19.2 சங்கீத வானில் ஓர் அந்திப்போர்
முதல் தடவை, ஆட்டோவில் வந்த பொழுதே, திரும்பி செல்லவென்று, அந்த வழியினை மனப்பாடம் செய்துவிட்டிருந்த குறிஞ்சி, பேருந்தில் இருந்து இறங்கி, ஈத்தனுடைய வீட்டிற்கு நடந்தே வந்துவிட்டாள்.
முன்பு போலவே செக்யூரிட்டி அவள் வைத்திருந்த விசிட்டிங் கார்டினை வாங்கி சரிப்பார்த்துவிட்டு, கேட்டினை திறந்து உள்ளே அனுமதித்தவர்… பேட்டரி காரினை எடுத்துவர செல்ல…
எதற்கு வீண் சிரமம் என்று அவரிடம் மறுத்தவள்… மெல்ல மாளிகை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்…
மனதினுள், டிரீட்மெண்ட் ஆரம்பித்த பிறகு எப்படி நிறைய நாள் லீவ் எடுப்பது, வீட்டு வேலைகளை எப்படி சமாளிப்பது, சம்பளத்தை பிடித்துவிட்டால், இதர செலவுகளுக்கு என்ன செய்வது, போன்ற பல சிந்தனைகள்… உடன் ஈத்தன் எந்தளவுக்கு உதவி செய்வான் என்றும் அவளுக்கு தெரியாது… ஆப்ரேஷன் போக மருந்து, மாத்திரை, போக்குவரத்து என்று எவ்வளவோ செலவு இருக்கிறதே…
அவசரத்திற்கு வைக்கவோ, விற்கவோ கூட அவளிடம் குண்டு மணி தங்கம் கிடையாதே…
மனம் விடுவிடுவென்று கணக்குகள் போட…
திடீரென்று முகத்தில் வந்து வேகமாக மோதிய காலை நேர இளந்தென்றலில், தன் சிந்தனையில் இருந்து கலைந்த குறிஞ்சி, குளிரில் சிலிர்த்துவிட தன் கைகளை வருடியபடியே… தன் பார்வையை சுற்றி செலுத்த…
அழகாக சீரமைக்கப்பட்டிருந்த பச்சை பசேலென்ற தோட்டம் அவளின் கண் வழியே நுழைந்து, மனதை நிறைத்தது…
உடன் விதவிதமான பறவைகளின் உற்சாக இன்னிசை கேட்க, நிமிர்ந்து வானத்தை பார்த்தவள், மெல்ல எழுந்து வரும் சூரிய பகவானை பார்த்தப்படியே நடந்துக்கொண்டு இருக்கும் போதே…
“அம்மாடி என்ன இது…” என்று ஒருகணம் நின்றேவிட்டு இருந்தாள்…
அவளுடைய நாசி, சற்றுமுன் உணர்ந்த சுகந்தமான மணத்தை, மீண்டும் ஆழமாக உள்ளிழுத்து பார்க்க, அவளுக்கு எங்கோ மிதப்பது போல் இருந்தது…
நேற்று வெட்டப்பட்டிருந்த பச்சை புல்லின் வாசனையுடன் கலந்து வந்த, செண்பகம் மற்றும் மரமல்லி பூக்களின் மணம் தான் அதற்கு காரணம்…
அவளுக்கு அது எதிலிருந்து வரும் வாசனை என்றெல்லாம் தெரியவில்லை…
ஆனால் அந்த மணமே ஏதோ தேவலோகத்தில் இருப்பது போன்ற எண்ணத்தை அவளுக்கு தர… சாலையின் வளைவில் வளைந்து நடந்தவளுக்கு… அங்கிருந்த கோவில் தான் முதலில் கண்ணில் பட்டது…
அன்று காரில், அதுவும் பதட்டத்துடன் சென்றதில் இதையெல்லாம் அவள் கவனித்து இருக்கவில்லை…
கோவிலை பார்த்ததுமே அவளுடைய கண்கள் அன்னிச்சையாக மூடிக்கொள்ள… கைக்கூப்பியவள்… “கடவுளே…” என்று இரண்டு நொடி வேண்டிவிட்டே கண் திறந்தாள்… ஏழைகளின் ஒரே நம்பிக்கை அவன் தானே!
