14.1 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🪻
அத்தியாயம் -14
பதிமூன்று வருடங்களுக்கு முன், சென்னையில் நம்பர் ஒன் மருத்துவமனையில், நம்பர் ஒன் இதய மருத்துவர் முன்பு, நெற்றி முழுவதும் பூத்த வியர்வையுடன் அமர்ந்து இருந்தான் ஈத்தன்.
அவன் முகம் முழுவதும் அப்படி ஒரு பயம் வெளிப்படையாகவே அப்பி கிடந்தது.
மருத்துவரோ அவன் பயத்தை மேலும் அதிகரிக்கும் வண்ணம், “சாரி ஈத்தன். இது உங்க பாட்டிக்கு இரண்டாவது அட்டாக். அதுவும் சிவியரா வந்து இருக்கு” என்றார்.
அதில் ஈத்தன், “வாட்! என்ன டாக்டர் சொல்றீங்க? பாட்டிக்கு இப்ப தானே முதல் தடவை?” என்று பதற…
“நோ ஈத்தன். 10 years before உங்க தாத்தா இறந்தப் பொழுதே அவங்களுக்கு முதல் அட்டாக் வந்துடுச்சு. அதன் பிறகு அவங்க உங்களுக்காக தான் அவங்களோட உடல்நலனில் அதிக கவனம் செலுத்தி இத்தனை வருஷம் கடந்து வந்து இருக்காங்க” என்றார். இதுவே அதிகம் என்னும் வகையில்.
அதைக்கேட்ட ஈத்தனுக்கு கண்கள் எல்லாம் அவனை மீறி கலங்க ஆரம்பித்துவிட்டன.
அவனுக்கு அவர் தான் எல்லாமுமே.
திடீரென்று இப்படியெல்லாம் பேசினால் என்ன செய்வான்.
இருபத்தி மூன்று வயதில் அவ்வளவு திடம் எல்லாம் அவனின் இதயத்திற்கு இல்லை.
மெல்ல தன்னை திடப்படுத்திக்கொண்டவன், “இப்ப என்ன சொல்றீங்க டாக்டர்?” என்று கேட்டான்.
“எங்க சைட் இருந்து நாங்க எல்லாமே பெஸ்ட் டா கொடுத்துட்டு இருக்கோம் ஈத்தன். இந்தமுறை Blood Clots அதிகமானதால், அவங்க இதய சுவர்கள் எல்லாம் ரொம்ப பாதிப்பு அடைஞ்சு இருக்கு. அதுதான் பிரச்சனை. வயசும் 70 கிட்ட... சோ…” என்றவர், ஈத்தனின் முகத்தை பார்த்து என்ன நினைத்தாரோ, “தொடர்ந்து நாம சப்போர்ட் கொடுக்கலாம் ஈத்தன். நல்லதே நடக்கும்” என்று முடித்துக்கொண்டார்.
அவர் சொல்லாமல் விட்டாலும் அவனால் புரிந்துக்கொள்ள முடிந்தது.
“தேங்க் யூ டாக்டர்” என்று வரவழைத்த மெல்லிய புன்னகையுடன் எழுந்து அவருடன் கைக்குலுக்கியவன். வெளியே வந்துவிட்டான்.
இன்னும் அவசர சிகிச்சை பிரிவில் தான் அவனின் பாட்டி இருந்தார். காலை நன்றாக தான் அவனுடன் சூரிய நமஸ்காரம் முடித்து, தோட்டத்தில் வாக்கிங்கிற்கு வந்து இருந்தார். திடீரென்று தோள் பட்டையில் வலியாக இருக்கிறது என்றவர், ஈத்தன் என்னவென்று உணர்வதற்கு முன்பே, நெஞ்சை பிடித்துக்கொண்டு சரிந்துவிட்டு இருந்தார்.
அப்பொழுது அவனை நெருங்கிய அவனின் பிஏ ரவி, “சித்ரலேகா மேடம்க்கு இன்ஃபார்ம் பண்ணனுமா சார்?” என்று விருப்பம் கேட்க.
