15.1 சங்கீத வானில் ஓர் அந்திப்போர்
அத்தியாயம் -15
மயில்வாகனத்தின் இறப்பை கூட முழுமையாக உள்வாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு, உமையாள் அம்மாவை கடமைகள் இழுத்துக்கொண்டுவிட்டு இருந்தன…
அதிலும், சினிமா தயாரிப்பு நிறுவனம் என்பது எவ்வளவு பெரிய கடல்…
அதில் இறங்கியிருந்தவர்கள் தொடர்ந்து நீந்தவில்லை என்றால் ஒன்றுமில்லாமல் அடித்துசெல்லப்பட்டு விடுவார்களே.
உமையாளுக்கு அந்த வேலை ஒருபக்கம் என்றால், விவரம் பாதி தெரிந்தும், பாதி தெரியாமலுமான பேரனை பாதுகாப்பது பெரும் வேலையாக இருந்தது.
இரண்டையும் எப்படியோ ஒருசேர கட்டி இழுத்தவருக்கு… அந்நேரத்தில் தான் முதல் ஹார்ட் அட்டாக் வந்து இருந்தது…
ஈத்தன் அவனையே உணராத காலம் அது… எதற்கு நான்கு நாட்கள் மருத்துவமனையில் இருந்தோம் என்பது கூட அவனுக்கு தெரியாது…
ஹன்டரின் திருமணமும், சித்ரலேகாவின் திருமணமும் ஈத்தனை அந்தளவிற்கு அச்சமயம் பாதித்து இருந்தது… ஏற்கனவே தனக்கு யாருமில்லை என்ற ஒருவித பாதுகாப்பற்ற பயத்தில் இருந்தவனை, அவை மேலும் மனதளவில் துவண்டுவிட செய்துவிட்டு இருந்தது…
வெறித்த இல்லை மருண்ட முகத்துடன் இருப்பவனை, உமையாள் அம்மையார் தான், தன் முந்தானை கதகதப்பிலேயே போட்டு, குஞ்சினை அடைகாக்கும் தாய் பறவைப் போல், தன் அரவணைப்பிலேயே அவனை வைத்து இருந்தார்…
அதிலும் உணவின் மீதே நாட்டம் இல்லாது கிடந்தவனுக்கு அவர் தான் பார்த்து பார்த்து ஊட்டிவிடுவார்… வயதுக்கு மீறிய சுமையாக இருந்தாலும் சளைக்காமல் சுமந்தார்…
அவனுக்கு பிடித்த ரோஜா செடிகளை தோட்டம் முழுவதும் அவர் பதியம் போட சொல்ல… அது மொத்தமாக பூத்து குலுங்கி… அவனுக்காக மணம் வீசியது…
அதை எதையும் ஒருநாளும் உணராமல்…
பதினைந்து வயது வரையுமே தன் கூட்டினுள்ளே சுருண்டுக்கொண்டிருந்த ஈத்தன், அதன் பிறகு தான் தன்னை மெல்ல மீட்டுக்கொண்டு வெளிவர ஆரம்பித்து இருந்தான்…
ஏனோ தானோவென்று பள்ளிக்கு சென்று திரும்புபவன், சற்று கவனமானான்…
சுற்று புறத்தினையும் பார்க்க ஆரம்பித்தவனுக்கு, உமையாளின் ஈடில்லாத பாசம் புரிய… மேலும் அவருடன் ஒட்டிக்கொண்டவன்… அவருடனே சேர்ந்து தொழிலையும் கற்க ஆரம்பித்து இருந்தான்…
உமையாளுக்கு அவன் இவ்வளவு தூரம் வந்ததே பெரிதாக இருந்தது…
மெல்ல அவன் தன்னுடைய ‘மை மாம்…’
‘மை டாட்…’ போன்ற ஏக்கங்களை எல்லாம் மறந்து, பாட்டியின் பிரியன் ஆனான்…
அச்சமயம் சித்ரலேகாவிற்கும், ஆப்ரஹாமிற்கும் அடுத்த குழந்தை பிறந்துவிட, உமையாளால் நேரில் சென்று பார்க்க முடியவில்லை. ஈத்தனை அவரால் எப்படி அழைத்து செல்ல முடியும். இல்லை விட்டு தான் செல்ல முடியும்.
