14.2 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🪻

நாட்கள் மாதங்களாக உருண்டோட…


நீரை உள்வாங்கிக்கொண்டு அமைதியாக இருக்கும் கடலை போல் அமைதியாக கழிந்த நாட்கள்… மெல்ல சீற்றம் கொள்ள ஆரம்பித்தது…


ஒரு நாள் இரவு நல்ல தூக்கத்தில் இருந்த ஈத்தன், திடீரென்று கேட்ட சத்தத்தில் எழுந்து வெளிவந்து பார்க்க…


அங்கு சித்ரலேகாவும், ஹன்டரும்… காதில் கேட்க முடியாத ஆங்கில வார்த்தைகளுடன் சண்டை போட்டுக்கொண்டு இருந்தனர்…


தன் தாயின் ஹனியும், தன் தந்தையின் ஸ்வீட்டியும், அங்கு காணாமல் போயிவிட்டதை கண்டு அதிர்ந்துப்போன ஈத்தன்… இரண்டு காதுகளையும் அழுந்த பொத்தி கொண்டான்…


அதிலும் தந்தையின் போதையில் சிவப்பேறிய கண்களும்… தாயின் ஆக்ரோஷமான வெடிப்புகளும்… அவனை அஞ்ச வைக்க… கண்ணீருடன் திரும்பி உள்ளே ஓடிவிட்டான்…


அதுவே நாளடைவில் தொடர்கதையாகியது…


அடுத்தகட்டமாக இரவுகளில் மட்டும் நடந்த சண்டைகள் பகலிலும் நடக்க ஆரம்பிக்க… வீட்டில் வேலையாட்கள் பெருமளவில் குறைக்கப்பட்டனர்… 


வெளிவேலைக்கு ஒருவர், வீட்டுவேலைக்கு ஒருவர் என்று இரண்டு பேருடன் முடித்துக்கொள்ள… மாளிகை போன்ற வீடு தன் பொலிவை சுத்தமாக இழந்து வெறும் கட்டிடமாகிவிட்டது…


இரவு முழுவதையும் தூங்கியும் தூங்காமலும் கழிக்கும் ஈத்தன், ஸ்விட்ச் போட்டது போல் தன் அறையில் பள்ளிக்கு செல்ல தயாராகி வெளி வந்தால், அவனுக்கான உணவு தயாராக இருக்கும். அதை முடித்தால் பள்ளிக்கு அழைத்துச்செல்ல டிரைவர். எவ்வித எக்ஸ்ட்ரா கோச்சிங் வகுப்புகளுக்கும் அவனுக்கு வெளியே செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அனைத்து வசதிகளும் அப்பள்ளியில் உண்டு. தமிழ் கூட எழுத படிக்க என்று அனைத்துமே அங்கே அவனுக்கு கற்பிக்க பட்டது தான். பள்ளி முடிய வீட்டிற்கு வருபவன் தினமும் நேராக தேடிச் செல்வது என்னவோ சித்ரலேகாவை தான்… அறையில் படுத்தப்படி இருப்பவர்… ஓரிரு நிமிடங்கள் அவனுடன் பேசுவார்… பிறகு “நீ போயிட்டு விளையாடு ஈத்தன். அம்மாக்கு கொஞ்சம் ஹெட் பெயினா இருக்கு. வரேன்” என்று அவனை அனுப்பிவிடுவார்… 


ஆனால் ஒருநாளும் அவர் எழுந்து வெளிவருவது கிடையாது…


சித்ரலேகாவின் சோர்ந்த முகம் அவனை மீண்டும் சென்று அழைக்க விடுவதில்லை. இரவுகளில் நடப்பதையும் தான் அவன் பார்க்கிறானே…


அவனின் ஒரே ஆறுதல் தினமும் தோட்டத்தில் மலரும் சிவப்பு ரோஜாக்கள் மட்டுமே… தன் காதல் மனைவிக்காக ஹன்டர் பார்த்துப் பார்த்து அமைத்த தோட்டம் அது… அவர்களின் மகனுக்காக தினமும் மலர்ந்தது…


தன் கிட்டாருடன் அங்கு செல்பவன், அதை முகர்ந்தப்படியே வருடி வருடி தன்னை சமாதானம் செய்துக்கொள்வான்…


நேர வித்தியாசத்தினாலும், வயதின் மூப்பினாலும், வாரத்திற்கு ஓரிரு முறை மட்டுமே பேசும் தாத்தா பாட்டியிடம், கேட்பதற்கு மட்டும் பதில் அளித்துவிட்டு வைத்துவிடுவான்… பெற்றவர்களை பற்றி மற்றவர்களிடம் பேசவெல்லாம் அவனுக்கு தோன்றவும் இல்லை. வயதும் இல்லை.


