14.3 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🪻

மறுநாள் காலை பேரனின் பிறந்தநாளுக்கு என்று இந்தியாவில் இருந்து சர்ப்ரைஸாக வந்த மயில்வாகனமும், உமையாள் அம்மையாரும் கண்டது, மகள், மருமகன் மற்றும் பேரன் இல்லாத வீட்டை தான். 


அதுவும் வீடு இருந்த நிலைமை…


மயில்வாகனம், உடனே சித்ரலேகாவிற்கு ஃபோனை போட்டார். அவருக்கும் மேனேஜர் தான் பதில் கூற எடுத்தது. ஆனால் ஈத்தன் போல் மயில்வாகனம் ஒன்றும் குழந்தை கிடையாதே… அவர் போட்ட சத்தத்தில் பதறியவர்… சில நிமிடங்களில் சித்ரலேகாவை பேச வைக்க… 


சித்ரலேகா, ஹன்டருக்கு ஆட்கள் மூலம் தொடர்புக்கொண்டு, ஈத்தன் அவருடன் இருக்கின்றானா என்று விசாரிக்க… 


அடுத்த ஒரு மணி நேரத்தில் ஈத்தன் மிஸ்ஸிங் என்று போலீஸில் புகார் பதிவு செய்யப்பட்டது…


அடித்து பிடித்து சித்ரலேகாவும், ஹன்டரும் ஓடிவந்து இருந்தனர்…


இருவரும் இருந்த வெறுத்த மனநிலையில் பிள்ளையை, 

ஹன்டர் ‘சித்ரலேகா பார்த்துக்கொள்வார்’ என்றும், சித்ரலேகா ‘ஹன்டர் பார்த்துக்கொள்வார்’ என்றும், நினைத்து விட்டுட்டு இருக்க… இருப்பக்கமும் திருப்பி அடிக்கப்பட்டவன், தொலைந்தே போனான்…


முப்பத்தி ஐந்து வயதை கடந்தப்பின், தந்தையிடம் இருந்து முதல் அடியை சித்ரலேகா வாங்கி இருந்தார். ஆம் மயில்வாகனம் ஆத்திரத்தில் அறைந்தே விட்டு இருந்தார்.


உமையாளும், “அப்படி என்ன சித்ரா பிள்ளையை மறக்கும் அளவுக்கு உனக்கு கஷ்டம்…?” என்று திட்ட… எங்கிருந்து அவர் தன் மன வேதனைகளை பகிர்வது…


ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனநிலை… ஒவ்வொரு நியாயங்கள்… அவரவர் இடத்தில் நின்று பார்த்தால் தான் தெரியும்…


ஈத்தனோ அங்கு கியூவில் நின்று தனக்கான உணவினை வாங்கி உண்டவன், அந்த பாத்திரத்தை கழுவி தனக்கென்று அவர்கள் கொடுத்த இடத்தில் வைத்துவிட்டு, அங்கிருந்த சர்ச்சினுள் சென்று அமைதியாக அமர்ந்துவிட்டு இருந்தான்…


தாய், தந்தை, இரண்டு பக்க தாத்தாப்பாட்டிகள், கோடிக்கணக்கான சொத்துக்கள் என்று அனைத்தும் அவனுக்கு இருக்க, அவனோ இப்பொழுது இருந்தது அரசாங்கம் நடத்தும் அனாதை இல்லத்தில். தனக்கான இடம் என்று அவன் நினைத்தது அதைதான்.


அனைத்தையும் விட்டுவிட்டு நேற்று அங்கு வந்திருந்தவன்… அவர்கள் என்ன கேட்டும் எதுவும் சொல்லவில்லை… தனக்கு யாருமில்லை என்றவன், தன்னுடைய பெயரை கூட வெளிப்படுத்தவில்லை… அவ்வளவு அழுத்தமாக இருந்தான்… 


ஐந்து வயதிற்கு பிறகான ஈத்தனின் புகைப்படங்கள் எதுவும் சோஷியல் மீடியாவிலோ, செய்திகளிலோ பகிரப்படாமல் இருக்க அவனை யாருக்கும் தெரியவும் இல்லை.


