20.1 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🪻
அத்தியாயம் -20
குறிஞ்சி ஆவலாய் எதிர்பார்த்திருந்த மருத்துவ அறிக்கைகள் அனைத்தும் வந்துவிட்டதாக வந்து கூறிய செவிலியர், அதைக் குறித்து கலந்தாலோசிக்க என்று குறிஞ்சியை கான்ஃபரென்ஸ் ஹாலிற்கு அழைத்துச்செல்ல…
அங்கு நீள்வட்ட மேஜையை சுற்றி ஐந்து மருத்துவர்கள் அமர்ந்திருந்தார்கள்.
குறிஞ்சி அமர்ந்ததும், அதிலிருந்த முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணரும், நரம்பியல் நிபுணரும், அவளிடம் ஒவ்வொரு ரிப்போர்ட்டாக காட்டி, சாந்தினியின் உடல் இருக்கும் நிலைமையை விளக்க ஆரம்பித்தார்கள்…
சாந்தினிக்கு அடிப்பட்டு ஒருவருடம் கடந்து விட்ட நிலையில், முதுகு தண்டுவட செல்களில் ஏகப்பட்டவை பாதிப்படைந்துவிட்டதாக கூறியவர்கள்… மேலும் அதை தொடர விடாமல் தடுக்க, உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டும்… இல்லையெனில் மற்ற உறுப்புகளும் ஒவ்வொன்றாக உணர்வுகளை இழந்து செயலிழந்து விடும்… என்றவர்கள்…
அறுவை சிகிச்சை மட்டுமின்றி, முதுகில் இறந்த செல்களை புதுப்பிக்க… அவரின் உடலில் இருந்தே ஸ்டெம் செல்களை, எலும்பு மஜ்ஜை(bone marrow) மற்றும் ரத்தத்தில் இருந்து பிரித்தெடுத்து, முதுகு தண்டில் செலுத்த வேண்டும்…
அப்படி செய்தால் தான் பழையப்படி அவரின் முதுகு தண்டுவடம் பலம் பெறும், என்றார்கள்…
அதைத்தொடர்ந்து அவர் படுக்கையில் இருந்து எழுந்து அமர, நிற்க, நடக்க என அனைத்திற்கும் தொடர்ந்து பிசியோ தெரப்பி, ஆக்குபேஷனல் தெரப்பி, பெயின் மேனேஜ்மென்ட் போன்று பல தெரப்பிகள் குறைந்தது ஒன்று முதல் ஒன்றரை வருடத்திற்கு தர வேண்டும்…. என்று அனைத்தையும் ஒவ்வொரு பிரிவு மருத்துவர்களும் குறிஞ்சிக்கு விளக்கி முடிக்க…
அனைத்தையும் கவனமாக கேட்டுக்கொண்டிருந்த குறிஞ்சி, ‘இத்தனை இருக்கிறதா’ என்ற மலைப்பில் இருந்து மீள்வதற்கு முன்பு…
இதற்கெல்லாம் மொத்தமாக எவ்வளவு செலவு ஆகும் என்று அவளுக்கு ஒரு மாதிரி பில்லினை(sample estimation) மருத்துவ குழு தர…
அதனை வாங்கி பார்த்த குறிஞ்சியின் முகம் அப்படி அதிர்ந்துப்போனது…
மருத்துவ துறையில் இருப்பதால், அவர்கள் சொன்ன சிகிச்சைகளும், அதன் முக்கியத்துவமும் அவளுக்கு தெளிவாகவே விளங்கி இருந்தாலும், அவர்கள் அதற்கு கட்டணமாக கூறிய, 75 லட்சம் என்பது குறிஞ்சியின் முதுகு தண்டினை உறைய வைத்து இருந்தது…
ஒரு சாதாரண தனியார் மருத்துவமனை செவிலியரான அவள், தன் வாழ்நாள் மொத்தமாக பெரும், சம்பாத்தியம் அனைத்தையும் சோர்த்தால் கூட அத்தொகை எட்டாக்கனியே…
அவள், முன்பு காட்டி விசாரித்திருந்த தனியார் மருத்துவமனையில், ஒரு வருடத்திற்கு முன்பு சொன்ன 10 லட்சம் ரூபாய்க்கே அவள் நாய் படாத பாடு பட்டும், ஒன்றும் தேற்ற முடியாது, இறுதியில் எப்படியோ ஈத்தனை பிடித்து உதவி வாங்கி என்று இவ்வளவு தூரம் வந்துவிட்டு இருக்க…
இப்பொழுதோ 7 மடங்கு அதைவிட கூடுதலாக கட்டணத்தை கூறினால் என்ன செய்வது…
ஈத்தனிடம் அவள் கேட்டிருந்ததும் 10 லட்சம் ரூபாய் தான்… அதையும் தாண்டி அவன் கையில் 5 லட்சம் கூடுதலாக கொடுத்துவிட்டதில், அவ்வளவு தைரியமாக இருந்தாள்…
இப்பொழுதோ?