அதனால் அவர் போகாமலேயே இருந்துவிட…
சித்ரலேகாவே குழந்தையுடன் இந்தியா வந்திருந்தார்…
அவரை பொறுத்தவரை அவர் வாழ்க்கையில் நடந்த தவறை திருத்திவிட்டு… நேராக வாழ்வதில்… பிரச்சனை இல்லை…
அதிலும் ஹன்டர் கொடுத்திருந்த துரோகங்களுக்கும், காயங்களுக்கும், ஆப்ரஹாம் நல்ல மருந்தாக அவருக்கு இருக்க… வாழ்ந்து காட்ட வேண்டும் என்று ஆரம்பித்தவர், இறுதியில் நிறைவாகவே வாழ்ந்தார், எனலாம்…
ஈத்தனையும் தன்னுடன் அழைத்துச்செல்ல தான் எப்பொழுதும் பார்ப்பார்… அவன் தான் பழையப்படி அவருடன் ஒட்ட முடியாது ஓடி ஒளிந்துக்கொள்வான்…
இதற்கு இடையில் ஹன்டர் செலினாவையும், செலினா மூலம் வந்த குழந்தையையும் விட்டுவிட்டு, அடுத்து நட்டாலியாவை மூன்றாவதாக மணந்து இருந்தார்…
மாதத்திற்கு ஓரிரண்டு முறை ஈத்தனுக்கு அழைப்பவர், நன்றாக தான் அவனுடன் பேசுவார்… உடன் அவனுக்கு சில பரிசு பொருட்களையும் அனுப்பியும் வைப்பார்…
ஈத்தன் எதையும் மறுக்க மாட்டான்… சகித்துக்கொள்ள பழகிவிட்டு இருந்தான்…
பள்ளி படிப்பை வெற்றிகரமாக முடித்தவன், பாட்டிக்காக என்று பிஸ்னெஸ் கல்லூரியில் சென்று சேர்ந்துவிட்டான்…
சித்ரலேகாவுடன் அவனின் இசை கனவுகள் எல்லாம் புதைந்துவிட்டு இருந்தன… நடிப்பில் எப்பொழுதுமே அவனுக்கு நாட்டம் இருந்தது இல்லை… எனவே பாட்டிக்கு உதவியாக இருக்க, பிஸ்னெஸ் மேனேஜ்மென்ட் பக்கம் திரும்பிவிட்டு இருந்தான்…
அதுதான் அவன் வாழ்க்கையின் திருப்புமுனையான நேரம்…
ஆம், முதல் வருட கல்லூரிக்கு, எவ்வித சுவாரசியமும் இல்லாது சென்றுக்கொண்டிருந்தவன் வாழ்க்கை, திடீரென்று ஒரு இரவில், ஒரே இரவில் மொத்தமாக மாறிவிட்டு இருந்தது…
அந்த வாரம் முழுவதும், அவர்கள் கல்லூரியில் அனைத்து டிப்பார்ட்மெண்டிற்கும் சேர்த்து கல்சுரல்ஸ்(விழா) நடந்துக்கொண்டு இருந்தது.
அதில், அன்று பாடல் போட்டிகளுக்கான நாள்…
ஒவ்வொரு டிப்பார்மெண்டாக சென்று அவர்கள் முறை வரும் போது பாட வேண்டும்… அதில் ஜெயிக்கும் டிப்பார்ட்மெண்ட்டில் இருந்து தான் அவ்வருட மாணவர்களுக்கான பிரஸிடெண்ட்டை வேறு தேர்ந்தெடுப்பார்கள்…
எனவே பயங்கர போட்டி…
சிறிது நேரம் இருந்துவிட்டு கிளம்பலாம் என்ற மனநிலையுடன் மாலை கல்லூரிக்கு வந்த ஈத்தன் கண்டது…
அங்கு சீனியர்களிடம் திட்டுவாங்கிக்கொண்டிருந்த அவன் வகுப்பு மாணவனை தான்…
“ஏன்டா ஒருநாள் ராத்திரி உன்னால் குரலை ஒழுங்கா பார்த்துக்க முடியாதா டா… கழுத கணைக்கிற மாதிரி இருக்கு டா இப்ப உன் குரல்… எப்படிடா நாளைக்கு எல்லார் மூஞ்சிலையும் முழிக்கிறது… கலாய்ச்சு தள்ளிடுவானுங்க டா… அதுவும் இப்ப வந்து சொல்ற” என்றவர்கள்… “டேய் நம்ம டிப்பார்ட்மெண்ட்ல வேற யாரும் பாடுவாங்களான்னு பாருங்க டா…” என்றுவிட்டு…