வேலைக்கு செல்ல ஆரம்பித்த பிறகு கோவிலுக்கு செல்லவெல்லாம் அவளுக்கு நேரம் எங்கு கிடைத்தது…
ஊர் எழும் முன்பு எழுந்து, ஊர் அடங்கிய பிறகு ஓய்ந்து என்று வாழ்க்கை படகில் பயணிப்பவள்… கோவில் இருக்கும் தெரு பக்கம் கூட செல்வதில்லை… மனதினுள் கும்பிட்டு கொள்வதுடன் சரி…
அதில், “இங்க மக்களுக்காக, கோவில் எல்லாம் கட்டி விட்டு இருக்காங்களே…” என்று ஆச்சரியமானவள், “ஒருயெட்டு சாமியை நேரில் பார்த்து கும்பிட்டு போய்விடலாம்” என்ற எண்ணத்துடன் அப்பக்கம் நடந்து சென்றவளுக்கு
தெரியவில்லை… அது உமையாளுக்காக மட்டுமே மயில்வாகனம் வீட்டிற்குள்ளே கட்டி வைத்த கோவில் என்று…
சுற்றி பல பூச்செடிகள் மற்றும் மரங்களுடன், சாம்பல் நிறத்திலான கிரானைட் கற்கள் மட்டுமே கொண்டு முழுதாக கட்டப்பட்டிருந்த அக்கோவில்… அளவில் சிறியதாக இருந்தாலும்… எவ்வித நவீனமும் புகுத்தப்படாமல் இருந்ததிலேயே தனித்து தெரிந்தது… முக்கியமாக அந்த சுகந்தமான மணங்கள்… மனதை அப்படியே மயிலிறகால் வருடிவிட்டன…
பாதணிகளை கழற்றி விட்டுவிட்டு, குளிர்ச்சியான கல் படிக்கட்டில் பாதம் பதித்து ஏறியவள்…
அங்கு பளிச்சென்று நடுநாயகமாக நின்றுக்கொண்டிருந்த அழகு முருகனை கண்டு மனம் உருகிப்போனாள்…
அவ்வளவு அழகாக வடித்து இருந்தார்கள்…
கண்குளிர அம்முருகனை பார்த்தவள், “அம்மாக்கு உடம்பை சீக்கிரம் சரியாக்கி கொடுத்துடுங்க சாமி…” என்பதை தவிர வேறெதுவும் கேட்கவில்லை…
கீழே முட்டிப்போட்டு விழுந்து கும்பிட்டவள்… அங்கு காற்றில் அடித்து வந்து தரை முழுவதும் பரவி இருந்த செம்மஞ்சள் வண்ண செண்பகத்தையும்… வெண்ணிற மரமல்லியையும் எடுத்து பார்த்து… கண்களில் ஒற்றிக்கொண்டு… தலையில் சொருகிக் கொண்டாள்…
வரும் பொழுதிருந்த பயம் சற்று மட்டுப்பட்டு… அனைத்தையும் பார்த்துக்கொள்ளலாம்… நல்லதே நடக்கும்… என்ற நம்பிக்கை மனமெங்கும் வியாபிக்க…
ஈத்தனின் வீட்டிற்குள் தன் அடியினை இரண்டாவது முறையாக எடுத்து வைத்திருந்தாள்…
அழகு முருகன் பெரும் விளையாட்டுக்காரன் என்பதை அறியாது போனாள்…
___________________________
வீட்டு ஒருங்கிணைப்பாளர் வந்து குறிஞ்சியை வரவேற்று பேசிக்கொண்டிருக்கும் பொழுதே, பின்புறம் இருந்து, “ஹாய் குறிஞ்சி…”, என்ற குரல் பட்டுப்போல் மென்மையாக, அதே சமயம் கூர்மையான வார்த்தை உச்சரிப்பில் ஆழமாக கேட்க…
அழைத்தது யாரென்று அறியமுடியாது போகுமா என்ன?
