சங்கீதம்-25.2
மறுநாள் ஈத்தனின் வீட்டிற்கு குறிஞ்சி... பிரபு மற்றும் ஐஸ்வர்யாவுடன் செல்ல…
முன்பு குறிஞ்சியை அப்படியே அனுமதித்தது போல் இம்முறை அப்படியே அவளை அவர்கள் அனுமதிக்கவில்லை…
மூவரிடம் இருந்தும் ஃபோன் முதற்கொண்டு அனைத்தையும் வாங்கி வைத்துக்கொண்டவர்கள்… அவர்களை நன்கு பரிசோதித்துவிட்டு… வீட்டின் பின்புறம் இருந்த கெஸ்ட் ஹவுஸிற்கு அழைத்துச்சென்று விட்டுவிட்டு வர…
அதன் பிரமாண்டத்திலேயே ஐஸ்வர்யா தன் திறந்த வாயை மூடவில்லை… வெளியில் காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் பிரபுவும் அதே மனநிலையில் தான் இருந்தான்…
அனைவருக்கும் சிற்றுண்டிகள் வேறு பரிமாறப்பட…
குறிஞ்சி எதையும் தொடக்கூட இல்லை…
“கடவுளே… எப்படியோ இவ்ளோ தூரம் கொண்டு வந்து விட்டுட்டிங்க… ப்ளீஸ்… மீதியையும் நல்லபடியா முடிச்சு கொடுத்துடுங்க…”, என்ற வேண்டுதலுடன் அமர்ந்து இருக்க…
அரைமணி நேரத்திற்கு பிறகு அங்கு வந்து சேர்ந்த ஈத்தன்… அனைவரையும் முறையாக வரவேற்றுவிட்டு அமர்ந்தவன்… நேரடியாக விஷயத்திற்கு வந்துவிட்டு இருந்தான்…
குறிஞ்சி சொன்னதையே தான் அவனும் கூறி… சம்மதமா என்று அனுமதி கேட்க…
ஐஸ்வர்யா, “எங்களுக்கு இதில் பரிபூர்ண சம்மதம் ஈத்தன் சார்… என் தங்கச்சி இவ்வளோ பெரிய நல்ல காரியம் செய்யும் போது, நாங்க எப்படி சார் அதை தடுப்போம்… எங்க பெரியம்மாக்கு எவ்வளவு பெரிய உதவியை நீங்க செய்திருக்கீங்க… நீங்க சந்தோஷமா இருக்க இதைக்கூட நாங்க செய்ய மாட்டோமா சார்…”, என்று பிரபு சொல்லிக்கொடுத்தப்படியே அவள் பெருந்தன்மையாக பேச…
‘குறிஞ்சி மட்டும் இல்லை… அவள் குடும்பத்தில் இருக்கும்எல்லாருமே pure soul தான் போல…’ என்று ஈத்தன் மனதுக்குள் வியந்து போனான்…
உடன் பிரபுவும், “நீங்க எதுக்கும் பயப்பட வேண்டாம் சார்… குறிஞ்சிக்கு நாங்க பார்த்திருக்கும் மாப்பிள்ளை கிட்டத்தட்ட எனக்கு சொந்த தம்பி மாதிரி தான்… நல்ல பழக்கம் எங்களுக்குள்ளே… ரொம்ப நல்ல டைப் அவன்…
நேத்து குறிஞ்சி எங்கக்கிட்ட இதை சொன்னதும் அவனை கூப்பிட்டு தான் நான் முதலில் பேசினேன்… ‘என்ன ண்ணா… நான் என்ன சொல்ல போறேன் இதுக்கு… இப்ப தான் எனக்கு குறிஞ்சியை ரொம்ப பிடிக்குது… தாராளமா இதை பண்ணுங்க… அதுக்கு அப்புறம் எங்க கல்யாணத்தை வச்சிக்கலாம்… என்கிட்ட இதையெல்லாம் நீங்க சொல்லனும்னு அவசியமில்லை’ ன்னு சொல்லிட்டான் சார்…” என்று அவன் பங்கிற்கு கூற…
மேலும் சிலவற்றை பேசிய ஈத்தன், குறிஞ்சியிடம் இறுதியாக ஒருமுறை ‘உனக்கு சம்மதமா… நான் வேலைகளை ஆரம்பிக்கவா…’ என்று கேட்டுக்கொண்டு அவர்களை அனுப்பி வைத்திருந்திருந்தான்…
இனி இவ்விஷயத்தில் தீவிரமாக இறங்கிவிடுவது என்று முடிவெடுத்துவிட்டு இருந்தவன்…