கையில் இருந்த காகித்தை பார்த்தப்படியே இருந்த அவளுடைய கண்கள் மெல்ல கலங்க ஆரம்பிக்க… அதனை உள்ளிழுத்து அடக்க பார்த்தவளின் கரங்களில் எல்லாம் வெளிப்படையாகவே அவ்வளவு நடுக்கம்…
எவ்வளவு அடியை தான் அவளும் தாங்குவாள்…
அவளின் நிதி நிலைமை தெரிந்ததினால் தான் முன்பே மருத்துவர் செலவுகள் குறித்து கூறிவிட்டு இருந்தார்…
பல்லை கடித்து தன்னை கட்டுப்படுத்திக்கொண்ட குறிஞ்சி, “இதெல்லாம் பண்ணா… அம்மாக்கு உடம்பு பழையப்படி சரியாகிடுமா டாக்டர்… வலியெல்லாம் போயிடுமா” என்று கேட்க…
“இவ்வளவு சிக்கலான கேசில், ரிஸ்க் ஃபேக்டர் இல்லாமல் எப்படி இருக்கும், மிஸ் குறிஞ்சி”, என்ற சீஃப் மருத்துவர்…
அடுத்தடுத்து சொன்னவைகளை கேட்ட குறிஞ்சிக்கு வாழ்க்கையே வெறுத்துப்போனது…
‘இதை தானே இவர்கள் வந்த உடனே கூறி இருக்க வேண்டும்’ என்று நினைத்தவளுக்கு… ‘எதற்கடா ஈத்தனை பார்த்தோம்… எதற்கடா இந்த மருத்துவமனைக்கு வந்தோம்’ என்று ஆகிவிட்டது…
அந்தளவிற்கு மனம் அவளுக்கு விட்டுப்போக…
“அம்மாவை டிஸ்சார்ஜ் பண்ணிடுங்க டாக்டர்… நான் கூட்டிட்டு போயிடறேன்” என்றுவிட்டு… எழுந்து வெளிவந்தவள்… அங்கிருந்த கழிவறைக்குள் ஓடிச்சென்று அடக்கி வைத்திருந்த உணர்வுகளை அதற்கு மேல் அடக்க முடியாது… வெடித்து அழ ஆரம்பித்து இருந்தாள்…
வாழ்க்கையில் எப்பொழுதாவது, ஓரிரு நாட்கள் கெட்ட கனவுகள் வரலாம், சரியென்று அதை பொறுத்தும் கொள்ளலாம்…
ஆனால் இங்கு, இவளுக்கு மொத்த வாழ்க்கையுமே கெட்ட கனவாகவே இருந்தால். எப்படி?
சாந்தினிக்கு செய்யப்போகும் அறுவை சிகிச்சையை முடிக்க குறைந்தது 12 மணி நேரமாவது பிடிக்கும் என்றிருந்த மருத்துவர்கள்… அவரின் உடல் அதுவரைக்கும் தாங்குமா என்பதில் உறுதியாக இல்லை…
அதுமட்டுமின்றி ஏற்றப்படும் ஸ்டெம் செல்களும், எந்தளவிற்கு வெற்றிகரமாக பொருந்தும் என்பதும், அவரின் உடல்நிலையை பொறுத்து தான்… பொருந்தவில்லை என்றால் மீண்டும் அவர் படுக்கையில் தான்…
எனவே சக்ஸஸ் ரேட் என்பது 30 சதவீதத்திற்கும் குறைவு என்று கூறிவிட…
எவ்வாறு அவளால் அவ்வளவு பெரிய ரிஸ்க் எடுக்க முடியும்…
எதுவுமே வேண்டாம்…
இப்பொழுது இருப்பது போலவாவது… அம்மா என்னுடன் உயிருடனாவது இருக்கட்டும்… என்ற முடிவுக்கு வந்துவிட்டவளிடம்…
இப்படியே விட்டால், உன் அம்மா அதிகபட்சமாக மூன்றிலிருந்து ஆறு மாதங்கள் தான் இருப்பார்கள்… அதுவும் சந்தேகம் தான்… அதுவரையுமே அவரின் மற்ற உடல் உறுப்புகள் தாங்குமா தெரியாது… அதைவிட நாளுக்கு நாள் வலியும் அதிகரித்துக்கொண்டே இருக்கும்… அதற்கு ஆப்ரேஷன் செய்து என்னவென்று பார்த்துவிடலாம் என்று கூற… என்ன முடிவெடுப்பாள் அவள்…
இருதலைக்கொள்ளி எறும்புப் போல் அவள் நிலையாகிவிட்டது…
அறுவை சிகிச்சை செய்தாலும் பிரச்சனை… செய்யாவிட்டாலும் பிரச்சனை…
என்ன இருந்தாலும்… இன்றே அன்னையை தூக்கிக்கொடுக்க அவளுக்கு மனம் வரவில்லை…
அதில் யோசித்து முடிவெடுக்கலாம் என்று உறுதியாக “டிஸ்சார்ஜ் பண்ணிடுங்க டாக்டர்” என்று விட்டாள்.
