24.2 சங்கீத வானில் ஓர் அந்திப்போர்
மேலும் ஒருவாரம் ஈத்தனின் வீட்டிற்கு நடந்தும்… அவன் குறித்து எதையும் குறிஞ்சியால் அறிந்துக்கொள்ள முடியவில்லை…
அதிலும் பத்து நாட்களுக்கும் மேலாக ஒரு மனிதன் தன் அலைப்பேசியை உபயோகப்படுத்தவில்லை என்றால் என்னவென்று நினைப்பாள் அவள்?
குறிஞ்சியின் பதட்டம் அதிகரித்துக்கொண்டே சென்றது…
அன்று சனிக்கிழமை…
எப்பொழுதும் போல் வேளையாக எழுந்து கிளம்பி ஈத்தனின் வீட்டிற்கு சென்றவள்… ஓடிச்சென்று செக்யூரிட்டியிடம் விசாரித்தாள்…
‘ஏதோ பெரிதாக பண உதவி தேவைப்படுகிறது போல்… பாவம்… அதனால் தான் விடாமல் வருகின்றாள்’ என்று தான் அங்கு இருந்தவர்கள்… அவளை பற்றி இதுவரை நினைத்து இருந்தார்கள்…
அதில் இவள் வந்ததும் செக்யூரிட்டி, “பாப்பா ஐயா வந்துட்டாங்க… காலை ஃபிளைட்ல வந்தவங்க… கொஞ்சம் நேரம் முன்னாடி தான் வீடு வந்து சேர்ந்தாங்க…” என்று அவள் எதிர்பார்த்த தகவலை கூற…
சட்டென்று ஒரு மலர்ச்சி குறிஞ்சியிடம், “அப்படியா அண்ணா… சார் வந்துட்டாங்களா… சாரை நீங்க பார்த்தீங்களா… எப்படி இருக்கார்… நான் போயிட்டு பார்க்கவா…” என்று அவள் பரபரக்க…
“காருக்குள் இருந்தார் பாப்பா… நான் பார்க்கலை” என்றப்படியே வீட்டு ஒருங்கிணைப்பாளருக்கு அவர் அழைத்து… குறிஞ்சியை உள்ளே விடலாமா என்று அனுமதி கேட்க…
அவரோ, ஈத்தன் இப்பொழுது தான் தூங்க சென்று இருப்பதாக கூறி… உடன் ஈத்தன் யாரையும் வீட்டில் பார்க்க அனுமதிக்க வேண்டாம் என்றுவிட்டதாக கூறியவர்… குறிஞ்சிக்கு அலுவலக முகவரியை கொடுத்து… எதுவும் உதவி வேண்டும் என்றால் அங்கு சென்று கேட்டுக்கொள்ள கூறிவிட்டு வைத்துவிட…
அதனை செக்யூரிட்டி மூலம் அறிந்த குறிஞ்சிக்கு கண்கள் எல்லாம் கலங்கிவிட்டது…
“அண்ணா எனக்கு உதவி எதுவும் வேண்டாம்… சாரை தான் எனக்கு பார்க்கனும்… அதுக்கு தான் வந்தேன்…” என்றவள், “அவர்கிட்ட எனக்கு பேசக்கூட வேண்டாம்… அவர் தூங்கி எழுந்த பிறகு ஜஸ்ட் தூரமா இருந்து… பார்த்துட்டு மட்டுமாவது போயிடறேனே… ப்ளீஸ்… ப்ளீஸ்” என்று தன் சுயம் தொலைத்து அவள் கெஞ்ச…
“சார் சொல்லாமல் எப்படி பாப்பா உன்னை என்னால் விட முடியும்…” என்றவர் உறுதியாக அவளிடம் மறுத்துவிட்டார்…
அதில், சற்று தள்ளிச்சென்று நின்ற குறிஞ்சி… ஈத்தனுக்கு ஃபோனில் தொடர்பு கொள்ள முயன்று… எப்பொழுதும் போல் தோர்த்து… ‘இங்கு வாயிலில் விடமாட்டுகின்றனர்’ என்று அவனுக்கு மெஸேஜ் அனுப்பிவிட்டு… அங்கேயே நின்றுக்கொண்டு இருந்தாள்…
‘என்ன ஆனாலும் சாரை இன்று பார்த்துவிட வேண்டும்… எப்படியும் தூங்கி எழுந்து என் மெஸேஜை பார்த்துவிட்டு என்னை அழைப்பார்’ என்ற நம்பிக்கையில் இருந்தவள்… மருத்துவமனைக்கு அழைத்து விடுமுறையும் கூறிவிட்டாள்…
பாவம் அவளுக்கு தெரியாதே… இரண்டு வாரங்களுக்கு மேலாக ஈத்தனின் ஃபோன் சைலெண்ட்டில்… சூட்கேஸின் உள்ளே பாதுகாப்பாக உறங்கிக்கொண்டிருப்பது…
சில இடங்களில் அன்பான விசாரணைகளும்… அரவணைப்புகளும் கூட… பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் சுமையாகிவிட கூடும்…!
