பொழுதே பிரச்சனையை தீர்த்துவிட்டு இருக்கலாம் என்ற எண்ணம் வேறு அவனுக்குள் எழ…
பிறகு தான் அப்படி எதுவும் சாக்கு கூறிக்கொண்டு தன்னிடம் வரக்கூடாது என்று அவர்களுக்கு நிபந்தனை போட்டது ஈத்தனுக்கு நினைவிற்கு வந்தது… அதில் தன்னிரு கைகளையும் அவன் தன் தலையில் வைக்காத குறை தான்…
அப்பொழுது மதருக்கு மதிய உணவிற்கான அழைப்பு தொலைப்பேசி வாயிலாக வந்து சேர்ந்தது… அதன் பிறகு மதிய ப்ரேயருக்கு வேறு அவர் செல்ல வேண்டும்…
“சாரி மதர் உங்களோட நேரத்தை நிறைய எடுத்துக்கிட்டேன் நினைக்கிறேன்” என்றப்படியே… தன் வாட்சை திருப்பி மணியை பார்த்த ஈத்தனுக்கு ஈஷாவின் நினைப்பு வந்து சேர்ந்து இருந்தது…
“அதெல்லாம் ஒன்னும் இல்லை ஈத்தன். என்னோட நேரத்தை ஒரு நல்ல விஷயத்திற்கு தானே செலவு செய்து இருக்கிறேன். அதுக்காக ஆண்டவருக்கு நான் தான் நன்றி சொல்லனும்…” என்ற மதருடனே…
“தேங்க் யூ சோ மச் மதர்” என்ற வண்ணம் எழுந்துக்கொண்டான் ஈத்தனும்…
ஈத்தனை பார்த்த மதர், “எனக்கு உன்னோட தேங்க்ஸ் வேண்டாம் ஈத்தன். முதல் தடவை என்கிட்ட பேசும் போது சொன்னயே ‘ஈஷாக்கு கூட பிறந்தவங்க யாரும் இல்லை. அம்மாவும் கூட இல்லை. அவளுக்கு நிறைய விஷயங்கள் தெரியலைன்னு’ அந்த கஷ்டம் எதுவும் இனி குழந்தைக்கு இருக்க கூடாது. எல்லாம் பெற்று அவ சந்தோஷமா வாழனும். அதே தான் உனக்கும் குறிஞ்சிக்கும். நடந்து முடிஞ்சதை எல்லாம் விட்டுடலாம். இனி நீ, குறிஞ்சி, ஈஷா எல்லாரும் ஒரே குடும்பமா பிரியாமல் சந்தோஷமா வாழனும். எனக்கு அது தான் ஈத்தன் வேண்டும்” என்று அவர் கூறிக்கொண்டு இருக்கும் போதே…
அவர் கூறியதை கேட்டு அதிர ஆரம்பித்துவிட்ட ஈத்தன், “மதர் நீங்க தப்பா நினைச்சுட்டு இருக்கீங்க. நான் குறிஞ்சியோட வாழ்க்கையை சரி செய்து தர தான் வந்தேன். அவ கூட வாழ இல்லை. நீங்க நினைக்கிறது எப்பவும் நடக்காது…” என்றான் பதறி.
அதை கேட்டு “என்ன பேசுற ஈத்தன் நீ?” என்று அவனை விட அதிகமாக பதறிய மதருக்கே இவ்வளவு நேரம் இருந்த பொறுமை பறந்துவிடும் போல் இருந்தது… கஷ்டப்பட்டு தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு…
“குறிஞ்சிக்கூட நீ சேருவது தான் சரி ஈத்தன். அதுதானே அவளோட விருப்பமும்...” என்றார் பொறுமையாக.