இப்படியாக ஒழுங்கற்று சென்ற மூவரின் வாழ்க்கையும் ஒருநாள் முடிவிற்கு வந்தது…


அன்று ஈத்தன் பள்ளிக்கு கிளம்பிச்சென்ற மறு நொடி, வேலையாளை ‘அழைக்கும் வரை வேலைக்கு வர வேண்டாம்’ என்று கூறி அனுப்பிய ஹன்டர், சித்ரலேகாவின் முன் ஒரு ஃபைலை நீட்டி இருந்தார்.


எடுத்து பிரித்து பார்த்த சித்ரலேகா அதிர்ந்து, “நோ ஹன்டர்… டிவோர்ஸ் கொடுக்க எந்த காலத்திலும் நான் ஒத்துக்க மாட்டேன்” என்றார்.


ஹன்டர், “என்னால் இனி உன்கூட இந்த நரகத்தில் வாழ முடியாது லேகா. எனக்கு முழு சுதந்திரம் வேண்டும். லெட்ஸ் செப்பரேட்” என்றார்.


அதில் சித்ரலேகா, “ஓ! என் கூட வாழ்றது நரகம். அந்த செலினா கூட இருக்கிறது சொர்க்கம். அப்படி தானே?. யூ பிளடி *** cheater” என்று வெடிக்க.


“That's none of your business *** ” என்று ஹன்டரும் கத்த…


பிறகென்ன ரணகளம் தான்.


அழகான கூடு. யார் கண்பட்டதோ திசைக்கு ஒன்றாக சிதறிவிட்டது.


திருமணமான முதல் பத்து வருடங்கள் பத்து மாதங்கள் போல் கொண்டாட்டங்கள், சுற்றுலாக்கள், கேரியரில் முக்கிய கட்டம் என்று ஓடிவிட… ஒன்றும் தெரியவில்லை…


ஆனால் அதன் பிறகு…


அவ்வளவு நாட்களும் அதீத காதலாக தெரிந்த சித்ரலேகாவின் உரிமைகளும், கேள்விகளும் ஹன்டருக்கு திடீரென அடக்குமுறையாகவும், அதிகாரமாகவும் தெரிய ஆரம்பித்ததில் தான் முதல் விரிசல்…


வளர்ந்த பிள்ளைகளை பெற்றவர்களும், பெற்றவர்களை பிள்ளைகளும் அப்பாயிண்மெண்ட் வாங்கிச்சென்று பார்க்கும் கலாச்சாரம்… மனைவியின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கவிடவில்லை…


ஹன்டரின் மனநிலையை சித்ரலேகாவினாலும் புரிந்துக் கொள்ள முடியவில்லை… அவரின் விலகல் சித்ரலேகாவை மேலும் தன் பிடியினை இருக்கச்செய்ய… 


விரிசல் மேலும் பெரிதாகியது…


விரிசல் விழுந்த இடத்தில் தாம்பத்தியமும் தேய்ய…

அது மேலும் சித்ரலேகாவை தூண்டிவிட்டது. நம்மூர் மனைவிகள் போல் அவர் சண்டை பிடிக்க…


ஹன்டரின் காதல் கசந்து நீர்த்து போனது…


அதற்குள், அவர் மனதில் இருந்த இடைவெளியில் வந்து புகுந்துவிட்டாள் செலினா…


அதன்பிறகு சுத்தமாகவே சித்ரலேகாவினை அவருக்கு பிடிக்காமல் போயி விட்டது...


எளிதாக பேசி சரிசெய்திருக்க வேண்டிய விஷயம்… எல்லைகளை கடந்துவிட்டது…


அரசல் புரசலாக விஷயம் சித்ரலேகாவின் காதிற்கு வர, வாழ்க்கையையே வெறுத்துப்போனார்…


‘ஊர், உலகம், பெற்றோர் என அனைத்தையும் இவருக்காக விட்டு வந்தேனே… எப்படி இவரால்… தோற்றுப்போனேனே… அவ்வளவு தானா…’ 


அதன்பிறகு சித்ரலேகாவினால், ஹன்டரை போ என்று விடவும் முடியவில்லை… சரியென்று ஒன்றி வாழவும் முடியவில்லை… அவரை பார்க்கும் போதெல்லாம் கோபம் கோபம் மட்டும் தான்…


ஹன்டருக்கு இன்றுவரை செலினாவுடன் உடல் ரீதியான தொடர்பு கிடையாது… ஆனால் ஆறுதலுக்கு என்று ஆரம்பித்த நட்பு இன்று காதலாகி நிற்கிறது… அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் தயாராகிவிட்டு இருந்தார்… அதற்காக தான் டைவெர்ஸ் கேட்டு நிற்கிறார்…


“எனக்கு என்னோட லைஃப்பை வாழனும் லேகா… காம்பென்சேஷனா எவ்வளவு பணம் வேண்டுமோ கேட்டு வாங்கிக்கோ… சும்மா டிராமா பண்ண வேண்டாம்” என்றார் ஹன்டர்.


