12.1 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🪻
அத்தியாயம்-12
சென்ட்ரல் நோக்கி காரில் பயணித்துக்கொண்டிருந்தாள் குறிஞ்சி.
ஈத்தன் வீட்டில் இருந்து எப்படியாவது கிளம்பிவிட வேண்டும் என்றும், இனியொருமுறை அவன் முகத்தில் முழிக்கவே கூடாது என்றும், சற்று முன்னர் வரை அவள் வேண்டாத தெய்வம் இல்லை…
இறுதியில் அவளின் வேண்டுதலுக்கு உடனடி பலனாக ஈத்தனே அவள் எதிர்பார்த்ததை கொடுத்துவிட்டு இருந்தான்…
அவள் எங்கு செல்ல வேண்டும் என்று கூறுகிறாளோ அங்கு அழைத்துச்சென்று அவளை விடக்கூறி தாமஸிடம் சொல்லிவிட்டு, ஈத்தன் அழைப்பை துண்டித்துவிட்டு இருந்தான்…
அவள் நினைத்துக்கூட பார்க்காத அளவிற்கு அச்சூழலில் இருந்து இலகுவாக விடுபட்டுவிட்டு இருந்தாள்.
ஆனால் அதை எண்ணி அவள் மனம் நிம்மதி அடைவதற்கு பதிலாக, வெறுமையில் மூழ்கி விட்டு இருந்தது.
‘அவர் நினைவே எனக்கு போதும். அவருடன் வாழவெல்லாம் எனக்கு எப்பொழுதும் ஆசையில்லை’ என்று என்னதான் அவள் மூச்சுக்கு முன்னூறு தடவை கூறிக்கொண்டு இருந்தாலும். அவளின் ஆழ்மனதின் எண்ணங்கள் வேறாக அல்லவா இருக்கிறது. அதில் எண்ணிலடங்கா ஆசைகள் எக்கச்சக்கமாக புதைந்துள்ளதே…
தனக்கு பிரியமானவரிடம், தன்னால் எந்த பிரதிபலிப்பும் இல்லை என்பது எவ்வளவு பெரிய வலியை தரும்…
அதில் தான் மறுகிக்கொண்டு கிடந்தாள்…
அவளாக கிளம்புவது வேறு, அவனே அனுப்பிவிடுவது வேறல்லவா…?
பாவம் அவளுக்கு தெரியவில்லை. ஈத்தன் முகத்தை பார்க்க அவள் அஞ்சுவது போலவே, இப்பொழுது ஈத்தனுக்கும் அவளுடைய முகத்தை நேருக்கு நேர் பார்க்க அச்சம் வந்துவிட்டது என்றும், அதனால் தான் அவளை அனுப்பிவிட்டான் என்றும் அறியாது போனாள்.
அவள் இறக்கிய இடியில், இரவு முழுவதும் ஒருப்பொட்டு உறக்கமின்றி, கண்ணை கட்டி காட்டில் விட்டது போல், அவளால் அங்கு ஈத்தன் இருக்கின்றானே!
ஒருப்புறம் ஈஷாவின் ஞாபகம் வேறு வந்து வந்து குறிஞ்சியை அப்படி வாட்டியது. ஈத்தன் மாடியில் இருப்பது தெரிந்து இருந்தால், கடைசியாக ஒருமுறை குழந்தையை கண்குளிர பார்த்துவிட்டு கிளம்பி இருப்பாளே…
இப்பொழுதோ, அப்பொன்னான வாய்ப்பை, நழுவ விட்டுவிட்டதில் வேறு, மேலும் அவளுக்கு துக்கம் தான் பெருகியது.