அவ்வளவு சொத்து, பேர், புகழ் இருக்கும் 23 வயது ஈத்தனாலேயே அவன் பாட்டியின் பிரிவை ஏற்க முடியாத பொழுது…
தன்னுடைய ஒரே சொத்தான அன்னையை, வெறும் இருபத்தியொரு வயது குறிஞ்சியால் எப்படி விட முடியும்…
அதைவிட அவர்கள் கூறிய அந்த 30 சதவீத வாய்ப்பில், அதிர்ஷ்ட வசமாக, சாந்தினியின் உடல் அறுவை சிகிச்சையை கடந்து வந்து வெற்றிப்பெற்றாலும், அவர்கள் கூறிய தொடர் சிகிச்சைகளை அவளால் நிச்சயம் கொடுக்க முடியாதே… அதில் ஏதாவது புது சிக்கல் வந்துவிட்டால்…?
காலம் கடந்து விதைத்த விதை போல்… காலம் கடந்து கிடைத்த பணமும்… இங்கு அதன் தன்மையை இழந்துவிட்டது…
நீண்ட நேரம் கழிவறைக்குள்ளேயே இருக்கும், கைக்கழுவும் இடத்தில் நின்று அழுதுக்கொண்டு இருந்தவள்… உள்ளே யாரோ வரும் சத்தம் கேட்டு அழுகையை நிறுத்தி… அவர்கள் உள்ளே வரவும்… முகத்தை நீரில் கழுவிக்கொண்டு… சாந்தினி இருக்கும் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்…
என்ன கட்டுபடுத்தியும்… கண்களில் இருந்து வழியும் நீர் மட்டும் நிற்கவே இல்லை… துடைத்துவிட்டுக்கொண்டே இருந்தாள்…
அங்கு அதற்குள்ளே சாந்தினியை டிஸ்சார்ஜ் செய்ய தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மருத்துவமனை பார்த்துவிட்டு இருந்தது…
அவரின் அனைத்து ரிப்போர்ட்களுடன், இதுவரை மருத்துவமனை அவருக்கு கொடுத்திருந்த சிகிச்சைக்கு கட்ட வேண்டிய கட்டணத்திற்கான ரசீதும் வைத்து, குறிஞ்சியிடம் தந்தனர்…
அதில் இருந்த தொகையை பார்த்த குறிஞ்சிக்கு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை…
சென்னையில் முக்கிய பகுதில் இருக்கும், நம்பர் ஒன் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை என்றால் சும்மாவா… இருந்த அனைத்து டெஸ்ட்களையும் எடுத்து, பில்லினை தீட்டி விட்டு இருந்தார்கள்…
ஈத்தன் கொடுத்து விட்டிருந்த ஐந்து லட்சம் ரூபாயுடன், தனக்கு அன்று தான் போடப்பட்டிருந்த சம்பளத்தில் இருந்து 6000 ரூபாயை எடுத்து சேர்த்து கட்டிவிட்டு வந்தவள்…
பிரபுவிற்கு தொலைப்பேசியில் அழைத்து, நாளை காலை 10 மணிக்கு வீட்டிற்கு கிளம்ப வேண்டும் என்று கூறி உதவி கேட்க…
என்ன ஆனது? ஏது ஆனது? என்று அனைத்தையும் கேட்டுக்கொண்டவன்… “உன்னை யாரு இந்த வேலையெல்லாம் பார்க்க சொன்னது… இதுக்கு மேல அவங்க வாழ்ந்து என்ன பண்ண போறாங்க…”, என்று திட்டிவிட்டு, “உன் அம்மாவை தூக்குற வேலையை பார்க்க தான் என்னை பெத்துவிட்டு இருக்காங்களா… நேரம் இருந்தா வர பார்க்கிறேன்” என்றுக்கூறி வைத்துவிட்டான்…
அதில், பிரபு நாளை வரவில்லை என்று கூறிவிட்டால் என்ன செய்வது… இங்கிருந்து மருத்துவமனை ஊழியர்கள் உதவியுடன் வண்டியில் ஏற்றிவிடலாம்… ஆனால் வண்டியில் இருந்து இறக்கி வீட்டிற்குள் தூக்கிச்செல்ல உதவி வேண்டுமே, ட்ரைவர் மட்டும் போதாதே, என்ற யோசனையில் தலையில் கை வைத்து அவள் அமர்ந்துவிட…
ஈத்தனின் ட்ரஸ்ட் மேனேஜர் அங்கு வந்து சேர்ந்தார்…
🔴 அடுத்த பாகம் படிக்க கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻
சூப்பர் சிஸ் 💐
பதிலளிநீக்கு