8.1 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🪻😘📽️
அத்தியாயம்-8
ஈத்தனுக்கு அன்று சென்னை திரும்பி ஆக வேண்டிய கட்டாயம்.
முதல்முறையாக இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும், உலகளவிலான சதுரங்க போட்டிக்கான வரவேற்பு பாடலை பாட ஈத்தனை தான் பதிவு செய்திருந்தனர்.
புதன் கிழமை போட்டி ஆரம்பம்.
அதற்கு முன்பு நடன குழுக்களுடன் மேடையில் ரிகர்சல் பார்க்கும் பணிகள் அவனுக்கு நிறைய இருந்தன.
பின்வாங்கவெல்லாம் முடியாது.
அனைத்து நாடுகளில் இருந்தும் சதுரங்க போட்டியாளர்களும், ரசிகர்களும், சென்னை நோக்கி ஏற்கனவே வர ஆரம்பித்துவிட்டு இருந்தனர்.
இன்று காலையில் ஈஷாவை முதல் நாள், முதல் வகுப்பில் விட்டுவிட்டு செல்வதாக இருந்தான்.
இப்பொழுதோ அனைத்தும் தலைக்கீழாக மாறிவிட்டு இருந்தது.
“ஈஷாவை, நான் என்கூடவே கூட்டிட்டு போறேன் மதர். ஹெல்த் வைஸ் அவ நார்மல் ஆனதும் திரும்ப அழைச்சுட்டு வந்து விடறேன்” என்றான் ஈத்தன்.
“ஏன் ஈத்தன். நாங்க இங்க நிறைய பேர் இருக்கோமே பார்த்துக்க மாட்டோமா? அதுவும் நீ ப்ரோக்கிராம் போகும் இடமெல்லாம் அவளை கூட்டிட்டு அலைய வைக்க முடியாது. அவளுக்கு முழு ஓய்வு அவசியம்” என்றார் மதர்.
ஆனால் முதல் முறை மகளை பிரிய, அதுவும் அவளுக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில், ஈத்தனுக்கு சற்றும் விருப்பமில்லை. நிச்சயம் ஈஷா அவனை மிகவும் தேடுவாள். அதுவும் இம்மாதிரியான சூழ்நிலையில் யாரால் பெற்ற குழந்தையை பிரிய முடியும். அழைத்துச்செல்வதில் உறுதியாக இருந்தான்.
“நான் பார்த்துக்கிறேன் மதர்” என்றுவிட்டான்.
மதருக்கு ஒரு தந்தையாக அவனின் பரிதவிப்புகள் புரிய, “சரி ஈத்தன். திரும்ப சீக்கிரம் பார்க்கலாம். எப்ப எந்த உதவி தேவைப்பட்டாலும் என் கதவு உனக்காக திறந்து இருக்கும்” என்றார்.
“தேங்க் யூ மதர்” என்ற ஈத்தனை நெருங்கிய மதர், அவன் தலையில் கை வைத்து, “May God bless you and keep you safe. அவருடைய அன்பும் வழிகாட்டுதலும் எப்போதும் உன்னுடன் இருக்கும்” என்றவர், தனக்கு ‘மார்னிங் ப்ரேயர்’ இருப்பதாக கூறிவிட்டு கிளம்பிவிட்டார்.
அதுவரை எங்கே மதரோ, ஈத்தனோ தன்னைப்பற்றி ஏதேனும் பேசிவிடுவார்களோ என்று உயிரை கையில் பிடித்துக்கொண்டு, அப்படியே உள்ளே நின்றிருந்த குறிஞ்சிக்கு, அப்பொழுது தான் மூச்சே வெளிவந்தது.
நல்லவேளையாக ஈஷா பல் துலக்க மீண்டும் குளியலறைக்குள் சென்றிருக்க, இவளின் கலவரம் அப்பிய முகத்தை அவள் பார்க்கவில்லை.
ஈஷா இங்கு படிக்க இருக்கும் நிலையில், எத்தனை நாட்களுக்கு இப்படி தப்பிக்க முடியும் என்று வேறு தோன்ற, குறிஞ்சிக்கு ஒன்றுமே புரியவில்லை.
மனம் ஒரு நிலையிலேயே இல்லை.