அதிலும் ஈஷாவை பற்றி நினைக்க ஆரம்பித்ததுமே, ஈஷாவின் இதமான மென் ஸ்பரிசங்களும், ரோஜா பூவின் மணத்துடன் கூடிய அவளின் பிரத்யேக நறுமணமும், அவளின் இன்னும் உடையாத குழைந்த மென் குரலும், குறிஞ்சிக்கு ஞாபகத்துக்கு வர… அந்நினைவே அவளின் உடலையும் நாசியையும் மீட்ட… குறிஞ்சியின் உடலெல்லாம் ஏதேதோ மாற்றங்கள்…
உணர்வுகளின் பிரவாகத்தில் இதயமே வெடித்துவிடும் போல் இருந்தது…
கண்களை இறுக மூடிக்கொண்டாள்…
மூடிய கண்களுக்குளிருந்து சூடாக உற்பத்தியான நீர் கன்னங்களின் வழியே வழிய ஆரம்பிக்க, காரில் யாரும் பார்க்காத வண்ணம் முகத்தை ஜன்னல் பக்கம் திருப்பிக்கொண்டவள், கண்ணீரை உள்ளிழுத்து, பாறாங்கல் போல் தொண்டையை அடைத்து நிற்கும் துக்கத்தை விழுங்கிக்கொண்டாள்…
இதெல்லாம் அவளுக்கு ஒன்றும் புதிது இல்லை. பழக்கப்பட்டவைகள் தான்.
__________________________
மெல்ல காலை பொழுதுவிடிய தொடங்க, இரவு முழுவதும் தன் கூட்டில் அடைப்பட்டு கிடந்த பறவைகள் அனைத்தும் ஆர்பாட்டத்துடன் விடுபட்டு, சிறகடித்து பறக்க ஆரம்பித்தன…
அந்த சத்தத்தில் கூட ஈத்தனின் கவனம் சிதறவில்லை…
இரவு குறிஞ்சியின் அறையில் இருந்து மூச்சு முட்ட வெளியேறியிருந்தவன், நேராக இங்கு வந்து அமர்ந்துவிட்டு இருந்தான்…
அப்பொழுதிலிருந்து இவ்வினாடி வரை, ஒரு வினாடி விடாது யோசித்து பார்த்துவிட்டான்...
இதுவரை குறிஞ்சியின் காதலை அவன் ஒருமுறை கூட கண்டதும் இல்லை. உணர்ந்ததும் இல்லை.
அப்படியிருக்கையில் எப்படி?
மேலும் இன்னொருவனை திருமணம் செய்ய இருந்தவள், எவ்வாறு தன்னை?
முதலில் எப்படி அவளின் அக்கா மாமாவெல்லாம் அவளை இப்படி தனியாக வாழ விட்டு இருப்பார்கள்.
என்னதான் நடந்தது?
என்னதான் நடக்கிறது?
ஏதோ பெரிய மர்ம தொடரை பார்ப்பது போல் இருந்தது அவனுக்கு.
மூளை ஒருவிதமாக தன் சிந்தனைகளை பயணிக்க விட்டால், மனமோ அவைகளுக்கு எல்லாம் எதிராக, ‘நான் இங்க தான் இருப்பேன்’ என்று ஒரே இடத்திலேயே திடமாக நின்றுவிட்டு இருந்தது.
என்ன அது சொல்ல வருவதை காது கொடுத்து கேட்க தான் அவனுக்கு இஷ்டம் இல்லை.
இருந்தும் அதுவும் நிறுத்தாது, ‘எது எப்படி இருந்தாலும் அவளோட வாழ்க்கையில் இப்போதைக்கு நீ தான் இருக்க ஈத்தன். அது கடமைக்கோ இல்ல எதுக்கோ. அதை என்னன்னு முதலில் நீ பார்’ என்று அவன் எவ்வளவு தவிர்க்க பார்த்தும் ஒருபக்கம் அதுக்கூறிக்கொண்டே இருக்க… என்ன செய்வான் அவன்…!
அதற்கான தீர்வு அவனிடம் இல்லவேயில்லை…
அப்பொழுது பார்த்து தான் குறிஞ்சி பையுடன் கிளம்பி நிற்க…
பிரச்சனையை முடிக்க அவளை விட்டுவிட்டும் இருந்தான்…
ஆனால்?
விட்டப்பிறகும் அவனுக்கு விடிவு கிட்டவில்லை…
மீண்டும் மீண்டும் குறிஞ்சியின் நினைவுகளே!
சரியென்று விழுங்கவும் முடியவில்லை… வேண்டாம் என்று துப்பவும் முடியவில்லை…
திரிசங்கு நிலையாகி போனது அவன் நிலைமை…
இறுதியில் அவள் மீதான அவனின் பாசமும், அதுதந்த அக்கறையும், கடமையும், எல்லாம் தாண்டிய மரியாதையுணர்வும் அவனை இழுத்துப்பிடிக்க…
எது தன் வாழ்வில் வேண்டவே வேண்டாம் என்று நினைத்து அவன் ஒதுக்கினானோ, அதை நோக்கி தன்னை மீறி பயணிக்க ஆரம்பித்தான்…
அவனால் தவிர்க்கவே முடியவில்லை.