அதிலும் அவனின் பிரத்யேகமான பர்ஃபியூம் நறுமணம் அவளை சூழ்ந்த பிறகும்…
இருவரும் திரும்பி வாயில் புறம் பார்க்க…
கீழே கருப்பு நிற ட்ராக் பேண்ட், மேலே கையிலாத கருப்பு நிற வொர்க் அவுட் டேங்க் ஷர்ட்… காலில் வெண்ணிற ஸ்போர்ட்ஸ் ஷூ… என்று அணிந்திருந்த ஈத்தன்……
கழுத்தில் இருந்த வெண்ணிற பூந்துவாளையால் முகத்தை ஒற்றி எடுத்தப்படியே அவர்களிடம் வந்துக்கொண்டிருந்தான்…
அவன் நெருங்கியதும், “குட் மார்னிங் சார்” என்றாள் குறிஞ்சி மரியாதையுடன்…
மென் புன்னகையுடன், “குட் மார்னிங் குறிஞ்சி” என்ற ஈத்தன், “அண்ட் வெல்கம்” என்றவன். “சாரி, நான் ரொம்ப ஸ்வெட்டா இருக்கேன்… சோ நோ ஹேண்ட் ஷேக்ஸ்…”, என்றான் கைக்கொடுத்து வரவேற்பு தர முடியாததற்கு காரணமாக…
அதில், “அச்சோ… பரவாயில்லைங்க சார்” என்ற குறிஞ்சிக்கு, தன்னை வாழ்க்கையிலேயே இவ்வளவு மரியாதையுடன் நடத்தியவர் இவராக தான் இருக்கும் என்று தோன்றியது…
அதற்குள், வீட்டு ஒருங்கிணைப்பாளரிடம் ஓரிரு வார்த்தைகள் பேசி, அவரை அனுப்பிவிட்ட ஈத்தன்…
“கம் இன் கேர்ள்” என்று அவளை வீட்டின் உள்ளே அழைத்து சென்றவன், அவ்வளவு பெரிய ஹாலிற்கு ஏற்ப போடப்பட்டிருந்த பெரிய சோஃபாவில் அவளை அமர வைத்துவிட்டு…
“ஒன் செக். ஹேண்ட் வாஷ் செய்துட்டு வந்துடறேன்” என்றுவிட்டு உள்ளே சென்றான்…
அவ்விடைவெளியில் அவளிடம் வந்த பணியாள் அவளுக்கு அருந்த என்ன வேண்டும் என்று கேட்டுவிட்டு செல்லவும்… ஈத்தன் வரவும் சரியாக இருந்தது…
“டிரஸ்ட் மேனேஜரை ஒன்பது மணிக்கு இங்க வர சொல்லி இருக்கேன் குறிஞ்சி. அவர் வந்ததும் பேசலாம்” என்றவன், தன் கையில் இருந்த ஸ்மார்ட் வாட்சில் நேரத்தை பார்த்துவிட்டு… மெல்லிய புன்னகையுடன் அவளெதிரே அமர…
முகத்தில் இருக்கும் அவனின் அப்புன்னகை அவனுடைய கண்களை கொஞ்சமும் எட்டாது இருந்ததை, அவனையே பார்த்துக்கொண்டிருந்த குறிஞ்சியின் கண்கள் மிக துல்லியமாக அப்பொழுது தான் படம் பிடித்து இருந்தன.
முதல் முறையும் சரி, இரண்டாவது முறையும் சரி, அத்தனை உயிர்ப்புடன் அல்லவா பளிச்சென்று அவனுடைய நீலநிற கண்கள் ஒளிர்ந்துக்கொண்டு இருந்தன. இன்றோ அவை இரண்டும் ஃபியூஸ்(fuse) போன பல்பு போல் உணர்வுகளை தொலைத்து மாறிவிட்டதில், சுற்றியுள்ள உலகமே மங்கலானது போல் இருந்தது குறிஞ்சிக்கு.
அதில் ‘முதல் முறை பார்க்கும் போது, எப்படி இளவரசன் போல் இருந்தார்… என் கண்ணே பட்டுவிட்டதோ’ என்று அவள் வருந்திக்கொண்டிருக்கும் போதே…
வேலையாள் வந்து, ஈத்தன் முன்பு ஒரு ட்ரேவை வைத்துவிட்டு, அன்று போலவே இன்றும் அவளுக்கு ஒரு பித்தளை செட்டில் காஃபியை வைத்துவிட்டு… செல்ல…
ஈத்தனை தான் குறிஞ்சி பார்த்துக்கொண்டு இருந்தாள். அவன் குடிப்பதற்கு முன்பு எடுத்து குடிப்பது நாகரிகமாக இருக்காதே.
தன் கையில் இருந்த மொபைல் ஃபோனை டேபிள் மீது வைத்த ஈத்தன்… ட்ரேவில் இருந்த கைப்பிடியுடன் கூடிய கனமான கிளாஸ் கப்பை எடுத்தப்படியே குறிஞ்சியை பார்க்க…
அவள் தன் கப்பை எடுத்துக்கொண்டாள்…
அதில், “கூல்…” என்றவன், அவளுடைய வீடு இருக்கும் பகுதி, படிப்பு என்று ஒவ்வொன்றாக விசாரித்தப்படியே…
அவனுக்கான காலை பானத்தை தயாரித்தான்…
அப்பொழுது தான் அவன் முன்பு இருந்த ட்ரேயினை முழுதாக குறிஞ்சி கவனித்தாள்.