பயம் பயம் மட்டுமே!
ஈத்தன், குறிஞ்சி இருக்கும் போது, எவ்வாறு உள்ளே செல்வது என்ற தயக்கத்துடன் வரவேற்பறையிலேயே அமர்ந்துவிட்டு இருந்தான்.
எச்சில் கூட்டி விழுங்கியவள், ஒரு முடிவுடன் வரவேற்பறைக்கு வர…
“ஹே குட் மார்னிங் குறிஞ்சி! பேபியும் எழுந்துட்டாளா? நீங்க தூங்கறீங்க நினைச்சேன்” என்றான் ஈத்தன்.
“குட் மார்னிங் சமர் சார். இப்ப தான் எழுந்தோம். ஈஷா ஃபிரெஷ் ஆகிட்டு இருக்காங்க” என்றாள்.
“ஓ ஓகே…” என்ற ஈத்தன் இருக்கையில் இருந்து எழ, “சார்… உங்ககிட்ட ஒன்னு சொல்லனும், சொல்லலாமா?” என்று குறிஞ்சி கேட்க.
அவளை ஆச்சரியமாக பார்த்த ஈத்தன், “என்கிட்ட என்ன தயக்கம் குறிஞ்சி… எதுவா இருந்தாலும் சொல்லுமா” என்றான் கனிவாக.
“அது அதுவந்து சார்” என்று அவன் முகத்தை பார்த்து பேச முடியாது திணறியவள், எப்படியோ தன்னை திடப்படுத்திக்கொண்டு, “என்னை தெரிஞ்ச மாதிரி இங்க யார்கிட்டேயும் நீங்க காட்டிங்க வேண்டாமே” என்றாள் கெஞ்சலுடன்.
அதில் ஈத்தனின் முகத்தில் சட்டென்று ஒரு இறுக்கம்.
அவன் முக மாறுதலை பார்த்து பதறி, “பிளீஸ்… பிளீஸ் சமர் சார்… என்னை தப்பா நினைச்சுகாதிங்க…” என்று குறிஞ்சி மீண்டும் கெஞ்ச…
அவளின் கெஞ்சலில், தன் முகத்தை உடனே மாற்றிக்கொண்டவன், “ஹே! பயப்படாத குறிஞ்சி. யார்கிட்டேயும் நான் சொல்லமாட்டேன்” என்று, அவள் கன்னத்தில் மெல்ல தட்டி கூறியவன், “பேபிக்கு கூட வேற ஸ்கூல் பார்த்துக்கறேன் மா. நீ இங்க ரிலாக்ஸா இரு. நாங்க திரும்பி வர மாட்டோம். சரியா” என்றான் மென் புன்னகையுடன்.
அதில் குறிஞ்சிக்கு உள்ளுக்குள் அழுகை முட்டிக்கொண்டு வந்தது.
அவர்களுடன் இருக்க தான் அவளுக்கு விருப்பம். ஆனால் விதியோ அவளை நெருங்கவிடாது விரட்டியடிக்க என்ன செய்வாள் அவள்.
அதிலும் அவர்கள் ‘திரும்பி வர மாட்டார்கள்’ என்பது அவளுக்கு மிகவும் நல்லது தான்.
ஆனால் அவளின் மனதிற்கு?
நேற்றிரவு அவளிடம் இருந்த மகிழ்ச்சி எல்லாம் தடம் தெரியாது மறைந்துவிட்டது.
ஈத்தனுக்குமே நிதர்சனம் உள்ளுக்குள் ஒரு வெற்றிடத்தை தந்திருக்க...
குறிஞ்சியை நேர்க்கொண்டு பார்க்க முடியவில்லை…
அப்பொழுது சூழ்நிலையின் இறுக்கத்தை நெகிழ்த்த, உள்ளே இருந்து “பேபி…” என்ற வண்ணம் அவனின் தேவதை வந்து சேர்ந்தாள்.
அதன் பின்னர் என்ன?
ஈத்தனின் சிந்தனைகள் மொத்தத்தினையும் ஈஷா ஆக்கிரமிப்பு செய்துவிட்டாள்.
