11.1 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🎼🪻😘
அத்தியாயம் -11
அவள் அறையில் இருந்த படுக்கையில் அவளை படுக்க வைத்த ஈத்தன், “போதும் குறிஞ்சி நீ நடிச்சது எல்லாம்… கண்ணை திற” என்றான் அழுத்தமாக.
அதில் தொண்டை குழி ஏறியிறங்க படுத்திருந்தவள்… அப்பொழுதும் தன் கண்களை திறக்கவேயில்லை…
அதில் மேலும் சில வினாடிகள் பொறுத்துப் பார்த்தவனுக்கு, மீண்டும் மீண்டும் தோன்றியது ஒரே கேள்வி தான், ‘குறிஞ்சியா இப்படி?’ என்பது தான். அவனறிந்த குறிஞ்சி முற்றிலும் வேறானவள். மழைத்துளி போல் சிறிதும் மாசு கலக்காதவள்.
ஆனால் இன்று அவன் கண்முன் இருப்பவளோ, பொய்காரி, நடிப்புகாரி...
இப்படியே எண்ணங்கள் பயணிக்க, தன் எண்ணத்தின் போக்கில் அதிர்ந்த ஈத்தன், சட்டென்று தன் தலையை குலுக்கிக்கொண்டான்…
என்ன தான் இருந்தாலும், அவனால் அவளை அப்படி எல்லாம் மனதினுள்ளே கூட நினைத்து பார்க்க முடியவில்லை…
பிடிக்கவுமில்லை…
நிச்சயம் குறிஞ்சி அப்படி கிடையாது என்று அவன் மனமே அவனுக்கு எதிராக திரும்பிவிட…
ஒரு பெருமூச்சை வெளியிட்டவன், குறிஞ்சியை நெருங்கி, “நான் இப்ப ரூம் விட்டு வெளியே போறேன் குறிஞ்சி. டாக்டர் வந்து உன்னை பார்த்துட்டு போற வரைக்கும் நான் கண்டிப்பா உள்ளே வர மாட்டேன். ரிலாக்ஸா இரு. நாம் பிறகு பேசலாம்” என்றவன், கதவை சற்று சத்தமாகவே அவளுக்கு கேட்கும் வண்ணம் சாத்திவிட்டு சென்றுவிட…
அப்போதும் குறிஞ்சி தன் கண்களை இறுக மூடிக்கொண்டு தான் கிடந்தாள்.
அறை முழுவதும் நிறைந்திருந்த ஈத்தனின் வாசம், கொஞ்சம் கொஞ்சமாக குறைந்த பிறகு தான், தன் கண்களை திறந்தாள்.
திருடனுக்கு தேள் கொட்டியது போல் இருந்தது அவளுக்கு அவள் நிலைமை.
மெல்ல எழுந்தமர்ந்தவளுக்கு உடல் முழுவதிலும் ஆங்காங்கே வலி தெரிந்தது.
அதிலும் இடுப்பு பகுதியில் சற்று கூடுதலான வலி…
இருந்தும் அதைப்பற்றி எல்லாம் அவள் மூளை நினைக்கவோ, பரிசோதிக்கவோ முற்படவில்லை.
எப்படி இதில் இருந்து மீள்வது என்பதில் தான் அவளின் மொத்த சிந்தனையும்.
அதிலும் ஈத்தனின் மனநிலையை அந்நியாயமாக கெடுத்துவிட்டோமே என்ற எண்ணம் மேலெழுந்ததும், குறிஞ்சிக்கு கண்கள் தானாக கலங்க தொடங்கிவிட்டது…
உடன், ‘ஏமாத்துக்காரி… துரோகி… என்றெல்லாம் நொடியில் கூறிவிட்டாரே… அவ்வளவு தான் என் மீது அவருக்கு நம்பிக்கையா’ என்று மனம் வெதும்பியவள்…
எப்பொழுதும் போல், ‘அவர் இடத்தில் இருந்து பார்க்கும் போது அப்படி தானே தெரியும். பாவம் அவர் என்ன செய்வார்’ என்று அவனுக்கு ஆதரவாக பேசி, தன்னை தானே சரிக்கட்டிக்கொண்டவளுக்கு, ‘அடுத்து என்ன…?’ என்ற கேள்வி பூதாகரமாக மனதில் தோன்றி பயமுறுத்த ஆரம்பித்தது.