அதற்கு, “என்னால் அது முடியாது மதர்” என்று உறுதியாக கூறிய ஈத்தன், “நான் அவக்கிட்ட பேசி அவளுக்கு புரிய வைக்கிறேன்… நல்ல மாப்பிள்ளையா பார்த்து அவளுக்கு நானே கல்யாணமும் செய்து வைக்கிறேன்…” என்ற ஈத்தன், “உங்களோட ஹெல்ப்பும் அதுக்கு எனக்கு வேண்டும் மதர். இன்னும் கொஞ்சம் நேரத்தில் என் ஆளுங்க சிலர் இங்க வந்துடுவாங்க” என்றவன்… அவனின் பிளான்கள் மொத்தத்தையும் வரிசைப்படுத்த…
திகைத்து விட்டார் மதர்.
“திரும்பவும் தப்பு தான் ஈத்தன் பண்ண பாக்குற நீ” என்றார்.
“என்ன தப்பு மதர்? என்னோட பக்கம் உங்களுக்கு தெரியும் தானே?”, என்றவனை பார்த்த மதர்…
“அதுக்காக நீ பண்ண நினைக்கிறது எல்லாம் சரியாகிடாது ஈத்தன். குறிஞ்சி உன்னோட வொயிஃப். அப்படி தான் அவ நினைச்சு வாழ்ந்துட்டு இருக்கா. எப்படி இன்னொரு கல்யாணம் அவ செய்துப்பா” என்றவர், “இது நீ சம்பந்தப்பட்டது மட்டும் இல்லை. குறிஞ்சியோட விருப்பமும் இதில் இருக்கு. ஈஷாவோட உரிமைகளும் இருக்கு… புரிஞ்சுக்கோ” என்றவர் அவனை விடவே இல்லை.
எவ்வளவோ சொல்லி பார்த்தார்…
ஆனால் ஈத்தனோ, “எனக்கு குறிஞ்சி மேல் அந்த மாதிரியான விருப்பங்கள் எதுவும் இல்லை மதர். ஏற்கனவே குறிஞ்சியோட பன்னிரண்டு வருஷத்தை நான் வீணாக்கிட்டேன்ற கில்டி எனக்கு அதிகமா இருக்கு… மேலும் நீங்க அதை அதிகரிக்க வைக்க வேண்டாம்… நான் சொன்னா குறிஞ்சி நிச்சயம் புரிஞ்சிப்பா… அதேமாதிரி ஈஷாக்கு நான் போதும்… எனக்கும் ஈஷா போதும்… நாங்க நிறைவா தான் வாழ்ந்துட்டு இருக்கோம்” என்றான், என் முடிவில் மாற்றம் எதுவும் இல்லை என்ற தொனியில்…
மொட்டு விட தொடங்கிய காலத்திலேயே, பல காயங்களை தன்னில் சுமந்து, மலராமலேயே போன அவனின் இதயம், மந்திரம் போட்டது போல் எவ்வாறு ஒரே நாளில் மலரும்…
மலர மாட்டேன் என்று விட்டது…
அதிலும் ஈத்தன் ஒன்றும்,
பார்த்ததும் காதலில் விழும், நேற்று மீசை முளைத்த விடலை பையன் இல்லையே…
ஈத்தனிடம் பேசிய பிறகு அவன் பக்க உணர்வுகளும் மதருக்கு புரிய… ஆரம்பக்கட்ட அதிர்ச்சியில் இருந்து முதலில் ஈத்தன் வெளியே வரட்டும்… பிறகு பேசலாம்… மீண்டும் மீண்டும் பேசி அவனின் மறுப்பை நிரந்தரமாக்க வேண்டாம்… குறிஞ்சியும் வரட்டும்… பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தவர்…
வீட்டை பூட்டிக்கொண்டு அவனுடன் மீண்டும் பள்ளிக்கு வந்து சேர…
“பேபி I'm back” என்றப்படியே துள்ளிக்குதித்தப்படி ஈஷாவும் வந்து சேர்ந்தாள்.
🌸 அடுத்த பாகம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻
கருத்துகள்
கருத்துரையிடுக