பிரச்சனையிலிருந்து உடனடியாக மீள வழி தேட பார்ப்பார்களா…? இல்லை அதைப் பற்றியே பேசிக்கொண்டு பிரச்சனையிலேயே கிடப்பார்களா…?
அப்படியான நிலையில் தான் ஈத்தனும் இருந்தான்…
குறிஞ்சிப்போலவே தொடர்ந்து நூற்றுக்கணக்கானவர்கள்… அவனை தொடர்ந்து தொடர்பு கொள்ள முயற்சிக்க… மொத்தமாக தூக்கி உள்ளேயே வைத்துவிட்டான்…
தொழில் ரீதியான விஷயங்கள் அனைத்தையும் மேனேஜர் பார்த்துக்கொள்வதால்… அதனால் பிரச்சனையும் அவனுக்கு இல்லை…
குறிஞ்சி கிளம்பாமல் அங்கேயே நிற்பதை பார்த்த செக்யூரிட்டி… வெளிவந்து அவளை கிளம்ப கூற…
“சார் எழுந்ததும் என்னை கூப்பிடுவார் அண்ணா… நான் மெஸேஜ் அனுப்பி இருக்கேன்…” என்றுவிட்டு அங்கேயே பிடிவாதமாக அவள் நிற்க… அவரால் என்ன செய்ய முடியும்…
மதியம் மணி 2…
சென்னை வெயில் மண்டையை பிளக்க…
வியர்வையில் மொத்தமாக நனைந்திருந்தவள்…
கால் மாற்றி… கால் மாற்றி… அங்கேயே தான் இன்னும் நின்றுகொண்டு இருந்தாள்…
ஈத்தன் ஃபோனை எடுத்து பார்த்து, தன்னை உள்ளே அழைப்பான் என்ற நம்பிக்கை, குறிஞ்சியிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடைப்பெற்றுக்கொண்டு சென்று விட்டு இருந்தாலும்…
எப்படியும் வெளியே செல்ல அவன் இந்த வழியை தானே உபயோகிப்பான்… அப்பொழுது காரை நிறுத்தச்சொல்லி பார்த்துவிட்டு செல்லலாம் என்று நின்று இருந்தாள்…
எப்பொழுதும் அவளுக்கு நேரம் தவறாமல் வந்துவிடும் பசிக்கூட இன்று அதிசயமாக வரவில்லை…
நேரம் காலம் பார்க்காமல்… அங்கேயே வெயிலில் காய்ந்துக்கொண்டு கிடந்தாள்…
பயண களைப்பில் நன்கு தூங்கி எழுந்து… குளித்து முடித்து… மூன்று மணியளவில் கீழே இறங்கி வந்த ஈத்தன்… மதிய சாப்பாட்டை முடித்துக்கொண்டு… தோட்டம் பக்கம் செல்லலாம் என்று வெளியே வாசல் பக்கம் வர…
அங்கு, காலையில் நுழைவு வாயிலில் இருந்த செக்யூரிட்டி… தன் ஷிஃப்ட்டை அடுத்த ஆள் வந்ததும் மாற்றிவிட்டு… வேலையை முடித்துக்கொண்டு இருந்தவர்…
குறிஞ்சி இன்னும் அங்கேயே நிற்பதில் மனம் கேட்காமல்…
ஒருயெட்டு வீட்டு ஒருங்கிணைப்பாளரிடம் நேரில் கூறிவிட்டு… வீட்டிற்கு கிளம்பலாம் என்று வந்து பேசிக்கொண்டு இருந்தார்…
ஈத்தனை பார்த்ததும், “ஐயா…” என்று அவர் வணக்கம் வைக்க…