“ம் பண்ணிடுங்க ரவி” என்ற ஈத்தன், அவசர சிகிச்சை பிரிவிற்கு முன்பு அமைதியாக அமர்ந்துவிட்டான்.
ஈத்தன் சமரவேல் கிருஸ்டோஃபர். உலகின் பார்வையில் மிகவும் கொடுத்து வைத்தவன். அதிர்ஷ்டமானவன். பணக்காரன். திறமையானவன். அழகானவன். புகழ்பெற்றவன். உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவன். சொல்லிக்கொண்டே போகலாம்?
ஆனால் நிதர்சனத்திலோ?
அவன் சாய ஒருத்தோள் கூட அருகில் இல்லை. அருகில் இருக்கும் தோள்களில் நம்பி சாய அவனும் தயாராக இல்லை.
உலகில் அவன் மட்டுமே தனித்து இருப்பது போல் இருந்தது.
பல வருடங்களுக்கு பின் மீண்டும் தனிமை…
அச்சமாக கூட இருந்தது.
என்ன செய்வது?
தன் முகத்தை இருக்கைகளினுள்ளும் அழுத்தமாக புதைத்துக்கொண்டான்.
அவன் பெற்ற வரம் அப்படி!?
பெற்றவர்களின் வாசம் அவன் மறந்து பதினொரு வருடங்கள் ஆகிவிட்டன…
ஆம் மறந்தேவிட்டான்.
ஆனால் இன்னும் அவனால் அக்கொடிய நாட்களின் பிடியிலிருந்து மட்டும் வெளிவரவே முடியவில்லை.
தமிழ்நாட்டில் அவன் தாத்தா மயில்வாகனத்தை தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள். தொலைக்காட்சி பெட்டி வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் அவர்களின் ‘ஓம் ப்ரொடெக்ஷன்ஸ்’ தெரிந்து இருக்கும். அறுபதுகளில் இருந்தே கொடிக்கட்டிப்பறக்க ஆரம்பித்துவிட்டு இருந்தனர்.
அவர் மனைவி ஈத்தனின் பாட்டி உமையாள் அம்மையார். அந்தக்காலம் தொடங்கியே சாதி, மதம் சாயங்கள் எதுவுமின்றி, பல குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகளையும், பெண்களுக்கு வேலை வாய்ப்புகளையும் செய்து தர ஆரம்பித்து, பல தலைமுறையினரை முன்னேற்ற பாதையில் ஏற்றிவிட்டவர்.
அன்று மட்டும் அவர்கள் அரசியலில் இறங்கி இருந்தால், இன்று மொத்த தமிழ்நாடும் அவர்கள் கையில் இருந்து இருக்கும். அந்தளவிற்கு மக்கள் செல்வாக்கு உண்டு.
அப்பேர்ப்பட்டவர்கள் தங்களின் ஒற்றை மகள் சித்ரலேகாவையும், ஆண் பிள்ளைகளுக்கு நிகராக, நல்ல தைரியம், தன்னம்பிக்கை, அறிவு என்று அனைத்தையும் ஊட்டி சுதந்திரமாக வளர்த்துவிட்டு இருக்க…
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என்று பல மொழிகளில் தன் பாடல்களின் மூலம் இந்தியா முழுக்க வளம் வந்தவர், அடுத்த அடி வைத்தது ஹாலிவுட்டில்.
இந்திய பாடகி, அதுவும் தமிழ் நாட்டில் இருந்து.
சித்ரலேகாவின் தெளிவான குரலில் வெளிவந்த ஆங்கில பாடல், அமெரிக்கா முழுவதும் பயங்கர ஹிட் அடித்து ஒலிக்க… மயில்வாகனத்திற்கு பெருமை பிடிப்படவில்லை…
அனைத்து சினிமா துறையினர் போல் தான் அவருக்கும் ஹாலிவுட் மீது அப்படி ஒரு பிரமிப்பு… அதில் மகளை கொண்டாடி தீர்த்தவர் தலையில், அடுத்த ஆறு மாதத்தில் சித்ரலேகாவோ இடியை இறக்கிவிட்டு இருந்தார்…
அவர் பாடல் பாடிய படத்தின் நாயகன் தான் ஈத்தனின் தந்தை டிம் ஹன்டர்…
ஹாலிவுட்டின் கிங்…
தோற்றத்திலும், நடிப்பிலும் உலகம் முழுவதையும் கட்டிப்போட்டு இருந்தவர்…
ஆனால் அவரை கட்டிப்போட்டதோ சித்ரலேகா தான்…
சித்ரலேகாவை கட்டிப்போட்டதும் அவர் தான்…
நாடு, இனம், மொழி, மதம், பெற்றோர் என அனைத்தையும் இருவருமே மறந்துப் போனார்கள்.