‘நாம் பிறகு பேசலாம்’ என்றுவிட்டு வேறு சென்று இருந்தானே…
இதற்கே அந்தளவிற்கு எகிறிக்கொண்டு(அவளை பொருத்தவரை) வந்த ஈத்தன் மற்றவற்றை எல்லாம் அறிந்தால்…!
ஆரம்பத்தில் கோபப்பட்டாலும்… தன்னை தவறாக நினைத்தாலும்… பிறகு நிச்சயம் நிறைய வருத்தப்படுவான்… மன உளைச்சலுக்கு ஆளாவான்… என்பது குறிஞ்சிக்கு நிச்சயமாக தெரியும்…
அதில், அவனுக்கு மகிழ்ச்சியை மட்டுமே கொடுக்க நினைத்தவளுக்கு, தானே அதை கெடுத்துவிட்டதை நினைத்து நினைத்து நெஞ்சமெல்லாம் ரணமாகிப்போனது.
நடந்து முடிந்ததை மாற்றும் சக்தியும் அவளிடம் இல்லை. அதிலிருந்து மீளும் வழியும் அவளின் கண்களுக்கு புலப்படவில்லை!
அதில் ஈஷாவின் மீது உணர்ச்சிவசப்பட்டு, தான் இங்கு வந்து செய்த தவறில், தன் தலையில் தானே அடித்துக்கொண்டாள்…
அனைத்தையும் சரியாக செய்துவிட்டோம்… மாட்ட வாய்ப்பே இல்லை என்று நினைத்து… பன்னிரண்டு ஆண்டு காலமாக வாழ்ந்து வந்தவளின் வாழ்க்கை… நொடியில் அர்த்தமே அற்றதாகிப்போனதே…!
நொடிநேர தடுமாற்றம் அவளை எங்கோ கொண்டு வந்து நிறுத்திவிட்டு இருந்தது…
சரியென்று தன் கண்களையும் முகத்தையும் அழுந்த துடைத்தவள் மனதினுள், எக்காரணம் கொண்டும் மீதி எதுவும் ஈத்தனுக்கு தெரிந்துவிடவேக்கூடாது என்று முடிவெடுத்துக்கொண்டாள்…
அதற்கு முதலில் நாம் இங்கிருந்து கிளம்பிவிட வேண்டும்… என்ற எண்ணம் மீண்டும் அவளுக்குள் முகிழ்க்க தொடங்கியது…
சேர்ந்தே உப்பை திண்ற இருவரும், சேர்ந்தே தண்ணீர் அருந்த வேண்டிய நேரம் வந்துவிட்டு இருந்தை பாவம் இருவருமே அறியவில்லை.
அப்பொழுது, “மேம்…” என்று பாதுகாவலர்கள் வெளியில் இருந்து கதவை தட்டி, மருத்துவர் வந்துவிட்டதை கூற.
ஆங்காங்கே வலி இருந்தாலும், எழுந்துச்சென்று அவளே கதவை திறந்துவிட்டாள்.
அவளை பரிசோதித்து பார்த்த மருத்துவர், “அங்கங்க லேசான தசைப்பிடிப்பு மட்டும் இருக்குமா… கவலைப்படும் வகையில் எதுவும் இல்லை… ஆயின்மெண்ட் அண்ட் பெயின் கில்லர் தரேன்… ஹாட் பேக் ஒத்தடமும் தாங்க…” என்றப்படியே, ஒரு ஊசியை அவளுக்கு போட்டவர்… “நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோங்க மா… நாலு நாளில் எல்லாம் சரியாகிடும்… டேக் கேர்” என்று பரிசோதனைகளை முடித்துக்கொண்டு அவர் வெளியேறிவிட…
புடவையை சரி செய்துக்கொண்ட குறிஞ்சிக்கு, ஈத்தனின் குரல் வெளியே இருந்து கேட்டது.