சித்ரலேகாவிற்கு அவனை பாடகன் ஆக்க வேண்டும்… ஹன்டருக்கு அவனை நடிகன் ஆக்க வேண்டும் என்ற கனவு இருக்க… சரியான சந்தர்ப்பத்தில் தான் அவனை மக்கள் முன்பு, இதற்கு பின்பு நிறுத்த வேண்டும் என்ற முடிவுடன் இருவரும் அவனை மீடியாவிற்கு காட்டுவதை நிறுத்தி இருந்தார்கள். 


தினமும் பார்த்து பழகிய முகத்தை விட, நீண்டக்காலம் காட்டாமல் வைத்திருந்து காட்டும் முகத்திற்கு மவுஸ் அதிகம் என்பதால் தான்…


ஈத்தனிடம் மேலும் எதுவும் கேட்டால், எதுவும் செய்துக்கொள்ள போகிறான், இல்லை இங்கிருந்து கிளம்பிவிட போகிறான்… என்று நினைத்தவர்கள், அவனிடம் கனிவாக பேசி, அவனுக்கு வேண்டியதை உடனிருந்து செய்து தர, அங்கிருந்த பிள்ளைகளுடன் படுத்துக்கொண்டவனின், உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை… 


தினமும் தனிமையில் கிடந்து தவித்தவன்… இப்பொழுது பலருக்கு மத்தியிலும் தவித்துக்கொண்டு தான் கிடந்தான்…


ஈத்தன் வந்து சேர்ந்த சில நிமிடங்களிலேயே, அவனுக்கு தெரியாது அவனை படம் பிடித்திருந்த, அந்த இல்லத்தின் அரசாங்க நிர்வாகி, அவன் சொன்ன தகவல்களை அதனுடன் சேர்த்து, போலீஸிற்கு ரிப்போர்ட் செய்துவிட்டு இருக்க… சித்ரலேகாவும் ஹன்டரும் புகார் செய்த ஒருமணி நேரத்திலேயே ஈத்தனை போலீசார் கண்டுப்பிடித்துவிட்டு இருந்தனர்…


அனைவருக்குமே அப்படி ஒரு அதிர்ச்சி…


சித்ரலேகாவிற்கு பெற்ற வயிறு இடிந்தே போனது… ஹன்டருக்கோ நெஞ்சம் எல்லாம் நொருங்கிப்போனது…


பெரியவர்களின் கனிந்த இதயமோ, பிஞ்சு இதயதத்தின் முடிவில், தன் பலத்தினை இழந்துவிட்டு இருந்தது..‌.


சாதாரணமாக இருப்பக்கமும் சுமூகமாக டைவர்ஸ் எடுக்கும் தம்பதிகளின் பிள்ளைகளின் மனநிலை சீரடையவே குறைந்தது 2 வருடங்கள் ஆகும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.


இங்கோ பல காயங்களை அல்லவா அவன் மனதில் ஏற்படுத்திவிட்டனர்.


அங்கிருந்த பிள்ளைகளுடன் தோட்டத்தில் இருந்த செடிகளுக்கு நீரை ஊற்றிக் கொண்டிருந்த ஈத்தனின் கரங்கள், திடீரென்று பின்புறம் இருந்து வந்த, 


“ஈத்…” 


“ஈத்தன்…”


என்ற ஹன்டர் மற்றும் சித்ரலேகாவின் அழைப்பில் ஒரு கணம் அசையாமல் அப்படியே நின்றன… மறுகணம் தன் கையில் இருந்த பைப்பை தொப்பென்று கீழே போட்டவன்… திரும்பிக்கூட பார்க்காமல் ஓட ஆரம்பித்து இருந்தான்…


“ஈத் டோன்ட் ரன்…”


“ஈத்தன் அம்மாக்கிட்ட வா…”


எதுவும் அவனை நிறுத்தவில்லை…


வேண்டாம்… அவனுக்கு அவர்கள் வேண்டாம்… 


அவர்கள் தரும் காயங்கள் வேண்டாம்… 


அவனால் அதன் வலிகளை தாங்க முடியவில்லை…


பல பிள்ளைகள் வீட்டில் கோபித்துக்கொண்டும், இல்லை வீட்டில் ஸ்டெப் டாட், ஸ்டெப் மாம் போன்ற மாற்றாம் பெற்றோரின் சித்ரவதைகளை தாங்க முடியாமலும், இல்லை வீட்டில் யாரும் பாலியல் ரீதியாக தொல்லை தந்தாலும் வருவதுண்டு… 