சிறிது சிறிதாக நிறைய கண்ணாடி கெட்டில்கள் அதில் அடுக்க பட்டிருந்தது…
ஒன்றில் புது மஞ்சள் துண்டுகள் நீரில் மிதந்துக்கொண்டும், ஒன்றில் எலுமிச்சை பழம் ஸ்லைஸ் செய்யப்பட்டு மிதந்துக்கொண்டும் என்றும், வரிசையாக இஞ்சி, பட்டை மற்றும் ஏதோதோ பூக்கள் வரிசையாக மிதந்த வண்ணம் இருக்க…
‘என்ன இது’ என்று குறிஞ்சியின் கண்கள் ஆர்வம் ஆகிவிட்டன…
ஈத்தன் அவற்றில் அனைத்தில் இருந்தும் குறிபிட்ட அளவில் ஒரு கப்பில் உற்றி, சுடு நீருடன் கலந்தவன்… இறுதியாக அதில் ஹனி டிப்பர் மூலம் தேனை ஊற்றி, ஸ்பூன் மூலம் கலக்க…
சிறு சத்தம் கூட வராத, அவனுடைய நாசுக்கான ஒவ்வொரு அசைவையும் மனதில் குறித்துக்கொண்டு வந்த குறிஞ்சிக்கு, நிச்சயம் அப்பானம் குடிக்க இதமாக இருக்கும் என்று தோன்றிய மறுகணமே…
அதில் இருந்து ஒரு மிடறு எடுத்து மிழுங்கியவனின் “பர்ஃபெக்ட்…” என்ற வார்த்தை அதனை உறுதிபடுத்தி இருந்தது…
அப்பொழுது தான் ஈத்தன், குறிஞ்சியின் கண்கள் தன் கையில் இருந்த கப்பிலேயே ஆர்வமாக நிலைத்து இருந்ததை பார்த்தான் ஈத்தன்…
அதில், “இந்த ட்ரிங்க் தொண்டைக்கு நல்லது…” என்று அவள் கேட்காமலேயே அவன் தகவல் கூற…
‘அச்சோ நாம பார்த்ததை பார்த்துட்டாறே…’, என்று உள்ளுக்குள் அசடு வழிந்த குறிஞ்சி…
“அப்படிங்களா சார்” என்றவள், அத்துடன் தன் கப்பினுள் தலையை விட்டுக்கொண்டாள்.
அவள் குடித்து முடிக்கும் வரை ஈத்தன் அவளை தொந்தரவு செய்யவில்லை…
அவள் முடித்தப்பிறகே, ‘நான் ஃபிரெஷ் ஆகிட்டு வந்துடறேன்…’ என்றுவிட்டு ஈத்தன் மேலே படியேறி சென்று இருந்தான்…
அதில் தன் தலையில் வலிக்காமல் கொட்டிக்கொண்ட குறிஞ்சி, ‘ஐயோ அவர் இன்னும் குளிக்க கூட இல்லை… ரொம்பவே முன்னே வந்துட்டோம் போலயே… ஒரு பத்து நிமிஷம் அந்த கோவில்லயே இருந்துட்டு வந்து இருக்கலாம் போல… என்னை பத்தி என்ன நினைச்சு இருப்பாரோ…’ என்று நினைத்த குறிஞ்சிக்கு தெரியவில்லை… அவள் நேரமே வந்ததால் தான், தன் மனதை போட்டு குடையும் தனிமையை தள்ளி வைத்துவிட்டு, சற்று சகஜமாக அவன் மாறி இருந்தான் என்பது…
எப்பொழுதுமே யாராவது பேசும் சலசலப்பிலும், வாகன சத்தத்திலும், இல்லை குறைந்தது டகடகவென ஃபேன் ஓடும் சத்தத்திலுமே, வாழ்ந்து பழக்கப்பட்ட குறிஞ்சிக்கே, அவ்வளவு பெரிய அமைதியான வீடு, ஒருமாதிரியான தனிமை உணர்வை, ஈத்தன் பிரிந்த ஓரிரு நிமிடங்களிலேயே கொடுத்துவிட்டிருக்க… அதிலேயே வாழும் அவனுக்கு எப்படி இருக்கும்…
தன் தலையை அனைத்து புறமும் திருப்பி, அவ்வீட்டினை சுற்றி பார்த்த குறிஞ்சிக்கு, அவ்வீட்டில் ஒரு இழப்பு ஏற்பட்டதற்கான அறிகுறியே சிறிதும் தெரியவில்லை… அதே பொலிவுடன் கம்பீரம் குறையாமல் நின்றது..