மருத்துவருடன் தான் பேசிக்கொண்டு இருந்தான்.
குறிஞ்சியிடம் கூறியதை அப்படியே அவனிடமும் மருத்துவர் கூற, “Cramps இருக்கா…” என்று அதிர்ச்சியானவன், “அப்போ ஹாஸ்பிடல்ல அட்மீட் பண்ணிடறேன் டாக்டர். Full Body Scan ஒன்னு எடுத்துடலாம். நான் வலி எதுவும் இல்லைன்னு நினைச்சேன்” என்றான் வருத்தமாக.
அதற்கு மருத்துவர், “நீங்க பயப்படும் அளவுக்கெல்லாம் எதுவுமே இல்லை ஈத்தன் சார். நான் முழுசா அவங்களை செக் செய்துட்டேன். எங்கேயும் சின்ன வீக்கம் கூட இல்லை. மரப்படிகள் அதுவும் கார்பெட் போட்டதுனால் எந்த பாதிப்பும் இல்லாமல் தப்பிச்சிட்டாங்க. விழுந்த வலி மட்டும் தான். அது குறைய ரெஸ்ட் எடுத்தாலே போதும். எல்லாம் சரியாகிடும். ஸ்கேன் எல்லாம் தேவையில்லை. ட்ரஸ்ட் மீ” என்றார்.
அவ்வளவு தூரம் அவர் கூறிய பின் சரியென்று சமாதானம் ஆன ஈத்தன், இரவு நேரத்தில் அழைத்ததும் உடனே வந்து பார்த்ததற்கு நன்றி கூறி, அவரை அனுப்பி வைத்து, உடன் பாதுகாவலர்களையும் அனுப்பிவிட்டு, குறிஞ்சியின் அறை முன்பு வந்து நின்றான்.
உள்ளே செல்வதா வேண்டாமா என்று மனதிற்குள் பெரிய பட்டி மன்றம்.
உள்ளே குறிஞ்சிக்கோ ‘போச்சி போச்சி உள்ளே வர போறார். திரும்ப கேள்வி கேட்க போறார். என்ன பதில் சொல்றது?’ என்று பயத்தில் குளிர் காய்ச்சல் அடிக்க ஆரம்பித்தது.
அவள் நினைத்தப்படியே அவளுடைய அறைக்கதவு தட்டப்பட்டது.
தட்டுவது ஈத்தன் தான் என்பது அவளுக்கு நிச்சயமே.
கதவை திறக்கவோ, ஈத்தனை மீண்டும் ஒருமுறை நேருக்கு நேர் சந்திக்கவோ, அவளுக்கு தைரியம் சிறிதும் இல்லவே இல்லை.
“டோர் ஓப்பன் பண்ணு குறிஞ்சி” என்று குரல் கொடுத்தான் ஈத்தன் வெளியே இருந்து.
ஊண் உறக்கம் எதுவுமின்றி வாழ்க்கை முழுவதும், அவனை பார்த்துக்கொண்டே கழிக்க சொன்னால் கூட சந்தோஷமாக கழித்து இருப்பாள். ஆனால் அப்பேர்பட்டவளை சந்தர்ப்பம் இன்று அவனின் நிழலை காணக்கூட அஞ்ச வைத்துவிட்டது.
கல் போல் சிறிதும் அசையாது அப்படியே நின்று இருந்தாள்.
அதில், சிறு சிறு விஷயத்திலும் அதிகளவு நாகரிகம் பார்க்கும் ஈத்தன், இன்று கொஞ்சமும் நாகரிகம் இல்லாது, குறிஞ்சியின் அறைக்கதவை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்து இருந்தான்.
அதை சுத்தமாக எதிர்பார்த்திராத குறிஞ்சிக்கு எங்கிருந்து தான் அவ்வளவு சக்தி வந்ததோ. அவன் வரவேற்பறையை தாண்டி படுக்கை அறைக்குள் நுழைவதற்கு முன்பாக மின்னலென பாய்ந்து சென்று மீண்டும் படுக்கையில் சுருண்டுக்கொண்டுவிட்டாள்.