அலைப்பேசியை எடுத்து தாமஸிற்கு அழைத்தவன், “எங்க இருக்கீங்க தாமஸ்” என்று விசாரிக்க.
“ஸ்டேஷன்ல அவங்களை விட்டுட்டு வெளியே வந்துட்டு இருக்கோம் சார்” என்றார் அவர்.
“ஓ… கிளம்பிட்டாங்களா?” என்றான் ஈத்தன்.
“நோ சார். ட்ரெயின் மார்னிங் 10.15 க்கு தான். அவங்களை வெயிட்டிங் ஹாலில் விட்டுட்டு வந்து இருக்கோம்” என்றார் அவர்.
அதற்கு “வாட்…” என்ற ஈத்தன், “அப்ப 10.15 வரை அங்கேயே இருந்து, அவங்களை பத்திரமா அனுப்பிட்டு வாங்க தாமஸ்” என்றுவிட்டு ஃபோனை வைத்தவன்… அடுத்த இரண்டு நிமிடங்களில் மீண்டும் தாமஸிற்கு அழைத்து, “எங்க இருக்கீங்க தாமஸ்?” என்று கேட்டு இருந்தான்.
அதில் ஒருநிமிடம் தன் காதில் இருந்து ஃபோனை எடுத்து பார்த்த தாமஸிற்கு ஒரே குழப்பம். கொஞ்சம் நேரம் முன்பு தானே கூப்பிட்டு இதையே கேட்டார், என்று.
இருந்தும் கேட்பது படியளக்கும் முதலாளி என்பதால், “ஸ்டேஷனில் தான் சார் இருக்கோம். நீங்க சொன்னதால் என்ட்ரென்ஸ்ல இருந்து வெயிட்டிங் ஹாலுக்கு திரும்பி போயிட்டு இருக்கோம்” என்றார்.
அதற்கு, “ஓகே தாமஸ்” என்ற ஈத்தன், சற்று இடைவெளிவிட்டு, “நான் தான் திரும்ப அனுப்பினேன்னு அவங்கக்கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம். நீங்களே கிளம்பும் வரை, கூட இருக்கிற போல இருங்க” என்றுவிட்டு வைத்துவிட்டான்.
அதில் கஞ்சிப்போட்ட முகத்தின் மீதிருந்த தாமஸின் கண்கள் இரண்டும் ஆச்சரியத்தில் விரிந்து இருந்தன.
ஏற்கனவே அத்தனை மணி நேரம், ஒரு நர்ஸிற்காக போய் அவரை ஸ்டேஷனில் ஈத்தன் இருக்க சொன்னதிலேயே அவருக்கு உறுத்தல் ஆரம்பித்து இருந்தது.
இப்பொழுதோ சொல்லவும் வேண்டுமா என்ன?
‘இதற்கே ஷாக் ஆனால் எப்படி, இன்னும் நிறைய ஸ்பெஷல் ஐட்டங்கள் இன்றைக்கு வர இருக்கின்றது’ என்று பாவம் யார் அவருக்கு சொல்வது.
அதற்குள் ஈத்தன் வீட்டு மாடியில் பொருத்தப்பட்டிருந்த இன்டர்காமில் இருந்து, “பேபி! வேர் ஆர் யூ…?” என்று சத்தம் வர…
மணியை பார்த்து அதிர்ந்த ஈத்தன், “குட் மார்னிங் பேபி… டேடி டெர்ரசில் தான் இருக்கேன்… வரேன் டா…” என்றவன், லிஃப்ட் மூலம் கீழிறங்கி, சில வினாடிகளிலேயே தங்களின் அறைக்குள் நுழைய…
படுக்கையில் எழுந்து அமர்ந்திருந்த ஈஷா, “என்னைவிட்டு எங்க போனீங்க பேபி… மிஸ் யூ” என்று ஈத்தனை கண்டதும் ஓடிவந்து அவனை கட்டிக்கொண்டாள்…
“ஒரு கால் வந்துச்சு டா பேபி… நீங்க நல்ல தூக்கத்தில் இருந்தீங்க… அதனால் தான் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு பேச வெளியே போனேன்… சாரி பேபி” என்றவன்… “ஃபிரஷ் ஆகிட்டு வாங்க” என்று அவளை அனுப்பிவிட…
தன்னுடைய குளியல் அறைக்குள் ஓடிய ஈஷா… பல் துலக்கி, முகம் கழுவி… இரவு உடையில் இருந்து வேறு உடைக்கு மாறி வெளிவர…
அறைக்குள்ளே இருந்த மற்றொரு குளியல் அறையில் தயாராகி ஈத்தனும் வெளிவந்தான்…
பிறகு எப்போதும் போல் இருவரும் ஒன்றாக கீழே இறங்கி தோட்டத்திற்கு செல்ல, அங்கு நன்கு சூரிய ஒளி படும் இடத்தில் யோகா ஆசிரியர் வந்து அமர்ந்து இருந்தார்.