“என் பேபிக்கு ஸ்வீட் மார்னிங்” என்ற ஈத்தன், “இப்ப உடம்பு எப்படி இருக்கு பேபி… இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கி இருக்கலாமே டா… கால் வலி பரவாயில்லையா” என்று மகளிடம் தன் கவனத்தை மொத்தமாக திருப்பிவிட…
தன் உணர்வுகளை அவ்விடைவெளியில் அப்படியே உள்ளுக்குள் மறைத்துக்கொண்டாள் குறிஞ்சி.
மதர் வந்த பொழுதே, ஈத்தனுக்கும், ஈஷாவிற்கும் தேவையான காலை உணவு அனைத்தும் அறைக்கே வந்துவிட்டு இருந்தன.
அதிலிருந்த பாலை, குடிக்கும் பதத்திற்கு ஆற்றிய குறிஞ்சி, ஈஷாவிற்கு ஊற்றி கொடுக்க…
ஈத்தன், “நீ கிளம்பு குறிஞ்சி. மார்னிங் உனக்கு வேலையிருக்கும் இல்ல. நான் பேபிய பார்த்துக்கிறேன்” என்றவன் ஈஷாவிடம், “ஆன்ட்டிக்கு பாய் சொல்லிடு பேபி. நாம இன்னும் கொஞ்சம் நேரத்தில் சென்னை கிளம்பறோம்” என்றான்.
தந்தையுடனே செல்ல போகும் மகிழ்ச்சியில் ஈஷாக்கு தலைகால் புரியவில்லை. உடனே, “தேங்க் யூ சோ மச் ஆன்ட்டி…” என்று குறிஞ்சிக்கு விடைக்கொடுத்துவிட்டாள்…
அதில் குறிஞ்சிக்கு அவ்வளவு தானா என்று இருந்தது…
தோன்றும் உணர்வுகளை தாங்கவே முடியவில்லை…
கஷ்டப்பட்டு சிரித்தப்படியே விடைப்பெற்றுக்கொண்டு, குவார்ட்டர்ஸ்(quarters) நோக்கி வேக நடைப்போட்டவளுக்கு, என்ன அடக்கியும், வீட்டை நெருங்கும் முன்பே, கண்களில் இருந்து பொலபொலவென நீர் கொட்டி பூமியை நனைக்க ஆரம்பித்துவிட்டு இருந்தது.
கதவைத் திறந்துக்கொண்டு உள்ளே ஓடியவள், அக்கம் பக்கம் யாருக்கும் கேட்டுவிட போகிறது என்று குளியலறைக்குள் புகுந்து கதவை அடைத்துக்கொண்டு, கதறி அழ ஆரம்பித்து இருந்தாள்.
நெஞ்சமெல்லாம் அவ்வளவு ரணமாய் வலித்தது…
ஏன் தனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்கிறது.
சொந்த கழிவிரக்கத்தில் அழுதே கரைந்தவள், சிறிது நேரத்தில், ‘குழந்தையும், ஈத்தனும் ஊருக்கு கிளம்பும் சமயம் இப்படி அழக்கூடாது. பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்’ என்று தன்னை தானே சமாதானப் படுத்திக்கொண்டாள்…
இது தானே நம் வாழ்க்கை. நமக்கும் அவர்களுக்கும் என்ன இருக்கிறது. அனைத்தையும் மறந்துவிடு. எதையும் எதிர்பார்க்காதே என்று தனக்கு தானே கூறிக்கொண்டவள்.
குளித்துமுடித்து வெளிவந்து, தயாராகி, விளக்கேற்றி இறைவனை வணங்கி எழுந்தாள்.
🔴 அடுத்த பாகம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻 😘
https://swathilakshmitamilnovels.blogspot.com/2025/03/82.html
முன் ஜென்ம பந்தம் போல் முடிந்துவிட்ட உறவு என மறுக்க முடியாமல் தொடரும் பந்தமாய்
பதிலளிநீக்குமாறி இருக்க...
நெருங்கிச் செல்ல துடிக்கும் மனதை கட்டுப்படுத்தி விலகி நிற்க மங்கை எடுக்கும் முடிவு நல்லதா கெட்டதோ மீண்டும் தொடருமா
மகள் பாசம் கிடைக்குமா???