அவர் எப்படி இருக்கிறார் என்று விசாரித்த ஈத்தன்… என்ன விஷயம் என்று கேட்க…
குறிஞ்சியை குறித்து கூறியவர்…
“அந்த பொண்ணு இரண்டு வாரமா தொடர்ந்து வந்து விசாரிக்குதுங்க சார்… இன்னைக்கு நீங்க இங்க இருக்கீங்கன்னு தெரிஞ்சதுல இருந்து… பார்த்தே ஆகனும்னு உறுதியா கேட் கிட்டவே நிற்குது… என்ன தேவைன்னு தெரியலை… போ சொன்னா கூட போகலை... வயசு பொண்ணு… அதான் மனசு கேட்கலைங்க சார்…” என்று கூற…
“காட்… இவ்ளோ நேரம் எதுக்கு வெயிட் பண்ண வச்சீங்க… அதுவும் வெளியே…” என்று அதிர்ந்து போன ஈத்தன்… உடனடியாக சென்று அவளை அழைத்து வர கூறினான்…
மகிழ்ச்சியுடன் சென்ற செக்யூரிட்டி… குறிஞ்சியிடம் விஷயத்தை கூறி… அவளை உடனே உள்ளே அழைத்துக்கொண்டு வர…
வீட்டு ஒருங்கிணைப்பாளர், “சார் கெஸ்ட் ரூம்ல இருக்காங்க ம்மா… வாங்க” என்று அவளை அழைத்துக்சென்று விருந்தினர் அறையில் விட்டுவிட்டு வெளியேற…
அந்த இடம் முழுவதும் கமழும் ஈத்தனின் வாசத்தை சுவாசித்தப்படியே… விடுவிடுவென்று உள்ளே நுழைந்த குறிஞ்சி…
அங்கு அவளை பார்த்து “ஹாய் குறிஞ்சி…” என்று புன்னகைத்தப்படி அமர்ந்திருந்த ஈத்தனை பார்த்து… அப்படியே நின்று விட்டாள்…
எப்படியெல்லாம் அவனை தேடினாள்…
அவளின் சோர்ந்த தோற்றம் பார்த்து…
“சாரி ம்மா… ரொம்ப வெயிட் பண்ண வச்சிட்டேன்… அம்மா எப்படி இருக்காங்க… ஹெல்ப் எதுவும் தேவையா…” என்று ஈத்தன் விசாரிக்க…
பதில் சொல்ல முற்பட்டவளுக்கு… பேச்சே வரவில்லை…
இல்லை என்னும் விதமாக தலையாட்டியவளின்… கண்கள் இரண்டும் குளமாகி… சரசரவென நீரை கொட்ட…
அவளை மீறி வெளிவர பார்த்த கேவலை… பட்டென்று தன்னிரு கரங்களால் வாயினை மூடி தடுத்து இருந்தாள் குறிஞ்சி…
அவளின் அச்செய்கையில் முற்றிலும் அதிர்ந்துப்போன ஈத்தன்…
“என்ன கேர்ள் ஆச்சு… எதுவும் பிரச்சனையா… அம்மா ஓகே தானே மா” என்றப்படியே பதறி அவளை நெருங்க…
“அம்மா நல்லா இருக்காங்க…” என்று அழுதப்படியே கூறியவள்…
“நீங்க ஏன் நான் ஃபோன் போட்டா எடுக்கலை… மெஸேஜுக்கும் ரிப்ளே அனுப்பலை… நான் ரொம்ப பயந்துட்டேன்…” என்று அழ…
அடுத்த அடியை வைக்க மறந்து, அப்படியே நின்று விட்டு இருந்தான் ஈத்தன்…
📌அடுத்த பாகம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻
கருத்துகள்
கருத்துரையிடுக