அதில், “யாருக்கு டா உன் பணம் வேண்டும்… யாரை பார்த்து டிராமா பண்றன்னு சொல்ற… ச்சீ… நீயும் உன் புத்தியும்…” என்றவர், ஹன்டரை கழுவி ஊத்த…


“இந்திய பெண்ணை கல்யாணம் செய்ததுக்கு எனக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்…” என்றவர்… லிவ்விங் ஹாலில் இருந்த பொருட்களை ஒன்றுவிடாமல் தூக்கிப்போட்டு உடைத்துவிட்டு…


“ஒழுங்கா சைலெண்ட்டா டைவெர்ஸ் கொடுக்கிறதுன்னா கொடு சித்ரலேகா… இல்லை மீடியா முழுக்க பேசின பிறகு தான் கொடுப்பன்னாலும் எனக்கு ஓகே தான்…” என்றவர்… “இனி உன் மூஞ்சையே நான் பார்க்கக்கூடாது” என்றுவிட்டு வெளியேறிவிட…


தனியே அமர்ந்து கதறிய சித்ரலேகா, அவ்வளவு நடந்த பிறகும் கூட பெற்றோர்களிடம் எதுவும் பகிரவில்லை… ஈகோ தடுத்துவிட்டது…


அப்பொழுது பார்த்து சித்ரலேகாவிடம் ஒரு படம் விஷயமாக பேச வீடுவரை வந்துவிட்டு இருந்தார் டைரெக்டர் ஆப்பிரஹாம்… சித்ரலேகாவின் குரலில் ஈர்க்கப்பட்டு முதன் முதலில் ஹாலிவுட்டிற்கு அவரை அழைத்து வந்து அறிமுகம் செய்தவர் அவர் தான்… புது படம் புரொடெக்ஷன்-க்காக கேட்க வந்து இருந்தவர், வீடும் சித்ரலேகாவும் இருந்த நிலைமையை பார்த்து அதிர்ந்து போனார்…


என்ன ஏது என்று விசாரித்தவர்… சித்ரலேகாவை தனியே விட பயந்து தன்னுடன் அழைத்துச்சென்றுவிட…


மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய ஈத்தன் பார்த்தது… அனைத்தும் உடைந்து உருக்குலைந்து கிடந்த வீட்டை தான்…


“மாம்… மாம்…” என்று வெற்று வீட்டினுள் சுற்றி சுற்றி ஓடியவன்… வெளிவந்து வாட்ச் மேனிடம் கேட்க… “அப்பா அம்மா வெளியே போய் இருக்காங்க தம்பி. நீங்க வீட்டில் இருங்க. வந்திடுவாங்க” என்று அவனை அனுப்பி வைத்தார்…


அன்று முழுவதும் இருவருமே வீட்டிற்கு வரவில்லை…


என்ன ஆனது என்று ஈத்தனுக்கு தெரியவில்லை…


இருவருடனும் ஃபோனில் தொடர்பு கொள்ள முயன்றான்… இருவரின் ஃபோனும் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்துக்கொண்டே இருந்தது…


மறுநாள் காலை எழுந்து பள்ளிக்கு தயாராகி அவன் வெளி வர, காலை உணவு அவனுக்கு அங்கு இல்லை. பணியாளை தான் வர வேண்டாம் என்று விட்டாரே ஹன்டர்.


வாழ்க்கையில் முதல் முறை வெற்று வயிற்றுடன் பள்ளிக்கு கிளம்பி இருந்தான் ஈத்தன்…


மாலை வீடு திரும்பியவனையும் வரவேற்றது வெற்று வீடு தான்…


மீண்டும் சித்ரலேகாவிற்கும், ஹன்டருக்கும் அவன் தொடர்பு கொள்ள முயல… இம்முறை கால் இரண்டு பக்கமும் எடுக்கப்பட்டது… ஆனால் எடுத்தது அவன் தாய் தந்தை இல்லை… இருவரின் மேனேஜர்கள் தான்…


“மேம் இப்போ பேசும் நிலையில் இல்லை‌. நீங்க பிறகு பேசுங்க” என்று ஒருவர் வைத்துவிட…


இன்னொருவர் “சார் இப்போ அவுட் ஆஃப் லொக்கேஷன்” என்று வைத்து இருந்தார்.


மேலும் இரண்டு நாட்களை, அவ்வளவு பெரிய வீட்டில் தனியாகவே கழித்து இருந்த ஈத்தன்… அன்று வீட்டிற்கு கையில் ஒரு Form-உடன் வந்து இருந்தான்…


பள்ளியில் அவ்வாரம் சயின்ஸ் ட்ரிப் ஒன்றிற்கு பிள்ளைகளை அழைத்து செல்வதாக இருந்தனர்.