“உன்னை…” என்று அந்த மாணவனை போட்டு மீண்டும் திட்ட…
“நான் எதுவும் பண்ணலை அண்ணா… காலையில் எழுந்து பார்த்தா தொண்டை கட்டிடுச்சு… நானும் எவ்வளவோ தேனை கலந்து குடிச்சு பார்த்துட்டேன்… குரல் சரியாகவே மாட்டுது என்ன பண்றது…” என்று கவலையாக கூறியவன்… “அண்ணா எங்க கிளாஸ்ல தான்… சிங்கர் சித்ரலேகாவோட பையன் படிக்கிறான்… அவன் கிட்ட கேட்டு பார்க்கலாமா…” என்று கூற…
“அவன் நல்லா பாடுற மாதிரி இருந்தா, ஏன் டா நம்ம காலேஜ்ல பிஸ்னெஸ் படிக்கனும்…” என்றவர்கள்,
“சரி வா கேட்டு பார்க்கலாம்… ஆள் வேற பயங்கர பெரிய இடம்… மதிப்பானா கூட தெரியலை…” என்றுவிட்டு கிளம்பியவர்களும் கூட, பெரிய இடத்து பிள்ளைகள் தான்…
ஈத்தனுக்கு கால் செய்து பிராக்டீஸிங் ஹாலிற்கு வர சொன்னவர்கள்… நிலைமையை கூறி ஈத்தனிடம் பாட முடியுமா என்று கேட்க…
இவர்கள் கூத்தினை தான், அவன் ஏற்கனவே பார்த்து இருந்தானே…
அதில், “ஓகே பாடுறேன்” என்றான்…
என்ன எடுத்ததும் ஓகே சொல்லிட்டான்… சித்ரா தேவி பிரியா மாதிரி எதுவும் பாடிடுவானோ என்று பயந்தவர்கள்…
அவனிடம் தயங்கி தயங்கி விசாரிக்க…
“Chill, Bro's!” என்றான் ஈத்தன் புன்னகையுடன்…
அதற்குள் மேடையில் இருந்து அறிவிப்பு வந்துவிட்டது…
“டேய் முதல்லயே நம்மளை கூப்பிட்டுட்டாங்க டா… ரிகர்சல் கூட எதுவும் பண்ணலையே” என்று பதறியவர்கள்… பேப்பரை அவனிடம் தர…
அதிலிருந்த பாடல்கள் எதுவும் அவனுக்கு தெரியவில்லை…
அதில், “போச்சு போச்சு…” என்றவர்கள்…
“உனக்கு ரொம்ப நல்லா தெரிஞ்ச பாட்டு எதையும் பாடு ஈத்தன்” என்று அவனை மேடைக்கு அனுப்பியவர்கள்…
“டேய் வாங்க டா… ஓடிப்போய் நாம மைக்குக்கு போற கரெண்ட்ட கட் பண்ணிவிட்டுடலாம்” என்று ஒன்றாக சேர்ந்து ஓட ஆரம்பித்தனர்…
அவர்களுக்கு ஈத்தன் மேல் கொஞ்சமும் நம்பிக்கை இல்லை… அதனால் தான்…
மேடையில் டிப்பார்ட்மெண்ட் குறித்த அறிவிப்புகள் முடிய…
ஈத்தனிடம் மைக் கொடுக்கப்பட்டது…
அப்பொழுது கட் கட் கட் என்று எதையோ இவர்கள் விடாமல் வெட்டி தள்ள… மேடையை தவிர சுற்றி இருந்த விளக்குகள் ஒவ்வொன்றாக அணைய ஆரம்பித்தது…
இரவு நேரம்… இதமான தென்றல் வீச…
காற்றே இளம் காற்றே
இசையாக வருவாயா…
பூவே வெண் பூவே
புதிதாக மலர்வாயா…
இவள் கூந்தல் மழை மேகம்
அதில் நீந்தி செல்ல
என்று தன் மென் குரலில் சன்னமாக பாட ஆரம்பித்த ஈத்தன்…
மெல்ல மெல்ல தன் ஸ்ருதியினை ஏற்றி…
ஒரு காதல் ஒரு நேசம்
இரு
உயிர் கூட்டில் ஒரு சுவாசம்
புது வானம் பல தேசம் செல்வோமே
அன்பே வா…..