அதைவிட பணக்காரர்கள் வீடு என்றால், உள்ளே நூறுப்பேர் வேலை செய்துக்கொண்டே இருப்பார்கள்… வீடே பரப்பரப்பாக தாம் தூம் என்று இருக்கும்… போன்ற பல கற்பனைகளில் ஒன்றுக்கூட அங்கு இல்லை…
அப்படியொரு அமைதி…
‘சாரோட அம்மா, சொந்தக்காரங்க எல்லாம் இன்னும் எழுந்துக்கலை போலயே… எழுந்துவந்து நம்மகிட்ட எதுவும் கேட்டா என்ன சொல்றது… பேசாம அந்த கெஸ்ட் ரூமுக்குள்ள போய் உட்கார்ந்துக்கலாம்…’ என்று நினைத்தவள்… எழுந்து வாசல் புறம் நடக்க… அவளிடம் ஒருங்கிணைப்பாளர் ஓடி வந்தார்…
வீடு அமைதியாக இருந்தாலும் முழு கண்காணிப்பில் இருப்பதை அப்பொழுது தான் குறிஞ்சி உணர்ந்தாள்.
“நான் அன்னைக்கு உட்கார்ந்திருந்த ரூம்லயே வெயிட் பண்றேன் சார்… சமர் சார் ப்ரேக் ஃபாஸ்ட் எல்லாம் முடிச்ச பிறகு வரட்டும்… நான் தொந்தரவா இருப்பேன்” என்றவளிடம்…
நடுத்தர வயதில் இருந்த அவர், “அப்படிலாம் இல்லைம்மா… சார் உங்களுக்கும் சேர்த்து தான் டேபிள்ள பிரேக் ஃபாஸ்ட் வைக்க சொல்லி இருக்கார்… உள்ளேயே உட்காருங்க…” என்றார்…
அதில், “ஐயோ அதெல்லாம் எதுவும் எனக்கு வேண்டாம் சார்” என்ற குறிஞ்சி, “நான் அங்கே போறேன்” என்று பிடிவாதம் பிடிக்க…
“ஏன் ம்மா. சார் வந்தா என்னை தான் கேட்பார்” என்று அவர் விசாரிக்க…
தன் மனதில் இருந்ததை அவரிடம் கூறிவிட்டாள் குறிஞ்சி. அன்றே அவருக்கு அவள் பணம் வாங்க தான் வந்திருப்பது தெரியும் என்பதால் அவள் எதையும் மறைக்கவில்லை.
அவள் கூறியதை கேட்டதும் அவரின் முகம் கனிந்துவிட்டது.
“இங்க சமர் சார் தவிர வேற யாரும் இல்லை ம்மா. அதேமாதிரி இந்த வீட்டில் எல்லா மனுஷனையும் ஒரேமாதிரி சமமா தான் நடத்துவாங்க. நீங்க தேவையில்லாமல் பயப்பட வேண்டாம். உள்ளே போயிட்டு உட்காருங்க. சார் 5 நிமிஷத்துல வந்துடுவார்” என்றுவிட்டு அவர் விலகிச்செல்ல…
அவர் சொன்னப்போலவே அடுத்த ஐந்து நிமிடத்தில் ஈத்தன் மாடியில் இருந்து இறங்கி வந்தான்…
வீட்டில் தான் இருக்கப்போவதால், தூய வெண்ணிறத்தில், மிகவும் இலகுவான லக்ஸூரி வகை காட்டனில், பைஜாமா பேண்ட் மற்றும் ஷர்ட் அணிந்து, ட்ரை செய்யப்பட்ட கேசம் நடப்பதில் சிறிது அலைப்பாய என்று வந்தவனின்… இளமையும், கம்பீரமும், திண்மையும்… கண்ணிருந்து பார்ப்பவர்கள் அனைவரையுமே நிச்சயமாக கட்டி இழுக்கும்…
குறிஞ்சியினையும் இழுத்தது…
என்ன அவனை பார்த்துக்கொண்டிருந்த அவளின் கண்களில்... பூமியில் நின்று, வானில் மின்னும் நக்ஷத்திரத்தை அண்ணாந்து பார்ப்பது போலான ரசனை மட்டும் தான்…
அக்கணம் வரையிலுமே அந்த நக்ஷத்திரத்தின் அருகில் செல்லவோ, அதை கையால் தொட்டு பார்க்கவோ அவளுக்கு கடுகளவும் தோன்றவில்லை…
முடியாததை எல்லாம் நினைத்துப்பார்க்க நேரமும் அவளின் மூளைக்கு அச்சமயம் இல்லையே…
___________________________
📣அடுத்த பாகத்தை படிக்க உடனே கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🦋
கருத்துகள்
கருத்துரையிடுக