சாதாரண சண்டையாக இருந்தால், என்னவென்று விசாரித்து பெற்றவர்களுடன் அனுப்புவார்கள், இல்லை அவர்கள் பிள்ளைகளுக்கு தொல்லை கொடுத்து இருந்தால் சட்டப்படி பெற்றோர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும்…


இங்கு ஹன்டர் மற்றும் சித்ரலேகா பக்கம் இருந்து வந்திருந்த வக்கீல்கள்… போலீசாரிடம் ஈத்தனின் வீட்டு நிலையை விளக்கி, அவன் கோபித்துக்கொண்டு வந்ததாக எப்படியோ பதிவு செய்து முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது…


நிர்வாகிகள் சென்று ஈத்தனிடம் வீட்டிற்கு அவனை அனுப்புவது குறித்து பேச… அழுத்தமாக மாட்டேன் என்று மறுத்துவிட்டான்…


அதில் அதிர்ந்த ஹன்டர் சென்று ஈத்தனிடம் பேசிப்பார்த்தார்… எத்தனையோ முறை அவனிடம் மன்னிப்பும் கேட்டார்… 


சித்ரலேகாவும், அவனிடம் பேசிப் பார்த்தார், கெஞ்சிப்பார்த்தார், அவனை திட்டிப் பார்த்தார்… 


எதற்குமே ஈத்தன் மசியவில்லை… 


தங்களின் மகனா இவன் என்று இருந்தது அவர்களுக்கு… எவ்வளவுக்கு எவ்வளவு அவன் மென்மை என்று நினைத்தார்களோ, அதே அளவிற்கு அவன் நான் அழுத்தம் என்பதையும் காட்டி இருந்தான்.


பழி வாங்க வேண்டும் என்றெல்லாம் அவனுக்கு கிடையாது. அவர்கள் தந்த நிராகரிப்புகளை அவனால் கடக்க முடியவில்லை… தன்மானம் தடுத்தது… அவ்வளவு தான்… 


இறுதியில் நிர்வாகிகள் ஈத்தன் மனம் மாறும் வரை இங்கேயே இருக்கட்டும் என்று கூற… யாராலும் அதை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை…


நடப்பதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த மயில்வாகனமும், உமையாள் அம்மாவும்… இறுதி முயற்சியாக தாங்கள் ஒருமுறை சென்று பேசுவதாக கூறி பேரன் இருந்த அறைக்குள் நுழைந்தார்கள்.


தங்களின் குலவிளக்கு இருக்கும் இடமா அது… மயில்வாகனம் தளர்ந்து போனார்…


‘இன்னும் என்னவெல்லாம் எங்களை பார்க்க வைக்க போகிறாய் முருகா…’ என்று அவர் மருக…


“ஐயா சமரா…” என்று அவனை தன் மார்புடன் சேர்த்து அணைத்துக்கொண்ட உமையாள் அம்மாவின் கண்கள் கண்ணீரை நிறுத்தவே இல்லை…


அவன் பிறந்ததும் வெள்ளியில் தொட்டில் செய்து, தங்க இழைகள் கொண்டு பட்டாடை நெய்து, அமெரிக்காவிற்கு கொண்டு வந்தவர்கள் அவர்கள்… 


இன்றோ… அவன் ஏதோ ஒரு பொது படுக்கையில், யாரோ கொடுத்த உடையில் அமர்ந்திருப்பதை பார்க்க முடியவில்லை…


“பிறந்த நாள் அதுவுமா என்ன சமரா இதெல்லாம்… உனக்கு இந்த தாத்தா பாட்டி ஞாபகம் கொஞ்சமும் வரலையா… இல்லை உனக்கு நாங்க ஒன்னும் இல்லையா… ஒரு ஃபோன் எங்களுக்கு செய்யலையே ஐயா நீ… நாங்க உயிரோட இருந்து என்ன பயன்…”, என்றவர்களின் நரம்போடிய முதிர்ந்த கரங்கள் அவனின் உடல் முழுவதையும் வருட…


அவ்வளவு நேரமும் தன் உணர்வுகளை அடக்கி கொண்டு இருந்தவன் கண்கள், மெல்ல நீர் முத்துக்களை ஒவ்வொன்றாக கொட்ட ஆரம்பித்து, பிறகு வேகம் எடுத்தது…