மகள் காதலிக்கிறேன் என்று வந்து சொல்லி இருந்தால் கூட சரியென்று தன்னை தேற்றித்கொண்டு இருந்து இருப்பார் மயில்வாகனம்… ஆனால் சித்ரலேகா சொன்னதோ காதலுடன் சேர்த்து தான் கர்ப்பமாக இருப்பதாக…
அதில் தான் இடிந்து போனார்கள்…
தமிழ் கலாச்சாரத்தில் ஊறிப்போய் இருந்தவர்களால், மகளின் செயலை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை…
தோளுக்கு மிஞ்சி வளர்ந்து, சொந்த காலில் நிற்பவளை என்ன அடிக்கவா முடியும்… ஆசை மகளை திட்டியது கூட இல்லை அவர்கள்… அப்படி ஒருநாளும் சித்ரலேகா நடந்துக்கொண்டதும் கிடையாது…
நடிகன் அதுவும் வெளிநாட்டு நடிகன்… பல சுணக்கங்கள் இருந்தாலும்… ஒன்றும் செய்ய முடியவில்லை…
என்ன ஏது என்று மயில்வாகனம் விசாரித்து, வயிறு தெரிவதற்குள் மகளுக்கு உடனடியாக திருமணத்தை முடித்துவைக்க…
திருமணம் ஆன ஐந்தே மாதத்தில் பிறந்த ஈத்தனோ அனைவருக்கும் அனைத்தையும் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டு இருந்தான்.
அதன் பிறகு என்ன?
காலில் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்த மயில்வாகனத்திடம் ஒரு முடக்கம். உமையாள் அம்மா தான் அவரை தேற்றிவிட்டு, அவரின் கைப்பிடித்து ஓடிக்கொண்டு இருந்தார்.
நரம்பில்லாத நாக்கிற்கு என்ன வேண்டும் என்றாலும் பேச தெரியும் தானே…
ஆனால் இவர்களின் நிலைக்கு எதிர்மாறாக, சித்ரலேகாவோ ஹன்டருடன் திகட்ட திகட்ட மகிழ்ச்சியாக ஒரு காதல் வாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டு இருந்தார்…
பணமும், திறமையும், அழகும், காதலும், இளமையும் இரண்டு பக்கமும் கொட்டிக்கிடக்க… என்ன குறை… எல்லாமே நிறைகள் தான்…
தங்களின் காதலுக்கு பரிசாக கிடைத்த மகனுக்கு சொர்க்கத்தை காட்டினர்…
பெயர் முதற்கொண்டு தேடித்தேடி அவனுக்காக கோர்த்தனர்…
இருவரும் சேர்ந்து, தங்களின் பலமான உறவின் சாட்சியாக அவனுக்கு முதல் பெயராக(first name) ஈத்தனை தேர்ந்தெடுத்தனர்.
(ஈத்தன் - உறுதி, பலம், நீண்ட ஆயுள்).
அடுத்து(middle name) சித்ரலேகா தங்களின் குல தெய்வம் பெயரான முருகனின் பல பெயர்களில் ஒன்றான சமரவேலை அவர் விருப்பமாக தேர்ந்தெடுக்க…
இறுதியில்(Last name) ஹன்டர், அவருடைய இயோசு கிருஸ்துவின் கொள்கைகளான அன்பு, மன்னிப்பு, கருணை, தொண்டு, நம்பிக்கை, இரக்கம்… அனைத்தையும் மகன் பெரும் வகையில் கிருஸ்டோஃபர் என்று சேர்க்க…
அனைவரையும் ஈத்தன் தன் பெயரினை வைத்தே ஈர்க்க ஆரம்பித்து இருந்தான்.