அதற்கு பெற்றோர்களிடம் அனுமதி வாங்கி வர கூறி ஒப்புதல் படிவம் தந்து இருந்தனர். 


அதில் பெற்றவர்களின் கையெழுத்து நேரடியாக இருக்க வேண்டும் இல்லை என்றால் fax மூலம் டிஜிட்டல் கையெழுத்துடன் பள்ளிக்கு நேரடியாக பெற்றோர்கள் அனுப்பலாம்…


ஈத்தனுக்கு அந்த சயின்ஸ் ட்ரிப்பிற்கு செல்ல வேண்டும்…


கையெழுத்திற்காக வேண்டி மீண்டும் பெற்றவர்களுக்கு அழைக்க முடிவு செய்தவன்…


எப்பொழுதும் போல் முதலில் அழைத்தது சித்ரலேகாவிற்கு தான்… இப்பொழுதும் எடுத்தது மேனேஜர் தான்… ஈத்தன் விஷயத்தை கூற “அப்பாக்கிட்ட கேளுங்க சார்” என்று அவர் வைத்துவிட்டார்.


சரியென்று ஹன்டருக்கு அவன் அழைக்க, இம்முறை அவர் ஃபோனை எடுத்தது செலினா, “இனி ஹன்டருக்கு ஃபோன் பண்ணி தொந்தரவு தராத… எதுவா இருந்தாலும் உன் அம்மாகிட்ட கேட்டுக்கோ…” என்றுவிட்டு அவர் வைத்துவிட…


ஈத்தன் அன்று வடித்த கண்ணீரை பார்க்க ஆள் இல்லாமல் போனது…


இன்றைய ஈஷாவை விட அன்று ஈத்தன் வயதில் சிறியவன்… என்ன மன முதிர்ச்சி பெறிதாக அவனுக்கு இருக்கும். அனைத்தும் அவ்வளவு வலியை தந்தன. மீளவெல்லாம் அவனுக்கு தெரியவில்லை. 


அதன் பிறகில் இருந்து இன்றுவரை, அவன் தன் பெற்றோருக்கு அவனாக அழைத்தது இல்லை…


இருக்க வீடு, உடுத்த உடை, வேண்டும் என்பதை வாங்கிக்கொள்ள கையில் பணம் என்று அவனிடம் அனைத்தும் இருந்தது. 


ஆனால் அது போதுமா…?


மேலும் இரண்டு நாட்கள் கழிய…


பள்ளியில் அனைவரும் சயின்ஸ் ட்ரிப்பிற்கு சென்றுவிட… அவன் வீட்டிலேயே இருந்துக்கொண்டான்…


வார இறுதியும் வந்துவிட்டது…


தனிமையில் எவ்வளவோ எண்ணங்கள், சிந்தனைகள் அவனுக்குள்…


இறுதியில் தான் யாருக்கும் தேவையில்லை என்ற நிலைக்கு வந்து நின்று இருந்தவனுக்கு, மேலும் அதை அதிகப்படுத்தும் வகையில் அன்றைய இரவு ஆகிவிட்டது…


ஈத்தனின் பன்னிரண்டாவது பிறந்தநாள் அன்று…


அவன் நண்பர்கள் சிலர் அவனுக்கு ஃபோன் மூலம் முன்னரே வாழ்த்து சொல்ல தான் அவனுக்கே அது ஞாபகத்திற்கு வந்தது..‌. 


ஒவ்வொரு வருடமும் இரவு பன்னிரண்டு மணிக்கு கேக்குடன் வரும் அவன் பெற்றோர்கள், அவனை எழுப்பி கேக்கை வெட்ட செய்து, அவன் முகத்தில் பூசிவிட்டு, அவனுடன் ஓடிபிடித்து விளையாடி என்று ஒரே அதகளமாக இருக்கும்.


அதில் பிள்ளை மனம் இரவு முழுவதும் மீண்டும் மீண்டும் பெற்றவர்களையே தேடித்தேடி ரணமாகிப்போனது… 


காதல் இல்லாத இடத்தில், அக்காதல் மூலம் வந்தவன் கேட்பாரின்றிப்போனான்.


அதன் பலன்…!?

🔴அடுத்த அத்தியாயம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்

https://swathilakshmitamilnovels.blogspot.com/2025/03/143.html

கருத்துகள்

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates

Popular posts

Completed- உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே💘- (Completed story available here for free Read)

New Ongoing 💌 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🎼🪻😘💌

Completed-💃🕺அழகான இராட்சசியே அடிக்கரும்பாய் இனிக்கிறியே - Romantic Entertainment

Completed-மகிழ்மதியின் அரசன்- Royal Family Based Romantic love story

1. சங்கீத வானில் ஓர் அந்திப்போர்!😘🕺💃🎼🪻