உமையாள் அம்மாவின் இடுப்பை கட்டிக்கொண்டு… அவர் வயிற்றில் முகத்தை புதைத்துக் கொண்டான்…


அவன் மட்டும் என்ன பிடித்தா இங்கு வந்தான்… இல்லை பிடித்து தான் இருக்கின்றானா…


“ஒன்னும் இல்லை சமரா… அந்த குமரனோட விளையாட்டு தான் இதெல்லாம்… இங்க பாருயா… பொறந்தநாள் அதுவுமா அழக்கூடாது… எல்லாம் சரியாகிடும்… நாங்க இருக்கோம் உன்கூட…”, என்றவர்… தன் கைப்பையில் இருந்து அவனுக்காக ஊரில் இருந்து அர்ச்சனை செய்து கொண்டு வந்திருந்த சாமி கயிற்றை அவன் கையில் கட்டிவிட்டு… அவன் நெற்றியில் விபூதியை பூசிவிட்டு… “உனக்காக தான் நானும் தாத்தாவும் சர்ப்ரைஸா வந்தோம் சமரா…” என்று கூறி… முகத்தை துடைத்துவிட…. கொஞ்சம் கொஞ்சமாக தன் அழுகையை நிறுத்தினான்…


தான் யாருக்கும் தேவையில்லை என்ற எண்ணத்தில் இருந்தவனுக்கு… அவனுக்காக என்று வந்தவர்களின் வரவு ஆறுதலாக இருந்தது…


எவ்வளவு தான் பட்டாலும், இந்த மனிதன் மட்டும் ஏனோ, அன்பின் பால் தோற்றுப் கொண்டே தான் இருக்கின்றான்… 


அதிலும் ஈத்தன் சிறு பிள்ளை சொல்லவும் வேண்டுமா? 


உமையாளின் இடுப்பை மீண்டும் கட்டிக்கொண்டான்…


சிறிது நேரம் கழித்து, “கிளம்பு சமரா… ஷாப்பிங் போகலாம்… உனக்கு என்ன வேண்டும் கேளு தாத்தா இன்னைக்கு வாங்கி கொடுத்துட்டே இருப்பார்…” என்று சகஜமாக அவனை உமையாள் அம்மையார் கிளப்ப பார்க்க…


நிமிர்ந்து அவர் முகம் பார்த்தவன், ‘மாட்டேன்…’ என்று அழுத்தமாக தலையாட்டி இருந்தான்… மீண்டும் அவன் கண்களும் கலங்க ஆரம்பித்துவிட்டது…


அதில் அப்படியே அவன் அருகே அமர்ந்து விட்டார்கள் இருவரும்…


ஈத்தனின் முகமே அவன் மனதை நிறைய வேதனைகள் அழுத்திக்கொண்டு இருப்பதை காட்டி இருந்தது.


“பாட்டி எங்கேயும் உன்னை கூப்பிடலை சமரா… அழக்கூடாது…” என்றவர் அவன் முதுகை தட்டி தடவி கொடுக்க… இம்முறை நீண்ட நேரம் எடுத்தது அவன் அமைதியடைய…


கண்ணாடி பாத்திரம் போல் மாறிவிட்டு இருந்தான்…


அப்பொழுது அங்கு வந்த சித்ரலேகா, “இன்னும் என்ன ஈத்தன்… ஏன் இப்படி அடம் பிடிக்கிற… கொஞ்சம் கூட எங்களோட சிட்டுவேஷனை புரிஞ்சுக்க மாட்டயா நீ… ஏன் இப்படி செல்ஃபிஷ் மாதிரி பிஹேவ் பண்ற… இப்ப என்ன நடந்துடுச்சு உனக்கு… ஏன் இப்படி எங்களை அசிங்க படுத்தற… எழுந்திரு முதல்ல… வா போகலாம்…” என்று அதட்டியவர், அவன் கையை பிடித்து வலுவாக இழுக்க…


“ப்ச்… என்ன சித்ரா இது… குழந்தை கையை முதல்ல விடு… விடுன்னு சொல்றேன் இல்ல… யார்கிட்ட என்ன பேசணும்னுற பக்குவம் உனக்கு இன்னும் வரலை… போ நீ… நாங்க பார்த்துக்கறோம்…” என்று அவரை அனுப்பிவிட்டவர்கள்…