அதில் முதல் படியாக, நம்பிக்கையான வழக்கறிஞர் ஒருவரை நேரில் சென்று பார்த்து பேசியவன்… அவருடன் சேர்ந்து சட்டத்தில் இருக்கும் ஓட்டைகள் எல்லாவற்றையும் கண்டறிந்து… அதனை எப்படி எல்லாம் தன் விஷயத்திற்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளலாம்… என்று கலந்தாலோசிக்க…
வழக்கறிஞர், “நிச்சயம் மேரேஜை ரெஜிஸ்டர் செய்து இருக்கனும் ஈத்தன்… சொசைட்டில உங்களோட ஒவ்வொரு ஸ்டெப்பும் பல பேரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுட்டே இருக்கும்… திடீர்னு குழந்தை எங்க இருந்து வந்ததுன்னு எல்லா பக்கம் இருந்தும் கிளம்பிடுவானுங்க… நம்ம கையில் ஆதாரம் இருந்தே ஆகனும்…”, என்றவர், “எதுக்கு வீண் பிரச்சனைக்கு நாம இடம் கொடுக்கனும்… ஜஸ்ட் சின்ன ஃபார்மால்டி தானே… மேரேஜ ரெஜிஸ்டர் பண்ணிடலாம்…” என்று உறுதியாக கூறிவிட…
அதிலேயே, ‘காட்… எத்தனை தடங்கல்கள்’ என்றாகி போனது ஈத்தனுக்கு…
நிச்சயம் குறிஞ்சி இதற்கு சம்மதிப்பாள் என்று அவனுக்கு தோன்றவில்லை…
ஆனால் சம்மதித்தால் நன்றாக இருக்கும் என்றும் இருந்தது…
தன் லட்டு குட்டி, குறிஞ்சி போன்ற ஒரு நல்ல மனம் படைத்த பெண்ணின் வயிற்றில் வளர வேண்டும் என்ற ஆசை அவனுக்குள் ஏற்கனவே மெல்ல வேர்விட்டிருந்த நிலையில்…
எத்தனை சிக்கல்கள்…
வழக்கறிஞரிடம் வேறெதுவும் செய்ய முடியுமா என்று பார்க்க ஈத்தன் கூற…
சமீபத்தில் ஒரு நடிகைக்கும், இயக்குனருக்கும் வாடகை தாய் மூலம் குழந்தை பிறந்ததும்… அதற்கு சமுதாயத்தில் வந்த எதிர்ப்புகளும், அதனால் அவர்களுக்கு வந்த சட்ட சிக்கல்களையும்… எடுத்துக்கூறிய வழக்கறிஞர்,
திருமண பதிவு முறை ஒன்று தான் அவனுக்கும் பாதுகாப்பானது… நாளை குழந்தைக்கும் நல்லது…
இல்லையென்றால் தேவையற்ற சட்ட ரீதியான பிரச்சனைகளும்… மனவுளைச்சல்களும் வரும்… என்றவர்.
குழந்தை பிறந்தப்பிறகு அந்த திருமண பதிவில் இருந்து… எப்படி அவன் வெளியே வருவது என்பதற்கான வழிமுறைகளையும் அவனுக்கு வகுத்து தர…
யோசித்து தன் முடிவை கூறுவதாக கூறிவிட்டு வீடு திரும்பிய ஈத்தன்…
மேலும் நான்கு நாட்கள் கடந்தும் எந்த முடிவையும் எடுக்கவில்லை…
இன்று அழைப்பான்… நாளை அழைப்பான்… என்று அவனுக்காக அவ்வாரம் முழுவதும் காத்துக்கொண்டு இருந்த குறிஞ்சி…
சனிக்கிழமை இரவு பணி முடிந்து, சாந்தினி இருக்கும் மருத்துவமனைக்கு திரும்பி இருந்தவள்… இறுதியில் அவளே அவனுக்கு அழைத்துவிட்டு இருந்தாள்…
இரண்டு மூன்று ரிங்கிலேயே ஈத்தன் அழைப்பை ஏற்றுவிட்டான்…
“நான் குறிஞ்சி பேசறேன் சார். எப்படி இருக்கீங்க…?” என்று எடுத்ததும் அவனை அவள் விசாரிக்க…
“ஐ’யம் குட் குறிஞ்சி. நீ எப்படி இருக்க?” என்று ஈத்தன் விசாரித்தான்.