அனைத்து இந்திய மற்றும் ஹாலிவுட் பிரபலங்களையும் அழைத்து, அமெரிக்காவில் பெரிய க்ரூஸ் ஷிப்பில் பெயர் சூட்டும் விழாவை மிக பிரம்மாண்டமான முறையில் நடத்தினர்.
மயில்வாகனம் மற்றும் உமையாள் தம்பதிகளுக்கு மகளின் இந்த சந்தோஷமும், கலாச்சார ஏற்ற தாழ்வு பயங்களை கலைக்கும் வகையில் ஹன்டர் மனைவி, குழந்தை என்று குடும்பத்தை கொண்டாடுவதும் தான் ஒரே ஆறுதல். நாளடைவில் சித்ரலேகா மற்றும் ஹன்டரின் வாழ்க்கையை பார்த்து, கேலிகளும், கேள்விகளும் கூட குறைந்து காணாமல் போயி விட்டன.
சித்ரலேகாவிற்கு இசை மட்டும் இல்லை, தொழிலும் கை வந்த கலை தான்…
ஹாலிவுட்டில் ஈத்தன் பெயரில் புரொடெக்ஷன்ஸ் ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தினார்…
தாய் தந்தையின் அன்பையும், காதலையும் மட்டுமே பார்த்தும், பெற்றும் வளர்ந்த ஈத்தன், தன் பதினொறாவது வயதில் வீட்டில் எதுவோ சரியில்லை என்பதை மெல்ல உணர ஆரம்பித்து இருந்தான்…
என்னவென்று அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
மெல்ல வீட்டில் பார்ட்டிகள் குறைக்கப்பட்டன…
வார இறுதி அவுட்டிங்கள் நிறுத்தப்பட்டன…
தினமும் சித்ரலேகாவிற்காக சிவப்பு ரோஜா பூங்கொத்துடன் வரும் தந்தை, இப்பொழுதெல்லாம் வீட்டுக்கு எப்பொழுது வருகிறார் என்றே அவனுக்கு தெரியாது போனது…
அவனுடன் சேர்ந்து தினமும் மாலையில் ஆரம்பித்து அந்திசாயும் வரை பாடும் சித்ரலேகா, எந்நேரமும் தலைவலி என்று அறைக்குள்ளே இருந்துக்கொண்டார்…
தினமும் இரவு சுடசுட பார்பிகியூவில், கிரிலில் வேலையாட்கள் சமைத்து தர, தோட்டத்தில் ஒன்றாக அமர்ந்து, அன்றைய நிகழ்வுகளை சுவாரஸ்யமாக பேசியப்படியே செல்லும் டின்னர் நேரம்… இப்பொழுதெல்லாம் ஈத்தனுக்கு மௌனமாக தனியே கழிய ஆரம்பித்தது…
ஞாயிறுகளில் பல கும்மாளங்களை உள்ளடக்கிக்கொள்ளும் நீச்சல் குளம், இப்பொழுதெல்லாம் ஈத்தனை மட்டுமே சுமந்துக்கொண்டு வெறுமையாகிப்போனது…
உடன் பிறந்தோர்கள் யாரும் உடனிருந்து இருந்தால் கூட சமாளித்திருப்பானோ என்னவோ… அதுவும் அவனுக்கு இல்லை.
என்னுடன் வந்தே தீர வேண்டும் என்று கைப்பிடித்து, அழுது, அடம்பிடிக்கவெல்லாம் அவனுக்கு தெரியவில்லை…
மேலைநாட்டு, மேல்தட்டு வாழ்க்கை, அந்த வயதிலேயே அவனை நாகரிகம் பார்க்க வைக்க, நடுக்காட்டில் தனித்து விட்டதை போல் தனித்து நின்று விட்டான்…
🔴அடுத்த அத்தியாயம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்
https://swathilakshmitamilnovels.blogspot.com/2025/03/142.html
கருத்துகள்
கருத்துரையிடுக