“என்ன சமரா நீ முடிவு செய்திருக்க… எதுவா இருந்தாலும் சொல்லு… நாங்க உனக்கு துணையா இருக்கோம்… இங்க தான் உனக்கு இருக்கனும்னாலும் சொல்லு, நானும் பாட்டியும் உன் கூடவே இங்க இருந்துக்கறோம்” என்றார் மயில்வாகனம்… அவனின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து… உமையாளும், “சொல்லு சமரா…” என்று அவன் கையை பற்றிக்கொள்ள…


அதில் அவ்வளவு நேரமும் அமைதியாக இருந்தவன், ஒருவழியாக தன் மௌனத்தை கலைந்தான்…


அப்பொழுது கூட அவன் தன் பெற்றோர்கள் பற்றியோ, அவர்கள் அவனை விட்டு சென்றது பற்றியோ, இல்லை அவர்கள் அவனை நிராகரித்தது குறித்தோ அவன் பேசவில்லை…


அவனுக்கு என்ன தேவையோ அதைப்பற்றி மட்டும் தான் பேசினான்…


அடுத்த பத்து நிமிடங்களில் அவன் கைப்பிடித்து அழைத்து வந்த மயில்வாகனம், “நாங்க சமராவை எங்கக்கூட இந்தியா அழைச்சுட்டு போறோம் சித்ரா” என்றவர், அவனை அழைத்தும் சென்றுவிட்டார்.


அந்நேரத்திற்கு அங்கிருந்து அவன் வெளிவந்ததே சித்ராவிற்கும், ஹன்டருக்கும் போதுமானதாக இருக்க, சிறிது நாட்கள் போகட்டும், பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டனர். அவன் வெகு தூரம் போயி விட்டதை அறியாமல் போயிவிட்டனர்.


அதன்பிறகு ஒருசில வாரங்களுக்குள்ளே மீடியா முழுவதும் ஹன்டர் மற்றும் சித்ரலேகாவின் டைவோர்ஸ் கேஸ் பற்றிய தகவல்கள் பரவியது. சித்ரலேகாவை இந்தியா வந்துவிட கூறி மயில்வாகனம் எவ்வளவு கூறியும் அவர் கேட்கவில்லை. “என்னை தனியா விடுங்க” என்பது தான் அவரின் ஒரே பதிலாக இருக்கும். மகளை பார்க்க மயில்வாகனம் மட்டும் அமெரிக்கா சென்று வந்துக்கொண்டு இருந்தார்.


இங்கு உமையாள் முழுநேரமும் ஈத்தன் உடன் தான்…


ஒருசில மாதங்களில் சித்ரலேகாவிற்கும், ஹன்டருக்கும் டைவர்ஸூம் வந்துவிட… மறுவாரமே ஹன்டர் தன் திருமணத்தை முடித்துக்கொண்டார்…


அதில் அப்படி ஒரு ஆத்திரம் சித்ரலேகாவிற்கு, ‘அவ்வளவு தான் என் தாக்கமா… என்னை விட எதில் அவள் சிறந்தவள்… நன்றி கெட்டவன்… துரோகி…’ என்று பல மனதினுள் ஓட… அப்பொழுதும் அவர் இந்தியா திரும்பவில்லை… 


‘நான் எப்பொழுதும் வாழ்க்கையில் தோற்க மாட்டேன்’ என்று தனக்கு தானே கூறிக்கொண்டவர், அடுத்த இரண்டு மாதங்களில் அவரிடம் முதன் முதலில் காதல் கூறியிருந்த, அவரை ஹாலிவுட்டிற்கு அறிமுகம் செய்திருந்த, அந்த டைரெக்டர் ஆப்பிரஹாமை திருமணம் முடித்துவிட்டார்… இதை மயில்வாகனமோ உமையாளோ சிறிதும் எதிர்பார்க்கவில்லை…


இரண்டாம் திருமணம் பெண் செய்யக்கூடாது என்று எல்லாம் அவர்களுக்கு இல்லை… வீம்புக்காக இப்படி அவசர அவசரமாக செய்துவிட்டாரே என்பது தான்… ஆனால் சித்ரலேகா மிகவும் தெளிவாக தான் முடிவு எடுத்திருந்தார்…