“நான் நல்லா இருக்கேன் சார்…” என்ற குறிஞ்சி… “நீங்க கூப்பிடறேன்னு சொல்லி இருந்தீங்களே…” என்று இழுக்க…
“எஸ்…” என்ற ஈத்தன்… “நீ இப்ப எங்க இருக்க குறிஞ்சி” என்று கேட்டுவிட்டு வைத்தவன்… அடுத்த பதினைந்து நிமிடத்தில் மருத்துவ வளாகத்தின் பார்க்கிங்கில் இருந்து… குறிஞ்சியை தன் காரில் பிக்-கப் செய்துக்கொண்டு இருந்தான்…
முதல் முறை, அதுவும் ஒரு அந்நிய ஆணுடன், தனியாக பயணம் செய்வதில் உண்டான சிறு தயக்கத்துடன் காரில் ஏறிய குறிஞ்சியை…
அந்த இரவு நேரத்திலும் புழுங்கி தள்ளும் சிட்டியின் சீதோஷ்ண நிலைக்கு முற்றிலும் எதிர்பதமான நிலையில், அதிக குளிர்ச்சியாக இருந்த அந்த காரும்…
தாயின் மடிப்போல் மெத்தென்று சுகமாக அதில் இருந்த லெதர் இருக்கையும் உள்வாங்கிக்கொள்ள…
அவள் நடந்து வரும் பொழுதே அவள் முகம் பார்த்திருந்த ஈத்தன், “சாரி ம்மா… ரொம்ப டயர்டா இருக்க போல… நாளைக்கு பேசலாமா நாம…” என்றான்…
அதில், “அச்சோ அப்படியெல்லாம் எதுவும் இல்லைங்க சார்… முகம் கழுவலை அதான் கொஞ்சம் டல்லா தெரியறேன்…”, என்ற குறிஞ்சி… “நாம இப்பவே பேசலாம்…”, என்றவள் தன் தயக்கத்தை விலக்கி வைத்துவிட்டு அவனுடன் பேச…
“கூல்…” என்ற ஈத்தன்.. காரை அப்படியே பார்க்கிங்கில் இருந்து எடுத்து இருந்தான்…
ஈத்தன் ஒருக்கையினை மட்டுமே ஸ்டீயரிங்கில் வைத்து… சிறு அதிர்வும் அற்று… லாவகமாக காரினை செலுத்த… அதை உன்னிப்பாக பார்த்தப்படியே அமைதியாக அமர்ந்திருந்த குறிஞ்சி…
கார் சற்று டிராஃபிக் விட்டு விலகி சீராக செல்ல தொடங்கியதும்…
“ஏன் சார் எதுவும் பிரச்சனைங்களா…” என்று கேட்டாள்…
“எஸ்… எல்லாமோ பிரச்சனையா தான் இருக்கு…” என்று நேரடியாக கூறிய ஈத்தன்… வழக்கறிஞர் கூறியதை எல்லாம் குறிஞ்சியிடம் பகிர்ந்து முடிக்க…
“இதில் எது சார் பிரச்சனை…”, என்று கேட்டு இருந்தாள் குறிஞ்சி…
அதற்கு, “வாட்…” என்று அதிர்ந்திருந்த ஈத்தன், “என்ன கேர்ள் தூங்கிட்டயா…?” என்றவன், மீண்டும் ஒருமுறை அனைத்தையும் கூறி, “மேரேஜ் ரெஜிஸ்ட்ரேஷன் செய்தே ஆகனும்னு லாயர் சொல்றார் குறிஞ்சி… அதான் பிராப்ளம்… நான் அன்னைக்கு சொன்ன மாதிரி யூ.எஸ் தான் பெட்டர் ஆப்ஷன்”, என்றான்…
அதற்கு, “ஏன் சார்… என்மேல நம்பிக்கை இல்லையா… நான் எதுவும் பிரச்சனை பண்ணிடுவேன்னு நினைக்கறீங்களா…”, என்ற குறிஞ்சி… “லாயர் தான் திரும்ப ஆறு மாசத்திலேயே கல்யாணத்தை கேன்சல் பண்ணிடலாம்னு சொல்றாங்களே சார்…? நான் வேண்டும்னா முன்னாடியே உங்களுக்கு கையெழுத்து போட்டு கொடுத்துடறேன்… எத்தனை இடத்தில் வேண்டும்னாலும் வாங்கிக்கோங்க” என்றுக்கூற…
“என்ன கேர்ள் சொல்ற நீ… அப்ப மேரேஜ் ரெஜிஸ்ட்ரேஷன் உனக்கு ஓகேவா…” என்று ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியுடன் கேட்ட ஈத்தனை…
‘குழந்தையே பெத்து தர போறேன்… இதுல ஒரு கையெழுத்து போட மாட்டேனா…’, என்று எண்ணும் ரீதியாக அவனை ஒரு பார்வை பார்த்துவைத்த குறிஞ்சி…
“எனக்கு எந்த பிரச்சனையும் இல்லைங்க சார்… நீங்க சீக்கிரம் வேலையை ஆரம்பிங்க…” என்றுவிட்டாள்..
ஊசியே தாராளமாக ‘நுழைந்துக்கொள்’ என்று இடம் கொடுத்த பிறகு… நூலிற்கு என்ன கவலை…
செய்யவிருக்கும் விஷயம் தவறு என்று நன்கு தெரிந்தே… அதை சரியாக செய்ய துணிந்துவிட்டு இருந்தான் ஈத்தன்…
________________________________
❤️அடுத்த அத்தியாயம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻
கருத்துகள்
கருத்துரையிடுக