யோகா மேட் எல்லாம் தயாராக விரித்து வைக்கப்பட்டிருக்க…
இருவரும் அவருடன் சேர்ந்து யோகா செய்ய ஆரம்பித்தனர்…
சிறிது நேரம் தான் ஈஷாவிற்கு… பிறகு அவள் தோட்டத்தினுள் சைக்கிள் ஓட்ட சென்றுவிட… ஈத்தனுக்கான சிறப்பு பயிற்சிகள் அவனின் குரலை மேம்படுத்த ஆரம்பித்தன…
தலையே போனாலும் அவன் தன் குரலை பாதுகாப்பதை எப்பொழுதும் நிறுத்த மாட்டான்… ஆனால் இன்றோ அதில் அவனால் ஈடுப்படவே முடியவில்லை…
மூச்சினை அடக்க கூறினால் தாருமாறாக வெளியேவிட்டான்… மூச்சினை விட கூறினால் மூச்சுவிட மறந்து மூச்சடக்கி கிடந்தான்…
வெள்ளிக்கிழமை இரவு அமர்ந்து ஹோம் வொர்க் செய்யக்கூறினால், எப்படி பிள்ளைகள் வேண்டா வெறுப்பாக, ஏனோ தானோவென்று செய்வார்களோ, அதேப்போல் எப்படியோ யோகா பயிற்சியை முடித்தவனை அடுத்து இழுத்துச் செல்ல ஜிம் கோச் தயாராக நின்று இருந்தார்…
வேறுவழியின்றி ஜிம்மினுள் நுழைந்து உடற்பயிற்சிகளை முடித்துக்கொண்டு வெளிவந்தான்…
இரவு முழுவதும் தூங்காததன் சுவடுகள் எதுவுமே அவனின் முகத்திலும், திடக்காத்திரமான உடலிலும் சிறிதும் இல்லாததால், யாரும் எதுவும் கண்டுப்பிடிக்கவில்லை…
வெந்நிற பூந்தூவாலையில் முகத்தை துடைத்தவன்… “பேபி என்ன பண்றா” என்று செக்யூரிட்டியிடம் விசாரிக்க…
“ஸ்விம்மிங் முடிச்சிட்டு… மேலே இப்ப தான் போனாங்க சார்…” என்றார்கள்.
சரியென்று படிகளின் மூலமே தங்களின் அறைக்கு ஈத்தன் ஏறி செல்ல… மூன்றாம் மாடியின் படிகளில் அவனுடைய நடை தடைப்பட்டது…
அதில் தான் நேற்றிரவு குறிஞ்சி உருண்டிருந்தாள்…
அந்நினைவுகளின் தாக்கத்தில், சற்று மட்டுப்பட்டிருந்த ஈத்தனின் இதயம், சட்டென்று மீண்டும் வேகமாக துடிக்க ஆரம்பிக்க… அப்படியே மேலேறியவன்…
அங்கு அவள் தங்கிருந்த அறையை நோக்கி நடக்க ஆரம்பித்து இருந்தான்…
வேண்டாம் வேண்டாம் என்று நினைத்து நினைத்தே அவளையே நினைத்துக்கொண்டு இருந்தான்…
🔴அடுத்த பாகம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻
https://swathilakshmitamilnovels.blogspot.com/2025/03/122.html
Aathaadi ithu enna puthu kathaiya iruku..
பதிலளிநீக்கு