அதன்பிறகு என்ன ஈத்தனின் தாய் தந்தை, வேறு சிலருக்கும் தாய் தந்தை ஆகிவிட்டனர்… ஈத்தனால், எதையும் புரிந்துக்கொள்ளவும் முடியவில்லை… ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை… அவர்கள் என்ன அழைத்தும் அவன் திரும்பி செல்லவே இல்லை… மனதளவில் மேலும் மேலும் ஒதுங்கிவிட்டான்…


சில மாதங்களில் அவர்களும் அவனை அழைப்பதை விட்டுவிட்டனர்… குடும்பம், தொழில் என்று பார்க்க வேண்டாமா?!


அத்துடன் இதற்கு மேல் என்னால் எதையும் தாங்க முடியாது என்று மயில்வாகனம் உலக வாழ்க்கையில் இருந்து விடுதலை பெற்றுக்கொள்ள… அனைத்து பொறுப்புகளும் உமையாள் அம்மாவின் தலையில் வந்து இறங்கியது… 


தன்னை தானே திடப்படுத்திக்கொண்டு, இன்று வரை ஈத்தனுக்காக அவனுடன் ஓடியவர்… இதோ இன்று ஓய்வில் படுத்துவிட்டார்…


மீண்டும் தனிமையில் ஈத்தன்…!

📌Next UD Link

https://swathilakshmitamilnovels.blogspot.com/2025/03/151.html







கருத்துகள்

  1. Ethan pavam dan chinna vayadulaye thaniya irukan parents pasamgala pathi yosikarde illa avamga life dan mudalla parkudumga,

    பதிலளிநீக்கு
  2. Super sis...heart touching epi...

    பதிலளிநீக்கு
  3. Fine sister nxt ud seekram Post pannunga

    பதிலளிநீக்கு
  4. Pavam Ethan . Parents epad la ma. Irupanga. Soo sad

    பதிலளிநீக்கு
  5. 😢 so sad but I am waiting kurnchi entry in his life.intresting story

    பதிலளிநீக்கு
  6. Ivlo parentsala kastapatrukan ethan...kurunchi eppudi ethan kuda sentha Ava evlo kasta pata therilaiye... very sad about cithraleka..Inga pasangalukaga sakithu vazhura tamilnatla...ivanga Kula pirinchitanga konjam understanding and caring irrunthirntha pirinjirkamatanga...but story vanthirkathu very interesting eppidi sis superb 😍

    பதிலளிநீக்கு
  7. Writer Nan samar and kurinji story than solluvenga nu pathen... Aathadi ithu athukum munadi iruku .. paavam samar.. kutty paiyana irukarapo romba kasta patutan pola. Enaku alughaiye vanthuruchu. But Ela epdi um super... Neenga think panni elutharengala ila epdi ipdilam. Enala nejama can't control my tears

    பதிலளிநீக்கு
  8. அப்பாவின் கோபமும் அம்மாவின் எதிர்ப்பும் அவர்களின் பிரிவை சொல்ல...

    நேற்று வரை குடும்பமாக இன்று நான் தனி மரமாக...

    நேற்று இருந்த பாசம் இன்று எல்லாம் வேஷம்...


    அப்பா ஒரு துணையுடன் தனியாக இருக்க

    அம்மா ஒரு குடும்பத்துடன் திளைத்து இருக்க

    நான் மட்டும் தனி மரமாய் தனித்து நிற்கிறேன்...


    பெற்றவர்களின் பிரிவு பிள்ளைகளின் சாபம்...

    பாட்டி தாத்தா வீட்டில் தன்னை
    பொருத்திக் கொண்டாலும்
    பெற்றவர்களின் பிரிவு பாதிப்பாய் என்றும் மனதில்
    பரிதவிக்கும் சிறு குழந்தையாய் என்றும்.....


    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates

Popular posts

Completed- உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே💘- (Completed story available here for free Read)

New Ongoing 💌 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🎼🪻😘💌

Completed-💃🕺அழகான இராட்சசியே அடிக்கரும்பாய் இனிக்கிறியே - Romantic Entertainment

Completed-மகிழ்மதியின் அரசன்- Royal Family Based Romantic love story

1. சங்கீத வானில் ஓர் அந்திப்போர்!😘🕺💃🎼🪻