என்றவன்… தன் மொத்த குரலினையும் வெண்ணையாக உருக்கி…
பகல் இரவாய் கண் விழித்திடவா
உனதருகே நான் பிழைத்திடவா
யுக யுகமும் ஒரு நொடிதான் இன்றே
இதயமெல்லாம் நீ நிறைந்திடவா
உனதுயிராய் இருந்திடவா
உடை கலைவாய் என்னை அடைவாய்
என்று பாடியவனிடம், அங்கிருந்த கன்னி இதயங்கள் மொத்தமும் விழுந்துவிட்டிருக்க…
அறையில் பல்பை எல்லாம் நிறுத்தி, திருட்டு வேலை பார்த்த கூட்டம் அப்படியே நழுவி… கெத்தாக… மேடை முன்பு வந்து நின்றுவிட்டு இருந்தது…
ஒருவரின் அலைப்பேசி விடாமல், அனைத்திலும் ஈத்தன் காணொளியாக பதிவாக ஆரம்பித்து இருந்தான்…
முதல் பாடல் மூலம் தென்றலாக வீசி, பட்டாம்பூச்சிகளை அனைவரின் அடிவயிற்றிலும் பறக்க விட்டவன்…
அடுத்த பாடலின் மூலம் மொத்த கூட்டத்தினையும் நெருப்பாக்கிவிட்டான்…
First things first, I'ma say all the words inside my head
I'm fired up and tired of the way that things have been, oh-ooh
The way that things have been, oh-ooh
Second thing second
Don't you tell me what you think that I could be
I'm the one at the sail, I'm the master of my sea, oh-ooh
The master of my sea, oh-ooh
என்று தகுந்த இடைவெளியுடன் பாடியவன்…
அடுத்து சிறு இடைவெளிக்கூட விடாமல்…
I was broken from a young age
Taking my sulking to the masses
Writing my poems for the few
That look at me, took to me, shook to me, feeling me
Singing from heartache from the pain
Taking my message from the veins
Speaking my lesson from the brain
Seeing the beauty through the...
Pain!
You made me a, you made me a believer, believer
Pain!
என்று பாடலின் ஒவ்வொரு வரியினையும் உணர்ந்து அவன் மூச்சுவிடாமல் பாட… அவனுக்காகவே எழுந்தப்பட்டிருந்த அவ்வரிகள்… உலகம் எங்கும் அவனை எடுத்து சென்று சேர்த்துவிட்டு இருந்தது…
மேடையேறி வந்து அவனை அணைத்துக்கொண்ட சீனியர் குழு, “ஹே ஈத்தன்… சான்சே இல்லை… இது சென்னையா, இல்லை நியூயார்க்கானே எங்களுக்கு தெரியலை டா…” என்றவர்கள்… “பாவி… பையனா பொறந்துட்டயே டா… இல்லை என்னோட முதல் லிப் கிஸ் உனக்கா தான் இருந்து இருக்கும்…” என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டு அவனை தூக்கிக்கொள்ள…
பல வருடங்கள் கழித்து வாய்விட்டு சிரித்த ஈத்தன்… பக்க விளைவுகள் எதுவும் இல்லாத அப்போதையில் மெல்ல ஆழ்ந்து போனான்…
அதுதான் அவன் கல்லூரிக்கு வந்த கடைசி நாளும்…
ஆம், கல்லூரியில் இருந்து பதிவுசெய்யப்பட்டு பகிரப்பட்ட வீடியோ மூலம்… காட்டு தீயை விட அதி வேகமாக பரவிவிட்டவன்…
அதன்பிறகில் இருந்து ஒரே ஓட்டம் தான்…
அவனின் வலிகள் அனைத்தும் பின்னோக்கி செல்ல ஆரம்பித்துவிட… பேரனின் மாற்றத்தில் உமையாளுக்கு அவ்வளவு மகிழ்ச்சி…
சித்ரலேகா மகன் ஈத்தன்… ஹன்டர் மகன் ஈத்தன் என்பது மறைந்து…
ஈத்தன் அம்மா சித்ரலேகா… ஈத்தன் அப்பா ஹன்டர்… என்றானது…
உமையாளும், இசையும் அவன் இருக்கண்களாக இருக்க… இப்பொழுது அவனின் ஒரு கண்ணிற்கு கஷ்டம் வந்துவிட்டு இருந்தது…
📌 Next UD link
கருத்துகள்
கருத்துரையிடுக