நிச்சயம் மாட்டிக் கொள்வோம் என்று அவளுக்கு தெரிந்தே தான் இருந்தது. கைக்கால் அனைத்திலும் வெளிப்படையாகவே அத்தனை உதறல். என்ன முயன்றாலும் எதையும் அவளால் கட்டுபடுத்த முடியவில்லை.
அங்கு வேறுவழியின்றி பல்லை கடித்துக்கொண்டு உள்ளே வந்த ஈத்தனுக்கு, படுத்திருந்த குறிஞ்சியை பார்த்ததும் ‘மீண்டுமா’ என்று அத்தனை ஆயாசமாக இருந்தது. செய்வதை எல்லாம் செய்துவிட்டு, கோபமாக வந்தது அவனுக்கு.
அதே வேகத்துடன் அவளை நெருங்கி அழுத்தமாக பார்த்தவனுக்கு, ஒருபக்கமாக திரும்பி உடலை குறுக்கிக்கொண்டு, எதிலிருந்தோ தப்பிப்பவள் போல் அஞ்சி படுத்திருந்தவளின் தோற்றம் மனதை ஏதோ செய்ய… உடன் அவளுக்கு உடல் முழுவதும் வலி இருக்கிறது என்று மருத்துவர் கூறியது ஞாபகத்திற்கு வந்தது.
அதில், இப்படி படுத்தால் இன்னும் அது அதிகரிக்குமே என்று நினைத்தவன்… ‘காட்…’ என்று ஒரு பெருமூச்சுடன்… அருகில் இருந்த சிறிய ஸ்டூலை அவள் படுக்கைக்கு அருகில் இழுத்து போட்டு அமர்ந்து “குறிஞ்சி…” என்று அவனை மீறி மென்மையாகவே அழைத்து இருந்தான்…
ஏற்கனவே கண்களை திறவாமலே ஈத்தனின் சுவாசத்தை மிக அருகில் உணர்ந்தவளின் மார்பு கூடு வேக வேகமாக மேலெழுந்து தனிய… இப்பொழுதோ அவன் குரலில் அவளின் தளிர் விரல்கள் முதல் அனைத்தும் வெடவெடவென அப்படி நடுங்க ஆரம்பித்து விட்டன…
அக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்த ஈத்தனின் நெஞ்சை என்னவோ செய்தது…
அவள் மீது மலையளவு வருத்தமும், கோபமும், அவளிடம் கேட்க நிறைய நிறையவும் அவனிடம் இருந்தாலும், இப்பொழுது அவளை எழுப்பி அதை கேட்டு மேலும் அவளை நடுங்க செய்ய, இப்பொழுது அவனுக்கு சுத்தமாக விருப்பமில்லாமல் போயிவிட்டது…
அவ்வளவு தான் அவன்.
அவன் ஒன்றும் இப்படியெல்லாம் யாரையும் நடுங்க செய்யும் ராட்சசன் இல்லையே! அப்படியெல்லாம் செய்பவனாக இருந்து இருந்தால் இன்று அவன் நிலையே வேறாக இருந்து இருக்குமே.
உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி கட்டுப்படுத்தியே ஆறாத காயங்களை சுமப்பவன் அவன் ஆயிற்றே…
தப்பி தவறிக்கூட மற்றவர்களுக்கு அக்காயங்களை கொடுக்க கூடாது என்று நினைப்பவனும் அவனாகுமே.
🔴 அடுத்த பாகம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻
https://swathilakshmitamilnovels.blogspot.com/2025/03/112.html
நெஞ்சில் நினைவுகளாய்
பதிலளிநீக்குநேரம் காலம்
நழுவிப் போனதும்
நமக்கே தெரியவில்லை....
கண்களில் துளிபோல் கசிந்த கருணை
கோபத்தை குறைக்க
தவறி விழுந்ததை
தாங்கிச் செல்லும் ஈத்தன்